மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனவரி 6, 2021 இல்—அமெரிக்க வரலாற்றில் முன்நிகழ்ந்திராத ஒரு சம்பவத்தில்—வெள்ளையின மேலாதிக்கவாத, யூத-எதிர்ப்புவாத, புலம்பெயர்ந்தோர் விரோத நவ-நாஜி மற்றும் பாசிசவாத அமைப்புகளால் அணித்திரட்டப்பட்ட பல ஆயிரக் கணக்கான வலதுசாரி தீவிரவாதிகள்—வாஷிங்டன் டி.சி. இல் நாடாளுமன்றக் கட்டிடத்தை ஆக்கிரமித்தனர். ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்சும் உள்ளடங்கலாக அவர்கள் டொனால்ட் ட்ரம்பின் எதிரிகளாக கருதியவர்களைப் பணயக்கைதிகளாக பிடித்து கொலை செய்ய உத்தேசித்திருந்தனர். தேர்வுக் குழுவின் முடிவுகளைக் காங்கிரஸ் சபை அங்கீகரிக்கும் நேரத்துடன் சரியாக பொருந்தி இருந்த அந்த தாக்குதலின் நோக்கம், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோசப் பைடெனின் தேர்வை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதை தடுப்பதாக இருந்தது.
அந்த நடவடிக்கையின் தந்திரோபாய நோக்கங்கள் எட்டப்பட்டிருந்தால், அரசியல் விளைவானது தேர்வுக் குழு வாக்குகள் அங்கீகரிப்பால் அரசியலமைப்புரீதியில் கிடைக்கும் அரசு ஆணையை வெறுமனே தாமதப்படுத்துவதாக மட்டும் இருந்திருக்காது. காங்கிரஸ் சபை ஆண் உறுப்பினர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களைப் பணயக்கைதிகளாக பிடித்து படுகொலை செய்திருக்கக்கூடிய அந்த பாசிசவாத தலைவர்கள் பின்னர் ட்ரம்ப் பொய்யாக அவர் வென்றிருப்பதாக வாதிட்ட மாநிலங்களில் —ஜோர்ஜியா, அரிசோனா, விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா போன்ற மாநிலங்களில்— வாக்குகளின் முடிவை மாற்றுமாறு கோரியிருப்பார்கள். பணயக்கைதிகளைப் பிடிப்பவர்களது கோரிக்கைகள் குடியரசுக் கட்சிக்குள் பெருவாரியான ஆதரவைப் பெற்றிருக்கும், ட்ரம்பின் ஆதரவைக் குறித்தோ குறிப்பிட வேண்டியதே இல்லை. வாஷிங்டன் டி.சி. இல் பாசிசவாத தலைவர்கள் பிரயோகித்த அதிகாரத்தால் உத்வேகமுற்று, அமெரிக்கா எங்கிலும் பல்வேறு மாநில தலைநகர்களிலும் அதேபோன்ற நடவடிக்கைகள் நடத்தப்பட்டிருப்பதற்கு எல்லாவிதத்திலும் சாத்தியக்கூறு இருந்தது.
பணயக்கைதியாக்கும் நாடகம் நடந்து முடிந்ததும், பதவியேற்பின் உத்தியோகப்பூர்வ நாள் நெருங்கி வருவதுடன் சேர்ந்து எண்ணற்ற உயிர்கள் பணயத்தில் உள்ள நிலையில், பைடெனும் ஜனநாயகக் கட்சியும் ஓர் இரத்தக்களரியை தடுக்கும் ஆர்வத்தில் பணயக்கைதி ஆக்குபவர்களின் கோரிக்கைகளில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது ஏற்றுக் கொள்ளவும் மற்றும் அரசை மீண்டும் திறந்துவிடவும் மிகப்பெரும் அழுத்தத்தின் கீழ் வந்திருக்கும்.
மேலே விவரிக்கப்பட்ட சூழ்நிலை கட்டவிழவில்லை, ஏனென்றால் பாசிசவாத கிளர்ச்சி அதன் தந்திரோபாய நோக்கங்களை எட்டுவதில் தோல்வியடைந்தது. அந்த கும்பல் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் ஊடுருவியதும் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அடித்து நொறுக்குவதிலும் பொன்னான நேரத்தை வீணடித்ததால், தலைவர்கள் அவர்களின் கும்பல் மீதான கட்டுப்பாட்டை இழந்தனர். காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அல்லது பணயக்கைதிகளாக பிடிக்கப்படுவதற்கு முன்னதாக தப்பித்திருந்தனர்.
ஆனால் அந்த சம்பவத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், அது ஒரு முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியாக இருந்தது. இந்த வெளிப்படையான உண்மையை மறுப்பது யதார்த்தத்தை மழுப்புவதும் மற்றும் திரிப்பதுமாகும், அது நீடித்திருக்கும் மற்றும் வரவிருக்கும் மாதங்களில் இன்னும் ஆழமாக அதிகரிக்கும் அளப்பரிய அரசியல் அபாயங்களை மூடிமறைப்பதற்கு மட்டுமே சேவையாற்றுகிறது.
அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் உடனடியாக, ஜோன் பில்ஜர், கிலென் கிரீன்வால்ட், கிறிஸ் ஹெட்ஜெஸ் மற்றும் Consortium News இன் ஜோ லாரியா போன்ற நிறுவனம்-சாரா பிரபல பத்திரிகையாளர்கள் ஜனவரி 6 சம்பவங்களைக் குறித்து ஓர் அபாயகரமான தவறாக வழிநடத்தப்படும் கண்ணோட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள், அதன்படி, வாஷிங்டனில் என்ன நடந்ததோ அது அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தியதற்கும் சற்று அதிகப்படியாக சென்று கையிலிருந்து கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்பதை தவிர வேறொன்றுமில்லை என்றும், அதை ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியென்றோ அல்லது கிளர்ச்சி என்றோ விவரிக்க வேண்டியதில்லை என்றும், இதற்கும் மேலாக ட்ரம்ப் மீது பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரே பலிக்கடா ஆக்கப்பட்டு வருகிறார் என்றும், ஜனவரி 6 இல் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பிரதான அச்சுறுத்தல் காங்கிரஸ் சபையை ஆக்கிரமித்ததில் இருந்து வரவில்லை, மாறாக ட்ரம்பின் ட்வீட்டர் கணக்கை அவர் அணுகுவதற்கான உரிமையைப் பறித்ததில் இருந்து வருகிறது என்றும் அந்த கண்ணோட்டம் வாதிடுகிறது. இந்த நோக்குநிலை பிறழ்ந்த கணக்கின் படி, டொனால்ட் ட்ரம்ப் ஒரு குற்றவாளியை விட பலியானவர் என்று உள்ளது.
“அவரை நீக்குவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில் ட்ரம்ப் மீது பதவிநீக்க குற்றவிசாரணை" என்ற தலைப்பில் Consortium News இன்ஜனவரி 13 கட்டுரையில் ஜோ லாரியா இதே வாதங்களைத் தொகுத்து வழங்கினார். ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்திய லாரியா, ட்ரம்ப் மற்றும் அவர் சதிகாரர்களினது வழக்குரைஞரின் விளக்கத்தை முன்வைக்கிறார். ஆயிரக் கணக்கான தனது ஆதரவாளர்கள் முன்னால் ட்ரம்பின் வீராவேச முழக்கத்தின் எழுத்து வரிகளை நெருக்கமாக குறிப்பிட்டு, அரசியலமைப்பின் பிரிவு 3, ஷரத்து ஒன்றின் கீழ், நடத்தப்படவிருக்கும் பதவிநீக்க குற்றவிசாரணை வழக்கில், செனட்டின் குற்றச்சாட்டுக்கு தேவைப்படுவதை விட ட்ரம்பின் வார்த்தைகள் குறைவாக இருப்பதாக லாரியா நிரூபிக்க முயல்கிறார்.
ட்ரம்பின் உரையை "ஓர் அரசியல்வாதியின் போராடும் வார்த்தைகளாக" வாசிக்க வேண்டுமென்றும், அவை ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தூண்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டவை இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை வன்முறையைத் தூண்ட கூட உத்தேசிக்கப்பட்டவை இல்லை என்று லாரியா வாதிடுகிறார்:
"ஜனநாயகக் கட்சியினர் 'இரக்கமற்றவர்கள்' என்றும், 'யாராவது ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது' என்றும் [ட்ரம்ப்] கூறியபோது, அவர் தேர்வுக்குழு வாக்குகளை மீண்டும் முக்கிய மாநில முடிவுகளுக்கு தள்ளிவைப்பதை பென்ஸ் மற்றும் குடியரசுக் கட்சியினருக்குச் சுட்டிக்காட்டினார். இது தான் அவரின் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான அந்த உரையின் ஒட்டுமொத்த உள்ளடக்கமாக உள்ளது. “போராடுவதற்கு நீங்கள் உங்கள் நபர்களைக் கொண்டு வாருங்கள்,” என்று அவர் குறிப்பிடும் போது, அவர் முன்னிலைக்கு வர வேண்டிய குடியரசுக் கட்சி பிரதிநிதிகளையே அர்த்தப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டம் மீது ட்ரம்புக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரமோ, அல்லது அவ்வாறு செய்ய அவரிடம் இருந்து வந்த நேரடியான அறிவுறுத்தல்களின் ஆதாரங்களோ இதுவரையில் அங்கே எதுவும் இல்லை என்கின்ற நிலையில், அவரை செனட்டின் அரசியல் விசாரணையில் இல்லை என்றாலும், அவரை நீதிமன்றத்தில் தண்டிப்பது கடினம்"
இந்த கடைசி வாக்கியம், ட்ரம்ப் மீதான குற்றத்தாக்கல் அரசியல்ரீதியில் நீதித்துறையின் துஷ்பிரயோகம் என்பதை உட்கிடையாக கொண்டுள்ளது.
ட்ரம்ப் மட்டுமல்ல, மாறாக அவர் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரும் சமாதானமான நோக்கங்களையே மனதில் கொண்டிருந்ததாக லாரியா வலியுறுத்துகிறார். டொனால்ட் ஜூனியர், “நீங்கள் கதாநாயகரா இல்லை பூஜ்ஜியமா என்பதை" நிரூபிப்பது அவசியம் என்று கூட்டத்தில் குறிப்பிட்ட போது, “ஊசலாடிய முக்கிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்கு எதிராக வாக்களிக்குமாறு" காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சியினருக்கும் தான் முறையிட்டார் என்றவர் எழுதுகிறார். ட்ரம்பின் தனிப்பட்ட பாசிசவாத வழக்குரைஞர் ருடோல்ஃப் கிலானியைப் பொறுத்த வரையில், “நீதியை எதிர்க்க" அவர் விடுத்த அழைப்பு நீதிமன்றங்களில் "தேர்தலின் கணினி முடிவுகளைத் தொடர்ந்து சவால்விடுப்பதை" மட்டுமே குறிப்பிட்டதாக லாரியா குறிப்பிடுகிறார்.
“நாடாளுமன்ற கட்டிடத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்து ட்ரம்புக்கு முன்கூட்டியே தெரியும் என்பதற்கு இதுவரையில் எந்த ஆதாரமும் இல்லை" என்றவர் நிறைவு செய்கிறார். ஒரு புலனாய்வு பத்திரிகையாளராக பல தசாப்த கால அனுபவம் கொண்ட லாரியா இதுபோன்றவொரு மேலோட்டமான முடிவை ஏற்றுக் கொள்வது திகைப்பூட்டுகிறது.
“இப்போதிருக்கும் அரசாங்கத்தைத் தூக்கிவீசி புதிய ஆட்சியாளர்களைக் கொண்டு அதை பிரதியீடு செய்வதே" ஓர் "ஆட்சிக்கவிழ்ப்பு சதி" எனப்படும் என்பதால், அந்த சம்பவங்களை அவ்வாறு குறிப்பிட முடியாதென வலியுறுத்தும் அளவுக்கு லாரியா செல்கிறார். ஆனால் அந்த சதிதிட்டமிட்டவர்கள் இதை தான் செய்ய முயன்றார்கள், அதாவது தேர்தல் முடிவுகளை மாற்றி பைடென் பதவியேற்பைத் தடுக்க முயன்றார்கள். ஆனால் லாரியா வாதிடுகிறார், “ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்தை கனவு கண்டிருக்கக்கூடிய ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் பக்கத்தில் ஜனாதிபதி மாளிகையை மட்டுமே வைத்திருந்தார்கள், வேறு ஒன்றும் இல்லை” என்று வலியுறுத்துகிறார். [சாய்வெழுத்துக்கள் சேர்க்கப்பட்டவை]
“ஜனாதிபதி மாளிகையை மட்டுமா இருந்தது"?!
ஜனவரி 6 சம்பவங்களின் ஈர்ப்பாற்றலை மறுக்கும் இன்னும் அதிக அப்பட்டமான முயற்சியில், லாரியா குறிப்பிடுகையில், “அது நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது கட்டுப்பாட்டை எடுப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்தது, நாட்டை அல்ல,” என அறிவிக்கிறார். அந்த கிளர்ச்சியாளர்கள் வாஷிங்டன் டி.சி. ஐ மட்டுமே கைப்பற்ற முயன்றார்களாம்! அப்படியானால், இந்த செய்தி லாஸ் ஏஞ்சல்ஸ், ஹோஸ்டன், சிகாகோ, டெட்ராய்ட், போஸ்டன் மற்றும் நியூ யோர்க்கில் வசிப்பவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தரும்.
ஜனாதிபதி தேர்வுக் குழு வாக்கு முடிவுகளை மாற்றுவதற்கான குடியரசுக் கட்சியினரின் முயற்சிகளை, அதாவது நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதலுக்கு அரசியல் சாக்குப்போக்கை வழங்கிய அதே தந்திரத்தை, லாரியா நியாயப்படுத்த நகர்கிறார், “தேர்தல் முடிவுகள் மீது சவால் விடுக்கவும் மற்றும் இரண்டு சபைகளிலும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பைக் கொண்டு வரவும் குடியரசுக் கட்சியினர் தங்கள் உரிமைகளுக்குள் இருந்தனர். இந்த அரசியலமைப்பு உரிமை, கலவரத்திற்கு தூண்டுதல் அல்லது ஆதரவு என்று கூறுவது அசாதாரண மிகைப்படுத்தலாகும்,” என்றவர் வலியுறுத்துகிறார். குடியரசுக் கட்சியினரின் சவால் ஒரு திருடப்பட்ட தேர்தல் மீது முற்றுமுதலான பொய்களை அடிப்படையாக கொண்டிருந்தது என்பது (அதாவது முதலாம் உலக போரில் ஜேர்மனியின் தோல்வியைக் குறித்து ஹிட்லரின் “முதுகில் குத்துதல்” என்ற விளக்கத்தின் ட்ரம்ப் வடிவம்) லாரியாவுக்குத் தொந்தரவாக தெரியவில்லை.
ட்ரம்பை லாரியா பாதுகாப்பது, பரந்த அரசியல் காலகட்டத்தையும் மற்றும் ட்ரம்ப் நடவடிக்கைகளின் உள்ளடக்கத்தையும் கைவிடுகிறது. ஜூன் 1 இல், ட்ரம்ப் வாஷிங்டன் போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவப் பொலிஸைப் பயன்படுத்தியதுடன், கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி நாடெங்கிலும் இராணுவத்தை நிலைநிறுத்த அச்சுறுத்தினார் என்பதை லாரியா மறந்துவிட்டார். மிச்சிகன் மற்றும் வேர்ஜினியா ஆளுந்களைக் கடத்தி படுகொலை செய்வதற்கான, அக்டோபரில் அம்பலமாக்கப்பட்ட, சதித்திட்டம் குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை, அது "மிச்சிகனை விடுவியுங்கள்!” என்ற ட்ரம்பினது அழைப்பால் தூண்டிவிடப்பட்டிருந்தது. ட்ரம்ப் தேர்தலில் தோற்றால் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக அவர் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று உயர்மட்ட ட்ரம்ப் கூட்டாளிகள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததைக் குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியமை ஜனநாயக உரிமைகள் மீதான மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும், அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை விட மிகவும் ஆபத்தானது என்ற கூற்றுடன் ஜனவரி 6 ம் தேதி பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சி மறுக்கப்படுகிறது.
ஜனவரி 11 இல் Democracy Now! பத்திரிகை பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸூம், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்தும் முயற்சியிலிருந்து ட்ரம்பை விடுவிக்க ஏதோவொரு வகை சம்பிரதாயமான வார்த்தைகளுக்குள் தஞ்சமடைகிறார். “ட்ரம்ப் அவர் ஆதரவாளர்களுக்கு என்ன கூறினார் என்பதை நாம் உணர்ச்சிவசப்படாமல் வாசித்தால், தெளிவாக, அவர் நாடாளுமன்ற கட்டிடத்தை உடைக்கவோ, நபர்களைப் பணயக்கைதிகளாக பிடிக்கவோ, அழைப்பு விடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரம்பிற்கு எதிரான ட்விட்டரின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்: “ஆனால், சாரத்தில், பில்லியன் கணக்கான மக்கள் மீது தணிக்கையாளர்களாக செயல்பட இத்தகைய தனியார் பெருநிறுவனங்களுக்கு உரிமை கொடுத்து விடையிறுத்தால், இவை திரும்பவும் நம்மையே வேட்டையாட மீண்டும் வருகின்றன. மேலும் அவை இலக்கில் வைப்பது வெறுமனே ட்ரம்பை மட்டுமல்ல என்பதால் தான் இதை நாம் கவனிக்கிறோம். இறுதியில், இது எப்போதுமே இந்த வகையான தணிக்கைக்கு இடதே விலை கொடுக்கின்றன,” என்றார்.
அரசு மற்றும் பெருநிறுவன தணிக்கையின் பிரதான இலக்கு சோசலிச இடது மற்றும் தொழிலாள வர்க்கம் என்பது உண்மையே. வலதுசாரி கட்சிகளை முதலாளித்துவ அரசு சட்டவிரோதமாக்குவதற்கான அல்லது தடைசெய்வதற்கான கோரிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கவில்லை. ஆனால், சோசலிச இடதும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அக்கறை கொண்டவர்களும், ஒரு தேர்தலை ஒன்றுமில்லாது செய்ய முயன்று வரும் ஆயுதமேந்திய குண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் ஒரு பாசிசவாத ஜனாதிபதியின் "பேச்சு சுதந்திரத்தை" பாதுகாப்பதை தங்கள் கடமையாக கொண்டிருக்கவில்லை.
தடையேதுமில்லா பேச்சு சுதந்திரத்திற்கான ட்ரம்பின் உரிமையைப் பாதுகாப்பது நடைமுறையளவில் நாடெங்கிலும் அவரைப் பின்தொடர்பவர்களை அவர் அணித்திரட்ட அனுமதிக்கிறது என்று அர்த்தமானாலும் கூட, அதை அவர்கள் நியாயப்படுத்துகையில், லாரியா, ஹெட்ஜஸ் மற்றும் மற்றவர்களும் ஜனநாயகக் கட்சியால் ஆதரிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடூரமான குற்றங்கள் அனைத்தையும் அவர்கள் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்கள். சான்றாக ஜோன் பில்ஜர், யெமனில் ஹௌதியர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வருகின்ற குற்றங்களைக் எடுத்துக்காட்டுகிறார். இது குட்டி-முதலாளித்துவ வாய்வீச்சு மட்டுமே. அமெரிக்காவில் நவ-பாசிசவாத ஆட்சியின் ஸ்தாபிதம், யெமனிலும் ஏனைய இடங்களிலும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நடைமுறை நெறிமுறைகளை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை பில்ஜர் விளக்கவில்லை.
மார்க்சிசம் மற்றும் சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்க்க உணர்வுள்ள பகுப்பாய்வு, முதலாளித்துவ அரசுக்குள் நிலவிய கடுமையான நெருக்கடியின் பின்னணியில் தான் ட்விட்டரின் நடவடிக்கை நடந்தது என்பதை விளக்கும். இத்தகைய அரசுக்குள், வன்முறையால் தான் தூக்கியெறியப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட ஓர் அரைகுறை அரசியலமைப்பு கன்னை, ட்ரம்ப் தனது பாசிசவாத பின்தொடர்பாளர்களை அணித்திரட்டுவதில் இருந்து தடுக்க முயன்றது. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், அந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியில், ட்ரம்பின் தகவல்தொடர்புகள் சீர்குலைவதை ஏன் எதிர்க்க வேண்டும்? உண்மையில், ட்வீட்டர் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், சோசலிஸ்டுகள் உண்மையில் இந்த 'நடுநிலைமை' சதிகாரர்களுடன் வெளிப்படையான உடந்தையாக இருப்பதை சரியாக விளக்குவார்கள்.
அனைத்திற்கும் மேலாக, சோசலிஸ்டுகள் ட்ரம்பின் சூழ்ச்சிக்குத் தொழிலாள வர்க்க எதிர்ப்பை அணித்திரட்டுவதற்கான அவர்களின் சொந்த முயற்சிகளின் பாகமாக, ட்வீட்டர் தொழிலாளர்களையும் மற்றும் தொழில்நுட்ப தொழில்துறையில் பணியாற்றும் மற்ற தொழிலாளர்களையும் சமூக ஊடகத்துடனான அவரின் அணுகலைத் துண்டித்து, அவரின் ஆயுதமேந்திய பின்தொடர்பாளர்களின் தகவல்தொடர்பு வலையமைப்புகளைத் சீர்குலைக்குமாறு உள்ளாக்குமாறு வலியுறுத்தி இருப்பார்கள். உண்மையில் துல்லியமாக அதுபோன்ற நடவடிக்கைக்கு ட்வீட்டர் தொழிலாளர்களிடம் பல கோரிக்கைகள் இருந்தன, ட்ரம்பின் கணக்கை முடக்குவதற்கான ட்வீட்டரின் முடிவில் இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. கடந்த வார ஆரம்பத்தில் Vanity Fair இல் வெளியான ஒரு கட்டுரை, “ட்வீட்டர் ட்ரம்பை முடக்கியிருக்காவிட்டால் அது அதன் சொந்த கிளர்ச்சியைக் கண்டிருக்கக்கூடும்,” என்று குறிப்பிடுகிறது. தொழிலாளர்களிடம் இருந்து வரும் இதுபோன்ற கோரிக்கைகளை, ஹெட்ஜஸ், ஏற்றுக் கொள்ள முடியாத பேச்சு சுதந்திர மீறல் என்று கருதுகிறாரா?
அமெரிக்க அரசாங்கத்தைப் பாசிசவாதிகள் வெற்றிகரமாக தூக்கியெறிவதன் விளைவுகள் குறித்து உலக சோசலிச வலைத் தளம் அலட்சியமாக இருக்கவில்லை. “பெரிய தொழில்நுட்ப நிறுவனம்" மற்றும் ஜனநாயகக் கட்சி முன்னிறுத்தும் அபாயத்தை, சுதந்திரமான பேச்சுக்கு நிபந்தனையற்ற பாதுகாப்பு என்ற போர்வையில், பாசிசவாத அமைப்புகளினது பின்புலத்தில் ட்ரம்ப் தலைமையிலான ஓர் எதேச்சதிகார ஆட்சி நிறுவப்படுவதை செயலற்ற முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலமாக தீர்க்க முடியாது. எங்கள் கோஷம், காங்கிரஸ் சபை மீதான ஒரு பாசிசவாத தாக்குதலுக்கு மத்தியில், “ஹிட்லர் மீது கை வைக்காதே! ட்ரம்புக்கான பேச்சு சுதந்திரம்!” என்பதல்ல.
லாரியா, ஹெட்ஜஸ் மற்றும் ஏனையவர்களின் அரசியல்ரீதியில் நோக்குநிலை பிறழ்ந்த பொய்யான வாதங்களுக்குப் பதிலளிக்கையில், அமெரிக்க முதலாளித்துவக் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் வழங்கிய பத்திரிகைத்துறைசார் பங்களிப்புகளை மறுப்பதோ அல்லது மதிப்பிழக்கச் செய்வதோ எங்கள் நோக்கமல்ல. ஆனால் இந்த மிக முக்கிய மற்றும் முன்னோடியில்லாத நெருக்கடிக்கு அவர்களின் விடையிறுப்பு மிகவும் தவறானதும் மற்றும் எதிர்க்கப்பட வேண்டியதுமாகும்.
இவ்விதமாக குறைத்துக் காட்டுவது ட்ரம்புக்கு ஓர் அரசியல் மூடுமறைப்பை வழங்க சேவையாற்றுகிறது என்பது மட்டுமல்ல, அது அமெரிக்க ஜனநாயகத்தின் பலத்தைக் குறித்து சுயதிருப்தி அணுகுமுறையையும் விதைக்கிறது. ஜனவரி 6 சம்பவங்களை மறுக்க, அவர்கள் வேறு விதத்தில் அணுகியிருந்தாலும், அது அமெரிக்க அரசியலிலும் தொழிலாள வர்க்க தலைவிதியிலும் ஓர் ஆழ்ந்த தாக்கத்தைக் கொண்டிருக்காது என்பதும் பிரமை தான். அனைத்திற்கும் மேலாக, கிளர்ச்சியின் விளைவுகள் நீண்டகாலத்திற்கு இருக்கும். இந்த சூழ்ச்சியை மூடிமறைப்பதற்கான ஜனநாயகக் கட்சியினரின் முயற்சியால் ஒத்துழைக்கப்பட்ட, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைபொருள், அமெரிக்க அரசியல் கட்டமைப்புக்குள் தீவிர வலதை ஒருங்கிணைப்பதாக இருக்கும்.
எனவே முக்கிய பிரச்சினை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் செயல்பாடாகும். இந்த நெருக்கடியைத் தீர்ப்பதை ஜனநாயகக் கட்சியினரிடமோ, குடியரசுக் கட்சியினரிடமோ, அல்லது, அவ்விதத்தில், “பெரு நிறுவனங்களிடமோ" விட்டுவிட முடியாது.
ஜனவரி 6 நிகழ்வுகளின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அரசியல் படிப்பினைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த அடிப்படையில் மட்டுமே, உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களைக் கல்வியூட்டுவது, ஓர் உண்மையான பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பது மற்றும் பெரும் பெரும்பான்மை மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சாத்தியமாகும்.
மேலும் படிக்க
- பெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்
- குடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்
- ட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்!
- ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு