முன்னோக்கு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர்: ஒரு வரலாற்றுக் குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2021 செப்டம்பர் 11 க்குள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தலையீடு முடிவுக்கு வரப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை அறிவித்தார். மேலும் கடைசி அமெரிக்க சிப்பாய், 2001 அக்டோபர் 7 அன்று மத்திய ஆசிய நாடு மீதான அமெரிக்க படையெடுப்பினதும் ஆக்கிரமிப்பினதும் 20 வது ஆண்டு நிறைவுக்கு பல வாரங்களுக்கு முன்னர் அந்த நாட்டை விட்டு வெளியேறுவார்.

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்த மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி பைடென் ஆவார். கடைசியாக 3,500 அல்லது அதற்கு மேற்பட்ட அமெரிக்க படையினர் நாட்டை விட்டு வெளியேறினாலும், ஆயிரக்கணக்கான சிஐஏ செயற்பாட்டாளர்கள், கூலிப்படையினர் மற்றும் பாராசூட் படையினர் ஜனாதிபதி அஷ்ரப் ஹானியின் கைப்பாவை அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பர். அமெரிக்கா கூறும் "பயங்கரவாத" இலக்குகள் என்பவற்றின் மீது தனது விருப்பத்திற்கு ஏற்றபடி பென்டகன் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ந்தும் வீசும். ஈராக்கைப் போலவே தாக்குதல் துருப்புக்களை மீண்டும் பயன்படுத்துவதும் முற்றிலும் சாத்தியமானதே.

ஜனாதிபதி ஜோ பிடன் 2021 ஏப்ரல் 14 புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஒப்பந்த அறையிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து மீதமுள்ள அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுவது குறித்து பேசுகிறார்.(AP Photo/Andrew Harnik, Pool)

ஆனால், ஆப்கான் போரின் பெயரளவிலான முடிவு பற்றிய பைடெனின் அறிவிப்பானது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கணக்கிட முடியாத துன்பங்களை உருவாக்கி, பரந்த வளங்களை நாசமாக்கி, அமெரிக்க சமுதாயத்தை மிருகத்தனமாக உருவாக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையின் இருப்புநிலைக் குறிப்பை வரைய ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 100,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமின்றி இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்த போரை "கிளர்ச்சி எதிர்ப்பு" முறைகள் மூலம் அதாவது பயங்கரவாதத்தின் மூலம் நடத்தியது: திருமண கொண்டாட்டங்கள் மற்றும் மருத்துவமனைகளில் குண்டுவீச்சு, ட்ரோன் படுகொலை, கடத்தல்கள் மற்றும் சித்திரவதை ஆகியவை இதில் அடங்கும். போரின் அதியுயர்ந்த அட்டூழியங்கள் ஒன்றில், 2015 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் குண்டுஸில் உள்ள எல்லைகள் இல்லா மருத்துவர்களின் (Doctors Without Borders) மருத்துவமனை மீது அமெரிக்க விமானம் அரை மணி நேர தாக்குதலை நடத்தி, 42 பேரை கொன்றது.

இராணுவத்தை திரும்பப் பெறுவதாக அறிவிக்கும் பைடெனின் சுருக்கமான கருத்துக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ள நாட்டின் மோசமான நிலைமைகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அமெரிக்காவின் உண்மையான நோக்கங்களை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதை அடிப்படையாகக் கொண்ட போர், செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகளுக்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்க மக்களுக்கு விற்கப்பட்டது. இது ஒருபோதும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இது உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைப் பின்தொடர்வதில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிபணியச் செய்வதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போராகும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் செய்த குற்றங்களுக்கு, புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள், அதைத் தொடங்கியவர்கள் மற்றும் அதை நிகழ்த்திய ஒபாமா நிர்வாகம் உட்பட யாரும் பொறுப்பேற்கவில்லை. ஜோர்ஜ் டபிள்யூ புஷ் (சமீபத்தில்) அவர் டொனால்ட் ட்ரம்பை விட வெளிப்படையாக குறைந்த மூர்க்கத்தனமும் மற்றும் சர்வாதிகாரமுமாக இருந்ததனால் ஒரு சர்வதேச விவகாரங்களில் மரியாதைக்குரிய அரசியல்வாதி என்று புகழப்படுகிறார்.

அவர் பதவியில் இருந்த ஒவ்வொரு நாளும் போரை நடத்திய ஒரே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோதிலும் பராக் ஒபாமா ஒரு பிரபலமாக ஊடகங்களால் நடத்தப்படுகிறார். முக்கிய உதவியாளர்களான, டொனால்ட் ரம்ஸ்பீல்ட் முதல் ஹிலாரி கிளிண்டன் வரை மில்லியனர்களாக ஓய்வுதியம் பெற்று வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். ஒபாமாவின் துணை ஜனாதிபதி இப்போது வெள்ளை மாளிகையில் பதவியில் இருக்கிறார். இந்த குற்றப் போரை அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஆதரித்தனர். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி, செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் உட்பட இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்த்ததற்கான ஒப்பற்ற வரலாற்றை உலக சோசலிச வலைத் தளம் கொண்டுள்ளது. இது செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஆரம்ப படையெடுப்பு வரை செல்கிறது. 9, அக்டோபர் மாதம் 2001 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க படையெடுப்பு குறித்த முதல் உலக சோசலிச வலைத்தள ஆசிரிய தலையங்க அறிக்கையில், "ஆப்கானிஸ்தானில் போரை ஏன் எதிர்க்கிறோம்" என விளக்கி நாம் பின்வருமாறு எழுதினோம்:

இந்த அல்லது எந்தவொரு போரின் தன்மையும், அதன் முற்போக்கான அல்லது பிற்போக்குத்தனமான தன்மையும் தீர்மானிக்கப்படுவது அதை தொடர்ந்த உடனடி நிகழ்வுகளால் அல்ல. மாறாக வர்க்க கட்டமைப்புகள், பொருளாதார அடித்தளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுகளின் சர்வதேச பாத்திரங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்து, அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை ஒரு ஏகாதிபத்திய போராகும்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நீண்டகால சர்வதேச நலன்களைப் பின்தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் போரைத் தொடங்கியது. போரின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் சரிவு மத்திய ஆசியாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. மத்திய ஆசியா உலகில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களின் நிரூபிக்கப்பட்ட இரண்டாவது பெரிய இருப்பை கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மூலோபாய அணுகலை வழங்கும் காஸ்பியன் கடல் பகுதி, சுமார் 270 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது. இது உலகின் நிரூபிக்கப்பட்ட இருப்புக்களில் 20 சதவிகிதமாகும். இது 665 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவைக் கொண்டுள்ளது. இது பூமியின் எரிவாயு இருப்புகளில் ஏறத்தாழ எட்டில் ஒரு பங்காகும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடு தொடங்கியது 2001 இல் அல்ல. ஜூலை 1979 இல், கார்ட்டர் நிர்வாகம் சோவியத் ஆதரவுடைய அரசாங்கத்துடன் போராடும் சக்திகளுக்கு உதவ முடிவு செய்தபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிபிக்னேவ் ப்ரெஜின்ஸ்கி கூறியது போல், “சோவியத் ஒன்றியத்திற்கு அதனது வியட்நாம் போரை வழங்குவதாகும். ”1979 டிசம்பரில் சோவியத் படையெடுப்பைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குச் சென்று கெரில்லாப் போரில் ஈடுபட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அணிதிரட்ட பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவுடன் இணைந்து சிஐஏ பணியாற்றியது. இது ஒசாமா பின் லாடனை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து வந்து அல்கொய்தாவை உருவாக்கியது.

தாலிபான்களும் இதேபோல் பாகிஸ்தான் வழங்கிய ஆயுதங்கள் மற்றும் பயிற்சி, சவுதி நிதி மற்றும் அமெரிக்க அரசியல் ஆதரவின் விளைவாகும். பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து அடிப்படைவாதக் குழு ஒரு வகையான “மதகுரு பாசிசமாக” வெளிவந்த போதிலும், பல தசாப்த கால போர் மற்றும் ஒடுக்குமுறையின் விளைபொருளாக இருந்தாலும், கிளின்டன் நிர்வாகம் 1995-96ல் அதன் கையகப்படுத்துதலை “ஸ்திரத்தன்மையை” மீட்டெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பாக ஒப்புக் கொண்டது.

1996 முதல் 2001 வரை, ஆப்கானிஸ்தானுடனான அமெரிக்க உறவுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவை தவிர்த்த ஒரு பாதையினூடாக காஸ்பியன் படுகையில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டுவருவதற்கான முன்மொழியப்பட்ட குழாய்களைச் சுற்றி இருந்தன. இப்பிராந்தியத்தின் நிரந்தர அமெரிக்க தூதர் ஸல்மே கலீல்சாத் மற்றும் ஆப்கானிஸ்தானின் முதல் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான ஹமீத் கர்சாய் இருவரும் எண்ணெய் நிறுவனமான Unocal க்காக பணியாற்றினர்.

புஷ் நிர்வாகம் 2001 ல் பல கட்டங்களில் தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு அச்சுறுத்தல் விடுத்தது. 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், “எல்லாவற்றையும் மாற்றிய நிகழ்வுகள்” என்பதற்கு மாறாக, நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தாக்குதலை ஆரம்பித்துவிட்டது. 9/11 தாக்குதல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் அனுமதித்ததற்கு தேவையான சாக்குப்போக்குகளை வழங்க முன்வந்தன என்பதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன.

ஆப்கானிஸ்தானை விரைவாக கைப்பற்றியது மற்றும் தலிபான் ஆட்சியின் சரிவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றவியல் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்திய ஒரு நிகழ்வு என்று உலக சோசலிச வலைத் தளம் பகுப்பாய்வு செய்தது. அமெரிக்க குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் அமெரிக்க ஆதரவுடைய ஆயுதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். காபூலில் நிறுவப்பட்ட ஆட்சி முன்னாள் தலிபான் அதிகாரிகளான பஷ்டூன் பழங்குடியினரின் தலைவரான ஹமீத் கர்சாய் மற்றும் தாஜிக், உஸ்பெக் மற்றும் ஹசாரா சிறுபான்மையினரை தளமாகக் கொண்ட வடக்கு கூட்டணி போன்றவற்றின் ஸ்திரமற்ற கூட்டணியாகும்.

அமெரிக்க படையெடுப்பு, அப்பகுதியின் புவிசார் அரசியல் மீது ஸ்திரத்தை குலைக்கும் விளைவைக் கொண்டிருந்ததுடன், ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளும் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கீழ் பல்வேறு காலங்களில் 100,000 துருப்புக்களாக வளர்ந்த மிகப்பெரிய அமெரிக்க படையை தமது எல்லைகளில் ஒரு நிரந்தர அச்சுறுத்தலாக கருதின. 2003 இல் ஈராக்கை படையெடுப்பதன் மூலம் புஷ் நிர்வாகம் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் இன்னும் இரத்தக்களரியான செயலைச் செய்தது. இது முழு மத்திய கிழக்கின் பரந்த ஸ்திரமின்மைக்கான நிலைமைகளை உருவாக்கி, இப்போது சிரியா, லிபியா மற்றும் யேமனில் ஏகாதிபத்திய தலையீடுகள் உள்நாட்டுப் போர்களில் உணரப்படுகிறது.

புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் பாரிய இராணுவ வரவு-செலவுத் திட்டங்களை உள்நாட்டில் பொலிஸ்-அரசு நடவடிக்கைகள், கண்காணிப்பு அரசு மற்றும் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை உருவாக்குதல், வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை மோசமாக்குதலுடன் ஒருங்கிணைத்தன.

ஆப்கானிஸ்தானில் போர் என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பின் ஒரு பகுதியாகும், இது 1991 வளைகுடாப் போரில் தொடங்கி, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வழிமுறைகள் மூலம் ஈடுசெய்யும் நோக்கத்தை கொண்டது என உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது. டேவிட் நோர்த் 2016 ஆம் ஆண்டில் ஒரு கால் நூற்றாண்டுபோர் என்ற நூலின்முன்னுரையில் எழுதியது போல்:

“அமெரிக்காவினால் தூண்டப்பட்ட கடைசி கால் நூற்றாண்டு போர்களை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிகழ்வுகளின் சங்கிலியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் மூலோபாய தர்க்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நவகாலனித்துவ நடவடிக்கைகளுக்கும் அப்பால் நீண்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிராந்திய போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்க மோதலின் உட்கூறுகளாகும்.”

இந்த முன்கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பைடெனின் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய கருத்து, ரஷ்யாவுடனும், எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவுடனும் அதிகரித்து வரும் மோதலில் அமெரிக்க இராணுவத்தின் வளங்களை குவிப்பதாகும். சமீபத்திய வாரங்களில், கிழக்கு ஆசியாவில் பைடென் பெருகிய முறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார். மேலும் அமெரிக்க இராணுவம் தனது உத்தியோகபூர்வ கோட்பாட்டில் "பெரும் சக்திகளின் மோதலுக்கு" (“great power conflict”) தயாராகும் அவசியத்தை பொறித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தங்களாக நடந்த இரத்தக்களரி குற்றங்களுக்கு ஒரு உண்மையான கணக்கை தீர்த்துக்கொள்ளவும், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதுவே உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்னெடுக்கும் பணியாகும்.

Loading