முன்னோக்கு

பைடென் நிர்வாகத்தின் ஆறு மாதங்கள்—ஓர் இருப்புநிலைக் கணக்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க முதலாளித்துவத்தின் மற்றும் ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜோசப் பைடென் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

President Joe Biden speaks about updated guidance on mask mandates, in the Rose Garden of the White House, Thursday, May 13, 2021, in Washington. (AP Photo/Evan Vucci)

அவருக்கு முன்னர் பதவியிலிருந்த டொனால்ட் ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை என்பதைக் காட்டும் விதமாக, அந்த பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், ஜனவரி 6 இல், ட்ரம்பின் ஆதரவாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு, மாநில தேர்தல் வாக்குகளைக் காங்கிரஸ் சபை அங்கீகரிப்பதைத் தற்காலிகமாக தடுத்தனர். அதிகார மாற்றத்தைத் தடுத்து ஒரு தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதே அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நோக்கமாக இருந்தது. கூட்டுப் படைத் தளபதிகளின் முன்னாள் தலைவர் மார்க் மில்லியின் வார்த்தைகளில் கூறுவதானால், அது ட்ரம்பின் 'ரைஹ்ஸ்டாக் தருணமாக' இருந்தது.

பைடென் பதவியேற்ற போது, கோவிட்-19 பெருந்தொற்றால் 400,000 பேர் உயிரிழந்திருந்தனர், மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்றி இருந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் தான், அமெரிக்காவின் ஒவ்வொரு நகரமும், சிறு நகரமும், கிராமமும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களைக் கண்டிருந்தன.

அமெரிக்க சமூகத்தைப் பிரகாசமான வார்த்தைகளில் சுருக்கமாக குறிப்பிட்டு, பைடென் ஆறு மாத காலம் நிறைவுற்றிருப்பதைக் குறித்துக் காட்டினார். “தோல்விகள் மற்றும் அவநம்பிக்கையைக் குறித்த எல்லா அனுமானங்களையும் பொறுத்த வரையில், ஆறு மாதங்களில் விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன,” என்று கூறிய அவர், “மிகப்பெரும் வளர்ச்சி, அதிகளவிலான வேலைகள் உருவாக்கம், கடுமையாக உழைத்து சம்பாதிப்பதிலிருந்து தொழிலாளர்களுக்கு ஓய்வுகள்,” என்றார். “எளிமையாக சொன்னால்: நம் பொருளாதாரம் நகர்ந்து வருகிறது, கோவிட்-19 உம் முடிந்து வருகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அவருடைய தீர்மானங்களைத் தொகுத்து அமெரிக்க ஜனாதிபதி கூறினார், 'முதலாளித்துவம் உயிரோடும் சிறப்பாகவும் இருக்கிறது.' பைடென் நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க சமூக நெருக்கடியைத் தீர்க்க முற்றிலுமாக தவறிவிட்டன என்பதே உண்மையாகும், அவற்றால் தீர்க்கவும் முடியாது, ஏனென்றால் அவை அமெரிக்க முதலாளித்துவ கட்டமைப்பை அடித்தளமாக கொண்டுள்ளன.

இந்த பெருந்தொற்று, 'முடிந்து' வருகிறது என்பதற்கு மாறாக, அது ஒரு புதிய மறுஎழுச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. பைடென் பதவியேற்றதில் இருந்து, இந்த பெருந்தொற்று நோயால் கூடுதலாக 225,000 பேர் இறந்துள்ளனர். குளிர்காலத்திற்குள், டெல்டா மாறுபாடு பரவலுடன் சேர்ந்த புதிய எழுச்சியுடன், ட்ரம்பின் கீழ் நடந்ததைப் போலவே பைடெனின் கீழும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் உள்ளன.

பைடென் நிர்வாகத்தின் கொள்கைகள் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெரும் செல்வந்தர்களின் நலன்களால் உந்தப்படுகின்றன. எனவே தான், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ட்ரம்பின் ஈவிரக்கமற்ற விஞ்ஞான-விரோத விடையிறுப்பு மீது அவ்வப்போது விமர்சனங்கள் கூறினாலும், பைடெனும், தொழிலாளர்கள் மற்றறும் குழந்தைகளின் உயிர் மற்றும் உடல்நலத்திற்கு இருக்கும் ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பவும் குழந்தைகளைப் பள்ளிக்குத் திரும்பவும் நிர்பந்திப்பதன் மூலம் பெருநிறுவன இலாபமீட்டலை மீட்டமைக்கும் அதே கொள்கையைப் பின்தொடர்கிறார்.

இருகட்சிகளின் ஒருமனதான சம்மதத்துடன் கேர்ஸ் (CARES) சட்டம் போன்றதைக் கொண்டு, வங்கிகள், தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் பெருநிறுவனங்களைப் பலப்படுத்துவதற்காக ட்ரில்லியன்களை பாய்ச்சியதே, இந்த பெருந்தொற்று தொடங்கியவுடன் வந்த பொருளாதார மந்தநிலைக்கு ட்ரம்பின் விடையிறுப்பாக இருந்தது. ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சியினர் வழங்கியதை விட குடியரசுக் கட்சியினரிடம் இருந்து குறைவான ஆதரவே கிடைக்கிறது என்றாலும், பைடென் அடிப்படையில் அதே கொள்கையைத் தான் பின்தொடர்கிறார். இந்த பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்னர் இருந்ததை விட தொழிலாளர்களுக்கு இன்று ஏழு மில்லியனுக்கும் குறைவான வேலைகளே உள்ளன, மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் கூலி வெட்டுக்கள், வறுமை, ஜப்தி மற்றும் கடன் வசூலிப்பு நடவடிக்கைகளை முகங்கொடுக்கிறார்கள் என்கின்ற நிலையிலும், அவர் பொருளாதார முகப்பின் வெற்றியைப் பெருமைபீற்றுகிறார்.

ட்ரம்பில் இருந்து பைடென் வரையில் வெளியுறவுக் கொள்கையில் மட்டுமே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது, அதுவும் தந்திரோபாயத்தில் தான், மூலோபாயத்தில் அல்ல. நேட்டோவையும் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உடனான நடைமுறை கூட்டணியான 'நாற்கரம்' (Quad) அணியையும் அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பைடென் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கணிசமான பிரிவுகள் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிகாரத்தை இன்னும் சாதுர்யமாக அணித்திரட்ட முயல்வதால் அவை ட்ரம்புக்கு எதிராக பைடெனுக்கு ஆதரவளித்தன.

'முதலாளித்துவம் உயிரோடும் சிறப்பாகவும் உள்ளது' என்ற பைடெனின் கருத்து உண்மையாக இருந்தால், அது இந்த கேள்வியை எழுப்புகிறது: அதாவது, அமெரிக்க ஜனநாயகத்திற்கு பாசிச அச்சுறுத்தல் ஏன் அதிகரித்து வருகிறது?

பைடென் பதவியேற்ற ஆறு மாதங்களில், குடியரசுக் கட்சி ஜனவரி 6 நிகழ்வுகள் மீது எந்தவொரு தீவிர விசாரணைக்கும் அதன் உறுதியான எதிர்ப்பைத் தக்க வைத்துள்ளது. அரை-மனதுடன் ஜனநாயகக் கட்சியின் முன்மொழிவுகள், முதலில் அந்த தாக்குதலைக் குறித்து விசாரிக்க ஒரு 'சுதந்திரமான' இருகட்சி குழுவுக்கான முன்மொழிவு, பின்னர் இருகட்சி காங்கிரஸ் சபை விசாரணைக்கான முன்மொழிவு ஆகியவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன அல்லது முடிவில்லாமல் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே தேர்தல் முடிவுகளை மாற்றி ட்ரம்பையே பதவியில் அமர்த்துவதற்காக ஓர் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்தும் முயற்சியில் ட்ரம்பும் காங்கிரஸ் சபையிலுள்ள அவர் கூட்டாளிகளும் மத்திய பாத்திரம் வகித்தனர் என்பதன் மீது தொடர்ந்து ஆதாரங்கள் வெளி வந்தன. ஆனால் ட்ரம்போ அல்லது அவரது கூட்டாளிகளோ வழக்கில் இழுக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் விசாரிக்கப்படவும் கூட இல்லை.

அதற்கு பதிலாக, ட்ரம்ப் குடியரசுக் கட்சியை அவரது தனிப்பட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்த ஒரு வெளிப்படையான பாசிச இயக்கமாக மாற்றும் முயற்சியில், அந்த தேர்தலுக்கு எதிரான அவர் கலகத்தைப் புதுப்பித்துள்ளார். குடியரசுக் கட்சியில் உள்ள அவர் ஆதரவாளர்கள் வாக்குரிமை மீது முன்னொருபோதும் இல்லாத கடுமையான தாக்குதல்களைத் தொடுக்க மாநில சட்டமன்றங்களின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பிலடெல்பியாவில் கடந்த வாரம் உரையாற்றுகையில் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியின் யதார்த்தத்தை பைடென் ஒப்புக் கொண்டார், அப்போது அவர், 'உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நமது ஜனநாயகத்திற்கு மிக முக்கிய சோதனையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்,' என்றார். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு எதிராக 'காங்கிரஸ், மாநிலங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் உள்ள எனது குடியரசுக் கட்சி நண்பர்கள் எழுந்து நிற்க வேண்டும்' என முறையிட்டதைத் தவிர, அவர் முன்னோக்கிய பாதை எதையும் காட்டவில்லை — ஆனால் அதை செய்து கொண்டிருப்பவர்களே அவர்கள் தான்.

ஜனநாயகக் கட்சியில் பிரமைகளை முட்டுக் கொடுக்கும் ஒரு முயற்சியில், அதன் 'இடது' அணியின் பிரதிநிதிகள், பைடெனின் கொள்கைகளை ஆரவாரமான வார்த்தைகளில் சித்தரிக்கின்றனர். சமூக செலவுகள் மீதான பைடெனின் 'சமரச' மசோதா '1930 களுக்குப் பின்னர் உழைக்கும் குடும்பங்களுக்கான மிகவும் விளைபயனுள்ள சட்டமசோதாவுக்கு' நிகராக உள்ளதென கடந்த வாரம் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் வாதிட்டார். அல்லது, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் இணைந்த ஜாகோபின் இதழின் பாஸ்கர் சங்காராவைப் போல, அவர்கள் இது வரை சாதிக்கப்பட்டதில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றாலும் 'பைடென் பெரியளவில் சிந்திக்க விருப்பம் காட்டியுள்ளார்' என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர், மேலும் காங்கிரஸ் சபையிலுள்ள ஜனநாயகக் கட்சியினர் மீது கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.

பைடென் அவர் பங்குக்கு, நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்குச் சவால் விடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் செயல்படுத்த அவருக்கு உத்தேசமில்லை என்பதைத் தெளிவுபடுத்த சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார், கடந்த வாரயிறுதியில் அவர் அறிவிக்கையில், 'கம்யூனிசம் ஒரு தோல்வியுற்ற அமைப்புமுறை, உலகளவில் தோல்வியுற்ற அமைப்புமுறை. சோசலிசம் மிகவும் பயனுள்ள ஒரு மாற்றீடாக நான் பார்க்கவில்லை,' என்றார்.

உண்மை என்னவென்றால், வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவமே பைடென் நிர்வாகமாகும், அடையாள அரசியலைப் பயன்படுத்துவதன் மூலம் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளை அதன் பின்னால் அணித்திரட்டி உள்ளது. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவில் அதிகரித்து வரும் வெடிப்பார்ந்த சமூக நிலைமைகளை நன்கறிந்துள்ள அந்த நிர்வாகம், வேலையிடங்களில் தொழிற்சங்கங்களை நிறுவுவதை எளிதாக்குவதற்காக PRO சட்டத்தையும் மற்றும் அமசனில் தொழிற்சங்க 'அமைப்பு' பிரச்சாரத்தையும் ஆதரிக்கிறது, இல்லையென்றால் அங்கெல்லாம் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் சலுகைகளை வெட்டி தனிச்சலுகைகளை அனுபவிக்கும் தொழிற்சங்கங்கள் சந்தா செலுத்த தொழிலாளர்களை நம்ப வைப்பது சிரமமாக இருக்கும்.

வேர்ஜீனியாவின் டப்ளினில் வொல்வோ டிரக் ஆலைக்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்கள் தொடுத்துள்ள வேலைநிறுத்தங்கள் போலவே தொழிலாளர்கள் உண்மையாக பெருநிறுவன-எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும் போது, “தொழிலாளர்-சார்ந்த' ஜனாதிபதியாக கூறப்படும் இவர் முற்றிலும் மவுனமாகி விடுகிறார் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது பொலிஸ் வேலை செய்வதில் தொழிற்சங்கங்களை அவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக சரியாகவே பார்க்கிறார் என்பதால், பைடென் தொழிலாளர்களுக்காக இல்லை, தொழிற்சங்கங்களுக்காக இருக்கிறார்.

தொழிலாளர்கள் பைடென் நிர்வாகத்தின் ஆறு மாத காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். பேரழிவுகரமான பெருந்தொறுக்கு விடையிறுப்பதில் இருந்து சமாந்தரமற்ற சமூக சமத்துவமின்மை மட்டங்கள் வரையில், ஏகாதிபத்திய உலகப் போர் மற்றும் பாசிசவாத சர்வாதிகாரத்தின் ஆபத்து வரை, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையையும், சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதுள்ள நிதிய தன்னலக்குழுவின் பிடியை உடைக்காமல் தீர்க்க முடியாது.

இதன் அர்த்தம், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிலிருந்தும் முறித்துக் கொண்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் ஒரு புதிய, பாரிய அரசியல் கட்சியைக் கட்டமைப்பதாகும். வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளுக்காக அல்லாமல் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை மாற்றியமைக்க முயலும் அனைவரும் இன்றே சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய முடிவெடுக்க வேண்டும்.

Loading