இலங்கை சிறையில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கோரி போராடிய எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தலைநகர் கொழும்பிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறைந்தது 8 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர் அருகிலுள்ள றாகம மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மருத்துவமனையின் துணை பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். காயமடைந்த மேலும் 61 கைதிகள், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஹர சிறையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களைக் கோருகின்றனர் (படம்: ஷெஹான் குணசேகர)

இலங்கை சிறைச்சாலைகளில் வேகமாக பரவி வரும் கொவிட்-19 வைரஸ் தொற்றாமல் இருக்க சிறை அதிகாரிகள் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் கோரினர். கொரோனா வைரஸ் இல்லாத இடங்களுக்கு மாற்றப்பட்டு வழக்கமான பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்பதே கைதிகளின் கோரிக்கையாகும்.

சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் வழக்கறிஞர் சேனக பெரேரா கூறுகையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்ட கைதிகளை தனிமைப்படுத்துவது சம்பந்தமான கோரிக்கைகளை ஒரு மாத காலமாக புறக்கணித்து வந்த சிறை அதிகாரிகள் மீது மஹர சிறைக் கைதிகள் விரக்தியடைந்துள்ளனர், என்றார்.

நேற்றைய நிலவரப்படி, இந்த ஆண்டு இலங்கை சிறைகளில் 1,098க்கும் மேற்பட்ட கொவிட் -19 தொற்றுகள் மற்றும் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. குறைந்தது 198 பேர் மஹர சிறையில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஞாயிற்றுக் கிமை போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளை அடக்குவதற்காக, அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் கலகம் அடக்கும் படையின் ஆதரவுடன் சிறைக் காவலர்கள் அணிதிரட்டப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் பொலிசாருக்கு தொடர்பு இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நேற்று அதிகாலை வரை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

இரண்டு காவலர்களை கைதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைதிகளால் ஒரு சமையலறையும் மருந்து களஞ்சியமும் தீப்பிடித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கைதிகளுக்கு எதிராக காவலர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய முந்தைய கொடூரங்களை நன்கு அறிந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள், சிறைக்கு வெளியே தகவல் கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தனர். பின்னர் பொலிசார் அவர்களை கலைத்தனர். நேற்று றாகம ஆஸ்பத்திரிக்கு வெளியே நூற்றுக்கணக்கான உறவினர்கள் கூடி இருந்ததோடு, சிறைச்சாலையில் நடந்த மரணங்கள் மற்றும் காயங்களுக்கு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.

மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொவிட் -19 வைரஸில் இருந்து பாதுகாப்பு மற்றும் முறையான சுகாதார பராமரிப்புகளைக் கோரும் கைதிகள் மீதான அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளில் சமீபத்தியது ஆகும். நவம்பர் 18 அன்று, கண்டி, போகம்பர சிறைச்சாலையில் நடந்த ஒரு ஆத்திரமூட்டலின் போது, ஒரு கைதி சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு 175 கைதிகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீவு பூராவும் தொற்று நோய் பரவிவந்த நிலையில், வெலிகட, மகஸின், மஹர, போகம்பர, பூஸ்ஸ, குருவிட்ட, அங்குனகொலபலச மற்றும் நீர்கொழும்பு உட்பட நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கடந்த இரண்டு வாரங்களாக எதிர்ப்புக்கள் வெடித்தன. நேற்று, பல கைதிகள் முறையான பாதுகாப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சையைக் கோரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கூரை மீது ஏறி போராட்டத்தைத் தொடங்கினர்.

மஹரவில் நடந்த கொலைகளுக்கு பதிலளித்த இராஜபக்ஷ அரசாங்கம், கொவிட்-19 பற்றிய கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் எதையும் பற்றி குறிப்பிடாமல், "கலகம் செய்யும் கைதிகள்" என்று குற்றம் சாட்ட முற்பட்டது.

றாகம மருத்துவமனைக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூடியிருக்கின்றனர் (படம்: WSWS)

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கலகத்தை தடுப்பதற்கு காவலர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை என தெரிவித்து, நிராயுதபாணிகளான கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முயன்றார்.

கேலிக்கூத்தான முறையில் பேசிய பெர்னாண்டோபுள்ளே, "இனந்தெரியாத ஒரு கை திடீரென செயல்பட்டுள்ளதுடன், கலவரத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிய ஒரு சுயாதீன விசாரணையை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார். மஹரவின் நிலைமை, "அமைதியின்மை போக்கின்" ஒரு பகுதியாகும், என்று அவர் வலியுறுத்தினார்.

கைதிகள் மீதான வன்முறைத் தாக்குதலைக் கண்டிக்கத் தவறிய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “அமைதியின்மை” குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை விசாரணை நடத்த நியமித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி பின்னர் அறிவித்தார். இந்த குழுவும், இதற்கு முந்தைய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட குழுக்ளைப் போலவே, மக்களின் சீற்றத்தை திசைதிருப்பவும், உண்மையை அடக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

"இனந்தெரியாத கை" பற்றிய பெர்னாண்டோபுள்ளேயின் குற்றச்சாட்டு, ஒரு தற்காப்பு பொய் ஆகும். இலங்கை சிறைகளில் நெரிசல் காணப்படுகிறது. ஒவ்வொரு சிறையும் கொள்ளளவை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான கைதிகளைக் கொண்டிருக்கின்றன. இது வைரஸ் தங்கியிருப்பதற்கும் வேகமான பரவலுக்கும் ஏதுவாக அமைகின்றது.

இலங்கையின் 22 சிறைச்சாலைகளின் கொள்ளளவு 12,000 என்றாலும், தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20,000 பேர் பிணை இல்லாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதே நேரம், சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ள கணிசமான எண்ணிக்கையிலானவர்கள், அபராதம் செலுத்த முடியாமல் உள்ளனர்.

கொவிட்-19 வைரஸில் இருந்து பாதுகாப்பு இல்லாததாலும், போதிய உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைக்காமையாலும் மற்றும் சிறை அதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாகவும் கைதிகள் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கைதிகளின் பாதுகாப்புக்கான கமிட்டியின் செயலாளர் சுதேஷ் நந்திமல் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மஹரவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது, சிறை அதிகாரிகள் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களைத் தொடங்கினர், பின்னர் கொலைகள் நடக்க அனுமதித்தனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்த சிறைகளில் கைதிகளின் மீதான வன்முறையான அடக்குமுறைகள் புதியதல்ல என்றாலும், இது சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம், இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுர சிறைச்சாலையில் அமைதியின்மையின் போது, காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்தனர்.

அதே நேரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் அல்லது தண்டனை கைதிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த, "தப்பி ஓட முயற்சிக்கும்போது சுடப்பட்டனர்" என்ற பொலிசார் பயன்படுத்தும் இழிவான சாக்குப்போக்கும் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் மஹர சிறைச்சாலையில் ஒரு இளம் கைதியின் மரணம் ஒரு அண்மைய உதாரணம் ஆகும். தப்பிக்க முயன்றபோது அவர் ஒரு விபத்தில் இறந்ததாக பொலிசார் தெரிவித்தனர், ஆனால் அவர் சிறை அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக உறவினர்கள் பின்னர் தெரிவித்தனர். இதுபற்றி முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து அதிகரித்து வரும் பொது விமர்சனங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ நிர்வாகத்தின் போது தடுப்புக்காவலில் மரணிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை குறித்து, அதிகாரம் இல்லாத இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனத்தை திருப்பியுள்ளது. இந்த ஆணைக்குழு, கடந்த ஜூன் மாதம் முதல், இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான எட்டுப்படுகொலைகள் நடந்திருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது.

மஹர சிறைக் கொலைகள் ஒரு தற்செயல் சம்பவம் அல்ல, மாறாக கொவிட்-19 தீவு முழுவதும் பரவிவருகின்ற நிலைமையில், இராஜபக்ஷ அரசாங்கத்தால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட அடக்குமுறை சூழலை இது சுட்டிக்காட்டுகிறது. நேற்றைய நிலவரப்படி, நாட்டின் கொவிட்-19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இறப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் 17 அன்று, வேலைத் தளத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை பற்றிய தமது எதிர்ப்பை வெளியிட்ட, நாட்டின் சுமார் 15,000 துறைமுகத் தொழிலாளர்கள் மீது, இராஜபக்ஷ, ஒரு அத்தியாவசிய சேவை ஆணையை விதித்தார். மஹர சிறைத் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ஜனாதிபதி இராஜபக்ஷ, ஓய்வுபெற்ற கடற்படை அட்மிரல் சரத் வீரசேகரவை புதிய பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக நியமித்தார்.

மஹர சிறைச்சாலையில் நடந்த இரத்தக்களரி அடக்குமுறையை, சமூக அமைதியின்மையை இன்னும் பரந்த அளவில் அடக்குவதற்கு இராஜபக்ஷ ஆட்சி மேற்கொண்டுவரும் சர்வாதிகார ஏற்பாடுகள் குறித்த ஒரு எச்சரிக்கையாக தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Loading