முன்னோக்கு

பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாடும், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் பாசிசவாத மாற்றமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டெக்சாஸ் டல்லாஸில் கடந்த வாரயிறுதியில் நடத்தப்பட்ட பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டுக்குப் (CPAC) பின்னர், ஒரு தெளிவான எச்சரிக்கை செய்ய வேண்டியுள்ளது: அதாவது, டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் மீது அதிகாரத்தை உறுதிப்படுத்தி வருவதுடன், அதை ஒரு பழமைவாத முதலாளித்துவக் கட்சி என்பதிலிருந்து தனிப்பட்ட தலைவரையும் மற்றும் ஓர் துணை இராணுவப் படைப் பிரிவையும் கொண்ட ஒரு பாசிசவாத கட்சியாக மாற்றி வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021 ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமை டலாஸில் நடந்த கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் பேசுகிறார் [Credit: AP Photo/LM Otero]

ட்ரம்பின் முக்கிய உரை, ஹிட்லரையும் நாஜிக்களையும் நகலெடுத்திருந்தது. ஜனநாயகக் கட்சியினரும் பெருநிறுவன ஊடகங்களும் வலியுறுத்துவது போல, ட்ரம்ப் வெற்று பேச்சுக்களை உளறிக் கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு தனித்துவமான அரசியல் மூலோபாயத்தை பின்பற்றி வருகிறார். ட்ரம்பும் அவரது பாசிச ஆலோசகர்களும் ஓர் அரசியல் பிரச்சினையை எதிர்கொள்ளும் போது, 'ஹிட்லர் என்ன செய்திருப்பார்?' என்று கேட்பதே அவர்களின் முதல் படியாக உள்ளது.

2020 தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான அவரது நயவஞ்சக கட்டுக்கதைகளை முன்வைத்து அவர் உரையைத் தொடங்கிய ட்ரம்ப், கோயபல்ஸின் பெரும்பொய் தத்துவத்தின் மீது தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

'மோசடி செய்யப்பட்ட இந்த தேர்தல் வரும் வரை நிஜமாகவே நாம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தோம்,' என்று கூறிய ட்ரம்ப், பைடென் நிர்வாகத்தைச் சட்டவிரோதமானது என்றழைத்ததுடன், அது 'தேர்தல் மோசடி' செய்தும் 'வாக்குகளை மாற்றியதன்' மூலமும் அதிகாரத்தை அபகரித்ததாக வலியுறுத்தினார். அவரின் ஆதரவாளர்கள் 'இடதுசாரிகளால் ஊக்குவிக்கப்பட்ட, சட்டபூர்வமாக்கப்பட்ட அரசியல் வன்முறையில்' பாதிக்கப்பட்டவர்களாக சித்தரித்தார். அமெரிக்காவில் 600,000 க்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்குச் சீனாவைப் பலிகடா ஆக்கும் 'சீன பிளேக் நோய்' பற்றிய அவரது வாதங்களை மீண்டும் எடுத்துரைத்தார்.

பொருளாதார சிரமங்கள், வேலைவாய்ப்பின்மை மற்றும் குற்றம் என இவற்றுக்குப் பொறுப்பான ஓர் உள்நாட்டு எதிரியால் அவர்கள் முற்றுகைக்கு உட்பட்டுள்ளதாக ட்ரம்ப் அவர் ஆதரவாளர்களிடம் கூறினார். புலம்பெயர்ந்தவர்கள் 'பலரைக் கொன்று, ஊனமாக்கியுள்ளனர்,' என்றுரைத்த அவர், புலம்பெயர்ந்தவர்கள் இப்போது நாட்டையே கைப்பற்றி விட்டதாக கூறினார். “அவர்கள் இத்தகைய நாடுகளின் சிறைகளில் இருந்து வெளியேறி, வெள்ளமென நம் நாட்டுக்கள் நுழையும், கொலைகாரர்கள், போதைப்பொருள் விற்பகர்கள், மனித கடத்தல்காரர்கள்,' என்றார்.

சோசலிசம் மற்றும் மார்க்சிசம் மீது மிக வெளிப்படையான கண்டனத்தை வெளியிட்டதுடன், தனது இயக்கத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஓர் இயக்கமாக சித்தரித்த அவர், இருந்தாலும் மோசமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியிலும் சமூக எதிர்ப்பை நசுக்க அவர் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சோசலிசவாதிகள் 'நமது அமெரிக்க பாரம்பரியத்தை திருடி விட்டனர்' என்றார். 'தீவிர இடதும் தோல்வியுற்ற அரசியல் ஸ்தாபகமும் நமது இயக்கத்தை வெறுக்கின்றன' ஏனென்றால் 'ஊழல்மிக்க சிறப்பு நலன்களை நாம் இறுக்கிப் பிடிக்கிறோம்,' என்றார். 'வரலாறு நெடுகிலும் உள்ள சோசலிச மற்றும் கம்யூனிச இயக்கங்களைப் போலவே, இன்றைய இடதுசாரிகளும் சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களுக்கு நியாயத்தில் நம்பிக்கை இல்லை, அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர்கள் மார்க்சிச ஒழுக்கநெறியை நம்புகிறார்கள் — அவர்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை காயப்படுத்த எதையும் நியாயப்படுத்துவதுடன், அவர்களது கட்சியின் தீவிர கொள்கை திட்டநிரலை முன்னெடுக்கிறார்கள்,” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது, ட்ரம்ப் ஜனவரி 6 இல் தலைமைச் செயலக பாதுகாப்பு அதிகாரியால் கொல்லப்பட்ட ஆஷ்லி பாபிட்டை ஓர் 'அப்பாவி, அருமையான இளம் பெண்,” என்று பாராட்டி, அவர் இயக்கத்தை தியாகிகளின் இயக்கமாக ஆக்கினார். இதுவும் கூட ஹிட்லரிடம் இருந்து நகலெடுக்கப்பட்டது தான், அதிரடிப்படையின் சிப்பாய் ஹோஸ்ட் வெஸ்செல் 1930 இல் இறந்த பின்னர் அவரை ஒரு தியாகியாக ஹிட்லர் ஊக்குவித்தார். ஜனநாயகக் கட்சியின் 'குறிப்பிட்ட உயர் அதிகாரிகளுக்கான' பாதுகாப்பு தலைமையால் அப்பெண்மணி சுடப்பட்டதைக் காட்டும் 'தகவல் கிடைத்திருந்ததாக' முதல்முறையாக கூறிய ட்ரம்ப், பாபிட் மரணத்திற்கு ஜனநாயகக் கட்சி தலைமை மீது பழி சுமத்த இருப்பதாக சூசகமாக தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியின் தனிப்பட்ட தலைவராக ட்ரம்பை ஊக்குவிப்பதிலேயே முற்றிலும் சுழன்று கொண்டிருந்த CPAC கூட்டத்தின் இறுதியில் ட்ரம்பின் உரை வந்தது.

ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குத் தலைமை தாங்க உதவியவர்களுக்கு முக்கிய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பதவிக் கவிழ்ப்பு சதியின் போது காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் எங்கே இருந்தார்கள் என்ற தகவல்களை உடனுக்குடன் ட்வீட் செய்து கொண்டிருந்த லாரன் போபெர்ட் சிறப்பு பேச்சாளராக இருந்தார், அதேபோல ஜனவரி 6 காலையில் ட்ரம்புடன் சேர்ந்து உரை நிகழ்த்தி, அந்த கூட்டத்தை 'சண்டையிட' ஊக்குவித்த மோ புரூக்ஸூம் சிறப்பு பேச்சாளராக இருந்தார். ட்ரம்பின் மகன் டொனால்ட் ஜூனியர், ட்ரம்ப் மந்திரிசபையின் பல உறுப்பினர்கள் மற்றும் ட்ரம்பின் முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லெர் ஆகியோரும் பேச்சாளர்களில் இருந்தனர், இதைப் போலவே தேர்தல் மோசடி பற்றிய ட்ரம்பின் வாதங்களை ஊக்குவித்த அதிவலது இணைய-ஒலிபரப்பு வலைய பேச்சாளர்களின் ஒரு கூட்டமும் இருந்தது.

ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும் Proud Boys, Three Percenters மற்றும் Oath Keepers போன்ற பாசிசவாத குழுக்களை குடியரசுக் கட்சிக்குள் அதன் துணை இராணுவப்படை அதிரடி துருப்புகளாக இணைத்து வருகின்றனர். இந்த குழுக்கள் ஒவ்வொன்றின் பிரதிநிதிகளும் CPAC இல் கலந்து கொண்டனர், மேலும் மாநாட்டு அமைப்பாளர்களால் கரம் விரித்து அவர்கள் வரவேற்கப்பட்டனர். ஜனவரி 6 இல் அமெரிக்க தலைமைச் செயலகத்தில் நிலைநிறுத்துவதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த துணை இராணுவ விரைவு பதிலடி படைப்பிரிவுகளைத் தனிப்பட்டரீதியில் ஒழுங்கமைத்த Oath Keepers தலைவர் ஸ்டீவர்ட் ரோட்ஸ் முக்கிய விருந்தினராக இருந்தார்.

அமெரிக்காவின் குறைந்த தடுப்பூசி விகிதத்தைப் பாராட்டிய குழு உறுப்பினரை உற்சாகப்படுத்தி, அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் மரணங்களைக் கொண்டாடுவதில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சபை பெண்மணி போபெர்ட் மேற்கொண்டு எந்தவொரு தடுப்பூசி முயற்சிகளையும் எதிர்த்தார்: “உங்களுடைய பௌசி ஓச்சியை (கோவிட்-19 தடுப்பு மருந்து) கொண்டு வந்து என் கதவைத் தட்டாதீர்கள்,” என்றார். இலாபத்திற்காக நூறாயிரக்கணக்கான மக்களைத் தியாகம் செய்த, கொரோனா வைரஸிற்கான ட்ரம்பின் எதிர்வினையை பேச்சாளர்கள் பாராட்டினர்.

மிகவும் வெளிப்படையான பாசிசவாத உரை மில்லரால் வழங்கப்பட்டது, அவர் பதவியில் இருந்த முழு பதவிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் இருந்த ஒரே உயர்மட்ட ட்ரம்ப் ஆதரவாளராக இருந்தார்.

ஹிட்லரின் நீண்டகால மாணவரான மில்லர், அமெரிக்க கலாச்சாரத்தைக் களங்கப்படுத்த விரும்புவதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி தாக்கியதன் மூலமாக 'இந்நாட்டின் பாரம்பரியம், இதன் கலாச்சாரம், இதன் மதிப்புகளைப் பாதுகாக்கும்' அடிப்படையில் 'ஒரு புதிய பழமைவாத வெகுஜனவாதத்தை' உருவாக்குவதற்காக, குடியரசுக் கட்சியைக் கையிலெடுத்துக் கொள்வதில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக பெருமை பீற்றினார். “இந்நேரத்தில், குடியரசுக் கட்சி பெருவணிகத்தில் இருந்து விலகி, அதை ஒருபோதும் திரும்பிப் பார்க்கக்கூடாது. தன்னலக் குழுக்கள், பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் ஏனைய பாரிய வியாபார பெருவணிகங்கள் அனைத்திடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும், இந்நாட்டுக்கு அவை விசுவாசமாக இல்லை. அவை இந்நாட்டில் விசுவாசமற்ற உயரடுக்கைக் கொண்டுள்ளன. மிகவும் செல்வசெழிப்பான, மிகவும் தனிச்சலுகை கொண்ட, மிகவும் சக்தி வாய்ந்த அவர்கள் இந்நாட்டை அழிக்க முயன்று வருகிறார்கள்,” என்றார்.

தங்களின் எழுச்சி இயக்கத்தை ட்ரம்ப் வழிநடத்தினால் 'நாம் வெற்றி பெறுவோம்!' என்று கூறி மில்லர் அவர் பேச்சை நிறைவு செய்தார். “நாம் ஜெயிப்போம், ஏனென்றால் அடோல்ஃப் ஹிட்லர் நம்மை வழிநடத்துகிறார்,” என்ற (“Wir werden siegen, weil uns Adolf Hitler führt”) நாஜி பிரச்சார கோஷத்தை இது ஏறக்குறைய வார்த்தைக்கு வார்த்தை அப்படியே திரும்ப கூறுவதாக இருந்தது.

ட்ரம்பும் அவரது பாசிசவாத ஆலோசகர்களும் இப்போது அவரை உரிமைக்குரிய ஜனாதிபதியாக 'மீண்டும்' நியமிக்க முடியும் என்ற தத்துவத்தை முன்வைக்கின்றனர். இந்த கோடைகால ஆரம்பத்தில் பாசிசவாத வட்டாரங்களில் இந்த தத்துவம் அபிவிருத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் மைக்கல் ஃபிளின், My Pillow நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மைக் லின்டெல் மற்றும் ட்ரம்பின் முன்னாள் தேர்தல் வழக்கறிஞர் சிட்னி பவல் ஆகியோர் 'மீண்டும் பதவியில் அமர்த்தும்' பதவிக் கவிழ்ப்பு சதியை அறிவுறுத்தி வருவதாக Vanity Fair குறிப்பிட்டது. மே மாதம், ஸ்டீவ் பானனின் 'போர் அறை' (War Room) இணையவழி ஒலிபரப்பு வலையத்தில் (podcast) தோன்றிய லின்டெல், “ஆகஸ்ட் மாத இறுதி வாக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வருவாரென நான் நம்புகிறேன்,” என்றார். இந்தாண்டு இறுதிக்குள் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரென குடியரசுக் கட்சியின் 29 சதவீத வாக்காளர்கள் நம்புவதை ஜூன் மாதம் நடத்தப்பட்ட Politico/Morning Consult கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.

குடியரசுக் கட்சியின் பாசிசவாத மாற்றம் பெருநிறுவன செய்தி ஊடகத்தின் திவால்தன்மையையும், ஆபத்தை குறைத்துக் காட்டுவதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளையும் அம்பலப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினர் முடிவில்லாமல் 'இருகட்சிகளின் ஒருமனதான சம்மதத்திற்கு' முறையீடு செய்வதில் ஈடுபட்டுள்ளனர், இது ஓர் இழிவான மற்றும் விகாரமான தன்மையை எடுத்து வருகிறது. அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் காங்கிரஸ் சபையிலுள்ள 'சோசலிசவாதிகள்' குடியரசுக் கட்சியிலுள்ள அவர்களின் 'சகாக்களுக்கு' அழைப்பு விடுக்கின்றனர். பதவி ஏற்றவுடன், பைடென் அறிவித்தார், “நமக்கு குடியரசுக் கட்சி தேவை. கொள்கையும் பலமும் கொண்ட ஓர் எதிர்கட்சி நமக்கு வேண்டும்,” என்றார்.

ஜனநாயகக் கட்சியினர் மிகச் சரியாக ட்ரம்புக்குச் சாதகமான ஓர் அரசியல் மூலோபாயத்தைப் பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் பிரபுத்துவத்தை வளப்படுத்தும், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கங்களிடையே சமூக வறுமைக்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றனர். இனவாத மற்றும் பாலின அரசியலை அவர்கள் விடாப்பிடியாக ஊக்குவிப்பதால், தீவிர வலதுசாரிகள் பலமடைந்து வருகிறார்கள். ட்ரம்ப் அவரது CPAC உரையில் நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்தைச் சுட்டிக் காட்டினார், “இவ்வளவு தான் அவர்கள் பேசுவார்கள். ஒட்டுமொத்த காட்சியும். இனம், இனம்.” 2017 இல் பானன் குறிப்பிட்டதைப் போல, ஜனநாயகக் கட்சியினர்—அவர்கள் அடையாள அரசியலை பேசும் வரை, சந்தோஷம் தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் இனவாதம் குறித்து பேச வேண்டுமென விரும்புகிறேன். இனம் மற்றும் அடையாளம் மீது இடது ஒருமுனைப்பட்டால், நாம் பொருளாதார தேசியவாதத்தைக் கொண்டு சென்று, ஜனநாயகக் கட்சியினரை நசுக்க முடியும்.”

ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன, ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம் என்ன நடந்ததென ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறது. பைடென் நீதித்துறை விசாரணையிலிருந்து எந்த உண்மைகளும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. குடியரசுக் கட்சியின் சதிகாரர்களும் பங்கேற்க அழைக்கப்பட வேண்டுமென ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வருகையில், காங்கிரஸ் சபையின் ஒரு விசாரணை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. வீதியில் சண்டையிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், அதை வடிவமைத்தவர்களில் எவரும் சாட்சியமளிக்கக் கூட சாத்தியமானளவுக்கு பலமாக நிர்ப்பந்திக்கப்படவில்லை.

ஜனநாயகக் கட்சியினர், பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் சுயதிருப்தி கொண்ட நடுத்தர வர்க்கத்தின் விடையிறுப்பு தொழிலாள வர்க்கம் மீதான அச்சத்தால் தூண்டப்பட்டுள்ளது. முதலாளித்துவ சொத்து உறவுகளின் பாதுகாவலர் என்பதில் ஜனநாயகக் கட்சி ட்ரம்பை விட குறைந்ததில்லை என்பதோடு, தற்போதைய நிலைமையின் அபாயங்களைக் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கையூட்டுவது பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தூண்டுமென அஞ்சி அதைத் தவிர்க்க அது பெரும்பிரயத்தனம் செய்து வருகிறது. இந்த பயம் தான், ஆளும் வர்க்கத்தின் செல்வங்களைச் சவால் விடுப்பதிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் இயக்கத்தை தன்னால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியுமென ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கும் ட்ரம்ப் முறையீடு செய்வதற்கான அடித்தளமாக உள்ளது.

அமெரிக்கா முழுவதும் வாகனத்துறை தொழிலாளர்கள், செவிலியர்கள், பொதுத்துறை தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இன்னும் பலரிடையே வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்றன. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமான ஓர் அரசியல் மற்றும் சோசலிச முன்னோக்கை வர்க்கப் போராட்டத்திற்குள் கொண்டு செல்வதை அர்த்தப்படுத்துகிறது. இதற்கு, பாசிசவாதத்தின் ஆதாரமான விளங்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், இனங்கள் மற்றும் தேசியங்களைக் கடந்து சர்வதேச தொழிலாள வர்க்ககத்தை ஐக்கியப்படுத்தப் போராடி வரும் சோசலிச சமத்துவக் கட்சியைக் (SEP) கட்டுவது அவசியமாகும்.

Loading