ஆஸ்திரேலிய அரசாங்கம் தமிழ் அகதி குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்த முயல்கிறது

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்

ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பெரிம் தாக்குதலில், மத்திய கூட்டணி அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் கீழ் செயல்படும் எல்லைப் படை முகவர்கள், ஒரு தமிழ் அகதி குடும்பத்தை இலங்கைக்கு அனுப்பவதற்காக நேற்றிரவு பலாத்காரமாக விமானத்தில் ஏற்றினர்.

பொலிஸ்-அரச பாணியிலான இந்த நடவடிக்கை, குடும்பத்திற்கான வக்கீல்கள் கடைசி நிமிடத்தில் கூட்டாட்சி நீதிமன்றத்தின் தடை உத்தரவைப் பெற்ற பின்னரே முடிவுக்கு வந்தது. அவர்கள் நாடு கடத்தப்படுவது அதிகாலை நேரத்தில் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது. இன்று மெல்போர்னில் உள்ள மத்திய வட்டார நீதிமன்ற (Federal Circuit Court) விசாரணையின் போது அடுத்த புதன்கிழமை.மாலை 4.00 மணி வரை மேலதிக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த உத்தரவு இரண்டு குழந்தைகளில் இளையவருக்கு மட்டுமே உள்ளடக்கியதாக கூறப்படுகிறது, அதாவது குடும்பம் இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளதுடன், அங்கு அவர்கள் அரச துன்புறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடும்.

குடும்பத்திற்கான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, குடியேற்ற அதிகாரிகளின் மிருகத்தனமான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினர்.

வியாழக்கிழமை, நடேசலிங்கம், பிரியா தம்பதியினருக்கும் அவர்களது மகள்களான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோருக்கும், "ஆஸ்திரேலியாவில் இருந்து அகற்றப்படுவதற்கான நோட்டீஸ்" வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோபிகாவுக்கு நான்கே வயதும். தருணிகாவுக்கு இரண்டு வயது மட்டுமே.

2018 மார்ச் முதல் அந்தக் குடும்பம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெல்போர்ன் தடுப்பு மையத்தில் உள்ள எல்லைப் படை முகவர்கள், மாலை நேரம், அவர்களை வேன் ஒன்றில் கட்டாயப்படுத்தி ஏற்றி துல்லாமரைன் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த குடும்பம் இலங்கைக்கு சொந்தமான வணிக நோக்கமற்ற விமானத்தில் ஏற்றிவிடப்பட்டது.

விமானத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றப்பட்டபோது பிரியாவின் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் தனது இரண்டு குழந்தைகளிடமும் இருந்து விமானத்தில் பிரிக்கப்பட்டார். நேற்றிரவு தடை உத்தரவு பெறப்பட்ட பின்னர், எரிபொருள் நிரப்ப டார்வினில் விமானம் தரையிறங்கியபோது தான் அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.

குடும்பத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் பரந்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளைத் தடுப்பதன் பேரில், நாடு கடத்தலுக்கான முயற்சி சந்தேகத்திற்கு இடமின்றி பின் இரவில் நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், குடும்பத்தின் சுமார் 50 ஆதரவாளர்கள், மெல்போர் தடுப்பு மையத்திலிருந்து அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தி வந்த சில மணி நேரங்களுக்குள் விமான நிலையத்தில் கூடினர். விமானத்தைத் தடுக்கும் முயற்சியில் விமான நிலைய சுற்றளவு வேலியை கடக்க முயன்றதாக கூறி இரண்டு பெண்களை ஆஸ்திரேலிய பெடரல் பொலிசார் கைது செய்தனர்.

இன்று காலை, ட்விட்டரில் முதல் ஐந்து ஆஸ்திரேலிய ஹேஷ்டேக்குகளில் நான்கு இந்த குடும்பத்தின் பாதுகாப்புக்காக பதிவிடப்பட்டிருந்தன. அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அரசாங்கத்தின் மீதான கண்டனங்களும் இதில் அடங்கி இருந்தன.

ஹோம்டொபிலோ (#Hometobilo) என்ற ஹேஷ்டேக், குயின்ஸ்லாந்து கிராமப்புற நகரமான பிலோலாவுக்கு அந்தக் குடும்பத்தை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தது. அங்கு தான் அவர்கள் கடந்த ஆண்டு குடிவரவு அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் அன்று காலை முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்தது.

பிலோலாவில் ஆதரவாளர்களுக்கு குடும்பம் நன்றி தெரிவிக்கிறது(Credit: @HometoBilo)

பிலோலாவில் வசிப்பவரும், குடும்பத்தின் சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்பருமான ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ், இன்று காலை ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரேடியோ நெஷனலிடம் கூறியதாவது: “பிலோலாவில் உள்ள மக்கள் நேற்றிரவு நடந்த கொடுமையை முழுதும் நம்ப முடியாதவர்களாக உள்ளனர். ஒரு நாடாக ஆஸ்திரேலியா செய்து கொண்டிருப்பதைப் பற்றிய மக்களின் வெறுப்பையே நான் கேள்விப்படுகின்றேன்.”

இந்த எதிர்ப்பிற்கு பிரதிபலித்துள்ள அரசாங்கம், அந்த குடும்பத்தை இலங்கைக்கு கட்டாயப்படுத்தி அனுப்பும் திட்டத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. இன்று காலை செனல் நைனின் இன்று” நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “அவர்கள் அகதிகள் அல்ல என்பதை அந்தக் குடும்பம் ஏற்றுக்கொள்வதையே நான் விரும்புகிறேன், நம் நாடு அவர்களை பாதுகாக்க கடமைப்பட்டிருக்கவில்லை” என்று அறிவித்தார்.

அரசாங்கத்தின் நோக்ம் குடும்பத்தை 18 மாதங்களாக துன்புறுத்தியதன் தொடர்ச்சியாகும். மார்ச் 5, 2018 அன்று, அதிகாலை 5.00 மணியளவில், எல்லைப் படை அதிகாரிகள், காவல்துறை மற்றும் தனியார் செர்கோ காவலர்கள் குடும்பத்தின் பிலோலா வீட்டில் சோதனை நடத்தினர். அவர்கள் குழந்தைகளை படுக்கையிலிருந்து வெளியே இழுத்ததுடன், விமான நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதற்கு பெற்றோருக்கு 10 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் 1,600 கிலோமீட்டர் தொலைவில் மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நகரத்தின் குடியிருப்பாளர்கள் உடனடியாக குடும்பத்தை பாதுகாப்பதற்கும், மனுக்களில் கையெழுத்துப் பெறவும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும், மக்கள் ஆதரவைப் பெறுவதற்கும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினர். நடேசலிங்கமும் பிரியாவும் சமூகத்தின் மிகவும் மரியாதைக்குரிய உறுப்பினர்களாக இருந்தனர், அங்கு அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வேலை செய்தனர் என அவர்கள் சுட்டிக் காட்டினர். அவர்கள் ஆரம்பித்த மனுவில் 200,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அகதிகள் மீதான இரு கட்சித் தாக்குதலுக்கு கிராமப்புற ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் பிரிவுகளால் இடைவிடாது முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தை இந்த வெகுஜனப் பிரதிபலிப்பு மறுத்துள்ளது. பிலோலாவில் உள்ள உணர்வுகள் ஏராளமான நாட்டு நகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களிலும் எதிரொலிக்கின்றன. அங்கு ஆஸ்திரேலிய குடிமக்களும் புலம்பெயர்ந்தோரும் அருகருகே வேலை செய்வதோடு அவர்களின் வேலைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.

குடும்பத்திற்கு பரவலான ஆதரவு இருந்தபோதிலும், அவர்களுக்கு மிக அடிப்படையான சுகாதார உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், தாரூணிகாவின் நான்கு பற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதுன், மேலும் நான்கு பற்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவை அந்தளவு பூச்சரித்துப் போயிருந்தன.

இரண்டு வயது குழந்தைக்கு வலி இருப்பதாகவும், பற்கள் சிகிச்சை அளிக்கப்படாத நிலை காரணமாக திட உணவுகளை உண்ண முடியவில்லை என்றும் அவரது தாயார் பிரியா பல மாதங்களாக புகார் அளித்திருந்தார். அதிகாரிகளின் புறக்கணிப்பின் காரணமாக, குழந்தை தனது ஏழு வயதில் பல் வளரத் தொடங்கும் வரை, அடுத்த ஐந்து ஆண்டுகளை எந்த முன் பற்களும் இல்லாமல் கழிக்க நேரிடும்.

அதே நேரத்தில், நீதிமன்றங்கள் குடும்பத்தின் அகதி அந்தஸ்தை நிலைநிறுத்த அடுத்தடுத்து மறுத்து, அவர்கள் இலங்கைக்கு திரும்புவது பாதுகாப்பானது என்று கூறிவருகின்றன.

இந்த கூற்றுக்கள் வெளிப்படையாக பொய்யானவை. நடேசலிங்கமும் பிரியாவும் இலங்கையை விட்டு வெளியேறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால இனவாத போரை அடுத்தே அவர்கள் தஞ்சம் புகுந்தனர். 2009 இல் தமிழ் பொதுமக்கள் படுகொலையோடு நாட்டின் வடக்கில் இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டதன் மூலமும் போர் முடிந்தது. தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளால் அச்சுறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அடிப்படை ஜனநாயக உரிமைகளை அபகரிக்கும் அவசரகால நிலையை ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் விதித்தது. இந்த பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு மத்தியில், கொழும்பு அரசியல் ஸ்தாபகம் இனவாத விரோதங்களைத் தூண்டுவதற்கு தீவிரமாக முயல்கிறது.

ஆஸ்திரேலியாவால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட ஏனைய தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுப்புக்காவலையும் அரச துன்புறுத்தலையும் எதிர்கொண்டுள்ளனர், இதனால் பலர் தலைமறைவாக உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களது வழக்கின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, நடேசலிங்கமும் பிரியாவும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் தவிர்க்க முடியாமல் குறிவைக்கப்படுவார்கள். புகலிடம் கோருவதற்கு எதிர்பார்க்கும் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக, அரசாங்கம் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளன.

தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், குடும்பத்தின் பாதுகாவலர்களாக சிடுமூஞ்சித்தனமாக காட்டிக்கொண்டு, குடிவரவு அமைச்சர் டேவிட் கோல்மேன் தலையிட்டு குடும்பம் நாடுகடத்தப்படுவதைத் தடுக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

உண்மையில், தஞ்சம் கோருவதற்கான குடும்பத்தின் உரிமை மறுக்கப்படுவது, எல்லாவற்றிற்கும் மேலாக, கடைசி பசுமை கட்சி ஆதரவு கில்லார்ட்டின் தொழிற் கட்சி கூட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாகும். 2012 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்பிச் செல்லும் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் நாடு கடத்துவதற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியது, ஆரம்பத்தில் 700 பேரை திருப்பி அனுப்பியது. இப்போதைய கூட்டணி அரசாங்கம் இந்த நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றது.

கூட்டணி அரசு, தொழிற் கட்சி மற்றும் பாராளுமன்ற ஸ்தாபகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழ் குடும்பத்தின் பாதுகாப்பை முன்நகர்த்த முடியாது என்பதை இந்த கூற்றுக்கள் நிரூபிக்கின்றன. "எல்லைப் பாதுகாப்பு" என்ற பிற்போக்குத்தனமான கட்டமைப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்க இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த எல்லைப் பாதுகாப்பு என்பது தொழிலாளர்களை தேசிய வழிகளில் பிரிக்கவும், ஆழ்ந்த சமூக நெருக்கடியின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடி மீதான கவனத்தை திசை திருப்பவும் பயன்படுத்தப்படுகிறது.

Loading