தமிழ் நாட்டின் கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கடந்த வியாழன் அன்று, நிருபர் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி கேட்டபோது, “ஏழைகளுக்கு எங்கே இந்த நோய் வந்தது? இது பணக்காரர்களுக்கு வந்த நோய்” எனக் கூறி, தட்டிக் கழித்தார். உலகெங்கிலும் 170,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உழைக்கும் மக்களும், ஏழைகளும் உயிரிழந்திருக்கும் போது, முதலமைச்சரின் இந்தக் கருத்து தொழிலாள வர்க்க உயிர்கள் தொடர்பான அப்பட்டமான உதாசீனமாகும்.
“ஏழைகளைக் கண்டால் தாராளமாக பேசலாம், பணக்காரர்களை கண்டால்தான் பயமாக இருக்கின்றது” என வஞ்சகத்தனமாக கூறிய பழனிச்சாமி பிரதிநிதித்துவம் செய்கின்ற செல்வந்த தட்டின் சொத்துக் கணக்குகள், முதலமைச்சர் ஏழைகள் மீது கொண்டுள்ள “பரிவையும்” தமிழ்நாட்டில் சமூக சமத்துவமின்மையின் கோரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
கடந்த வருடம் பத்திரிகைகளில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் உள்ள முதல் 15 கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு, அமெரிக்க டாலர்களில், 217.5 பில்லியன்களாகும். அதில் தமிழ் நாட்டில், HCL நிறுவனர் சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் (Shiv Nadar) இன் சொத்து மதிப்பு மட்டும் 14.4 பில்லியன் டாலர்களாகும். இதேபோன்று, 1969லிருந்து 5 முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்து உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் வறுமைக்குள் தள்ளிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியின் பேரனான SUN TV குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும். அத்தோடு, தமிழ் நாட்டின் முதல் 14 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய ரூபாய்களில் 215 இலட்சம் கோடிகளாகும்.
இந்தியா முழுவதும் மருத்துவ மற்றும் சமூக நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நாட்டின் செல்வந்தர்கள் குவித்து வைத்துள்ளனர். அத்தோடு, இவர்கள் இலட்சக்கணக்கான கோடிகளை பொது வங்கிகளிடம் கடனாகப் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பாதுகாப்பாகவும் வாழ்கின்றனர். இந்த சூழலில் மருத்துவ பற்றாக்குறை மற்றும் பட்டினி நிலைமைகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்காக சீனா மற்றும் முஸ்லிம் விரோத பிரச்சாரமும், இந்த நிதியாளும் தட்டின் ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்படுகின்றது.
முதலமைச்சர் பழனிச்சாமி மத்திய அரசிடம் கேட்ட 9,000 கோடி ரூபாய்க்கு வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த பணம், 7.7 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒரு நாள் பசியைப் போக்குவதற்கு கூட ஒரு குடும்பத்திற்கு போதாது.
இந்த அவல நிலைமையில், கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து கோடிக்கணக்கான உழைக்கும் மக்களைப் பாதுகாக்க, உணவு உட்பட அத்தியாவசியமான மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்ற மற்றும் அவசியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதிக்கு, இந்த கோடீஸ்வரர்களின் நிதியை திருப்ப இலாயக்கற்ற, முதலாளித்துவ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) பழனிச்சாமி ஆட்சி, உலகெங்கிலுமுள்ள தனது சம தரப்பினரைப் போலவே உழைக்கும் மக்களின் முதுகில் மேலும் சுமைகளை ஏற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.
ஏழை எளிய தொழிலாளர்களுக்கு உயிர் காப்பதற்கான பரிசோதனைகள் மறுக்கப்படுவதுடன், தனியார் மருத்துவமனைகள் இந்த இக்கட்டான நிலைமைகளிலும் பணவசதி உடையவர்களின் ஆரோக்கியத்தில் மட்டுமே ”அக்கறை” காட்டுகின்றன. அன்றாட வருமானம் தேடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் முழு அடைப்பின் காரணமாக எந்த வருமானமும் இன்றி, சாப்பாட்டுக்கும் வழியின்றி இருப்பதோடு, அவர்கள் பட்டினி சாவை எதிர் நோக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
முதலமைச்சர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டி, மருத்துவச்சேவை மற்றும் நிதி குறைபாடுகளாலேயே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்ற உண்மையை மூடி மறைக்க முயற்சித்துள்ளார். “இன்று 62 பேர் குணமடைந்துள்ளார்கள் இன்னும் பத்து பதினைந்து நாட்களில் பொசிடிவ் கேஸ்களை நெகடிவ் ஆக்கிவிடுவோம்” என முதலமைச்சர் பெருமிதமாக பேசினார். ஆனால், மறுநாளே புதிதாக நோய் தொற்றிய 56 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஏப்ரல் 19 அன்று மேலும் 105 பேராக அதிகரித்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ் நாட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவியிருப்பதுடன் 22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பரிசோதனைகளின் போதே, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பரந்தளவிலான பரிசோதனைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது என்ற நிபுணர்களின் எச்சரிக்கையை மீண்டும் நிரூபிக்கின்றது. எனினும் இன்னமும் பயண வரலாறுகளைக் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்துவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டக் கூடும். ஆனால், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 125 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயரும்போது யாரைக் காப்பாற்ற வேண்டும், யாரைக் காப்பாற்ற முடியாது என்ற அவலநிலை ஏற்படக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 31 ஆய்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதிலும் 10 தனியாருடையதாகும். இவற்றில் ஒரே நாளில் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யக்கூடிய வசதியுள்ளதாக முதலமைச்சர் கூறிக்கொள்கின்றார். ஆயினும் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும் ஞாயிறு வரை 35,036 பேரின் மாதிரிகளே பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்த பாலிமரேசு தொடர் வினை (Polymerase Chain Reaction-PCR) தொழில்நுடபத்தின் மூலமே பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த சோதனை முடிவுக்காக ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்கவேண்டும். அரை மணிநேரத்தில் முடிவைக் கண்டுபிடிக்கும் ரபிட் சோதனைக் கருவிகளை கடந்த வெள்ளிக்கிழமையே தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த கால இடைவெளிக்குள்ளேயே தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் 22,074 தனிமைப்படுத்தும் கட்டில்களே இருக்கின்ற நிலையில், அவை போதாததால் மேலும் பாதிக்கப்படும் மக்கள் தொகையின் அதிகரிப்பின் அச்சத்தைக் கணக்கிட்டு இரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்று பொதுநல வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள், உபகரணங்கள், பொது மருத்துவமனைகள், சுகாதார பணியாளர்கள் ஆகியவை பெரும் பற்றாக்குறையாக இருக்கின்ற சூழ்நிலையில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பை தடுக்க முடியாத ஆபத்தான நிலையை மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாடும் எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ் நாட்டு மருத்துவர்கள் சம்பள உயர்வு கோரியும் வேலை நிறுத்தம் செய்திருந்தனர். தமிழ் நாட்டில் 30 அல்லது 40 நோயாளிகளை ஒரு செவிலியர் பராமரிக்க வேண்டிய நிலையில் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவரும் ஆபத்தான சேவையில் ஈடுபட்டிருக்கும் குறைந்தளவு சம்பளம் பெறும் 4700 க்கும் மேற்பட்ட 108 இலக்க ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டமை, அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 900 க்கும் அதிகமான வண்டிகளைக் கொண்டிருக்கும் இந்த சேவை ஜிவிகே ஈஎம்ஆர்ஐ எனும் தனியார் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. பல வருடங்களாக சம்பள உயர்வு, பணிநிரந்தரம், வாழ்க்கைக்கான பாதுகாப்பு உட்பட பல கோரிக்கைகளுக்காக இந்த தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்போதும், அனைத்து தொழிற்சங்கங்களால் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியத்தை வழங்கியிருக்கும் நிலையில் இந்த ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த அற்ப சலுகையும் மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்ட பின்னரும் 1,300 ரூபாயில் இருந்து 1,500 வரை பிடித்தம் செய்துள்ளதால் தொழிலாளர்கள் ஆத்திரமுற்றிருக்கிறார்கள். ஆம்பலன்ஸ் ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.
நாங்களோ 10,000 ரூபாய் சம்பளத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல், இரவு பகல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். பணிகள் முடித்து இரவு வீட்டிற்குச் செல்ல பயமாக உள்ளது. நமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அது நம் குடும்பத்தாரையும் பாதித்துவிடுமோ என்று அஞ்சி தனிமையில் வாழ்ந்து வருகிறோம், என்று ஒரு ஆம்புலன்ஸ் ஊழியர் ஊடகமொன்றுக்கு கூறியிருக்கிறார்.
வெகுஜனப் போராட்டங்களைப் பற்றி பீதியடைந்துள்ள அரசாங்கம் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மக்களை அடக்கி வைக்க முயல்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வரை தமிழ் நாட்டில் 228,823 பேர் ஊரடங்கை மீறியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இலட்சத்திற்கும் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செய்திகளின் படி ஒரு கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பழனிச்சாமி தனது அறிவிப்பில் சிமெண்ட், உரம், நிலக்கரி, இரும்பு, ஜவுளி உள்ளிட்ட 13 வகை ஆலைகளை இயக்கலாம் என உத்தரவொன்றினை வெளியிட்டு, பின்னர் அந்த அனுமதியினை இரத்து செய்திருப்பது தொழிலாளர் மத்தியில் உள்ள கோபத்தின் வெளிப்பாடாகும். தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தினை மேற்கொள்வார்கள் என்றும், வருமானம் இன்றி சீற்றமடைந்திருக்கும் பல மில்லியன் ஏழைகள் அடுத்தகட்டமாக தங்களது தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று ஆளும் தட்டு அச்சமடைந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், அகதிகள், அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் பெரும்பான்மை ஏழைகளைக் கொண்ட நாட்டில், எந்த முன்னேற்பாடுகளும் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள், காய் கறிகளின் விலை அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் வருமானமின்றி இருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பட்டினி மற்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்களை வாங்க முடியாமல் இருக்கின்றனர்.
நகரங்களில் வேலை இழந்து, உறங்க இடம் மற்றும் உணவு இன்றி தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பரிசோதிக்கப்படாத காரணத்தினால் கிராமங்களிலும் வைரஸ் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.. பெரும்பாலான கிராமங்களில் இத்தகைய அபாயத்தை சமாளிக்ககூடிய மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவமனைகள் கிடையாது.
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெரும் முதலாளிகளின் அழுத்தத்தின் கீழ் அரசாங்க வழிகாட்டலுடன் 15,000 க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட ஏழைத் தொழிலாளர்கள் முழு அடைப்பையும் மீறி, வைரஸைத் தடுப்பதற்கான எந்த பாதுகாப்புமின்றி வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகத்திற்கு விசுவாசமாக செயல்படும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உயிர்வாழ்வை அலட்சியம் செய்து அவர்களை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளன.
சுமார் 75,000 தொழிலாளர்களுக்கும் அதிகமாக பணிபுரியும் தேயிலைத் தோட்ட ஆலைகள் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்காத காரணத்தால் சிறு உதவி கூட தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. வேலைக்கு சென்றால்தான் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலையிலிருக்கும் தொழிலாளர்களிடம் தாமாக விரும்பியே வேலை செய்கிறோம் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நிர்வாகம் பொறுப்பில்லை என்று எழுதி கொடுத்த பின்பே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாக முதலாளிகளுக்கு சார்பாக தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளும் அஇஅதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க பேரவை, எதிர் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் முற்போக்கு முன்னணி, காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய தொழிற் சங்க காங்கிரஸ், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கோபமடைந்துள்ளனர்.
ஒரு தோட்டத் தொழிலாளியான ஆறுமுகம் newsclick.in எனும் ஊடகமொன்றுக்கு தெரிவித்ததாவது: “அடைப்புக்கு பிறகு நான் வேலைக்குப் போகவில்லை. இருப்பினும், நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால் அநேகமான தொழிலாளர்கள் பணியைத் தொடர்கின்றனர். நிறுவனங்கள் தொழிலாளர்கள் கை கழுவுவதற்கு தண்ணீர் மற்றும் சனிடைசர்களைக் கூட கொடுக்கவில்லை. வைரஸ் பரவுகிறது என்ற அச்சம் இருக்கும்போது, நிறுவனங்களால் இலாபத்திற்காக தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்.”
கேரள மாநில எல்லையில் இருக்கும் தேனி மாவட்டத்தில் ஏலக்காய் பயிரிடும் சுமார் 40,000 விவசாயத் தொழிலாளர்கள் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் வருமானமின்றி வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு மாதங்கள் செடிகளுக்கு தண்ணீர் விடாவிட்டால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்று சிறு விவசாயிகள் மேற்கண்ட அதே ஊடகத்திற்கு கூறியிருக்கிறார்கள். குறைந்தது தகுந்த பாதுகாப்புடன் ஒரு நபரையாவது அங்கு சென்று பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களை விவசாயிகள் கேட்டுள்ள போதும், அனுமதி கிடைக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிற்துறை நட்டமடைவதை அனுமதிக்காத அரசாங்கம், மிகச் சிறு விவசாயிகளின் இழப்புக்களைப் பற்றி அக்கறைப்படவில்லை.