ஒரு புரட்சிகர
சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக! |
WSWS : Tamil : நூலகம் |
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தொழிலாளர்கள் பிரிவினை எல்லையைக் கடந்து தங்களது பொது எதிரிகளான துணைக்கண்டத்தின் போட்டி தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்களது போராட்டங்களை ஒருங்கிணைப்பது மூலோபாயக் கட்டாயமாகும். நான்காவதான அத்துடன் அணுஆயுதப் போராக மாறத்தக்க ஒரு இந்திய-பாகிஸ்தான் போர் அபாயத்தை அகற்றுவதற்கும், வகுப்புவாதத்தின் கசையடியை நீக்குவதற்கும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் பாற்பட்ட பகுத்தறிவுபட்ட சமத்துவமான பொருளாதார அபிவிருத்திக்கும் 1947ல் தேசிய முதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான அரசு அமைப்பைத் தூக்கியெறிவதும் மற்றும் துணைக்கண்டத்தின் மக்களை தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தில் சுயவிருப்பத்துடன் ஒன்றுபடுத்துவதும் அவசியமாக உள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கங்கள் தத்தமது நாடுகளில் இருக்கக் கூடிய பல்தரப்பட்ட இனக் குழுக்களிடையே உண்மையான சமத்துவத்தை வழங்கும் திறன் முற்றுமுதலாய் இல்லாதிருப்பதை நிரூபணம் செய்துள்ளன. 1947-1948ன் அரசியல் காயங்கள் சீழ் பிடித்து துர்நாற்றத்தையே கொண்டுவந்திருக்கின்றன. இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் போலவே பாகிஸ்தானிலும் முதலாளித்துவ வர்க்கமானது, இன-தேசியவாத மற்றும் வகுப்புவாத பேதங்களை கிளறி விடுவதையும் திரிபுசெய்வதையும் தனது அரசியல் மற்றும் சித்தாந்தக் கட்டுப்பாட்டு அமைப்புமுறையின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாகவே ஆக்கி விட்டிருக்கிறது. இது தன் பங்கிற்கு பலதரப்பட்ட இன-தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் எழுச்சிக்கு விளைநிலமாகி இருக்கிறது. இந்த இயக்கங்கள் உண்மையான ஜனநாயக மற்றும் சமூகப்பொருளாதார துன்பங்களுக்கு அழைப்புவிடுகின்றன. ஆனால் அவை முன்னெடுக்கிற தேசியவாத-தற்சிறப்புவாத வேலைத்திட்டம் எந்த வகையிலும் தெற்காசியாவின் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்குப் பொருந்துவதாய் இல்லை. துணைக்கண்டத்தைப் போட்டி அரசுகளாய் துண்டாடுவது ஏகாதிபத்திய சூதுக்கும் ஒடுக்குமுறைக்கும் வழிவகுக்கும்; தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்குப் புதிய முட்டுக்கட்டைகளை இடும்; அத்துடன் இன அரசியல் மற்றும் மோதலை கூடுதலாய் ஸ்தாபனமயப்படுத்தும். முதலாளித்துவத்தின் பிரிவுகள் தங்களது சொந்த இனரீதியாய் வரையறுக்கப்பட்ட நாடுகளுக்காக அதனை செழுமைப்படுத்துவதற்கும் சுரண்டுவதற்குமான (குறிப்பாக சர்வதேச மூலதனத்துடன் ஒப்பந்தங்களை மத்தியஸ்தம் செய்வதன் மூலம்) சாத்தியங்களை விஸ்தரிக்கிற ஒரு கண்ணோட்டத்துடன் போராடுவதை தேசியவாத-பிரிவினைவாத இயக்கங்கள் நாவன்மையுடன் முன்வைக்கின்றன. அவற்றின் அரசியல் 1947-1948ல் தெற்காசியாவின் மீது திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான தேசிய-அரசு அமைப்புமுறையை கவிழ்த்துப் போடுவதை நோக்கி நோக்குநிலை கொண்டதாக இல்லை, மாறாக மேலாதிக்கம் கொண்ட முதலாளித்துவ கன்னைகளுக்கு நெருக்குதல் அளிப்பதன் மூலமும் (பல சமயங்களில் கிளர்ச்சிகள் மூலமாக) பெரும் சக்திகளின் நன்மதிப்பைப் பெறுவதன் மூலமும் தனது எல்லைகளில் சிறிதை மாற்றியமைப்பதை நோக்கியே நோக்குநிலை கொண்டிருக்கின்றன. “பலூசிஸ்தான் பலோச்சிகளுக்கே”, “கராச்சி மொஹாஜிர்களுக்கே”,”சிந்து சிந்திகளுக்கே” போன்ற முழக்கங்களை எழுப்புகின்ற இத்தகைய இயக்கங்கள் “அயல்” தேசியங்களை சேர்ந்த தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பேரினவாதக் கண்டிப்புகளுக்கும் வன்முறைக்கும் ஆட்படுத்துகின்றன, தற்சிறப்புவாத மொழி மற்றும் குடிமக்கள் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். |