மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இதுவரை மிகுந்த தொற்றும் தன்மையுடன் பரவி வரும் கோவிட்-19 டெல்டா திரிபு வகை வைரஸின் உலகளாவிய எழுச்சி, குறிப்பாக உலகளவில் பெரும்பாலும் தடுப்பூசி போடப்படாமலுள்ள குழந்தைகளுக்குத் தான் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆபத்துக்களை நன்கு அறிந்தும் கூட, உலகளவில் அரசாங்கங்கள் இலையுதிர்கால அரை வருட கல்விக்கு பள்ளிகளை முழுமையாகத் திறப்பதற்கு தீவிர முனைப்பை காட்டுகின்றன.
காமா (Gamma) திரிபு வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தும், மற்றும் டெல்டா திரிபு வகை தற்போது விரைந்து பரவி வரும் பிரேசிலில், கோவிட்-19 தொற்றுநோய் 2021 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 10–19 வயதுடைய 1,581 இளைஞர்களை ஏற்கனவே கொன்றுவிட்ட நிலையில், இந்த வயதினரின் மரணங்களுக்கு தொற்றுநோய் முக்கிய காரணியாக மாறி வருகிறது என்று Uol இன் ஜூலை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 10 வயதிற்குட்பட்ட 1,187 குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகில் COVID-19 இலிருந்து அதிக எண்ணிக்கையிலான குழந்தை இறப்புகளை பிரேசில் பதிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் வீதம் 1,600 சதவீதத்திற்கும் அதிகமாக கடும் வேகத்தில் அதிகரித்து வரும் இங்கிலாந்தில், ஒட்டுமொத்த இங்கிலாந்து மாணவர்களில் ஏழு பேருக்கு ஒருவர் வீதம், அதாவது 1.05 மில்லியன் மாணவர்கள், தற்போது கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், அல்லது வைரஸ் நோய்தொற்று உள்ள இடங்களில் தொடர்பில் இருந்ததால் தனிமையில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 30 குழந்தைகள் கடுமையான நோயறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதால், குழந்தைகள் மருத்துவமனைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 20 சதவீத குழந்தைகள் லோங் கோவிட்டை உருவாக்குகிறார்கள் என்பதையும், ஆரம்ப நோய்தொற்றுக்குப் பின்னர் இந்த வகையின் நோயறிகுறிகள் பல மாதங்கள் நீடிக்கின்றன என்பதையும் கண்டறிந்துள்ளன, அதேவேளை ஒரு புதிய ஆய்வு, கோவிட்-19 பாதிப்புடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் தோராயமாக 5 சதவீதம் பேருக்கு மூளை அல்லது நரம்புக் கோளாறுகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளது.
புதன்கிழமை, அமெரிக்கா 56,525 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களை பதிவு செய்தது, இது எந்தவொரு நாட்டையும் விஞ்சும் உச்சபட்ச உத்தியோகபூர்வ எண்ணிக்கையாகும், மேலும் இங்கு டெல்டா மாறுபாட்டின் ஆதிக்கத்தினால் ஒரே மாதத்தில் நோய்தொற்று பரவும் வீதம் 565 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம், புளோரிடாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நோய்தொற்றுக்கள் 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் அனைத்து குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜோசப் பெர்னோட் (Dr. Joseph Pernot), “கடந்த ஏழு நாட்களில், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வேறு எந்த ஏழு நாட்களையும் விட மிக அதிக நோயாளிகளை நாங்கள் எதிர்கொண்டோம். ஆகவே குழந்தைகள் மத்தியில் நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம்” என்று FOX 13 News செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.
ஆர்கன்சாஸ், மிசோரி மற்றும் இன்னும் பல மாநிலங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளும், கடந்த குளிர்கால நோய்தொற்று எழுச்சிக்குப் பின்னர், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. குழுந்தைகளுக்கான அமெரிக்க கல்விச்சாலை (American Academy of Pediatrics) தெரிவிப்பதன்படி, ஜூலை 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 23,551 கோவிட்-19 குழந்தை நோய்தொற்றாளர்கள் இருந்தனர், இது முன்னைய வாரத்திலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகும், மேலும் அந்த வாரத்தில் இன்னும் அதிகமாக 236 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இளைஞர்கள் மத்தியில் நோய்தொற்றுக்களும், மருத்துவமனை சேர்ப்புக்களும் கடுமையாக அதிகரிக்கின்ற போதிலும், இந்த இலையுதிர்காலத்தில் அனைத்து பள்ளிகளையும் முழுமையாக திறக்க பைடென் நிர்வாகம் அதன் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள், தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற கொள்கையை ஊக்குவித்தது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மொத்தம் 1.4 மில்லியன் குழந்தைகளுக்கு சேவையாற்றும் முதல் மற்றும் மூன்றாவது மிகப்பெரிய பள்ளி மாவட்டங்களான நியூயோர்க் மற்றும் சிக்காகோ உட்பட, அமெரிக்காவின் 200 மிகப்பெரிய பள்ளி மாவட்டங்களில் தோராயமாக 30 சதவீத மாவட்டங்கள், எந்தவித தொலைநிலை கற்றலுக்கான வாய்ப்பையும் வழங்கவில்லை.
வியாழக்கிழமை, CDC இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி, “டெல்டா திரிபு வகை வைரஸ், முன்னர் பரவி வந்த திரிபு வகைகளை விட மிகுந்த ஆக்கிரோஷமானது என்பதுடன் மிகவும் தொற்றக்கூடியது” என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சுருக்கக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் அவர், “இந்த வைரஸ் பரவுவதற்கு எந்தவித தூண்டுதலும் தேவையில்லை, அதாவது அடுத்து தொற்றுவதற்கு பாதிக்கப்படக்கூடிய நபர்களை அது தொடர்ந்து தேடுகிறது,” என்றும் அவர் கூறினார்.
தோராயமாக 42 மில்லியன் பள்ளி வயது குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை, அதிலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2022 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்ற யதார்த்தத்துடன் சரிசெய்து பார்க்க வாலென்ஸ்கி தவறிவிட்டார். கடந்த வாரம் ஒரு நேர்காணலில் இது குறிப்பிடப்பட்டபோது, “இலையுதிர்காலத்தில் நமது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவை முழுமையாக திறக்கப்பட்டு, நேரடி கற்றல் நடந்தாக வேண்டும்” என்று வாலென்ஸ்கி கடுமையாக தெரிவித்தார்.
CNN டவுன் ஹாலில் புதன்கிழமை பேசுகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் “பள்ளியில் முகக்கவசம் அணிய வேண்டும்,” அதேவேளை தடுப்பூசி போடப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் “முகக்கவசம் அணிய வேண்டாம்” என்று தெரிவித்தார்.
“நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களானால், உங்களுக்கு கோவிட்-19 நோய்தொற்று ஏற்படாது” என்று கூறி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே கூட நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் நிகழ்ந்தது பற்றி நேரடியாக பொய் கூறவே பைடென் முனைந்தார். உண்மையில் CDC, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் குறைந்தது 791 இறப்புக்கள் ஏற்பட்டது, மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டது குறித்து பதிவு செய்துள்ளது.
பைடென் தொற்றுநோயைப் பற்றி பொய் சொன்னது இதுதான் முதல் தடவை அல்ல. பிப்ரவரியில் CNN டவுன் ஹாலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், “குழந்தைகளுக்கு இது ஏற்படாது … கோவிட் தொற்று இப்போது அடிக்கடி நிகழ்கிறது. இவ்வாறு நிகழ்வது அசாதாரணமானது” என பைடென் நேரடியாக இரண்டாம் வகுப்பு மாணவனிடம் பொய் சொன்னார்.
பொறுப்பற்ற முறையில் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தாலும் இதே பொய்கள் கூறப்பட்டு வருகின்றன. பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பரந்த தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பை எதிர்கொள்கையில், அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாநில ஆளுநர்களின் ஆதரவுடன் கூட, பாசிச போல்சொனாரோ நிர்வாகம், வரவிருக்கும் வாரங்களில் பிரேசில் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு தீவிர முனைப்புடன் உள்ளது. சுமார் இரண்டு மில்லியன் மாணவர்களைக் கொண்ட தென் அமெரிக்காவின் மிகப்பெரிய பள்ளி மாவட்டமான சாவோ பாலோவில், அனைத்து மாணவர்களும் 1.5 மீட்டரிலிருந்து ஒரு மீட்டராகக் குறைக்கப்பட்ட சமூக இடைவெளியுடன் நேரடி வகுப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான உலகளாவிய உந்துதலின் தன்மை, பெருநிறுவன இலாபங்களை பெருக்க பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு தொழிலாள வர்க்க பெற்றோரை வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான புறநிலை தேவையிலிருந்து எழுகிறது.
தொழிலாளர் புள்ளிவிபர பணியகம் (Bureau of Labor Statistics), ஜூன் மாதத்தில் சுமார் 9.5 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையில்லாமல் இருந்ததாகவும், மற்றும் வேலை தேடி வந்ததாகவும் இந்த வாரம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான உச்சபட்ச வேலையின்மை விகிதங்களின் பின்னணியில், குறைந்த செலவில் குழந்தை பராமரிப்புக்கான வாய்ப்புகள், கோவிட்-19 குறித்த பாதுகாப்புக்கான அக்கறைகள், மற்றும் கூட்டாட்சி வேலையின்மை சலுகைகளின் விரிவாக்கம் ஆகியவை இல்லாமை சில முக்கிய காரணிகளாக உள்ளன என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
பள்ளிகளை மீளத்திறக்கும் முனைப்பு, ஜூலை 31 அன்று வெளியேற்றங்கள் குறித்த கூட்டாட்சி தடை முடிவடைந்தது, மற்றும் செப்டம்பர் 6 அன்று கூட்டாட்சி வேலையின்மை சலுகைகள் குறைக்கப்பட்டது ஆகியவற்றுடன் ஒத்துப்போவதானது, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு அனுப்பிவைப்பதற்கும், பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு அவர்கள் வேலைக்குத் திரும்புவதற்குமான பெரும் நிதி நெருக்கடியை உருவாக்குகிறது.
இந்த ஆளும் வர்க்க தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, முதலாளித்துவ சார்பு அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (American Federation of Teachers-AFT) மற்றும் தேசிய கல்வி சங்கம் (National Education Association-NEA), மற்றும் உலகளவில் அவற்றின் சமதரப்பு அமைப்புக்கள், பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான பிரச்சாரத்தை தொடர்ந்து எளிதாக்குகின்றன. NEA தலைவர் பெக்கி பிரிங்கிள் (Becky Pringle), “நேரடி கற்றலுக்கு மாற்று வழி இல்லை,” என்று சமீபத்தில் தெரிவித்தார், அதேவேளை AFT தலைவர் ராண்டி வைன்கார்டன் (Randi Weingarten), “எந்த சந்தேகமும் இல்லை: பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவை நேரடி வகுப்புக்களாக நடைபெற வேண்டும்” என்று மே மாத தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டார்.
இந்த கொள்கைகளை நியாயப்படுத்துவதில், அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மையான மனநல நெருக்கடி பற்றி குறிப்பிடுகின்றன. ஆனால் குழந்தைகளின் நல்வாழ்வு பற்றிய அவர்களது போலியான அக்கறை அவர்களது கொலைகார கொள்கைகளை மூடிமறைப்பதற்கான மூடுதிரையாக உள்ளது. உலகளவில், பள்ளிகள் மூலம் கோவிட்-19 நோய்தொற்று பரவியதால் ஏற்பட்ட ஏராளமான இறப்புக்களில் சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் தங்களது ஒரு பெற்றோரையோ அல்லது பாதுகாப்பாளரையோ இழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிட்டுள்ளது பற்றி இந்த புள்ளிவிபரங்கள் எதுவும் கூறவில்லை.
தொற்றுநோய் காலம் முழுவதும், உலக சோசலிச வலைத் தளம், உலகளவில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகளவிலான ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்காக தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, அத்தியாவசியமற்ற பணியிடங்களை பரவலாக மூடுவதன் ஒரு பகுதியாக, பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட வேண்டும் என எப்போதும் கோரியுள்ளது, அத்துடன் உயர்தர தொலைநிலை கற்றல், மனநல ஆதரவு, உணவு பாதுகாப்பு, பெற்றோருக்கு வருமான பாதுகாப்பு, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் வழங்க ஏராளமான ஆதாரங்களை வழங்கவும் கோரிக்கை விடுத்தது.
கடந்த பள்ளி ஆண்டில், அமெரிக்கா மற்றும் உலகளவில், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, மிகுந்த தொலைநோக்குடைய கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்களை (Educators Rank-and-File Safety Committees) கட்டமைப்பதுடன் இணைந்து பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான படுகொலை முனைப்பை எதிர்க்க ஏராளமான கல்வியாளர்கள் முயன்றனர்.
2021 மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சாமானிய தொழிலாளர் குழுக்களின் வளர்ந்து வரும் உலகளாவிய வலையமைப்பை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு சார்ந்த கட்டமைப்பையும் அரசியல் தலைமையையும் வழங்க வகைசெய்ய, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-FRC) உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்தது. வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், உலகளவில் பள்ளிகளின் மறுதிறப்புக்களை தடுக்க ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்துவதற்காகவும், போராட்டத்தில் நுழைகின்ற அனைத்து தொழில்துறை தொழிலாளர்களுடனான தொடர்புகளை உருவாக்குவதற்காகவும், மற்றும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காகவும் இந்த வலையமைப்பு விரிவாக்கப்பட வேண்டும்.