பிரிட்டன்: சாஹா எவிரார்ட் படுகொலைக்கு முக்கிய சந்தேகத்திற்குரியவராக பொலிஸ் அதிகாரி காணப்பட்ட நிலையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை இலண்டன் பொலிஸ் தாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலண்டனின் பெருநகர பொலிஸ் Clapham Common பூங்காவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஓர் அமைதியான விழிப்புணர்வு போராட்டத்தைத் தாக்கியது. அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கலந்து கொண்ட பெண்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

33 வயதான சாரா எவிரார்ட் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்த பரந்த கோபத்திற்கு மத்தியில் அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பெருநகர பொலிஸ் அதிகாரி வெய்ன் கூசன்ஸ் (Wayne Couzens) எவிரார்ட்டைக் கடத்தி படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக, விழிப்புணர்வு போராட்டத்திற்கு சற்று முன்னதாக, வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். மார்ச் 3 இல் இரவு 9.30 மணியளவில் தெற்கு லண்டனின் கிளாப்ஹமிலிருந்து பிரிக்ஸ்டனில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்றபோது எவிரார்ட் காணாமல் போனார். எவிரார்ட்டின் உடல் கென்ட் ஊராட்சியில் கட்டுமானதுறையில் பயன்படுத்தப்படும் பைக்குள் கண்டுபிடிக்கப்பட்டு, அவருடைய பல் பரிசோதனை மூலமாக அடையாளம் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கூசன்ஸ், நாடாளுமன்ற மற்றும் இராஜாங்க உயரடுக்கு பாதுகாப்பு கட்டளையகத்தின் துப்பாக்கி ஏந்திய அதிகாரி ஆவார். அவர் மார்ச் 9 இல் கைது செய்யப்பட்டார். எவிரார்ட் தாக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பெப்ரவரி 28 இல், தெற்கு இலண்டனின் ஒரு மக்டொனால்ட் உணவக பணியாளருக்கு எதிரான குற்றமென கூறப்படும் இரண்டு முக்கிய சம்பவங்கள் குறித்து பொலிஸ் விசாரணை செய்யவில்லை என்பது தெரிய வந்ததும் கோபம் அதிகரித்தது.

Police move on to the bandstand and surround it during the operation (Credit: Sarah Huck-Twitter)

ஒரு புதிய அமைப்பான இந்த வீதிகளை மீட்டெடுப்போம் (Reclaim These Streets) என்ற அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டு, சனிக்கிழமை நள்ளிரவு நடக்கவிருந்த விழிப்புணர்வு போராட்டத்தினை உயர் நீதிமன்ற ஆதரவுடன் தடைவிதிக்கும் பொலிஸின் நகர்வுகள் இருந்த போதிலும், அந்த விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டம் ஒன்றுகூடுவதற்கான கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இணக்கமாக இல்லை என்ற சாக்குபோக்கின் கீழ் அதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் விதிமுறைகளின் கீழ் வெளிப்புறங்களில் ஒன்றுகூடுவதன் மீதான தடை "போராடுவதற்கான உரிமைக்கு கீழ்ப்பட்டதாக" இருக்க வேண்டுமென ஒரு தீர்ப்பைக் கோரி, வெள்ளிக்கிழமை, இந்த வீதிகளை மீட்டெடுப்போம் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் ஓர் அவசர சட்டபூர்வ நடவடிக்கையைக் கொண்டு வந்தது. "குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து போராட்டங்களுக்கும் தடை விதிக்கும்" பெருநகர பொலிஸின் கொள்கையாக அவர்கள் எதை விவரித்தார்களோ அதை சட்டவிரோதமானதாக தீர்ப்பளிக்க வேண்டுமென அந்த குழு விரும்பியது. அந்த கோரிக்கைகளை நீதிபதி ஹோல்கேட் மறுத்துவிட்டார், அத்தகைய ஓர் அறிவிப்பை வெளியிடுவது "பொருத்தமாக" இருக்காதென அவர் தெரிவித்தார். நிகழ்வு தொடர்பாக “ஒழுங்குமுறைகளைப் பயன்படுத்துவது மற்றும் (கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மீதான உரிமைகள்)” குறித்து விவாதிப்பது அமைப்பாளர்களும் பொலிஸூம் சம்பந்தப்பட்டதென தெரிவிக்கப்பட்டது.

முன்மாலையில் அந்த விழிப்புணர்வு போராட்டம் தொடங்கிய போது, ஒரு பேச்சாளர் முக்கியமாக பெண் பார்வையாளர்களுக்காக உரையாற்ற முயன்றார், அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசங்கள் அணிந்திருந்தனர். கார்டியனின் ஓர் அறிக்கை இவ்வாறு விவரித்தது, “அப்பெண்மணி பேசிய போது, மேடையை நோக்கி பொலிஸ் நெருக்கி வரத் தொடங்கியது. அவர்களில் சிலர் எவிரார்டுக்கு நினைவஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்த பூக்கள் மற்றும் மெழுவர்த்திகளை காலால் மிதித்துக்கொண்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்களை ஒருபுறமாக ஒதுக்கிக் தள்ள முயன்றனர்.”

மேடை பகுதியைச் சுவர் போல சுற்றி வளைத்த பொலிஸ், கூட்டத்தைக் கலைந்து போகுமாறும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. பின்னர் வன்மமாக தாக்கத் தொடங்கிய அவர்கள், அங்கே கூடியிருந்தவர்களை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்தார்கள். ஒரு பெண் இரண்டு அதிகாரிகளால் மேடைக்கு கீழே முகம் நிலத்தைபார்த்தவாறு மண்டியிட வைக்கப்பட்டு, கை விலங்கிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, பொலிஸ் வாகனத்தில் தள்ளப்பட்டார். அவர் பெயர் மற்றும் முகவரி தருமாறு கூறப்பட்டார். அதை செய்தால், அவருக்கு வெறும் அபராதத்துடன் முடிந்துவிடுமென பொலிஸ் மிரட்டியது. மற்றவர்கள் தரையில் பலவந்தமாக பிடித்துத் தள்ளப்பட்டு, பொலிஸால் தாக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஒரு பெண் அழைத்துச் செல்லப்பட்ட போது, "நீங்கள் வெட்கப்பட வேண்டும்", "அவர்களை விடுங்கள்", "உங்கள் நபர்களை கைது செய்யுங்கள்" என்று கூட்டம் பொலிஸை நோக்கி கோஷமிட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பொது ஒழுங்குமீறல் குற்றங்கள் மற்றும் கொரோனா வைரஸ் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

பேர்மிங்காம், லீட்ஸ், பிரிஸ்டல், ஈடன்பர்க் மற்றும் கார்டிஃப் உட்பட பல இடங்களில் நடந்த போராட்டங்களில் அந்த விழிப்புணர்வு போராட்டமும் ஒன்றாகும். ஞாயிற்றுக் கிழமை ஆயிரக் கணக்கானவர்கள் அந்த சனிக்கிழமை தாக்குதலுக்கு எதிராக இலண்டன் ஸ்காட்லாந்து பொலிஸின் பெருநகர தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி நகர்ந்தனர்.

கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் மற்றும் இளவரசர் வில்லியமின் மனைவியும், அரியணைக்கு அடுத்த வாரிசான கேட் மிடில்டன் எவிரார்டுக்கு நினைவாஞ்சலி செலுத்த Clapham Common இற்கு ஒரு திடீர் விஜயம் மேற்கொண்ட வெறும் ஒரு மணி நேரத்தில் அந்த ஒடுக்குமுறை நடத்தப்பட்டது என்ற உண்மையே, எவிரார்ட் படுகொலைக்கு எதிரான அந்த விழிப்புணர்வு போராட்டம் மற்றும் ஏனைய போராட்டங்களைத் தடுக்க பொலிஸ் தீர்மானகரமாக இருப்பதை எடுத்துக்காட்டியது. அவரது கென்சிங்டன் மாளிகையிலிருந்து மிடில்டன் வழங்கிய ஓர் அறிக்கையில், “திருமணத்திற்கு முன்னர் இரவில் இலண்டனைச் சுற்றி தான் திரிந்த நினைவுகளை பற்றி குறிப்பிட்டு", “சாராவுக்கும் அவர் குடும்பத்திற்கும் தனது மரியாதையைச் செலுத்த விரும்புவதாகவும்" குறிப்பிட்டார். மிடில்டனின் வருகை இயல்பாகவே பாரிய விளம்பரத்தைப் பெற்றது.

அந்த விழிப்புணர்வு போராட்டம் மீதான இந்த கண்மூடித்தனமான தாக்குதல்கள் பரவலாக கண்டிக்கப்பட்டதுடன், ஆளும் வட்டாரங்களில் ஆழ்ந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. தாராளவாத ஜனநாயகக் கட்சி தலைவர் சர் எட் டேவ் உட்பட பெருநிறுவன பொலிஸ் ஆணையர் கிரெசிடா டிக் இராஜினாமா செய்ய அழைப்புகள் விடுக்கப்பட்டன.

ஒருபோதும் முடிவுறாத சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற திட்டநிரலின் மீது தனது அரசியல் வாழ்க்கையை கட்டமைத்துள்ள பழமைவாத கட்சியின் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், ட்வீட் செய்ய கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தார். “இணையத்தில் பரவ விடப்படும் கிளாப்ஹம் பூங்கா விழிப்புணர்வு போராட்டத்தின் சில காட்சிகள் வருத்தமளிக்கின்றன. என்ன நடந்தது என்பதைக் குறித்து நான் பெருநகர பொலிஸிடம் முழு அறிக்கை கேட்டுள்ளேன்,” என்றார்.

உண்மை என்னவென்றால் பொலிஸ் இந்தளவுக்கு கொடூரமாக எதிர்வினையாற்ற முடியுமென உணர்ந்ததென்றால், ஏனென்றால் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கான ஒரு விஷேட உத்தரவுடன், அவர்கள் விரும்பியபடி செய்ய டோரி அரசாங்கத்தால் பச்சைக்கொடி காட்டப்பட்டதனால் ஆகும்.

கொரோனா வைரஸ் சட்டம் 2020 இல் கீழ் பொலிஸிற்கு அசாதாரண அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும் அதைக் கொண்டு இந்த தொற்றுநோயின் போது எந்தவொரு இடத்திலும், வாகனத்தில், இரயில், கப்பல் அல்லது விமானத்திலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை அது கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியும். கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த சட்டம், போராட்டங்களை அச்சுறுத்துவதற்கும் தடை செய்வதற்கும் அதிகரித்தளவில் பயன்படுத்தப்படுகிறது. நெட்வொர்க் ஃபார் பொலிஸ் மானிட்டரிங் (Network for Police Monitoring- NETPOL) அமைப்பின் தகவல்படி, குறைந்தபட்சம் ஒன்பது சம்பவங்களிலாவது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் கோவிட் விதிமுறைகளைப் பயன்படுத்தி உள்ளது.

கடந்த வாரம், கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் கோவிட்-19 சட்டத்தைக் காட்டி, மான்செஸ்டரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தேசிய சுகாதார சேவை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களது ஒரு சிறிய போராட்டத்தை முறித்தது. அதன் ஏற்பாட்டாளரும், ஒரு மனநலப் பணியாளர் மற்றும் யூனிசன் தொழிற்சங்க தேசிய செயற்குழு உறுப்பினருமான கரென் ரியஸ்மனுக்கு 10,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது.

சனிக்கிழமை சம்பவங்களுக்கு விடையிறுப்பாக அரசாங்கமும் பொலிஸூம் என்னதான் தற்காலிக மறுசீரமைக்கும் செயல்முறை செய்தாலும் கூட, எதேச்சதிகார ஆட்சியை நோக்கிய பயண திசை பல நூற்றாண்டுகளாக வென்றெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளுக்கான கடுமையான தாக்கங்களுடன் தொடரும்.

இன்று இந்த அரசாங்கம் பொலிஸ், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது. இந்த மசோதா அமைதியான போராட்டத்தைக் கூட உண்மையில் குற்றவாளியாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவான அழிவுக்கு எதிரான கிளர்ச்சி (Extinction Rebellion) கடந்தாண்டு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஜோர்ஜ் ஃப்ளோய்ட் படுகொலையால் தூண்டப்பட்ட பொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மீது பொலிஸ் நடவடிக்கைகளை பட்டேல் மீளாய்வு செய்ய கோரியதைத் தொடர்ந்து இது வருகிறது.

ஊர்க்காவல் படை மற்றும் தீயணைப்பு & மீட்பு சேவையின் மாண்மிகு மேற்பார்வையாளர்கள் அமைப்பின் (HMICFRS) மீளாய்வு, “சீர்குலைப்பதாக" கருதப்படும் போராட்டங்களை எதிர்க்க அவசியமானதாக கருதப்படுவதாலும், மற்றும் இரகசிய உளவு தகவல் சேகரிப்பு முறைகளை "உருவாக்க வேண்டும்" என்பதாலும், நிறுத்தி தேடுவதற்கான பொலிஸின் அதிகாரங்களை விரிவாக்க அழைப்பு விடுத்தது. அணிவகுப்புகள் ஏற்கனவே கடைபிடிக்க வேண்டிய அதே நிபந்தனைகளை முகங்கொடுக்கும் விதத்தில் HMICFRS நிலையான போராட்டங்களை விரும்புகிறது. இது உள்துறை செயலரின் ஒப்புதலுடன் ஏற்பாடுகளுக்குத் தடைவிதிக்க பொலிஸிற்கு உதவும் வகையில், ஏற்பாடாளர்கள் அவர்களின் திட்டங்களைக் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்குவதை உள்ளடக்கி உள்ளது.

சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் "கடுமையான இடையூறு" என்று வரையறுக்கும் சட்டங்களை உருவாக்க உள்துறை செயலாளரை இந்த மசோதா அனுமதிக்கிறது, பின்னர் கடுமையான நிபந்தனைகளை விதிக்க பொலிஸ் இவற்றைச் சார்ந்திருக்க முடியும். அது "பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ குறிப்பிடத்தக்க இடையூறு விளைவிக்கும் வன்முறையற்ற போராட்டங்களைக் கையாள பொலிஸ் அதிகாரங்களை பலப்படுத்தும்" என்றது குறிப்பிடுகிறது. ஓர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கலாமா, அப்படி நடத்தினாலும், அதற்கு ஆரம்ப நேரம் மற்றும் முடிவு நேரங்களை விதிக்கலாமா என்பதைத் தீர்மானிக்க அது பொலிஸை அனுமதிக்கிறது. ஒரு தடைக்கான சாக்குபோக்காக, முதல்முறையாக இடம் நகராத போராட்டங்கள் மீது அதிகபட்ச சத்தத்தின் அளவுகளை விதிக்க முடியும்.

இடதுசாரி போராட்டங்களும் முதலாளித்துவ எதிர்ப்புணர்வும் மற்றும் போராட்டங்களுமே குறிப்பாக அடக்குமுறைக்கு இலக்கில் வைக்கப்படுகின்றன. HMICFRS அறிக்கை "மோசமான செயல்பாட்டின்" ஒரு புதிய வகையை உருவாக்குகிறது, இது "அரசியல் அல்லது சமூக மாற்றத்தைக் கொண்டு வர முற்படும் ஆனால் சட்டவிரோத நடத்தை அல்லது குற்றகரமான வகையில் அவ்வாறு செய்ய முயலும் செயல்பாட்டை, சமூக பதட்டங்கள் மீது ஓர் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, அல்லது வணிகங்களுக்கு மோசமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாக” முத்துரை குத்துகிறது.

இந்த "உயர் மட்ட மோசமான செயற்பாடு" என்பது "இங்கிலாந்து சமூகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றவியல் சம்பந்தப்பட்ட சமூக அல்லது அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி செயல்படுவதாக விவரிக்கப்படுகிறது அல்லது இந்த சித்தாந்தம் மக்கள் தொகையில் கணிசமான விகிதத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று கூறப்படுகின்றது.

Loading