மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டொனால்ட் ட்ரம்ப் மீதான செனட் சபை வழக்கின் முழுமையான முதல் நாள் வாதத்தில், அவை குற்றவிசாரணை நிர்வாகிகள் ஜனவரி 6 அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தயாரிப்பு செய்வதிலும் ஒழுங்கமைப்பதிலும் முன்னாள் ஜனாதிபதி வகித்த மத்திய பாத்திரத்தின் மீது மறுக்க முடியாத சித்திரம் போன்ற தெளிவான ஆதாரத்தை தாக்கல் செய்தார்கள். ட்ரம்ப் ஓர் அரசியல் குற்றவாளியாக அம்பலமாகி நிற்கிறார், அந்நாளில் ஐந்து பேர் உயிரிழப்பதற்கு அவர் காரணமாக இருந்தார் என்பதோடு இன்னும் பெரிய இரத்தக்களரியைத் தூண்டுவதில் இருந்து நூலிழையில் தோல்வியுற்றிருந்தது.
ட்ரம்ப் முன்கூட்டியே தேர்தலின் சட்டபூர்வத்தன்மை மீது சந்தேகங்களை விதைத்தார், பின்னர் பைடெனிடம் அவர் உறுதியாக தோல்வியடைந்து வருகிறார் என்பதை வாக்கு எண்ணிக்கை எடுத்துக்காட்டியவுடன் அந்த முடிவுகளை மறுத்தார், மேலும் இறுதியாக பதவியைத் தக்க வைப்பதற்கான அவரின் கடைசி வாய்ப்பாக தேர்வுக் குழு வாக்குகளைக் காங்கிரஸ் சபை உத்தியோகபூர்வமாக எண்ணும் தினமான ஜனவரி 6 ஐ இலக்கு வைத்தார் என்று முந்தைய நாள் பொதுவான வார்த்தைகளில் விவரிக்கப்பட்டிருந்த அந்த வழக்கை இந்த ஆவணம் விரிவாக ஆவணப்படுத்தியது.
துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் தப்பிப்பதற்காக இரகசிய சேவை முகவர்களால் நாடாளுமன்ற கட்டிடத்தின் இரகசிய இடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதையும், உள்ளே நுழைந்து வந்து கொண்டிருக்கும் கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக செனட்டர் மிட் ரோம்னியை நாடாளுமன்ற கட்டிட பொலிஸ்காரர் ஒருவர் வேறு திசையில் திசைதிருப்புவதையும், செனட்டர் சக் ஷுமர் தாக்குதலை தவிர்ப்பதற்காக தனது பாதுகாப்பு குழுவுடன் அவசரமாக பின்வாங்கி கொள்வதையும் இதற்கு முன்னர் இதுவரையில் எந்த காணொளியும் காட்டியிருக்கவில்லை. சபாநாயகர் நான்சி பெலொசியின் பீதியுற்ற பணியாளர்கள் பூட்டிய மாநாட்டு அறையில் ஒரு மேசைக்கு கீழே ஒளிந்து கொண்டிருக்க, அந்த கும்பல் வெளியே ஆக்ரோஷமாக சீறிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் செல்போனில் கிசுகிசுத்த உரையாடல்களை சபை நிர்வாகிகள் ஒலிக்க செய்து காட்டினார்கள்.
இப்போது மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கும் இந்த பாரிய பயங்கர விபரங்களை ஒளிபரப்பு நிறுவனங்களும் கேபிள் செய்தி வலையமைப்புகளும் இடைவிடாது காட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில், இவை பொதுமக்கள் எண்ணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ஆதாரம் எதன் மீது முன்வைக்கப்பட்டுள்ளதோ அந்த அரசியல் கட்டமைப்பு தீர்க்கமான முக்கியத்துவம் பெறுகிறது. சபை ஜனநாயகக் கட்சியினரால் அபிவிருத்தி செய்யப்பட்டு, பெருநிறுவன ஊடகங்களால் மீளகாட்டப்பட்டு வரும் இது, ஜனவரி 6 சம்பவங்களின் இன்றியமையா தன்மையை முற்றிலுமாக மூடிமறைக்கிறது.
ஜனநாயகக் கட்சியினர் கூற்றுக்களின்படி, ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தோல்வியை உறுதி செய்யும் தேர்வுக் குழு வாக்கு எண்ணிக்கையைத் தடுப்பதற்காக முற்றிலுமாக ஜனவரி 6 சம்பவங்கள் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட முயற்சியாக இருந்தது. அவர் வெள்ளை மாளிகைக்கு வெளியே அவர் ஆதரவாளர்களின் பேரணியை ஒழுங்கமைத்து, காங்கிரஸ் சபையை நோக்கி அணிவகுக்க அவர்களைத் தூண்டிவிட்டு, பின்னர் அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை நொறுக்கிய போது அங்கீகரிக்கும் வகையில் அதை பின்னால் அமர்ந்து பார்த்தவாறு தேர்வுக் குழு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியிருந்தார். அன்றைய நாள் சம்பவங்களுக்கான மொத்த பொறுப்புக்கும் ட்ரம்ப் தான் காரணம், ட்ரம்ப் மட்டுமே காரணம் என்றாக்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியினர் ஜனவரி 6 சம்பவங்களை ஓர் அரசியல் சம்பவமாக அணுகவில்லை. குடியரசுக் கட்சியை ஓர் அமைப்பாக சுட்டிக்காட்டப்படவில்லை, சொல்லப் போனால் ஜனநாயகக் கட்சியினரோடு சேர்ந்து, சமஅளவில் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கையாளப்பபடுகிறது.
குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் குறித்து, மொத்தத்தில் 150 க்கும் மேலானவர்களைக் குறித்து, ஜனநாயகக் கட்சியினர் ஒன்றும் கூறவில்லை, இவர்கள் —நாடாளுமன்ற சம்பவங்களுக்கு ஒரு சில மணி நேரத்திற்குப் பின்னர்!— ட்ரம்பின் குறிப்பைப் பின்பற்றி, பைடென் வென்ற மாநிலங்களின் தேர்வுக் குழு வாக்குகளை நிராகரிக்க வாக்களித்தார்கள். அவர்கள் ட்ரம்பின் உடந்தையாளர்கள் மற்றும் சக-சதிகாரர்கள் என்ற அடித்தளத்தில் செனட் சபை நீதிக்குழுவிலிருந்து செனட்டர்கள் டெட் க்ரூஸ் மற்றும் ஜோஸ் ஹாவ்லெயை விலக்கக் கோருவதற்குத் துல்லியமாக அவர்களுக்குரிய உரிமைகளை அவர்கள் பெற்றிருந்தார்கள். காங்கிரஸ் சபை அங்கீகரிப்பை ஒட்டுமொத்தமாக முடக்கும் முயற்சியில் அந்த கும்பல் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்த போதே கூட, அதை மேற்கொண்டு தாமதிப்பது குறித்து விவாதிப்பதற்காக ஜனவரி 6 மதியம் ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்திருந்த செனட்டர் டோம்மி டூபர்வில் விசயம் என்ன ஆவது?
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் கூட மற்றும் தேர்தல் முடிவுகள் மீதான எல்லா சட்ட சவால்களும் இரத்து செய்யப்பட்டு விட்ட பின்னரும் கூட, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டிலும் பரந்த பெரும்பான்மை குடியரசுக் கட்சியினர், தேர்தல் முடிவை ட்ரம்ப் ஏற்றுக் கொள்ள மறுத்ததை நியாயப்படுத்தினர். ஒரு திருடப்பட்ட தேர்தல் என்ற அவரின் போலி வாதங்களை நியாயப்படுத்திய அவர்கள், அவ்விதத்தில் ஜனவரி 6 சம்பவங்களை உருவாக்கிய பிரச்சாரத்திற்கு எரியூட்ட உதவினார்கள்.
ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் முன்வைத்த இந்த வழக்கு, ட்ரம்பைக் குற்றவாளியாக்க செனட் சபை குடியரசுக் கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தும் விதத்தில் மற்றும் 2024 இல் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட தகுதி இழக்கச் செய்யும் விதத்தில், அவர்களை நோக்கி அனுதாபகரமாக தார்மீக முறையீடு செய்வதாக சுருங்கி போய்விட்டது. இந்த முறையீடு வெற்றி பெற்றாலும் கூட, ஒரு எதிர்கால பிரச்சாரத்திலிருந்து ட்ரம்பைத் தடுப்பதென்பது, அமெரிக்க அரசியலில், குடியரசுக் கட்சியில் இப்போது மேலோங்கி உள்ள சக்தி வாய்ந்த பாசிச போக்கின் எழுச்சியுடன் ஒப்பிட்டால், ஒரு மிகச் சிறிய பிரச்சினையாகும்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி அதன் நோக்கங்களில் வென்றிருந்தால், ட்ரம்ப் காலவரையின்றி பதவியில் நீடிப்பதற்கு அடித்தளமாக அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபித்திருப்பார் என்பது ஜனநாயகக் கட்சியினருக்கும் நன்கு தெரியும். ட்ரம்ப் மீண்டும் தேர்வாகும் முயற்சியை உறுதியாக நிராகரித்திருந்த வாக்காளர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், குடியரசுக் கட்சி அதுபோன்றவொரு விளைவை ஏற்றுக் கொண்டிருக்கும்.
ஜனநாயகக் கட்சியினர் அதுபோன்ற விசயங்களைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் பேசும் மொழியே கூட அதை எடுத்துக்காட்டுகின்றன. அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஒருபோதும் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக குறிப்பிடப்படுவதில்லை. ட்ரம்பை ஓர் எதேச்சதிகார ஆட்சியாளராக நிறுவுவதற்கான இலக்கு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அந்த தாக்குதல்தாரிகளின் தாக்குமுகப்பாக பாசிசவாத குழுக்கள் பாத்திரம் வகித்தன என்பதே கூட குறைத்துக் காட்டப்படுகிறது — Proud Boys, Oathkeepers மற்றும் இதர பாசிச குழுக்களின் நடவடிக்கைகளைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ள விரிவான விவரங்கள் தவிர்க்க முடியாதவை. தலைமை குற்றவிசாரணை நிர்வாகி ஜேம் ராஸ்கின் புதன்கிழமை அவரின் ஆரம்ப அறிவிக்கையில் பின்வருமாறு அறிவித்தார்: “அந்த கும்பலின் சித்தாந்த உள்ளடக்கம் என்ன என்பது எதையும் வேறுபடுத்திவிடாது.” உண்மையில், ட்ரம்ப் தன்னை ஒரு பாசிச ஆட்சியாளராக நிறுவ முயன்றதால், அவர் பாசிசவாத தலைமையிலான கும்பலை அணித்திரட்டுவதன் மூலமாக அதிகாரத்தைத் தக்க வைக்க முயன்றார் என்ற “சித்தாந்த உள்ளடக்கம்" மிகவும் முக்கியத்துவமானதாகும்.
அந்த கும்பலால் நாடாளுமன்ற கட்டிடத்தில் சிக்கியிருந்த காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க, குற்றவிசாரணை நிர்வாகிகள் ஒருவர் மாற்றி ஒருவர் "நமது முப்படை தலைமை தளபதியின்" தோல்வி என்று புலம்பிய நிலையில், ஜனநாயகக் கட்சியினர் அவர்களே கூட அவர்களின் சொந்த விளக்கங்களில் ட்ரம்ப்-சார்பு கும்பலின் மொழிகளை எதிரொலித்தனர்.
அமெரிக்க அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள இந்த சொல் சிவில் அதிகாரத்திற்கு அடிபணிந்தவர்களாக இராணுவத்தின் பங்கை நிறுவுகிறது: மிக உயர்ந்த சிவில் அதிகாரி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, அமெரிக்க இராணுவத்தின் மீது "தலைமைத் தளபதியாக" பணியாற்றுகிறார். ஜனாதிபதியானவர் ஒட்டுமொத்தமாக அமெரிக்க மக்களின் "தலைமை தளபதி" இல்லை என்பதை விட்டுவிட்டாலும், அவர் காங்கிரஸ் சபையின் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நிர்வாகிகள், மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் "தலைமை தளபதி" இல்லை. அதுபோன்று வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஜனாதிபதியை ஓர் அரசராக அல்லது எல்லா அதிகாரமும் கொண்ட ஆட்சியாளராக ஆக்கும் என்பதோடு, சொல்லப் போனால் ஜனவரி 6 கும்பல் "அவர்களின்" தலைமை தளபதியான ஜனாதிபதியின் உத்தரவுகள் பேரில் தான் காங்கிரஸ் சபையைத் தாக்கியதாக அவர்களின் கூற்றை நியாயப்படுத்தவே சேவையாற்றும்.
ட்ரம்பின் சக-சதிகாரர்களை மூடிமறைப்பதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சி குடியரசு கட்சி வரை மட்டும் செல்லவில்லை, மாறாக நிர்வாக பிரிவில் உள்ளவர்கள் மற்றும் குறிப்பாக இராணுவம் வரையில் நீள்கிறது. சபை நிர்வாகிகளின் விளக்கங்கள் பதவியில் தங்கியிருப்பதற்காக கடந்த ஆறு மாதங்களாக அண்மித்து ட்ரம்பின் ஒவ்வொரு நாள் முயற்சிகளையும் கால வரிசையாக வழங்கின என்றாலும், அவர்கள் ஒரு நடவடிக்கையை முற்றிலுமாக தவிர்த்திருந்தனர்: அதாவது, கடந்த மே மாதம் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களின் அலைக்கு எதிராக துருப்புகளை அணித்திரட்ட எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பரை ட்ரம்ப் பணியிலிருந்து நீக்கி, ஓர் ஓய்வு பெற்ற சிறப்புப்படை கர்னலான கிறிஸ்டோபர் மில்லரை அவர் இடத்தில் பிரதியீடு செய்தமை, மற்றும் தேர்தலை ஒட்டி திடீரென பென்டகனுக்குள் ஏனைய ட்ரம்ப் விசுவாசிகள் இடை நுழைக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்திருந்தனர். இது ஜனவரி 6 சம்பவங்களால் அச்சுறுத்தப்பட்ட ஓர் அரசியல் நெருக்கடியைப் போன்றவொரு சம்பவத்தில் ஆயுதப்படைகளின் கட்டுப்பாடு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
இந்த இரட்டை வேஷ அணுகுமுறை —அதாவது ட்ரம்பைப் பரபரபாக்கும் அதேவேளையில் குடியரசுக் கட்சியினர் சம்பந்தமாக மழுப்புவது— சபை ஜனநாயகக் கட்சியினரின் மிகவும் துல்லியமான விளக்கங்களையே கூட ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. சான்றாக, வேர்ஜின் தீவுகள் பிரதிநிதி ஸ்டாசெ பிளாஸ்கெட் ஜனவரி 6 அணிவகுப்பைத் தயார் செய்வதில், அதுவும் அந்த போராட்டத்திற்கான தேதியைத் தீர்மானிப்பதிலும் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிய அதன் அணிவகுப்பு வரிசையைத் தீர்மானிப்பதிலும் கூட, ட்ரம்ப் வகித்த பாத்திரத்தை விளக்கினார். அந்த அணிவகுப்பை நாடாளுமன்ற கட்டிடம் மீதான முற்றுமுதலான தாக்குதலாக மாற்றுவதற்காக இணையத்தில் பரவ விடப்பட்ட திட்டங்களைக் குறித்தும், அவை வெள்ளை மாளிகை சமூக ஊடக செயல்பாட்டு பிரிவு மற்றும் தனிப்பட்ட ரீதியில் ட்ரம்பினாலும் கூட கண்காணிக்கப்பட்டு வந்தது என்பதையும் அப்பெண்மணி சுட்டிக் காட்டினார். “மாபெரும் ஆயுதக் குழு" ஐ (“MAGA militia”) நிறுவுவதற்கு அழைப்பு விடுக்கும் சமூக ஊடக சேதிகளையும், மற்றும் "நாம் விரும்பும் தாக்கத்தைப் பெறுவதற்கு" "நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பது போன்ற நிஜமான தந்திரோபாய வெற்றி" அவசியமாகும் என்ற அறிவிப்புகளையும் அவர் மேற்கோளிட்டார்.
ஆனால் இந்த விபரங்கள் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறது: ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை இத்தகைய சமூக ஊடக கருத்துக்களைக் கண்காணித்து கொண்டிருந்தது என்றால், இதையே FBI மற்றும் ஏனைய சட்ட ஒழுங்கு மற்றும் உளவுத்துறை முகமைகளும் செய்து கொண்டிருக்கவில்லையா? நாடாளுமன்ற கட்டிட தாக்குதலுக்கான தயாரிப்புகள் மிகவும் பகிரங்கமாக இருந்தன என்கின்ற நிலையில், பெருநிறுவன ஊடகங்களில் கூட வெளியாகி இருந்த நிலையில், அதை தடுக்க எதுவும் செய்யப்படவில்லை என்பது எப்படி சாத்தியமாகும்? நாடாளுமன்ற பொலிஸ் ஏன் இந்தளவுக்கு தயாரிப்பின்றி இருந்தார்கள்? அந்த அச்சுறுத்தலான தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க உதவியாக ஏன் கூடுதல் படைகள் நிலைநிறுத்தப்படவில்லை மற்றும் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை?
ஜனநாயகக் கட்சி உண்மையிலேயே ஜனநாயக பாதுகாப்பிற்கு ஏதேனும் பொறுப்பேற்று இருந்திருந்தால், பைடென் நிர்வாகம் அரசியலமைப்பைத் தூக்கியெறிவதற்கான குற்றகரமான சதிக்காக, ட்ரம்பையும், அவருக்குத் துணைபோன குடியரசுக் கட்சியினரையும் மற்றும் காங்கிரஸ் அவருக்கு உதவியவர்களையும், மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தில் உள்ள எண்ணற்ற அதிகாரிகளையும், அத்துடன் அவர்களுக்கு நிதியுதவி வழங்கி ஆதரவாளர்களையும், விசாரித்து வழக்கின் கீழ் கொண்டு வருவதை நியாயப்படுத்தி இருக்கும்.
ஆனால் அவர்கள் துல்லியமாக இதற்கு எதிராக செய்ய முயன்றார்கள். புதன்கிழமை நடந்த எட்டு மணி நேர விசாரணை நடைமுறைகளில் பல தருணங்களில், ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் அந்த வழக்கு துணை ஜனாதிபதி மைக் பென்ஸிற்கான விளம்பரத்தைப் போல ஒலித்தது. ஜனநாயகக் கட்சி குற்றவிசாரணை நிர்வாகி ஜோகின் காஸ்ட்ரோ அறிவிக்கையில், “துணை ஜனாதிபதி என்பவர்… அவரின் பதவிப்பிரமாணத்தை, அவர் நேர்மையை, அவர் கடமையைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு மனிதர், மேலும் பெரும்பாலும் எல்லோருமே அரசியலமைப்புக்கான அவரவர் கடமையைத் தாங்கிப் பிடிக்கிறோம். மைக் பென்ஸ் இந்நாட்டு துரோகி இல்லை,” என்றார்.
எண்ணற்ற குற்றங்களில் ட்ரம்புக்குப் பின்னால் நின்றிருந்த கிறிஸ்துவ அடிப்படைவாதி மற்றும் வெறித்தனமான ஒரு வலதுசாரியை நோக்கி இருந்த இந்த அர்த்தமற்ற பாராட்டு, குடியரசுக் கட்சிக்குள் பென்ஸை ட்ரம்புக்கு ஒரு மாற்றீடாக உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது. எல்லாவற்றும் மேலாக ஜனநாயகக் கட்சியினர் விரும்புவது என்னவென்றால், வோல் ஸ்ட்ரீட் கோரும் வலதுசாரி அரசியல் வேலைத்திட்டம் அடிமட்டத்திலிருந்து அதிகரித்த சமூக எதிர்ப்பைச் சந்திப்பதால், அதை நிறைவேற்ற வழிவகைகளை வழங்கும் விதத்தில், அவர்கள் ஒத்துழைக்கக் கூடிய ஒரு "பொறுப்பான" குடியரசுக் கட்சியை விரும்புகிறார்கள்.
ஒரு முயற்சிக்கப்பட்ட பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் குடியரசுக் கட்சி உடந்தையாய் இருந்ததை ஸ்தாபிப்பது அதை அழித்து விடக்கூடும். “இருகட்சியின் ஒருமனதான" ஒத்துழைப்பு மூலமாக கொள்கையை அமைக்கும் விதத்தில், குடியரசுக் கட்சியை ஒரு "பலமான" எதிர்கட்சியாக பேணுவதே அவரின் அரசியல் முன்னுரிமை என்பதை பைடென் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். செனட் சபை வழக்கு அமெரிக்க வரலாற்றிலேயே ஜனநாயகத்திற்கு மிகவும் தீவிரமான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்ற போதும், அதன் மீது கவனம் செலுத்தப் போவதில்லை என்றும் கூட அவர் கூறுகிறார்.
ஜனநாயகக் கட்சியினர் நடத்தும் இந்த குற்றவிசாரணை வழக்கு அக்கட்சி பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை முகமைகளின் ஒரு கட்சியாக, ஜனநாயகக் கட்சி, ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் உள்ள சமூக அரசியல் சக்திகளை எந்தவிதத்திலும் உண்மையிலேயே அம்பலப்படுத்துவதை எதிர்க்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் வகித்த பாத்திரத்தை விரிவாக அம்பலப்படுத்துவது ஜனவரி 6 சம்பவங்கள் மீதான ஒரு விசாரணையில் முதல் படியாக இருக்கும். ஆனால் ஜனநாயகக் கட்சி இதே பாதையில் சென்றால், இதுவே கடைசி படியாகவும் ஆகிவிடும். தொழிலாள வர்க்கம், அதன் ஜனநாயக உரிமைகள் மீதான பேராபத்தான அச்சுறுத்தலை இவ்வாறு அரசியல்ரீதியில் மழுப்புவதை நிராகரித்து எதிர்க்க வேண்டும். ட்ரம்ப் ஓர் எதேச்சதிகார சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க நோக்கம் கொண்டிருந்தார், அவருடன் நிறைய உடந்தையாளர்களும் சக சதிகாரர்களும் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அம்பலப்படுத்தப்பட்டு நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.