மோடி அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களுக்கு எதிரான தேசிய பொது வேலைநிறுத்தத்தில் கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இணைகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முதலீட்டாளர் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.

250 மில்லியன் மக்களை உள்ளடக்கியதாக அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ள பிரமாண்டமான அணிதிரட்டல், மோடி நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிராக பெருகிவரும் வெகுஜன கோபத்தின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுடன், வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான ஆளும் உயரடுக்கின் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான தொழிலாளர்களின் தயார்நிலையை இது நிரூபிக்கிறது.

நவம்பர் 26, 2020 வியாழக்கிழமை, இந்தியாவில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின்போது கொல்கத்தாவில் ஒரு இரயில் பாதையை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்கின்றனர். (AP Photo / Bikas Das)

வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளில் வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் (சுமார் 100 அமெரிக்க டாலர்) ரொக்கப் பரிமாற்றம் செய்தல்; விவசாய எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் தொழிலாளர் எதிர்ப்பு தொழிலாளர் சட்ட குறியீடுகளை திரும்பப் பெறுதல்; அனைவருக்குமான சமூக பாதுகாப்பு; திட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் குறியீட்டுடன் குறைந்தபட்ச மாத ஊதியம் 21,000 ரூபாய்; விண்ணப்பம் சமர்ப்பித்த தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை கட்டாய பதிவு செய்தல்; அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் கட்டாய முன்கூட்டி ஓய்வு பெறும்படி நிர்ப்பந்திப்பதற்கு ஒரு முடிவு கட்டல்; அனைவருக்கும் பொது சுகாதாரம்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் பொது சுகாதாரத்திற்கும் 5 சதவிகிதம் பொதுக் கல்விக்கும் ஒதுக்கீடு ஆகியவை உட்படுகின்றன.

இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) உட்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. அவை இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளின் தொழிற்சங்க கூட்டமைப்புகளாகும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ). மற்ற கூட்டமைப்புகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) மற்றும் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) உடன் இணைந்த தொழிலாளர் முற்போக்கு முன்னணி ஆகியவை அடங்கும். ஆளும் பாஜக தலைமையிலான பாரதிய மஜ்தூர் சங்கம் (BMS) பங்கேற்கவில்லை.

தொழில் துறை, தொழில் மற்றும் பிராந்திய வாரியாக ஈடுபாடு மாறுபட்டிருந்தாலும், வங்கிகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எஃகு ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி வசதிகள் உள்ளிட்ட பொதுத்துறை பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை தேசிய வெளிநடப்பு உள்ளடக்கியது, இவை அனைத்தும் மோடி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல், ஒப்பந்த முறை உழைப்பை ஊக்குவித்தல் மற்றும் "தொழிலாளர்கள் வேலைநிறுத்த உரிமையை கட்டுப்படுத்தும்" தொழிலாளர்கள் வேலைநிறுத்த உரிமையை கட்டுப்படுத்தும் பிற்போக்குத்தனமான புதிய "தொழிலாளர் சீர்திருத்தம்” ஆகிய நடவடிக்கைகளை திரும்பப் பெறக் கோருகின்றன.

தென் மாநிலங்களான கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி, கிழக்கில் ஒடிசா மற்றும் வடகிழக்கில் அசாம் ஆகியவற்றில் மில்லியன் கணக்கான மக்கள் வெளிநடப்பு செய்தனர், இது "முழுமையான பணிநிறுத்தங்களை" உருவாக்கியது, இது பல மாநிலங்களில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியது. டெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் பட்டிணங்களில் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டன.

ஸ்ராலினிச சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) மாநில அரசாங்கம் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதால் கேரளா ஸ்தம்பித்தது. அரசுக்கு சொந்தமான KSRTC பேருந்துகள் இயங்கவில்லை, தனியார் பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்சிகள் இயங்கவில்லை, அரசு அலுவலகங்களும் பெரிய வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.

வேலைநிறுத்த நடவடிக்கை இரயில் சேவையை நிறுத்தியதுடன், கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர், காரியா மற்றும் தக்ஷின் பராசத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சாலை வாகன நடமாட்டங்களில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான கம்யூனிச எதிர்ப்பு திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மாநில அரசாங்கம் முன்பு கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் குண்டர் வன்முறைகளைப் பயன்படுத்தியது ஆனால் இந்த சமயம் அது வெளிநடப்பை தடுக்க முயற்சிக்கவில்லை. வலதுசாரி TMC அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தலில் பாஜக வை அதன் பிரதான எதிரியாக எதிர்கொள்கிறது.

ஒடிசாவில், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் மூலம் வேலை நிறுத்தப்படுவதைத் தடைசெய்ய பிஜு ஜனதா தளம் (BJD) தலைமையிலான மாநில அரசின் முயற்சியை மீறி மாநில தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். சேலம் ஸ்டீல் மற்றும் சென்னையின் புறநகரில் உள்ள MRF மற்றும் அசோக் லேலண்ட், திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலைகள், சிவகாசியில் பட்டாசு தொழில் மற்றும் IT துறை உள்ளிட்ட தென் மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அதேபோல் IT ஊழியர்களும் வெளிநடப்பு செய்தனர்.

நேற்றைய வேலைநிறுத்தம் குறித்த தகவல், செய்தி ஊடகங்களில் மிகக் குறைவாகவே இருந்தன. இது சுட்டிக்காட்டுவது என்னவென்றால் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிலைமைகள் குறித்த மக்கள் கோபத்தின் மத்தியில் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு வெகுஜன நடவடிக்கை தொடர்பான பெருநிறுவன உயரடுக்கின் அச்சத்தைக் குறிக்கிறது.

மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) தற்காலிகக் குழுவின் தலைவர்கள் குர்கானில் நேற்று போராட்டம் நடத்தினர். டெல்லியின் புறநகரில் உள்ள மற்றும் தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் மையமாக விளங்கும் அபார குர்கான்-மானேசர் தொழில்துறை பெல்ட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று அவர்கள் WSWS இடம் தெரிவித்தனர். ஒரு நிறுவன கைக்கூலி தொழிற்சங்கத்தை எதிர்த்து மானேசரில் மாருதி சுசுகி வாகன அசெம்பிளி ஊழியர்களால் MSWU உருவாக்கப்பட்டது.

MSWU உறுப்பினர்கள் 2011-12 ஆம் ஆண்டில் நிறுவனம் பராமரித்து வந்த அடிமை-தொழிலாளர் நிலைமைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு கூட்டு நிறுவன-அரசாங்க பழிவாங்கல் நடவடிக்கையில் 12 MSWU நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட 13 ஊழியர்கள் மீது ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு மார்ச் 2017 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.

அனைத்து மொழி, மதம் மற்றும் சாதி பிளவுகளை ஊடறுத்த நேற்றைய வேலைநிறுத்தம் இந்திய தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஒற்றுமையின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக இருந்தது. இது முஸ்லிம்களையும் பிற மத சிறுபான்மையினரையும் குறிவைத்து மோடி அரசாங்கம் இடைவிடாது சரமாரியாக நடத்தி வரும் இந்து பேரினவாத தாக்குதல்களுக்கு எதிரான மற்றும் ஆளும் உயரடுக்கு சிறு இனக்குழு-பிராந்திய, சாதிய மற்றும் வகுப்புவாத பிளவுகளை தொடர்ந்து தூண்டி விடுவதற்கும் எதிராக நேற்றைய வேலைநிறுத்தம் ஒரு சக்தி வாய்ந்த அடியாக இருந்தது.

நேற்றைய பொது வேலைநிறுத்தத்துடன் ஒன்றிணைந்து, இரண்டு நாள் விவசாயிகளின் தேசிய எதிர்ப்பு மற்றும் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகளின் குடை தளமான அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (All India Kisan Sangharsh Coordination Committee - AIKSCC) அழைத்த “டெல்லி சாலோ” அணிவகுப்பு இருந்தது. மோடி அரசு சமீபத்தில் நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்பதே அதன் முக்கிய கோரிக்கை. இந்த நடவடிக்கைகள் வேளாண்மை, வர்த்தகம், சேமிப்பு மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை நிர்ணயம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் மாபெரும் வேளாண் வணிகங்களின் தயவில் விவசாயிகளை நிறுத்துகிறது.

விவசாயிகளின் "டெல்லி சாலோ" அணிவகுப்பு மற்றும் பிற ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க உறுதி பூண்ட ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் துணை இராணுவப் படைகளையும் காவல்துறையையும் நிறுத்தின.

தேசிய தலைநகர் பிரதேசம் (NCT), டெல்லி, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்துடன் அதன் எல்லைகளைத் தடுக்க ஹரியானாவில் அதிகாரிகள் போலீஸை அணிதிரட்டினர். விவசாயிகள் NCT க்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க சாலைத் தடைகள் அமைக்கப்பட்டன. ஹரியானா பாஜக அரசு நள்ளிரவில் விவசாயிகளின் வீடுகளில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியது. மோடியின் தேசிய அரசாங்கமும் இதேபோல் தில்லி-ஹரியானா எல்லையில் பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகளை நிறுத்தியது.

நேற்றைய வேலைநிறுத்தத்தை அழைப்பதில் 10 மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் பல தொழிற்சங்க அமைப்புகள் ஈடுபட்டிருந்தாலும், முக்கிய அரசியல் பங்கை ஸ்ராலினிச CITU மற்றும் INTUC ஆற்றியது. மோடி அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தொழிலாளர்களின் தீர்மானத்திற்கு மாறாக, ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் கொதிக்கும் கோபத்தை அமைதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தனர், மற்றும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு முதலாளித்துவ பிராந்தியக் கட்சிகளுடனான சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்குப் பின்னால் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பை திருப்பி விடுவதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, CITU மற்றும் INTUC ஆகியவை காங்கிரஸ் மற்றும் திமுகவின் தொழிற்சங்க கூட்டமைப்புகளான INTUC மற்றும் LPF உடன் ஒத்துழைத்து, அந்த முதலாளித்துவக் கட்சிகளை "தொழிலாளர்களின் நண்பர்கள்" என்று ஊக்குவித்தன.

காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் ஒத்துழைத்த நீண்ட மற்றும் மோசமான வரலாற்றைக் கொண்ட ஸ்ராலினிஸ்டுகள், 2019 மே பொதுத் தேர்தலில் இந்த கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் பீகார் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஊழல் நிறைந்த சாதி சார்ந்த பிராந்திய முதலாளித்துவக் கட்சியான ராஸ்திரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தனர். அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மோடியின் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன தொழிலாள வர்க்க எதிர்ப்பு கடந்த மார்ச் மாதம் மோசமாக தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பொது முடக்கத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே அதிகரித்து வந்தது.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக இதேபோன்ற பல மில்லியன்கள் வலுவான தேசிய பொது வேலைநிறுத்தம் ஜனவரி 8 ம் தேதி நடைபெற்றது, அதனுடன் சேர்ந்து பிற்போக்குத்தனமான முஸ்லீம் எதிர்ப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான பல சிறு இனக்குழுக்களின் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் நடந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முன்னதாக வாகனத் துறையில் வேலைநிறுத்த அலைகள் ஏற்பட்டன.

CAA மீதான கோபத்தின் வெடிப்பை எதிர்கொண்ட மோடி அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பின்வாங்கியது. எவ்வாறாயினும், அந்த எதிர்ப்புக்களை அடக்குவதற்கு தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட ஆபத்தான நிலைமைகளை மோடியால் பயன்படுத்த முடிந்தது.

எட்டு மாதங்களாக, தொற்றுநோயை அரசாங்கம் அழிவுகரமான முறையில் கையாண்டதனால் உருவாக்கப்பட்ட ஒரு சுகாதார பேரழிவு மற்றும் சமூக அழிவுகளுக்கு மத்தியில், இன்னும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களின் ஒரு இயக்கம் தோன்றியுள்ளது.

முன்னேறிச் செல்ல, இந்திய தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களின் மாவோயிச வகையறாக்களின் கிடுக்கு பிடியிலிருந்துது முறித்துக் கொள்ள வேண்டும், அவை அனைத்தும் இலாப நோக்கு அமைப்பை பாதுகாக்கின்றன, மேலும் விவசாயிகளையும் பிற ஒடுக்கப்பட்ட மக்களையும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும் மற்றும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்காக அணிதிரட்ட வேண்டும்.

Loading