மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
2016 மே மாதத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களுக்கான பிரச்சாரங்களுக்கு மத்தியில் ஸ்ராலினிச, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இரண்டும் தமிழ்நாட்டின் தொழிலாள வர்க்கத்திற்கு இன்னுமொரு பொறியை தயாரித்துக் கொண்டிருக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற வலது-சாரி பிராந்தியவாத, சாதிய கட்சிகளுடன் சேர்ந்து அவை ஒரு மூன்றாவது அணியை, அல்லது மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தமிழ்நாட்டில் இருக்கும் இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளான ஆளும் அஇஅதிமுக (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) மற்றும் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) ஆகிய கட்சிகள் மீதான பிரமைவிலகலும், கோபமும் அதிகரித்துச் செல்வதன் மத்தியில், அவற்றுடனான தமது நீண்டகாலக் கூட்டணி உறவை இரண்டு ஸ்ராலினிச கட்சிகளும் கைவிடுகின்றன. எனினும் மக்கள் நலக் கூட்டணி தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை, மாறாக முதலாளித்துவ வர்க்கத்திற்காகவும் ஏகாதிபத்தியம் மற்றும் நாடுகடந்த மூலதனத்துடன் நெருக்கமான பிணைப்பு கொண்ட வசதியான நடுத்தர வர்க்க கூறுகளுக்காகவுமே பேசுகிறது என்பதை அதன் வேலைத்திட்டமும் அதன் முன்னிலைத் தலைவர்களது குணாம்சமும் தெளிவாக்குகின்றன.
ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களின் பின்னால் எல்லாவற்றுக்கும் மேல், அமெரிக்க அரசாங்கம் அதனது சீனாவுக்கு எதிரான “ஆசியாவை நோக்கித் திரும்புதல்” ஆகியவற்றின் நலன்களின் பின்னால் அணிவகுத்திருப்பதே மக்கள் நலக் கூட்டணி வேலைத்திட்டத்தின் மத்திய அம்சமாக இருக்கிறது. புதுடெல்லியினை அமெரிக்காவின் மூலோபாயத் தேவைகளின் பின்னால் நெருக்கமாக அணிவகுக்கச் செய்வதற்காக இந்திய வெளியுறவுக் கொள்கை பரந்தவகையில் ஒரு மறுநோக்குநிலைக்கு உட்படுத்தப்பட்டு வருவதன் மத்தியில் தான் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த வாரத்தில் இந்திய அரசாங்கம் நாட்டின் துறைமுகங்களையும் வான் படைத் தளங்களையும் அமெரிக்க இராணுவத்திற்காக திறந்து விட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் வித்தியாசமான கட்சிகள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் தலைவராக அமெரிக்க ஆதரவு அரசியல்வாதியும் ஒபாமாவை புகழ்பாடுபவருமான மதிமுக தலைவர் வை. கோபாலசாமியை தெரிவுசெய்யபட்டுள்ளார். 2008 ஜூலையில் சிக்காகோவில் பராக் ஒபாமாவை சந்தித்த கோபாலசாமி, ஒபாமாவின் பிரச்சார சுலோகமான ஆம், நம்மால் முடியும் (Yes We Can) என்பதை தலைப்பாகக் கொண்டு தான் எழுதியிருந்த ஒரு புத்தகத்தின் பிரதியை அவரிடம் காட்டி இருந்தார். அப்போது ஒபாமாவின் “செயலூக்கமும், வசீகரமும் கண்டங்களின் எல்லைகளை எல்லாம் கடந்து உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் மக்களது இதயங்களையும் கூடத் தொட்டிருக்கிறது” என்று கோபாலசாமி கூறினார்.
2010 இல் டெல்லியில் தனது புத்தகத்தை வெளியிட்ட கோபாலசாமி, “வேறு எவரும் சாதிக்க முடிந்திராததை திரு.ஒபாமா சாதித்திருந்தார்” என்று பிரகடனப் படுத்தினார்.
நவம்பர் 25 அன்று வெளியான மக்கள் நலக் கூட்டணியின் ஒரு அறிக்கை ஒன்று அறிவிக்கிறது, “எங்களது குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்வோம். கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளும் உடன்பட்டிருக்கக் கூடிய ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். ஆகவே தனித் தமிழீழம், கூடங்குள அணு உலை எதிர்ப்பு ஆகியவை உள்ளிட்ட சில பிரச்சினைகளை நாங்கள் தவிர்த்திருக்கிறோம்.”
ஏகாதிபத்தியத்துடனான இந்திய முதலாளித்துவத்தின் வஞ்சகங்களில் குறுக்கிடக் கூடும் என்பதால் ஸ்ராலினிஸ்டுகள் கூடங்குளம் அணு உலைக்கான வெகுஜன எதிர்ப்பிற்கு குரோதமாக இருப்பதுடன் தமிழ் சிறுபான்மையினரின் நிலைப்பாட்டிலும் மவுனம் காக்கின்றனர்.
கூடங்குளம் அணு உலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2002 இல் தொடங்கிய அதன் கட்டுமானம், 2004 இந்திய பொதுத் தேர்தலில் CPI, CPM இணைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் – அதிகாரத்துக்கு கொண்டுவந்த பின்னரும் தொடர்ந்தது.
நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், அணு உலையினால் விளையும் சூழல் மாசுபடுத்தல், எதிர்பாரத விளைவுகளுக்கும் அஞ்சி, இத்திட்டத்திற்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்தனர். 1984 இல் நடந்த உயிர்களை கொன்ற போபால் யூனியன் கார்பைடு இரசாயன ஆலை தொழில்துறை பேரழிவுக்கு பின்னர் இத்தகைய திட்டங்களுக்கு இந்திய மக்களிடையே நியாயமான அவநம்பிக்கை ஆழமாக நிலவியது இதில் பிரதிபலித்தது. இந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கு நம்பகத்தன்மையுடனான மின்சாரம் வழங்க வாக்குறுதி கொடுப்பதற்கும் அதன்மூலம் அந்நிய முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரே வழியாக இந்த ஆலையினை கண்டது.
இலங்கையின் தமிழ் சிறுபான்மையினர் விடயத்தில், ஸ்ராலினிஸ்டுகள் மீண்டும் அமெரிக்காவின் பக்கமான இந்திய முதலாளித்துவத்தின் சாய்வையே பாதுகாத்து நிற்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராய் தமிழ்நாட்டில் நிலவுகின்ற வெகுஜன அனுதாபத்தை, இந்திய ஆளும் வர்க்கமும் ஸ்ராலினிச கட்சிகளும் நீண்டகாலமாய் சுரண்டி வந்திருந்தன. இந்திய அரசாங்கம் இலங்கையில் இருக்கும் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க விரும்பிய சமயத்தில் எல்லாம் இலங்கையில் இருக்கும் தமிழ் தேசியவாத குழுக்களை இவர்கள் ஆயுதபாணியாக்கி இருக்கின்றனர்.
ஆயினும், இலங்கையில் சீனாவுடனான மூலோபாய போட்டி அதிகரித்த நிலையில், அமெரிக்காவும், இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் இணைந்து போரின் இறுதி ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் இராணுவத் தாக்குதலை ஆதரித்ததோடு, அதற்கு இராணுவ, தளவாட உதவிகளும் செய்தன. ஒபாமா நிர்வாகத்தின் உதவியுடன் 2009 இல் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் படுகொலை செய்யப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில், 40,000க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பத்தாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர், முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் குறித்த எந்தவொரு அக்கறையான விசாரணையும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் அரசாங்கத்துடன் அமெரிக்காவும் இந்தியாவும் ஸ்தாபித்திருக்கும் கூட்டிற்கு சேதம் விளைவிக்கும். இலங்கையின் பொருளாதார மற்றும் மூலோபாய நோக்குநிலையை சீனாவின் பக்கமிருந்து திருப்பி, இந்தியா மற்றும் அமெரிக்காவை நோக்கி நிலையமைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில் 2015 ஜனவரியில் சிறிசேன ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த இறுதிக்கட்ட தாக்குதலில் முன்னிலைப் பாத்திரங்களை வகித்த இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகள்தான் இந்த அரசாங்கத்தின் பொறுப்புகளில் உள்ளனர்.
மேலும், இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் முக்கியமான இலங்கை தமிழ் கூட்டாளிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டுமே சிறிசேன அரசாங்கத்தை நோக்கியே நிலையமைத்துக் கொண்டிருப்பதோடு இலங்கை அரசில் பொறுப்புகளையும் ஏற்றுள்ளன.
இந்த காரணங்களுக்காக, மக்கள் நலக் கூட்டணியும், இந்திய ஸ்ராலினிஸ்டுகளும், தமிழ் வெகுஜனங்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறை குறித்த தமது வேண்டாவெறுப்பான, தந்திரோபாய நோக்கத்துடனான விமர்சனங்களையும் கூட கைவிட்டிருக்கின்றன.
மக்கள் நலக் கூட்டணியின் தலைவரான கோபால்சாமி, 1989 இல் படகு பயணம் மூலமாக இந்தியாவில் இருந்து இலங்கை சென்று விடுதலைப் புலிககள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து வந்ததாக பெருமையடித்து வந்தார். ஆனால், இப்போது அவர், விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கம் படுகொலை செய்ய ஒப்புதலளித்த ஒபாமா நிர்வாகத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மக்கள் நலக் கூட்டணியியின் உருவாக்கமானது, இந்திய ஸ்ராலினிசம், கிரெம்ளின் அதிகாரத்துவத்தில் இருந்த அதன் கூட்டாளிகள் சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை மீட்சி செய்ததன் கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், அரசியல் திவால்நிலையடைந்து இருப்பதற்கே சான்றுபகர்கிறது. இந்திய தேசிய காங்கிரஸை நோக்கிய அதன் நோக்குநிலையும், இந்தியாவில் சோசலிசப் புரட்சி உட்பட உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை அது நிராகரித்தமையும் இறுதியில் அதனை ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர்ந்த ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவக் கட்சியாக உருமாற்றியிருக்கிறது.
1991 இல் காங்கிரஸ் கட்சியால் இந்தியா வெளிநாட்டு மூலதனத்திற்காய் திறந்து விடப்பட்டதில் CPI மற்றும் CPM ஒரு முக்கிய பங்கு வகித்தன. அக்கட்சிகள் மேற்கு வங்கம் போன்ற தாங்கள் ஆட்சி செய்த சில மாநிலங்களில் இந்த நிகழ்முறையை மேற்பார்வை செய்திருந்ததுடன், ஏனையவற்றில் வணிக ஆதரவு நடவடிக்கைகளுக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முடக்கின. தொழிலாளர்களுக்கு குரோதமான முதலாளித்துவ மற்றும் வசதிபடைத்த நடுத்தர வர்க்க கூறுகளின் ஒரு தொகுதியின் பிரதிநிதிகளாக இவை எழுந்திருக்கின்றன.
இந்திய பிராந்தியத்தில் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர நோக்குநிலையின் பிற்போக்குத்தனமான தாக்கங்கள் ஆரம்பத்திலேயும் மற்றும் கூர்மையான வடிவத்திலும் வெளிப்பட்ட ஒரு இடமாக தமிழ்நாடு இருந்தது.
தமிழ்நாட்டில் 1967 இல் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது முதலாக, தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது ஒரு அலைக்கு மத்தியில், இந்திய ஸ்ராலினிஸ்டுகள் திராவிட தேசியவாதக் கட்சிகளை திமுக, அதன்பின் திமுகவில் இருந்து பிரிந்த அஇஅதிமுக வினை அதிகாரத்திற்கு கொண்டுவர ஆதரவளித்தனர். 1947 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரமடைவதற்கு முந்தைய சமயத்தில், திராவிடவாத கட்சிகள் காங்கிரஸையும் சுதந்திரப் போராட்டத்தையும் எதிர்த்து, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஆதரித்தவை ஆகும். பின்னர் அவை எப்போதும் இந்திய முதலாளித்துவ அரசியலின் வலது பக்கமே இருந்து வந்திருந்தன.
திமுக மற்றும் அதன்பின் அஇஅதிமுக ஆகியவற்றில் ஒன்று மாற்றி ஒன்றை “மக்கள் சார்பு” செயல்திட்டத்துடனான “மதச்சார்பற்ற” கட்சிகள் என்று பாராட்டி பல தசாப்தங்களாய் தொழிலாள வர்க்கத்தை இக்கட்சிகளுக்கு கீழ்ப்படியச் செய்யவே CPI மற்றும் CPM வேலை செய்து வந்திருந்தன.
1991 முதலாக இரண்டு கட்சிகளும் சுதந்திர சந்தைக் கொள்கைகளை அமல்படுத்தி வந்திருந்ததோடு பன்னாட்டு நிறுவனங்களுக்காக மலிவு உழைப்பு சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் திறந்தன. 2003 இல், தமிழ்நாட்டில் ஸ்ராலினிச ஆதரவு பெற்றிருந்த அஇஅதிமுக அரசாங்கம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 200,000 அரசு ஊழியர்களை டெல்லியில் இருந்த பாரதீய ஜனதா தள தலைமையிலான அரசாங்கத்தின் உதவியுடன் வேலைநீக்கம் செய்ததோடு, அரக்கத்தனமான தொழிலாளர் விரோத ’அத்தியாவசிய சேவைகள்’ சட்டத்தை அமல்படுத்தி பாரிய துப்பாக்கிசூடுகளையும் பாரிய கைது நடவடிக்கைகளையும் நடத்தியது.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி நிலைக்குலைவை சந்தித்த சமயத்தில், இந்திய ஸ்ராலினிஸ்டுகள் 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு படுதோல்வியை சந்தித்தனர், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவெங்கிலும் ஆதரவை இழந்தனர். அடிப்படை உணவுப் பொருட்களின் கூர்மையான விலையேற்றங்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் தொழிலாளர்களிடையே அமைதியின்மை பெருகிச் செல்லும் நிலைக்கு இக்கட்சிகள் முகம்கொடுத்து நிற்கின்றன. நெய்வேலி லிக்னைட் சுரங்கத் தொழிலாளர்கள், சுகாதாரத்துறை தொழிலாளர்கள், மற்றும் ஃபாக்ஸ்கான், ஹூண்டாய், மற்றும் BYD போன்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நாடுகடந்த நிறுவனங்களது தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்த வெடிப்பான நிலைமைகளின் கீழ் தொழிலாளர் போராட்டங்களின் மீது நம்பிக்கையிழக்கச் செய்து தொழிலாளர்களை திவாலடைந்த முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிப் போடுவதற்கான நப்பாசையுடனான முயற்சியே மக்கள் நலக் கூட்டணியி உருவாக்கம் ஆகும்.
Copyright © 1998-2016 World Socialist Web Site - All rights reserved