பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடு! தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை முழுவதும் கொவிட்-19 தொற்றுநோய் வேகமாக பரவி, அழிவுகரமாக மனித உயிர்களைக் காவுகொள்கின்ற நிலையில், பேரழிவை மேலும் தீவிரமாக்கி, கோட்டாபய இராஜபக்ஷ அரசு திங்கள் முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு எதிராக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பொது மக்களிடமிருந்து எழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்தே அரசாங்கம் இந்த குற்றவியல் நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகும் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினாலும், அதன் மூலம் இந்த தீர்மானத்தின் கொலைகாரத்தன்மை குறைந்து விடாது. மேல் மாகாணத்தில் மட்டுமல்லாமன்றி, அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கடைகள் அதே போல் வீடுகளிலிருந்தும் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். இந்த சூழலில், போதுமானளவு பரிசோதனைகளை மேற்கொள்வதை மேலும் மேலும் தவிர்த்து, தொற்றுநோயின் வீச்சை பொதுமக்களுக்கு மூடி மறைக்க அரசாங்கம் ஒரு கொடூரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களில் சுமார் 16,000 பேர் கடந்த அக்டோபர் தொடக்கத்தில் இருந்து கண்டறியப்பட்ட நோயாளிகள் ஆவர். தற்போது, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. உண்மையான நிலைமை இதைவிட மிகவும் தீவிரமானதாகும்.

இத்தகைய சூழ்நிலையில், பாடசாலைகளைத் திறப்பதானது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் வேண்டுமென்றே தொற்றுநோய்க்கு உள்ளாக்குவதாம்.

பரீட்சைகளில் தாமதம், பாசாலை பாடத்திட்டத்தின் தாமதங்கள் போன்ற சிறுவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டே பாடசாலைகள் தொடங்கப்படுகின்றன என்ற கல்வி அமைச்சர் பீரிஸின் அறிக்கை மோசடியானதாகும். இதற்கு நேர்மாறாக, பாடசாலைகளைத் திறப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, பெரும் வணிகர்களின் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக பொருளாதாரத்தை திறந்துவிட்டு, தொழிலாளர்களை பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் வேலை வாங்கும் கொலைகாரக் கொள்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பாடசாலை சிறுவர்கள் வீடுகளில் தங்கி இருப்பதை, தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதற்கு ஒரு தடையாக இருப்பதாக அரசாங்கம் கருதுகிறது.

மனித வாழ்க்கைக்கும் மேலாக ஒருசில முதலாளிகளின் இலாப நலன்களை தூக்கி வைக்கும் இந்தக் கொள்கையே, இலங்கையில் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் கட்டுப்பாடில்லாமல் நோய் தொற்று பரவுவதற்கும் உயிர் பலிக்கும் காரணமாக இருக்கின்றது. இதுவரை, அதன் உலகளாவிய மனித அழிவு எந்தளவு என்றால், கிட்டத்தட்ட 60 மில்லியன் மக்களை பாதித்து, 1,388,710 பேரைக் காவுகொண்டுள்ளது.

இந்த நாட்களில், ஜனாதிபதி செயலகத்தில் தினசரி நடக்கும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் கலந்துரையாடல்களின் போது, நாட்டை தொடர்ந்து மூடி வைத்து, இனிமேலும் தொற்றுநோய்க்கு "நாட்டின் பொருளாதாரத்தை பலிகொடுக்க முடியாது" என்பதே இ ராஜபக்ஷவின் மந்திரமாக உள்ளது. இராஜபக்ஷ அறிவிக்கும் "பொருளாதாரம்" எனப்படுவது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழைகளின் "பொருளாதாரம்" அல்ல.

கடந்த மாத மட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் மத்தியிலும் கூட, பெரும் முதலாளிகளின் "பொருளாதாரத்திற்காக" பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைக்குச் செல்ல தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தமது இலாபத்தை பெருக்கிக்கொள்வதன் பேரில், தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கும், வேலையை விரைவுபடுத்துவதற்கும், ஊதியங்களைக் குறைப்பதற்கும் பெரிய நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த தொற்று நோயை சுரண்டிக்கொண்டன. இது அரசாங்கத்தின் ஆசீர்வாதம் மற்றும் தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடனேயே முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர் தொழிற் சங்கங்களும் மாணவர் சங்கங்களும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக, வெறும் முனகலுடன் நிறுத்திக்கொண்டன.

கொழும்பு துறைமுகத்தில் நோய் தொற்று வேகமாக பரவிய நிலையில், பாதுகாப்பற்ற நிலையில் வேலை வாங்குவதை எதிர்த்த தொழிலாளர்களை, பலாத்காரமாக வேலைக்கு அழைப்பதற்காக அரசாங்கம் சமீபத்தில் துறைமுகத்தை "அத்தியாவசிய சேவையாக" பிரகடனம் செய்தது. வேலைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள் மூலம், வேலைக்கு வராத தொழிலாளர்களை வேட்டையாட அரசாங்கம் தயாராகி வருகிறது.

ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த கொடூரமான கொள்கைகளுடனேயே பாடசாலைகளை மீண்டும் திறக்கும் தீர்மானம் பிணைக்கப்பட்டுள்ளது.

"வகுப்பறையில் சமூக இடைவெளியை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை நடத்தும் சூழ்நிலையை அதிபர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறிய கல்வி அமைச்சர் பீரிஸ், அரசாங்கத்தின் பொறுப்பை அதிபர்கள் மீது சுமத்தினார். இது அதிபர்களால் நடைமுறையில் செய்ய முடியாத ஒரு கடமையாகும்.

"பிரபலமான" பாடசாலைகளிலும் ஒவ்வொரு வகுப்பிலும் கிட்டத்தட்ட 50 மாணவர்கள் படிக்கின்ற அதே வேளை, மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சிறைபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் என அழைக்கப்படுவதன் படி, ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டு குழுக்களாகப் பிரித்து கற்பித்தாலும், ஒரு மீட்டரில் சரீர இடைவெளியை பராமரிப்பது எந்த வகையிலும் சாத்தியமற்றது.

நெரிசலான பொது போக்குவரத்து சேவைகளில் தொலை தூரத்திலிருந்து தினமும் பாடசாலைகளுக்கு வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பல பாடசாலைகள் நிரம்பியுள்ள நிலையில், பாடசாலை அமைப்பானது தொற்று நோய் பரவுவதற்கான இடமாக பாடசாலைகள் மாறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஜூன் மாதம், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, அரசாங்கம் "சுகாதார பாதுகாப்புக்காக" அற்பத் தொகையை வழங்கிய போதிலும், இதுவரை பாடசாலைகளுக்கு அத்தகைய பணம் எதுவும் வழங்கப்படவில்லை. பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சுகாதார செலவினங்களை சுமத்த அரசாங்கம் மேற்கொள்ளும முயற்சிக்கு எதிராக அதிகரித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், 105 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. இது பொதுமக்களின் கண்களில் மண் தூவுவதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கு பணம் செலவழிக்காத அரசாங்கம், கடந்த ஆறு மாதங்களில் 178 பில்லியன் ரூபாயை பெரும் வணிகங்களுக்காக விடுவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் இருந்து, கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களுக்கு "நிவாரணம்" வழங்க 0.68 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆட்சிகளைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும், இந்த அற்ப நிவாரணங்கள், கல்வி மற்றும் சுகாதார செலவுகளை முற்றிலுமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே போல், தொற்றுநோய் மேலும் பேரழிவுகரமாக பரவினாலும், பெரும் முதலாளிகளின் இலாபத் தேவைகளுக்காக, தொழிலாளர்களை தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களுக்கும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கும் விரட்டப்படுகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில், அரசாங்கங்களின் இந்த குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக, குறிப்பாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதற்கு எதிராக, சர்வதேச அளவில் சக்திவாய்ந்த போராட்டங்கள் வெடித்துள்ளன. இலங்கையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பு, இந்த சர்வதேச நிகழ்வுப் போக்கின் ஒரு பகுதியாகும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த முற்போக்கான முன்னேற்றங்களை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆசிரியர்கள் குழாம், பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்குமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

தொற்றுநோயை மழுமையாக கட்டுப்படுத்தும் வரை, ஊதியத்தை வழங்கி, பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடி வைக்க வேண்டும்.

பரிசோதனைகளின் எண்ணிக்கையை மிகப்பரந்தளவில் அதிகரித்தல்.

மாணவர்கள் வீட்டிலிருந்து இணைவழி கல்வியைப் பெறுவதற்குத் தேவையான நவீன கணினி மற்றும் இணைய வசதிகளை இலவசமாக வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு இணையவழியில் கற்பிப்பதற்கு முறையான பயிற்சியை இலவசமாக வழங்க வேண்டும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி, பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர், வகுப்பறைகளில் சுகாதாரப் பாதுகாப்பையும் தரமான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:15 ஆகக் குறைக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சுகாதாரமான முறையில் பாடசாலைகளுக்கு கொண்டு செல்ல, சிறப்பு போக்குவரத்து சேவைகளை தொடங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை, முதலாளித்துவ இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் வெல்ல முடியாது. சர்வதேச சோசலிச முன்னோக்கின் கீழ் பெரும் வங்கிகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும், தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்துகின்ற, ஒரு சிலரின் இலாபத்திற்காக அன்றி, எரியும் சமூகத் தேவைகளுக்காக உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வரும் அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

இந்த போராட்டத்தின் பாகமாக, இந்த தொற்றுநோயில் இருந்து சிறுவர்கள், ஆசிரியர்கள் உட்பட பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் பொறுப்பை தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டும். முதலாளித்துவ அமைப்போடு இறுக்கமாக பிணைந்துள்ள தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு பாடசாலையிலும் மற்றும் குடியிருப்பு பகுதயிலும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட குழுக்களுக்கு நேர் மாறாக, இந்த ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்கள், மேற்கண்ட கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும்.

இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading