மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவின் முதலிடத்துக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டி பெனால்டி முறையில் முடிவிற்கு வந்து, இது இங்கிலாந்துக்கு எதிராக இத்தாலி வென்றது. ஆட்டத்தைத் தொடர்ந்து, பெனால்டி தவறவிட்ட மூன்று இங்கிலாந்து வீரர்களான மார்கூஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ மற்றும் புக்காயோ சாகா ஆகியோர் சமூக ஊடகங்களில் இனவவாத துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்கள்.
ட்விட்டர் இதுதொடர்பாக “கடந்த 24 மணி நேரத்தில்… 1,000 ட்வீட்களை விரைவாக அகற்றியுள்ளோம், எங்கள் விதிகளை மீறியதற்காக பல கணக்குகளை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளோம்…” என திங்களன்று கூறியது.
இங்கிலாந்தின் கறுப்பின வீரர்களை நோக்கி துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றி கார்டியன் ஒரு பகுப்பாய்வு மேற்கொண்டது. குரோஷியா, ஸ்காட்லாந்து மற்றும் செக் குடியரசிற்கு எதிரான இங்கிலாந்தின் மூன்று குழு ஆட்டங்களில், “2,114 தவறான ட்வீட்டுகள் வீரர்கள் மற்றும் அணியின் மேலாளர் கரேத் சவுத்கேட் ஆகியோரை நோக்கி அல்லது பெயரிடப்பட்டிருந்தன. இதில் 44 வெளிப்படையான இனவாத ட்வீட்களும் அடங்கும். இதில் N-சொல் மற்றும் குரங்கு ஈமோஜிகளைப் பயன்படுத்தி செய்திகளை கறுப்பின வீரர்கள், மற்றும் ஆட்டத்தின் ஆரம்பத்தில் வீரர்கள் முழங்காலில் நிற்பது உட்பட இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 58 ட்வீட்டுகள் வீரர்களைத் தாக்கின.”
மான்செஸ்டரில் யுனைடெட் அணிக்காக விளையாடும் ராஷ்போர்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுவரோவியத்தின் மீது, இறுதி ஆட்டம் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் இனவெறி கிராஃபிட்டி பூசப்பட்டது.
சமூக ஊடக தளங்களில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த வீரர்களுக்கு ஆதரவான செய்திகளை அனுப்பியதால், இனவாத தாக்குதல்களுக்கு உடனடியாக பரந்த வெறுப்பு அலைகளைத் தூண்டின.
உள்ளூர்வாசிகள் உடனடியாக ராஷ்போர்டின் சுவரோவியத்தின் மீது பூசப்பட்ட கிராஃபிட்டிகளை குப்பை பைகளால் மூடினர். அடுத்த 24 மணி நேரத்தில், சுவரோவியத்தின் சுவரில் ஒரு பெரிய பகுதி வீரருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான செய்திகளால் மூடப்பட்டிருந்தது.
ராஷ்போர்ட் உதைபந்தாட்ட மைதானத்திற்கு அப்பாலும் தனது செயல்பாடுகளுக்காக எல்லாவற்றிற்கும் மேலாக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். தொற்றுநோய்களின் போது கோடை விடுமுறை நாட்களில் இங்கிலாந்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஏழ்மையான குழந்தைகளுக்கு தொடர்ந்தும் இலவச பள்ளி உணவை வழங்க வேண்டும் என்று கோரி, அரசாங்க எதிர்ப்பிற்கு எதிராக கடந்த ஆண்டு அவர் தொடங்கிய பிரச்சாரத்தை பல செய்திகள் குறிப்பிடுகின்றன. ராஷ்போர்ட் சிறுவனாக இருக்கும்போது இலவச பள்ளி உணவில் தங்கியிருந்தார். தனி பெற்றோராக பல வேலைகளை செய்து தனது குழந்தைகளை வளர்த்த ஒரு தாயிடமிருந்து வந்த பின்வரும் மேற்கோள் இந்த சுவரோவியத்தில் அடங்கும்: 'உங்கள் போராட்டம் உங்கள் நோக்கத்தில் மிகப்பெரிய பங்கை வகிக்கும் என்பதை அறிந்து பெருமிதம் கொள்ளுங்கள்.'
திங்கள்கிழமை காலை இணையவழியிலான மனு ஒன்று 'இங்கிலாந்தில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்தும் இனவெறியாளர்களை தடை செய்ய வேண்டும்' என்று கோரி எட்டு மணி நேரத்திற்குள் 300,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றது. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.
இனவாதத்தைக் கண்டித்து கால்பந்து சங்கம் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளுக்கு மத்தியில், கன்சர்வேடிவ் அரசாங்கம் தனது சொந்த அறிக்கைகளை வெளியிட்டது. பல விமர்சகர்கள் இனவாதத்தை வளர்ப்பதில் அரசாங்கத்தின் முக்கிய நபர்களின் உண்மையான பங்கை சுட்டிக்காட்டியதால் இவ்வறிக்கை உடனடியாக தாக்குதலுக்கு உள்ளானது. பொது கோபத்தின் முக்கிய இலக்குகள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் உள்துறை செயலாளர் பிரீதி பட்டேல் ஆவர்.
திங்களன்று, ஜோன்சன் ஒரு டவுனிங் தெரு மாநாட்டில், வீரர்கள் மீது இனவாத துஷ்பிரயோகத்தை நடத்துபவர்கள் 'நீங்கள் தோன்றிய பாறையின் கீழ் மீண்டும் ஊர்ந்து செல்கிறீர்கள்' என நம்புவதாகக் கூறினார். உள்துறை செயலாளர் பிரீதி பட்டேல், 'மோசமான' துஷ்பிரயோகத்தால் தான் 'வெறுப்படைந்தேன்' என்று ட்விட்டரில் அறிவித்தார். 'இதற்கு நம் நாட்டில் இடமில்லை, காரணமானவர்களை பொறுப்பேற்க செய்ய நான் காவல்துறையை ஆதரிக்கிறேன்' என்றார்.
இனவாதத்திற்கு எதிரான அடையாளமாக இங்கிலாந்து வீரர்கள் போட்டியின் போது முழங்காலில் நிற்பதை ஜோன்சனும் பட்டேலும் எதிர்த்ததாக பலர் குறிப்பிட்டனர். வீரர்கள் முழங்காலில் நிற்கும்போது இங்கிலாந்தின் போட்டிகளில் மைதானத்தில் இருப்பவர்கள் கூக்குரலிட்டபோது அவர்களை விமர்சிக்க ஜோன்சன் மறுத்துவிட்டார். ஒரு செய்தித் தொடர்பாளர் அவர் 'சைகைகளை விட செயலில் அதிக கவனம் செலுத்துவதாக' கூறினார்.
பட்டேல் புதிதாக நிறுவப்பட்ட வலதுசாரி செய்தி சேவையான GB TV இல் ஒரு நேர்காணலில், 'அந்த வகை சைகை அரசியலில் பங்கேற்கும் மக்களை நான் ஆதரிக்கவில்லை' என்று அறிவித்தார். கடந்த ஆண்டு ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் பொலிஸ் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் வேலையில் 'அழிவுதரக்கூடிய' தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறும் முன், வீரர்கள் முழங்காலில் நிற்கும்போது கூக்குரலிடுவதற்கு இரசிகர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று கேட்டதற்கு, 'இது அவர்களுக்கு ஒரு மிகவும் வெளிப்படையாக ஒரு தேர்வு' என்று பதிலளித்தார்.
ஜோன்சன் காமன்வெல்த்தில் 'கொடி அசைக்கும் ஆதிக்குடிகளின் பிள்ளைகளின் வழக்கமாக ஆர்ப்பரிக்கும் மக்களை' 'தர்பூசணி புன்னகையுடன்' (இனவாத மொழியில்) எழுதிய ஒரு மனிதராவார். 2018 ஆம் ஆண்டளவில், பிரெக்ஸிட் பிரச்சாரத்தில் தனது வெற்றிக்களிப்பில் அவர், புர்கா அணியும் பெண்களை 'கடிதப் பெட்டிகள்' மற்றும் 'வங்கி கொள்ளையர்கள்' என்று குறிப்பிடுவதன் மூலம் டோரி கட்சியின் மிக வலதுசாரி அடுக்குகளிடையே தனது ஆதரவை அதிகரிக்க முயன்றார். அவர் 2002 இல் ஆபிரிக்காவைப் பற்றி 'கண்டம் ஒரு கறைபடிந்ததாக இருக்கலாம், ஆனால் அது நம் மனசாட்சியின் கறை அல்ல' என்று ஒரு கட்டுரையை எழுதினார். மேலும், 'ஒரு காலத்தில் நாங்கள் பொறுப்பில் இருந்தோம் என்பது பிரச்சனை அல்ல, ஆனால் நாங்கள் இனி பொறுப்பில் இல்லை” என்று கூறினார்.
பட்டேலின் விழித்திருக்கும் பெரும்பாலான நேரங்கள் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு செலவிடப்படுகின்றன.
இங்கிலாந்து வீரர் டைரோன் மிங்ஸ் அவரைப் பற்றி பின்வருமாறு எழுதினார், “எங்கள் இனவாத எதிர்ப்பு செய்தியை ‘சைகை அரசியல்’ என்று பெயரிடுவதன் மூலம் போட்டியின் ஆரம்பத்தில் நீங்கள் நெருப்பைத் தூண்டமுடியாது. அவ்வாறு செய்ததன் மூலம் நாங்கள் எதை எதிர்த்தோமோ அது நிகழும்போது வெறுப்படைய முடியாது”.
முன்னாள் இங்கிலாந்து வீரர் கேரி நெவில் Sky News இடம் பின்வருமாறு கூறினார், “சமத்துவத்தை ஊக்குவிக்கவும் இனவாதத்திற்கு எதிராக பாதுகாக்கவும் முயற்சிக்கும் வீரர்களை [முழங்காலில் நிற்கும்] இந்த நாட்டின் மக்கள் கூக்குரலிடுவது சரி என்று பிரதமர் கூறினார். இது மிக மேல்மட்டத்தில் தொடங்குகிறது. இனரீதியான துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட வீரர்கள் பற்றிய அந்த தலைப்புச் செய்திகளுடன் விழித்ததில் நான் சிறிதும் ஆச்சரியப்படவில்லை; மூன்று வீரர்கள் தவறவிட்ட நிமிடத்தில் நான் அதை எதிர்பார்த்தேன்.'
எவ்வாறாயினும், நிகழ்வுகள் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தாது. மூன்று வீரர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கான பொதுமக்களின் பிரதிபலிப்பு, பிரிட்டிஷ் மக்களிடையே இனவெறி மீதான பெரும் எதிர்ப்பு இருப்பதையும் டோரிகள் மீதான விரோதத்தையும் நிரூபிக்கிறது.
வலதுசாரி ஊடகங்களும் பொதுமக்கள் கோபத்தை குறிவைத்து இருந்தன. Sun பரபரப்பு செய்தித்தாள் செவ்வாயன்று அதன் முதல் பக்கத்தை ஒரு முழு பக்க செயின்ட் ஜோர்ஜ் கொடியுடன் ராஷ்போர்ட், சாகா மற்றும் சாஞ்சோ ஆகியோரின் படங்களுடன் வெளியிட்டது. “இனவெறியர்களுக்கு எதிராக தேசம் ஒன்றுபடுகிறது: நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்” என்ற தலையங்கத்தை இணைத்திருந்தது.
ட்விட்டரில் வெளிவிடப்பட்ட பதில்களில், “Sun பத்திரிகை அதைத் தூண்டி, அதை வளர்த்துவிட்டது. பாசாங்குத்தனம் பிரமிக்க வைக்கிறது”; 'நான் இந்த பத்திரிகையை என் குப்பைதொட்டிக்கு விரிக்க கூட பயன்படுத்த மாட்டேன். இந்தத் தாள் அறியாமை மற்றும் இனவெறியுடன் ஒரு வழக்கமான அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துகிறது. இதை வைத்து நீங்கள் யாரையும் முட்டாளாக்கவில்லை”; மேலும் “முழங்காலில் இருப்பது ‘அறநெறிரீதியான ஏமாற்று’ என்றும், ‘அபத்தமான மிகைப்படுத்தப்பட்ட நடத்தை’ என்றும் ஒரு கட்டுரையை வெளியிட்டதற்கு அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மன்னிப்பு கேட்கலாம்” என்பன உள்ளடங்கியிருந்தன.
வெகுஜன உணர்வின் இத்தகைய வெளிப்பாடு அரசாங்கத்திற்கு ஒரு மறைந்த அச்சுறுத்தல் மட்டுமல்ல. வர்க்கப் பிளவுகளை விட இனப் பிளவுகளே முக்கியம் மற்றும் குறிப்பாக ஒரு உலகளாவிய “வெள்ளையின சலுகைகளை” வலியுறுத்தும் அடையாள அரசியலை ஆதரிக்கும் பல்வேறு குட்டி முதலாளித்துவ வக்கீல்களின் கூற்றுக்களை இது பொய்யாக்குகின்றது.
சேர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது முன்னோடி ஜெரமி கோர்பின் இருவரும் இங்கிலாந்து அணியைப் பாதுகாப்பதற்கும் ஜோன்சனின் இழப்பில் எளிதான அரசியல் மூலதனத்தை உருவாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இது இரு தலைவர்களின் கீழும் தொழிற் கட்சி தொற்றுநோய்களின் போது டோரிகளுடன் கைகோர்த்து செயல்படுவதைத் தடுக்கவில்லை. அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பையும் அடக்குவதற்கு தொழிற்சங்கங்களை நம்பியிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை போட்டியின் நிகழ்வுகள், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு அரசியல் மற்றும் சமூக வெடிமருந்தின் மீது அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. பிரிட்டிஷ் வரலாற்றில் மிக வலதுசாரி அரசாங்கத்திற்கும், அதிலிருந்து தங்கள் ஆலோசனைகளையும் எடுக்கும் பாசிச அழுக்குகளுக்கும் ஒரு தீர்க்கமான தாக்குதலை கொடுக்கும் திறனை தொழிலாள வர்க்கம் கொண்டுள்ளது. ஆனால் அதற்கு இந்த அழுகிய அமைப்புகளிலிருந்து விலகி, சோசலிசத்திற்கான போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைக்கவேண்டும்.