மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஞாயிற்றுக்கிழமை, ஹம்பேர்க் நகரில் உள்ள Hohe Weide யூத ஆலயத்தின் கதவுக்கு வெளியே 26 வயது யூத மாணவர் ஒருவர் மண்வாரியால் தாக்கப்பட்டார். ஹம்பேர்க் அரச வழக்குத்தொடுனர் அலுவலகமும் காவல்துறையும் இந்த தாக்குதலை யூத எதிர்ப்பினால் உந்தப்பட்ட மற்றும் கொலை முயற்சி என்று மதிப்பிட்டுள்ளன.
ஜேர்மன் இராணுவ உருமறைப்பு சீருடையை அணிந்துகொண்டு, பாதிக்கப்பட்டவரை கஜகஸ்தானில் பிறந்த 29 வயதான ஜேர்மன் குடிமகனான கிரிகோரி.கே ஒரு இராணுவத்திற்குரிய பலமான கருவியால் தாக்கினார். அவரது பைகளில் ஒரு சுவாஸ்திகா சின்னத்துடனான ஒரு சீட்டு காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. Der Spiegel இன் கூற்றுப்படி, கிரிகோரி.கே 2016 இல் தன்னார்வ இராணுவ சேவையை மேற்கொண்டிருந்தார். இதில் மூன்று மாத அடிப்படை பயிற்சி உள்ளடங்கலாக, பின்னர் துணை மருத்து உதவியாளராக பணியாற்றினார்.
ஹம்பேர்க்கில் நடந்த தாக்குதல் ஜேர்மனியில் முடிவில்லாத யூத எதிர்ப்பு தாக்குதல்களில் சமீபத்தியதாகும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதிகாரபூர்வ பொலிஸ் புள்ளிவிவரங்கள் 696 குற்றங்களை யூத எதிர்ப்பு நோக்கத்துடனான தாக்குதல்களாக பதிவு செய்தன. 2010 இலிருந்து, இத்தகைய குற்றங்களின் வருடாந்த எண்ணிக்கை 1,200 க்கு குறையவில்லை.
ஒரு வருடம் முன்பு, அக்டோபர் 9, 2019 அன்று, யோம் கிப்பூரின் யூத விடுமுறையில் ஹால நகரில் உள்ள யூதஆலயத்தை நவ-நாஜி ஸ்டீபன் பலியட் தாக்கினார். நன்கு பலப்படுத்தப்பட்ட கதவு மட்டுமே டஜன் கணக்கான யூதர்களின் இரத்தக்களரியை தடுத்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர், தோமஸ் ராத்ஜென் ஹனவ் நகரில் இரண்டு புகைப்பிடிக்கும் விடுதியில் ஒன்பது பேரைக் கொலை செய்தார். பலியட்டைப் போலவே, ராத்ஜென் யூதர்களையும் முஸ்லிம்களையும் ஒரே மாதிரியாக வெறுத்த ஒரு தீவிர யூத எதிர்ப்புவாதியாவார். ஒரு அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் பிற 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களை அழிக்க அவர் அழைப்பு விடுத்தார்.
ஆறு மில்லியன் யூதர்கள் பலியான படுகொலைக்கு எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர், மக்கள்தொகையில் 0.2 சதவிகிதம் மட்டுமே உள்ள ஜேர்மனியின் யூதர்கள் மீண்டும் ஆபத்தில் வாழ்கின்றனர். இந்த கடுமையான யூத-விரோதத்திற்கான பொறுப்பு முற்றிலும் ஆளும் உயரடுக்கினரிடம் உள்ளது.
இது நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) பாதுகாத்து, அதன் பிரதிநிதிகளை உயர் அலுவலகங்களுக்குத் தேர்வு செய்து, அதன் இனவெறி அகதிக் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்து, தீவிர வலதுசாரி ஆர்வலர்களை “கவலைகொண்ட மக்களாக” காட்டும், மற்றும் இராணுவத்திலும் பொலிஸிலும் உள்ள வலதுசாரி வலைப்பின்னலுக்கு ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளின் முன்னணி அரசியல்வாதிகளிடமும் உள்ளது.
நேற்று மட்டும், உள்துறை உள்துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபர் (கிறிஸ்தவ சமூக யூனியன், CSU) உள்நாட்டு இரகசிய சேவைக்குள் வலதுசாரி தீவிரவாதிகள் குறித்த அறிக்கையை முன்வைத்தார். இது அரசு எந்திரத்திற்குள் தீவிர வலதுசாரி வலைப்பின்னல்களை வேண்டுமென்றே குறைத்துக்காட்டி, யூதமக்களுக்கு விரோதமானவர்களுக்கும் மற்றும் இனவாதிகளுக்கும் வெற்றுப்பத்திரத்தை வழங்குகின்றது.
காவல்துறையிலும் ஜேர்மன் ஆயுதப்படைகள் மற்றும் இரகசிய சேவைகளுக்குள்ளும் நவநாஜி மற்றும் யூத எதிர்ப்பு அரட்டைகளை பரிமாறிக்கொள்ளும் குழுக்கள் அதிகமாக இருப்பது, இடதுசாரி வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவது, ஆயுதங்களை பதுக்கி வைப்பது மற்றும் “நாள் X” ஒரு சதிக்கு தயாரிப்பது போன்றவற்றின் மத்தியில், 2017 மற்றும் ஏப்ரல் 2020 க்கு இடையில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் வலதுசாரி தீவிரவாதத்தின் 400 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இருப்பதாக சீஹோஃபர் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், ஜேர்மன் உளவுத்துறை அமைப்பினுள் "கட்டமைப்பு ரீதியான வலதுசாரி தீவிரவாதம்" இல்லை என்று அவர் கூறினார்.
உண்மையில், சீஹோஃபரின் புள்ளிவிவரங்கள் முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டவையாகும். முதலாவதாக, ஜேர்மன் இராணுவத்தில் சந்தேகத்திற்கிடமான வழக்குகள் அவற்றில் இல்லை. அதே காலகட்டத்தில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 1,064 ஆக இருந்தது. இரண்டாவதாக, புள்ளிவிவரங்கள் இதே பாதுகாப்பு அமைப்புகளால் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு சுயாதீன விசாரணையும் இருக்கவில்லை. மூன்றாவதாக, மார்ச் மாதத்திலிருந்து பாரியளவில் அதிகரித்துள்ள நிகழ்வுகள் இதனுள் சேர்க்கப்படவில்லை. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் மட்டும், சந்தேகத்திற்கிடமான வழக்குகளின் எண்ணிக்கை 45 முதல் 104 ஆக உயர்ந்துள்ளது. நான்காவதாக, பதிவு செய்யப்படாத சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. ஏனெனில் அங்கு நாங்கள் எல்லோரும் ஒன்று என்ற ஒரு உணர்வு உள்ளது. பொலிஸ் மற்றும் ஜேர்மன் இராணுவத்தினுள் இருக்கும் எந்தவொரு தகவலை வெளிவிடுவதை அது "காட்டிக்கொடுப்பு" என்று முத்திரை குத்துகிறது.
"அமைதிக் குறியீடு" என்று அழைக்கப்படுவது "பொலிஸ் கலாச்சாரத்தில் பரவலாக உள்ளது" என்று இப்போது ஹம்பேர்க் பொலிஸ் பயிலுனகத்தில் கற்பிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரி ரபேல் பெஹர் Der Spiegel இடம் கூறினார். “எந்த விலையிலும் நீங்கள் சக ஊழியர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டீர்கள். நீங்கள் எல்லாவிதத்திலும் ஒற்றுமையை பராமரிக்கிறீர்கள். ... உதாரணமாக, நாஜி நினைவுச்சின்னங்களுடன் காவல் நிலையத்திற்கு வரும் சக ஊழியர்களைப் பார்க்கும்போது யாரும் ‘நிறுத்து’ என்று சொல்லவில்லை அல்லது சம்பவத்தைப் பற்றி புகாரளிக்கவில்லை” என்றார்.
சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள சீஹோஃபரை போன்ற மாநில உள்துறை மந்திரி ஹோல்கர் ஸ்டால்க்நெக்ட் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், CDU), காவல்துறையில் யூத-விரோத உணர்வுகளை வேண்டுமென்றே தூண்டிவிடுகிறார். திங்களன்று, டெசவ் நகரில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் யூத நிலையங்களைப் பாதுகாக்க மாதத்திற்கு 1,500 கூடுதல் மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களால் இனி தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ஹாலவில் உள்ள யூத ஆலயம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது என்பதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பான ஸ்டால்க்நெக்ட், தனது கருத்தைதெரிவிக்க பொருத்தமான இடத்தை கவனமாக தேர்ந்தெடுத்திருந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு Oury Jalloh இறந்த டெசவ்-ரோஸ்லாவ் காவல் நிலையத்தில் அவர் பேசினார். சியரா லியோன் நாட்டைச் சேர்ந்த அகதி பொலிஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக அனைத்து ஆதாரங்களும் தெரிவித்த போதிலும், வழக்கு ஒருபோதும் தீர்க்கப்படவில்லை. இது பொலிஸ் படையில் கட்டுப்படுத்தமுடியாத இனவெறிக்கான ஒரு தூண்டுகோலாக செயல்பட்டது.
யூத-விரோதம் மீண்டும் திரும்புவதற்கு பொறுப்பானவர்களில், தீவிர வலதுசாரி பேராசிரியர்களை ஆதரிக்கும் கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவருமே உள்ளடங்குவர். அவ்வாறான வலதுசாரி பேராசிரியர்களை விமர்சிப்பதை அவர்கள் கல்வி புலமைத்துவத்திற்கான சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சிக்கின்றனர். பிப்ரவரி 2014 இல், Der Spiegel ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டு ஜேர்மன் வரலாற்றை மறுவரையறை செய்யக் கோரியபோது, இது இராணுவவாதம், பாசிசம் மற்றும் யூத-விரோதத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சோசலிச சமத்துவக் கட்சி (SGP) அவசரமாக எச்சரித்தது.
பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் பாபெரோவ்ஸ்கியை Der Spiegel மேற்கோள் காட்டியது. ஹிட்லர் "தீயவர் அல்ல" என்று பாபெரோவ்ஸ்கி உத்தரவாதமளித்து மற்றும் நாஜிகளுக்கு வக்காலத்து வாங்கிய ஏர்ன்ஸ்ட் நோல்டவை ஆதரித்தார். அந்த நேரத்தில் உயிருடன் இருந்த நோல்ட, கட்டுரையில் யூத-விரோத கருத்துக்களை தெரிவித்தார். உதாரணமாக, குலாக்கிற்கு யூதர்கள் ஓரளவு பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். ஏனெனில் யூதர்களில் சிலர் போல்ஷிவிக்குகளாக இருந்தனர் என்றார். அவ்வாறு, அவர் ஒரு "யூத-போல்ஷிவிக் உலக சதி" பற்றி நாஜி பிரச்சாரத்தின் வழியைப் பின்பற்றினார்.
சமூக ஜனநாயகவாதிகள் (SPD), பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி உட்பட அனைத்து கட்சிகளிலிருந்தும் ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாபெரோவ்ஸ்கியைப் பாதுகாத்து, SGP மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பை தாக்கினர். IYSSE பகிரங்கமாக அவரை விமர்சித்தது. இதற்கு மாறாக, SGP / IYSSE மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து அதிக ஆதரவைப் பெற்றது. மேலும் ஒரு நீதிமன்றம் பாபெரோவ்ஸ்கியை சட்டபூர்வமாக "வலதுசாரி தீவிரவாதி" என்று அழைக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த சர்ச்சை பல ஆண்டுகளாக தொடர்கிறது. மெஹ்ரிங் வெளியீட்டகம், புலமைத்துவமா அல்லது போர் பிரச்சாரமா? ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கருத்துமோதல் மற்றும் ஏன் அவர்கள் திரும்பி வருகிறார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சதி மற்றும் ஜேர்மனியில் பாசிசம் திரும்புவது என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டது. (மெஹ்ரிங் வெளியீட்டகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்). ஜேர்மனியில் ஏன் யூத எதிர்ப்பு மீண்டும் எழுகிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பும் எவரும் இந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
பாசிசம் மற்றும் யூத-விரோதத்திற்கு திரும்புவது ஆழமான, புறநிலை காரணங்களைக் கொண்டுள்ளது மற்றும் இது ஜேர்மனிக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல.
அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆயுதமேந்திய பாசிச போராளிகளை அணிதிரட்டுவதுடன், நவம்பர் தேர்தலில் தோற்றால் ஒரு சதித்திட்டத்தை வெளிப்படையாக அச்சுறுத்துகிறார். பிரேசில், பிலிப்பைன்ஸ், ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் போலந்தில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஆனால் மற்ற எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்கிறது. ஜேர்மனியில், யூத-விரோதம் கடுமையான வடிவத்தில் காட்டப்படுவது போல், இந்த நிகழ்வுகள் மிகவும் முன்னேறியுள்ளது.
உலக முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடியே இதற்கு காரணமாகும். சர்வதேச உறவுகள் மூலோபாய போட்டிகள், பொருளாதார மோதல்கள் மற்றும் போர்களால் குணாதிசயப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் உள்நாட்டு உறவுகள் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மை மற்றும் கடுமையான வர்க்க பதட்டங்களால் குணாதிசயப்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று இதை தீவிரப்படுத்தியுள்ளதுடன் மற்றும் துரிதப்படுத்தியுள்ளது. நிதி தன்னலக்குழுவிற்கு அரசு நிதியங்களிலிருந்து பில்லியன்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொழிலாளர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையல் வேலை செய்யத் தள்ளப்படுகிறார்கள். மேலும் பாரிய பணிநீக்கங்கள், ஊதியம் மற்றும் சமூக வெட்டுக்கள் மூலம் இந்த பில்லியன் கணக்கான கடன்களை திரும்பிசெலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை ஜனநாயக வழிமுறைகளுடன் பொருந்தாது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூகத்தின் கழிவுகளைத் திரட்டுவதற்கும் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் ஹிட்லர் ஏற்கனவே யூத-விரோதத்தைப் பயன்படுத்தினார். இந்த காரணத்திற்காக, அவர் சமூகத்தின் உச்சியில் ஒரு சதித்திட்டத்தால் 1933 இல் குடியரசின் தலைவராக அழைக்கப்பட்டார்.
இதன் காரணமான யூத எதிர்ப்பு, சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. எதிர்வரவிருக்கும் தவிர்க்க முடியாத வர்க்கப் போராட்டங்களுக்கு சர்வதேச, சோசலிச நோக்குநிலையை தரும் ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். இதற்காகத்தான் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளும் போராடுகின்றன.