ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்சிகள் கேரா நகர சபைக்கு தீவிர வலதுசாரி AfD வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிழக்கு ஜேர்மனிய நகரமான கேராவின் (Gera) சமீபத்திய நிகழ்வுகள் ஆளும் வர்க்கத்தின் வலதுபுறம் கூர்மையான திருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கடந்த வியாழக்கிழமை, ஓய்வுபெற்ற மருத்துவரும் தீவிர வலதுசாரி உறுப்பினருமான இனவெறி ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் ரைய்ன்ஹார்ட் எட்ஸ்ரோட் (Reinhard Etzrodt) தூரிங்கியா மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரத்தில் நகர சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நியமனத்தின் மூலம் போருக்குப் பிந்தைய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு தீவிர வலதுசாரி வேட்பாளர் அத்தகைய பதவியை நிரப்பினார். நகர சபையில் AfD க்கு வெறும் 12 இடங்கள் உள்ள நிலைமையில் 40 வாக்குகளில் 23 வாக்குகளை எட்ஸ்ரோட் பெற்றார். இதன் பொருள் ஜேர்மனியின் பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு வலதுசாரி தீவிரவாதி பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

எட்ஸ்ரோட், AfDயின் பியோர்ன் ஹொக்கவின் பிரிவின் தலைமையிலான துரிங்கியாவில் உள்ள “Wing” பிரிவின் முன்னணி பிரதிநிதியும் மற்றும் நவ நாஜிக்கள் மற்றும் தீவிர வலதுசாரி பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார். ஊடக அறிக்கையின்படி, அவர் ஜூன் 2015 இல் கேராவில் நடந்த “துகீடா” ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். தீவிர வலது புற அணிவகுப்பை பாசிச ஜேர்மன் ஜனநாயகக் கட்சி (NPD) மற்றும் “ஐரோப்பிய நடவடிக்கை” இயக்கத்தின் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தீவிர வலதுசாரி அணிவகுப்பு பாசிச ஜேர்மன் ஜனநாயகக் கட்சி (NPD) மற்றும் "ஐரோப்பிய நடவடிக்கை" (European Action) இயக்கத்தின் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வமைப்பு பின்னர் கலைக்கப்பட்டது. தேசிய சோசலிச NSU அமைப்பின் முன்னாள் அங்கத்தவர்களும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடைசெய்யப்பட்ட “Combat 18” என்ற பாசிச வலையமைப்பின் ஆர்வலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தீவிர வலதுசாரி பயங்கரவாதிகளுடன் அணிவகுப்பில் எட்ஸ்ரோட் பங்கேற்பது தற்செயலானதல்ல. மாறாக AfD யின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. சில நாட்களுக்கு முன்பு, கட்சி AfD நாடாளுமன்றக் குழுவின் பத்திரிகை அலுவலகத்தின் தலைவரான கிறிஸ்டியான் லோத்தை பதவி நீக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. இணைய விவாதங்களில் தன்னை ஒரு "பாசிசவாதி" என்று லோத் பெருமையுடன் விவரித்தார். தொலைக்காட்சி நிலையமான ProSieben ஆராய்ச்சியின் படி, ஒரு மதுபான நிலையத்தில் இரகசியமாக பதிவுசெய்யப்பட்ட உரையாடலின் போது, புலம்பெயர்ந்தோர் "சுடப்பட வேண்டும் அல்லது நச்சுவாயு ஊட்டப்பட வேண்டும்" என்று கோபமடைந்தார். ஜேர்மனிக்கு அதிகமான புலம்பெயர்ந்தோரை அழைத்து வர விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, அவர் “ஆம், ஏனெனில் இது AfD க்கு நல்லது. நாம் அனைவரையும் சுடலாம். அது ஒரு பிரச்சினை அல்ல. அல்லது நீங்கள் விரும்பினால் நச்சுவாயு ஊட்டலாம். எனக்கு கவலையில்லை!” என்று பதிலளித்தார்.

யூன் 2015 இல் துகீடா ஆர்ப்பாட்டத்தில் ரைய்ன்ஹார்ட் எட்ஸ்ரோட் பின்வரியில் மத்தியில் (படம்: Antifa Recherche Gera)

எட்ஸ்ரோட்டின் தேர்தலைத் தொடர்ந்து, ஸ்தாபகக் கட்சிகள் அனைத்தும் தங்கள் குற்றமற்றவர்களாக காட்டிக் கொள்ள முயன்றன. கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) புதிய தூரிங்கிய மாநிலத் தலைவர் மரியோ வோய்க்ட், இடது கட்சியும் பசுமைவாதிகளும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனையே வாக்களித்ததாக குற்றம்சாட்டும் என்பதால் "AfD வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தனது பிரிவு தெளிவாக உடன்பட்டதாக" அறிவித்தார். அதே நேரத்தில் "சிவப்பு-சிவப்பு-பச்சை AfD வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என்றால், ஒருவர் கணிக்க முடியும் என்றால், எண்கணிதத்தைப் பொறுத்தவரை எட்ஸ்ரோட்டுக்கான வாக்குகள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். எனவே அது தெளிவாக உள்ளது என்று இடது கட்சிக்கான கேரா நகர சபையில் அமர்ந்திருக்கும் டானியல் ரைய்ன்ஹார்ட் அறிவித்தார்.

“எண்கணித ரீதியாக" தெளிவானது என்னவென்றால், பாசிச வேட்பாளர் பிரதான கட்சிகளின் அணிகளில் இருந்து ஆதரவைப் பெற்றார். கேரா நகர சபையில் தற்போது 11 நாடாளுமன்ற குழுக்களுக்கு இடையே 42 இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. AfD க்கு 12 உறுப்பினர்கள், இடது கட்சி 8, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு 6, கேரா குடியுரிமை குழு 3, கூட்டணி “கேராவிற்கான கூட்டணி” 3, பசுமைவாதிகள் 3, சமூக ஜனநாயகக் கட்சி 3, மற்றும் சுதந்திர வாக்காளர்களுக்கும், புதிய தாராளவாத FDP மற்றும் The Party கட்சியின் தாராளவாத கூட்டணிக்கு தலா ஒன்றும் என்றுள்ளது. சிறிய பிரிவுகளின் அனைத்து பிரதிநிதிகளும் AfD க்கு வாக்களித்ததாக ஒருவர் கருதினாலும், அது சாத்தியமில்லாதபோதும் எட்ஸ்ரோட் 21 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: ஜேர்மன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளிடமிருந்து குறைந்தது 2 வாக்குகள் AfD க்கு சார்பாக வந்துள்ளன.

இந்த வாக்குகள் CDU மற்றும் FDP ஆகியவற்றிலிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. நவம்பர் 2019 இல், தூரிங்கியாவில் உள்ள CDU நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மைக்கேல் ஹேம் மற்றும் 17 CDU மாநில அரசியல்வாதிகள் AfDயுடனான “திறந்தநிலை” பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாகப் பேசினர். ஹெய்ம் ஒரு "முதலாளித்துவ வலதுசாரி பெரும்பான்மையை" குறிப்பிடுகிறார், மேலும் ஒரு CDU-FDP அரசாங்கத்தை AfD சகித்துக்கொள்ளும் சாத்தியம் குறித்து ஊகித்தார்.

இந்த மூலோபாயம், மாநில தேர்தலுக்குப் பின்னர் செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில், FDP இன் மாநிலத் தலைவர் தோமஸ் கெம்மெரிச், CDU மற்றும் AfD ஆகியவற்றின் வாக்குகளுடன் மாநிலப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக ஜேர்மனி முழுவதும் தன்னிச்சையான வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து (20,000 பேர் மட்டும் தூரிங்கியா மாநில தலைநகரான ஏர்ஃபூர்ட் இல் கலந்துகொண்டனர்) கெம்மெரிச் தனது பதவியில் இருந்து விலகினார்.

எவ்வாறாயினும், இது CDUமற்றும் FDPயின் வலதுசாரிக் கொள்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கேராவில் ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தின் போது, கெம்மெரிச் நன்கு அறியப்பட்ட நவ நாஜிக்களுடன் அணிவகுத்தார். CDU பொருளாதார குழுவில் கூட்டுச்சேரா உறுப்பினரான கேராவைச் சேர்ந்த தொழிலதிபர் பீட்டர் ஷ்மிட் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆர்ப்பாட்டத்தில் கெம்மெரிச்சை ஒரு பேச்சாளராக அறிமுகப்படுத்திய ஷ்மிட் அவரை "ஒரே ஒரு சட்டபூர்வமான முதலமைச்சர் " என்று அறிவித்தார்.

CDU, FDP மற்றும் AfD ஆகியவற்றின் மண்ணிற வலதுசாரி கூட்டணிக்கு "இடது மாற்றீட்டை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக சமூக ஜனநாயக -இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரின் கூற்று முற்றிலும் பாசாங்குத்தனமானதாகும். தூரிங்கியாவில், குறிப்பாக, இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் பாசிஸ்டுகளுடன் ஒப்பந்தங்களை நடத்தத் தயாராக உள்ளனர். எடுத்துக்காட்டாக, மார்ச் மாதத்தில், தூரிங்கிய பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் பதவியை AfD துணைத் தலைவர் மைக்கேல் காவ்மானுக்கு வழங்குவதை பாதுகாக்க மாநில பிரதமர் போடோ ராமலோ (இடது கட்சி) உதவினார். அவர் "ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள உரிமையான பாராளுமன்றத்தில் பங்கேற்பதற்கு வழியை திறந்துவிடுவதற்கு மிகவும் அடிப்படையாக முடிவு எடுத்திருந்ததாக" ராமலோ அப்போது கூறினார்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் AfD மற்றும் பிற வலதுசாரி தீவிரவாதக் கட்சிகளுடன் இணைவதற்கு மிகவும் தயாராக உள்ளனர். கடந்த வியாழக்கிழமை, உள்ளூர் வாரிய அறங்காவலர் குழுவில் ஒரு பதவியை நிரப்புவதற்கான விண்ணப்பத்திற்கு ஆதரவாக AfD மற்றும் NPD உடன் இணைந்து சமூக ஜனநாயகக் கட்சி, தூரிங்கியாவின் ஐசனாக்கில் வாக்களித்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு, CDU, SPD மற்றும் FDP ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஹெஸ்ஸ மாநில NPD யின் துணைத் தலைவரான ஸ்டீபன் ஜாக்க்ஷை Wetterau இல் உள்ள Altenstadt சிறுநகரில் கிராமசபை தலைவராக தேர்ந்தெடுத்தனர். சிறிது காலத்திற்குப் பின்னர், Rügen னில் உள்ள Sassnitz இல் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி நகர சபை பிரிவு AfD யுடன் இணைந்து செயல்படுவதாகவும், பசுமைக் கட்சி அரசியல்வாதி உவே போர்னர் சாக்சோனியின் உள்ள Gohrisch இல் AfD யுடன் நகராட்சி மன்றப் பிரிவை உருவாக்கியதாகவும் தெரியவந்தது. அதே நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஊடோ வேர்னிட்ஸ், பிராண்டன்பேர்க்கில் நடக்கவுள்ள மாநிலத் தேர்தல்கள் தொடர்பாக AfD யுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியத்தை பற்றி கருத்து தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் மெக்லென்பேர்க் நகரமான Waren/Müritz இல் AfD யின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மே மாதத்தில், இடது கட்சி அரசியல்வாதி இங்கோ பேஷ்கே தலைமையிலான நகர நாடாளுமன்றக் குழு, பிராண்டன்பேர்க் நகரமான Forst இல் ஒரு கட்டிடத் திட்டத்தில் AfDயுடன் ஒத்துழைத்தது. வலதுசாரி தீவிரவாதிகளுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை கூட பேஷ்கே நடத்தினார்.

மே மாதத்தில், பவேரியன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குந்தர் ஷூல்ஸ் AfDயின் வாக்குகளுடன் Höchstadt நகரில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பரில், சமூக ஜனநாயகக் கட்சி தனது இடது கட்சி-பசுமை கூட்டணி கூட்டாணியுடனான அணிகளை முறித்துக் கொண்டு, பேர்லின்-பாங்கோவ் மாவட்ட சட்டசபையில் ஒரு AfD இன் எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

AfD மற்றும் பெயரளவிலான "இடதுசாரி" முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு இப்போது மிகவும் பரவலாக உள்ளது. சமீபத்திய தேர்தலுக்குப் பின்னர் கேரா AfD நகரசபை உறுப்பினர் டீட்டர் லவ்டன்பாக் "CDU எங்கள் வேட்பாளருக்கு வாக்களித்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வாக்குகள் இடது கட்சி அல்லது சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்தும் வந்தன என்பது மிகவும் சாத்தியமானதுதான் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை எட்ஸ்ரோட் மற்றும் AfDக்கு யார் வாக்களித்தார்கள் என்பதைப் கவனத்திற்கெடுக்காது விட்டாலும், இந்த தேர்தல் ஒரு எச்சரிக்கையும் மற்றும் முக்கியமான படிப்பினைகளைக் கொண்டுள்ளது. 1930 களில் இருந்து முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில், ஜேர்மன் ஆளும் வர்க்கம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து அதிகரித்துவரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பிற்கு எதிராக சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவவாதத்தின் கொள்கைகளை அமுல்படுத்த மீண்டும் ஒரு பாசிச கட்சியை நம்பியுள்ளது. கடந்த காலத்தைப் போலவே, பாசிசத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும்.

Loading