முன்னோக்கு

ஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரம்பின் ஜனவரி 6 பாசிசக் கிளர்ச்சிக்கு குடியரசுக் கட்சி, காவல்துறை மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்பின் முக்கியமான பிரிவுகளிலிருந்து உயர்மட்ட ஆதரவைப் பெற்றது என்பதை ஊடக அறிக்கைகளின் புதிய தகவல்கள் காட்டுகின்றன. இந்த வெளிப்பாடுகள், அரசியலமைப்பையும் தூக்கியெறிய முயன்ற சதி மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குறித்த முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை எழுப்புகின்றன.

கலவரத்திற்கு முந்தைய நாட்களில், ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தயாரிக்கப்படுவதற்கான தெளிவான அறிகுறிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும் மற்றும் திட்டமிடப்பட்ட தேர்தல் குழுவின் அத்தாட்சிப்படுத்துவதற்கு கூடிய பாதுகாப்பு வங்குமாறும் காங்கிரஸ் ஊழியர்கள் அமெரிக்க காங்கிரஸ் கட்டிட காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்ததாக வாஷிங்டன் போஸ்ட் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் "விளக்கங்களைக் கேட்கிறார்கள்" மற்றும் வன்முறை அச்சுறுத்தல் பற்றிய தகவல்களை அவநம்பிக்கையுடன் தேடுகையில், காங்கிரஸ் பொலிஸ் எந்தவொரு கணிசமான பதிலும் வழங்க மறுத்துவிட்டது என்று போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸ் தடைகளை மீறிச்சென்றது ஒரு தவறினாலோ அல்லது தகவல் பற்றாக்குறை காரணமாகவோ இல்லை என ஒரு NBC அறிக்கை உறுதிப்படுத்தியது. FBI மற்றும் நியூ யோர்க் நகர காவற்துறை காங்கிரஸ் பொலிஸுக்கு "ஜனவரி 6 ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை ஏற்பட வாய்ப்புகள் குறித்து போதுமான உளவுத் தகவல்களை" வழங்கியதாக NBC தெரிவித்துள்ளது. "முன்னர் அறிவிக்கப்படாத இந்த விவரங்கள், இந்த வாரம் FBI இன் உயர் அதிகாரி ஒருவர் வன்முறைக்கான அறிகுறிகள் இருக்கவில்லை என்று கூறியதை மறுக்கின்றன. மேலும் காங்கிரஸ் கலவரத்தினை பற்றி எந்த உளவுத்துறை அதிகாரிகள் முன்னர் மதிப்பாய்வு செய்தார்கள் என்ற கேள்விகளையும் இதனுடன் சேர்க்கிறது" என்று NBC குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 6, 2021 வாஷிங்டன் காங்கிரஸ் கட்டிடத்தில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஒரு பொலிஸ் தடையை உடைக்க முனைகின்றனர் (AP Photo/John Minchillo)

தாக்குதலின் போது கும்பலிடமிருந்து தப்புவதற்காக அலுவலகங்களில் அதிகாரிகளும் ஊழியர்களும் பதுங்கியிருந்தபோது, காங்கிரஸ் பொலிஸ் தலைமையகம், காங்கிரஸின் நிர்வாகக் குழுவின் தலைவரும் அதன் அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் காங்கிரஸின் அங்கத்தவரான ஜோ லோஃப்கிரென்னிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை எடுக்க மறுத்துவிட்டது. அத்துடன் தேசிய காவற்படை படையினரை ஈடுபடுத்துவது பற்றி அவரிடம் பொய் கூறியுமுள்ளது. பின்னர் காங்கிரஸின் பெண் அங்கத்தவர் மாக்சின் வாட்டர்ஸ் உதவி கோரியபோது தொலைபேசியை பதிலளிக்காது வைத்துவிட்டனர்.

நவம்பர் 3 தேர்தலுக்குப் பின்னர் ட்ரம்ப் தனது விசுவாசிகளால் நிரம்பியிருந்த பென்டகனுக்குள் இருந்தும் சதி முயற்சிக்கான முக்கிய ஆதரவு வந்தது.

முற்றுகையின்போது, ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மேரிலாந்து ஆளுநர் லாரி ஹோகனை தங்கள் பதுங்கு குழியிலிருந்து அழைத்து தேசிய காவல் படையின் ஆதரவைக் கோரினர். அவர்களை வெளியேற்ற தனது மாநில காவலரை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் பென்டகன் அவர்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு கேட்ட பல கோரிக்கைகளை மறுத்துவிட்டது என்று ஹோகன் கூறினார். ஒரு ஞாயிற்றுக்கிழமை CNN இற்கான நேர்காணலில்: "நாங்கள் பதில்களைப் பெற முயற்சிக்கிறோம், எங்களுக்கு பதில்கள் கிடைக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்" என ஹோகன் கூறினார்.

மேலும், வேர்ஜீனியா ஆளுனர் ரால்ப் நோர்தாம், நேற்று சபாநாயகர் நான்சி பெலோசி அவரை புதன்கிழமை அழைத்து, உதவி கோரினார் என்றும் தெரிவித்தார். “ரால்ப், என்னைச் சுற்றி கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை கேட்டேன். நாங்கள் இப்போது மிகமிக கவலைப்படுகிறோம்" என்ற பெலோசியின் வார்த்தைகளை நோர்தாம் மேற்கோள் காட்டினார்.

இவை பென்டகனின் பிரிவுகளின் ஈடுபாட்டின் அறிகுறிகள் மட்டுமல்ல. ஜனவரி 6 க்கு முந்தைய நாட்களில், பென்டகன் வாஷிங்டன் டி.சி. தேசிய காவற்படையினரை நிராயுதபாணியாக்கியதுடன், வாஷிங்டன் டி.சி. மேயர் மூரியல் பௌஸர் அவர்களுக்கு ஆயுதமளித்து தயாரிப்பு செய்யுமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது. ஜனவரி 6 நிகழ்வுகளுக்கு வழிவகுத்த விடயங்களை மீளாய்வு செய்த ஒரு அதிகாரபூர்வ பென்டகன் ஆவணம், இக்கலவரத்தை, "ஜனவரி 6, 2021 வாஷிங்டன் டி.சி.யில் முதல் அரசியலமைப்பு சட்ட ஆர்ப்பாட்டங்கள்" என்று குறிப்பிடுகிறது.

மேரிலாந்தின் கூட்டுப்படைத் தளமான ஆண்ட்ரூஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதும், குறிப்பாக இவ்வாறான நிலைமைகளுக்கு பயன்படுத்துவதற்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள ஒரு “விரைவான எதிர்த்தாக்குதல் படையை” பயன்படுத்துவதையும் பென்டகன் தடுத்தது. போதிய திட்டமிடல் இல்லாமல் அப்பிரிவு பயன்படுத்தப்படவில்லை என்று பென்டகன் கூறியது ஒரு வெளிப்படையான பொய்யாகும்.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானலின் உதவியாளரும் வெளிப்படையாக தனது மேலதிகாரியின் அதிகாரம் இல்லாமல் செயல்படுவதும், உத்தியோகபூர்வ கட்டளைத்தடைகளை தவிர்க்க கூடியவருமான ஒருவர் FBI இல் பணிபுரிந்த ஒரு தனிப்பட்ட நண்பரை அழைத்து நிலைமையை அவருக்குத் தெரிவித்தார். இதன் விளைவாக, அந்த நண்பர் "அமெரிக்க செனட்டர்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதற்கும், தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கும் வாஷிங்டன் FBI இன் கள அலுவலகத்திலிருந்து உள்ளடங்கிய ஒரு குழு உட்பட மூன்று தந்திரோபாய அணிகளில் முதலாவதை அனுப்பினார்."

ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் தாமஸ் கோல்டிட்ஸ் Fortune பத்திரிகையுடன் இராணுவத்திற்குள் இருந்து வரும் ஆபத்து குறித்து பேசினார். யேல் பல்கலைக்கழக சிந்தனைக் குழுவிற்கு தலைமை தாங்கும் West Point பேராசிரியரான கோல்டிட்ஸ், ஜனவரி 6 “ஒரு நல்ல விஷயம்” என்று நம்பிய இராணுவ அதிகாரிகளை பற்றிக் குறிப்பிட்டார்:

நாங்கள் அரை டஜன் மக்களைப் பற்றி பேசவில்லை. நாங்கள் பாதுகாப்புத் துறை முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி பேசுகிறோம். அவர்களில் பலர் ஏற்கனவே வாயை திறந்து, சமூக ஊடகங்களில் விஷயங்களை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் இது ஒரு கிளர்ச்சியும் அரசுக்கு எதிரான குற்றமுமாகும். எந்தவொரு காரணத்திற்காகவும், ஒரு கிளர்ச்சி ஒரு நல்ல யோசனை அல்லது நியாயமானது என்று நினைக்கும் இராணுவத்தில் உள்ளவர்கள், அடிப்படையில் மறைமுகமான ஆதரவாளர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது பாதுகாப்புத் தலைமையின் கடமையாகும்.

கூடுதலாக, காங்கிரஸின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் அவர்களது ஊழியர்களும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. கொலராடோ குடியரசுக் கட்சியின் காங்கிரஸின் பெண் அங்கத்தவர் லவ்ரன் போபர்ட், காங்கிரஸ் தாக்கப்படும் போது பெலோசியின் இருப்பிடத்தை கும்பலுக்கு நேரடியாக ட்வீட் செய்தார். ஒரு பாசிச QAnon ஆதரவாளரான போபெர்ட், “இன்று 1776” என்று காலை 7:30 மணிக்கு ட்வீட் செய்தார். பிற்பகல் 2:18 மணிக்கு, பெலோசி வெளியேற்றப்படுகையில், “சபாநாயகர் அவரது அறைகளில் இருந்து அகற்றப்பட்டுவிட்டார்” என்று ட்வீட் செய்தார்.

ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை தலைவர் ஜேம்ஸ் கிளைபர்ன், நேற்று CBS இடம் குடியரசுக் கட்சியினர் கும்பலுக்கு காங்கிரஸ் கட்டிட வரைபடங்களை வழங்கியதாகவும், கலவரக்காரர்களை கட்டிடத்திற்குள் உள்வர அனுமதித்ததாக தான் நம்புவதாக கூறினார்:

ஏதோ நடக்கிறது என்று நான் நம்புகிறேன். எங்கு செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வேறு சில காங்கிரஸ் அங்கத்தவர்கள், பக்கவாட்டு கதவுகள் வழியாக கட்டிடத்திற்குள் அவர்கள் வர அனுமதிக்கப்படுவதைக் கண்டதாக அவர்களின் ஊழியர்கள் கூறியதாக எனக்கு சொல்லப்பட்டது. இந்த எதிர்ப்பாளர்களுக்காக அல்லது நான் அவர்களை கும்பல் என்று அழைக்கிறேன், கட்டிடத்திற்குள் வர அந்த பக்க கதவுகளைத் திறந்தவர் யார்? காந்த கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் பிரதான நுழைவாயில் வழியாக அல்ல, பக்க கதவுகள் வழியாக? ஆம், அந்த கட்டிடங்களின் உள்ளே யாரோ இதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

ட்ரம்பின் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து விசாரணையின் அவசியத்தை இந்த உண்மைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் குடியரசுக் கட்சியும் இராணுவ புலனாய்வு எந்திரமும் சதித்திட்டத்தில் ஈடுபட்டன என்பதற்கான சான்றுகள் பெருகும்போது, ஜனநாயகக் கட்சி எந்தவொரு உண்மையான விசாரணையையும் எதிர்ப்பதற்கு அதிக குரல் கொடுப்பதுடன் மற்றும் குடியரசுக் கட்சி சதிகாரர்களுடன் "ஒற்றுமைக்கு" மிகவும் தீவிரமாக விரும்புகின்றது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடென் ஜனவரி 8 அன்று, காங்கிரஸிலிருந்து குடியரசுக் கட்சி சதித் திட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கான தனது எதிர்ப்பை தெரிவித்து, அதற்கு பதிலாக தனது "குடியரசுக் கட்சி சகாக்களுடன்" பணியாற்றுவதற்கும் "வலுவான" குடியரசுக் கட்சியை உறுதி செய்வதற்கும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

விசாரணையை மேற்கொள்வதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சியினர் பதவிவிலக்கல் நடவடிக்கைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இது முற்றிலும் ஒரு அடையாள நடவடிக்கையாகும். இது ஜனவரி 20 ஆம் தேதி ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அவரை பதவி நீக்காது. உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் இந்த வாரம் குற்றச்சாட்டுக்கு சபை வாக்களித்தாலும், குற்றச்சாட்டுகள் பைடென் நிர்வாகத்தின் குறைந்தது 100 நாட்கள் வரை செனட்டில் ஒப்படைக்கப்படாது என வார இறுதியில் சுட்டிக்காட்டினர். இது, குடியரசுக் கட்சி சதிகாரர்களுக்கு அரசியல் மூடுதிரையை வழங்குவதற்கும், ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் அரசியல் தாக்கங்களை மூடிமறைப்பதற்குமான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.

இது தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்: மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்திக் கொலை செய்வதற்கான அக்டோபர் சதித்திட்டத்தை விசாரிக்கத் தவறியது ஜனவரி 6 சதித்திட்டத்திற்கு வழி வகுத்ததைப் போலவே, இந்த முயற்சியை விசாரிக்கத் தவறுவது எதிர்கால சதித்திட்டங்களுக்கு மட்டுமே உதவும். பாசிச இயக்கங்கள் தங்கள் முதல் முயற்சிகளை குழப்பமாக காட்டுவது சிறிது காலம் கழித்து ஆட்சிக்கு வர மட்டுமே என்பதை எடுத்துக்காட்ட வரலாற்றில் போதுமான உதாரணங்கள் உள்ளன.

ஜனநாயகக் கட்சி விரைவில் காங்கிரசின் இரு சபைகளையும் கட்டுப்படுத்தும். அதன் குழுக்களுக்கு கட்டாய அழைப்பாணை வழங்க அதிகாரம் இருக்கும். சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை சாட்சியமளிக்க இது அழைத்து மற்றும் அவர்களின் கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பிற கடிதங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியும்.

அரசியலமைப்பையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் தகர்த்தெறியும் சதிகளை விசாரித்து அம்பலப்படுத்த காங்கிரஸ் அரசியலமைப்புரீதியாக கடமைப்பட்டுள்ளது. எனவே விசாரிக்கத் தவறுவது, அதனது பிரிவு 1 இலுள்ள பொறுப்புகளை சட்டவிரோதமாக மீறுவதும், அதிகாரங்களைப் பிரிப்பதை இரத்து செய்வதும் ஆகின்றது.

சதிகாரர்களின் இறுதி நோக்கம் இன்னும் அறியப்படவில்லை. பல பங்கேற்றவர்களின் அறிக்கைகள் மற்றும் செனட் மாடியில் கிளர்ச்சி உறுப்பினர்களிடம் பிளாஸ்டிக் பிணைப்பான்கள் (zip ties) இருந்தமை காங்கிரஸின் உறுப்பினர்களை கடத்துவதற்கான திட்டங்கள் சதியில் ஈடுபட்டவர்களிடம் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பதவியேற்பை தாமதப்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ள அல்லது பிற சலுகைகளை வென்றெடுப்பதற்காக பேரம் பேசும் பொருட்களாக காங்கிரஸின் கடத்தப்பட்ட உறுப்பினர்களின் உயிரை பயன்படுத்துவது -ஒருவேளை சபாநாயகர் பெலோசியை உள்ளடக்கியது- இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் அரசியல் நோக்கங்கள், தொடர்புகள் மற்றும் அமைப்புகளை வெளிக்கொணர்வது இப்போது அவசியமாகும். சதியை இயக்கியவர்கள் மற்றும் அவர்களின் குடியரசுக் கட்சி கூட்டாளிகள் குறித்த முழு அளவிலான பொது விசாரணையின் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். இத்தகைய விசாரணை குடியுரிமை அமைப்புகளுக்கும் பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கும் கேள்விகளை எழுப்பவும், என்ன நடந்தது என்பதை விளக்க சாட்சிகளை அழைக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். சதித்திட்டத்தினை வெளிப்படையாக எடுத்துக்காட்டவும், அதன் உள்ளடக்கங்களை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கு வெளிப்படுத்தவும் இது அவசியமாகும்.

Loading