இந்தியா முழுமையான பொது வேலைநிறுத்தத்தில் பல கோடி தொழிலாளர்கள் இணைகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா (பாஜக) அரசாங்கத்தின் ”முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை - சிக்கன நடவடிக்கை, தனியார்மயமாக்கல், ஒப்பந்த-தொழிலாளர் வேலைகளை விரும்பியபடி நீக்குவதை ஊக்குவித்தல் மேலும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் முதலாளித்துவ சுரண்டலை கட்டுப்படுத்தும் பிற நெறிமுறை கட்டுப்பாடுகளை நீக்கல் – ஆகியவற்றுக்கு எதிராக பல கோடி தொழிலாளர்கள் இன்று ஒரு இந்தியா முழுமையான பொது வேலைநிறுத்தத்தில் இணைவார்கள்.

COVID-19 தொற்றுநோயை அரசாங்கம் மிக மோசமான முறையில் கையாளுதல் குறித்த வெகுஜன கோபத்தாலும் இந்த வேலைநிறுத்தம் தூண்டப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, மோடியும் அவரது பாஜகவும் பெருநிறுவன இலாபத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளன மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு மேலாக இந்தியாவின் பில்லியனர்கள் மற்றும் பல மில்லியனர்களின் செல்வ வளத்தை பாதுகாக்கின்றன.

இந்தியாவின் அகமதாபாத்தில் ஜனவரி 8, 2020 புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர் [நன்றி: AP புகைப்படம் / அஜித் சோலங்கி]

இது ஒரு சுகாதார மற்றும் சமூக-பொருளாதார பேரழிவை உருவாக்கியுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 9.2 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 நோய்த்தொற்றுகள் உள்ளன, இது உலகின் இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கை மற்றும் கிட்டத்தட்ட 135,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மொத்தமாக குறைத்து மதிப்பிடப்பட்டவை. கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தனிநபர் சோதனை விகிதங்களில் இந்தியா மிகக் குறைந்த நிலையில் உள்ளது. COVID-19 டெல்லி, மும்பை மற்றும் பிற நகர்ப்புற மையங்களின் சேரிகளிலும், கிராமப்புறங்களில் பொது சுகாதாரப் பாதுகாப்பு அரிதாக அல்லது முற்றிலும் இல்லாத நிலையில் வேரூன்றியுள்ளது. சாதாரண காலங்களில் கூட, அனைத்து இறப்புகளிலும் 86 சதவீதம் மட்டுமே மாநில அதிகாரிகளால் பதிவு செய்யப்படுகின்றன, மேலும் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில், வெறும் 22 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவர் சான்றளிக்கப்பட்ட மரணத்திற்கான காரணத்தைப் பெறுகின்றனர்.

நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர், இது தொற்றுநோய்க்கு முன்னர் 50 சதவீத குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்ட ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையாகும். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 23.9 சதவிகிதம் சுருங்கி, 2020-2021 நிதியாண்டில் சுமார் 10 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பல்லாயிரக்கணக்கானோர் நிரந்தரமாக வேலை இழந்துவிட்டனர் அல்லது அவர்களின் வேலை நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் முடிவடைந்த ஒரு சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை, இந்த தொற்று நோய் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 மில்லியன் இந்தியர்களை "தீவிர வறுமைக்குள்" தள்ளும், இது ஒரு நாளைக்கு 1.90 அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் குறைவாக உயிர் வாழ்பவர்கள் என்று வரையறுக்கப்படுகிறது.

பாஜகவுடன் இணைந்த பாரதிய மஸதூர் சங்கத்தைத் தவிர்த்து நாட்டின் அனைத்து முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகளும் இன்றைய தேசிய எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன, அவ்வாறே பல இணைக்கப்படாத தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. அவர்கள் தீவிர வலதுசாரி, இந்து மேலாதிக்க பாஜக அரசாங்கத்திடம் அதன் தனியார்மயமாக்கல் திட்டத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்; மேலும் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிற்போக்குத்தனமான தொழிலாளர் மற்றும் விவசாய "சீர்திருத்தங்களை" இரத்துசெய்; மற்றும் வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முறை 7,500 ரூபாய் (தோராயமாக $ 100) வழங்குவதன் மூலமும், மாதத்திற்கு 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) உணவு தானியங்களை மிகவும் தேவையான குடும்பங்களுக்கு வழங்குவதன் மூலமும், மக்களின் மிகவும் வறிய பிரிவுகளுக்கு அவசர உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர்.

இன்று வேலையை விட்டு வெளியேறுபவர்களில், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், மாநில போக்குவரத்து தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், மின் தொழிலாளர்கள், வங்கித் தொழிலாளர்கள் மற்றும் தனியார்மயமாக்கல் அச்சுறுத்தலுக்குள்ளான பல அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள், விமான உற்பத்தியாளர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனம் BSNL, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் உட்பட அனேகமாக எந்த உரிமையும் இல்லாத “முறைசாரா துறையில்” பணியாற்றும் பல தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் இழப்பில் வேளாண் வணிகத்தை உயர்த்துவதற்காக பாஜக கொண்டு வந்த விவசாய "சீர்திருத்தத்திற்கு" எதிராக பல வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள், தேசிய தலைநகர் டெல்லியில் இன்று ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர், இது நாடு தழுவிய எதிர்ப்பு வேலைநிறுத்தத்துடன் ஒன்றாகப்போகிறது. நேற்று, அண்டை மாநிலமான ஹரியானாவில் காவல்துறையினர் டெல்லிக்கு செல்லும் விவசாயிகளைத் தடுக்க நீர்-பீரங்கியைப் பயன்படுத்தினர், அங்கு அதிகாரிகள் எதிர்ப்பை சட்டவிரோதமாக அறிவிக்க கோவிட்-19 அச்சுறுத்தலை பயன்படுத்தினர்.

உலகெங்கிலும் தொற்றுநோய் வெடித்த எட்டு மாதங்களுக்குப் பின்னர் - இலாபங்கள் மற்றும் பங்கு விலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் உயரடுக்கின் செயலற்ற தன்மையின் நேரடி விளைவாக, சமூக எதிர்ப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெடித்தெழுகிறது.

கிரேக்கத்தில், பொதுத்துறை பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெறுகிறது. COVID-19 இலிருந்து பாதுகாப்பு இல்லாததால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக ADEDY தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது. தலைநகரான ஏதென்ஸில் உள்ள பொது போக்குவரத்துத் தொழிலாளர்களும் நாட்டின் வலதுசாரி அரசாங்கத்தின் எட்டு மணி நேர நாளை இரத்துசெய்து மற்றும் வேலைநிறுத்த உரிமைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.

தென் கொரியாவில், வேலைநிறுத்தக்காரர்களுக்கு சில வசதிகள் மற்றும் பணியிடங்களில் உள்ளிருப்பு செய்வதை தடை செய்யும் தொழிலாளர் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக நேற்று 200,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர், அதே நேரத்தில் கியா மோட்டார்ஸில் 30,000 தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் வேலை வெட்டுக்களை எதிர்ப்பதற்காக ஒரு பகுதி வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

இன்றைய எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பல தொழிலாளர் கூட்டமைப்புகள் எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன, அவை சந்தை சார்பு கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பில் ஒரு முக்கிய பாத்திரம் ஆற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC); விஷயத்தில் இது உண்மை மேலும் தொழிலாளர் முற்போக்கு கூட்டணி (LPF), இது தமிழ்நாடு-பிராந்தியவாத திமுகவின் தொழிற்சங்க முன்னணியாகும்; மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITIC), ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளின் தொழிற்சங்கப் பிரிவுகள்-முறையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M) மற்றும் இந்திய சமூகக் கட்சி (CPI).

அரசியல் ரீதியாக "சுயாதீனமாக" இருப்பதாகக் கூறப்படும் தொழிலாளர் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களை பொறுத்தவரை, அவற்றின் பங்கு வேறுபட்டதல்ல. அவர்கள் வர்க்கப் போராட்டத்தை முறையாக நசுக்கியுள்ளனர். தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, இன்றைய எதிர்ப்பு வேலைநிறுத்தம், சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் தொடங்கி, எதிர்க் கட்சிகளுக்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்திற்குள் பெருகிவரும் கோபத்தைத் திருப்பிவிடும் நோக்கமாக கொண்ட ஒரு சூழ்ச்சியாகும். "மக்கள் எதிர்ப்பு, தொழிலாளர் எதிர்ப்பு" மற்றும் “தேச விரோத கொள்கைகளை” கைவிடும்படி பாஜக வுக்கு விடுக்கும் பயனற்ற கோரிக்கைகளாகும்.

பல ஆண்டுகளாக, வளர்ந்து வரும் இந்தியாவை கொண்டாடும் அறிக்கைகள் மேற்கத்திய பத்திரிகைகளில் நிரம்பியிருந்தன. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியாவின் முதலாளித்துவ விரிவாக்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதீத சுரண்டலால் எரியூட்டப்பட்டது என்ற அடிப்படை உண்மையை இத்தகைய அறிக்கைகள் மழுப்பி மறைக்கின்றன. இந்திய பெருவணிகமும் உலகளாவிய மூலதனமும் செல்வத்தின் பெரும் பங்கை கையகப்படுத்தியுள்ளன, இது இந்தியாவை உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இந்தியாவின் பணக்கார 1 சதவிகிதம் ஏழ்மையான 70 சதவிகிதத்தை விட, அதாவது 950 மில்லியனுக்கும் அதிகமான மக்களை விட நான்கு மடங்கு அதிக செல்வத்தைக் கொண்டுள்ளது.

இந்திய முதலாளித்துவத்தின் மிருகத்தனம், தொற்றுநோயால் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களுக்கு, கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து வரும் அச்சுறுத்தலை பாஜக அரசு புறக்கணித்தது. பின்னர் மார்ச் 24 அன்று, நான்கு மணி நேரத்திற்கும் குறைவான அறிவிப்புடன், அது வைரஸைத் தடுக்கத் தவறிய ஒரு மோசமாக -தயாரிக்கப்பட்ட மற்றும் தவறான கருதப்பட்ட ஊரடங்கை விதித்தது, ஏனெனில் இது வெகுஜன சோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் போன்ற தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த தயார் செய்யப்படவில்லை. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை எடுத்துக்காட்டுவது போல் இது ஒரு கொடூரமான சமூகச் செலவை உண்டு பண்ணியது. -ஏனெனில் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் ஒரே இரவில் இழந்த நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வதற்காக விட்டுவிடப்பட்டனர்.

ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி, பாஜக அரசு, எதிர்க்கட்சி தலைமையிலான மாநிலங்கள் உட்பட மாநில அரசாங்கங்களின் ஆதரவோடு, தனது சொந்த நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட சமூக துயரங்களை சுரண்டிக்கொண்டு, பணிக்குத் திரும்பத் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, குறிப்பாக மே மாத இறுதியில் அனைத்து ஊரடங்கு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டதை தொடர்ந்து, தொற்றுநோய், காட்டுத்தீ போல் பரவியது.

இந்த "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" கொள்கை தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரமான தாக்குதலின் வெட்டு விளிம்பாக இருந்து வந்தது. மே மாத நடுப்பகுதியில், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் மோடி ஒரு "பெரும் பாய்ச்சல்" கொள்கை வரும் என்று உறுதியளித்தார், மேலும் பாஜக அரசாங்கம் அதன் தனியார்மயமாக்கல் இயக்கத்தை வியத்தகு முறையில் துரிதப்படுத்தியதோடு, இந்திய மற்றும் சர்வதேச மூலதனம் நீண்டகாலமாக கோரி வந்த நடவடிக்கைகளான தொழிலாளர் சட்டம் மற்றும் விவசாய "சீர்திருத்தங்கள்" ஆகியவற்றை உந்தி தள்ளி நிறைவேற்றியது.

அதே நேரத்தில், 1991 முதல் ஒவ்வொரு இந்திய அரசாங்கமும் பின்பற்றி வரும் மற்ற முக்கிய கொள்கையை மோடி அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது, மேலும் இது இந்தியாவை உலகளாவிய மூலதனத்திற்கான புகலிடமாக மாற்றுவதற்கான உந்துதலுடன் கைகோர்த்துச் சென்றுள்ளது - அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துகிறது. இந்திய ஆளும் உயரடுக்கின் வலுவான ஆதரவோடு, பெய்ஜிங்குடனான ஆறு மாத கால எல்லைப் பிரச்சினையை இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்க பயன்படுத்தியது. அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான புதிய முயற்சிகள் மற்றும் உடன்படிக்கைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நாற்கர (Quad) மூலோபாய உரையாடலை இராணுவக் கூட்டணியாக மாற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கைளும் இதில் அடங்கும்.

இதற்கிடையில், எதிர்வினைகளை ஊக்குவிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் மோடியும் அவரது பாஜகவும் முஸ்லீம்-விரோத வகுப்புவாதத்தை ஊக்குவிக்க முடுக்கிவிட்டன.

ஸ்ராலினிஸ்டுகள், புதிய தாராளமய சீர்திருத்தங்களை முன்னெடுத்த அடுத்தடுத்த காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களுக்கு அவர்கள் வழங்கிய ஆதரவின் விளைவாகவும் மற்றும் அவர்கள் அரசாங்கம் அமைத்த மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் "முதலீட்டாளர்களுக்கு ஆதரவான கொள்கைகளை" நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவும், அவர்களுக்கு தொழிலாள வர்க்கம் அளித்து வந்த ஆதரவு இரத்தக் கசிவாகியதையும் பார்த்திருக்கிறார்கள். ஆயினும்கூட, அவர்கள் இன்றைய பொது வேலைநிறுத்தத்திற்கான அரசியல் தலைமையை வழங்குகிறார்கள், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் மதிப்பிடப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் போலியான "முற்போக்கான" நற்சான்றிதழ்களைக் அவர்களுக்கு வழங்குகின்றனர்.

பல தசாப்தங்களாக ஸ்தாபக அரசியலில் ஒருங்கிணைந்த, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை இந்திய முதலாளித்துவம் வர்க்கப் போர் தாக்குதலை தீவிரப்படுத்தியதற்கு பதிலளிப்பதாக மேலும் வலது பக்கமாக நகர்ந்தனர். தொழிலாள வர்க்கத்தை வலதுசாரி எதிர்க்கட்சியுடனும் இந்திய அரசின் நிறுவனங்களுடனும் இணைப்பதற்கான அவர்களின் முயற்சிகளை அவர்கள் இரட்டிப்பாக்கியுள்ளனர். இந்து மேலாதிக்க பாஜகவை தோற்கடிப்பதன் பெயரில், அவர்கள் சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் போட்டியிட்டனர், மேலும் காங்கிரஸ் இரண்டாமிடத்தில் இருக்கும் மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதேபோன்ற செயல்களைச் செய்ய எண்ணியுள்ளனர்.

இது ஒரு தொடர்ச்சியாகும், ஆனால் மிகவும் வெடிக்கும் மற்றும் ஆபத்தான சூழ்நிலையில், கடந்த மூன்று தசாப்தங்களாக அவர்கள் பின்பற்றிய அதே பிற்போக்குத்தனமான போக்காகும். இந்து வலதை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்ட அவர்களின் வழிகாட்டுதல் கொள்கை, இந்திய பெருவணிகத்தின் சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் முதலீட்டாளர் சார்பு நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும்போது தொழிலாள வர்க்கத்தை எதிர்க்கட்சிகளுடன் இணைப்பதாகும். தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக நசுக்குவதன் மூலமும், சமூக நெருக்கடிக்கு அதன் சொந்த சோசலிச தீர்வை முன்னெடுப்பதைத் தடுப்பதன் மூலமும், ஸ்ராலினிஸ்டுகள் நீடித்த வறுமை, பாரிய வேலையின்மை மற்றும் பரவலான சமூக சமத்துவமின்மை ஆகியவை குறித்து வளர்ச்சி அடையும் வெகுஜன கோபத்தையும் விரக்தியையும் பயன்படுத்திக்கொள்ளவும், இந்தியாவின் அரசாங்கத்தின் பிரதான கட்சியாக பாஜக தோன்றுவதையும் சாத்தியமாக்கியுள்ளனர்.

அதே மூன்று தசாப்தங்களில், தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையிலும் சமூக சக்தியிலும் அபார அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சக்தி அணிதிரட்டப்படுவதற்கு, தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க சுதந்திரத்தை உருவாக்க வேண்டும், அதன் மாறுபட்ட போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும், வளர்ந்து வரும் பூகோள தொழிலாள வர்க்கத்தின் எதிர் தாக்குதலை நோக்கியும், இந்திய மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை அதன் பின்னால் அணிதிரட்ட வேண்டும். அவ்வாறு செய்ய இந்தியத் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் அனைத்து கட்சிகளையும், அவர்களின் ஸ்ராலினிச கூட்டாளிகளையும், அவர்களின் வகுப்புவாத, சாதிவாத, பிராந்தியவாத மற்றும் தேசியவாத அரசியலையும் நிராகரிக்க வேண்டும், மேலும் சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தில் தங்கள் போராட்டங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

Loading