மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இன்று தொடங்கும், டொனால்ட் ட்ரம்ப் மீதான செனட் சபை குற்றவிசாரணை வழக்கானது, தேர்தல் முடிவுகளை மாற்றி வன்முறையாக காங்கிரஸ் சபையை ஒடுக்கி, தனிமனித சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதியால் முயற்சிக்கப்பட்ட ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியான, அமெரிக்க வரலாற்றிலேயே முன்நிகழ்ந்திராத ஒரு சம்பவத்திற்கு வெளியே நடக்கிறது. இந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் போது, செனட்டர்கள், பிரதிநிதிகளின் உயிர்களும் மற்றும் துணை ஜனாதிபதியின் உயிரே கூட அச்சுறுத்தலில் இருந்தன. பல பேர் கொல்லப்பட்டனர்.
கேள்விக்கிடமின்றி “பெரும் குற்றங்களுக்கும் சிறிய தவறுக்களுக்காகவும்" மட்டும் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி அல்ல. அவர் மிகத் தீவிர தன்மையோடு குற்றங்களைச் செய்துள்ளார். அவர் மீதான இந்த குற்றவிசாரணையைத் தொடர்ந்து, கிரிமினல் குற்றங்கள், நீதி விசாரணைகள், தண்டனை மற்றும் ஆயுள்கால தண்டனை ஆகியவற்றுடன் அவர் மீதான குற்றப்பத்திரிகையாக பின்தொடர வேண்டும். அவருடன் இணைந்திருந்த பல சக-சதிகாரர்களும் அடையாளம் காணப்பட்டு, குற்றவியல் விசாரணை நடைமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, ட்ரம்புடன் சேர்ந்து உயர்-பாதுகாப்பு சிறைக்கூடங்களில் அடைக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த செனட் சபை விசாரணையின் முடிவு இதுவாக இருக்காது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை மேலாளர்களது 80 பக்க சுருக்க உரை, ட்ரம்ப் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குத் தயாரிப்பு செய்ய மாதக் கணக்கில் பிரச்சாரம் செய்திருந்தார் என்று, உள்ளது உள்ளவாறே ஒரு விரிவான விபர அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள போதும், செனட் சபையில் கட்டுப்பாட்டை கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியினரோ —ஜனாதிபதி பைடெனைக் குறித்து கூற வேண்டியதே இல்லை— இந்த சண்டைக்கு விருப்பமின்றி உள்ளனர். குடியரசுக் கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் ட்ரம்பின் சதியை நேரடியாக ஆதரித்து அல்லது ஒத்துழைத்த போதும், ஜனநாயகக் கட்சியினர் இந்த வலதுசாரி கேடுகெட்டவர்கள் முன்னால் தொடர்ந்து பணிவடக்கத்துடன் தலைவணங்கி, அவர்களை "நண்பர்கள்" என்று குறிப்பிடுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினரின் இந்த விசாரணை மூலோபாயம் எந்தளவுக்கு குடியரசுக் கட்சி செனட்டர்களை நோக்கி திரும்பி உள்ளது —அதாவது, ட்ரம்பைக் குற்றவாளியாக தீர்ப்பளிக்க அவர்களை இணக்குவிப்பதில்— என்றால், ட்ரம்ப் தலைமையிலான அந்த குற்றகரமான சதியையும், இராணுவ-பொலிஸ் எந்திரம் மற்றும் பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் உட்பட அதில் சம்பந்தப்பட்டிருந்த அரசின் பிரிவுகளையும் ஒட்டுமொத்த நாட்டுக்கு முன்னால் அம்பலப்படுத்துவதே அதன் மத்திய நோக்கமாக இருந்திருக்க வேண்டியதை இந்த விசாரணை நடைமுறைகள் தட்டிக்கழிக்கும் அளவுக்கு உள்ளன.
இந்த சதி நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட, பதிலளிக்கப்பட வேண்டிய, பல வெளிப்படையான கேள்விகள் உள்ளன. பின்வருவன அதில் உள்ளடங்குகின்றன:
• ஒரு வன்முறை தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும், நாடாளுமன்ற பொலிஸ், டி.சி. தேசியப் படை, FBI மற்றும் மத்திய அரசின் இதர பாதுகாப்பு படைகளும் இந்தளவுக்கு முற்றிலும் தயாரிப்பின்றி இருந்தன, இது எவ்வாறு சாத்தியமானது?
• Proud Boys மற்றும் Oath Keepers போன்ற பாசிசவாத ஆயுதக் குழுகள் சம்பந்தப்படும் வன்முறை குறித்து நன்கு ஆவணப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற பாதுகாப்பு படைகள் ஏன் நடைமுறையளவில் அங்கே ஒதுங்கி நின்றன?
• அந்த தாக்குதலின் போது அந்த கும்பலின் தலைவர்கள் யாரை தொடர்பு கொண்டிருந்தனர்? அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முந்தைய நாட்களில் யாரெல்லாம் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தனர்? நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டிட அமைப்பு பாசிசவாதிகளுக்கு எப்படி தெரிந்தது?
இன்னும் நிறைய அடிப்படையான கேள்விகள் உள்ளன, இவற்றுக்குப் பதில் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், இதை யாரும் கேட்பதும் இல்லை. முதலும் முக்கியமாக: அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி வெற்றி பெற்றிருந்தால், என்ன திட்டம் இருந்தது?
ஜனவரி 6இல் உச்சத்தை எட்டியிருந்த, தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான மாதக் கணக்கிலான அந்த சதி குறித்து ஜனநாயகக் கட்சியினரின் சொந்த குற்றப்பத்திரிகையே விரிவான விபரங்களை அளிக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தை நொறுக்கி, தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க காங்கிரஸ் சபை அமர்வை நிறுத்த ட்ரம்ப் ஒரு கும்பலை ஏற்பாடு செய்திருந்தார். இது துல்லியமான உண்மையாக உள்ளது. ஆனால் பிணைக்கைதிகளைப் பிடிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், அவர்கள் என்ன செய்ய இருந்தார்கள்?
இந்த நடவடிக்கையில் அரசுக்குள் உள்ள எந்தெந்த சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தன? இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முந்தைய சில மாதங்களில், அதற்கு ஒத்துழைக்கும் நோக்கில் ட்ரம்ப் இராணுவத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்திருந்தார். இராணுவம் அதன் பதவிகளுக்குள் "உள்நாட்டு தீவிரவாதம்" வளர்வதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் தான் "அடைப்பு" என்று கூறப்படும் ஒன்றை தொடங்கி உள்ளது. அந்த நடவடிக்கையை இராணுவத்திற்குள் இருந்து ஆதரித்தது யார், அவர்கள் வகித்த பாத்திரம் என்ன?
அனைத்திற்கும் மேலாக, யார் நிதி உதவிகள் வழங்கினார்கள்? நன்கறியப்பட்டவாறு, ஒரு குற்றவியல் சதியின் வேர்களைக் கண்டறிய, “பண வருவதைப் பின்தொடர்வது" அவசியமாகும். ட்ரம்பின் சொந்த மந்திரிசபையே பில்லியனர்களைத் தேக்கி வைத்துள்ளது, முன்னாள் கல்வித்துறை செயலர் பெட்சி டிவோஸ், பிளாக்வாட்டர் நிறுவன ஸ்தாபகர் எரிக் பிரின்ஸின் சகோதரி போன்ற நபர்களும் அதில் உள்ளடங்குவர். கொரோனா தொற்றுநோய் பரவல் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர கோருவதற்காக மிச்சிகனில் வலதுசாரி ஆர்ப்பாட்டங்களுக்கு டிவோஸ் குடும்பம் நிதியுதவி வழங்கியது நன்கறியப்பட்டதே. ஜனவரி 6 பாசிசவாத கும்பலுக்கும் ஆளும் வர்க்கத்திற்கு உள்ள உயர்மட்ட ஆதரவக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
இறுதியாக, மத்திய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி, பல்வேறு பாசிசவாத போராளிகள் குழுக்கள் மற்றும் சட்டத்தைத் தம் கையிலெடுத்த அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் குடியரசுக் கட்சியின் எந்தெந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செயலாற்றினார்கள்?
இந்த வழக்கில் நீதியரசர்களாக அமர்ந்திருக்கும் பல செனட்டர்களே கூட அதற்கு அடியிலிருக்கும் அந்த சம்பவங்களில் நேரடியாக பங்கெடுத்திருந்தனர் அல்லது அதற்கு ஒத்துழைத்திருந்தனர். இதில் டெட் குரூஸ் மற்றும் ஜோஸ் ஹாவ்லெ இருவரும் உள்ளடங்குவர், இவர்கள் ஜனவரி 6 தேர்வுக் குழு வாக்கெடுப்பை நிராகரிக்கும் முனைவை வழிநடத்தினர். செனட் சபையின் சிறுபான்மை அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் உட்பட, பல வாரங்களாக பைடென் வெற்றியை ஏற்க மறுத்ததன் மூலமாக திருடப்பட்ட தேர்தல் என்ற பொய்யை ட்ரம்ப் ஊக்குவிக்க உதவியவர்கள் பலரும் அதில் உள்ளடங்குவர்.
“'அதன் சொந்த உள்நாட்டு இராணுவம்': G.O.P. எவ்வாறு ஆயுததாரிகளின் அணியில் நின்றது,” என நியூ யோர்க் டைம்ஸ் நேற்று ஒரு செய்தி வெளியிட்டது. அதில் அது, ஜனவரி 6 கிளர்ச்சி மட்டுமல்ல மாறாக தேர்தலுக்கு முன்னர் மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்வதற்கான சூழ்ச்சியிலும் கூட சம்பந்தப்பட்ட பாசிசவாத ஆயுததாரிகளுடன் குடியரசுக் கட்சியின் அரசியல் அணிசேர்க்கை குறித்து குறிப்பிட்டிருந்தது.
டைம்ஸ் குறிப்பிடுகிறது:
முன்னதாக லான்சிங்கில் பலத்தைக் காட்டிய பின்னர் "மிச்சிகனை விடுவிப்போம்!” என்று ட்வீட் செய்த ஜனாதிபதி டொனால்ட் ஜெ. ட்ரம்பிடம் இருந்து வந்த சமிக்ஞைகளைத் தொடர்ந்து, கடந்தாண்டு மிச்சிகன் குடியரசுக் கட்சி புதிதாக துணிவு பெற்ற துணைப்படைகள் மற்றும் சட்டத்தைத் தம் கையில் எடுக்கும் ஏனைய குழுக்களின் ஆதரவை வரவேற்றது. முக்கிய கட்சி உறுப்பினர்கள் போராளிகள் குழுக்களுடன் பிணைப்பை உருவாக்கி கொண்டனர் அல்லது மாநிலத்தில் நடந்த பல பேரணிகள் மற்றும் மோதல்களின் போதிருந்த அச்சத்தைப் பயன்படுத்தி ஆயுதமேந்திய நடவடிக்கையாளர்களுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கினர். அமெரிக்க நாடாளுமன்ற கட்டிட ஊடுருவலுக்கு சில மாதங்களுக்குப் பின்னர் சட்டசபைக்குள் ஊடுருவல் என்பது நாடெங்கிலும் இப்போது நடக்க போகும் தாக்குதலைப் போல தெரிகிறது.
ஜனவரி 6 கிளர்ச்சியை ஆதரிப்பதிலும் ஒத்துழைப்பதிலும், நாடெங்கிலும் குடியரசுக் கட்சி நிர்வாகிகளும், உள்ளாட்சி நகர ஆணையர்களும் மற்றும் பொலிஸ் துறையும் என்ன விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தன?
ஜனநாயகக் கட்சி இந்த சதியை முழுமையாக அம்பலப்படுத்துவதை எதிர்க்கின்றனர். செனட் சபை விசாரணையில் இருந்து பைடென் தன்னை முற்றிலும் விலக்கி நிறுத்திக் கொள்ள முயல்கிறார். “ட்ரம்ப் மீதான குற்றவிசாரணையில் பைடெனின் மூலோபாயம்: பின்னால் அமர்தல் மற்றும் STFU,” என்று தலைப்பிட்டு Politico நேற்று ஒரு செய்தி வெளியிட்டது. “இவ்வார விசாரணை, பாரியளவில் வரலாற்றுரீதியிலான, அரசியலமைப்புரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான பின்விளைவுகளை கொண்டிருக்கின்ற போதினும், அதில் பைடென் எங்கே நிற்கிறார் என்ற கேள்விக் கணைகளை" “பைடென் குழு,” "தடுத்துள்ளது" என்று Politico எழுதியது. இந்த விசாரணை நிகழ்வுபோக்கு குறித்து ஜனாதிபதி அன்றாடம் விபரங்களைப் பெறுகிறாரா என்பதைக் குறித்தும் கூட பத்திரிகைத்துறை செயலர் ஜென் பிசாக்கி திங்களன்று எதுவும் கூறவில்லை. அந்த பத்திரிகை தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டது:
ஹிலாரி கிளிண்டன தேர்தல் பிரச்சாரக் குழுவின் முன்னாள் ஆலோசகரும் ஜனநாயகக் கட்சியின் மூலோபாயவாதியுமான கரென் ஃபின்னி இந்த குற்றவிசாரணை மீதான வெள்ளை மாளிகை உரையாடல்கள் குறித்து கூறுகையில், “ஆட்சிபீடத்தில் நடக்கும் உரையாடலைத் தான் அமெரிக்கர்கள் கடைசியாக இப்போதே பார்க்க விரும்புகிறார்கள்,” என்றார். “'இது புதிய நாள் இது ஒரு புதிய நிர்வாகம்.' என்பது தான் அவர்கள் இங்கே செய்ய முயல்வதில் ஒரு பகுதி இருக்கிறது. அவர்கள் அரசியலில் ஈடுபட, வெள்ளை மாளிகையையும் ஜனாதிபதியின் கருவிகளையும் பயன்படுத்தப் போவதில்லை,” என்றார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “கடந்து செல்ல" வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அரசியல் ஸ்தாபகத்திற்குள் பாசிசவாத சக்திகளை ஒருங்கிணைப்பதிலும் அவர்களைப் பேணி காத்து வளர்ப்பவர்களாகவும் மாறியுள்ள, குடியரசுக் கட்சியிலுள்ள தங்கள் "சகாக்களின்" ஒத்துழைப்புகளை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்க விரும்புகிறார்கள்.
ட்ரம்ப், அரசிலும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திலும் உள்பொதிந்துள்ள, ஆழமாக வேரூன்றியுள்ள, ஜனநாயக விரோத பாசிசவாத போக்குகளைத் தான் அவர் வெளிப்படுத்துகிறார். இந்த சதியின் அளவை அம்பலப்படுத்த ஜனநாயகக் கட்சியினருக்கு விருப்பமில்லை, ஏனென்றால் ட்ரம்ப் நிர்வாகம் எதன் ஒரு வெளிப்பாடாக இருந்ததோ, அடியிலிருக்கும் அந்த அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதை அது சம்பந்தப்படுத்தும்.