மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் மறுக்கப்பட்டு, பெல்மார்ஷின் அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மனநல காரணங்களுக்காக அசான்ஜ் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து திங்களன்று தீர்ப்பளித்த பின்னர், மாவட்ட நீதிபதி வனசா பாரைட்சர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பின் மீது அரசு தரப்பு மேல்முறையீடு தாக்கல் செய்யும் வரை அசான்ஜ் காவலில் இருப்பார்.
ஜாமீன் முடிவை உயர்நீதிமன்றத்திற்கு அசான்ஜின் சட்டக்குழு எடுத்துச் செல்வதாக விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹிராஃப்சன் அறிவித்தார்.
ஜாமீன் வழங்க பாரைட்சர் மறுத்திருப்பது, ஒப்படைக்கப்படக்கூடாது என்ற அவரது முடிவு அரசியல் கருத்தினால் உந்துதல் பெற்றது என்பதையும், அசான்ஜின் உடல்நலம் குறித்த உண்மையான அக்கறையினால் அல்ல என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இங்கிலாந்தின் கோவிட்-19 தொற்றுநோய் பெருமளவில் அதிகரிக்கும் போது, அசான்ஜ் அவரது மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைமைகளில் கீழ்வைக்கப்படுவார்.
செவ்வாயன்று Sydney Morning Herald பத்திரிகையுடன் பேசிய முன்னாள் சிறப்பு குற்றப்பிரிவுத் தலைவரும், நாடுகடத்துப்படுவதற்கான அரச வழக்கு தொடுனர் சேவையின் தலைவருமான நிக் வாமோஸ், மேல்முறையீடு எடுப்பது இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.
தனது முடிவில், சுவீடனின் மோசமான பாலியல் வன்கொடுமை விசாரணை மற்றும் ஒப்படைப்பு கோரிக்கை தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய பின்னர் 2012 ஆம் ஆண்டில் அசான்ஜ் ஈக்வடோர் தூதரகத்தினுள் அடைக்கலம் பெற்றுக்கொண்டது அவர் எதிர்காலத்திலும் தப்பியோடும் விருப்பத்திற்கு சான்றாகும் என்ற அரச வழக்குரைஞரின் வற்புறுத்தலை பாரைட்சர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு அபத்தமான மற்றும் பழிவாங்கும் நிலைப்பாடாகும்.
ஒபாமா நிர்வாகத்தால் விக்கிலீக்ஸ் மீது கொடூரமான தாக்குதல் மற்றும் அதன் நிறுவனரை உலகளவில் தேடியது ஆகியவற்றின் பின்னணியில், அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் கோருவதற்கான தனது உரிமையை அசான்ஜ் பயன்படுத்தினார். மே-செப்டம்பர் 2019 வரையில் இந்த நடவடிக்கைகளுக்கு அவர் அதிகபட்ச தண்டனை பெற்றுள்ளார் என்பது மட்டுமல்லாமல், வனசா பாரைட்சர் தானே "அடக்குமுறை" என்று! தீர்ப்பளித்த, 2012 இல் அவர் தவிர்க்க முயன்ற பழிவாங்கும் ஒப்படைப்பு நடவடிக்கை ஜாமீன் மறுக்க ஒரு காரணியாக இப்போது பயன்படுத்தப்படுகின்றது.
மேலும், அசான்ஜின் வழக்கறிஞர் எட்வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் QC தனது சமர்ப்பிப்பில் விளக்கமளித்தபடி, சூழ்நிலைகள் பாரியளவில் வேறுபட்டவையாக உள்ளன. அசான்ஜ் இப்போது அவருக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பைக் கொண்டுள்ளார். அத்துடன் அவர், GPS அடையாளம் கண்டுகொள்ளும் குறிச்சொல்லுடன் கூடிய வீட்டுக் கைதுக்கான கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளார். இவ்வாறான நிபந்தனை பயங்கரவாத சந்தேக நபர்களையும் ஜாமீன் பெற அனுமதித்துள்ளது. ஒரு தூதரகத்தில் தஞ்சம் கோருவதற்கான அவரது அனுபவம் ஃபிட்ஸ்ஜெரால்டின் வார்த்தைகளில் "விரும்பத்தகாதது" என்பதை நிரூபித்துள்ளது. மேலும் அவரது புகலிடம் இரத்து செய்யப்படுவதற்கு முன்பு "ஏழு ஆண்டுகளாக அவர் அடைத்து வைக்கப்படுவதற்கு" வழிவகுத்தது. "அது அவர் மீண்டும் மீண்டும் செய்யவிரும்பக்கூடிய ஒன்று அல்ல."
அசான்ஜ் க்கு இப்போது இங்கிலாந்தில் ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை துணைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது அசான்ஜ் தப்பி ஓடாதிருப்பதற்கான ஒரு காரணமாக இருக்கிறது என்பதை தவிர, ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு அவரது குடும்பம் அங்கிருப்பது குறிப்பிடத்தக்க மனித உரிமை அடிப்படையிலான காரணங்களையும் வழங்குகிறது. சிறையில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, அசான்ஜ் “மார்ச் 2020 இலிருந்து அவரது குடும்பத்தை நேரில் பார்த்ததில்லை”. அவர் ஒப்படைக்கப்படுவதற்கான விசாரணை நிலுவையில் இருந்த 15 மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்ததால், அவர்களுடன் ஒருபோதும் ஒன்றாக வாழ முடியவில்லை.
ஃபிட்ஸ்ஜெரால்ட் குறிப்பிட்டது, அவரது மன மற்றும் உடல் நலத்தைப் பற்றிய கேள்விக்கு அசான்ஜின் குடும்பம் மிகவும் அவசியமானதாக உள்ளது. "ஜாமீன் வழங்குவது", "அவரது குடும்பத்தினருடன் உண்மையான நேரடியான தொடர்புகளை அனுமதிக்கும், அது ... மன உளைச்சலைத் தணிக்கும்" என்று அவர் கூறினார்.
ஒப்படைப்பு தொடர்பான தீர்ப்பில் அசான்ஜிற்கு தனது குடும்பம் அளித்த ஆதரவின் பயனை பாரைட்சர் ஒப்புக் கொண்டார். அவர்கள் அவரை "அவரது எதிர்காலத்தைப் பற்றி உண்மையான பயம் கொண்ட மனச்சோர்வடைந்த மற்றும் சில நேரங்களில் விரக்தியடைந்த மனிதர்" என்று விவரித்துள்ளனர்.
கோவிட்-19 இன் தாக்கத்திற்கு அசான்ஜ் உள்ளாகலாம் என்ற அபாயத்தை ஜாமீன் "கணிசமாகக் குறைக்கும்". ஃபிட்ஸ்ஜெரால்ட் சமீபத்தில் பெல்மார்ஷ் சிறைச்சாலையில் வைரஸின் “கடுமையான வெடிப்பு” குறித்து சுட்டிக்காட்டினார். மேலும் அங்கு கிறிஸ்மஸுக்கு முன்பு 59 நேர்மறையான தொற்றுக்கள் இருந்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “எவ்வாறு பார்த்தாலும், [இங்கிலாந்தின் தொற்றுநோயின் நிலை] இப்போது மோசமாக உள்ளது, எந்தவொரு பார்வையிலும், அவர் பெல்மாஷில் இருப்பதை விட தனது குடும்பத்தினருடன் தனிமைப்பட்டு இருப்பது பாதுகாப்பானது” என்றார்.
பாரைட்சர் இந்த கவலைகளை நிராகரித்து, "இந்த சிறைச்சாலை இந்த தொற்றுநோய்களின் போது கைதிகளின் ஆரோக்கியத்தை பொருத்தமான மற்றும் பொறுப்பான முறையில் நிர்வகிக்கிறது" என்று அறிவித்தார். முந்தைய இரவில் பெல்மார்ஷில் இருந்து வந்த, மூன்று கைதிகள் மட்டுமே தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற மின்னஞ்சலின் அடிப்படையில், அந்த இடத்தில் மின்னஞ்சலின் வார்த்தைகளில் கடுமையான குழப்பங்கள் இருந்தபோதிலும் அரசு தரப்பு உத்தரவாதங்களை ஏற்க அவர் தேர்வுசெய்தார். ஃபிட்ஸ்ஜெரால்ட் கருத்துத் தெரிவிக்கையில், “இதன் பொருள் கடந்த நாட்களில் நேற்று மூன்று பேர் நேர்மறையாக பரிசோதித்திக்கப்பட்டிருக்கிறார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.
ஜாமீன் வழங்குவதற்கு ஆதரவாக அசான்ஜின் வழக்கறிஞர் "பரந்த விளக்கத்தை" முன்வைத்தார். "ஒப்படைப்பு தொடர்பான இக்கோரிக்கை நீண்ட விசாரணை முழுவதும் தடுப்புக்காவலுக்கான அடிப்படையாக இருந்தது. மேலும் அவருக்கு அதன் அடிப்படையில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இப்போது, நீங்கள் கருதப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள், மேலும் ஜூலியன் அசான்ஜ் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளீர்கள்…
"அந்த தீர்ப்பின் இயல்பான மற்றும் தர்க்கரீதியான விளைவு என்னவென்றால், அவர் தனது விடுதலையை குறைந்தபட்சம் நிபந்தனையின்படி மீண்டும் பெறுவார் என்பதாகும். பல நூற்றாண்டுகளாக ஆங்கில சட்டத்தின் ஒவ்வொரு நியதியும் என்னவென்றால், யாரோ ஒருவர் விடுதலைபெற உரிமை உண்டு என்று ஒரு தீர்ப்பு வந்துவிட்டால்… அது குறைந்தபட்சம் நிபந்தனைக்குட்பட்ட விடுதலையைப் பெறுவதற்கு அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும்.”
நீதிமன்றத்திற்கு வெளியே பேசய விக்கிலீக்ஸ் ஆசிரியர் கிறிஸ்டின் ஹிராஃப்சன் பாரைட்சரின் முடிவை கண்டித்தார்: “இப்போது நீதிபதி பாரைட்சரிடமிருந்து ஜூலியன் அசான்ஜ் ஜாமீனில் விடுவிப்பதற்கான இந்த முடிவு கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூலியனின் உடல்நலம் குறித்து அவர் அளித்த தீர்ப்பை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது அது நீதியற்றது மற்றும் நியாயமற்றது என்று நாங்கள் கருதுகிறோம். அவரது உடல்நிலை நிச்சயமாக அவர் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் பெருமளவில் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.
“அவரை அங்கு திருப்பி அனுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை… இது மனிதாபிமானமற்றது, அதன் நியாயமற்றது. இந்த ஜாமீன் மறுப்பு பெரும்பாலும் சில மணிநேரங்களுக்குள் அல்லது சில நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மேலும் இது நிராகரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நான் சொல்வது போல, இது எந்தக் கண்ணோட்டத்திலிருந்தும் எந்த அர்த்தமும் இல்லாதது”.
எல்லைகள் இல்லாத நிருபர்களின் அமைப்பின் ரெபேக்கா வின்சென்ட், “இன்று எடுக்கப்பட்ட இந்த முடிவை இந்த அமைப்பு கண்டிக்கிறது, இது தேவையற்ற கொடூரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஜூலியன் அசான்ஜ் தாங்க வேண்டிய கடந்த பத்து ஆண்டுகால நரகத்தை இந்த நீதிமன்றத்தால் இல்லாதொழிக்க முடியாது, ஆனால் அவர்கள் அதை இனியாவது திருத்திக்கொள்ளலாம். செய்தித்துறைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக ஜூலியன் குறிவைக்கப்பட்டார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பொது நலனுக்காக தகவல்களை வெளியிடுவதால் மட்டுமே துன்பத்தை அனுபவித்தார். அவர் தனது விடுதலை பறிக்கப்பட்டு அநியாயமாக இனியொரு கணத்தையும் இழக்க வேண்டியதில்லை.
"அவர் பெல்மர்ஷ் சிறையில் இருக்கும்வரை அவரது மன ஆரோக்கியம் மற்றும் அவரது உடல் ஆரோக்கியம் குறித்த எங்கள் கவலைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த காவலில் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அது இங்கிலாந்து அரசாங்கத்தின் சட்ட மற்றும் தார்மீக பொறுப்பாகும்” என்றார்.
அசான்ஜின் வாழ்க்கை துணைவியான ஸ்ரெல்லா மோரிஸ் இந்த முடிவை “ஒரு பெரிய ஏமாற்றம்” மற்றும் ஜூலியன் முதலில் பெல்மர்ஷ் சிறையில் இருக்கக்கூடாது” என்று விவரித்தார். பாரைட்சர் ஜாமீனை நிராகரிப்பது அசான்ஜின் துன்புறுத்தல் இன்னும் முடிவடைவதற்கு வெகுதொலைவில் உள்ளது என்பதற்கான எச்சரிக்கையாகும். புதன்கிழமை தனது முடிவில் பாரைட்சர், "திரு அசான்ஜை பொறுத்தவரை, இந்த வழக்கு இன்னும் வெல்லப்படவில்லை" என அறிவித்திருந்தார்.
ஒப்படைக்கப்படுவதற்கு எதிரான அவரது தீர்ப்பை, "ஒற்றை நூலில் தொங்கவிடுகிறது" என்று அரசு தரப்பு விவரித்தது. இது அசான்ஜின் மன ஆரோக்கியம் மற்றும் தற்கொலை ஆபத்து ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டது மற்றும் அமெரிக்க வழக்கறிஞர்களின் ஜனநாயக விரோத வாதங்களை ஒவ்வொரு சட்ட புள்ளிகளிலும் ஏற்றுக்கொண்டது.
Sydney Morning Herald உடனான தனது நேர்காணலில் வாமோஸ் குறிப்பிட்டார், இந்த மேல்முறையீடு அசான்ஜ் அமெரிக்காவில் நன்கு நடத்தப்படுவார் என்ற வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் ஒப்படைக்கக்கூடாது என்ற முடிவை மாற்றியமைக்க ஒரு வாய்ப்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அமையும். "எடுத்துக்காட்டாக, அவரை ஒரு குறிப்பிட்ட சிறையில் தடுத்து வைக்கக்கூடாது அல்லது சில நிபந்தனைகளின் கீழ் வைக்கப்படலாம் அல்லது அவரது உடல்நலப் பாதுகாப்பை மேம்படுத்தலாம் அல்லது தற்கொலை செய்யாதிருப்பதைகண்காணிக்கலாம் என்று ஒப்புக் கொள்ளலாம்."
இந்த திட்டங்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளெய்ர் டோபின் புதன்கிழமை விசாரணையின்போது சுட்டிக்காட்டினார்: "தீர்ப்பின் குறிப்பிட்ட பகுதிகளை பூர்த்தி செய்யும் [மனநல சுகாதார பராமரிப்பு] வசதிகளை வழங்குவதற்கும் பரிசீலிக்கப்படுகிறது" என்றார்.
கோவிட்-19 குற்றச்சாட்டுகளில் 92 வயதான ஒரு நபர் உட்பட பல அசான்ஜ் சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியாக, சுமார் 50 அதிகாரிகள் மற்றும் பொலிஸ் வேன்களுடன் காவல்துறையினர் கும்பலுடன் வந்தனர்.
RT செய்தி நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பப்பட்ட காட்சிகள், காவல்துறையினர் ஊடகவியலாளர்களை தாக்குவதையும், அவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுவதையும், தங்களை பத்திரிகையாளர்களாக அடையாளம் காட்டியபோதும் கூட ஒளிப்படம் எடுப்போரை உடல் ரீதியாகத் தடுத்து நிறுத்துவதையும் காட்டியது. அங்கு வந்த சுயாதீன நிருபர் Gordon Dimmack, "சுயாதீன ஊடகங்களை அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது கைது செய்யப்படுவர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்" என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க
- பிரிட்டன் நீதிபதி அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தீர்ப்பளிக்கிறார்: இப்போதே ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்க!
- விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ் ஈராக் போர் ஆவணங்களைப் பிரசுரித்ததில் இருந்து பத்தாண்டுகள்
- அமெரிக்க இராஜதந்திர இரகசியங்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததற்கு பின்னைய பத்து ஆண்டுகள்