முன்னோக்கு

ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு முழுமையான, பகிரங்க விசாரணைக்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6 சம்பவங்களின் புழுதி கூட அடங்குவதற்கு முன்னரே, அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் எங்கிலும் தோட்டாக்களின் துளைகளும் உடைந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் கண்கூடாத தெரிகின்ற போதிலும், அமெரிக்க அரசியல் ஸ்தாபகமோ காங்கிரஸ் சபைக்கு எதிராக முயற்சிக்கப்பட்ட அந்த பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான அரசியல் பொறுப்பை மூடிமறைக்க செயல்பட்டு வருகிறது.

இதுவொரு தனித்த அல்லது தற்செயலான சம்பவம் அல்ல, இதில் வலதுசாரி போராட்டக்காரர்கள் தன்னிச்சையாக செயல்பட்டனர். காங்கிரஸ் சபை மீதான தாக்குதல் உயர்மட்டத்திலிருந்து வழிநடத்தப்பட்ட ஒரு சதியாகும். அரசு எந்திரம், பொலிஸ் மற்றும் இராணுவத்திற்குள் உயர்மட்ட அதிகாரிகளால் பல வாரங்களுக்கு முன்னரே அதற்கு தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, ட்ரம்ப் நிர்வாகம் மீதும் மற்றும் அந்த பாசிசவாத பதவிக்கவிழ்ப்பு சதிக்கு உதவிய மற்றும் உடந்தையாய் இருந்த அனைவர் மீதும் ஒரு குற்றவியல் விசாரணை நடத்த கோருகிறது. அந்த சதிகாரர்கள் இப்போதும் சுதந்திரமாக உலவிக் கொண்டு, அவர்களின் அடுத்த படிகளைத் திட்டமிட்டு வருகிறார்கள். ஜனவரி 20 வரையில் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருப்பார், அபாயம் முடிந்து விடவில்லை!

வாட்டர்கேட் நெருக்கடியின் போது, செனட் விசாரணைகள், பரவலாக பகிரங்கமாகவும் தொலைக்காட்சியில் பேராவலுடன் பின்தொடரப்பட்ட நிலையில், அவை ஜனநாயகத்திற்கு எதிராக ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் சதியின் உண்மையை வெளியில் கொண்டு வருவதற்கு வாகனமாக இருந்ததுடன், இறுதியில் அவரைப் பதவியிலிருந்து பலவந்தமாக நீக்கவும் இட்டுச் சென்றது. ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தலைமையகத்தை ஆக்கிரமிப்பதற்காக நிக்சனால் உத்தரவிடப்பட்ட, முன்னாள் உளவுத்துறை முகவர்களின் ஒரு கும்பல் ஊடுருவியதுடன் வாட்டர்கேட் நெருக்கடி தொடங்கியது.

நிக்சன் வார்த்தைகளின்படி ஒரு “மூன்றாந்தர ஆக்கிரமிப்பு,” மற்றும் அதன் மீதான மூடிமறைப்புகள் மீதான பல மாத கால தொலைக்காட்சி விசாரணைகள் ஜனாதிபதியின் குற்றகரத் தன்மையை அம்பலப்படுத்தி நன்மதிப்பைப் பெற்றன. அமெரிக்க அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதியின் முதல் முயற்சியான ஜனவரி 6, 2021 சம்பவங்களின் எல்லா அம்சங்களுக்குள் ஒரு பகிரங்கமான, வெளிப்படையான, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், நேரடியான விசாரணையை நடத்துவது அதை விட மிகவும் அதிகமாகவே அவசியமாகும்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களை ஒரு பேரணியாக ஒன்றுகூட்டி நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுக்க அவர்களை அறிவுறுத்தி, அந்த வன்முறை தாக்குதலைத் தூண்டிவிட்ட முக்கிய நபராக ட்ரம்ப் பாத்திரம் வகித்தார் என்பது வெளிப்படையானதும் மறுக்க முடியாததுமாக உள்ளது. “அது பயங்கரமாக இருக்கும்,” என்று முன்கூட்டியே ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், பின்னர் அந்த பாசிசவாத கும்பலை "சிறப்பு நபர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் நேரடியான உடந்தையாளர்களில் மிசோரி செனட்டர் ஜோஷ்யு ஹவோலி மற்றும் டெக்சாஸ் செனட்டர் டெட் க்ரூஸ் ஆகியோர் உள்ளடங்குவர். அவர்களுக்குப் பின்னால் ஐந்து செனட்டர்கள் உள்ளனர், இவர்கள் பைடெனின் தேர்வுக் குழு வெற்றியை உறுதிப்படுத்துவதை ஆட்சேபிப்பதில் ஹவோலி மற்றும் க்ரூஸூடன் இணைந்திருந்தனர், மேலும் பிரதிநிதிகள் சபையின் 138 குடியரசுக் கட்சியினரும் அதையே தான் செய்தனர்.

குறைந்தபட்சம் குடியரசுக் கட்சியின் ஆறு மாநில சட்டமன்ற உறுப்பினர்களாவது அந்த வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலங்களில் பங்கெடுத்தனர். மேற்கு வேர்ஜினியா பிரதிநிதி டெர்ரெக் இவான்ஸ் அவர் அக்கட்டிடத்தில் நுழையும் ஒரு காணொளியைப் பதிவிட்டு, பின்னர் அதை நீக்கியதாக நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

கிளர்ச்சிக்கான திட்டங்கள் இரகசியமாக இருக்கவில்லை. கூட்டு அமர்விற்கான ஜனவரி 6 ஆம் தேதி சட்டப்படி நிர்ணயிக்கப்படுவதாகும், அந்நாளில் நேரடி தாக்குதலுக்கான திட்டங்கள் வலதுசாரி சமூக ஊடக தளங்களில் பரவலாக பரப்பப்பட்டிருந்தன. தேர்வுக் குழு வாக்குகள் எண்ணுவதைத் தொடங்குவதற்கான காங்கிரஸ் சபை கூட்டு அமர்வின் முதல் மணித்துளியிலேயே பாசிசவாத குண்டர்கள் வந்தடையும் விதத்தில், வெள்ளை மாளிகை பேரணியும் கான்ஸ்டியூசன் வீதி அணிவகுப்பும் மிகக் கவனமாக நேரம் கணக்கிட்டு திட்டமிடப்பட்டிருந்தது. மிகச் சிறிய தடையும் இல்லாமல் பொலிஸ் "தடுப்புகளை" மீறி நடந்து வந்த தாக்குதல்காரர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தை அடித்து நொருக்கியதுடன், அந்த நடைமுறைகளை நிறுத்த நிர்பந்தித்தனர்.

சம்பவங்கள் இன்னும் இரத்தக்களரியான திருப்பத்தை எடுத்திருக்கும்; ஊடுவியவர்களில் சிலர் ஆயுதமேந்தி இருந்ததுடன், செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களைப் பிணைக்கைதிகளாகவோ அல்லது சாத்தியமானால் கைகளைக் கட்டி கடத்தி செல்லவோ கைது செய்யப்பட்டவர்கள் சிலரிடம் பிளாஸ்டி பிணைப்பான்கள் (plastic ties) இருந்தன.

பிரதிநிதிகள் சபையும் செனட்டும் எந்தளவுக்கு ஒரு பேரிடருக்கு நெருக்கமாக வந்தன என்ற விபரங்கள் ட்ரம்பை வார்த்தையளவில் எதிர்க்கும் மேரிலாந்து குடியரசுக் கட்சி ஆளுநர் லாரி ஹோகனால் வியாழக்கிழமை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது, அவர் நாடாளுமன்ற கட்டிடத்தின் கீழ்தளத்தில் பரபரப்பாக குழுமியிருந்த செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுடன் உரையாடியிருந்தார்.

“சொல்லப் போனால், [தேசிய] பாதுகாப்பு படையை அனுப்புமாறு எங்களுடன் மன்றாடிய [பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி] தலைவர் [ஸ்டேனி] ஹோயருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் அந்த அறையில் சூமரிடம் கூச்சலிட்டு கொண்டிருந்தார், அவர்கள் முன்னாலும் பின்னாலும் வந்துவிட்டார்கள் நமக்கு அதிகாரம் வேண்டும், 'நமக்கு அதிகாரம் இல்லை என்று நான் கூறுகிறேன்' என்றேன்.”

அவர் மாநில தேசிய பாதுகாப்புப் படைகளை வாஷிங்டன் டி.சி. இல் நிலைநிறுத்துவதற்கான ஹோகனின் கோரிக்கையை பென்டகன் மறுத்துவிட்டதாக ஹோயர் மற்றும் சூமருக்கு ஹோகன் விவரித்தார். மேரிலாந்து பாதுகாப்புப் படையின் தலைவர் "பரிசோதித்து பார்த்தாகிவிட்டது, நமக்கு அதிகாரம் இல்லை,” என்று ஹோகன் காங்கிரஸ் சபை தலைவர்களுக்குத் தெரிவித்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், “முற்றிலும் எதிர்பாராத முறையில், வழமையான வழிமுறைகள் எதுவோ அவ்விதமாக இல்லாமல், பாதுகாப்புச் செயலரிடம் இருந்தும் இல்லாமல்,” மாறாக ஆயுதப்படை செயலர் ரெயன் மெக்கார்த்திடம் இருந்து நிலைநிறுத்தும் கோரிக்கை வழங்கப்பட்டதாக அவருக்கு ஓர் அழைப்பு வந்ததை ஹோகன் தெரிவித்தார். பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதற்கு, வெளிப்படையான முப்படைகளின் தலைமை தளபதியிடம் பேசிய பின்னர் அல்ல, துணை ஜனாதிபதி மைக் பென்சிடம் பேசிய பின்னரே இராணுவம் உடன்பட்டதாக வெவ்வேறு செய்திகள் குறிப்பிட்டன.

பாரிய வாக்கு மோசடி மற்றும் கள்ள வாக்குகள் என ட்ரம்பின் பொய்களையே உயர்மட்ட குடியரசுக் கட்சியினர் எதிரொலித்தனர், அது தலைநகர் மீதான வேட்டைக்கு அரசியல் மூடிமறைப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டது. போட்டி மிகுந்த மாநிலங்களில் தேர்வுக் குழு வாக்குகளுக்கு முன்வைக்கப்பட்ட ஆட்சேபணைகள், தேர்வு முடிவுகளைக் காங்கிரஸ் சபை அங்கீகரிப்பதை வன்முறையாக நசுக்குவதை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்த வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் நேரடியாக ஒத்துழைந்தவர்களுக்கு கூடுதலாக, குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் சபை உயர்மட்ட தலைவர்கள், செனட் பெரும்பான்மை அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னல் மற்றும் பிரதிநிதிகள் சபை சிறுபான்மை அணி தலைவர் கென் மெக்கார்த்தே ஆகியோரும், நவம்பர் 3 வாக்கெடுப்புக்கு ஒரு சில நாட்களுக்குள் வாக்குச்சீட்டு எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் தெளிவாகி இருந்த, தேர்தல் முடிவை முன்பில்லாத விதத்தில் ஒப்புக் கொள்ள ட்ரம்ப் மறுப்பதற்கு உதவுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். அவர்கள் தேர்தல் மோசடி மீதான ட்ரம்பின் வாதங்கள் சட்டபூர்வமானதாக வலியுறுத்தனர்.

இராணுவ, உளவுத்துறை மற்றும் அரசு எந்திரத்தின் பிரிவுகளுக்குள் ஆட்சிக்கவிழ்ப்புக்கான ஆதரவு எந்தளவுக்கு இருந்தது என்பதன் மீது மற்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முதலாவதாக, நாடாளுமன்ற கட்டிடத்தின் பொலிஸ், அவ்விடத்தில் பாசிசவாத குண்டர்களை ஊடுருவ தெளிவாக அனுமதித்ததுடன், கிளர்ச்சியாளர்களுடன் நட்புடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர், மேலும் பாசிசவாதிகள் உள்நுழைய வசதியாக தடுப்புகளையும் நீக்கினர்.

இரண்டாவதாக, ஆளுநர் ஹோகனின் அறிக்கைகள் எடுத்துக் காட்டுவதைப் போல, நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தேசிய பாதுகாப்புப்படை துருப்புகளை அனுப்புவதற்கான கோரிக்கையை பென்டகன் ஆரம்பத்தில் நிராகரித்தது. (கொலம்பியா மாவட்டத்தில், இது மாநில அரசு பகுதி அல்ல, மத்திய அரசுக்கு உட்பட்டது, இந்த துருப்புகள் ஆயுதப்படை செயலரால் அனுப்பப்பட்டன). முன்னாள் சிஐஏ முகவரும் பென்டகன் அதிகாரியுமான, இப்போது காங்கிரஸ் சபையின் பெண் உறுப்பினராக உள்ள எலிசா ஸ்லாட்கின், தொலைபேசி மூலமாக, முப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி ஐ தொடர்பு கொண்ட பின்னர் தான், பென்டகன் 1,100 சிப்பாய்களை நிலைநிறுத்தி நடவடிக்கை எடுக்க திரும்பியது.

மூன்றாவதாக, நாடாளுமன்ற கட்டிடத்தை நொருக்கியவர்களில் Proud Boys, Oathkeepers அமைப்பின் கூறுபாடுகளும், பாசிசவாத QAnon சதி தத்துவத்தின் ஆதரவாளர்களும் உள்ளடங்கி இருந்தனர். தேர்தலுக்கு முன்னர் "பின்புலத்தில் பக்கபலமாக நிற்குமாறு" ட்ரம்ப் உத்தரவிட்டிருந்த இந்த குழுக்கள், ஜோர்ஜியாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சபை பெண் உறுப்பினரும் QAnon ஆதரவாளருமான டெய்லர் க்ரீன், மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டுகளைக் கொண்டு செல்ல முயன்ற "துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைகள்" கோரும் நடவடிக்கையாளர், கொலரோடாவின் லோரென் போபேர்ட் போன்ற நேரடியான பிரதிநிகளைக் காங்கிரஸ் சபையில் கொண்டுள்ளன.

பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பிலோசி வியாழக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சியினர் அவர்களின் "பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறிவிட்டதாகவும்" “ஜனாதிபதிக்கு உதவி" இருந்ததாகவும் அறிவித்து, அந்த தாக்குதலுக்கு உத்வேகம் கொடுத்த சதி தத்துவங்களை ஊக்குவித்த அவர்களை "கணக்கில் கொண்டு வர" அழைப்பு விடுத்தார். அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான சதிக்கான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் சபையின் பெரும்பான்மை குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கொண்டு வர முடியும், கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

பெலோசி மற்றும் பைடென் இருவருமே, வியாழக்கிழமை வெவ்வேறு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இந்த முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் பரந்த அரசியல் முக்கியத்துவத்திலிருந்து கவனத்தைத் திசைத்திருப்ப முயன்றதுடன், வன்முறையைத் தூண்டிவிடுவதில் தனித்து ட்ரம்பின் தனிப்பட்ட பாத்திரத்தின் மீது சாட்டினர். அவ்விரு ஜனநாயகக் கட்சி தலைவர்களும் அமெரிக்க ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் உள்நாட்டில் வளர்க்கப்பட்டுள்ள பாசிசவாதிகளிடம் இருந்து அல்ல மாறாக மாஸ்கோவிடம் இருந்து வந்தது என்பதைப் போல, ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு கருவியாக விவரித்தனர்.

ஜனவரி 6 சம்பவங்களுக்கும் ரஷ்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் கூட, இது மக்கள் கோபத்தை ஒரு வெளிநாட்டு எதிரியை நோக்கி திருப்பிவிடுவதற்கான குரூரமான முயற்சியாகும். ட்ரம்ப் முதன்முதலில் பதவியேற்றதில் இருந்தே ஜனநாயகக் கட்சி எல்லா எதிர்ப்புகளையும், குறிப்பாக சிரியா மற்றும் ரஷ்யா சம்பந்தமான வெளியுறவு கொள்கை கருத்துவேறுபாடுகள் அடிப்படையிலான ஒரு வலதுசாரி திசையில் திருப்பி விடும் நோக்குநிலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் ஒவ்வொரு அம்சத்தையும் அம்பலப்படுத்த, உழைக்கும் மக்கள் தேசிய தொலைக்காட்சியில் நடத்தப்படும் முழுமையான, பகிரங்கமான காங்கிரஸ் சபை விசாரணையைக் கோர வேண்டும். இதுவும் உடனடியாக தொடங்க வேண்டும் மற்றும் அந்த விசாரணை விரைவில் முன்னாள் ஜனாதிபதியாக ஆக உள்ளவரையும் அவரின் உயர்மட்ட உதவியாளர்கள் அனைவரையும், அத்துடன் காங்கிரஸ் சபையில் ஆட்சிக்கவிழ்ப்புக்குத் தூண்டிவிட்ட முன்னணி குடியரசுக் கட்சியினரையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பாசிசவாத சதி அபாயங்கள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கையூட்ட வேண்டிய ஜனநாயகக் கட்சியோ, காங்கிரஸ் சபை மற்றும் வரவிருக்கும் பைடென் நிர்வாகம் இரண்டிலும், ஜனவரி 6 சம்பவங்கள் மீது எந்தவொரு ஆழமான மற்றும் விவரமான விசாரணையையும் விடாப்பிடியாக எதிர்க்கிறது.

இந்த சதி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது சமூக சமத்துவமின்மை மற்றும் ஆளும் வர்க்கத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மனிதப்படுகொலை கொள்கைக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைப் பலவந்தமாக ஒடுக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு, ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்டலைக் கோருகிறது.

Loading