மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த மாதத்தில் கொரோனா வைரஸினால் ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து, மொத்தமாக 93,000 மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், இந்த எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 386,000 பேர் ஆக இருந்து, சராசரியாக தினசரி 12,800 இனால் அதிகரிக்கின்றது.
இந்த பாரிய மரணம் எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் துரிதமாக அதிகரிக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை, Johnson & Johnson கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருவது பற்றி பலர் அஞ்சியதை உறுதிப்படுத்தும் ஒரு ஆய்வை வெளியிட்டது. கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் பிறழ்வுகள், தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் எவ்வளவு அதிகமாகப் பரவுகிறதோ, அவ்வளவுக்கு மாறுகிறது என்று விஞ்ஞானிகள் பல மாதங்களாக எச்சரித்துள்ளனர். மேலும் இது எவ்வளவுக்கு மாறுகிறதோ, அது தடுப்பூசிகளுக்கு குறைவாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் மிகவும் ஆபத்தானதாகவும் உருவாகிறது. தென்னாபிரிக்காவிலிருந்து வரும் புதிய திரிபு இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துகிறது. Johnson & Johnson இன் ஒற்றை தடுப்பூசி தென்னாபிரிக்காவில் மிதமான மற்றும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் 57 சதவிகிதம் மட்டுமே பயனுள்ளதாக இருந்தது. ஒப்பிடும்போது அமெரிக்காவில் அது 72 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது.
இதேபோன்ற தரவுகளை Novavax வியாழக்கிழமை வழங்கியது. அதன் தடுப்பூசி ஐக்கிய இராச்சியத்தில் 90 சதவீதம் பயனுள்ளதாகவும், தென்னாப்பிரிக்காவில் 49 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாகவும் இருப்பதாக தெரிவித்தது. கண்டுபிடிப்புகள் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நீண்டகால விளைவுகளை கொண்ட நடவடிக்கைகளின் அவசியத்தை காட்டுகின்றது. பாரிய தடுப்பூசி பிரச்சாரங்கள் மருந்து தொழில்சார் தலையீடு இல்லாமலும் பள்ளிகள் மற்றும் அத்தியாவசிய வணிகங்கள் முழுமையாக மூடப்படுவதுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
ஆனால் உலகம் முழுவதும், சரியாக இதற்கு எதிராக நடக்கிறது. கலிஃபோர்னியாவில் செவ்வாயன்று உணவகங்களில் உள்ளிருந்து உண்ணுதல் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை மீண்டும் தொடங்க அனுமதித்தது. நியூயோர்க் நகரம் பெப்ரவரி நடுப்பகுதியில் உணவகங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது. பிரேசிலில், உணவகங்கள், மதுபானக்கூடங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் இசை அரங்குகள் பல மாதங்களாக திறக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக மையங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக அணியத்தேவையில்லை.
வணிகங்களை மீண்டும் திறந்து தொழிலாளர்களை மீண்டும் பணியில் இருத்துவதற்கான பிரச்சாரத்தின் முன்னணியில், அமெரிக்காவின் புதிய பைடென் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பது உள்ளது.
ஜனநாயகக் கட்சி மேயர் லோரி லைட்ஃபுட் இன் அனுசரணையில் சிகாகோவில் மீண்டும் திறக்கும் திட்டங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. சிகாகோ பொதுப் பள்ளிகள் அமைப்பின் கல்வியாளர்களை நேரடியாக அரசு அமைப்பு, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக நிறுத்தி, பிப்ரவரி 1 ஆம் தேதி நகரம் பள்ளிகளை முழுமையாகத் திறக்க முயற்சிக்கிறது. நேரடியான கல்விகற்றலை மீண்டும் தொடங்குவதை எதிர்ப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டம் நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் பாதுகாப்பற்ற மறு திறப்புகளுக்கு எதிரான போராட்டத்தின் மைய புள்ளியாக மாறியுள்ளது.
சிகாகோவின் நிலைமை நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் வருகிறது. அலபாமாவில், மான்ட்கோமரி பொதுப் பள்ளிகள் அடுத்த வாரம் அனைத்து தொலைவிலிருந்து கற்றலுக்கும் செல்லப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. கோவிட்-19 இனால் நான்கு ஆசிரியர்கள் இறந்த பின்னரும் நிர்வாகம் இவ்வாறு உறுதியளித்திருந்தது. டொராண்டோவின் பெவேர்லி பொதுப்பள்ளியின் ஊழியர்கள் ஜனவரி 25 அன்று பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்ய மறுத்து வேலையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 20,000 இறப்புகள் ஏற்பட்ட ஜேர்மனியில், பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம். இறப்புகள் 100,000 க்கு மேல் உள்ள பிரிட்டனில், போரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் மார்ச் 8 க்குள் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மீண்டும் திறக்கும் பிரச்சாரங்கள் ஒரு பாரிய ஊடக ஆதரவினால் உதவியளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜேர்னலில் வெளியிடப்பட்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய (CDC) விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வினை ஒவ்வொரு செய்தி நிறுவனமும் பற்றிக்கொண்டுள்ளன. இது “சமூகப் பரவலை அதிகரிப்பதற்கு பள்ளிகள் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதற்குச் சிறிய ஆதாரங்களும் இல்லை” என்று கூறுகிறது.
USA Today இல் இருந்து "நேரடியான பள்ளிமுறை பாதுகாப்பாக இருக்க முடியும்" எனவும், NPR "பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான CDC ஆதாரமாக இருக்கிறது" என்றும், Washington Post இல் இருந்து "பள்ளிகளில் குறைவான கொரோனா வைரஸ் பரவுவதை CDC கண்டறிந்துள்ளது" என்றும், மற்றும் "முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்பதற்கான சான்றுகள் சுட்டிக்காட்டுவதாக CDC அதிகாரிகள் கூறுகிறார்கள்” என்று New York Times ம் உதாரணமாக குறிப்பிடுகின்றது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் போன்றே, பள்ளிகள் மீண்டும் திறக்க பாதுகாப்பானவை என்ற கூற்றுக்கள் முற்றுமுழுதான பொய்களாகும். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளி மூடல்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாக JAMA மற்றும் பிறவற்றிலும் வெளியிடப்பட்ட ஏராளமான ஆய்வுகள் காட்டுகின்றன. டிசம்பர் மாதத்தில் இருந்து Science இதழில் நிபுணர்களால் மறுஆய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி, 41 நாடுகளில், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மூடல்கள் ஒரு சமூகத்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்பதையும், பள்ளி மூடல்கள் பரவலை தணிப்பதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் காட்டுகிறது.
இந்த பாரிய தகவல்கள், செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியான ரான் க்ளெய்ன் இனால் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை சற்று பின்வாங்குமாறு கட்டாயப்படுத்தியது. பல பள்ளிகளில் "மாணவர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான முதலீடுகள்" இல்லை, இதனால் கால அட்டவணையில் மீண்டும் திறக்கப்படாது என்று அவர் தெரிவித்தார். CDC ஆய்வு "மிக கிராமப்புற விஸ்கான்சினில்" உள்ள தரவின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், "அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு ... பள்ளிகளை மீண்டும் பாதுகாப்பாக திறப்பதற்கு நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது" என்றும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார்.
உண்மை என்னவென்றால், தொடர்ச்சியான தொற்றுநோய்களின் போது பள்ளிகளை மீண்டும் திறப்பது பாதுகாப்பானது அல்ல. 40 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகள் முழுக்க முழுக்க நேரடியான கல்விகற்றலை செய்தாலும், ஆரம்ப பள்ளியிலிருந்து-12 வரையிலான பள்ளிகளில் ஏற்கனவே 511,000 தொற்றுக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கடந்த இலையுதிர்காலத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் தினசரி தொற்று எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்துகள் இருந்தபோதிலும், பைடென் மீண்டும் திறப்பதற்கான பிரச்சரத்தை தொடர்கிறார். பூட்டுதல்களை அவர் முற்றிலும் நிராகரித்து, மேலும் வரவிருக்கும் பாரிய மரணத்தைத் தடுக்க "நாங்கள் எதுவும் செய்ய முடியாது" என்றும் கூறினார். அவரது தொற்றுநோய் திட்டத்தில் 130 முறை மீண்டும் திறப்பதைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. இது ஜனவரி 21 முதல் "பள்ளிகள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ கல்வி நிலையங்களின் திறப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டை ஆதரிப்பதற்கான நிறைவேற்று ஆணை" என்ற தலைப்பில் அவரது நிர்வாக உத்தரவுக்கு இணங்க உள்ளது.
இது அமெரிக்காவையும், அதனுடன் உலகத்தையும் மற்றொரு பெரிய தொற்றின் எழுச்சிக்காக நிலைமையை அமைக்கிறது. பைடெனின் கோவிட்-19 ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் மைக்கல் ஓஸ்டர்ஹோம் வியாழக்கிழமை CNN இடம், "அடுத்த 6-14 வாரங்கள் தொற்றுநோயின் இருண்ட வாரங்களாக இருக்கலாம் என்று நான் கவலைப்படுகிறேன்." மறு திறப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்போது தொற்று எண்ணிக்கைகளில் என்னதான் குறைந்தாலும் அவை மிகவும் அழிவுகரமான எழுச்சிகளால் முன்பு இருந்ததைப் போலவே மறைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதை நடக்க அனுமதிக்க முடியாது! தென்னாபிரிக்க வகை திரிபினால் எழுப்பப்படும் ஆபத்துக்கள் தொற்றுநோயின் புதிய, தடுப்பூசி-எதிர்ப்பு திரிபுகளின் முழுத் தொடரின் ஆரம்பம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா மற்றும் அமெரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டவை உட்பட ஏற்கனவே வைரஸின் பல புதிய வகைகள் உள்ளன. அவற்றில் சில ஏற்கனவே டஜன் கணக்கான நாடுகளுக்கு பரவியுள்ளன. இந்த விகாரங்கள் குறித்த ஆரம்ப ஆராய்ச்சிகள் வைரஸின் இந்த புதிய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தாலும், இத்தரவு இதுவரை பூரணமற்றதாகும்.
அதே சமயம், புதிய வகைகளின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால், அவை பொதுவாக அதிக தொற்றும் தன்மையுடையவையாக இருக்கின்றன. இதனால் மிக எளிதாக சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை கட்டுமீறிவிடக்கூடும். மேலும் மருத்துவமனைகள் நிறைந்துவிடாவிட்டாலும் கூட அவை மிகவும் ஆபத்தானவை.
வைரஸின் அதிக ஆபத்தான திரிபுகள் ஏற்கனவே உள்ளன அல்லது ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சாத்தியமான நடவடிக்கையையும் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை இன்னும் அவசரமாக எழுப்புகிறது. பள்ளிகள், வணிகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தி ஆகியவை மூடப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், தங்களினதும் தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையையும் தியாகம் செய்வதற்கு இடையே தேர்வு செய்யவிட கட்டாயப்படுத்தக்கூடாது.
பூட்டுதல்களும் மற்றும் தடுப்பூசிகளும், வைரஸைக் கண்டறிய பாரிய பரிசோதனைத் திட்டத்தை செயல்படுத்துவதோடு, தொற்றுக்களைக் கண்டறிய தீவிர தொடர்புத் தடமறிதலும் இணைக்கப்பட வேண்டும்.
சிக்காகோ ஆசிரியர்கள் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகிறார்கள். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் சமூக சக்தி வோல் ஸ்ட்ரீட் இலாபங்களுக்கான உந்துதலுக்கு முற்றிலும் கீழ்ப்ணிந்துள்ள பைடென் நிர்வாகம் அல்ல மாறாக உயிர்களைக் காப்பாற்ற அர்ப்பணிக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கமாகும். சமூகத்தின் புரட்சிகர சோசலிச மாற்றத்திற்கான ஒரு பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சிகாகோவிலும் பிற இடங்களிலும் உள்ள ஆசிரியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து கல்வியாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.