ஒரு புரட்சிகர
சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக! |
WSWS : Tamil : நூலகம் |
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் நிறுவப்பட்டதானது சுதந்திரத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மதரீதியாக ஒழுங்கமைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்து ஜனநாயக, ஏகாதிபத்திய-எதிர்ப்பு புரட்சியை ஒடுக்கியது தான் ஏற்பட்டது. பிரிவினையின் உடனடி விளைவாய் ஏற்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் சுமார் 2 மில்லியன் உயிரிழப்புகள் நேர்ந்ததோடு 12-14 மில்லியன் மக்கள் அகதிகளாயினர். துணைக்கண்டத்தின் உயிர்வாழும் உடல் பல துண்டங்களாக, அதாவது பெங்காளிகள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள் மற்றும் பிற இனங்களைப் பிரித்து, துண்டு போடப்பட்டது. அத்துடன் பொருளாதார, வரலாற்று மற்றும் கலாச்சார தர்க்கத்தை மறுத்த தொடர்ந்து மறுத்து வருகிற அரசு எல்லைகள் திணிக்கப்பட்டன. ”மதவாதப் பிரச்சினை”யைத் தீர்ப்பதில் இருந்து வெகு விலகி பிரிவினையானது தெற்காசியாவின் அரசுக் கட்டமைப்பில் மதப் பிரிவினைகளை புனிதப்படுத்தியதன் மூலம் அதனை சிக்கலாக்கியிருக்கிறது. பிரிவினையானது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பிற்போக்கான புவியரசியல் போராட்டம் எழுவதற்கு வழிவகுத்திருக்கிறது. இது மூன்று அறிவிக்கப்பட்ட போர்கள் மற்றும் எண்ணற்ற போர் நெருக்கடிகளில் விளைந்துள்ளதோடு முக்கியமான பொருளாதார வளங்களை விரயம் செய்துள்ளது. அத்துடன் இன்று உலக நாகரிகத்திற்கே பேரழிவான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு அணுஆயுதப் பதட்ட நிலையின் மூலம் தெற்காசிய மக்களை அச்சுறுத்துகிறது. பிரிவினையானது, பகுத்தறிவுபட்ட பொருளாதார அபிவிருத்திக்கு (நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது உட்பட) இடைஞ்சல் செய்ததன் மூலமும், ஒரு அரசையும் ஆளும் உயரடுக்கையும் இன்னொன்றிற்கு எதிராக நிறுத்தி விளையாடுவதற்கு அமெரிக்கா மற்றும் மற்ற பெரும் சக்திகளுக்கு ஒரு அரசியல் வகைமுறையை வழங்கியிருப்பதன் மூலமும் தெற்காசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இன்று தெற்காசியா தான் உலகில் மிகக் குறைந்த அளவில் பொருளாதாரரீதியாக ஒருங்கிணைந்த பிராந்தியமாக உள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ ஒழுங்கின் கீழ் தெற்காசியாவின் “முஸ்லீம் பிரதிநிதிகளாக” சேவை செய்ததின் மூலமும் பல்வேறு இஸ்லாமியக் குழுக்களையும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கான களப்பலிப் படையாகப் (cannon fodder) (போர்வீர மரபினர்) பயன்படுத்த ஊக்குவித்ததன் மூலமும் சிறப்புரிமைகளைப் பெற்றுத் திகழ்ந்திருந்த முஸ்லீம் ஜமீன்தார்கள் மற்றும் முதலாளிகளின் பிரிவுகளின் விலைபோகத்தக்க வர்க்க நலன்களையே மதவாத பாகிஸ்தான் தேசியத் திட்டம் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஒரு உயரடுக்கிற்கான அமைப்பாக இருந்த முஸ்லீம் லீக் கட்சி தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கலைஞர்கள் மீது அலட்சியம் காட்டும் அவப்பெயர் பெற்றதாய் இருந்தது. அதில் இப்போது போலவே அப்போதும் தெற்காசிய முஸ்லீம்களின் பரந்த பிரிவினர் பங்குபெற்றிருந்தனர். அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவை பகிரங்கமாய் எதிர்நோக்கியது. எப்படியிருப்பினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்து ஆளும் மூலோபாயத்திற்கான மற்றும் பிரிவினைக்கான வெற்றி என்பதற்கு இறுதிப் பொறுப்பு முதலாகவும் முதன்மையாகவும், வளர்ந்து வந்த இந்திய முதலாளித்துவத்தின் பிரதானக் கட்சியான இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்ததே. அது இந்து-முஸ்லீம் ஒற்றுமையை ஏற்றுக் கொண்டிருந்த அதேசமயத்தில், தான் கொண்டிருந்த வர்க்க நிலைப்பாட்டின் காரணமாக, தெற்காசிய மக்களை காலனித்துவ-ஜமீன்தார்-முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பொதுவான வர்க்க நலன்களுக்கு அழைப்புவிட்டதன் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு முழுவிரோதப்பட்டதாய் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்தியாவில் தொழிலாளர்-விவசாயிகள் போராட்டங்களின் அலையின் எழுச்சியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் போர்க்குணம் பெற்ற தன்மையும் பெருகியதை கண்டு அஞ்சிய காங்கிரஸ், முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்தும் பொருட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் கட்டப்பட்ட அரசு எந்திரத்தில் தனது கரத்தைக் கொணர அவசரமுற்றது. இதனால் ஒன்றுபட்ட வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு ஆட்சி அவைக்கான கோரிக்கை மற்றும் டொமினியன் அந்தஸ்துக்கான அதன் எதிர்ப்பு ஆகிய தன் வேலைத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களை அது துரிதமாகக் கைவிட்டு, துணைக்கண்டத்தைப் பிரிப்பதில் முஸ்லீம் லீக் மற்றும் பிரிட்டிஷாருடன் இணைவதற்குத் தெரிவு செய்தது. இன்னும் சொன்னால், தெற்காசியாவை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பதற்கு வங்காளத்தையும் பஞ்சாபையும் வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பதும் அவசியமாக இருக்கிறது என்று வலியுறுத்தி, காங்கிரஸ் தான் பிரிவினையின் மிக ஆவேசமான மற்றும் தொடர்ச்சி பேணிய நாயகனாகியது. ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த காட்டிக் கொடுப்பிற்கு பெரும் வழிவகை செய்து கொடுத்தது. சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை தட்டிப் பறித்திருந்த அதிகாரத்துவக் குடியின் (Bureaucratic caste) செல்வாக்கின் கீழ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, சுதந்திரத்திற்கும் பிரிவினைக்கும் முந்தைய இரண்டு தசாப்தங்களில், ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தின் மீது காங்கிரஸ் கொண்டிருந்த பிடியை பெருமளவில் வலுப்படுத்துகிற ஒரு சந்தர்ப்பவாதப் பாதையைப் பின்பற்றியது. இரண்டு-கட்டப் புரட்சி என்கின்ற மென்ஷிவிக்-ஸ்ராலினிச தத்துவத்தின் அடிப்படையில், பிரிட்டிஷ் காலனியத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் காங்கிரசின் தலைமைக்கு எந்த சவாலையும் வைப்பதை ஸ்ராலினிஸ்டுகள் எதிர்த்தனர், அத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் முஸ்லீம் லீக் விடயத்திலும் இதேபோன்றதொரு பாதையையே அது பின்பற்றியது. வகுப்புவாத பாகிஸ்தான் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கியதும் முஸ்லீம் லீகைக் கட்டுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் காரியாளர்களை அதற்கு அனுப்பியதும் இதில் அடங்கியிருந்தன. 1945 மற்றும் 1947க்கு இடையில், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் வரிந்து கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிராய் நின்ற சமயத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டு போட்டி முதலாளித்துவக் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசியப் புரட்சியில் தலைமை கொடுப்பதில் தங்களது “பொறுப்பை” நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. முதலாளித்துவ இந்தியா மற்றும் பாகிஸ்தானாக அவதாரமெடுத்த “விடுதலை” மற்றும் “சுதந்திர”த்தை பிரிவினை தான் வரையறை செய்தது, தொடர்ந்தும் வரையறை செய்து கொண்டிருக்கிறது. ஒரு வழிவிலக்கம் என்பதற்கும் வெகு அப்பாற்பட்டு, இது ஏகாதிபத்திய-எதிர்ப்புப் புரட்சியின் கருச்சிதைவால் விளைந்த இரத்தசகதியுற்ற உடனடியான வெளிப்படையான பின்விளைவாகும். புதிய அரசானது ஜமீன்தார்கள், இளவரசர்கள் மற்றும் பெருவணிகர்களின் செல்வங்களையும் பிற பாதுகாக்கப்பட்ட சொத்து மற்றும் சிறப்புரிமைகளையும் பாதுகாத்தது. இது பிரிட்டிஷ் காலனித்துவ அரசின் முக்கிய ஸ்தாபனங்களையும் சட்டங்களையும் தக்கவைத்துக் கொண்டதோடு, அதிகபட்சமாக முதலாளித்துவ அபிவிருத்திக்கு வழிவகை செய்யும் நோக்கத்துடனான ஒரு சில சில்லறை சீர்திருத்தங்களைத் தழுவிக் கொண்டது. ஆறு தசாப்தங்கள் ஆகி விட்டன. வெகுஜனங்களின் அதிமுக்கிய ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு நேர்மாறாய், நிலப்பிரபுத்துவம், சாதீய ஒடுக்குமுறை மற்றும் பிற நிலப் பிரபுத்துவ சுவடுகள் எல்லாம் பெருகிய முறையில் முதலாளித்துவச் சுரண்டலுடன் பின்னிப் பிணைந்ததாய் ஆகியிருப்பதால் மேற்கூறிய பிரச்சினைகள் முன்னெப்போதையும் விட மிகப் பயங்கரமானதாய் வளர்ந்து விட்டிருக்கின்றன. உலகின் ஏழைகளில் பாதிப் பேர் இத்துணைக்கண்டத்தில் வாழ்கின்றனர். உலகின் வேறு எந்தப் பிராந்தியத்திலும் மக்களில் இவ்வளவு விகிதாச்சாரத்தினர் பட்டினியில் சிக்கியிருக்கவில்லை. இந்திய அரசும் சரி பாகிஸ்தான் அரசும் சரி தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு அதிகமாக கல்வி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பிற்காகச் செலவிடுவதில்லை. பிரிவினை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஆகியவை குறித்த பிற்போக்குத்தனமான தர்க்கத்திற்கு இயைந்த வகையில், உலகின் வேறெந்த பிராந்தியத்தையும் விட இத்துணைக்கண்டப் பகுதி மிகக் குறைந்த பொருளாதார ஒருங்கிணைப்பு கொண்டதாய் உள்ளது. தெற்காசியாவில் பிரிவினை மற்றும் ஆறு தசாப்த கால “சுதந்திர” முதலாளித்துவ தேசிய ஆட்சியின் அனுபவங்களில் இருந்து தொலைதூர நோக்கம் கொண்ட முடிவுகளை தொழிலாள வர்க்கம் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும் காலனித்துவ ஆட்சியின் மற்றும் தெற்கு ஆசியாவினது தாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தியின் பாரம்பரியமும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சோசலிசப் புரட்சியின் மூலமாகவே வெல்லப்பட முடியும். அப்புரட்சி, ஒரு அவசியமாகவே, தெற்காசியாவின் பிற்போக்குத்தனமான அரசுக் கட்டமைப்பை சவால் செய்ய வேண்டியிருக்கும். |