மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இத்தாலிய ஊடகவியலாளர்கள் சபீனா ஃபெடெலி மற்றும் அன்னா மிகோட்டோ ஆகியோரால் இயக்கப்பட்டு, அன்ன ஃபிராங்கின் வாழ்க்கையையும், இரண்டாம் உலகப் போரில் நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பி இன்னும் உயிருடன் உள்ள ஐந்து பெண்களையும் மீண்டும் கண்டுபிடிக்கும் நெட்ஃபிளிக்ஸ் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து அன்ன ஃபிராங்க்கும் அவரது நாட்குறிப்பும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தெரியவந்தது. மேலும் 1959 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் ஸ்டீவன்ஸ் இயக்கி The Diary of Anne Frank என்ற பெயரில் வெளிவந்த பிரபலமான திரைப்படத்தில் மில்லி பெர்கின்ஸ் நடித்திருந்தார்.
அன்ன ஃபிராங்க் 1929 இல் ஜேர்மனியின் பிராங்ஃபேர்ட் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அன்னக்கு நான்கு வயதாக இருந்தபோது, நாஜிக்களால் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறி நெதர்லாந்துக்குச் சென்றது. 1940 அளவில் அந்நாடு ஜேர்மன் ஆக்கிரமிப்பிற்குள்ளான போது ஃபிராங் குடும்பத்தினர் ஆம்ஸ்டர்டாம் நகரில் நாஜிக்களிடம் சிக்கினார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அன்னவின் தந்தை தனது வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் ஒரு இரகசிய இடத்தை உருவாக்கத் தொடங்கினார்.
தனது 13 வது பிறந்தநாளில், அன்ன மற்றும் அவரது குடும்பத்தினர் மறைந்துவாழும் நிலைக்குச் சென்றனர். அந்த இரண்டு ஆண்டுகளில் தலைமறைவாக இருந்தபோது, அன்ன ஒரு கூர்மையான கண் மற்றும் கனிவான ஆத்மாவுடன், “இரகசிய வாழ்விடத்தில்” வாழ்க்கையைப் பற்றி எழுதினார். இங்கிலாந்தில் நாடுகடந்த டச்சு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் போர் நாட்குறிப்புகள் மற்றும் ஆவணங்களை வைத்திருக்குமாறு ஒரு வானொலி வேண்டுகோளை விடுத்தபோது, அன்ன தனது நாட்குறிப்பை மீண்டும் எழுதத் தொடங்கினார். ஆனால் அவர் முடிப்பதற்குள், அவரும் வாழ்விடத்தில் உள்ள மற்றவர்களும் ஆகஸ்ட் 4, 1944 இல் நாஜி கெஸ்டாப்போவால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அன்ன, அவரது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து அவுஸ்விட்ஸுக்கு இரயிலில் கொண்டு செல்லப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவரும், அவரது சகோதரியும், தாயும் லோயர் சாக்ஸோனியில் உள்ள பேர்கன்-பெல்சன் சித்திரவதை முகாமுக்கு (Bergen-Belsen concentration camp) கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அன்ன 1945 இன் ஆரம்பத்தில் அநேகமாக தைபோய்ட் காரணமாக, 15 வயதில் இறந்தார். போர் முடிவடைந்ததும், குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரே உறுப்பினரான அன்னவின் தந்தை ஓட்டோ ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அங்கு அவருக்கு மகளின் நாட்குறிப்பு வழங்கப்பட்டது. இது குடும்பம் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 1947 இல், அவர் அதை வெளியிட்டார். இன்றுவரை அன்ன ஃபிராங்கின் நாட்குறிப்பு 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.
புதிய ஆவணப்படத்தில் அச்சமூட்டும் மற்றும் மனதைசிலிர்க்கவைக்கும் கூறுகள் உள்ளன. நடிகை ஹெலன் மிர்ரனால் நாட்குறிப்பின் சில பகுதிகளை இதயபூர்வமாக வாசிப்பதன் மூலம் அன்னவின் சோகம் உயிர்ப்பிக்கப்படுகிறது. அந்த விவரம், அரியன்னா ஸ்ஜெரெனி, சாரா லிட்ச்ஸ்டெஜ்ன்-மொன்டார்ட், ஹெல்கா வைஸ் மற்றும் சகோதரிகள் ஆண்ட்ரா மற்றும் தத்தியானா புச்சி ஆகிய ஐந்து யூதப் படுகொலையில் தப்பியவர்களின் வாழ்க்கைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவர்களில் பலர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டபோது அன்னவின் வயதுடையவர்களாக இருந்தனர்.
Aish.com பெண்களின் பின்னணியின் ஒரு சுருக்கத்தை வழங்குகிறது. ஆண்ட்ரா மற்றும் தத்தியானா புச்சி குரோஷிய சகோதரிகள், அவர்கள் தாய் மற்றும் ஒரு ஒன்றுவிட்ட சகோதரருடன் கைது செய்யப்பட்டபோது நான்கு மற்றும் ஆறு வயதானவர்களாக இருந்தனர். வடக்கு இத்தாலியில் திரியெஸ்டேயில் உள்ள Risiera di San Sabba சித்திரவதை முகாமுக்கு முதலில் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அவுஸ்விட்ஸ்-பிர்கெனவுக்கு நாடு கடத்தப்பட்டனர். 1945 இல் சோவியத் இராணுவம் அவுஸ்விட்ஸுக்கு வந்தபோது, ஆண்ட்ரா மற்றும் தத்தியானா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 650 குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர்.”
அரியன்னா சுரேனியும் குரோஷியாவில் வசித்து வந்தார். Risiera di San Sabba முதல் பேர்கன்-பெல்சன் வரை நான்கு சித்திரவதை முகாம்களூடாக நாடுகடத்தப்பட்டபோது அவர் 11 வயதானவராக இருந்தார். அவர் உயிர் தப்பியபோதும், அவரது குடும்பத்தில் ஏழு உறுப்பினர்களை இழந்தார்."
ஹெல்கா வைஸ் அன்ன பிராங்கின் அதே ஆண்டில் பிறந்தார். 12 வயதில், அவரும் அவரது குடும்பத்தினரும் பிராக் நகரத்திலிருந்து ஜேர்மன் ஆக்கிரமித்த செக்கோஸ்லாவாக்கியாவில் உள்ள டெரெஸின் வதை முகாமிற்கும் பின்னர் அவுஸ்விட்ஸ், ஃப்ரைபேர்க் (ஜேர்மனி) மற்றும் மௌவுத்ஹவுசன் (ஆஸ்திரியா) க்கு நாடுகடத்தப்பட்டனர். குழந்தைப் பருவத்திலிருந்தே ஹெல்கா முக்கியமாக விரிவான மற்றும் திறமையான வரைபடங்கள் கொண்ட ஒரு நாட்குறிப்பை வைத்திருந்தார்.
"சாரா மொண்டார்ட் பாரிஸில் Vel d’Hiv சுற்றிவளைப்பில் இருந்து தப்பினார். [இதன்போது ஜூலை 1942 இல் பிரெஞ்சு யூதர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் பாரிஸில் உள்ள Vélodrome d’Hiver (குளிர்கால Velodrome) என்ற உட்புற விளையாட்டு அரங்கில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டனர்]. பின்னர் அவரின் தாயுடன் 1944 ஆண்டு கைது செய்யப்பட்டு அவுஸ்விட்ஸ்-பிர்கெனவுக்கு நாடு கடத்தப்படும் வரை இரண்டு ஆண்டுகள் தலைமறைவாகி இருந்தார். அவர் வெளிப்படையாக புகைப்படகருவிக்கு பின்வருமாறு சொல்கிறார்: “அங்கு மிக மோசமான, மிக பயங்கரமான விஷயம் என்னவெனில் தகனம் செய்யும் இடத்திலிருந்து எழும் நெருப்பின் சுடராகும். இரவும் பகலும் அது எரிந்து உயர்ந்து பயங்கர சத்தமிட்டது. தீப்பிழம்புகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த வானத்தை ஒளிரச் செய்தது. நான் அதனை அனுபவித்த பின்னர் இனி எதற்கும் பயமில்லை.” அன்ன ஃபிராங்கைப் போலவே, சாராவும் பேர்கன்-பெல்சன் வதை முகாமில் கைதியாக இருந்தார்.
பல பெண்களின் சந்ததியினர் தங்கள் சொந்த வாழ்க்கையில் இந்த வரலாற்றின் தாக்கத்தை பற்றி பேசுகிறார்கள். இதில் ஒரு திறமையான வயலின் கலைஞரும், மற்றொருவர் தனது பெரிய பாட்டியின் சித்திரவதை முகாம் இலக்கத்தை அவரது முன்கையில் பச்சை குத்தியுள்ளார். ஒரு மனதை உறுத்தும் காட்சி பிராக் நகரில் உள்ள பிங்காஸ் யூத ஆலயத்தைக் காட்டுகிறது. இது செக் நாடுகளிலிருந்து இனப்படுகொலையால் இறந்த கிட்டத்தட்ட 80,000 யூதர்களின் நினைவுச் சின்னமாகும்.
#அன்ன ஃபிராங்க் இணைக் கதைகள் டச்சு யூதர்களில் 75 சதவீதம் பேர் நாடு கடத்தப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டனர் என்பதை விளக்குகிறது. பிப்ரவரி 1941 இல், நாஜிகளின் யூத-விரோத கைது மற்றும் படுகொலைகளுக்கு எதிராக, அப்போது சட்டவிரோதமாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த ஒரு பொது வேலைநிறுத்தம் நாட்டில் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தம் ஐரோப்பாவில் நாஜிக்களுக்கு எதிரான முதல் வெகுஜன போராட்டமாக கருதப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பின்னர், இவ்வேலைநிறுத்தம் ஜேர்மன் படைகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது.
இணையாக #கத்தரினாகற் (#KaterinaKat -Martina Gatti) என்ற ஒரு இளம்பருவத்து பெண் தொடர்பான ஆவணப்படம் காண்பிக்கப்படுகின்றது. அதில் பேர்கன்-பெல்சன், அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்று தளங்களை ஆராயும்போது ஒரு கற்பனையான அன்னவை பற்றி அவர் எழுதுகிறார். அதில் அன்னவுடன் ஒரு தலைமுறைரீதியான தொடர்பு இருந்ததுபோல் அவர் உணர்ந்து, அன்னவின் கதையை இன்றைய யதார்த்தத்துடன் தொடர்புபடுத்த முயற்சிக்கிறார். Gattiஇன் எழுத்துக்கள் “அன்புள்ள Gatti” இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். “அன்புள்ள Gatti” என்பது அன்ன தனது பல நாட்குறிப்பு கடிதங்களில் குறிப்பிட்ட கற்பனையான பாத்திரமாகும்.
மிலானோவில் உள்ள பிக்கோலோ நாடக மேடை வடிவமைப்பாளர்களால் ஆம்ஸ்டர்டாமில் இருந்த இரகசிய அடைக்கல இடத்தின் மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டு, அதிலிருந்து அன்ன நாட்குறிப்பை மிர்ரன் வாசிப்பது #அன்ன ஃபிராங்க் இணைக் கதைகளின் முக்கிய அம்சமாகும். மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றமான ஹோலோகாஸ்ட்டை பதிவுசெய்தபோதும் அன்னவின் இளமைச் சொற்களும் எண்ணங்களும் மனிதகுலத்தின் நம்பிக்கையையும் மன அழுத்தத்திலிருந்து விரைவாக விடுபடும் திறனையும் ஈர்க்கின்றன. பல பதிவுகள் எடுத்துக்காட்டப்படுவதற்கு பெறுமதியானவையாக உள்ளன:
நவம்பர் 19, 1942:செய்தி பயங்கரமானது. எங்களுக்குத் தெரிந்த பல நண்பர்களையும், நபர்களையும் சித்திரவதை முகாம்களுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். மக்களை கைது செய்ய இராணுவ வாகனங்கள் இரவும் பகலும் தெருக்களில் சுற்றி வருகின்றன. அவர்கள் யூதர்களைத் தேடுகிறார்கள்; அவர்கள் ஒவ்வொரு கதவையும் தட்டுகிறார்கள், யூதர்கள் யாராவது அங்கே வாழ்கிறார்களா என்று கேட்கிறார்கள். அவர்கள் ஒரு யூதக் குடும்பத்தை கண்டதும், அனைவரையும் ஏற்றிச் செல்கிறார்கள். அவர்கள் தகவலுக்காக கூட பணம் செலுத்துகிறார்கள். மாலை நேரங்களில், இருட்டாக இருக்கும்போது, அப்பாவி மக்கள் நீண்ட வரிசையில் நடப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன். நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் அனைவருமே தங்கள் மரணத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள்.
ஏப்ரல் 5, 1944: நான் என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய விரும்புகிறேன். நான் ஒரு பத்திரிகையாளராக விரும்புகிறேன். என்னால் எழுத முடியும் என்று எனக்கு தெரியும். எனது ஒரு சில கதைகள் நல்லவை, எனது பல நாட்குறிப்பு நிறைய உயிரூட்டமாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறன, ஆனால் ... நான் ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் புத்தகங்களை எழுதவோ அல்லது செய்தித்தாள்களுக்காகவோ எழுத முடியாவிட்டால், நான் எப்போதும் எனக்காகவே எழுத முடியும். நான் அம்மா, திருமதி வான் டான் மற்றும் பிற பெண்களைப் போல வாழ விரும்பவில்லை, அவர்கள் தங்கள் வேலையைச் செய்து பின்னர் மறந்து போகிறார்கள். எனக்கு ஒரு கணவன் மற்றும் குழந்தைகளை விட அதிகம் தேவை! நான் ஒருபோதும் சந்திக்காதவர்களுக்கு கூட பயனுள்ளதாக இருக்க விரும்புகிறேன், மேலும் எல்லா மக்களுக்கும் இன்பத்தை அளிக்க விரும்புகிறேன். நான் இறந்தபிறகும் வாழ விரும்புகிறேன்!.
ஏப்ரல் 16, 1944: நேற்றைய தேதியை நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் அது எனக்கு சிறப்பு. ஒரு பெண் தனது முதல் முத்தத்தைப் பெறும்போது, அது எப்போதும் ஒரு முக்கியமான தேதி …
அது என் தலைமுடி வழியாக ஒரு முத்தம், பாதி என் இடது கன்னத்தில், பாதி என் காதில். நான் கீழே ஓடினேன், திரும்பிப் பார்க்கவில்லை! நேற்றிரவு, பீட்டரும் [வான் டான்] நானும் வழக்கம் போல் சாய்வு நாற்காலியில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அமர்ந்திருந்தோம். திடீரென்று, வழக்கமான —நம்பிக்கையுடனும், சத்தத்துடனுமான அன்ன— காணாமல் போனார். இரண்டாவது அன்ன அவளது இடத்தைப் பிடித்தாள். இரண்டாவது அன்ன நேசிக்கவும் மென்மையாகவும் இருக்க விரும்புகிறார். என் கண்களில் கண்ணீர் வந்தது. அவர் கவனித்தாரா? அவரில் எந்த அசைவும் இருக்கவில்லை. அவர் என்னைப் போலவே உணர்ந்தாரா? அவர் மிகக் குறைவாகவே பேசினார். எனது கேள்விகளுக்கு பதில்கள் எதுவும் இல்லை.
மே 3, 1944:மருத்துவத்திற்காகவோ அல்லது ஏழை மக்களுக்காகவோ எதையும் செலவழிக்காதபோது, அரசாங்கங்கள் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கானவற்றை போருக்காக ஏன் கொடுக்கின்றன? உலகின் பிற பகுதிகளில் உணவு மலையளவில் பழுதடைகையில், மக்கள் ஏன் உணவு இல்லாமல் செல்ல வேண்டும்? ஓ, மக்கள் ஏன் மிகவும் பைத்தியமாக இருக்கின்றனர்?
மே 25,1944:உலகம் தலைகீழாக மாறியது. சிறந்த மக்கள் வதை முகாம்களிலும் சிறைகளிலும் இருக்கிறார்கள். ஏனெனில் மோசமானவர்கள் அவர்களை அங்கே வைக்க முடிவு செய்கிறார்கள்.
நாட்குறிப்பின் பிற்குறிப்பு வெறுமனே இவ்வாறு கூறுகிறது: “ஆகஸ்ட் 4, 1944 காலை, இரகசிய இருப்பிடத்தின் முகவரியான 263 பிரின்சென்கிராக்டிற்கு ஒரு வாகனம் வந்தது. அங்கிருந்து எட்டு பேர் முதலில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் போலந்தில் உள்ள சித்திரவதை முகாமான அவுஸ்விட்ஸுக்கு அனுப்பப்பட்டனர்.
“ஜனவரி 16, 1945 அன்று, பீட்டர் வான் டான் அவுஸ்விட்ஸிலிருந்து ஆஸ்திரியாவின் மௌவுத்ஹவுசன் வரை பயங்கரமான கைதிகளின் நடைப்பயணத்தில் செல்ல வேண்டியிருந்தது, அங்கு அவர் 5 மே 1945 இல் இறந்தார் [18 வயதில்]. நேச நாட்டு படைகள் முகாமுக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் அவர் இறந்தார். அன்னவின் தாயார் எடித் ஃபிராங்க், இனிமேலும் வாழ முடியாது மிகவும் சோர்வாகவும் பசியுடனும் ஜனவரி 6, 1945 அன்று அவுஸ்விட்ஸ் சித்திரவதை முகாமில் இறந்தார்.
“மார்கோட் மற்றும் அன்ன ஃபிராங்க் ஆகியோர் அவிஸ்விட்ஸில் இருந்து ஜேர்மனியில் ஹனோவர் நகரின் அருகே பேர்கன்-பெல்சன் சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கைதிகளை ஒரு பயங்கர நோய் தாக்கியது. அவர்கள் இருவரும் 1944-45 குளிர்காலத்தில் இறந்தனர். அன்ன பெப்ரவரி பிற்பகுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் இறந்திருக்க வேண்டும். கைதிகளின் உடல்கள் அனைத்தும் ஒன்றாக வீசப்பட்டன. ஏப்ரல் 12, 1945 அன்று பிரிட்டிஷ் இராணுவம் முகாமுக்கு வந்தது.”
படத்தின் வர்ணனையாளர்களில் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "ஜேர்மனி அழித்த திறமைகளை கற்பனை செய்து பாருங்கள் ... நீங்கள் குழந்தைகளை அழிக்கும்போது, எல்லையற்ற சாத்தியத்தை அழிக்கிறீர்கள்."
அன்ன ஃபிராங்க் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் விரும்பப்பட்ட நபர்களில் ஒருவராவார். ஆவணப்படம் அவரது கதையை மறுபரிசீலனை செய்வது சரியான நேரத்திலானதும் மற்றும் பாராட்டத்தக்கது. நாட்குறிப்பின் பகுதிகளை மிர்ரனின் வாசிப்பு ஆழமாக பாதிக்கிறது, தூண்டுகிறது மற்றும் நிதானமானது. உண்மையில், அன்ன ஃபிராங்கின் வார்த்தைகள் ஒரு பிரகாசமான, தைரியமான நேர்மையான மற்றும் புத்திசாலித்தனமான இளம் பெண்ணை வெளிப்படுத்துகின்றன. அவை மிகவும் உயர்ந்த கலாச்சார சூழலின் சில உணர்வையும் தருகின்றன.
1950 களின் பிற்பகுதியிலிருந்து, அன்னவின் கதையை அடிப்படையாகக் கொண்டு கிட்டத்தட்ட இரண்டு டஜன் நாடக மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்கள் உள்ளன. இந்த விஷயத்தில், தீவிர வலதுசாரி இயக்கங்களின் எழுச்சி மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தற்போதைய அரசியல் சூழ்நிலையால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏதோ ஒரு அளவிற்கு அல்லது இன்னொருவிதத்தில் தெளிவாகத் தூண்டப்பட்டுள்ளனர். "சிரியா, லிபியா, ஈராக் ஆகிய நாடுகளின் போர்களின் தொடக்கத்துடன், ஐரோப்பாவில் நடக்கும் குடியேற்றப் பிரச்சினையுடன், என் பிரச்சினைகளுக்கு ‘நீங்கள்’ தான் காரணம் என வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு சமூகத்தினர், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மக்கள் மீது விரல்களை சுட்டிக்காட்டுவது மிகவும் எளிதானது” என மிர்ரன் குறிப்பிடுகின்றார்.
அன்ன ஃபிராங்கின் நாட்குறிப்பு “ஒரு அற்புதமான கற்பிக்கும் கருவியாகும். கடந்த கால மனித அனுபவங்களைப் பற்றிய உண்மையான புரிதலை, நமது நிகழ்காலத்திற்கும், நமது எதிர்காலத்திற்கும் கொண்டுசெல்லும் ஒரு அற்புதமான வாகனமாக இருக்கிறது என்று அவர் விளக்குகிறார். நான் அதை மிக மிக முக்கியமானதாகக் கருதுகிறேன், அதனால்தான் இந்த படத்தை நான் செய்ய விரும்பினேன்.” என தயாரிப்பாளர் குறிப்பிடுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, மீண்டும், இந்த திட்டத்தில் உண்மையான உணர்வு இருந்தபோதிலும், பாசிசத்தின் மூலகாரணம் மற்றும் எழுச்சியை விளக்க இங்கு எந்த முயற்சியும் இல்லை. இணைக் கதைகள், வரலாற்றை நோக்கி ஓரளவு உருவமற்ற மற்றும் சுருக்கமான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. இந்த நிகழ்வின் உந்து சக்திகளைப் பற்றி அன்ன ஃபிராங்க் சில உள்ளுணர்வு நுண்ணறிவுகளைக் கொண்டிருந்தார். பெருவணிகத்தின் பாதுகாப்போடு பாசிசம் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் ரஷ்ய புரட்சி மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் புரட்சியின் அச்சுறுத்தல் என்பதற்கும் ஒரு பிரதிபலிப்பு தான் பாசிசம் என்று அந்த நேரத்தில் ஒரு பொதுவான புரிந்துகொள்ளல் இருந்தது.
1930 களில் நாஜிசத்தின் எழுச்சிக்கு வழிவகுத்த எந்தவொரு பிரச்சினையையும் உலகளாவிய முதலாளித்துவம் இன்றுவரை தீர்த்துவிடவில்லை. மாறாக, அதன் முரண்பாடுகள் அதிர்வான பலத்துடன் வெடிக்கின்றன.