மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இம்மாத இறுதியில் கடார் தலைநகர் டோஹாவில் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை நோக்கிய முதல்படியாக, வாஷிங்டனும் தாலிபானும் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு "வன்முறை குறைப்பை" தொடங்கும் ஓர் உடன்பாட்டை எட்டியிருப்பதை வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெறுவதற்கும் மற்றும் 18 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் அக்டோபர் 17, 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான சட்டவிரோத படையெடுப்புடன் தொடங்கிய, அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட போராக இருந்துள்ளதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் இதுபோன்றவொரு உடன்படிக்கை களம் அமைக்கும் என்றும் மோசடியாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, தாலிபான் அந்நாட்டில் அல் கொய்தா சார்பான பிரிவினரின் நடவடிக்கைகளை தடுக்க உறுதியளிக்க உள்ளது.
அந்நாளில் இருந்து, அண்ணளவாக 2,400 அமெரிக்க சிப்பாய்கள் ஆப்கானிஸ்தான் போரில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை விட பத்து மடங்கு பேர் காயமடைந்துள்ளனர், இன்னும் பலர் ஓர் அருவருக்கத்தக்க காலனித்துவ போருக்கு அனுப்பப்பட்திலிருந்து உருவான புறஅதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்த சீர்குலைவு (PTSD) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த "முடிவில்லா போருக்கான" செலவு ஏறத்தாழ 1 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதன் உச்சத்தில், பென்டகன் ஓராண்டில் சுமார் 110 பில்லியன் டாலரை வாரியிறைத்தது. இது மொத்த வருடாந்தர அமெரிக்க மத்திய-பெடரல்- வரவுசெலவு திட்டக்கணக்கில் பொதுக் கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட ஏறக்குறைய 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
ஆப்கானிஸ்தான் மக்களைப் பொறுத்த வரையில், பாதிக்கப்பட்டோரின் இந்த எண்ணிக்கை இன்னும் மிக மிக அதிகம். மிதமான மதிப்பீடுகளின்படி, 175,000 இக்கும் அதிகமானவர்கள் ஒட்டுமொத்தமாக வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர், இதை விட அதிகமாக நூறாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர், அதேவேளையில் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
முழுமையற்ற இந்த போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்வரை இந்த படுகொலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இம்மாதம் நடைமுறையளவில் ஒவ்வொரு நாளும் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட செய்திகள் வந்துள்ளன. பெப்ரவரி 6 இல் பாத்கிஸ் மாகாணத்தில் அமெரிக்க குண்டுகளுக்கு ஒரு பெண்மணி மற்றும் நான்கு குழந்தைகள் என ஐந்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 7 அன்று, அமெரிக்க விமானத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் அறிவித்தது. இவர்கள் அனைவரும் ஓர் இறுதி சடங்கிற்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களாவர். பெப்ரவரி 8 இல், பராஹ் மாகாணத்தில் ஒரு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் ஐந்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 14 இல் நாங்கிரஹார் மாகாணத்தில் அமெரிக்க தாக்குதலில் மேலும் எட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆப்கானிஸ்தான் துன்பகரமாக எதிர்கொள்வதானது 2001 இல் தொடங்கவில்லை. மாறாக 1970 களின் இறுதியில் அப்போது ஜிம்மி கார்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகமும் CIA உம் காபூலில் சோவியத்-ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக 40 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னரே முஜாஹிதீன் இஸ்லாமியவாத கிளர்ச்சியைத் தூண்டிவிட்ட போது, தொடங்கப்பட்டதாகும். கார்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski இன் வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் நோக்கம் சோவியத் ஒன்றியத்திற்கு "அவர்களின் வியட்நாமை" வழங்குவதாக இருந்தது. ஆனால் உண்மையில், CIA ஆல் "Operation Cyclone” என்று கூறப்பட்ட இந்த மறைமுக தலையீட்டில் பிரதானமாக பலியானவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள் தான். அந்நடவடிக்கை கட்டவிழ்த்து விட்ட ஒரு நீடித்த உள்நாட்டு போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.
அந்தப் போர், மாணவர்களை தளமாக கொண்ட ஓர் இஸ்லாமியவாத இயக்கமான தாலிபான் 1996 இல் ஆப்கானிஸ்தானின் பரந்த பெரும்பான்மையினர் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதில் போய் முடிந்தது. மேலும், அதன் அரசாங்கத்துடன் வாஷிங்டன் ஒருபோதும் உத்தியோகபூர்வ இராஜாங்க உறவுகளை ஸ்தாபித்திருக்கவில்லை என்ற அதேவேளையில், தாலிபானின் தலைமை நபர்கள் தான் "தனது வியாபார அரசியலுக்கு சாதகமான" ஆட்கள் என்றது அறிந்திருந்தது. தற்போதைய உடன்படிக்கையை பேரம்பேசி உள்ள ஆப்கானிஸ்தானுக்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் சிறப்பு தூதர் ஜல்மே கலில்ஜாத், 1990 களில் எரிசக்தித்துறை பெருநிறுவனம் Unocal இற்காக —இப்போது இது Chevron இன் பாகமாக உள்ளது— நாடு கடந்த ஆப்கானிஸ்தான் எரிவாயு குழாய் உடன்படிக்கை மீது தாலிபானுடன் பேரம்பேசுவதில் செயல்பட்டவராவார்.
செப்டம்பர் 11, 2001 சம்பவத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி, ஒசாமா பின் லேடனை வழக்கு விசாரணைக்குக் கொண்டு வர தாலிபான் வாஷிங்டனுக்கு ஒத்துழைக்க முன்வந்தது. அமெரிக்க அதிகாரிகள் அதுபோன்ற சிநேகபூர்வ முயற்சிகளை நிராகரித்தனர், ஏனென்றால் CIA இன் முஹாஜிதீன் நடவடிக்கையின் பாகமாக 1980 களில் தோற்றுவிக்கப்பட்டிருந்த அல் கொய்தா அமைப்பை, ஐயத்திற்கிடமின்றி சிஐஏ அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
9/11 க்கு மிகவும் முன்கூட்டியே திட்டமிடப்படப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் தலையீடு "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" நடத்துவதற்காக தொடங்கப்பட்டதில்லை, மாறாக புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில், எண்ணெய் வளம் மிக்க காஸ்பியன் படுகையின் முன்னாள் சோவியத் குடியரசுகளையும், அத்துடன் சீனாவையும் எல்லையாக கொண்டிருந்த ஒரு நாட்டின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக, மத்திய மற்றும் தெற்காசியாவுக்குள் அமெரிக்க இராணுவ பலத்தை செயற்படுத்துவதற்காக நடத்தப்பட்டதாகும்.
இத்தகைய நோக்கங்களைப் பின்தொடர்வதில் அப்போர், சர்வதேச சட்டத்தை மீறிய ஓர் ஆக்கிரமிப்பு போராக இருந்ததுடன், மனித படுகொலைகள், நாடுகடத்தல் மற்றும் சித்திரவதை, குவான்டனாமோ மற்றும் சிஐஏ "இருட்டு சிறைக்கூடங்கள்", அத்துடன் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் அமெரிக்காவுக்கு உள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீதான ஒட்டுமொத்த தாக்குதல் என ஏனைய பல குற்றங்களின் தோற்றத்திற்கும் வழிவகுத்தது.
இறுதியில், அந்த போர் மிகப்பெரும் தோல்வியென நிரூபணமாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அல் கொய்தா மற்றும் இதுபோன்ற சக்திகளை விரட்டுவதற்கு தாலிபானுடன் வாஷிங்டன் மொத்தத்தில் ஓர் உடன்படிக்கை விரும்பியது என்றால், அது ஒரேயொரு சிப்பாயைக் கூட அனுப்பாமல் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே அதை எட்டியிருக்க முடியும்.
அத்தியாவசிய சமூக தேவைகளுக்குச் செலவிடுவதற்குப் பதிலாக, வாஷிங்டன் அந்த போருக்காக செலவிட்ட 1 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இறுதியில் எதை உருவாக்கியுள்ளது? அமெரிக்க அதிகாரிகளாலேயே "ஊழல்மிக்க கூட்டம்" (kleptocracy) என்று விவரிக்கப்படும் ஆப்கான் அரசாங்கம் அந்நாட்டின் சிறிய பகுதியையே கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதுடன், அதன் மக்களில் பெரும்பான்மையினரால் அது வெறுக்கப்படுகிறது. அந்த ஆட்சியின் தலையாட்டித்தனம் அமெரிக்க-தாலிபான் பேச்சுவார்த்தைகளில் இருந்து அது தவிர்க்கப்பட்டிருப்பதிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நடத்தப்பட்ட கடந்த தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குப்பதிவு ஆகியிருந்த நிலையில், அத்தேர்தல்களின் முடிவுகள் ஒட்டுமொத்த மோசடி புகார்களுக்கு மத்தியில் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த மோசடி தேர்தலுக்குப் பின்னர் "தலைமை செயலதிகாரியாக" நியமிக்கப்பட்ட எதிர்கட்சி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா, ஜனாதிபதி அஷ்ரப் கானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் சட்டபூர்வத்தன்மையை ஏற்க மறுத்துள்ளதுடன், அதற்கு சமாந்தரமாக இன்னொரு அரசாங்கம் அமைக்க சூளுரைத்துள்ளார். இது, அமெரிக்க-தாலிபான் உடன்படிக்கை கையெழுத்தாவதைத் தொடர்ந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்படும் முன்மொழியப்பட்டுள்ள "ஒரு விரிவான நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான எதிர்கால அரசியல் வழித்தடத்தை" கடுமையாக சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.
ஆப்கான் பாதுகாப்பு படைகளைப் பொறுத்த வரையில், பெரும் துன்பகரமான இழப்புகளை அனுபவித்து வருகின்ற போதினும், அவை ஆழமான அமெரிக்க விமானப்படை ஆதரவு இல்லாமலும் மற்றும் அமெரிக்க சிறப்புப்படை "ஆலோசகர்கள்" இல்லாமலும் தாலிபானை எதிர்க்க இலாயகற்றவை என்பதை நிரூபித்துள்ளன. “உள்ளே உள்ள நபர்களால்" மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் எண்ணிக்கை, இதில் ஆப்கான் சிப்பாய்களே அவர்களின் துப்பாக்கிகளை அமெரிக்க மற்றும் நேட்டோ பயிற்சியாளர்களுக்கு எதிராக திருப்பியுள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவை மீளக்கட்டியமைப்பதற்காக முழு மார்ஷல் திட்டத்திற்கு மதிப்பிடப்படுவதை விட ஆப்கான் மறுகட்டுமானத்திற்காக (பணவீக்கத்திற்கேற்ப முறைப்படுத்தப்பட்ட விதத்தில்) அதிக அமெரிக்க டாலர்களைச் செலவிட்ட பின்னரும், ஆப்கானிஸ்தான் இந்த புவியில் மிக வறிய நாடுகளில் ஒன்றாக உள்ளது, அதன் மக்கள்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் நாளொன்றுக்கு ஒரு டாலருக்கு சமமான வருமானத்துடன் உத்தியோகபூர்வ வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.
வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட அந்த உடன்படிக்கை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வருமா என்பது பெரிதும் நிச்சயமின்றி உள்ளது. கடந்த செப்டம்பரில் கேம்ப் டவுனில் கையெழுத்தாக இருந்த இதேபோன்றவொரு உடன்படிக்கை, தாலிபான் தாக்குதல் ஒன்று ஓர் அமெரிக்க சிப்பாயின் உயிரைப் பறித்தது என்ற சாக்குபோக்கின் மீது கடைசி நிமிடத்தில் ட்ரம்பினால் இரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவின் "முடிவில்லா போர்கள்" முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற ட்ரம்பின் 2016 தேர்தல் சூளுரையைப் பூர்த்தி செய்வதற்காக ஐயத்திற்கிடமின்றி அவர் எந்தவொரு உடன்படிக்கையையும் ஊக்குவிக்க கருதுகிறார் என்றாலும், இதுபோன்ற நோக்கத்திற்காகவே சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என்றவர் கடந்தாண்டு அறிவித்திருந்தார் என்றாலும், அதேவேளையில் அவர் தன்னைத்தானே மீண்டும் ஆட்சியில் அமர்த்திக் கொள்வதற்காகவும் மற்றும் அந்நாட்டின் எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்க ஆயுதப்படை கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்கு உத்தரவிடுவதற்காகவும் மட்டுமே இதை செய்கிறார். அனைத்திற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும் சரி குடியரசு கட்சி அரசியல்வாதிகளும் சரி ஆப்கானிஸ்தான் மண்ணில் "பயங்கரவாத-எதிர்ப்பு" படையைப் பேணுமாறு அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இறுதி விளைவு என்னவாக இருந்தாலும் சரி, அமெரிக்க-தாலிபான் உடன்படிக்கை ஆப்கானிஸ்தானிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, சமாதானம் உதயமாவதைச் சமிக்ஞை செய்யாது. அந்நாடு, போட்டியில் ஈடுபட்டுள்ள எதிர்விரோத போர்த்தளபதிகளுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலும், அத்துடன் காபூல் மீது, மேலாதிக்கம் செலுத்துவதற்காக போட்டியிட்டு வரும் இரண்டு பிராந்திய சக்திகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலுக்கான ஒரு களமாகவே இருக்கும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அந்நாட்டில் உள்நாட்டு பதட்டங்களைத் தூண்டிவிட்டவாறு அவை அவற்றினது சொந்த மோதல்தன்மையுடைய நலன்களைத் தொடர்ந்து பின்தொடரும்.
அனைத்திற்கும் மேலாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதற்கான தூண்டுதலானது, வெள்ளை மாளிகையினாலும் பென்டகனாலும் வெளியிடப்பட்ட மூலோபாய கோட்பாட்டுடன் தொடர்புபட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதை அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் "வல்லரசு" மோதல் என்பதாக மாற்றப்பட்டதுடன் பிணைந்துள்ளது. அமெரிக்காவின் நீண்டகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நகர்வு என்று கூறப்படுவது, அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடன் உலகின் மிகவும் பேரழிவுகரமான இராணுவ மோதலாக இருக்கக்கூடிய ஒன்றுக்கான தயாரிப்புடன் பிணைந்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான ஓர் ஆக்ரோஷ போருக்கு ஒத்திகையாக நடத்தப்பட்டு வருகின்ற, ஒரு கால் நூற்றாண்டில் அக்கண்டத்திலேயே மிகப் பெரிய போர் பயிற்சிகளுக்காக முதல் 20,000 அமெரிக்க துருப்புகள் ஐரோப்பா வந்தடைந்துள்ள அதே நாளில் தான் தாலிபான் உடனான இந்த மட்டுப்படுத்தப்பட்ட உடன்படிக்கை குறித்த அறிவிப்பு வந்தது என்பது தற்செயலானதல்லை.
ஈராக்கில் நடத்தப்பட்டதைப் போலவே, ஆப்கானிஸ்தான் போரும் பொய்களின் அடிப்படையில் இருந்தது. ஒருபோல ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதிகளாலும், அத்துடன் தளபதிகளாலும் கூறப்பட்டதும், மற்றும் அடிபணிந்த பெருநிறுவன ஊடகங்களால் எதிரொலிக்கப்பட்டதுமான இத்தகைய பொய்களை முதன்முதலில் அம்பலப்படுத்தியவர்கள், இரகசிய இராஜாங்க இராணுவ ஆவணங்களைத் துணிச்சலாக வெளியீட்ட செல்சியா மானிங் மற்றும் விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியன் அசான்ஜ் ஆகியோர் ஆவர். இருவருமே இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், தேசதுரோக குற்றச்சாட்டுக்களையும் மற்றும் அனேகமாக ஆயுள் தண்டனையையும் முகங்கொடுக்க அசான்ஜ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை முகங்கொடுத்து இலண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அசான்ஜ் இற்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காக குற்றச்சாட்டுக்களே இல்லாமல் மானிங் காலவரையின்றி வேர்ஜினியாவில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் போர் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களோ ஒருபோதும் அதற்காக தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை. இது, போருக்கு ஆதாரமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், அதன் சுயாதீனமான பலத்தை அணித்திரட்டும் தொழிலாள வர்க்கத்தின் பணியாகும்.
கட்டுரையாளர்பரிந்துரைக்கும்ஏனையகட்டுரைகள்:
சோசலிசமும், போருக்கு எதிரான போராட்டமும்
[18 February 2016]