முன்னோக்கு

“நம் சமூகம் நோய்வாய்ப்பட்டுள்ளது: லான்செட் இதழ் அமெரிக்க முதலாளித்துவத்தைக் கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை, பிரிட்டிஷ் மருத்துவ இதழ் லான்செட் (The Lancet), ட்ரம்ப் நிர்வாகத்தின் சுகாதாரத்துறை செயல்பாடுகள் மீது, மூன்றாண்டுகளாக செயலாற்றி, அதன் உத்தியோகபூர்வ அறிக்கையை பிரசுரித்துள்ளது.

இந்த அறிக்கை, சரியான விதத்தில், கோவிட்-19 தொற்றுநோயை மையமாக கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயின் போது பத்தாயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் நேரடியாக பொறுப்பாகி இருந்ததையும், கோவிட்-19 மரண விகிதம் பிற அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போல அமெரிக்காவிலும் இருந்திருந்தால் 200,000 க்கும் அதிகமானவர்கள் இப்போது உயிரோடு இருந்திருப்பார்கள் என்பதையும் லான்செட் கண்டறிந்தது.

சான் பிரான்சிஸ்கோவில் வீடற்ரோரின் தற்காலிக தங்குடங்கள் (AP Photo/Noah Berger)

ஆனால், அதை எழுதிய ஒரு டஜன் புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, தீர்க்கமாக ஆராயப்பட்ட லான்செட்டின் அந்த அறிக்கை, ட்ரம்பின் செயல்பாடுகளை மட்டுமே கண்டிப்பதையும் கடந்து செல்கிறது. கோவிட்-19 ஆல் அமெரிக்காவில் நிகழ்ந்த அண்மித்து அரை மில்லியன் உயிரிழப்புகள் "காணாமல் போன அமெரிக்கர்கள்" எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும், இவர்கள் மரணங்கள் கடந்த நான்கு தசாப்த கால சமூக சமத்துவமின்மை அதிகரிப்பைச் சார்ந்ததாகும் என்றது வாதிடுகிறது. இந்த லான்செட் அறிக்கையானது, தொற்றுநோய் மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் இரண்டையுமே அமெரிக்க சமூகத்தின் மிகவும் ஆழ்ந்த தீவிரமான போக்குகளின் விளைவாக சித்தரிக்கிறது.

“திடங்கொண்ட செல்வந்த ஆட்சி, நெறிமுறை தளர்வு மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் போர்வையின் கீழ், அவற்றின் ஆதாயத்திற்காக சந்தைகளின் நெறிமுறைகளைத் தளர்த்தி, அவற்றின் சொந்த இலாபத்திற்காக அரசின் வரவு-செலவுத் திட்டக்கணக்கைச் சரிகட்டி, அதன் செல்வ வளம் மற்றும் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளன,” என்று லான்செட்எழுதியது. “இதுபோன்ற ஆட்சியின் கீழ், செல்வந்த நிறுவனங்களும் குடும்பங்களும் தாராளமாக அரசின் பரிவர்த்தனைகளைப் பெறுகின்றனர்" அதேவேளையில் "வேலை வாய்ப்புகள் தொலைந்து போயுள்ளன.”

லான்செட் பின்வருமாறு நிறைவு செய்கிறது, “ஜனாதிபதி ட்ரம்பின் பல கொள்கைகள் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக முறித்துக் கொண்டவை அல்ல மாறாக அவை அமெரிக்க பொருளாதார, மருத்துவ மற்றும் சமூக கொள்கையின் ஆழ்ந்த மற்றும் நீண்டகால குறைபாடுகளைப் பிரதிபலிக்கும் ஆயுள்கால குறைவின் தசாப்த கால போக்கை வேகப்படுத்த மட்டுமே செய்துள்ளன என்பதே கவலைக்குரிய உண்மையாக உள்ளது. இந்த குறைபாடுகள் ஆயுள்கால குறைவில் மட்டும் வெளிப்படவில்லை … மாறாக சமூக வர்க்கத்திடையே மரண விகிதத்தில் இருக்கும் பெரும் பிளவுகளிலும் வெளிப்படுகின்றன.

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை மையத்தில் கொண்ட, கோவிட்-19 தொற்றுநோயின் பாரிய உயிரிழப்புகள், அமெரிக்காவில் ஆயுள்கால குறைவை, மிக முக்கியமாக, வாழ்வின் ஆயுள்காலத்தை வர்க்க நிலைப்பாடுகளில் வரிசைப்படுத்துவதை, தீவிரப்படுத்தி உள்ளது.

“ஜனவரி 2017 ட்ரம்ப் பதவியேற்பின் போது, அமெரிக்க மக்களின் உடல்நலம் ஏற்கனவே கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது,” என எழுதுகின்ற லான்செட், “அமெரிக்காவில் சராசரி ஆயுள்காலம் 2014 மற்றும் 2018 க்கு இடையே 78.9 இல் இருந்து 78.7 ஆக குறைந்துவிட்டது, இது முதலாம் உலக போர் மற்றும் 1918 சளிக்காய்ச்சல் தொற்றுநோய்க்குப் பின்னர் முதல் மூன்றாண்டு கால ஆயுள் குறைவில் இந்த காலகட்டம் உள்ளடங்கும்,” என்று குறிப்பிட்டது.

“1980 களில் இருந்து, சமூக மற்றும் பொருளாதார வர்க்கங்களுக்கு இடையிலான சமநிலையின்மை, உயர்-சம்பள உற்பத்தி வேலைகள் தொலைந்து போனதால், அதிகரித்துள்ளது. … பங்குச் சந்தை அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு மத்தியில் … அமெரிக்காவில் வாழும் பலர் உத்தரவாதமில்லாத வேலைகளுக்குள் தள்ளப்பட்டனர், அவை குறைந்த சம்பளமும் பற்றாக்குறையான சலுகைகளையும் வழங்கின. விரிவடைந்து வரும் வருமான சமத்துவமின்மை ஆரோக்கியத்தில் சமத்துவமின்மையை விரிவாக்கி உள்ளது.”

அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு கட்சிகளும் ஒரு முன்னணி பாத்திரம் வகித்துள்ள இந்த நிகழ்ச்சிப்போக்கை குறித்த ஒரு வரலாற்று பகுப்பாய்வை லான்செட் அறிக்கை வழங்குகிறது. “பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை முகங்கொடுத்து, (1977-81 இல் பதவியில் இருந்த) ஜனாதிபதி ஜம்மி கார்டர் செலவின வெட்டுக்கள் மூலமாக அரசு பற்றாக்குறையைக் குறைக்க நகர்ந்தார்.”

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பில் கிளிண்டன் "நவதாராள, பெருநிறுவன-சார்பு திட்டநிரலின் முக்கிய அம்சங்களைத் தழுவினார்.” கிளிண்டன் "வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு" நெறிமுறைகளைத் தளர்த்தியதுடன், “மருத்துவச் சலுகைகள் மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் மீது கால வரம்புகளையும் ஏனைய கட்டுப்பாடுகளையும் திணித்தார்.” கிளிண்டனின் கீழ், “பங்கு விலைகள் வேகமாக அதிகரித்தன,” அதேவேளையில் "வருவாய் மற்றும் செல்வந்த சமத்துவமின்மைகள் விரிவடைந்தன.”

பராக் ஒபாமாவின் மருத்துவக் கவனிப்பு திட்டங்கள் "தசாப்த காலத்திற்குச் சந்தையை நோக்கி நோக்குநிலை கொண்ட சீர்திருத்தங்களை மீளத் திணித்தன, இவை இலாபத்தை அடிப்படை செயல்திறன் அளவீடாக மாற்றி, மருத்துவக் கவனிப்பை வியாபாரத்திற்குள் மூழ்கடித்து, அதிகரித்தளவில் முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தன.

“2014 மற்றும் 2017 க்கு இடையே அமெரிக்க மக்களின் வாழ்க்கை கால குறைவும், 2018 இல் வாழ்நாளில் ஒரு சிறிய அதிகரிப்பும், கணிசமானளவுக்கு ஊடக கவனத்தை ஈர்த்தது. இருந்தாலும், இத்தகைய சமீபத்திய போக்குகள் மீதான ஒருமுனைப்பு, அமெரிக்கா எந்தளவுக்கு ஏனைய உயர்-வருவாய் நாடுகளுக்குப் பின்னால் பின்தங்கி உள்ளது என்பதையும் மற்ற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் முக்கியமானதாக கண்டு கொள்ளவில்லை. 1980 இல் அமெரிக்காவில் ஆயுள்காலம் என்பது உயர்-வருவாய் நாடுகளிடையே சராசரியாக இருந்தது, 1995 வாக்கில், அது ஏனைய ஜி7 நாடுகளின் சராசரியை விட 2.2 ஆண்டுகள் குறைந்தது, 2018 வாக்கில் இந்த இடைவெளி 3.4 ஆண்டுகளாக விரிவடைந்தது.”

அமெரிக்காவில் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையின் விளைவாக காலத்திற்கு முன்கூட்டியே மரணித்துள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறித்து அந்த அறிக்கை ஓர் அதிர்ச்சியூட்டும் தீர்மானத்திற்கு வருகிறது. “இந்த வித்தியாசத்தின் அளவை மறைந்து போன அமெரிக்கர்களின் எண்ணிக்கையோடு அளவீடு செய்யலாம் — அதாவது, அமெரிக்காவில் வயதுக்கேற்ற மரண விகிதங்கள் ஏனைய ஆறு ஜி7 நாடுகளின் சராசரிக்குச் சமமாக இருந்திருந்தால் இந்த அமெரிக்கர்கள் இப்போது உயிரோடு இருந்திருக்கலாம். இந்த அளவீட்டின்படி, 2018 இல் மட்டும், 461,000 அமெரிக்கர்கள் மறைந்து போயிருக்கிறார்கள், இந்தவொரு வருடாந்தர புள்ளிவிபரம் 1980 இல் இருந்து அதிகரித்து வந்துள்ளது.

“அமெரிக்காவில் ஆயுள்காலம் குறைந்து வருவது, பருவ வயதடைந்தோர் மத்தியில் வருவாய் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் அதிகரித்து வரும் இறப்பு விகித இடைவெளிகளுடன் பொருந்தி உள்ளது. இத்தகைய இறப்பு விகித சமத்துவமின்மை விரிவடைந்து வரும் பொருளாதார சமத்துவமின்மையையும், அத்துடன் மக்கள்தொகையில் செல்வந்தர்களின் 10 ஆம் அடுக்குகளுக்கு அதிகரித்து வரும் வருவாய்களையும் (மற்றும் மிகப்பெரும் செல்வந்தர்களுக்கு மிகப்பெரியளவில் இலாபங்களையும்) காட்டுகின்றன, ஆனால் அடிமட்ட 50 சதவீதத்தினரின் நிஜமான வருமானம் மந்தமாகி உள்ளது. 2014 வாக்கில், ஆண்களில் 1% மிகப்பெரும் செல்வந்தர்களின் ஆயுள்காலம் மிக வறிய 1% மக்களின் ஆயுள்காலத்தை விட 15 ஆண்டுகள் அதிகமாக இருந்தது.

“2000 மற்றும் 2014 க்கு இடையே, வருவாய் பகிர்வில் மேல் பாதியில் இருந்த பருவ வயதடைந்தோர் ஆயுள்காலம் இரண்டாண்டுகளுக்கும் அதிகமாக அதிகரித்திருந்தது, அதேவேளையில் வருவாய் பகிர்வில் கீழ் பாதியில் இருந்தவர்களின் ஆயுள்காலம் சிறிதளவே அதிகரித்திருந்தது அல்லது எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.”

லான்செட் இவ்வாறு நிறைவு செய்கிறது, “இலாபங்களைப் பெருக்குவதற்காக பல்வேறு பொது சேவைகளைத் தனியார்மயமாக்க மற்றும் பெருநிறுவனங்களுக்கான நெறிமுறைகளைத் தளர்த்த கோரும் நவதாராளவாத கொள்கைகளின் மூன்றுக்கும் அதிகமான தசாப்தங்களின் உச்சக்கட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பிரதிநிதித்துவம் செய்கிறது.

“ட்ரம்புக்கு முன்பிருந்தவர்களின் தோல்விகளே ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவின. நவதாராளவாத கொள்கைகளை நோக்கிய நான்கு தசாப்த கால நீண்ட பயணம் பெருநிறுவன தனியுரிமைகளைப் பலப்படுத்தி இருந்தது. … பணக்காரர்கள் இன்னும் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள் அதேவேளையில் அவர்களின் வரிகள் பாதியாக குறைக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்களின் சம்பாத்தியம் மந்தமாகி இருந்தது, சுகாதார திட்டங்கள் சுருங்கின, சிறைவாசிகள் பெரிதும் அதிகரித்தனர், அரசு நிதித்தொகைகள் மருத்துவத்துறை முதலீட்டாளர்களைக் கொழிக்க செய்த போதும் கூட, மில்லியன் கணக்கானவர்களால் மருத்துவக் கவனிப்புக்குச் செலவிட முடியாமல் இருந்தது.

“கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகளும் இடப்பெயர்வுகளும் அமெரிக்காவின் சமூக மற்றும் மருத்துவ ஒழுங்கமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்தி உள்ளது,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“நம் பொருளாதாரம் வளர்ந்தாலும் அமெரிக்கர்களின் உடல்நலம் சீரழிந்து வருகிறது,” என்று அந்த குழுவின் சக தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஸ்டீஃப் வூல்ஹாண்டர் கூறுகிறார். “தேசிய செல்வவளத்திலிருந்து முன்பில்லாதளவில் ஆரோக்கியத்தைப் பிரித்துவிட்டமை, நம் சமூக நோய்வாய்ப்பட்டது என்று சமிக்ஞை செய்கிறது. செல்வந்தர்கள் தழைத்தோங்கினாலும், பெரும்பாலான அமெரிக்கர்கள் பொருளாதார ரீதியிலும் மற்றும் மருத்துவரீதியிலும் அஸ்திவாரத்தையே இழந்திருக்கிறார்கள்.”

அந்த அறிக்கை அதன் அரசியல் தீர்மானங்களில், வரவிருக்கும் பைடென் நிர்வாகம் அதற்கு முன்பிருந்தவர்களின் கொள்கைகளுடன் அடிப்படையிலேயே முறித்துக் கொள்ளுமாறு அதை சமாதானப்படுத்த நோக்கம் கொள்கிறது. ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்பதை அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களே — அதாவது ஒரு தசாப்தம் மாற்றி தசாப்தத்தில் ஜனநாயகக் கட்சியினர் செல்வந்த மேலடுக்கு மீளபகிர்வு செய்யும் முனைவுக்குத் தலைமை தாங்கியிருந்தனர் என்பதே— தெளிவுபடுத்துகிறது. சொல்லப் போனால் 2008 வங்கி பிணையெடுப்பை ஒழுங்கமைக்க உதவுவதில் பைடென் ஒபாமவின் கீழ் துணை ஜனாதிபதியாக இருந்தார்.

ஒரு திறமையான மருத்துவரைப் போல இந்த லான்செட் அறிக்கை அமெரிக்காவினது சமூக நோயின் அறிகுறிகளைத் திறமையாக பட்டியலிடுகிறது. ஆனால் டாக்டர் ஸ்டீஃப் வூல்ஹாண்ட்லர் வலியுறுத்துவதைப் போல, அமெரிக்க சமூகம் நோய்வாய்ப்பட்டுள்ளது என்றால் அதற்குரிய மருந்து பைடென் நிர்வாகம் கிடையாது, அது கிளிண்டன் அல்லது ஒபாமா நிர்வாகத்திலிருந்து வேறுபட்டதல்ல. அவர்கள் அடையாளம் கண்டுள்ள நோய் இறுதிக்கட்ட நெருக்கடி. இதற்கான தீர்வை அடிப்படையிலேயே ஒரு புதிய வித்தியாசமான அரசியல் இயக்கத்தில் காணமுடியும் — அதாவது அது சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.

Loading