பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் "விரிவான பாதுகாப்பு சட்டத்தை" நிறைவேற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சர்வாதிகார நிகழ்ச்சி நிரல் குறித்து பத்திரிகைகளில் பெருகிய விமர்சனங்கள் இருந்தபோதிலும், பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் "விரிவான பாதுகாப்பு சட்டத்தை" ஏற்றுக்கொண்டது. பொது இடங்களில் பொலிஸை படமாக்குவதை தடைசெய்து, ஆர்ப்பாட்டங்களில் பொலிஸ் கண்காணிப்பை அதிகரிக்கும் சட்டம், கோவிட் -19 தொற்றுநோய் வெடித்ததிலிருந்து மக்ரோன் அரசாங்கத்தின் சர்வாதிகார பரிணாமத்திற்கு சாட்சியமளிக்கிறது.

குடியரசிற்கான பேரணி (LRM) மற்றும் அதன் வலதுசாரி கூட்டாளியான Agir ஆகியவைகளால் வழங்கப்பட்ட 388 வாக்குகள் ஆதரவாகவும், 104 எதிராகவும், 66 வாக்குகள் எதற்கும் வாக்களிப்பு செய்யாமலும் இச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது இப்போது ஒப்புதலுக்காக ஜனவரி மாதம் செனட்டுக்குச் செல்லும். பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ், "அவர் தனது சட்டமன்ற காலத்தின் முடிவில், அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படும்" என்று அறிவித்தார். இந்தச் சட்டத்தின் அப்பட்டமான ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான கூறுகள் உண்மையில் ஒரு சட்ட வடிவமைப்போடு இணக்கமானவை என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் ஒரு இழிந்த முயற்சி இதுவாகும்.

அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பல விதிகள் இந்த சட்டத்தில் உள்ளன. இந்த சட்டத்தில் அரசாங்கத்தின் திட்டம், ஆர்ப்பாட்டங்களில் ட்ரோன்கள் மூலம் வீடியோ கண்காணிப்பு பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்பதாகும். சட்டத்தை அமலாக்கும் காவல்துறையானது எதிர்ப்பாளர்களை கையாளும் போது பொது இடங்களில் ஒரு நிகழ்வின் படங்களை எடுத்து வெளியிட்டால் 45,000 யூரோக்கள் அபராதமும் ஒரு ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்படும்.

இது பொலிஸ் மிருகத்தனத்தின் ஆவணங்கள் மற்றும் வெளிப்பாடுகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக செயல்பட பாதுகாப்புப் படையினருக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. "மஞ்சள் சீருடை" போராட்டங்களின் போது, 10,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தாக்கி தடுத்து வைத்தனர், 4,400 பேர் காயமடைந்தனர், மற்றும் இரண்டு டஜன் கண்களை இரப்பர் தோட்டாக்களால் குருடாக்கினர், அவர்கள் தொடர்ந்து கொடூரமான செயல்களில் பதிவு செய்யப்பட்டனர். பாரிஸ் நகரில் Cédric Chouviat அல்லது மினியாபோலிஸில் உள்ள ஜோர்ஜ் ஃபுளோய்ட் ஆகியோரை பொலிஸ் மூச்சுத் திணறச் செய்யும் வீடியோக்கள், உலகளாவிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது, அவை தடைசெய்யப்படுவதோடு, பொலிசார் மீது குற்றம் சாட்டியவர்கள் மீது வழக்குத் தொடரப்படலாம்.

சமீபத்திய வாரங்களில் ஆர்ப்பாட்டங்களில் பலமுறை தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் சங்கங்கள், பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு "கடுமையான அச்சுறுத்தல்" என்று விமர்சித்தன. நீதித்துறைச் சங்கம், அது ஒரு "பொலிஸ் அரசு" மற்றும் "ஜனநாயக கட்டுப்பாடுகளின் சரிவு" என்று விமர்சித்தது. பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிரான குடிமக்களின் புகார்களை ஆராயும் பொறுப்பான அமைப்பின் கிளாரி ஹேடன், இது "தனியுரிமை மற்றும் தகவல் சுதந்திரம் உட்பட பல அடிப்படை உரிமைகளை மீறுவதால் கடுமையான அபாயங்களை ஏற்படுத்துகிறது" என்று அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகமானது நவம்பர் 16, திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், "முன்மொழியப்பட்ட சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மீறப்படுவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் கவலை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தது.

உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மானன், பிரெஞ்சுக்காரர்களை தூங்க வைக்க விரும்புகிறார், சட்டமானது "படம் எடுத்தல் ஆம், காவல்துறையை வேட்டையாடுதல், இல்லை" என்று பொருள் என்று அறிவிப்பதன் மூலம் எந்த மதிப்பும் இல்லை. பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும்போது படமாக்கப்படுவதை "உளவியல் ரீதியாக சங்கடமாக" உணர்கிறார்கள் என்ற கூற்றைத் தவிர வேறொன்றுமில்லாமல், எதிர்ப்பாளர்களையும் அவர்களின் தொலைபேசிகளையும் அல்லது கேமராக்களையும் பறிமுதல் செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படும்.

ஒரு பாசிச சர்வாதிகாரத்திற்கு திரும்புவதைத் தடுக்கும் வகையில், நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், இதன்மூலம் ஒரு இறந்த கடிதமாக இருக்கும். பிரான்சிலும் ஐரோப்பாவிலும் வேலைநிறுத்தம் செய்வதற்கான அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமைகளைப் பயன்படுத்துவது என்பது இப்போது மோசமாக காவல்துறையினரால் தாக்குதல் மற்றும் கடுமையான காயம் ஏற்படுவதைக் குறிக்கிறது. மார்சையில் ஒரு "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு பக்கத்தில் சென்றுகொண்டிருந்த, ஒரு 80 வயதான பெண் ஜினெப் ரெடூனே கொலை செய்யப்பட்டது போன்ற தூண்டப்படாத, ஆபத்தான வன்முறைச் செயல்களில் மக்ரோன் பொலிஸை ஆதரித்தார்; சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு பின்னர் பதக்கமும் வழங்கப்பட்டது.

பாதுகாப்புப் படைகள் நடத்தும் -தடியடிகள், LBD தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்துவது- ஆர்ப்பாட்டக்காரர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படும் போது, இதனால் மக்கள் சீற்றத்தின் இலக்காகிவிடுவோம் என்ற அச்சம் ஆகும். இப்போது மக்ரோன் இந்தக் கட்டுப்பாட்டை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

உண்மையைச் சொல்ல வேண்டும்: மக்ரோன் ஒரு சர்வாதிகாரத்தை அமைத்து வருகிறார். கால்பந்து வீரர் லிலியன் துராம் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கோஸ்டா-கவ்ராஸ் உள்ளிட்ட முக்கிய மக்ரோனின் வாக்காளர்கள் “திரு ஜனாதிபதி, நாங்கள் இதற்கு வாக்களிக்கவில்லை” என்ற தலைப்பில் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர், இது ஒரு எச்சரிக்கையும் மக்ரோனுக்கு வேண்டுகோளும் விடுத்து நிச்சயமாக தவிர்க்க முடியாமல் ஏமாற்றமடையும்: எங்கள் சுதந்திரங்கள் மற்றும் எங்கள் உரிமைகள் மீதான தாக்குதல் என்பது நவ-பாசிச தீவிர வலதுசாரி எப்போதுமே கனவு கண்டதை நிறுவுவதாகும்: ஒரு சர்வாதிகார அரசு, அங்கு சட்டத்தின் ஆட்சி காவல்துறையினரால் ஆளப்படுகிறது, சமூக எதிர்ப்புக்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை குற்றவாளியாக்குகிறது.”

மக்ரோனின் கொள்கையின் தன்னிச்சையான, சர்வாதிகார தன்மையானது, பல்கலைக்கழக ஆராய்ச்சி நிதி குறித்த ஒரு சட்டத்தை அரசாங்கம் தற்செயலாக நழுவவிட்டு வெளியான செய்திகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது, இது பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 45,000 டாலர் அபராதமும் விதிக்கிறது.

இந்த நிகழ்வுகள், 2017 ஜனாதிபதி தேர்தலின் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste) பகுப்பாய்வை நிரூபிக்கின்றன. இரண்டாம் சுற்றில் மக்ரோன் மற்றும் நவ-பாசிச மரின் லு பென் ஆகிய இரு வேட்பாளர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு ஒரு செயலூக்கமான பகிஷ்கரிப்பிற்கு PES அழைப்பு விடுத்தது. ஒரு ஜனாதிபதியாக லு பென் அறிமுகப்படுத்தும் எதேச்சாதிகார, அதிவலது ஆட்சிக்கு எந்த வகையிலும் மக்ரோன் ஒரு மாற்றீடு அல்ல என்று PES எச்சரித்தது.

அடிபணியா பிரான்ஸ் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற மத்தியதர வர்க்க போலி-இடது அமைப்புக்கள் ஒரு முழு நேரெதிர் நிலைப்பாட்டை எடுத்திருந்தன. முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோனுக்கு அவர்களின் வாக்காளர்களிடையே பரந்த வெறுப்பு இருந்தபோதிலும், அவர்கள் வாக்களிப்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவும், குறிப்பாக, மக்ரோனுக்கு வாக்களிக்காதவர்கள் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு உடந்தையாக இருப்பர் என்று வலியுறுத்தும் பத்திரிகை பிரச்சாரத்தை எதிர்க்கவும் மறுத்துவிட்டனர்.

மக்ரோனின் பதவிக்காலமானது PES நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, பாசிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளை திட்டமிட்டு தகர்த்து, நிதியப் பிரபுத்துவத்தை வளப்படுத்த அவர் விரும்பினார். தொழிலாளர் சட்டத்தை ஆணை மூலம் தகர்த்தல், மாலியில் போர் செய்தல், இரயில்வே தொழிலாளர்களின் அந்தஸ்தை உடைத்தல், ஓய்வூதியங்களை உடைப்பது போன்ற ஒரு பாரிய நிகழ்வுகளுக்கு முகங்கொடுத்த அவர், பிரெஞ்சுக்காரர்களின் கோபத்திலிருந்து அவரை பாதுகாக்க ஒரு அதிவலது பொலிஸ் எந்திரத்தையே நம்பியுள்ளார்.

2018 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்களின் வெகுஜன வேலைநிறுத்தங்களால் தொடங்கப்பட்ட ஒவ்வொரு கண்டத்திலும் பரவியுள்ள சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியை எதிர்கொண்டு, பிரான்சில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களின் வடிவத்தை எடுத்தது, மக்ரோன் தீவிர வலதுசாரிகளை ஊக்குவித்தார். விச்சி சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று பாராட்டிய அவர், தன்னுடைய திட்டத்திற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பின் எந்த வெளிப்பாடுகளுக்கும் எதிராக கலவர பொலிஸை அணிதிரட்டியுள்ளார்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 800,000 மக்களை கொன்ற முதலாளித்துவத்தின் கொலைகார ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கையானது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஜனநாயக நிறுவனங்கள் சரிந்து வருகின்றன. அமெரிக்காவில், ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது: ட்ரம்ப் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார், பென்டகனில் அதிவலதின் கீழ் ஆட்களை நியமிக்கிறார், மற்றும் அவரது எதிர்ப்பாளர்களை படுகொலை செய்ய முயன்ற அதி-வலது குடிப் படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறார்.

பிரான்சில், மக்ரோன் ஒரு பொலிஸ் அரசை முரட்டுச் சட்டங்களுடன் திணிக்கிறார், நிறுவப்பட்ட அரசியல் வர்க்கத்தில் யாரும் அதை எதிர்க்க மாட்டார்கள் அல்லது பொலிஸ் ஆட்சிக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை அணிரட்ட மாட்டார்கள் என்ற உண்மையை கணக்கில் எடுத்துள்ளார். உண்மையில், தொழிற்சங்க எந்திரங்கள் மக்ரோனுடன் அவரது பதவிக்காலம் முழுவதும் நெருக்கமாக பணியாற்றியுள்ளன.

தொழிலாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் போராட்டங்களுக்கு பல அமைப்புக்களை கட்டியமைத்துள்ளனர், மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக பாதுகாப்பு குழுக்களைக் கட்டுவது மிகவும் முக்கியமானது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் பிரச்சினைகள் தீர்மானகரமானவை. ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கை மற்றும் பொலிஸ் அரசு கொள்கைக்கு எதிராக ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதும், தொழிலாளருக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான தயாரிப்புக்களை செய்வதும்தான், வெகுஜனக் கொலைகளை தடுத்து, ஒரு சர்வாதிகாரத்தின் எழுச்சியை நிறுத்துவதற்கான ஒரே வழியாக இருக்கிறது.

Loading