மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இரண்டாவது முறையாக பதவிவிலக்க பிரதிநிதிகள் சபை புதன்கிழமை பிற்பகல் வாக்களித்தது. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், 2020 தேர்தலின் முடிவை முறியடிப்பதற்கும், ஜனவரி 6 ம் தேதி காங்கிரசுக்கு எதிரான கும்பல் தாக்குதலைத் தூண்டுவதாக ஜனாதிபதி மீதான ஒற்றை குற்றஞ்சாட்டு முழுமையாக நியாயமானது. ஆனால் இந்த நடவடிக்கை ட்ரம்பை பதவியில் இருந்து நீக்கவோ, அவரது சக சதிகாரர்களை அம்பலப்படுத்தவோ அல்லது அமெரிக்காவில் ஒரு பாசிச இயக்கத்தின் வளர்ச்சியை இல்லாதொழிக்கவோ மாட்டாது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடென் மற்றும் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் குடியரசுக் கட்சியினரிடம் "ஒற்றுமை," "குணப்படுத்துதல்" மற்றும் "இரு கட்சிகள் இணைந்து இயங்க" அழைப்பு என்று பாசிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னரான ஒரு வாரத்தை கழித்தனர். திரைமறைவிற்குப் பின்னால், அவர்கள் ஏற்கனவே கொள்கை மற்றும் முக்கிய நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் விட்டுக்கொடுப்புகளை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் ஜனவரி 20 ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸ், செனட் மற்றும் ஜனாதிபதி பதவிகளைக் கட்டுப்படுத்துவார்கள் என்றபோதிலும் குடியரசுக் கட்சியினருக்கு அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கின்றனர்.
ஜனநாயகக் கட்சியினர் தங்கள் "குடியரசுக் கட்சி சகாக்கள்" என்று குறிப்பிடும் நபர்களின் தன்மை நேற்று வெளிப்பட்டது. ட்ரம்பிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அறிவிப்பில், சபையில் 211 குடியரசுக் கட்சியினரில் 197 பேர் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
புதன்கிழமை விவாதத்தின் போது ஒருவருக்கு பின்னர் ஒருவராக ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சிகளின் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒரு வாரத்திற்கு முன்புதான் எதிர்கொண்ட மரண அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, ஆயுதமேந்திய பாசிச குண்டர்கள் காங்கிரஸின் அறையின் கதவுகளைத் தாக்கி, தங்கள் அலுவலகங்களுக்குள் படையெடுத்து, இரத்தத்திற்காக கத்தியபோதும் குடியரசுக் கட்சியினரிடம் கெஞ்சினார்கள். இதற்கு பதிலளித்த குடியரசுக் கட்சியினர் முழு நடவடிக்கைகளையும் நிராகரித்தனர்.
இந்த வாரத் தொடக்கத்தில் ட்ரம்பிடமிருந்து சுதந்திரப் பதக்கத்தைப் பெற்ற ஓஹியோவின் பிரதிநிதி ஜிம் ஜோர்டான் முன்னணி வகித்து, குடியரசுக் கட்சியின் தூதுக்குழுக்காக முதலில் பேசினார். பதவிவிலக்கல் குற்றச்சாட்டு உந்துதலின் பின்னணியில் இருப்பதாக அவர் கூறிய "இரத்து செய்யும் கலாச்சாரத்தை" ஜோர்டான் தாக்கியதுடன், பாசிச அணிதிரட்டல் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பினுள் தேர்தல் "ஏமாற்றப்பட்டது" என்ற கூற்றை மீண்டும் மீண்டும் கூறினார்.
பதவிவிலக்கல் குற்றச்சாட்டு "வன்முறையைத் தூண்டுகிறது" என்று டெக்சாஸின் லூயிஸ் கோமெர்ட் கூறி, ட்ரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட மேலதிக சீற்றங்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பாவார்கள் என்று வலியுறுத்தினார். அரிசோனாவின் அன்டி பிக்ஸ் பதவிவிலக்கலுக்கு வாக்களிப்பது ஜனவரி 6 எழுச்சியின் "தணல்கள் மீது பெட்ரோல் ஊற்றுகிறது" என்று எச்சரித்தார்.
ட்ரம்ப்பின் தீவிர பாதுகாவலர்களில் ஒருவரான புளோரிடாவைச் சேர்ந்த மட் கெய்ட்ஸ், ட்ரம்ப் இரண்டு முறை குற்றஞ்சாட்டப்பட்டார். இரண்டு முறையும் “சரியாக இருந்ததற்காக” என்று கூறினார். ட்ரம்ப் "பைடென் குற்றக் குடும்பத்தின்" நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார். இது 2019 ல் அவரது பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது. பின்னர் 2020 தேர்தலில், "ஜனாதிபதி சட்டவிரோத வாக்களிப்பை சரியாக சுட்டிக்காட்டினார்" என்றார்.
கொலராடோவின் துப்பாக்கி உரிமைக்கான ஆர்வலர் லோரன் போபேர்ட் கடந்த கோடையில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன போராட்ட அலைகளின் போது வன்முறையைத் தூண்டியதாகவும், கலவரக்காரர்களை நியாயப்படுத்தியதாகவும் "இடதுசாரிகளை" தாக்கும் முன், "கடவுளுக்கு மகிமை" என்ற சுருக்கமான அழைப்போடு தனது ஒரு நிமிட உரையைத் தொடங்கினார். செவ்வாயன்று காங்கிரஸின் அனைத்து உறுப்பினர்களும் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு காந்தமானிகள் வழியாக செல்ல வேண்டும் என்று அவர்கள் கோரத் தொடங்கியபோது காங்கிரஸ் பொலிஸுடன் போபேர்ட் கிட்டத்தட்ட கைகலப்பிற்கு சென்றிருந்தார். அவர் மறைத்து வைத்திருக்கும் ஆயுதத்தை காங்கிரஸிற்கு வழமையாக கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஸ்காட் பெர்ரி, "கடந்த கோடையில் நடந்தது, ஜனவரி 6 அன்று நடந்த எதையும் விட ஒரு கிளர்ச்சிக்கு மிக நெருக்கமாக இருந்தது" என்று அறிவிக்கும் அளவிற்கு சென்றார். காங்கிரஸின் மாடிகளில் நிகழ்ந்தவை ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு இருக்கின்றது மற்றும் இன்னும் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் பெரும்பான்மையினரின் ஆதரவைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தியது.
பல தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சியின் ஒரு முக்கிய அரசியல் செயல்பாடு, குடியரசுக் கட்சியை பாசிஸ்டுகள் மற்றும் புதிய நாஜிக்களின் நச்சு கலவையாக மாற்றுவதை மூடிமறைப்பதாக இருந்தது. அவை கட்டுப்படுத்தப்படாமல், காங்கிரஸ் சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி மற்றும் செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கானெல் ஆகிய முக்கிய நபர்களால் தலைமை வகிக்கப்படுகின்றன.
காங்கிரஸ் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்களின் நோக்கம் காங்கிரஸ்காரர்கள் மற்றும் செனட்டர்களிடையே பிணைக் கைதிகளை பிடித்துச்செல்வது, அவர்களில் சிலரை எடுத்துக்காட்டாக கொல்வது, ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பின் தோல்வியை காங்கிரஸ் சான்றிதலளிப்பதை தடுப்பது மற்றும் 2020 தேர்தல்களின் முடிவுகளை இரத்து செய்வதற்காக பாரிய மரணதண்டனை அச்சுறுத்தலின் கீழ் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது என்பதாக இருந்தது தெளிவாகிறது.
வாஷிங்டனில் ஒரு நீடித்த முற்றுகை உருவாகியிருந்தால், இதேபோன்ற நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கும். மேலும் ட்ரம்ப் சார்பாக காவல்துறை மற்றும் இராணுவத்தின் சில பிரிவுகளும் நடவடிக்கைக்கு வந்திருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.
கடந்த பல நாட்களின் வெளிப்பாடுகளில்: காவல்துறையை காங்கிரஸில் இருந்து திசை திருப்ப ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் தலைமையகத்தில் குழாய் குண்டுகள் வைப்பது; பொலிஸ் உதவிக்கு அவசரமாக அழைப்பு விடுப்பதற்காக பெரும்பாலான காங்கிரஸ் அலுவலகங்களில் நிறுவப்பட்ட “பீதி பொத்தான்கள்” முடக்கப்பட்டிருந்தன; ஜனவரி 6 ஆம் திகதிக்கு முன்னர் குடியரசுக் கட்சியினரால் காங்கிரஸ் ஊடாக வழிநடத்தப்பட்ட "சுற்றுலாப் பயணிகளின்" ஒரு குழு (தொற்றுநோய் இருந்தபோதிலும்) அலுவலகங்கள், சுரங்கங்கள் மற்றும் பிறவற்றின் தளவமைப்பு பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டது; அவர்களில் பலர் ஜனவரி 6 இல் தாக்கதல் நடாத்தியவர்களின் மத்தியில் இருந்தமை ஆகியவை உள்ளடங்கியிருந்தன.
ஜனவரி 6 ம் தேதி நிகழ்வுகள் வேறுவிதமாக நடந்திருந்தால், பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், நேற்று காங்கிரஸில் உரையாற்றிய ஜனநாயகக் கட்சியினரின் அதே "குடியரசுக் கட்சி சகாக்கள்" பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளை பாதுகாத்து, நாட்டை "குணப்படுத்தும்" நலன்களுக்காக அவர்களின் நியாயமான அக்கறைகளுக்கு விட்டுக்கொடுப்புகளை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார்கள். 2020 தேர்தலை இரத்து செய்ய அவர்கள் ஏதோ ஒரு வடிவத்தில் கோரியிருப்பார்கள்.
கடந்த வாரம் பைடென் அறிவித்தபடி, அமெரிக்க அரசாங்கத்தின் அவசியமாக அவர் முன்வைத்த ஒரு "வலுவான குடியரசுக் கட்சியை" பாதுகாக்க, ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கம்பளத்தின் கீழ் ஒரு உயர் மட்ட சதித்திட்டத்தின் பெருகிவரும் ஆதாரங்களை இல்லாதழிக்க முயன்றனர். அந்த மனப்பான்மையுடன், காங்கிரஸ் பெரும்பான்மை தலைவர் ஸ்டெனி ஹோயர் விவாதத்தை நிறைவு செய்கையில், குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் தலைவரும், பரம பிற்போக்குவாதியுமான லிஸ் செனியின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டினார். அவர் சதித்திட்டத்தில் ட்ரம்ப்பின் பங்கைக் கண்டித்து பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். ட்ரம்ப் தனது பங்கிற்கு நேரடியாக சட்டவிரோத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் குழுவின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதற்கான காங்கிரஸ் வாக்களிப்பைத் தடுக்க வேண்டும் என்று கூறும்வரை 2020 தேர்தலின் நியாயத்தன்மை மீதான ட்ரம்பின் அரசியலமைப்பற்ற மற்றும் சட்டவிரோத தாக்குதலை ஆதரித்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் செயல்திறனை அவர் பாராட்டினார்.
இறுதியில், பதவிவிலக்கல் குற்றச்சாட்டு மீதான வாக்கெடுப்பு என்பது ஒரு பிரயோசனமற்ற செயலாகும். அமெரிக்க அரசியலின் முழு கட்டமைப்பும் வன்முறையாக வலதிற்கு நகர்கிறது. வெளிப்படையான பாசிஸ்டுகள் அரசின் கட்டமைப்பில் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியினர் இப்போது காங்கிரஸின் இரு சபைகளையும் மற்றும் நிர்வாகக் பிரிவையும் கட்டுப்படுத்தினாலும், குடியரசுக் கட்சியினருடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தினை போன்ற ஒன்றை நிறுவ பைடென் முயல்கிறார். அவர் வேண்டுமென்றே பதவிவலக்கல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டதுடன் மற்றும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியிலுள்ள இணை சதியாளர்களை கைது செய்து வழக்குத்தொடர்வதை செய்யாது விட்டாலும் அவர்கள் பதவிவிலக வேண்டும் என்ற அழைப்புக்களை கூட நிராகரித்தார்
பைடென் நேற்று ஒரு புதிய கொரோனா வைரஸ் "உதவி" மசோதாவை "இரு கட்சி அடிப்படையில்" நிறைவேற்ற முற்படுவதாக அறிவித்தார். அதாவது மெக்கனெல் மற்றும் பிற பிற்போக்குவாதிகளுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கும். மேலும் அவர்கள், வேலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் கோவிட்-19 இனால் இறக்கும்போது, முதலாளிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகளை கோருவார்கள்.
ஜனநாயகக் கட்சியினரின் நித்திய மந்திரமான "ஒற்றுமை" மற்றும் "இரு கட்சி கூட்டு" போன்ற அனைத்துப் பேச்சும் உண்மையில் கிளர்ச்சியை தூண்டியவர்களுடன் கணக்குகளைத் தீர்ப்பது இருக்காது என்பதாகும். ஜனநாயகக் கட்சியினரின் பிரதான கவலை பாசிசத்தின் வளர்ச்சி தொடர்பானதல்ல. மாறாக வோல் ஸ்ரீட்டினதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் நலன்களை அச்சுறுத்தும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தின் அபிவிருத்தி தொடர்பானதாகும்.
இந்த நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீடு என்பது தீர்க்கமான கேள்வியாக உள்ளது. இதன் அர்த்தம், தொற்றுநோயிலிருந்து உழைக்கும் மக்களைப் பாதுகாக்க பணியிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் சாமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குதல், மற்றும் இப்போது பாசிச சதிகாரர்களால் குறிவைக்கப்படுகின்ற அமெரிக்க காங்கிரஸில் அல்லது 50 மாநிலங்களில் தலைநகரங்கள் ஏதேனும் ஒன்றை வன்முறையில் கைப்பற்றுவதற்கான எந்தவொரு புதுப்பிக்கப்பட்ட முயற்சிக்கும் எதிராக ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயாரித்தலாகும்.
முழு ஆளும் வர்க்க அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையிடாத வரை, பாசிச சதித்திட்டங்கள் தொடரும். பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி சர்வாதிகார அச்சுறுத்தலின் அடிப்படை மூலாதாரமாகவுள்ள முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன பலத்தை அணிதிரட்டுவதே.