மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கை ஜனாதிபதி கோத்தாபய இராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (SLPP) மகத்தான வெற்றி, தமிழ் தேசியவாதத்தின் திவால்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அது தேர்தல் தோல்வியை மட்டும் சந்திக்கவில்லை. மாறாக COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் இராணுவ ஆதரவுடனான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை அமைப்பதற்கான இராஜபக்ஷ சதிக்கூட்டத்தின் திட்டங்களை எதிர்ப்பதற்கு அதற்கு ஒரு முன்னோக்குமில்லை, அதற்கான நோக்கமும் இல்லை.
“2020 தேர்தல் 1970 ஆம் ஆண்டு தேர்தல்களை ஒத்திருக்கிறது, இது இனப்படுகொலை இலங்கையை உருவாக்கியது” என்ற தலைப்பில், ஆங்கில மொழி வலைத் தளமான தமிழ்நெட், உலக ரீதியாக தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. இலங்கையில் அதிகரித்து வரும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், இது வகுப்புவாதத்தை தூண்டுவதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) அரசியல் சுற்றுவட்டத்தை ஊக்குவிப்பதுடன் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்களுக்கு ஆதரவளிக்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியவை சுதந்திரத்திலிருந்து இலங்கையை ஆட்சி செய்து, 1983-2009 தமிழ் எதிர்ப்பு உள்நாட்டுப் போரை நடத்திய இரண்டு முக்கிய முதலாளித்துவ கட்சிகளின் சரிவை தமிழ்நெட் சுட்டிக்காட்டுகிறது. இப்போது, அது கூறுகிறது, “ஆயுதமேந்திய இயக்கத்தினையும் நடைமுறை தமிழீழ அரசையும் இனப்படுகொலை மூலம் நிர்மூலமாக்கப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (SLPP) இனால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நாடான ஈழ தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இறுதி கட்டத்தை நோக்கி ஒற்றையாட்சி அரசை உறுதிப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு பாதையை செயல்படுத்த SLPP தயாராக உள்ளது”.
இராஜபக்ஷ ஆட்சி, இலங்கையில் உள்ள அனைத்து இன, மத பின்னணியை கொண்ட தொழிலாளர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகும். மேலும், பெரும் அரசியல் நெருக்கடிகளின் போது, இலங்கை ஆளும் வர்க்கம் தவிர்க்க முடியாமல் வன்முறை இன-குறுங்குழுவாத மோதலைத் தூண்டுவதை நோக்கித் திரும்பும் என்பதை ஒரு நீண்டதும் கசப்பானதுமான வரலாறு காட்டுகிறது. ஆனால் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கு உடந்தையாக இருக்கும் தமிழ் தேசியவாத சக்திகளுக்காகப் பேசும் தமிழ்நெட், இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை நோக்கிய விரைவான உந்துதலை எதிர்த்துப் போராடுவதற்கு எதையும் வழங்கவில்லை.
1970 களில் இலங்கையில் தமிழ் தேசியவாதத்தின் வளர்ச்சியைப் பற்றி ஏக்கத்துடன் பேசிய அது, உள்நாட்டுப் போருக்கு முன்னரான பிரிவினைவாதம் மற்றும் ஆயுதப் போராட்டத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கிறது: “அப்பொழுது, இளைய தலைமுறையினர் தமிழர்களுக்கு கடவுளால் கூட உதவ முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்தனர். அவர்களுக்கு உள்ள ஒரே வழி எதிர்ப்பதாகும், மேலும் இது மூன்று தசாப்தங்களாக இனப்படுகொலை அரசை திறம்பட சவால் செய்ய அவர்களுக்கு உதவியது.”
இன்று, தமிழ் தேசிய கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு மாற்றீடாக, தமிழ் தேசிய கூட்மைப்பிலிருந்து பிளவுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) போன்றவற்றை தமிழ்நெட் தூக்கிப்பிடிக்கிறது. அது எழுதுகிறது, "ஈழம் தமிழ் வாக்காளர்கள் TNPF இன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் TMTK இன் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் மகத்தான பொறுப்பை வைத்துள்ளனர்." தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் "ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரனின் கீஸ்லிங் அரசியல்" என்று தமிழ்நெட் அழைப்பதை "பாதை-திருத்தம்" செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இலங்கை தமிழ் மக்கள் TNPF, TMTK ஐ சுற்றி வருகிறார்கள் என்ற தமிழ்நெட் கூற்று ஒரு மோசடியாகும். எந்தவொரு குழுவும் பரந்த ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 இலிருந்து 10 நாடாளுமன்ற இடங்களாக சரிந்துள்ளபோதிலும், TNPF, 67,766 வாக்குகளையும் (0.58 சதவீதம், 2 இருக்கைகள்), TMTK 51,301 வாக்குகளையும் (0.44 சதவீதம், 1 இருக்கை) மட்டுமே பெற்றிருந்தனர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் செயல்படும் SLFP யாழ்ப்பாண மாவட்டத்தில் 49,373 வாக்குகளையும் (1 இருக்கை) மற்றும் இராஜபக்ஷ ஆட்சியுடன் நெருக்கமாக செயற்படும் துணை இராணுவக் குழுக்களான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 61,464 வாக்குகளையும் (2 இருக்கைகள்), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692 வாக்குகளையும் (1 இருக்கை) பெற தமிழ் வாக்காளர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தேசத் துரோகத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்ட, ஜேர்மனிய ஆக்கிரமிப்பு நோர்வேயின் நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி விட்குன் கீஸ்லிங் (Vidkun Quisling) உடன் ஒப்பிட தமிழ்நெட் நிர்பந்திக்கப்பட்டதற்கு காரணம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆழ்ந்த மதிப்பிழப்புகளாகும். இந்த வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் சில வாக்காளர்கள், தமிழ் சமூகத்தில் பரவலாக வெறுக்கப்படும் SLFP க்கும் EPDP க்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய சுயேட்சைகளுக்கும் வாக்களித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றவும், 2015 ஆம் ஆண்டில் மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிக்கவும் அமெரிக்கா தலைமையிலான ஆட்சி மாற்ற பிரச்சாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. அது சிறிசேன "நல்லாட்சியை" வழங்கப்போவதாகவும், போரின் முடிவில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது, வடக்கு இலங்கையில் இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற பல வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதாக உறுதியளித்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்துமே பொய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் தூண்டிய சிறிசேனவின் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கை கொள்கைகளையும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தமிழ் தேசியவாதிகள் ஆதரித்தனர். உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து உட்பட அவர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்பட்டிருக்கையிலும் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் சிதைந்துகொண்டே இருந்தனர், இராணுவம் தொடர்ந்து நிலத்தை ஆக்கிரமித்து வந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் TNPF ஆகியவை தமது சொந்த ஆதரவாளர்களையே “நல்லாட்சி அரசாங்கம்” சித்திரவதை செய்த செய்திகள் வெளிவரத் தொடங்கியவுடன், அரசாங்கத்தினால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை மூடிமறைப்பதற்காக இவர்களே விமான நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்று நாட்டிற்கு வெளியில் அனுப்பி வைத்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளால் மதிப்பிழந்து வரும் நிலையில், தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களை தேசியவாத பொறியில் கட்டிவைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து TNPF மற்றும் TMTK ஆகியவை வெளியேறின. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலவே இவர்களும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலை ஆதரிக்கின்றனர். 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்த TNPF, தனது 2020 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதே நிலைப்பாட்டுக்கு வாதிடுகிறது.
விஞ்ஞாபனம் வலியுறுத்துகிறது, “இந்து சமுத்திரத்தில் நடைபெறும் அரசியல் போட்டியில் இலங்கை தீவானது ஒரு முக்கிய புள்ளியாகும். இந்த பூகோள அரசியல் போட்டியானது எமது இனத்தின் விடிவிற்கான பயணத்தில் பல தாக்கங்களை பல்வேறு காலகட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. … தொடரும் இப் பூகோள அரசியல் போட்டியானது, தமிழ் மக்கள் தமது இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளையும் வளங்கி வருகிறது. இந்த வாய்ப்புக்களை தமிழ் மக்களின் நலன் சார்ந்து, அர்ப்பணிப்புடனும் ஆக்கபூர்வமாகவும் அணுகுவதன் மூலம், எமது இலக்கை அடையலாம் என்ற தர்க்கரீதியான உறுதியான நம்பிக்கையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பயணத்தை தொடர்கிறது”.
1970 கள் பற்றிய தமிழ்நெட்டின் வெற்றுக் குறிப்புகள் அதே ஏகாதிபத்திய-சார்பு நோக்குநிலைக்கான அரசியல் மூடிமறைப்பு மட்டுமே. இது, விட்குன் கீஸ்லிங் என்று கண்டனம் செய்தவர்களின் அதே அரசியல் மூலோபாயத்தையும் நோக்குநிலையையும் பின்பற்ற இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழிலாளர்களை இழிந்த முறையில் அழைக்கிறது.
"புவிசார் அரசியல் மட்டுமே தமிழர்களுக்கு உதவ முடியும்" என்று தமிழ்நெட் எழுதுகிறது: ஒரு சர்வதேச பரிமாணத்துடன் கூடிய ஒரு புதிய வடிவ எதிர்ப்பால் மட்டுமே இனப்படுகொலை அரசையும், ‘அபிவிருத்தி’ குற்றங்களின் புவிசார் அரசியல் ஆதரவாளர்களையும் திறம்பட சவால் செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்வதே எதிர்கால வெற்றிக்கான முக்கியமாகும். இது தொடர்பாக தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் உலகளாவிய தமிழர்களுக்கும் வரலாற்று கடமை உள்ளது.
தமிழ்நெட்டின் அர்த்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெளிவாக உள்ளது. அவர்கள் முன்பு பாகமாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) உள்நாட்டுப் போரின் முடிவில் அழிக்கப்பட்டதிலிருந்து இலங்கை அரசுக்கு எதிராகப் போரிடுவதற்கான ஒரு அமைப்பு அவர்களிடம் இல்லை, அதற்கு பதிலாக இப்போது அவர்கள் மற்றொரு போரை ஆதரிக்கின்றனர். TNPF மற்றும் TMTK க்கு அரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கவும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த கட்சிகளை ஊக்குவிக்கவும், கொழும்பில் தமிழ் தேசியவாத கட்சிகளின் நிலைப்பாடுகளை வலுப்படுத்தவும் தமிழ்நெட் தமிழ் புலம்பெயர்ந்தோரை கேட்டுக் கொள்கிறது. இது ஏற்கெனவே திவாலாகிப்போன முன்னோக்காகும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் உலகெங்கிலும் அரசியல் ரீதியாக குற்றகரமான போர்களை நடத்துகிறது, கணக்கில் சொல்முடியாத பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்கிறது, அதே நேரத்தில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆழ்ந்த தாக்குதல்களை நடத்துகிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முறையீடுகள் திவாலானதைப் பற்றி தமிழ் மக்களுக்கு ஒரு நீண்ட, கசப்பான அனுபவங்கள் உண்டு. 2009 ல் வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் ஒதுங்கி நின்று கொழும்பின் இறுதித் தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டின. அது போரின் முடிவில், முல்லைத்தீவில் பல்லாயிரக்கணக்கான நிராயுதபாணியான பொதுமக்களையும் தமிழ் போராளிகளையும் படுகொலை செய்ய வழிவகுத்தது.
இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகார ஆபத்துக்கு எதிரான முன்னோக்கிய பாதை தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதாகும். தொழிலாளர்களை இன அடிப்படையில் பிரிக்க தமிழ்நெட் வகுப்புவாதத்தை தூண்டிவிடுகிறது. இது, SLPP ஆட்சி பாரிய சிக்கன நடவடிக்கைகளையும் இராணுவமயமாக்கப்பட்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தையும் சுமத்த வழி வகுக்கிறது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் விட்டுக்கொடுப்பற்ற வரலாற்றை கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி, இன, மத, மொழி கடந்து தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சி முன்னோக்கில் ஐக்கியப்படுத்தப் போராடுகிறது.
1947-1948 இல் இந்தியா மீதான நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில், ஏகாதிபத்தியத்தின் தரகுவேலையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீண்ட இரத்தக்களரி பதிவுக்கு மாற்றீடு, ஏகாதிபத்திய சார்பு பிற்போக்குவாதிகளின் தேசிய சுயநிர்ணயத்திற்கான வெற்று பிரச்சாரம் அல்ல, தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்திற்கான போராட்டமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு முன்னோக்குக்காக போராடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவுக்கு தகுதியானது.
மேலதிக வாசிப்புகளுக்கு:
[3 June 2016]
இலங்கை அரசியல் நெருக்கடி தமிழ் தேசியவாதக் கட்சிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது
[22 November 2018]
இலங்கை அரசாங்கம் சித்திரவதையினை தொடர்வதை தமிழ் தேசியவாதிகள் மூடிமறைக்கின்றனர்
[14 January 2016]
தமிழ் மக்கள் பேரவை இலங்கை தொழிலார்களுக்கு புதிய தேசியவாத பொறிக்கிடங்கு
[29 December 2015]