மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் அம்பலப்படுத்திய அமெரிக்கரான செல்சி மானிங் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்படும் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு வாரங்களுள், இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கொழும்பில் பலம்வாய்ந்த ஒரு பொதுக் கூட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு சக்திவாய்ந்த மறியல் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்காக “ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக! அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக!” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு அறிக்கையின் ஆயிரக்கணக்கான சிங்கள மற்றும் தமிழ் பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.
ஜூலை 16 கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் டஜன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன தலைமை தாங்கினார். உளவு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைத்து 170 ஆண்டுகள் சிறையில் அடைக்க கூடும், மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் மானிங்கை மீண்டும் சிறையில் அடைத்து, அவரை நிதி ரீதியாக திவாலாக்க முயற்சிப்பதன் மூலம் அசாஞ்சிற்கு எதிராக அவரை சாட்சியமளிக்க நிர்ப்பந்திக்கின்றது, என விஜேசிறிவர்தன தெளிவுபடுத்தினார்.
அசான்ஜ் மீதான துன்புறுத்தலானது ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான தீவிரமான தாக்குதலின் முன்னணியில் உள்ளது, மேலும் இது அரசாங்கக் குற்றங்களை அம்பலப்படுத்துவதைத் தடுப்பதையும் சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதையும் இலக்காகக் கொண்டதாகும், என விஜேசிறிவர்தன தெரிவித்தார்.
"அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுதலை செய்வதற்கான போராட்டம் ஒரு சர்வதேச போராட்டமாக இருக்க வேண்டும்," என்று விஜேசிறிவர்தன கூறினார். "அவர்களை விடுவிப்பதற்கான போராட்டமானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டத்தின் மையத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.” இதில் ஈடுபடுமாறு கூட்டத்தில் இருந்த அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. சார்பில் பேசிய பிரதீப் ராமநாயக்க, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ஏகாதிபத்திய குற்றங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார். அசான்ஜின் வலைத் தளம், "சாதாரண மக்களுக்கான ஒரு உளவுத்துறை" என்று அவர் கூறினார்.
உலக சோசலிச வலைத் தளத்தின் இலங்கையின் தேசிய ஆசிரியரும், நீண்டகால சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினருமான கே. ரட்நாயக்க உரையாற்றுகையில், அசாஞ்சைப் பாதுகாப்பதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்யவும் அணிதிரட்டவும் போராடுவதானது அனைத்து ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்காகப் போராடுவதில் இருந்து பிரிக்க முடியாதது, என்று கூறினார்.
"சோ.ச.க மற்றும் அதன் ஆதரவாளர்கள் இந்த சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார். முதல் நாள் தொடங்கிய, ஈக்வடோர் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் ஐந்து நாள் தேசிய வேலைநிறுத்தத்தை ரட்நாயக்க சுட்டிக் காட்டினார். இந்த வேலை நிறுத்தம் அசான்ஜின் விடுதலையைக் கோரியமை, இந்த போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பாத்திரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா மற்றும் உலகெங்கிலும் அமெரிக்கா செய்த சூழ்ச்சிகளை அவர்கள் அம்பலப்படுத்தியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் அடியாக இருந்ததாலேயே, வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் அசான்ஜ் மற்றும் மானிங் துன்புறுத்தப்படுகின்றனர்.
"அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளும் இப்போது மனிதகுலத்திற்கு எதிரான புதிய போர்களுக்கும் குற்றங்களுக்கும் தயாராகி வருவதோடு, மேலும் அம்பலப்படுத்தல்களை நிறுத்தவும், அனைத்து வெகுஜன எதிர்ப்பையும் அடக்கவும் முயற்சிக்கின்றன."
ஈரானுடனான அமெரிக்கா தலைமையிலான போரின் உண்மையான ஆபத்து, தீவிரமடையும் அமெரிக்க-சீன பதட்டங்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் அலை அதிகரித்து வருவதையும் ரட்நாயக்க சுட்டிக் காட்டினார்.
எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கங்களின் பிரதிபலிப்பாக இருப்பது, பாசிசம் மற்றும் சர்வாதிகாரமாகும், என்று அவர் கூறினார்.
இலங்கையில் போலி-இடது அமைப்புகளான நவ சமசமாஜ கட்சி, முன்நிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் அவர்களின் சர்வதேச சகாக்களும் அசான்ஜ் மற்றும் மானிங் துன்புறுத்தப்படுவது தொடர்பாக மௌனம் காப்பதை பேச்சாளர் கண்டித்தார். உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய பாதுகாப்புக் குழுவில் சேரவும், அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் பார்வையாளர்களை வலியுறுத்தியதன் மூலம் ரட்நாயக்க உரையை முடித்தார்.
கொழும்பு கூட்டத்திற்கு ஆறு நாட்களுக்கு முன்னர், ஜூலை 10 அன்று, அசான்ஜ் மற்றும் மானிங்கை விடுவிக்கக் கோரி, இலங்கையின் போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகே சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தன. மறியல் போராட்டத்திற்கு முந்தைய நாட்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் அருகிலுள்ள சிறிய தீவுகளிலில் இருந்தும், வடக்கின் மத்திய நகரமான கிளிநொச்சியில் இருந்தும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "ஏகாதிபத்திய போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!" “செல்சி மானிங்கை விடுதலை செய்!” “மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலைத் தோற்கடி!” “அமெரிக்கப் போர் திட்டங்களை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதத்தை எதிர்த்திடு!” “அமெரிக்க போர் திட்டங்களுக்கு கொழும்பு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்த்திடு!” போன்ற கோஷங்களை முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை கவனிக்க அரசாங்க புலனாய்வு அதிகாரிகள் அணிதிரட்டப்பட்டிருந்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், இராணுவம் இன்னும் வடக்கை ஆக்கிரமித்துக்கொண்டு கண்காணித்து வருகிறது.
மறியல் போராட்டத்தின் பின்னர் உரையாற்றிய சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் பி. திருஞானசம்பந்தர், அசான்ஜ் மற்றும் மானிங் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சவின் அரசாங்கமும், அரச பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய துணை இராணுவ குழுக்களும் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் வாஷிங்டனின் உடந்தையை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, உலகளாவிய பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கான WSWS ஆசிரியர் குழுவின் அழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ரூபாவாஹினி, வசந்தம் டிவி, டன் டிவி, பஹலவன் டிவி, ஐபிசி தமிழ், மற்றும் கெபிடல் வானொலி உள்ளிட்ட பல ஊடகங்களும் இங்கு செய்தி சேகரிக்க வந்திருந்தன. அந்த ஊடகங்கள் திருஞானசம்பந்தர் மற்றும் தேவராஜாவிடம் இருந்து தனித்தனி குரல் பதிவுகளையும் பெற்றுக்கொண்டன. அவை வானொலி அலை வரிசையில் ஒலிபரப்பானதுடன், ஜூலை 10 அன்று சக்தி டிவியின் நியுஸ் பெஸ்ட் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பில் ஆர்ப்பாட்டத்தின் சில காட்சிகளை ஒளிபரப்பியது. யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் பத்திரிகை, “ஜூலியன் அசாஞ்சை உடன் விடுதலை செய்!” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களுடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
