மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்தின் மூன்று வயதுக் குழந்தையான தர்னிகா முருகப்பனுக்கு, அதிக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தபோதிலும் பத்து நாட்களாக முறையான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை இரவு, மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த்தில் உள்ள பிரதான நிலப்பகுதியில் உள்ள ஒரு குழந்தை மருத்துவமனைக்கு தனது சிறையிலிருந்து மருத்துவக் காரணங்களுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளார். இந்தக் கட்டத்தில், அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நிமோனியா காரணமாக, உயிர் ஆபத்தான குருதியில் நச்சுத்தன்மை (septicaemia) உருவாக்கியுள்ளது.
அவரது தாயார் பிரியா, தர்னிகாவுடன் பெர்த்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது தந்தை நடேஸ் மற்றும் ஐந்து வயது சகோதரி கோபிகா ஆகியோர் கிறிஸ்துமஸ் தீவில் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மத்திய குயின்ஸ்லாந்து நகரமான பிலோலாவில் (Biloela) மூன்று வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தமிழ் அகதி குடும்பத்தில் இளையவர் தர்னிகா. கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு பிறந்த தர்னிகா, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவின் மனிதாபிமானமற்ற அகதிகள் தடுப்பு அமைப்பில் கழித்திருக்கிறார்.
குடும்பத்தின் சித்திரவதை சிறை வைப்பிற்கும், அவர்களை நாடுகடத்த ஸ்காட் மோரிசனின் லிபரல்-தேசிய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் பெரும் எதிர்ப்பு உள்ளது. அவர்களை விடுவிப்பதற்கான அழைப்புக்கு தலைமை தாங்குவது பிலோலாவில் உள்ள சமூகம், இது “ஹோம் டு பிலோ” (Home to Bilo) பிரச்சாரத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது.
கிராமப்புற மத்திய குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள பிலோலா, நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளுக்கான ஒரு மையமாகவும், ஏராளமான புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளைப் பணியில் அமர்த்தும் ஒரு பெரிய கப்பல்துறை உள்ளது. இந்த நகரத்தின் தொழிலாள வர்க்க மக்கள் எடுத்துள்ள நிலைப்பாடும், நாடு முழுவதும் அவர்களுக்கு கிடைத்த வெகுஜன ஆதரவும், 1990களில் இருந்து தொழிற் கட்சி மற்றும் தாராளவாத அரசாங்கங்களால் ஒரே மாதிரியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகதிகள் மீதான குற்றப் போருக்கு மக்கள் ஆதரவு என்ற கட்டுக்கதையை அம்பலப்படுத்துகிறது.
“ஹோம் டு பிலோ” (Home to Bilo) பிரச்சாரத் தலைவர்களில் ஒருவரான ஏஞ்சலா ஃபிரெடெரிக்ஸ், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் (ABC) கூறினார்: “தடுப்புக்காவலில் உள்ள ஊழியர்களால் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையைக் கேட்டு என் இரத்தம் முற்றிலும் கொதித்தது. அந்த தடுப்புக்காவலில் இந்த குடும்பத்தை கவனிக்க இருக்கும் மருத்துவ அதிகாரிகள், தங்கள் பொறுப்புகளில் முற்றிலும் தோல்வியுற்றனர்.
தர்னிகாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிகுறிகள் இருந்தன என்பது மருத்துவ ஊழியர்களால் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் வெறுமனே அவருக்கு பராசிட்டமோல் (paracetamol) மற்றும் இப்யூபுரூஃபனை (ibuprofen) பரிந்துரைத்துள்ளனர் என ஃபிரெடெரிக்ஸ் கூறினார்.
அவர் வெளியேற்றப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, அவருக்கு தொடர்ந்து கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தது. கிறிஸ்மஸ் தீவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவரது வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ்.
“வார இறுதியில், [பிரியா-தாயார்] அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருந்தார், திரும்ப திரும்ப இல்லை என்றும், தர்னிகா அவ்வளவு மோசமான நிலையில் இல்லையெனறும், விரைவில் குணமடைவாள் என்றும் கூறப்பட்டது” எனவும் “தர்னிகா மோசமான நிலையை அடைந்த பின்னர்தான் அவர்கள் இறுதியாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள்” எனவும் ஃபிரடெரிக்ஸ் விளக்கினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரியாவுக்கு இதேபோன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது, பெர்த்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் இரண்டு வாரங்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட ஒரு மாதத்திற்கு முறையான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் மேற்கு ஆஸ்திரேலிய கிளைத் தலைவர் ஆண்ட்ரூ மில்லர், தர்னிகா கிறிஸ்துமஸ் தீவுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளார். அவர் கூறினார்: “உளவியல் மற்றும் சமூக ரீதியான கோணத்தில் மருத்துவமனையில் இருந்து அவள் வந்த சூழலுக்கு அவளை வெளியேற்றுவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றி நாம் நீண்ட, சீரிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். பூட்டுதல் நிலைமைகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் சிறிய குழந்தைகள் வசிப்பதன் மூலம் இது நிகழும்.”
குடும்பத்தின் வழக்கறிஞர் கரினா ஃபோர்ட் திங்களன்று கார்டியனிடம் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கிற்கு பல மருத்துவ அறிக்கைகளை அனுப்பியதாகக் கூறினார், குடும்பத்தை சமூக தடுப்புக்காவலில் விடுவிக்குமாறு கோரினார். ஃபோர்ட்டின் அறிக்கைகள் “நீண்டகால தடுப்புக்காவலின் விளைவாக குழந்தைகள் இப்போது அனுபவிக்கும் சிரமங்களை உறுதிப்படுத்துகின்றன, இதில் தூக்கக் கலக்கம், ஒலியின் உணர்திறன், தூங்குவதில் சிரமங்கள் போன்றவை அடங்கும்.”
இது, குழந்தைகள் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதன் மீதான நீண்டகால உளவியல் தாக்கங்களைப் பற்றிய மருத்துவ நிபுணர்களின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது. அவர்கள் “அதிர்ச்சிகரமான சம்பவங்களால் தாக்கப்படும் நோய்க்குறி' (resignation syndrome) என்று அழைக்கப்படுவதை உருவாக்க முடியும். “கடுமையான மனச்சோர்வினால்” ஏற்படுகிறது, இது பாதிக்கப்பட்டவர்களை அசையமுடியாத பதிலளிக்கமுடியாத (catatonic) நிலைக்கு தள்ளும்.
அலெக்ஸ் ஹாக் மற்றும் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் இருவரும் குடும்பத்தை விடுவிக்க மறுத்துவிட்டனர். ஆண்ட்ரூஸ் ஆரம்பத்தில் குடும்பத்தை அமெரிக்காவிற்கோ அல்லது நியூசிலாந்திற்கோ மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்பை எழுப்பினார், இது பற்றி குடும்ப வக்கீல்களுடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளப்படவில்லை, இன்று காலை “சன்ரைஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வலியுறுத்திக் கேட்டபோது, இது அப்படி இல்லை என்றார்.
குடும்பம் ஏன் இந்த முறையில் நடத்தப்படுகிறது என்று கேட்கப்பட்டபோது, ஆண்ட்ரூஸ் இது 'நீண்டகால கொள்கைகளுக்கு' இணங்க நடத்தப்படுவதாக கூறினார். அவர் கூறினார்: “மிகவும் வெளிப்படையாக, எனது கண்காணிப்பில் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சிக்கும் மக்களை நான் இறக்கவிடபோவதில்லை ... நான் மக்கள் கடத்தல்காரர்களுக்கு வாயில்களை திறக்கப் போவதில்லை.”
இந்த வரியை அடுத்தடுத்த தொழிற் கட்சி மற்றும் தாராளவாத அரசாங்கங்கள் ஊக்குவித்துள்ளன - புகலிடம் கோருவோரை காட்டுமிராண்டித்தனமாகவும் அப்பட்டமாகவும் சட்டவிரோதமாக நடத்துவது ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல நினைக்கும் பிற அகதிகளுக்கு பொருத்தமான “தடுப்பை” வழங்குவதற்கான ஒரு வழியாக நியாயப்படுத்தப்படுகிறது. இந்த பகுத்தறிவு, இப்போது மூன்று வயது குழந்தை வாழ்நாள் முழுவதும் தடுத்து வைக்கப்படுவதற்கும், சரியான சுகாதார சேவையை மறுப்பதற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முருகப்பன் குடும்ப வழக்கு தொடர்பாக பரவலாக நிராகரிக்கப்படுவதற்கு, தொழிற் கட்சி மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்கு முறையீடு செய்ய முயன்றுள்ளது. தொழிற் கட்சியின் நிழல் உள்துறை அமைச்சர் கிறிஸ்டினா கெனலி, ஏப்ரல் மாதம் கிறிஸ்மஸ் தீவில் குடும்பத்தை சந்தித்தார், மேலும் “சோகமான, சிக்கலான நீண்டநிலை” முடிவுக்கு வர வேண்டும் என்றும், “இந்த குடும்பத்தை பிலோலா வீட்டிற்கு வர அனுமதிக்க வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை பாசாங்குத்தனத்துடன் நிறைவுற்றது, மேலும் முருகப்பன் குடும்பத்தின் காலவரையற்ற தடுப்புக்காவலுக்கு காரணமான “எல்லை பாதுகாப்பு” ஆட்சியை உருவாக்க உதவுவதில் தொழிற் கட்சியின் பதிவை மறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமான நிலையங்கள் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் மக்களிடமிருந்து தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பின்னர், எல்லைகளின் 'கட்டுப்பாட்டை இழந்துவிட்டது' என்று குற்றம் சாட்டி, கெனலி அவரே 2019 ஆம் ஆண்டு கூட்டணி அரசாங்கத்தை வலதுபுறத்தில் இருந்து விமர்சித்தார்.
தமிழ் மற்றும் பிற அகதிகளை குறிவைத்து ஒருங்கிணைந்த ஆஸ்திரேலிய-இலங்கை இராணுவ ரோந்துகளில் தற்காலிக இடைவெளியை அனுமதித்தமைக்காக அப்போதைய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனை அவர் கண்டித்தார். ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “திரு டட்டன் இந்த முக்கியமான எல்லை ரோந்துகளை ஏன் நிறுத்தினார் என்பதை விளக்க வேண்டும்.”
ஜூலியா கில்லார்டின் தொழிற் கட்சி அரசாங்கம், பசுமைக் கட்சியினரின் விமர்சனரீதியான ஆதரவுடன், படகு மூலம் ஆஸ்திரேலியாவை அடையும் அனைத்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களையும் உடனடியாக திருப்பி அனுப்பும் கொள்கையை உருவாக்கியது. இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்த ஒப்பந்தத்தில் 700 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர், மேலும் தெரியாத எண்ணிக்கையிலான பலர் ஆஸ்திரேலிய கடற்படையால் தடுக்கப்பட்டு பலவந்தமாக திரும்ப வேண்டிய நிலையில் இருந்தனர்.
தொழிற் கட்சி அது முதலில் உருவாக்கிய கட்டாய தடுப்புக்காவலின் முழு கட்டமைப்பையும் தொடர்ந்து ஆதரிக்கிறது, மேலும் இது புகலிடம் கோருவதற்கான அகதிகளின் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட உரிமையை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தர்னிகாவுக்கு என்ன நடக்கிறது என்பது ஆஸ்திரேலியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள அரசியல் உயரடுக்கினரால் அகதிகள் எப்படி நடத்தப்டுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதற்கான பதில், அகதிகள் மீதான கொடுங்கனவு நிலைமைகளுக்கு பொறுப்பான அரசியல் கட்சிகளிடம் முறையிடுவதல்ல. அவர்களின் விடுதலைக்கான எந்தவொரு இயக்கத்தின் நோக்குநிலையும், தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். மேலும் எந்தவொரு நபரும் உலகில் எங்கு வேண்டுமானாலும் வாழவதற்கும் வேலை செய்வதற்கும் உரிமையுடனான போராட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும்.