மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த புதிய வாரம் தொடங்குகையில், COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது இந்த தொற்றுநோயின் குவிமையமாக விளங்கும் நியூ யோர்க் நகரம் அதன் சுகாதாரத்துறையின் முறிவு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையின் துயரகரமான அதிகரிப்புடன் அச்சுறுத்தப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் இடங்களைத் தீர்மானிப்பதற்குப் பெருந்திரளான மக்களுக்கு பரிசோதனை வசதி இல்லை என்கின்ற நிலையில், நியூ யோர்க், கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாநிலத்தில் இப்போது கட்டவிழ்ந்து வரும் சமூக பேரிடர் வரவிருக்கும் நாட்களிலும் வாரங்களிலும் கிட்டத்தட்ட முழுமையாக நாடெங்கிலும் வேகமாக பரவும் என்பது நிச்சயமாக உள்ளது.
இந்த தொற்றுநோய் பரவி வருகின்ற நிலையில், பொருளாதார பாதிப்போ அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத பரிமாணத்தை எடுத்து வருகிறது. “இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும்" மற்றும் "சமூக விலக்கு" மேற்கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், பொருளாதாரம் முடங்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக சில்லரை மற்றும் சேவை தொழில்துறையில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் அவற்றின் கதவுகளை மூட நிர்பந்திக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியமில்லா உற்பத்தியை நிறுத்த வேண்டியுள்ளது என்பது வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை 1930 களின் பெருமந்தநிலைமைக்கு நிகராகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஏற்படலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது.
தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலான பிரிவுகள் வருமான இழப்பால் அச்சுறுத்தப்பட்டுள்ளன, மேசையில் உணவு கொண்டு வர முடியாத நிலைமை மற்றும் அவர்களின் வாராந்தர மற்றும் மாதாந்தர செலவுகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளன. பத்து மில்லியன் கணக்கானவர்கள் மிகச் சிறிதளவிலான சேமிப்புடனோ அல்லது சேமிப்பின்றியோ, கைக்கும் வாய்க்குமாக வாழும் ஒரு நாட்டில், இந்த தொற்றுநோய் வைரஸால் பாதிக்கப்படாதவர்களுக்கும் கூட இதுவொரு சமூக பேரழிவாக அமைந்துள்ளது.
தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் அனைவருக்கும் அவர்கள் இழந்த சம்பளங்கள் மற்றும் கூலிகளை முழுமையாக வழங்க அவசரகால நிதி ஒதுக்கீடு அவசரம் என்பதுடன் இந்த தொற்றுநோய்க்கான பொருளாதார விடையிறுப்பின் நிபந்தனையற்ற முன்னுரிமையாக இருக்க வேண்டும். அடமானம் மற்றும் வாடகை தொகைகள், கார் கடன்கள், மருத்துவச் செலவுகள், காப்பீட்டு தவணைகள், கல்விக் கட்டணம் மற்றும் மாணவர் கடன் ஆகியவை இந்த சுகாதார நெருக்கடியின் காலத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
அதே நேரத்தில், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் திவாலாவதைத் தடுக்கும் வகையிலும், மருத்துவ நிலைமைகள் அனுமதித்த உடனேயே அவர்களின் நிறுவனங்களை மீண்டும் திறக்கும் வகையிலும் அவற்றுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
கல்வி, கலாச்சார மற்றும் சமூகரீதியில் இன்றியமையாத மற்ற அமைப்புகள் பிழைத்திருப்பதை உத்தரவாதப்படுத்தவும் பணம் வழங்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை தரும் இந்த திட்டம், ட்ரம்ப் நிர்வாகம், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பெருநிறுவன செயலதிகாரிகளுக்கு இடையே மூடிய கதவுக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கொண்டு வரப்படுகின்ற பல ட்ரில்லியன் டாலர் "நிதி உதவிப்பொதிக்கு" நேரதிரானதாகும்.
தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக என்று எரிச்சலூட்டும் விதத்தில் உதட்டளவில் மோசடியாக வாய்சவடால் கூறப்பட்டு வருகின்ற நிலையில், மிகப்பெரும் செல்வசெழிப்பான பெருநிறுவன நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வ வளங்கள் மற்றும் இலாபங்களைப் பாதுகாப்பது மட்டுமே வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளின் ஒரே நோக்கமாகும். வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன பொதுக்குழுக்களின் ஜாம்பவான்கள், 2008-09 பிணையெடுப்பை விட அதிகமாக, அவர்களுக்கு மட்டுப்பாடு இல்லாமல் பணத்தை வாரியிறைக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.
இந்த தருணம் வரையில், மத்திய அரசாங்கம் இந்த தொற்றுநோய் தொடர்பாக அவசர பேரிடர் நிவாரணத்திற்காக 10 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே செலவிட்டுள்ளது. இவ்வாறிருக்கையில், சமீபத்திய வாரங்களில் அமெரிக்க நிதித்துறை 600 பில்லியன் டாலர் மதிப்பில் பங்கு பத்திரங்களை விலைக்கு வாங்கியுள்ளது, இதன் அர்த்தம் அது சுகாதார கவனிப்பு நெருக்கடியைச் சரி செய்ய ஒதுக்கியதை விட 60 மடங்கிற்கும் அதிக பணத்தை வங்கிகளுக்கு முட்டுகொடுப்பதற்காக செலவிட்டுள்ளது.
பிரதான வங்கிகள் வைத்திருக்கும் நிதி சொத்துருப்புகளின் மதிப்புகளைப் பின்புலத்திலிருந்து பலப்படுத்துவதற்காக ஏற்கனவே உறுதியளித்துள்ள 2 ட்ரில்லியன் டாலருக்கும் கூடுதலாக, காங்கிரஸ் மேலும் 2 ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு பொதி வழங்க விவாதித்து வருகிறது.
அந்த முன்மொழிவின் பெரும் பெரும்பான்மை, குறிப்பாக விமானச் சேவை மற்றும் ஏனைய தொழில்துறைகளை இலக்கில் வைத்த நடவடிக்கைகள் உள்ளடங்கலாக, விடுமுறை மற்றும் கடன்களுக்காக சம்பளத்தில் வழங்கப்படும் வரிச்சலுகை வடிவத்தில் வணிகங்களுக்கான பல்வேறு கையளிப்புகளைக் கொண்டிருக்கின்றன. அந்த சட்டமசோதாவின் 50 பில்லியன் டாலருக்கும் குறைவான தொகையே இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக அவசரகால நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. வெறும் ஒரேயொரு நிறுவனம், போயிங், அந்த சட்டமசோதாவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொதுச் சுகாதார முறைக்கான பிணையெடுப்பை விட அதிகமான ஒரு பிணையெடுப்பைக் கோரி வருகிறது.
குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் பிணையெடுப்பு விவரங்கள் மீது சச்சரவிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றாலும், 1) பாரியளவிலான பணம் பிரதான பெருநிறுவனங்கள் மூலமாக பாய்ச்சப்பட வேண்டும்; 2) செயலதிகாரிகள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களின் செல்வவளத்தை மட்டுப்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படக்கூடாது; 3) முதலாளித்துவ இலாப அமைப்புமுறை மற்றும் தனிச்சொத்துடைமையின் நலன்கள் சவால்விடுக்கப்படாமல் மற்றும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பனவற்றில் அவர்கள் உடன்படுகின்றனர். வங்கிகளும் மிகப்பெரும் பெருநிறுவனங்களும் தொடர்ந்து ஆளும் என்பது மட்டுமல்ல. இந்த அமைப்புகளும் அவற்றின் செயலதிகாரிகளும் பெரிய பெரிய பங்குதாரர்களும் இந்த நெருக்கடியில் இருந்து இன்னும் பணக்காரர்களாக மற்றும் முன்பினும் அதிக பலமானவர்களாக மேலெழ உள்ளார்கள்.
நேற்று பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் அறிவிக்கையில், “பாரிய வேலைவாய்ப்பின்மையை மட்டுப்படுத்த, மற்றும் முன்னர் நிலைத்திருந்த நிறுவனங்களைப் பேணுவதற்கான ஒரே நடைமுறை வழி, அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தனியார் துறைக்குள் பணத்தைப் பாய்ச்சுவதாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டது.
2008 பொறிவுக்கு விடையிறுப்பாக கடந்த முறை இது செய்யப்பட்ட போது, அதன் விளைவு பெரும் செல்வந்தர்களுக்கும் மற்றும் ஏராளமாக நிதியியல் சொத்திருப்புகள் வைத்திருந்தவர்களுக்கும் அதுவொரு வெகுமதியாக இருந்தது. 2009 இல் 1.27 ட்ரில்லியன் டாலராக இருந்த அமெரிக்காவின் 400 மிகப் பெரும் செல்வந்தர்களின் செல்வவளம் 2019 இல் 2.6 ட்ரில்லியன் டாலராக அதிகரித்தது.
அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸிற்கு 2009 இல் 6.8 பில்லியன் டாலர் நிகர மதிப்பிலான செல்வவளம் இருந்தது, இது 2018 வாக்கில் 160 பில்லியன் டாலராக ஆனது. 2009 இல் 37 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் இருந்த வாரென் பஃபெட்டின் செல்வவளம், கடந்தாண்டு 90 பில்லியன் டாலருக்கு வளர்ந்திருந்தது. பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க்கின் செல்வவளம் 2009 இல் 2 பில்லியன் டாலராக இருந்தது, ஆனால் 2019 இல் அவரின் செல்வவளம் 40 மடங்கு அதிகரித்து, 85 பில்லியன் டாலரை எட்டியதைக் கண்டார். டெஸ்லா (Tesla) நிறுவன தலைமை செயலதிகாரி எலொன் முஸ்க்கின் செல்வ வளம் முன்பினும் அதிக வேகமாக அதிகரித்து, 2019 இன் மே மாதம் 20 பில்லியன் டாலரில் இருந்து இந்தாண்டு தொடக்கத்தில் 45 பில்லியன் டாலருக்கு இரட்டிப்பானதைக் கண்டார்.
2019 இல், அமெரிக்க நிறுவனங்கள் அவற்றின் சொந்த பங்குகளையே வாங்கிவிற்பதில் 798 பில்லியன் டாலர் செலவிட்டன, இந்த தொகை 2008 நிதியியல் நெருக்கடிக்கு முன்னர் என்ன செலவிடப்பட்டதோ அதை விஞ்சி இருந்தது.
இவ்வாறு பங்கு வாங்கிவிற்பது பெருநிறுவன செயலதிகாரிகள் தங்களைத் தாங்களே செல்வசெழிப்பாக்கிக் கொள்ள அவர்களால் பயன்படுத்தப்பட்ட பிரதான வழிவகைகளில் ஒன்றாக இருந்தது. இதை ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ பின்வருமாறு விவரித்தது:
ஜனவரி 2019 இல் S&P 500 இல் பட்டியலிட்டிருந்த 465 நிறுவனங்கள், 2009 மற்றும் 2018 க்கு இடையே பொதுபங்குகளைப் பட்டியலிட்டிருந்த இவை, அந்த தசாப்தத்தில், பங்குகள் வாங்கி விற்பதில் 4.3 ட்ரில்லியன் டாலரை, அதாவது நிகர வருவாயில் 52% இக்கு நிகராக செலவிட்டன, மேலும் மற்றொரு 3.3 ட்ரில்லியன் டாலரை, அதாவது கூடுதலாக நிகர வருவாயில் 39% ஐ பங்காதயங்களில் செலவிட்டன. 2018 இல் மட்டுமே, குடியரசு கட்சியின் வரி வெட்டுக்களின் காரணமாக சாதனை மட்டங்களுக்கு வரிக்குப் பிந்தைய இலாபங்களைப் பெற்ற பின்னரும் கூட, S&P 500 நிறுவனங்களினது பங்குகளை வாங்கி விற்கும் நடைமுறை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு நிகர வருவாயில் 68% ஐ எட்டியது, இத்துடன் மற்றொரு 41% ஐ பங்காதயங்கள் உறிஞ்சி இருந்தன.
பாரியளவில் இத்தகைய பங்கு வாங்கிவிற்றலை அமெரிக்க நிறுவனங்கள் ஏன் செய்துள்ளன? அவற்றுக்குக் கிடைக்கும் ஈட்டுத்தொகையில் பெரும்பான்மை பங்கு வாய்ப்புவளங்கள் மற்றும் பங்கு வெகுமதிகளில் இருந்து கிடைக்கின்றன என்கின்ற நிலையில், மூத்த பெருநிறுவன செயலதிகாரிகள் தங்களின் சொந்த நலன்களுக்காகவும், பொதுவில் பட்டியலிட்டுள்ள பங்குகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுப்பட்டுள்ள ஏனையவர்களுக்காகவும் அவர்களின் நிறுவனங்கள் பங்கு விலைகளில் மோசடி செய்வதற்காக பொது-சந்தையைப் பயன்படுத்தி உள்ளனர். பங்கு வாங்கி விற்கும் நடவடிக்கையானது, தொழிலாளர்களை விலையாக கொடுத்து, அவர்களின் சந்தர்ப்பவாத பங்கு விற்பனையாளர்களை —அதாவது முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிறுவன மேலாளர்கள் அத்துடன் மூத்த பெருநிறுவன செயலதிகாரிகளையும்—அத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும் பங்குதாரர்களையும் செல்வ செழிப்பாக்குகிறது.
முதலாளித்துவ நிதியியல் நடைமுறைகள் மற்றும் பெருநிறுவன சொத்துக்களின் விகாரமான சூறையாடல்களின் அருவருக்கத்தக்க யதார்த்தம், தொழிலாள வர்க்கத்தின் தேவை குறித்து எப்போதெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ அப்போது "பணமில்லை!” என்ற முனங்கும் பொய்யான வார்த்தைகளைக் கொண்டு வாதிடப்படுகிறது.
பணமில்லை என்பது பிரச்சினையில்லை, மாறாக முதலாளித்துவ வர்க்கத்தால் சமூகத்தின் உற்பத்தி சக்திகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதே பிரச்சினையாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி பெருநிறுவனங்களுக்கான பிணையெடுப்பை உறுதியாக நிராகரிக்கிறது. பத்து நூறாயிரக் கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள வங்கிகள் மற்றும் ஏகபோக பெருநிறுவனங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென நாங்கள் கோருகிறோம். சிறிய மற்றும் நடுத்தர அளவில் உள்ள பங்குதாரர்களின் முதலீடுகள், இவர்களில் பலர் தங்களின் ஓய்வூதிய சேமிப்புகளை இவற்றில் முதலீடு செய்துள்ள நிலையில், இவர்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தனிப்பட்டரீதியில் செல்வச்செழிப்பாக்கிக் கொள்ளும் நலன்களுடன் கடந்த தசாப்தத்தில் இத்தகைய பெருநிறுவனங்களைக் சூறையாடிய செயலதிகாரிகள், மீட்டளிப்புக்குப் பணம் அளிக்க சட்டரீதியில் நிர்பந்திக்கப்பட வேண்டும்.
2008 பொறிவைப் போலவே இந்த நெருக்கடியானது, முதலாளித்துவ தனிநபர்வாதத்தின் மாயை அம்பலப்படுத்தி உள்ளது. பாரியளவில் அரசு உதவி இல்லாமல் வங்கிகளும் பெருநிறுவனங்களும் பிழைத்திருக்க முடியாது என்பதை இது தெளிவுபடுத்தி உள்ளது.
இத்தகைய கோரிக்கைகளை உயர்த்துகையில், சோசலிச சமத்துவக் கட்சி ஒரு கணம் கூட ட்ரம்ப் நிர்வாகமோ, அல்லது, அவ்விடத்தைப் பொறுத்த வரையில், ஜனநாயக கட்சியினரால் தலைமை கொடுக்கப்படும் நிர்வாகமோ, பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்குமென நம்பவில்லை.
இதனால் தான் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைத் தொழில்துறைரீதியிலும் அரசியல்ரீதியிலும் அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும்.
இந்த உலகளாவிய தொற்றுநோய், தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளில் சோசலிச உணர்வு மற்றும் போர்குணத்தின் ஓர் அலையைத் தூண்டிவிட்டுள்ளது. கடந்த வாரம் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் வாகனத் தொழில்துறையை மூடுவதற்கு நிர்பந்தித்தது மற்றும் அந்நாடு எங்கிலுமான தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய மறுத்துள்ளனர். உலகெங்கிலுமான ஏனைய போராட்டங்களுடன் சேர்ந்து இத்தகைய போராட்டங்கள் ஒரு சோசலிச அடித்தளத்தில் இந்த நெருக்கடிக்கான தீர்வுக்குப் புறநிலை அடித்தளமாக உள்ளன, பொது சுகாதார உள்கட்டமைப்பை விரிவாக்குவதன் மூலமாக மனித வாழ்வைக் காப்பாற்றுவதற்கும் மற்றும் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடவும் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களின் முதலீடு என்பதே இதன் அர்த்தமாகும்.
இந்நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கம் தாங்கிக் கொள்ள செய்வதற்கான முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகள் எதிர்க்கப்படாவிட்டால், அது மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை விலைகொடுப்பதாக இருக்கும். சமுதாயத்தின் மிக அடிப்படையான செயல்பாடு, அதாவது மனித உயிரை பாதுகாப்பதென்பது, முதலாளித்துவத்துடன் பொருந்தாது என்ற ஒரு கட்டத்தை மனிதகுலம் எட்டியுள்ளது.