முன்னோக்கு

ஆளும் வர்க்கத்தின் தொற்றுநோய்க் கொள்கைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் ஒரு வருடத்தின் பின்னர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு வருடத்திற்கு முன்னர், கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் கொலைகர பிரதிபலிப்பிற்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் ஆரம்ப வெளிப்பாடு இத்தாலியில் தொடர்ச்சியான திடீர் வேலைநிறுத்தங்களுடன் தொடங்கியது. அதற்கு அடுத்த வாரத்தில், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் வட மற்றும் தென் அமெரிக்காவிற்கும் வேலைநிறுத்தங்கள் பரவியது.

அந்த நேரத்தில், வடக்கு இத்தாலியில் கொடிய நோய் அதிகரித்து வந்ததுடன், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொற்றுக்கள் அதிகரித்து வந்தன. இறப்பு எண்ணிக்கை 500 ஐ நெருங்கியபோதும் இத்தாலிய பிரதமர் ஜோசெப்பே கொன்தே எந்தவொரு அவசர நடவடிக்கைகளையும் எதிர்த்து, விரைவில் அவர் பெர்காமோவில் இறந்தவர்களை தகனங்களுக்கு கொண்டு செல்ல இராணுவ வாகனங்களை அனுப்பினார். மார்ச் 9 அன்று, கொன்தே இறுதியாக ஒரு பகுதி நாடளாவிய பூட்டுதலை அறிவித்தார். இருப்பினும், முக்கிய தொழிலதிபர்கள் சங்கமான Confindustria இன் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, தொழிற்சாலைகளையும், ஏனைய பாரிய வேலைத்தலங்களையும் திறந்திருக்க கொன்தே அனுமதித்தார்.

மார்ச் 30,2020 நியூயோர்க் ஸ்ராட்டன் தீவுகளில் அமசன் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளுக் ஆர்ப்பாட்டத்தில் எதிரான ஈடுபட்டுள்ளார்கள் (AP Photo/Bebeto Matthews)

மார்ச் 10, செவ்வாயன்று, நேபிள்ஸில் உள்ள ஃபியட் கிறைஸ்லரின் பொமிகிலியானோ ஆலையில் ஆயிரக்கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள், ஆடம்பர ஆல்ஃபா-ரோமியோ கார்களை தயாரிப்பதற்காக வேலையில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டபோது பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளை எதிர்த்து தன்னிச்சையாக வெளியேறினர். அடுத்த நாள், மார்ச் 11, புதன்கிழமை, ஃபியட் கிறைஸ்ர், மெல்பி, அட்டெஸா மற்றும் கேசினோவில் உள்ள பிற தொழிற்சாலைகளுடன் பொமிகிலியானோ ஆலையையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. எவ்வாறாயினும், ஆலைகள் "சுத்திகரிக்கப்பட்ட" பின்னர் மார்ச் 14 க்குள் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று நிர்வாகம் தெளிவாக அறிவித்தது.

அடுத்த மூன்று நாட்களில், இத்தாலி முழுவதும், பேர்கமோ, பிரெசியா மற்றும் ஜெனோவாவில் உள்ள எஃகு ஆலைகளில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் பரவின. லிகுரியா கப்பல் கட்டும் ஆலை மற்றும் ட்ரெவிசோவில் உள்ள எலக்ட்ரோலக்ஸ் தொழிற்சாலை; கோர்மனோவில் கார் பாகங்கள் ஆலை; பியாசென்சா மற்றும் ரியெட்டி மாகாணங்களில் அமசன் பண்டகசாலைகள் மற்றும் போ பள்ளத்தாக்கில் உள்ள கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இது பரவியது.

"தொழிலாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறார்கள், அல்லது கொரோனா வைரஸ் இருந்தபோதிலும் தொழிற்சாலைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக" என்று Corriere della Sera பத்திரிகை எழுதியது.

தொழிலாளர்களின் எதிர்ப்பு விரைவில் சர்வதேச அளவில் பரவியது. மார்ச் 12, வியாழக்கிழமை, ரோயல் மெயில் தொழிலாளர்கள் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக பல இலண்டன் நிலையங்களில் வெளிநடப்பு செய்தனர். கனடாவின் அட்லாண்டிக் முழுவதும், ஒன்டாரியோ ஆலையின் விண்ட்சரில் ஃபியட் கிறைஸ்லர் தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர். அதே நாளில் இந்தியானாவில் உள்ள ஒரு வட அமெரிக்க ஆலையில் முதல் கோவிட்-19 தொற்றை ஃபியட் கிறைஸ்லர் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஒன்டாரியோ தொழிலாளர் மந்திரி மற்றும் யுனிஃபோர் தொழிற்சங்கத்தின் தலையீட்டிற்கு பின்னர் அடுத்த நாள் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.

இத்தாலி மற்றும் இங்கிலாந்தைப் போலவே, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் நடவடிக்கை தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியின் வடிவத்தை எடுத்தது. தொழிற்சங்கங்கள் கொடிய நோய் பரவியிருந்தாலும் தொழிலாளர்களை ஆலைகளில் வைத்திருந்தது.

யுனைடெட் ஆட்டோ தொழிலாளர்கள் (UAW) அதன் உயர்மட்ட ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுப்பியபோது, ஆலைகளில் தொற்றுநோய் வெடிப்புகள் குறித்து “வதந்திகளை பரப்புவதற்கு” எதிராக UAW தொழிலாளர்களை எச்சரித்ததுடன், கைகளை கழுவவும், முடிந்தால் இரண்டு முதல் மூன்று அடிக்குள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தியது. ”தொழிற்சாலைகளுக்குள் அருகருகே நின்று பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த அறிக்கைகளை அவமதிப்புடன் கண்டனம் செய்தனர். ஒரு இந்தியானா தொழிலாளி, UAW உம் நிறுவனமும் “எங்களில் எவரையும் அல்லது எங்கள் குடும்பங்களையும் பற்றி எவ்வித கவலையும் கொள்ளவில்லை” என்று கூறினார்.

மார்ச் 16 திங்கட்கிழமைக்குள், டெட்ராய்டின் புறநகரில் உள்ள வாரன் கனரகவாகனம் பொருத்தும் ஆலைத் தொழிலாளர்கள் வர்ணம் பூசும் நிலையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அங்கு குறைந்தது நான்கு தொழிலாளர்கள் இந்த நோயால் இறந்துபோனார்கள். அதே நாளில், ஸ்பெயினின் பாஸ்க் மாநிலத்தில் உள்ள விட்டோரியா மெர்சிடஸ் பென்ஸ் ஆலையில் 5,000 தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர்.

கோகோமோவிற்கு சற்று வெளியே உள்ள இந்தியானாவின் டிப்டனில் உள்ள ஃபியட் கிறைஸ்லர் தரவு பரிமாற்ற தொழிலாளர்கள், இந்தியானாவின் ஹம்மண்டில் லியர் இருக்கை தயாரிப்பு தொழிலாளர்களுடன் தங்கள் இயந்திரங்களை இயக்க மறுத்துவிட்டனர். அதே நாளில், டெட்ராய்ட் பஸ் ஓட்டுநர்கள் ஒரு நோய் காரணமாக விடுப்பில் சென்றனர். மாலை நேரத்தில், UAW பெரிய மூன்று வாகன உற்பத்தியாளர்களுடன் தற்காலிகமாக மூடுவதற்கு ஒரு ஒப்பந்தம் இருப்பதாக அறிவித்தது. UAW மீது நம்பிக்கை இல்லாததால், சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன ஆலைகளில் ஒன்றான டெட்ராய்டின் புறநகரில் உள்ள ஸ்டெர்லிங் ஹைட்ஸ் அசெம்பிளி ஆலையில் (SHAP) தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர்.

மார்ச் 18, புதன்கிழமைக்குள், SHAP இன் காலை பணிப்பிரிவு வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர்ந்தது. இதனுடன் ஜெபர்சன் நார்த் அசெம்பிளி ஆலை, மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பருக்கு அருகிலுள்ள டன்டி இயந்திர ஆலை மற்றும் ஓஹியோவில் உள்ள டோலிடோ பொருத்தும் வளாகத்தில் தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டனர். தொழிற்சங்க அதிகாரிகளை கண்டிக்க UAW அலுவலகங்களுக்குள் சாமானிய தொழிலாளர்கள் நுழைந்தனர். அதிகாலை வேளையில், பெரிய மூன்று வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளை மூடுவதாக அறிவித்தனர். இது தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த நிறுவனங்கள் மற்றும் UAW ஆகியவற்றின் கூட்டு அக்கறையினால் செய்யப்பட்டதாகக் கூறினர்.

அடுத்த நாள், மார்ச் 19, வியாழக்கிழமை, பிரேசில் முழுவதும் உள்ள அழைப்பு நிலையங்களில் (Call centers) தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் வெடித்தன. இத்தாலிக்குச் சொந்தமான இமாவிவாவின் தொழிலாளர்கள், "நாங்கள் எங்கள் சிறியஅறைகளில் இறக்கப்போவதில்லை!" பலேர்மோவில் நிறுவனத்தின் 2,800 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த வேலைநிறுத்தம் நிகழ்ந்தது. இத்தாலி கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நேரடி சேவைகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்த போராட்ட அலைக்கு பல குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்கள் இருந்தன. முதலாவது அதன் உலகளாவிய தன்மை. தொற்றுநோய் இயல்பாகவே உலகளாவிய நெருக்கடியும், மற்றும் கோவிட்-19 வைரஸ் சர்வதேச எல்லைகளை மதிக்கவில்லை. பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் இலாப நலன்களுக்கு மேலாக உயிர்களைக் காப்பாற்றும் ஒரு முயற்சியில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பதிலளித்தனர்.

இரண்டாவதாக, தொற்றுநோய் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது இந்த போராட்டங்கள் தோன்றின. மார்ச் 10 அன்று, தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை சுமார் 6,500 ஆக இருந்தது. மார்ச் மாத இறுதியில், இது 45,000 ஆக கடுமையாக உயர்ந்தது. அமெரிக்காவில், பிப்ரவரி மாத இறுதியில் பதிவுசெய்யப்பட்ட முதல் மரணம் நிகழ்ந்தது. மேலும் தேசிய எண்ணிக்கையானது 100 ஐ நெருங்கியபோது வாகனத்துறை ஆலைகளில் தன்னியல்பான வேலைநிறுத்தம் வெடித்தது.

ஒரு வருடம் கழித்து, உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2.6 மில்லியன் மக்களாக இருந்தது. இதில் அமெரிக்காவில் மட்டும் 538,000 க்கும் அதிகமானோர் உள்ளனர்.

மூன்றாவதாக, பெருநிறுவனங்களுக்குச் சொந்தமான செய்தி ஊடகங்கள் தொழிலாளர்களின் பரவலான எதிர்ப்பை பற்றிய செய்திகளைத் தடுக்க எல்லாவற்றையும் செய்தன. உலக சோசலிச வலைத் தளம் வேலைநிறுத்த அலை பற்றிய விரிவான தகவல்களை வழங்கியது. ஆனால் நாங்கள் இந்த போராட்டங்களைப் பற்றி மட்டும் தெரிவிக்கவில்லை. உலக சோசலிச வலைத் தளமும் உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் உயிரைக் காப்பாற்றுவதற்கான சுயாதீனமான முயற்சியை எடுக்க தொழிலாளர்களை தீவிரமாக ஊக்குவித்தன.

மார்ச் 14 இன் “கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க வாகனத் துறையை நிறுத்துங்கள்!” என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) அறிக்கை, 130,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது.

மார்ச் 1 முதல் மே 31 வரை அமெரிக்காவில் 260 வேலைநிறுத்தங்கள் மற்றும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் பலதரப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப நடவடிக்கை வணிகங்கள் மற்றும் பள்ளிகளின் ஓரளவு பூட்டுதல்களை கட்டாயப்படுத்தி, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது.

இந்த நடவடிக்கைகள் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தவை, ஆனால் அவை பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படவில்லை. தொழிலாளர்கள் உயிர்களைக் காப்பாற்றும் ஒரு கொள்கையை திணிக்க முயற்சிக்கையில், அவர்கள் சுயாதீன தொழிலாளர் அமைப்புகளின் அமைப்பால் வழிநடத்தப்படவில்லை அல்லது தெளிவான அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்படவில்லை.

இதற்கு பதிலளிக்க ஆளும் வர்க்கம் தாக்குதலைத் தொடர்ந்தது. மார்ச் மாத இறுதியில், அமெரிக்க காங்கிரஸ், குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஏகமனதான ஆதரவோடு, CARES சட்டத்தை நிறைவேற்றியது. இது வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு 4 டிரில்லியன் டாலர் கையளிப்பதற்கு நிதியளித்தது. CARES சட்டத்தின் மூலமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட நிதி உதவி, பள்ளிகளையும் பணியிடங்களையும் மீண்டும் திறப்பதற்கான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆளும் வர்க்கத்திற்கு, "குணப்படுத்துவது நோயை விட மோசமாக இருக்க முடியாது" என்ற முழக்கத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களின் ஆதரவோடு கால அவகாசத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது.

ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கான ஒத்திகையாக ஏப்ரல் 30 மிச்சிகன் மாநில தலைநகரத்தை ஆயுதமேந்திய வலதுசாரி ஆயுததாரிகள் தாக்கியது, பூட்டுதல்களை நிறுத்தக் கோரி பாசிச சக்திகளை ஊக்குவிப்பதுடன் இணைந்து இருந்தது.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில், உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சோசலிச சமத்துவ கட்சிகள் தொற்றுநோயைத் தடுக்கும் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தன. பிப்ரவரி 28 அன்று, இறப்பு எண்ணிக்கை வெறும் 3,000 ஆக இருந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு "கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளவில் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கையை" கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் நோயை நிறுத்த முழு உலகின் சமூக மற்றும் விஞ்ஞான வளங்களை திரட்டுவதும் உள்ளடங்கியிருந்தது.

மார்ச் 17 அன்று, அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 170 ஆக இருந்தபோது, சோ.ச.கட்சியின் தேசிய குழு (அமெரிக்கா), "கோவிட் -19 தொற்றுநோயை எவ்வாறு எதிர்ப்பது: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு செயல் திட்டம்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது "அனைத்து பள்ளிகள், அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களை உடனடியாக மூடுவதற்கு அழைப்பு விடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு வருமானம் வழங்குமாறும் மற்றும் எந்தவொரு தொழிலாளியும் தனது வாழ்க்கையை ஆபத்திற்கு உட்படுத்தக்கூடாது." என்றும் குறிப்பிட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைத்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், நூறாயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான உயிர்கள் கூட காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒரு வருடம் கழித்து, தொழிலாள வர்க்கம் ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. உலகம் முழுவதும், மீதமுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. போரிஸ் ஜோன்சன் திங்களன்று இங்கிலாந்தில் பள்ளிகளை மீண்டும் திறந்தார். நியூயோர்க் நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பைடென் நிர்வாகத்தினாலும், பெருநிறுவன ஆதரவு தொழிற்சங்கங்களின் ஆதரவோடு மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வல்லுநர்கள் அடுத்த நான்கு முதல் ஆறு வாரங்களில் தொற்றுநோய்களின் “சூறாவளி” எழுச்சி குறித்து எச்சரித்தபோதும் இது நிகழ்கிறது.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்கி சாமானிய தொழிலாளர் குழுக்களை கட்டியமைக்கவேண்டும். முழுமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு தொற்றுநோய் முழுகட்டுப்பாட்டிற்குள் வரும்வரை பள்ளிகள் மற்றும் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்தியையும் மூடுவதற்கும், மற்றும் தொழிலாளர்களுக்கும் சிறு தொழில்களுக்கும் முழு இழப்பீட்டை வழங்கவும் வேலைநிறுத்த நடவடிக்கையை கோர வேண்டும்.

இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதில் தொற்றுநோய்களிலிருந்து இலாபமடைவர்களிடமிருந்து பறிமுதல் செய்தல், செல்வத்தை தீவிரமாக மறுபகிர்வு செய்தல் உள்ளடங்கலாக மற்றும் பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், தடுப்பூசி மற்றும் கோவிட்-19 ஐ அழிக்கத் தேவையான பிற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான வளங்களை பெருமளவில் பயன்படுத்தவும் வேண்டும்.

Loading