மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த தொற்றுநோய்க்கு உலக அரசாங்கங்களின் ஒட்டுமொத்த விடையிறுப்பும் அவற்றின் "சமூக படுகொலை" என்று குற்றஞ்சாட்டும் ஒரு தலையங்கத்தை BMJ ஆய்விதழ் (முன்னதாக, பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழ்) வியாழக்கிழமை வெளியிட்டது.
BMJ எனும் இந்த ஆய்விதழ் 1840 களில் இருந்து வெளியாகி வரும் உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிப்பார்ந்த மருத்துவ சஞ்சிகைகளில் ஒன்றாகும். “கோவிட்-19: சமூக படுகொலை, அவர்கள் எழுதினார்கள் — தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கணக்கில் கொண்டு வரப்படாதவர்கள், வளைந்து கொடுக்காதவர்கள்,” என்ற அதன் தலையங்கத்தில் நிர்வாக பதிப்பாசிரியர் கம்ரான் அப்பாசி கையெழுத்திட்டிருந்தார். அது, கடந்தாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மரணிப்பதற்கு இட்டுச் சென்றுள்ள கொள்கைகள் மீதான ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாக உள்ளது.
அந்த தலையங்கம் இவ்வாறு தொடங்குகிறது, “படுகொலை, என்பது உணர்ச்சிகரமான வார்த்தை. சட்டத்தில், அதற்கு முன்யோசனைகள் அவசியப்படுகின்றன. மரணம் என்பது சட்டவிரோதமாக கருதப்பட வேண்டும். 'படுகொலை' என்பது ஒரு தொற்றுநோய்க்கு விடையிறுப்பு தோல்வியடைவதற்கு எப்படி பொருந்தும்?” BMJ, பின்னர், அந்த வார்த்தை முற்றிலும் பொருத்தமானதே என்று வாதிடச் செல்கிறது:
அரசியல்வாதிகளும் வல்லுனர்களும் மக்களின் நோயெதிர்ப்புச் சக்திக்காகவோ அல்லது பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுக்க கருதியோ அவர்கள் பத்தாயிரக் கணக்கான காலத்திற்கு முந்திய மரணங்களை அனுமதிக்க விரும்புவதாக அவர்கள் கூறும் போது, அது மனித உயிர்களைக் குறித்து முன்உத்தேசிக்கப்பட்ட அசட்டைத்தனமான அலட்சியம் அல்லவா? கொள்கை தோல்விகள் காலந்தாழ்ந்த தொடர்ச்சியான சமூக அடைப்புகளுக்கு இட்டுச் சென்றால், அதனால் ஏற்படும் கோவிட் நோயல்லாத கூடுதல் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு? அரசியல்வாதிகள் வேண்டுமென்றே விஞ்ஞான ஆலோசனைகளையும், சர்வதேச மற்றும் வரலாற்று அனுபவங்களையும், எச்சரிக்கை கொடுக்கும் அவர்களின் சொந்த புள்ளிவிபரங்கள் மற்றும் முன்மாதிரிகளையும், அவை அவர்களின் அரசியல் மூலோபாயத்திற்கு எதிராக செல்கின்றன என்பதற்காக, நிராகரிக்கும் போது, அது சட்டவிரோதமில்லையா? இது செயலா, செயலின்மையா?
“19 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆளும் உயரடுக்கு செலுத்திய அரசியல் மற்றும் சமூக அதிகாரத்தை விவரிக்கையில்" சோசலிச தலைவர் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பயன்படுத்திய சொல்லைச் சுட்டிக்காட்டி, “மிகவும் குறைந்தபட்சமாக,” BMJ இவ்வாறு எழுதுகிறது, “கோவிட்-19 ஐ 'சமூக படுகொலை' என்று வகைப்படுத்த வேண்டியிருக்கும்.”
“அவர்கள் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் அல்லது அந்த தொற்றுநோய் திசைதெரியா பகுதியில் இருப்பதாகவும்; கையாள்வதற்கான கையேடு எதுவும் இல்லை என்றும்" முதலாளித்துவ அரசியல்வாதிகள் கூறும் பொய்யான நியாயப்பாடுகள், “எதுவும் உண்மையில்லை. அது உலகெங்கிலும் 'தலையாய தந்திரோபாயமாக' (gaslighters in chief) சுயநலத்துக்கான அரசியல் பொய்யாக உள்ளன,” என்று அந்த தலையங்கம் கடுமையாக சாடுகிறது.
இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பை BMJ குணாம்சப்படுத்திய விதம் முற்றிலும் துல்லியமாக சரியானது. “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை" என்று கூறப்படும் ஒரு கொள்கையைக் கொண்டு, பெரும்பாலும் மக்களிடையே பாரிய தொற்று விரும்பத்தக்கதாக கூறி, உலகெங்கிலுமான அரசியல்வாதிகள் வேண்டுமென்றே தெரிந்தே இந்த தொற்றுநோய்க்கான அரசு விடையிறுப்புகளை ஊனப்படுத்தினார்கள்.
“ஒவ்வொருக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது, அது விரும்பத்தக்கதும் அல்ல ஏனென்றால் மக்களிடையே சிறிது நோயெதிர்ப்பு சக்தி வேண்டும்,” என்று பிரிட்டனின் போரிஸ் ஜோன்சன் அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் சர் பாட்ரிக் வாலன்ஸ் அறிவித்தார். சுவீடனில், அரசு தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெங்னெல், “பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஒரு புள்ளி குறிப்பிடக்கூடியதாக இருக்கும், அதாவது நோயெதிர்ப்பு சக்தி மிக வேகமாக பரவுவதற்காகவாவது பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்,” என்று அறிவித்து, அந்நோய் கூடுதலாக பரவுவதற்காகவே பள்ளிகளைத் திறந்துவிட கோரினார்.
அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2020 நெடுகிலும் மக்களிடையே நோயின் அளவை மறைத்து வைக்க, அவர் அரசாங்கம் "பரிசோதனைகளைக் குறைக்க" கோரினார். “நான் எப்போதுமே அதைக் குறைத்துக் கூற விரும்புகிறேன்,” என்று ட்ரம்ப் மார்ச் மாதம் பத்திரிகையாளர் பாப் வூட்வார்டுக்கு தெரிவித்தார்.
ட்ரம்புக்கு மட்டுமல்ல, மாறாக காங்கிரஸ் சபையின் இரண்டு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 தொற்றுநோய் முன்நிறுத்திய பாரிய அச்சுறுத்தல் முழுமையாக விளக்கப்பட்டிருந்தது, இருந்தும் அவர்கள் பொதுமக்களை எச்சரிக்கையூட்ட மறுத்து, மக்கள் பயணங்கள் மேற்கொள்வதற்கும், உணவு விடுதிகளுக்குச் செல்லவும் மற்றும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் ஊக்கப்படுத்தினர்.
அரசங்காங்களின் கொள்கைகள் ஒரேயொரு மேலோங்கிய முன்னுரிமையால் தூண்டப்பட்டிருந்தன: அதாவது, நிதிய செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும் விதத்தில் அந்த தொற்றுநோய் பரவலை நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது. “குணப்படுத்தல் என்பது நோயை விட மோசமாக இருந்துவிடக்கூடாது,” என்ற சுலோகம், முதலில் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் பிரிட்மனால் முன்வைக்கப்பட்ட இது, எல்லா தொழிலாளர்களுக்கும் முழு வருவாயுடன் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்துவது உட்பட அந்த வைரஸைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்புடையதல்ல என்பதேயே நடைமுறையில் அர்த்தப்படுத்தியது.
இந்த சமூக நலன்கள் இந்த தொற்றுநோயை ஆரம்பத்தில் மூடிமறைக்க கட்டளையிட்டன என்பது மட்டுமல்ல, மாறாக பள்ளிகள் மற்றும் வேலையிடங்களை உரிய காலத்திற்கு முன்பே மீண்டும் திறக்கவும் கட்டளையிட்டன, இது பாரியளவில் அந்த வைரஸ் மீண்டும் மீளெழுச்சி பெற உதவியதால், இந்த வசந்தகாலத்தில் பகுதியான அடைப்புகளை நீக்கியதற்குப் பின்னர் இருந்து அது பத்தாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது.
அதன் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு பத்தியோடு, BMJ பின்வருமாறு நிறைவு செய்கிறது, “மக்கள் மீதான இந்த 'சமூக படுகொலை' பண்டைய வரலாற்று நினைவுகளில் உள்ள எச்சசொச்ச எண்ணிக்கையை விட அதிகமாகும். இது கோவிட்-19ஆல் பூதாகரமாக அம்பலப்படுத்தப்பட்டு இன்று மிகவும் நிஜமான உண்மையாக விளங்குகிறது. இதை நிராகரித்து விடவோ அல்லது புறக்கணித்து விடவோ முடியாது. சட்ட வழிவகைகள் மற்றும் தேர்தல் வழிவகைகள் மூலமாக அரசியல்வாதிகள் இதற்கு கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும், சொல்லப் போனால் ஏதேனும் தேசிய மற்றும் சர்வதேச அரசியலமைப்பு வழிவகைகள் அவசியமாகிறது.”
BMJ வழங்கும் இந்த சர்ச்சைக்கிடமற்ற மதிப்பீட்டில் இருந்து என்ன முடிவுகள் வருகின்றன? அந்த ஆய்விதழ் கட்டாயமாக கணக்கில் கொண்டு வர வாதிடுகிறது, ஆனால் அவ்வாறு கணக்கில் கொண்டு வருவதை எவ்வாறு செய்வது? அந்த தலையங்கம் "தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களையும், கணக்கில் கொண்டு வருவதைத் தவிர்த்து வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து நீடிக்கும் அரசாங்கங்களையும் வாக்குகளில் தோற்கடிக்குமாறு,” பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த தலையங்கம், அத்தகைய “அரசியல் கணக்கு சாத்தியம் என்பதை அமெரிக்கா எடுத்துக்காட்டியது,” என்பதையும் சேர்த்துக் கொள்கிறது.
இது 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த ஒரு குறிப்பாகும், இதில் வாக்காளர்கள் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைக்கு வக்காலத்து வாங்கிய உலகின் முன்னணி நபர் டொனால்ட் ட்ரம்பைப் பெருவாரியாக நிராகரித்து, ஜனநாயகக் கட்சிக்கு வெள்ளை மாளிகையை மட்டுமல்ல, மாறாக காங்கிரஸின் இரண்டு சபைகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்கினர்.
ஆனால் பைடென் அவருக்கு முன்பிருந்தவரின் அதே கொள்கைகளையே அவர் நிர்வாகமும் தொடரும் என்பதை தெளிவுபடுத்தி, பதவியேற்பு தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது. பதவியேற்பு தினத்திற்குப் பின்னர், மிச்சிகன், இலினோய் மற்றும் நியூ யோர்க் ஆகியவை உணவகத்தில் உள்ளமர்ந்து உணவருந்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பதுடன், எந்தெந்த மாநிலங்களில் பள்ளிகள் தொலைவிலிருந்து நடத்தப்படுகிறதோ அந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் பள்ளிகளை மீண்டும் திறந்துவிட முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த கொள்கையின் மையப்பகுதியில் இருப்பது 23,000 சிகாகோ கல்வியாளர்களைப் பலவந்தமாக மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான முனைவாக உள்ளது, இது அரசியல் ஸ்தாபகத்தின் எல்லா பிரிவுகளாலும் ஆதரிக்கப்படுகிறது.
மில்லியன் கணக்கான மக்கள் இந்த "சமூக படுகொலை" கொள்கையை வாக்குப் பெட்டிகள் மூலமாக நிராகரித்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீதிமன்றங்களை பொறுத்த வரையில், இவற்றுக்கும் BMJ முறையிடுகிறது, அவை தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான மிகவும் அடிப்படை நடவடிக்கைகளுக்கும் கூட மீண்டும் மீண்டும் தடைவிதித்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் அடிப்படை சமூக நலன்களில் வேரூன்றிய ஒரு தொற்றுநோய் கொள்கையை மாற்றுவதற்கு முதலாளித்துவ அரசில் எந்தவொரு அமைப்புக்கும் திராணி இல்லை.
“சமூக நோயெதிர்ப்பு பெருக்கும்" கொள்கைகளைப் போலவே அல்லது, BMJ அதை குறிப்பிடுவதைப் போல, இந்த “சமூக படுகொலை,” என்பது நிதிய உயரடுக்கின் வர்க்க நலன்களில் வேரூன்றி உள்ளது, ஆகவே, அதே போல, இந்த கொள்கைகளுக்கான எதிர்ப்பு மற்றொரு சமூக சக்தியான தொழிலாள வர்க்க நலன்களை வெளிப்படுத்த வேண்டும்.
விஞ்ஞானபூர்வ சோசலிச தத்துவத்தை நெறிப்படுத்திய மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் ஆரம்ப படைப்புகளில் ஒன்றான இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் என்ற தனது 1845 ஆம் ஆண்டின் தலையாய படைப்பில், BMJ குறிப்பிடுவதைப் போல, ஏங்கெல்ஸ் தான் "சமூக படுகொலை" என்ற இந்த வார்த்தையை முன்வைத்தார். ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்:
சமூகம், நூற்றுக் கணக்கான பாட்டாளிகளை, மிகவும் முன்கூட்டியே, தவிர்க்க முடியாத இயற்கைக்கு மாறான உயிரிழப்புகளை, வாள் அல்லது தோட்டாக்களால் உண்டாக்கப்படும் மரணத்தைப் போல முற்றிலும் அதேயளவுக்கு வன்முறையாக மரணத்தைச் சந்திக்கும் ஒரு நிலைமையில் வைக்கும் போது; அது வாழ்வின் ஆயிரக் கணக்கான தேவைகளைப் பறித்து, அவர்களை வாழ முடியாத நிலைமைகளின் கீழ் நிறுத்தும் போது — சட்டத்தின் இரும்பு பிடியில் வைத்து, அந்த நிலைமைகளில் வாழ்ந்து பின்னர் தவிர்க்கவியலாத விளைவாக மரணத்திற்கு அவர்களை நிர்பந்திக்கும் போது, இந்த ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது அதற்கு தெரிந்திருந்தும், அது இந்த நிலைமைகள் நீடிக்க அனுமதிக்கிறது, தனியொருவரின் செயலைப் போல அதேயளவுக்கு நிச்சயமாக அதன் செயலும் படுகொலை தான்; மூடிமறைக்கப்பட்ட, நயவஞ்சகமான படுகொலை, யாராலும் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத படுகொலை, அது என்னவென்று யாருக்கும் தெரியாது, ஏனென்றால் அந்த கொலைகாரரை யாரும் பார்க்க முடியாது, ஏனென்றால் உயிரிழப்பவரின் மரணம் இயற்கையானதாக தெரியும், ஆனால் அந்த குற்றம் செய்யப்பட்டது என்பதை விட, செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டதால் ஏற்பட்டிருக்கும். ஆனால் கொலைகாரரை அது விட்டு வைக்கிறது.
அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர், மார்ஸூம் ஏங்கெல்ஸூம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்டனர், அது ஆளும் வர்க்கத்தின் "சமூக படுகொலை" நடவடிக்கைகளுக்கு தீர்க்கமான விடையிறுப்பை நெறிப்படுத்தியது: “பாட்டாளி வர்க்க இயக்கம் சுய நனவோடு, அளப்பரிய பெரும்பான்மையினரின் சுயாதீனமான இயக்கமாக, அளப்பரிய பெரும்பான்மையினரின் நலன்களுக்காக இருக்கிறது.” அவர்கள் எழுதினார்கள், இந்த இயக்கத்தின் நோக்கம் முதலாளித்துவ சொத்துறவுகளை தூக்கியெறிந்து சோசலிசப் புரட்சி மூலமாக ஆளும் வர்க்கத்தைப் பறிமுதல் செய்வதாகும்.
அப்போது என்ன உண்மையாக இருந்ததோ இப்போது அது இன்னும் அதிகளவில் உண்மையாகி இருக்கிறது. சமூகத்தின் அனைவரது நலன்களும் —முழுமையான பொருளாதார இழப்பீடுகளைக் கொண்ட சமூக அடைப்புகள் மூலமாக இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவசிய நடவடிக்கைகள் வேண்டுமென்ற கோரிக்கைகளில் வெளிப்படும் இது—தொழிலாள வர்க்க இயக்கத்தில் அல்லாமல் வேறெங்கும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை.
தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களும் ஒட்டுமொத்தமாக மனித சமூகத்தின் நலன்களும் உலகந்தழுவிய சோசலிசத்திற்கான போராட்டத்தில் வெளிப்படுகின்றன. இந்த இயக்கம் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மற்றும் முடிவாக அந்த தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வதில்லை, மாறாக அதைக் கொண்டு சமூக படுகொலைக்குக் காரணமான அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன செயலதிகாரிகளை நீதியின் முன்நிறுத்தவும் பார்க்கிறது.