மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தென்னிந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor - TKM) தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு வர வேண்டும், அவர்கள் கர்நாடக மாநில அரசாங்கத்தின் வேலைக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை சவால் செய்வதுடன் பரந்தளவிலான கைதுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல்களை எதிர் கொண்டுள்ளனர். உற்பத்தியை 25 சதவிகிதம் அதிகரிக்கும் டொயோட்டாவின் முயற்சியை TKM தொழிலாளர்கள் எதிர்ப்பதுடன் அவர்களின் போராட்டத்தை குற்றவியல்மயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சவால் விடுக்கின்றனர்.
இரண்டு TKM ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நவம்பர் 9 ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தொழிலாளர் குறைகளை நிர்வாகத்திற்கு தெரிவிக்க முயன்ற தொழிற்சங்கத் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த நாள், நிர்வாகம் 432 ஏக்கர் பரப்பளவில் உள்ள TKM வளாகத்திலிருந்து தொழிலாளர்களை கதவடைப்பு செய்தது. ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டாவுக்கு 89 சதவீதமும், இந்திய நிறுவனமான கிர்லோஸ்கருக்கு 11 சதவீதமும் சொந்தமான TKM, பிடாடி வளாகத்தை உலகளவில் போட்டித்திறனுடையதாக வைத்திருக்க 25 சதவீத உற்பத்தி அதிகரிப்பை அது கோருகிறது. இது தற்போதைய 80,000 இலக்குக்கு பதிலாக மாதத்திற்கு 100,000 வாகனங்களை உற்பத்தி செய்ய வாகன தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும். நவம்பர் 18 இல் மாநில அரசாங்கம் வேலைக்கு திரும்பும்படி உத்தரவு வழங்கியதில் இருந்து மேலும் 20 தொழிலாளர்களை TKM பணி நீக்கம் செய்தது. அதன் விளைவாக பழிவாங்கப்பட்ட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 60 ஆகியது. உத்தரவுக்கு கீழ்ப்படிய தொழிற்சங்கம் தயார்நிலையை சமிக்ஞை செய்தபோதிலும் வேலைநிறுத்தம் செய்பவர்கள் அந்த நிபந்தனைகளை நிராகரித்ததுடன் தொடர்ந்து அதனை சவால் செய்தனர்.
பெங்களூருவுக்கு (முன்னாள் பெங்களூர்) அருகிலுள்ள பிடாடி ஆலைகளில் TKM ஊழியர் சங்கத்தின் (TKM.இ.யூ) உறுப்பினர்கள் ஒரு மாதகாலமாக நடத்தி வரும் வேலைநிறுத்தத்திற்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சி, முதல்வர் பி.எஸ் யெடியூரப்பா தலைமையிலான இந்து-மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) மாநில அரசாங்கம் வேலைநிறுத்தத்திற்கு எதிரான அதன் அடக்குமுறை நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறார்.
டிசம்பர் 10 ம் தேதி, பெங்களூரில் விவசாயிகளுடன் ஆயிரக்கணக்கான TKM தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியபோது, TKM தொழிலாளர்கள் TKM வளாகத்திற்கு எதிரே தங்கள் போராட்டத்தை நடத்த அமைத்த ஒரு தற்காலிக கூடாரத்தை மாநில காவல்துறை தகர்த்தது. சிறு விவசாயிகள் மீது பெரிய வேளாண் வணிகத்தின் ஆதிக்கத்தை அனுமதிக்கும் தீவிர வலதுசாரி பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தேசிய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 முதல் இந்திய விவசாயிகள் நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
"டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) ஊழியர்கள் உற்பத்தி வளாகத்திற்கு வருவதைத் தடுக்கும் தனிநபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டிசம்பர் 8 ம் தேதி, மாநிலத்தின் தலைமைச் செயலாளர் டி.எம். விஜய் பாஸ்கர், ஆலைகள் அமைந்துள்ள ராமங்கரா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்." இந்த நடவடிக்கை யெடியூரப்பா மற்றும் TKM. அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஒரு மூடிய கதவு சந்திப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது.
CNBC டிவி 18 இன் படி, பெங்களூருவில் உள்ள ஜப்பான் துணைத்தூதரக ஜெனரல் அகிகோ சுகிதா டிசம்பர் 1 ம் தேதி மாநிலத்தின் முதன்மை செயலாளர் கெளரவ் குப்தாவுடன் வேலைநிறுத்தம் குறித்து விவாதித்தார். அகிகோ சுகிதா ஊடகங்களிடம் இவ்வாறு கூறினார், “TKM ஆலையில் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம், திரு. குப்தாவிடம் நிலைமையின் வளர்ச்சியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினோம். ஜப்பான் அரசாங்கம் இது குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை, ஆனால் பெங்களூருவிலுள்ள ஜப்பானிய துணைத் தூதரகம் TKM ஆலையில் நிலைமையின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருகிறது, விரைவில் சம்பந்தப்பட்டவர்களிடையே ஊக்கமான உரையாடல் மூலம் அமைதியான தீர்வு காணப்படுவது சாத்தியம் என்று நம்புகிறோம்.”
அரசாங்க அதிகாரிகளின் மைய அக்கறை என்னவென்றால், இந்திய தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்பானது, பெரிய பன்னாட்டு நிறுவனங்களை நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் வணிக சார்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளை பாதிக்கிறது என்பது தான்.
நேற்று டொயோட்டா தொழிலாளர்கள் TKM வளாகத்திற்கு எதிரே ஒரு "குடை ஆர்ப்பாட்டத்தை" நடத்தினர், அது அரசாங்கத்தின் உத்தரவு மற்றும் தனித்தனியாக தொழிலாளர்கள் உற்பத்தி அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு மேலும் இடையூறுகள் ஏற்படாது என்று சத்தியம் செய்ய வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கைக்கு சவால் விடுத்தனர்.
நிறுவனம் கோரிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு சுமார் 700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முன்வந்ததாக TKM கூறிய போதிலும், டிசம்பர் 8 ஆம் தேதி 470 ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் டொயோட்டா தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் இவ்வாறு கூறினார்; “மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப வந்திருப்பதாக கூறி நிறுவனம் தொழிலாளர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயன்றது, ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு சிறிய சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பியுள்ளனர். நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக உள்ள தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தின்போது ஆலைக்குள் வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும், அவசியமெனில் மூட்டை முடிச்சுகளுடன் தொழிற்சாலைக்குள் வரலாம், அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் கூறியது. TKM ஆலையின் ஆறு வாயில்களும் கருங்காலிகள் நுழைவதை கண்காணிக்க தொழிற்சங்க உறுப்பினர்களால் கண்காணிக்கப்படுகின்றன. வேலைநிறுத்தம் செய்யும் எங்கள் தொழிலாளர்கள் உறுதியாக ஒற்றுமையாக நிற்கிறார்கள்."
அவர் மேலும் கூறுகையில், “பெங்களூரில் விவசாயிகளுடன் சேர்ந்து நாங்கள் நடத்திய இரண்டு நாள் கூட்டு ஆர்ப்பாட்டங்களால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம். ஆர்ப்பாட்ட ஊர்வலம் பெங்களூரு இரயில் நிலையத்திலிருந்து விதான சவுதா [கர்நாடக மாநில சட்டமன்ற இருப்பிடம்] மற்றும் மறுநாள் ராஜ் பவன் [கவர்னரின் இல்லம்] நோக்கி அணிவகுத்துச் செல்ல இருந்தன, ஆனால் நாங்கள் இறுதி இலக்கை அடைவதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களிலும் போலீசாரினால் சுதந்திர பூங்கா அருகே தடுத்து நிறுத்தப்பட்டோம். ஒற்றுமையின் ஒரு புதிய வளர்ச்சியாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவரும் வரவிருக்கும் காலகட்டத்தில் கூட்டுப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக ஒரு ‘ஐக்யா சமிதி’ [ஐக்கிய மன்றம்] அமைத்தனர்.
விவசாயிகளுடனான கூட்டு ஆர்ப்பாட்டங்கள் வேலைநிறுத்தத்திற்கு பெரும் ஆதரவைக் காண்பிக்கும் அதே வேளையில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு (JCTU) உட்பட இந்தியாவில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் ஸ்ராலினிஸ்டுகள், வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு எதுவும் செய்யாமல் வேலைநிறுத்தத்திற்கு உதட்டளவில் ஆதரவளித்தனர். வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தும் முயற்சியினால், வேலைநிறுத்தத் தலைவர்களை பரந்தளவில் கைது செய்வது உட்பட அரசாங்கமும் நிறுவனமும் சேர்ந்து தங்களது ஒடுக்குமுறையை இரட்டிப்பாக்கும் அபாயம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும், கொடூரமான வேலை நிலைமைகள் மற்றும் வலதுசாரி பாஜக ஆகிய இரண்டிற்கும் எதிராக இந்த வேலைநிறுத்தத்தை இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த எதிர்தாக்குதலை முன்னெடுப்பதற்கான முன்னோடியாக மாற்றுவதற்கான அபரிமிதமான சாத்தியங்கள் உள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், மோடி நிர்வாகத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும், இந்த வேலைநிறுத்தம் பிரான்ஸ் மற்றும் கிரேக்கத்தில் இருந்து நைஜீரியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா வரை பரவியுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது, குறிப்பாக இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தேசிய அரசாங்கங்களின் பதிலிறுப்பு மற்றும் சர்வாதிகாரத்தின் வளர்ந்து வரும் ஆபத்து குறித்த வெகுஜன கோபத்தால் தூண்டப்பட்டது. WSWS மூலமாக TKM வேலைநிறுத்தத்தை அறிந்த அமெரிக்காவில் உள்ள வாகன தொழிலாளர்கள் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்கின்றனர் மற்றும் வாகன நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிர் தாக்குதலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.