சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

வொல்ஃபோர்த்தின் விட்டோடலும், வேர்க்கர்ஸ் லீக்கில் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் புதுப்பிப்பும், தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் விரிவுரை, ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் இவான் பிளேக் மற்றும் ரொம் மக்கமன் ஆகியோரால் வழங்கப்பட்டதாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த்தின் ஆரம்ப அறிக்கையான, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” ஆகஸ்ட் 7 இல் வெளியிடப்பட்டது.

இரண்டாவது விரிவுரையான, “நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்” ஆகஸ்ட் 14 இல் வெளியிடப்பட்டது.

மூன்றாவது விரிவுரையான, “பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றமும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்” ஆகஸ்ட் 18 இல் பிரசுரிக்கப்பட்டது.

நான்காவது விரிவுரையான, “கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்” என்பது ஆகஸ்ட் 25 இல் பிரசுரிக்கப்பட்டது.

ஐந்தாவது விரிவுரையான “சிலோனில் ’மாபெரும் காட்டிக்கொடுப்பும்’, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிதமும்” என்பது ஆகஸ்ட் 30 இல் பிரசுரிக்கப்பட்டது.

ஆறாவது விரிவுரை, “பப்லோவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டமும், OCI இன் மத்தியவாதமும், ICFI க்கு உள்ளே எழுந்த நெருக்கடியும்” செப்டம்பர் 6 இல் வெளியிடப்பட்டது.

ஏழாவது விரிவுரை, “ஏர்னெஸ்ட் மண்டேலின் “நவ-முதலாளித்துவத்தை” ICFI அம்பலப்படுத்துவதும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி மீதான பகுப்பாய்வும்: 1967-1971” செப்டம்பர் 8 இல் வெளியிடப்பட்டது.

அனைத்து விரிவுரைகளும் உலக சோசலிச வலைத் தளத்தில் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்படும்.

முன்னுரை

அடுத்தாண்டு வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து ரிம் வொல்ஃபோர்த் (Tim Wohlforth) இராஜினாமா செய்ததன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதம், ஆகஸ்ட் 1973 இல், வொல்ஃபோர்த் நான்சி ஃபீல்ட்ஸைக் (Nancy Fields) கட்சி தலைமைக்கு உயர்த்தினார். ஓர் அகநிலையான மற்றும் கொள்கையற்ற முடிவாக இருந்த இது, வேர்க்கர்ஸ் லீக்கை ஏறக்குறைய கலைத்துவிடும் அளவுக்கு ஓர் அரசியல் அழிபாட்டு வேலையாக இருந்தது. அதற்கடுத்த ஆண்டில், பாதிக்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதுடன், ஒட்டுமொத்த கட்சிக் கிளைகளும் கலைக்கப்பட்டன.

வொல்ஃபோர்த் உடனான உடைவு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்தப் போராட்டத்தில், வரலாற்று முன்னோக்கு, அரசியல் கொள்கை, அமைப்பின் பாதுகாப்பு மற்றும் நடைமுறைவாதத்தின் அகநிலை கருத்துவாத மெய்யியலுக்கு எதிராக இயங்கியல் சடவாதத்தின் பாதுகாப்பு ஆகிய அடிப்படை பிரச்சினைகள் உள்ளடங்கி இருந்தன.

அனைத்திற்கும் மேலாக, அது பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆழப்படுத்துவதை பிரதிநிதித்துவம் செய்தது. பப்லோவாதிகளுடன் அவர்களின் கொள்கையற்ற மறுஐக்கியத்தை எதிர்த்ததற்காக SWP இல் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு வெறும் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், வொல்ஃபோர்த் விரைவிலேயே மீண்டும் SWP க்கு திரும்பி வந்து, GPU-FBI உளவாளி ஜோசப் ஹான்சனின் தலைமைக் கூட்டாளி ஆனார். அவர்களின் பரஸ்பர அரவணைப்பும் மற்றும் கட்சிப் பாதுகாப்பு மீது அவர்களின் நாடி நரம்பில் ஊறியிருந்த விரோதமும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையைத் தொடங்கத் தூண்டியது. இது 1963 உடைவுக்குப் பின்னர் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான முன்னேற்றத்தைக் குறித்தது.

வொல்ஃபோர்த்தின் சீரழிவில் சம்பந்தப்பட்டிருந்த மெய்யியல் கேள்விகள் முக்கியமானவையாகும். பேர்ன்ஹாம் சாக்ட்மனில் இருந்து, மோரோ-கோல்ட்மன் வரை, கோக்ரன்-கிளார்க் வரை (Cochran-Clarke), மற்றும் மிகவும் எரிச்சலூட்டும் விதத்தில் ஹன்சன் மற்றும் ஜோர்ஜ் நோவாக் வரை, ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டு விலகிய அனைவரது விவகாரத்தைப் போலவே, வொல்ஃபோர்த்தும் இயங்கியல் சடவாதத்தை நிராகரித்து, நடைமுறைவாத மெய்யியலை ஏற்றார். அகநிலையான குறுகிய-கால அரசியல் கணக்கீடுகள் மற்றும் மார்க்சிச அணுகுமுறையின் புறநிலை வரலாற்று அடித்தளங்கள் மீதான நிராகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், அமெரிக்க முதலாளித்துவத்தின் இந்த உள்நாட்டுத் தத்துவம், சோசலிச மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு முழுவதும் நீடித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் கூட, வொல்ஃபோர்த்தின் அரசியலைப் போன்ற அதே மாதிரியான ஒரு நடைமுறைவாத மற்றும் அகநிலை அரசியலைப் பயன்படுத்தும், நிலையற்ற குட்டி-முதலாளித்துவப் பிரமுகர்களைப்பற்றி நாம் மீண்டும் ஒருமுறை கையாள வேண்டியிருந்தது.

வொல்ஃபோர்த் அனுபவத்தின் பல படிப்பினைகள், ICFI இன் ஒவ்வொரு பிரிவின் காரியாளர்களுக்கும் மிகவும் முக்கியமானவை. மேலும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்து வருகையில், இன்று நம் சர்வதேச இயக்கத்தால் இவை உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். உக்ரேனில் விரிவாக்கப்பட்டு வரும் போர், தொடர்ந்து கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று, அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, உலகளவில் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பு ஆகியவை நம் காரியாளர்கள் மீது அதிகரித்தளவில் அழுத்தங்களைக் கொண்டு வரும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்வதை நோக்கி நோக்குநிலை கொண்ட, வரலாற்று சடவாதத்தில் வேரூன்றிய, ஒரு புறநிலையான மற்றும் கட்டுப்பாடான புரட்சிகர அணுகுமுறையால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும்.

1971 இல் ரிம் வொல்ஃபோர்த் (இடதுபுறம் இருப்பவர்), டேவிட் நோர்த் (வலதுபுறம் இருப்பவர்)

1970 களின் முற்பகுதியில் வேர்க்கர்ஸ் லீக்கின் மத்தியில் இருந்த முரண்பாடு என்னவெனில் கட்சியின் இளம் காரியாளர்களிடையே இருந்த அளப்பரிய புரட்சிகர ஆற்றலுக்கும் அதிகரித்தளவில் வொல்ஃபோர்த்தின் அகநிலையான தலைமைக்கும் இடையே நிலவிய முரண்பாடாகும். அந்த நேரத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப கட்சியில் இணைந்த இளைஞர்களின் அடுக்கு இடதை நோக்கி நகர்ந்த அதேவேளையில், வொல்ஃபோர்த் தொடர்ந்து ஒரே சீராக வலது நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த முரண்பாடு, வொல்ஃபோர்த் இராஜினாமா செய்ததில் தீர்க்கப்பட்டு விடவில்லை. அது, 1974 மற்றும் 1982 க்கு இடையே கட்சிக்கு ஓர் உயர்மட்ட அரசியல் தெளிவையும் மற்றும் புரட்சிகர நடைமுறையையும் உருவாக்க உதவியது. அது, 1982 மற்றும் 1986 க்கு இடையே WRP இன் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக ICFI தொடுத்த போராட்டத்தை வழி நடத்த வேர்க்கர்ஸ் லீக்கைத் தயார்படுத்தி, இறுதியில், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான ICFI இன் 33 ஆண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நான்காம் கட்டத்தைத் தொடங்கி வைத்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர கொள்கைகள் மற்றும் முன்னோக்கின் ஆழமான வலிமைக்கு ஒரு சான்றாக, இந்த போராட்டங்களில் உருவான அரசியல் தலைவர்களின் தலைமுறை இன்றும் நம் கட்சியில் தொடர்ந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

வொல்ஃபோர்த்தின் பின்புலமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்

நவம்பர் 4, 1972 இல், மக்ஸ் சாக்ட்மன் அவரது 68 ஆவது வயதில் காலமானார். அவரது வாழ்வின் கடைசி தசாப்தத்தில், அவர் கியூபாவின் பிக்ஸ் வளைகுடா (Bay of Pigs) படையெடுப்பு மற்றும் வடக்கு வியட்நாம் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குண்டுவீச்சை ஆதரிக்கும் அளவுக்கு, அரசியல்ரீதியில் வெகுதூரம் வலதுக்குச் சென்றிருந்தார். சாக்ட்மனுக்கான இரங்கல் செய்தியில், வொல்ஃபோர்த் எழுதுகையில், அவரின் சீ ரழிவானது அவருடைய முந்தைய பங்களிப்புகளில் இருந்து “‘திசைதிருப்புவது’ மட்டுமல்ல, மாறாக அவற்றை முற்றிலும் மறுத்தளிக்கிறது” என்று எழுதினார். “சாக்ட்மன் அவர் வர்க்கத்திற்கு ஒரு துரோகியாகவும், எதிர்-புரட்சியாளராகவும் மரணித்தார். “இதுவே முழுவதினதும் சுருக்கமாகும்” என்று குறிப்பிட்டார். [1]

மக்ஸ் சாக்ட்மன், 1904-1972 [Photo: Marxists.org]

இந்த ஒருதலைப்பட்சமான இரங்கல் செய்தி, ஜெர்ரி ஹீலியிடம் இருந்து ஒரு கூர்மையான கண்டனத்தைக் கொண்டு வந்தது. ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாக ஹீலியின் சொந்த அரசியல் வளர்ச்சியே, சாக்ட்மனின் 1930 களின் எழுத்துக்களால் ஏற்பட்டிருந்தது. அதுவும் குறிப்பாக 1936 இல் மாஸ்கோ வழக்கின் பின்னணி என்ற சாக்ட்மனின் கட்டுரை அவரை ஈர்த்திருந்தது.

ஹீலி வொல்ஃபோர்த்துக்கு பின்வருமாறு விவரித்தார்:

“சாக்ட்மன் அவருடைய வர்க்கத்திற்கு ஒரு துரோகியாகவும், எதிர்-புரட்சியாளராகவும் மரணித்தார்” என்று நீங்கள் எழுதுகிறீர்கள். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நீங்கள், “இதுவே முழுவதினதும் சுருக்கமாகும்” என்பதையும் சேர்த்துக் கொள்கிறீர்கள். சாக்ட்மன் வெறுமனே இறந்து மட்டுமல்ல, அவர் வாழ்ந்திருந்தார் என்பதால் இந்த சொற்றொடரே ஒரு விதத்தில் எதிர்முரணாகத் தெரிகிறது.

இயல்பாகவே, கடைசியில் அவமானகரமான முறையில் காட்டிக் கொடுத்த ஒருவரின் நினைவு கனிவான உணர்வுகளை ஏற்படுத்தாது. இருப்பினும், நாங்கள் இங்கு பொறுப்புகளை சுமத்த முயலவில்லை, மாறாகப் புரிந்து கொள்ள முனைகின்றோம். [2]

வொல்ஃபோர்த்தை நாம் இந்த முறையில் தான் அணுகுகிறோம். 1974 இல் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து அவர் முறித்துக் கொண்டதால், இறுதியில் 1990 களில் அவரை அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பகிரங்கமாக ஆதரிக்க இட்டுச் சென்ற போதிலும், 1960 களின் முக்கிய காலகட்டத்தில் அவர் SWP க்குள் இருந்த சிறுபான்மை எதிர்ப்பு அணிக்கு அரசியல் தலைமை வழங்கினார். பின்னர் இதுதான் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்க குழு (American Committee for the Fourth International-ACFI) ஆகி, பின்னர் வேர்க்கர்ஸ் லீக் ஆனது. அவரின் அடுத்தடுத்த சொந்த அரசியல் வளர்ச்சியையும் மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கின் வளர்ச்சியையும் புரிந்து கொள்ள, இந்த வரலாறையும் மற்றும் வொல்ஃபோர்த்தின் சொந்த பின்புலத்தையும் சுருக்கமாக மீளாய்வு செய்வது முக்கியமானதாகும்.

1960 களின் பிற்பகுதியிலும் மற்றும் 1970 களின் ஆரம்பத்திலும் ரிம் வொல்ஃபோர்த்

1933 இல் பிறந்த வொல்ஃபோர்த், கனெக்டிகட்டில் ஒரு தாராளவாத நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார். மூன்றாவது முறையாக ரூஸ்வெல்டின் (FDR) துணை ஜனாதிபதியாக இருந்த ஹென்றி வாலெஸ், அவரது தந்தையின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராவர். ஓபர்லின் கல்லூரி மாணவராக இருந்த போது, அதிகரித்தளவில் இடதுசாரியாக இருந்த அவர், மக்ஸ் சாக்ட்மனின் சுதந்திர சோசலிஸ்ட் லீக்கின் (ISL) இளைஞர் இயக்கமான சோசலிஸ்ட் இளைஞர் லீக்கில் (SYL) 1953 இல் இணைந்தார். இந்த சுதந்திர சோசலிஸ்ட் லீக், நான்காம் அகிலத்தில் இருந்து சாக்ட்மன் பிரிந்து சென்ற பின்னர் ஏப்ரல் 1940 இல் அவர் நிறுவிய தொழிலாளர்கள் கட்சியில் இருந்து உருவானதாகும். (1954 இல், சோசலிஸ்ட் இளைஞர் லீக் (SYL), இளைஞர் சோசலிஸ்ட் லீக்கின் ஒரு பிரிவுடன் இணைந்ததுடன், அதன் பெயரை இளம் சோசலிஸ்ட் லீக் — YSL என மாற்றிக்கொண்டது.)

அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியுடன் இணைவதற்கான ISL இன் முயற்சிகளை எதிர்த்து, வொல்ஃபோர்த் 1957 இல் அதிலிருந்து பிரிந்தார். வொல்ஃபோர்த்தை எதிர்த்த YSL இல் சாக்ட்மன்வாத பெரும்பான்மை அணியின் தலைவராக இருந்தவர் வேறு யாருமில்லை, மைக்கல் ஹாரிங்டன் தான் அந்தப் பொறுப்பில் இருந்தார். இவர், இன்று இருக்கும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பை நிறுவினார்.

அமெரிக்க செனட்டர் எட்வார்ட் கென்னடியுடன் (வலதுபுறம் இருப்பவர்) மைக்கல் ஹாரிங்டன் (இடமிருந்து 2 ஆவதாக இருப்பவர்) [Photo]

ISL ஐ விட்டு வெளியேறிய பின்னர், வொல்ஃபோர்த் 1958 இல் SWP இல் இணைந்தார். நாம் காக்கும் மரபியத்தின் அத்தியாயம் 24 இல் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல, அந்த நேரத்தில் அக்கட்சி அதன் சந்தர்ப்பவாத “மறுகுழுவாக்க” நடவடிக்கையின் மத்தியில் இருந்தது. வொல்ஃபோர்த், SWP இன் இளைஞர் இயக்கமான இளம் சோசலிஸ்ட் கூட்டணியை (Young Socialist Alliance) நிறுவினார். இது 1950 களின் பிற்பகுதியில் தோழர் ஃபிரெட் மஸெலிஸ் (Fred Mazelis) மற்றும் பிறரையும் அணிதிரட்டியது.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இல் இணைந்த பின்னர் சிறிது காலத்திலேயே, பப்லோவாதிகளுடன் கொள்கையற்ற மறுஐக்கியத்திற்கான SWP இன் முயற்சிகள் மீது கட்சி தலைமையுடன் மோதலுக்கு வந்த வொல்ஃபோர்த், 1960 இல் ஜெர்ரி ஹீலி மற்றும் அனைத்துலகக் குழுவுடன் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கினார். 1961 வாக்கில், அப்போது SWP அரசியல் குழுவின் கௌரவ உறுப்பினராக (ex officio member) இருந்த வொல்ஃபோர்த், ஓர் அவசரகதியிலான மறுஐக்கியம் மீதான SLL இன் எதிர்ப்புக்கு முறையாக தனது ஆதரவை அறிவித்தார்.

1984 இல் பிரசுரிக்கப்பட்ட திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசம் (Trotskyism vs. Revisionism) தொகுதி 7 க்கு முன்னுரை எழுதிய தோழர் டேவிட் நோர்த், அப்போது என்ன நடந்தது என்பதைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

[வொல்ஃபோர்த்] உடனடியாக ஹான்சனின் ஈரவிக்கமற்ற அரசியல் தாக்குதலுக்கு ஆளானார். ஹான்சன் அவரை YSA இன் தலைமையில் இருந்து அகற்ற சதி செய்தார். இந்த நடவடிக்கையில் ஹான்சனுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் பேரி ஷெப்பார்ட் ஆவார். ஒப்பீட்டளவில் SWP இல் புதிதாக அணிதிரப்பட்ட இவர், அதற்கு வெறும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் விடாப்பிடியான வலதுசாரி சாக்ட்மன்வாதியாகவும் மற்றும் வொல்ஃபோர்த் ட்ரொட்ஸ்கிசத்திற்கு திரும்பியதை எதிர்த்தவருமாக இருந்தார். வொல்ஃபோர்த்தின் இடத்திற்கு அடுத்தவரை முன்கூட்டியே இரகசியமாகத் தயாரிப்பு செய்திருந்த ஹான்சன், அவர்களைக் கார்ல்டன் கல்லூரியின் மாணவர்கள் குழுவில் இருந்து கொண்டு வந்திருந்தார். அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் அந்த மாணவர்களின் தலைவரே, அவர்கள் SWP க்கு “உள்ளே கடத்தப்பட்டதாக” ஒப்புக் கொண்டார்.

ஓஹியோவின் டேட்டனில் ஒரு வலதுசாரி குடியரசுக் கட்சி குடும்பத்தைச் சேர்ந்த ஜாக் பார்ன்ஸ் (Jack Barnes), மர்மமான அமைப்பான Fair Play for Cuba Committee என்பதில் இணைவதற்காக, ஃபோர்ட் அமைப்பின் நிதியுதவியோடு கியூபா சென்று திரும்பி இருந்தார். அங்கே இருந்து அவர் நேரடியாக இளம் சோசலிஸ்ட் கூட்டணி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியில் நுழைந்தார். … ஒரு சில வாரங்களில், திரைக்குப் பின்னால் ஹான்சன் மேற்பார்வையின் கீழ், YSA தலைமையில் இருந்து வொல்ஃபோர்த்தை வெளியேற்றி, அவ்விதத்தில் அனைத்துலகக் குழுவை உடைப்பதற்கான SWP இன் திட்டங்களைத் தடுத்திருந்த ஒரு முட்டுக்கட்டையை அகற்ற, பார்ன்ஸ் ஒரு கன்னையை செயல்படுத்தி கொண்டிருந்தார். [3]

வேர்க்கர்ஸ் லீக்கை நிறுவுவதற்கு வழிவகுத்த அடுத்தடுத்த அபிவிருத்திகளை தோழர் கீத் ஜோன்ஸ் ஏற்கனவே மீளாய்வு செய்துள்ளார். ஆகவே, தலைமை வழங்குவதில் ஒவ்வொரு அடியிலும் வொல்ஃபோர்த் வகித்த பாத்திரத்தையும், ஆனால் அதற்கடுத்த தசாப்தத்தில் மிகவும் வெளிப்படையாக வெளிப்பட்ட அகநிலைவாதம் மற்றும் நடைமுறைவாதப் போக்குகளை நோக்கி இந்த நிகழ்ச்சிப்போக்கு நெடுகிலும் அவர் காட்டிய நிலைப்பாடுகளையும் மட்டுமே நான் இதில் சேர்த்துக் கொள்வேன். இதன் மிக முக்கிய உதாரணமாக, ICFI இன் ஏப்ரல் 1966 மூன்றாம் உலக மாநாட்டில் கலந்து கொள்ள அவர் மறுத்தார். இது முக்கியமாக ஜேம்ஸ் ரோபர்ட்சன் மீதான அகநிலையான விரோதத்தால் தூண்டப்பட்டிருந்தது. ரோபர்ட்சன் ஒருங்கிணைந்த அமெரிக்கப் பிரிவின் அவர் தலைமைப் பதவியைக் கைப்பற்றி விடக்கூடும் என்று அவர் கவலைக் கொண்டிருந்தார்.

ரிம் வொல்ஃபோர்த் எழுதிய பிரசுரங்கள்

இருப்பினும், ஜெர்ரி ஹீலி மற்றும் SLL தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் வொல்ஃபோர்த் மேற்கொண்ட முக்கிய வேலைகள், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியைப் பேணவும், 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் வேர்க்கர்ஸ் லீக்கை கட்டியெழுப்புவதற்கு அடித்தளமிடவும் உதவியது. இந்தக் காலகட்டத்தில், வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலராக அவர் பணியாற்றிய போது, Bulletin இல் அவர் தொடர்ச்சியாக எழுதிய முக்கிய எழுத்துக்களில், கறுப்பின தேசியவாதமும் & மார்க்சிஸ்ட் தத்துவமும், ஸ்பார்டசிஸ்ட் என்றால் என்ன?, தொழிற் கட்சி விவகாரம் (The Case for a Labor Party) ஆகிய பிரசுரங்களும், அத்துடன் அமெரிக்காவில் மார்க்சிசத்திற்கான போராட்டம் என்ற புத்தகமும் முக்கியமானவைகளில் உள்ளடங்கும்.

1960 களின் பிற்பகுதியில் தொடங்கி, போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் உடைவு மற்றும் தீவிரமடைந்த உலக முதலாளித்துவ நெருக்கடி ஆகியவை வேர்க்கர்ஸ் லீக்கின் மீதும் அதன் தலைவராக வொல்ஃபோர்த் மீதும் முன்பில்லாதளவில் அதிக புறநிலை அழுத்தங்களைச் செலுத்தின. 1950 கள் மற்றும் 1960 களில் அமெரிக்காவில் இடதின் மீது ஆதிக்கம் செலுத்திய நடுத்தர வர்க்கப் போராட்ட அரசியலுடன் உறுதியாக முறித்துக் கொண்டு, ஆழமாகத் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பி, கட்சி பெரிதும் அதன் பிரச்சார நடவடிக்கைக்கும் அப்பாற்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பணிகளை எதிர்கொண்டிருந்தது. இந்த தீவிரமடைந்து வந்த புறநிலை நெருக்கடியில் சில முக்கிய வெற்றிகள் கிடைத்தாலும், வொல்ஃபோர்த்தின் செயல்முறை அதிகரித்தளவில் நடைமுறைவாதமாக, ஒழுங்கற்ற விதத்தில் அகநிலைரீதியாகியிருந்தது.

1971-74: ஆழமடைந்த உலகளாவிய நெருக்கடியும், வொல்ஃபோர்த்தின் இராஜினாமாவும்

ஆகஸ்ட் 15, 1971 இல் பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையை நிக்சன் நிர்வாகம் கைவிட்டபோது, அது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. அது அமெரிக்காவை மையப்படுத்தி ஓர் ஆழமான உலகப் பொருளாதார நிலைகுலைவைக் கட்டவிழ்த்து விட்டு, மிகப் பெரும் அரசியல் மாற்றங்களையும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்ட தீவிரப்பாட்டையும் தூண்டியது. இதன் விளைவாக, வொல்ஃபோர்த்தின் அரசியல் சரிவை துரிதப்படுத்தியதோடு வேர்க்கர்ஸ் லீக் மற்றும் ICFI மீதிருந்த புறநிலை அழுத்தங்களை அது இன்னும் அதிகமாக அதிகரித்தது.

1972 ஆம் ஆண்டு, பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த வேலைநிறுத்தமும் மற்றும் வடக்கு அயர்லாந்தில் “இரத்த ஞாயிறு” (Bloody Sunday) படுகொலைகளும் தொடங்கின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் லார்ட்ஸ்டவுன் ஜிஎம் ஆலை வேலைநிறுத்தமும் மற்றும் ஏப்ரல் மாதம் கியூபெக் பொது வேலைநிறுத்தமும் இருந்தன. வியட்நாமில் மார்ச் 30 இல் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், அமெரிக்கா எங்கிலும் வியட்நாம் போர்-எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் புத்துயிரூட்டியது. பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி பேர்டினான்ட் மார்கோஸ் செப்டம்பர் 23 இல் இராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

வடக்கு அயர்லாந்தின் டெர்ரியில் நடந்த இரத்த ஞாயிறு (1972) சம்பவங்களின் போது, பேராயர் எட்வர்ட் டாலி இரத்தக் கறைப்படிந்த வெள்ளை கைக்குட்டையை அசைத்தவாறு, படுகாயமடைந்த போராட்டக்காரர் ஒருவரை பாதுகாப்பாக அழைத்து செல்கிறார். [Photo: BBC journalist John Bierman]

1973 இன் தொடக்கத்தில், அமெரிக்காவில் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டு, இது போர்-எதிர்ப்பு இயக்கத்தின் இறுதி உடைவிற்கு வழி வகுத்த நிலையில், நடுத்தர வர்க்க மாணவர்களின் பரந்த அடுக்குகள் அவர்களின் தொழில் வாழ்வை பின்தொடரச் சென்றதுடன், அதிகரித்தளவில் வலதுக்கு திரும்பினர். செப்டம்பர் 11 சிலி ஆட்சிக்கவிழ்ப்புச் சதி, அரபு-இஸ்ரேல் போர் மற்றும் இஸ்ரேலை ஆதரித்த நாடுகளுக்கு எதிராக OPEC இன் எண்ணெய் ஏற்றுமதி தடை (இது எண்ணெய் விலைகள் மூன்று மடங்கு அதிகரிக்க வழி வகுத்தது) ஆகியவை அந்த ஆண்டு நடந்த மற்ற முக்கிய உலக சம்பவங்களில் உள்ளடங்கும்.

செப்டம்பர் 11, 1973 சிலி ஆட்சிக் கவிழ்ப்பின் போது ஜனாதிபதி மாளிகை லா மொனெடா மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது. [Photo by Library of the Chilean National Congress / CC BY 3.0]

பிப்ரவரி 1974 இல், பிரிட்டனில் டோரி அரசாங்கம் வீழ்ந்தது, அதனைத் தொடர்ந்து போர்த்துகல்லில் சலாசர் சர்வாதிகாரமும் கிரீஸில் இராணுவ ஆட்சிக் குழுவும் வீழ்ந்தன. வேர்க்கர்ஸ் லீக்கின் கோடைப் பள்ளியில் தேசியச் செயலர் பதவியில் இருந்து வொல்ஃபோர்த் நீக்கப்படுவதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர், வாட்டர்கேட் ஊழல் விளைவாக, இறுதியில், அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் ஆகஸ்ட் 8, 1974 இல் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

ஏப்ரல் 29, 1974 — சிறப்பு அரசு வழக்குரைஞரின் உத்தரவின் பேரில் நிக்சன் வாட்டர்கேட் ஒலிநாடாக்களின் திருத்தப்பட்ட்ட முதல் சுற்று பதிவுகளை வெளியிடுகிறார் [Photo: National Archives]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள், 1970 களின் முற்பகுதி காலகட்டம் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. இந்தக் காலகட்டத்தில் அதன் பிரிவுகள் சீரற்ற முறையிலும், முரண்பட்ட வடிவத்திலும் வளர்ந்தன. 1953 இல் பப்லோ உடனான உடைவுக்குப் பின்னர், SLL குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டதுடன் ICFI க்கு இன்றியமையாத தலைமை வழங்கியது என்றாலும், 1960 களின் பிற்பகுதியில், குறிப்பாக 1970 களின் முற்பகுதியில், அதன் பணியில் சில குறிப்பிட்ட அம்சங்கள் அதிகரித்தளவில் எதிர்மறையான தன்மையைப் பெற்றன.

WRP ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது என்பதில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளவாறு, பிரிட்டிஷ் பிரிவு அனைத்துலகக் குழுவுக்குள் அரசியல் தெளிவுபடுத்தலை விட்டுவிட்டு, முதன்மையாக தனது தேசியபிரிவின் வளர்ச்சியில் ஒருமுனைப்பட்டிருந்தது. OCI உடனான 1971 உடைவு, 1973 இல் ஒரு மத்தியவாத வேலைத்திட்டத்தின் மீது WRP ஐ நிறுவியமை மற்றும் 1974 இல் அலன் தொர்னெட் வெளியேற்றம் ஆகியவை, அந்த நேரத்தில் பொறுமையான மற்றும் கொள்கை பிடிப்பான அரசியலில் இருந்து அதிகரித்தளவில் அது விலகியதற்கான முக்கிய வெளிப்பாடுகளாக இருந்தன.

அலன் தொர்னெட்

தோழர்கள் பீட்டர் மற்றும் சாம் ஆகியோரின் விரிவுரையில் மீளாய்வு செய்யப்பட்டதைப் போல, OCI உடனான பிளவு இந்தக் காலகட்டம் முழுவதும் இயக்கத்திற்குள் தெளிவுபடுத்தப்படாமல் இருந்தது. இது அதற்கடுத்து வரவிருந்த தசாப்தங்களில் பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று தொடர்ச்சியைப் பேணுவதை துண்டித்தது. இதேபோல, தொர்னெட்டின் வெளியேற்றம் முக்கிய அரசியல் பிரச்சினைகளைக் கைவிட்ட விதத்தில் மேற்கொள்ளப்பட்டதால், அது நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், குறிப்பாக தொழிலாளர்கள், WRP இல் இருந்து வெளியேறத் தூண்டியது.

இத்தகைய நிகழ்வுகள், 1971 மற்றும் 1974 க்கு இடையே வேர்க்கர்ஸ் லீக்கில் அதிகரித்து வந்த நெருக்கடியோடு தொடர்புபட்டு இருந்தன. ஒரு விதத்தில் அதிகரித்து வந்த WRP இன் நோக்குநிலை பிறழ்வு வொல்ஃபோர்த்தின் நடைமுறைவாத அணுகுமுறையை பிரதிபலித்தது. ஏனென்றால் வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் எந்தவித அரசியல் தெளிவுபடுத்தலையும் செய்யாமல் வொல்ஃபோர்த் மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் பிரிவின் நடைமுறைகளுக்குத் தாவினார்.

புலட்டின் பத்திரிகை நாளிதழாக மாற்றப்படும் என்று ஜூன் 1971 இல் வொல்ஃபோர்த் விடுத்த பகிரங்கமான திடீர் அறிவிப்பு, இந்த நிகழ்ச்சிபோக்கின் ஆரம்ப வெளிப்பாடுகளில் ஒன்றாகும். அனைத்துலகக் குழுவுக்குள் விவாதிக்காமல் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், இன்றியமையாத விதத்தில் SLL இன் நடைமுறை அமெரிக்க பிரிவில் பற்றிக்கொண்டதாக இருந்தது. ஏனெனில் 1969 இல் SLL வேர்க்கர்ஸ் பிரஸை நாளிதழாக தொடங்கி இருந்தது. திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசம் தொகுதி 7 இல் கொடுக்கப்பட்டுள்ள ஹீலியின் பல கடிதப் பரிமாற்றங்களில், வொல்ஃபோர்த் தீர்மானத்தின் நடைமுறைவாத தன்மையை விவரித்து, முதிர்ச்சியின்றி, காலத்திற்கு முந்தியே ஒரு நாளிதழாக மாறுவதை இறுதியில் தடுத்து நிறுத்தினார்.

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட நகர்வை நகலெடுத்த அதேபோன்றவொரு முனைப்பாக, 1971 இல் கட்சியின் கவனத்தை “இளைஞர்களை நோக்கி திருப்புவதற்கான” மாற்றம், வொல்ஃபோர்த்தின் நோக்குநிலைப் பிறழ்வின் மற்றொரு அறிகுறியாக இருந்தது. இப்போது முக்கியமாக உயர்நிலைப் பள்ளி இளைஞர்களை அணிதிரட்டும் முயற்சியாக சிறுபான்மை தொழிலாள வர்க்க அண்டைப் பகுதிகளில் புலட்டினுக்கு சந்தா சேர்க்கும் முனைவே, கட்சியின் பெரும்பான்மை வேலையாக ஆகி இருந்தது.

இது சில முக்கியமான வெற்றிகளைப் பெறுவதற்கும், 1971 டிசம்பரில் இளம் சோசலிஸ்டுகளின் அமைப்பை நிறுவுவதற்கும் வழிவகுத்த போதினும், வொல்ஃபோர்த் கட்சியில் இருந்த மூத்த அனுபவம் மிக்க தோழர்கள் மீது அதிகளவில் விரோத போக்கைக் கொண்டிருந்தார், அதேவேளையில் தொழிற்சங்கங்களுக்குள் மேற்கொள்ளும் கட்சிப்பணிகளில் இனி “பலன் இல்லை” என்ற கண்ணோட்டத்தில் இருந்தார். அதற்கடுத்து வந்த ஆண்டுகளில் அவர் எழுதிய பெரும்பான்மை எழுத்துக்களிலும் மற்றும் அவரின் இராஜினாமா கடிதத்திலும், “தொழிலாள வர்க்க இளைஞர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே” அவரின் மேலோங்கிய அக்கறையாக இருந்தது. ஆனால் இது ஒரு நடைமுறைவாத அடித்தளத்தில், புதிதாக அணிதிரட்டப்படுபவர்களுக்கு அவசியமான அரசியல் மற்றும் வரலாற்று கல்வியை வழங்காமல் செய்யப்பட்டது.

1964 இல் SWP இல் இருந்து வெளியேற்றப்பட்ட ஒன்பது உறுப்பினர்களில் ஒருவரும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபக உறுப்பினருமான தோழர் பிரெட் மஸெலிஸ், ஜனவரி 1972 மாநாட்டில், மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியில் சமீபத்தில் சேர்ந்திருந்த இளைஞர்களைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து இன்னும் நிறைய அனுபவமிக்க தோழர்களும் நீக்கப்பட்டிருந்தார்கள். அப்போது முதிர்ச்சியடையும் 22 இளம் வயதான தோழர் டேவிட் நோர்த், “இளைஞர்களுக்கு விரிவுரை வழங்குவதாக” தூற்றப்ப்பட்டார். மத்திய குழுவில் சேர்க்கப்பட்டிருந்த பல இளைஞர்கள் கட்சியில் இருந்து விரைவிலேயே வெளியேறியதால் SLL இன் வற்புறுத்தலின் பேரில் தோழர் மஸெலிஸ் மீண்டும் மத்திய குழுவில் பின்னர் சேர்க்கப்பட்டார்.

ஜனவரி 1972 மாநாட்டுக்கு அடுத்தடுத்த மாதங்களில், வொல்ஃபோர்த் ஒரு தொழிற் கட்சிக்கான பிரச்சாரத்தை அதிகளவில் புறக்கணித்தார். அமெரிக்க பிரிவின் ஒரு மத்திய அரசியல் பிரச்சினையாக இருந்த இது, 1930 களில் லியோன் ட்ரொட்ஸ்கி உடனான விவாதங்கள் தொடக்கம் 1950 களில் SWP இதைக் கைவிடும் வரை நீள்கிறது. SLL உடனான கலந்துரையாடல்கள் மூலமாக, வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிக்கப்பட்டபோது பின்னர், இது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, கட்சியின் மத்திய கோரிக்கையாக ஆனது. ஆனாலும் தொழிற் கட்சி கோரிக்கையில் ஒருமுனைப்படுவதில் இருந்து விலகி, பல்வேறு குட்டி-முதலாளித்துவ அரசியல் வகையறாக்களுடன் ஒருங்கிணையும் ஒரு போக்கு தொடர்ந்து இருந்து வந்தது.

1972 இன் தொடக்கத்தில் அனைத்துலகக் குழு தோழர்களின் தலையீட்டுக்குப் பின்னர் மட்டுமே, வொல்ஃபோர்த் இந்த மத்திய கோரிக்கை மீது மீண்டும் கவனம் செலுத்தினார். இது 1972 கோடையின் தொடக்கத்தில் தொழிற் கட்சிக்கான விவகாரம் என்ற பிரசு ரத்தை வெளியிட வழிவகுத்தது. இந்த முக்கிய பிரசுரம் மிகவும் பிரபலமாக இருந்தது, சுமார் 75,000 நகல்கள் விற்றன. ஒரு தொழிற் கட்சிக்கான தொழிற்சங்க கூட்டணியின் (Trade Union Alliance for a Labor Party - TUALP) ஸ்தாபக மாநாடு அக்டோபர் 1972 இல் சிகாகோவில் நடத்தப்பட்டது.

1972 வசந்த காலத்தில், சிறைச்சாலை பிரச்சார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. அதில் கைதிகள் அமெரிக்க சமூகத்தின் அடுத்த மிகப் பெரிய புரட்சிகர சக்தியாகச் சித்தரிக்கப்பட்டனர். லியோன் ட்ரொட்ஸ்கி உட்பட ரஷ்ய புரட்சிகர இயக்கத்தின் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட்டு வொல்ஃபோர்த் முற்றிலும் தவறான ஓர் ஒப்பீடு செய்தார். அதே ஆண்டு பிரிட்டனில் நடந்த கோடைப் பள்ளியில் மைக் பண்டா துல்லியமாக இதைக் கண்டித்திருந்தார்.

வொல்ஃபோர்த், டிசம்பர் 1972 இல், மேலே குறிப்பிடப்பட்ட சாக்ட்மனுக்கான இரங்கல் செய்தியை எழுதினார். அதைத் தொடர்ந்து 1973 வசந்த காலத்தில், நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்து வொல்ஃபோர்த் ஸ்பார்டசிஸ்ட் தலைவர் ஜேம்ஸ் ரோபர்ட்சனுடன் தொடர்ச்சியான பொது விவாதங்களை ஏற்பாடு செய்தார். நடுத்தர வர்க்க தீவிரக் கொள்கை கழிவுகளை நோக்கிய இந்தத் திருப்பமானது, வொல்ஃபோர்த் இந்தச் சூழ்நிலையில் அவரின் கடந்தக் காலத்தில் இருந்து உடைத்துக் கொள்ளவில்லை என்பதற்கும், வலது நோக்கிய போக்கில் நகர்ந்து கொண்டிருந்தார் என்பதற்கும் ஒரு தெளிவான அறிகுறியாக இருந்தது.

பின்னர், ஆகஸ்ட் 1973 இல், நான்சி பீல்ட்ஸ் (Nancy Fields) ஒரு காரியதரிசி பதவியில் இருந்து வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமைக்கு உயர்த்தப்பட்டார். இது வொல்ஃபோர்த்திற்கும் பீல்ட்ஸுக்கும் இடையிலான தொடர்பு வந்து வெறும் ஒரு சில மாதங்களுக்குள் நடந்தது. இது அதிகளவில் அவரின் அகநிலையான மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை வெளிப்படுத்தியது. அதற்கடுத்த ஆண்டானது மிகப் பெரிய நெருக்கடி ஆண்டுகளில் ஒன்றாக இருந்தது. அப்போது வேர்க்கர்ஸ் லீக்கும் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கமும் கலைக்கப்படும் அளவுக்கு இருந்தது.

தோழர் நோர்த் இந்த நிகழ்ச்சிப்போக்கை நான்காம் அகிலமும், ஓடுகாலி வொல்ஃபோர்த்தும் என்பதில் பின்வருமாறு விவரிக்கிறார்:

முதல் கோடைகால முகாமிற்குப் பின்னர், வொல்ஃபோர்த்தால் முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமைக்கு கொண்டு வரப்பட்ட பீல்ட்ஸ், வேர்க்கர்ஸ் லீக்கில் குழப்பத்தை ஏற்பட்டுத்தினார்.

பீல்ட்ஸ் எங்கே சென்றாலும், அங்கே அரசியல் சீரழிவின் தடங்களை விட்டுச் சென்றார். அவர் வொல்ஃபோர்த்தின் பிரிக்க முடியாத பயணத் தோழியாகவும், பெண் பாதுகாவலராகவும் ஆகியிருந்தார். வேர்க்கர்ஸ் லீக்கில் அதுவரை கண்டிராத அளவுக்கு, அனாவசிய நடவடிக்கைகளில் ஆயிரக் கணக்கான டாலர்களைச் செலவிட்டு, அவர்கள் நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். கிளைகளை மூடிய அவர்கள், வெளியேற்றப்படுவீர்கள் என உறுப்பினர்களை அச்சுறுத்தினர், வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து தோழர்களை வெளியேற்றும் முனைவில் அவர்கள் குரூரமான கன்னைவாத சூழ்ச்சிகளைப் பயன்படுத்தினர். வொல்ஃபோர்த் மற்றும் பீல்ட்ஸின் “தேசிய சுற்றுப்பயணங்கள்” எனப்பட்டவை ஓர் அரசியல் தலையீட்டின் தன்மையில் இருந்ததை விட அதிகமாக ஒரு தேனிலவின் தன்மையைக் கொண்டிருந்தன. [4]

நான்காம் அகிலமும், ஓடுகாலி வொல்ஃபோர்த்தும் என்பதில் விரிவாக மேற்கோளிடப்பட்டுள்ளவாறு, ஜூலை 19, 1974 இல் ஹீலிக்கு வொல்ஃபோர்த் எழுதிய ஒரு குறிப்பிடத்தக்க கடிதத்தில், சமீபத்தில் கட்சியிலிருந்து சுமார் 100 தோழர்கள் வெளியேறி இருப்பதாகக் குறிப்பிட்ட பின்னர், அவர் பின்வருமாறு எழுதினார்:

இந்த எண்ணிக்கை, கட்சிக்கு அவ்வப்போது உள்ளே வந்து வெளியேறுபவர்களை அல்லாது கட்சியில் சில காலம் இருந்து, முக்கிய பங்கு வகித்தவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது, அதாவது வழமையாக உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தும் முறை. லீக்கின் வரலாற்றில் தீர்க்கமான திருப்புமுனையாக இருந்த, கடந்த ஆண்டு கோடை முகாமிற்கான தயாரிப்புக் காலத்திலும் மற்றும் அதற்குப் பின்னரும் இவர்களில் பெரும்பாலானோர் வெளியேறினார்கள்.

இந்த எண்ணிக்கையே கூட இந்த நிகழ்ச்சிபோக்கின் முழுமையான தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாக இல்லை. வெளியேறியவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் நியூ யோர்க் நகரைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய பாதிப் பேர் தேசியக் குழு மற்றும் அரசியல் குழுவில் இருந்தவர்கள். உண்மையில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இளைஞர் தலைமையும் இதில் உள்ளடங்கி இருந்தது.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மொத்த உறுப்பினர் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது சிலவேளை (!) சற்று குறைவாக இருக்கலாம். கணிசமானளவுக்கு இல்லை (!!), மற்ற எல்லா விஷயங்களிலும் கட்சி மிகவும் பலமாக உள்ளது (!!!)… (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது) [5]

வொல்ஃபோர்த் தொடர்ந்து இதையும் சேர்த்துக் கொண்டார்:

புத்திஜீவிகள் தொடர்பாக நாம் கிட்டத்தட்ட துடைத்தழிக்கப்பட்டு விட்டோம் — ஒரு பெரிய கேவலமான இழப்பு. இந்த முகப்பில் என்ன செய்யப்பட்டுள்ளதோ, அதை நான் நான்சியுடன் சேர்ந்து செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்களில் இனி நமக்கு யாரும் இல்லை — அதாவது எதுவுமே இல்லை என்கிறேன்…

தொழிற்சங்கங்களை பொறுத்த வரையில், தொழிற்சங்கங்களில், குறிப்பாக SSEU இல், அந்த பணிகளின் தன்மையை மாற்றி இளைஞர்களை நோக்கி திரும்புவதற்கு நாம் போராடியதன் காரணமாக, நமது பழைய, அடிப்படையில் மத்தியவாத பணி துல்லியமாக உடைந்து கொட்டிவிட்டது. [6]

இந்த கடிதத்தில் வொல்ஃபோர்த் என்ன விவரித்தாரோ, அது நடைமுறையில் கலைப்புவாதம் என்பதை தவிர வேறொன்றுமில்லை. அந்த நேரத்தில் இது குறித்து அவர் நனவுபூர்வமாக இல்லாமல் இருந்திருக்கலாம், அவரின் நோக்குநிலை பிறழ்வு மற்றும் கொள்கையற்ற நடவடிக்கையானது பப்லோவாத திருத்தல்வாதத்தை நோக்கி அவர் அரசியல்ரீதியில் சாய்ந்திருந்ததன் நேரடி வெளிப்பாடுகளாக இருந்தன. இது, வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து அவர் இராஜினாமா செய்த பின்னர் விரைவிலேயே SWP க்கு அவர் திரும்பியதில் முற்றாக பூரணமடைந்தது.

இறுதியாக, ஆகஸ்ட் 1974 கோடைப் பள்ளி, ICFI இன் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. ஆகஸ்ட் 30 மாலை நடைபெற்ற வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழு கூட்டத்தில் ஜெர்ரி ஹீலியும் கிளிஃவ் சுலோட்டரும் கலந்து கொண்டிருந்த நிலையில், அதில் முந்தைய ஆண்டின் பயங்கர அனுபவங்கள் இறுதியில் வெளிப்படையாக வெளிப்பட்டன. அதற்கடுத்த நாள் இரவு, நான்சி பீல்ட்ஸிற்கு சிஐஏ உடன் குடும்பத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதை வொல்ஃபோர்த் மறைத்திருந்தார். “இதை முக்கியமானதாக நான் நினைக்கவில்லை,” என்றவர் கூறினார். இதற்கு விடையிறுப்பாக, வொல்ஃபோர்த் மற்றும் பீல்ட்ஸ் உள்ளடங்கி இருந்த ஒட்டுமொத்த மத்திய குழுவும், வொல்ஃபோர்த்தை தேசிய செயலர் பதவியில் இருந்து நீக்கவும் மற்றும் சிஐஏ உடனான பீல்ட்ஸின் தொடர்புகள் குறித்து விசாரணைக் குழு விசாரணை நடத்தும் வரையில் பீல்ட்ஸை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் வாக்களித்தது.

அதற்கடுத்த மாதம் விசாரணை நடத்தப்படும் என்பது தெளிவான போது, வொல்ஃபோர்த் செப்டம்பர் 29, 1974 இல் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து திடீரென இராஜினாமா செய்தார். தோழர் மஸெலிஸூம் மைக் பண்டாவும் அக்டோபரில் வொல்ஃபோர்த்தின் குடியிருப்பில் அவரைச் சந்தித்தனர், ஆனால் விசாரணைக் குழுவுக்குப் பேட்டி கொடுப்பதையோ அல்லது மீண்டும் அரசியலில் ஈடுபடுவதையோ அவர் மறுத்து விட்டார்.

அதற்கு வெறும் மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஜனவரி 1975 இல், வொல்ஃபோர்த் ICFI க்கு எதிராக “வேர்க்கர்ஸ் லீக்கும் அனைத்துலகக் குழுவும்” என்ற தலைப்பில் ஓர் அகநிலையான பழியுரையை வெளியிட்டார், அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடனான அவரின் இறுதி முறிவைப் பிரதிநிதித்துவம் செய்தது. வொல்ஃபோர்த் உடனடியாக ஸ்பார்டசிஸ்டுகள் மற்றும் SWP ஆல் ஆதரிக்கப்பட்டார். வொல்ஃபோர்த்தின் ஆவணத்தை ஹான்சன் Intercontinental Press இல் பிரசுரித்து, அவரின் “நேர்மை மறுக்கவியலாதது, அவரின் அடுத்த முயற்சிக்கு ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க முடியும்,” என்று கருத்துரைத்தார். [7]

எது வொல்ஃபோர்த்தை விட்டோடச் செய்கிறது? என்பதே வொல்ஃபோர்த்தின் இராஜினாமா குறித்து வேர்க்கர்ஸ் லீக் தயாரித்த முதல் அறிக்கையாகும். இதுவும் தொகுதி 7 இல் உள்ளது. இது வொல்ஃபோர்த்தின் ஜனவரி 31 ஆவணத்திற்கு எதிரான ஒரு எதிர்விவாதமாக இரு வாரத்திற்கு ஒருமுறை வெளியான புலட்டினில் ஏப்ரல் 15, 1975 இல் பிரசுரிக்கப்பட்டது. இதைக் குறித்து இங்கே நாம் விரிவாக மீளாய்வு செய்யப் போவதில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அது ஒரு பலமான ஆவணமாகும், அது வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையில் அபிவிருத்தி அடைந்து வரும் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. SLL இன் ஆதரவுடன், தலைமையில் இருந்த தோழர்களின் ஒரு குழுவால் எழுதப்பட்ட அது, அரசியல் குழுவால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நான்காம் அகிலமும், ஓடுகாலி வொல்ஃபோர்த்தும்

நான்சி ஃபீல்ட்ஸ் குடும்பத்திற்கு சிஐஏ உடன் இருந்த தொடர்புகளும் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் மீது எழுப்பப்பட்ட கவலைகளும் ஹீலியின் “பைத்தியக்காரத்திற்கு” உதாரணமாக உள்ளன என்ற வொல்ஃபோர்த்தின் அறிவிப்பு, ICFI மீதான அவரது கண்டனத்தில் முக்கிய அம்சமாக இருந்தது. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த ஜோசப் ஹான்சன், இத்தகைய பாதுகாப்பு கவலைகளை “சித்தபிரமை” என்று அறிவித்து, அதை இன்னொரு படி மேலை கொண்டு சென்றார். கட்சிப் பாதுகாப்பு விஷயத்தை ஹான்சன் ஆத்திரமூட்டும் விதத்தில் இவ்வாறு நிராகரித்ததை ICFI மிகவும் தீவிர கவனத்துடன் கையாண்டது. அது, அதன் மே 1975 ஆறாம் மாநாட்டில், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலையை சுற்றி நடந்த சம்பவங்கள் மீது ஒரு விசாரணையை தொடங்க வாக்களித்தது. அந்த விசாரணையின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள், “பாதுகாப்பும், நான்காம் அகிலமும்” (Security and the Fourth International) என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது.

அதற்கடுத்த மாதம், அவரும் நான்சி ஃபீல்ட்ஸும் SWP இல் உறுப்பினராக இணைய மீண்டும் விண்ணப்பிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு, ஜூன் 24, 1975 இல் வொல்ஃபோர்த் ஜாக் பார்ன்ஸிற்கு (Jack Barnes) ஒரு கடிதம் எழுதினார். அவர்களின் விண்ணப்பங்கள், அந்தாண்டின் பிற்பகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஜாக் பார்ன்ஸ், சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியச் செயலர்

தொகுதி 7 இல் பிரசுரிக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், 1961 இல் இருந்து அவர் போராடிய கொள்கைகளை வொல்ஃபோர்த் மொத்தமாக கைதுறந்ததைச் சுட்டிக்காட்டும் பின்வரும் அசாதாரண பத்திகள் இடம் பெற்றுள்ளன:

பல நாடுகளில் உள்ள எமது சக்திகளில் பலர் புதிதாகவும் அனுபவமின்றியும் இருந்ததால், தேவையானளவிற்கு SWP கணிசமாகப் பொறுமையோடு இருந்து, சர்வதேச இயக்கத்திற்குள் ட்ரொட்ஸ்கிச அடிப்படைகள் மீது கொள்கைரீதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

உங்களுக்கு தெரிந்தவாறு, சோசலிச இயக்கத்தில் நாங்கள் பல ஆண்டுகளாகக் கூட்டாளிகளாக இருந்துள்ளோம். எங்களின் சமீபத்திய அனுபவங்களுக்கு மத்தியில், புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் எங்களால் முடிந்த ஏதேனும் விதத்தில் பங்களிப்பு செய்ய நாங்கள் தீர்மானமாக உள்ளோம். அமெரிக்காவின் மற்றும் உலகின் சோசலிச எதிர்காலம் தொடர்பாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த எதிர்காலத்திற்கு ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவது இன்றியமையாதது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்.

ஆகவே, SWP இல் உறுப்பினராக விண்ணப்பித்து, அதன் வளர்ச்சிக்கு சாத்தியமான விதத்தில் பங்களிப்பு செய்ய விரும்புகிறோம். [8]

தோமஸ் அவரது விரிவுரையில் மீளாய்வு செய்தவாறு, இந்தக் கடிதம் எழுதப்பட்ட ஜூன் 1975 தருணம் வரையில், இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலும் நடந்த கெரில்லா போர்முறையின் பேரழிவுகரமான பாதிப்புகளுக்கு மீண்டும் ஹான்சனும் பப்லோவாதிகளுமே பொறுப்பாகிறார்கள். அதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் தான், சிலியில் அலெண்டெ தூக்கியெறியப்பட்டிருந்தார். ஆனால் இப்போது வொல்ஃபோர்த், “சர்வதேச இயக்கத்திற்குள் ட்ரொட்ஸ்கிச அடிப்படைகள் மீது SWP ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக” கூறுகிறார்.

நவம்பர் 10, 1975 இல், பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பத்திரிகையான Intercontinental Press இல் வொல்ஃபோர்த்தும் பீல்ட்ஸூம் ஒரு கட்டுரை எழுதியதுடன், விரைவிலேயே இந்தப் பத்திரிகைக்கும் அத்துடன் SWP இன் மிலிட்டன் பத்திரிகைக்கும் வழக்கமான பங்களிப்பவர்கள் ஆனார்கள். நவம்பர்-டிசம்பர் 1975 இல், ஹான்சன் மற்றும் நோவாக் எழுதிய கட்டுரைகளில் பாதுகாப்பு தொடர்பான விசாரணையை SWP கண்டித்தது. ஜனவரி 1976 இல், ICFI ஹான்சனை “GPU இன் கையாள்” என்று குறிப்பிட்டு, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது.

பாதுகாப்பு தொடர்பான விசாரணை மீது தீவிரமடைந்து வந்த இந்த மோதலுக்கு மத்தியில், முன்பினும் ஆழமாக ட்ரொட்ஸ்கிச வரலாற்றுக்குள் திரும்பி இருந்த வேர்க்கர்ஸ் லீக்கின் காரியாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் பல போராட்டங்களில் தலையீடு செய்தனர்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேச அடித்தளங்கள் ஆவணத்தில் நாம் குறிப்பிட்டுள்ளவாறு:

வொல்ஃபோர்த்தின் அரசியல் ரீதியாக விட்டோடல், ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக வேர்க்கர்ஸ் லீக்கின் வளர்ச்சியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறித்தது. வொல்ஃபோர்த்தின் இராஜினாமா மற்றும் அதற்கடுத்து அவரின் சொந்த அரசியல் வரலாற்றை அவர் கைத்துறந்தமை அவரின் தனிப்பட்ட பலவீனங்களை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அது அமெரிக்க குட்டி முதலாளித்துவ தீவிர கொள்கையின் குறிப்பிட்ட பண்புகளுக்கும் குறிப்பாக, தத்துவார்த்த தொடர்ச்சி மீதான அதன் அவமதிப்புக்கும் மற்றும் வரலாறு மீதான நடைமுறைவாத இழிபடுத்தலுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. 1973-74 நெடுகிலும் வேர்க்கர்ஸ் லீக் கடந்து வந்திருந்த நெருக்கடிக்கு, வொல்ஃபோர்த்தின் தவறுகள் மீதான வெறும் ஒரு விமர்சனத்தை விட மேலதிகமான ஒன்று தேவைப்படுவதை வேர்க்கர்ஸ் லீக் உணர்ந்தது. ஆகவே, வொல்ஃபோர்த்தின் இராஜினாமா மற்றும் ICFI மீதான அவரின் கண்டனத்திற்கு விடையிறுப்பாக, வேர்க்கர்ஸ் லீக் நான்காம் அகிலத்தின் வரலாற்றை விரிவாக மீளாய்வு செய்யத் தொடங்கியது.

உலக முதலாளித்துவத்தின் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் புறநிலையான வளர்ச்சி சூழலில், துல்லியமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவம் மீதான அந்த வலியுறுத்தல் தான், வேர்க்கர்ஸ் லீக்கின் இன்றியமையாத மற்றும் தனித்துவமான பண்பாக வெளிப்பட்டது. மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று அனுபவத்தின் முழு பலத்தையும் சமகால சமூக-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் பகுப்பாய்வினுள் எந்தளவுக்குக் உள்கொண்டு வருகிறோமோ, அந்தளவுக்கு மட்டுமே, மார்க்சிச முன்னோக்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய மூலோபாய நோக்குநிலையின் வளர்ச்சி சாத்தியமாக இருக்கும் என்று அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. [9]

வொல்ஃபோர்த்தின் இராஜினாமாவுக்குப் பின்னர், நான்காம் அகிலமும் ஓடுகாலி வொல்ஃபோர்த்தும் என்ற ஆவணம், அதிகரித்து வந்த வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் முதிர்ச்சியில் ஒரு மைல்கல்லாகும். மார்ச் 30 மற்றும் மே 14, 1976 க்கு இடையே தொடராக வெளியான இந்த ஆவணத்தின் பெரும்பகுதியை, ஜனவரி 1976 கட்சி மாநாட்டில் வேர்க்கர்ஸ் லீக்கின் தேசியச் செயலராக ஆகி இருந்த தோழர் நோர்த் எழுதி இருந்தார். மெய்யியல் மீது கவனம் செலுத்தியிருந்த இரண்டாவது கட்டுரையின் முதன்மை ஆசிரியர் அலெக்ஸ் ஸ்ரைனர் ஆவார்.

ஒருவர் இதை வாசிக்கும் போது, வொல்ஃபோர்த்தை விட்டோடச் செய்தது எது? ஆவணம் பிரசுரிக்கப்பட்டு வெறும் ஓராண்டு இடைவெளியில், வேர்க்கர்ஸ் லீக் அடைந்த மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவார். அது வொல்ஃபோர்த்துக்கு எதிரான ஒரு கடுமையான எதிர்விவாதமாக உள்ளது. வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலராக இருந்த காலத்தில் வொல்ஃபோர்த் எதிர்த்த ஒவ்வொரு அரசியல் நிலைப்பாட்டையும், அப்போது அவர், ஏறக்குறைய வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டிருந்தார்.

இந்த ஆவணம் நம்பமுடியாதளவிற்கு பெறுமதியானதாக இருப்பதுடன், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பல எழுத்துக்களை எடுத்துக் கையாண்டுள்ளது, அதேவேளையில் வொல்ஃபோர்த்தின் புதிய திருத்தல்வாத நிலைப்பாடுகளுக்கு எதிராக அவரின் முந்தைய எழுத்துக்களையும் மேற்கோளிடுகிறது. வொல்ஃபோர்த்தை விட்டோடச் செய்தது எது? என்பதை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிக நீளமான இது, அவரின் இராஜினாமா குறித்து எழுதப்பட்ட மிகவும் விரிவான அறிக்கையாகும்

[Photo: Wikipedia]

இந்தத் தொடர், வேர்க்கர்ஸ் லீக் உடன் வொல்ஃபோர்த் முறித்துக் கொண்டதையும், மீண்டும் அவர் SWP இக்குத் திரும்பியதையும் அதன் பரந்த புறநிலை உள்ளடக்கத்தில் வைத்து தொடங்குகிறது. குறிப்பாக இது பொருளாதார நெருக்கடியை வலியுறுத்தி, பின்வருமாறு குறிப்பிடுகிறது:

போருக்குப் பின்னர் பிரெட்டன் வூட்ஸ் கொள்கைகளின் தோல்வியானது, அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளையும் வீழ்ச்சியில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு அதிகரித்தளவிலான கேய்ன்சியன் கடன் வழங்கல் முறையைப் (Keynesian credit inflation) பயன்படுத்துவதற்குச் சாத்தியமில்லாது செய்து விட்டதால், சர்வதேச அளவில் முதலாளித்துவம் அதன் வரலாற்றிலேயே மிக ஆழமான பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்துகொண்டிருக்கிறது. [10]

இந்தக் காலகட்டத்தில் வொல்ஃபோர்த் SWP இல் மீண்டும் இணைந்து, புரட்சியை முறியடிக்கும் நோக்கங்களுக்கு உதவியாக, ICFI மீது கண்டனங்களை வழங்கி வந்த நிலையில், இந்தக் காலகட்டத்தில் புரட்சியை நசுக்க SWP வகிக்கும் பாத்திரம் முக்கியமாக இருக்கும் என்று குறிப்பிட்டு, அந்தச் சூழ்நிலையில் நிலவிய புரட்சிகர சாத்தியக்கூறை அந்த ஆவணம் வலியுறுத்துகிறது.

இந்தக் கட்டுரை தொடரில் முதலாவதாக வெளியான, “திருத்தல்வாதத்தின் வொல்ஃபோர்த் பள்ளி” என்பது வொல்ஃபோர்த்தின் இராஜினாமாவுக்கு பின்னணியில் இருந்த உண்மையான காரணங்களை நினைவூட்டி, அவரின் பொய் வாதங்களை அம்பலப்படுத்துகிறது. அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:

SWP க்கு வொல்ஃபோர்த் திரும்பியமை, மார்க்சிசத்துடனான அவரின் முறிவை முழுமையாக்குகிறது. GPU இன் உடந்தையான ஹான்சன் உடனான அவரின் கூட்டணி, எதிர்புரட்சியுடனான அவரது கூட்டணியாகும். வொல்ஃபோர்த் இந்தப் புரட்சிகர இயக்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு எதிரிகளின் முகாமிற்குச் சென்ற இழிந்த தன்மைக்கும் அவசரத்திற்கும் இணையாக எதையும் காணமுடியாது. ஹான்சன் மற்றும் SWP உடனான அவருடைய கடந்த காலக் கண்ணோட்டங்களை எவ்வாறு அவர் மாற்றிக் கொண்டார் என்ற ஒரு சிறிய விளக்கம் கூட கொடுக்காமல் அவர் இணைகிறார். [11]

வொல்ஃபோர்த் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்த போதிருந்து அவர் எழுதியதைத் தொடர்ந்து மேற்கோளிட்டிருப்பது இந்த எதிர்விவாதத்தின் பலங்களில் ஒன்றாகும். இந்த எழுத்துக்கள், SWP இல் அவர் இணைந்த பின்னர் எழுதிய எழுத்துக்களுக்கு நேரெதிராக உள்ளன.

இந்தக் கட்டுரையில், ஹான்சனைப் பற்றிய வொல்ஃபோர்த்தின் கருத்து திடீரென மாறியதைப் பற்றி நோர்த் குறிப்பிடுகிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

உண்மையில், வொல்ஃபோர்த் மார்க்சிசத்தை கைவிடுவதற்கு முன்னர், குறிப்பாக அவர் சோசலிச தொழிலாளர் கட்சியின் சீரழிவை, அதன் முன்னணி நபராக ஜோசப் ஹான்சன் உயர்ந்ததுடன் தொடர்புபடுத்தியிருந்தார். சோசலிச தொழிலாளர் கட்சியின் வரலாறு குறித்து 1971 இல் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்ட அவரின் நீண்ட மதிப்பீட்டில், வொல்ஃபோர்த் பின்வருமாறு எழுதினார்:

“SWP இன் போருக்குப் பிந்தைய வரலாற்றில் ஹான்சனின் தத்துவார்த்த பங்களிப்பு அவரின் தனிப்பட்ட விஷயம் அல்ல. அவர் SWP இன் அனுபவவாத அணுகுமுறையை அனேகமாக மற்றவர்களை விட சற்று அபத்தமான முறையில் பிரதிபலித்தார். அவரது கோட்பாடுகள், நடப்பு அபிவிருத்திகளுக்கான ஓர் தோற்றப்பாட்டுவாத (impressionistic) பிரதிபலிப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டன அல்லது அரசியல் மற்றும் கன்னைவாத நோக்கங்களுக்காக அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன. ஒருமுறை உருவாக்கப்பட்ட ஒரு தத்துவம், புறநிலை சூழ்நிலையோ அல்லது கன்னைவாத தேவைகளோ மாறும்போது இலகுவாக மாற்றிக் கொள்ளப்படும். … அனுபவவாத நோயால் ஆழமாக நோய்வாய்ப்பட்ட ஒரு கட்சி மட்டுமே, அத்தகைய நபரை அதன் தலைமையின் மையத்தில் ஒரு முன்னணி பதவியில் வைத்திருக்கும்.” (வொல்ஃபோர்த், அமெரிக்காவில் மார்க்சிசத்திற்கான போராட்டம், லேபர் வெளியீடு, பக்கம் 140) [12]

நோர்த் குறிப்பிடுகிறார், “ஹான்சன் மீதான ஒரு படுமோசமான அரசியல் மதிப்பீட்டை, வொல்ஃபோர்த் வேண்டுமானால் மறந்துவிட விரும்பலாம்.” வொல்ஃபோர்த் இராஜினாமா செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், ஜூன் 14, 1974 இல் வெளியிடப்பட்ட வொல்ஃபோர்த்தின் ஒரு கட்டுரையான, “ஜோசப் ஹான்சன் — ஒரு வயதான பொய்யர் தனது சரக்குகளைக் சந்தையில் இறக்குகிறார்,” என்பதும் மேற்கோள் காட்டப்பட்டது.

இந்த கட்டுரைத் தொடரின் இரண்டாவது மற்றும் மிக நீளமான கட்டுரையான “கான்ட்டின் அடிச்சுவடுகளில்” (In the Footsteps of Kant) என்பது, வொல்ஃபோர்த் வேர்க்கர்ஸ் லீக்கை விட்டு வெளியேறியதற்குப் பின்னர் அவர் எழுதிய எழுத்துக்களில் அரவணைத்திருந்த மெய்யியல் நிலைப்பாடுகள் மீது ஒருமுனைப்படுகிறது. அவரின் அந்த எழுத்துக்கள் முக்கியமாக கான்டிய மற்றும் நடைமுறைவாத தன்மையில் இருந்தன.

இது தான் இந்தக் கட்டுரை தொடரில் அலெக்ஸ் ஸ்ரைனர் எழுதிய ஒரே கட்டுரை. அப்போது அவர் வேர்க்கர்ஸ் லீக்கின் உறுப்பினராக முக்கிய பாத்திரம் வகித்து வந்தார். தோழர்களுக்குத் தெரியும், ஸ்ரைனர் வேர்க்கர்ஸ் லீக்கை விட்டு வெளியேறி, செப்டம்பர் 1978 இல் புரட்சிகர அரசியலைக் கைவிட்டார், அதைத் தொடர்ந்து ஜனவரி 1979 இல் ஃபிராங்க் பிரென்னெர் வெளியேறினார். 2000 களின் நடுப்பகுதியில், இருவரும் வெறித்தனமாக ICFI மீது குற்றஞ்சாட்டினர்.

ஸ்ரைனர் மற்றும் பிரென்னெர் எழுப்பிய பிரச்சினைகள், பிராங்பேர்ட் பள்ளியும், பின்நவீனத்துவமும், போலி-இடது அரசியலும் என்பதில் கூர்மையாக கையாளப்பட்டுள்ளன. இன்று நம் அனைத்து தோழர்களும் இதைப் படிப்பதும் இன்றியமையாததாகும். இது கல்வித்துறையிலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் இன்றும் தொடர்ந்தும் ஆதிக்கத்தை செலுத்தும் 20 ஆம் நூற்றாண்டில் மேலோங்கி இருந்த அடிப்படை அரசியல் மற்றும் மெய்யியல் பிரச்சினைகள் பலவற்றை மீளாய்வு செய்கிறது.

பிராங்க்ஃபேர்ட் பள்ளியும், பின்நவீனத்துவமும், போலி-இடது அரசியலும்

ஸ்ரைனரின் கட்டுரையில் ஒரு சில கருத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவை மிகவும் சாராம்சம் அற்றவையாகவும் உள்ளன. OCI உடனான பிளவு மற்றும் தொர்னெட்டின் வெளியேற்றம் ஆகியவை அடிப்படையில் மெய்யியல் சார்ந்த பிரச்சினைகள் என்ற WRP மீண்டும் மீண்டும் எடுத்த நிலைப்பாட்டை மீளவலியுறுத்தும் விதத்தில், அவற்றைக் குறித்த தவறான பகுப்பாய்வோடு அந்தக் கட்டுரை தொடங்குகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் கட்டுரை நடைமுறைவாதம், அனுபவவாதம் மற்றும் கான்ட்வாதம் பற்றிய முக்கிய பத்திகளோடு, வொல்ஃபோர்த்தின் நிலைப்பாடுகள் மீது ஒரு சரியான பகுப்பாய்வை வழங்குவதுடன், மார்க்சிசத்தின் மெய்யியல் அடித்தளமாக இயங்கியல் சடவாதத்தை நிலைநிறுத்துகிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கையான இருப்பை வொல்ஃபோர்த் நிராகரிக்கிறார் என்ற முக்கிய மெய்யியல் பிரச்சினையை அந்தக் கட்டுரை கையாள்கிறது. இதைத் தொகுத்துக் கூறும் ஒரு முக்கிய பத்தி பின்வருமாறு குறிப்பிடுகிறது:

இந்தப் பிரபஞ்சம் இயற்கையாக இருக்கிறது என்ற அதன் புறநிலையான இருப்பை மறுப்பதன் மூலம், வொல்ஃபோர்த் இயற்கையின் மீதான அதன் ஒருங்கிணைப்பை, ஒன்றோடொன்று தொடர்புற்ற தன்மையை மற்றும் காரண காரியத்தை மறுத்தாக வேண்டும். இயக்கத்திலுள்ள உலகளாவிய விடயங்களில் இருந்து சிந்தனையையும் உணர்வையும் பிரிப்பதன் மூலம், அனைத்து அறிகைகளுக்குமான (cognition) சடரீதியான அடித்தளத்தையும் வொல்ஃபோர்த் நிராகரிக்கிறார். ஆகவே அறிகை ஒரு நடைமுறையாக நின்று போய், வொல்ஃபோர்த் கூறுவதைப் போல, “ஓர் உளவியல்ரீதியான நிகழ்ச்சிபோக்கு” ஆகிவிடுகின்றது. அகநிலை சிந்தனையாளர் புற உலகில் இருந்து சுதந்திரமானவர் என்றாகிறது. இயற்கையிலும் சிந்தனையிலும் உள்ள புறநிலையான காரண காரிய தேவைகளை வொல்ஃபோர்த் மறுப்பதும் வரலாற்று சடவாதத்தை முழுமையாக மறுப்பதை உள்ளடக்கி உள்ளது. சமூகமும் மற்றும் வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரமும், அவற்றின் தோற்றத்திற்கு காரணமான விதிகளுக்கு உட்பட்டது மற்றும் அவசியமான நிகழ்ச்சிபோக்கில் இருந்தும் முற்றிலுமாக பிரித்துப் பார்க்கப்படுகின்றன. [13]

முக்கியமாக, ஸ்ரைனர் இந்தக் கட்டுரையில் முன்வைத்த நிலைப்பாடுகள், அவரே பின்னர் முன்வைத்த நிலைப்பாடுகளுடன் நேரடியாக முரண்படுகின்றன. ஸ்ரைனர் எழுதுகிறார்:

ஒவ்வொரு திருத்தல்வாதியைப் போலவே, தொர்னெட் மற்றும் வொல்ஃபோர்த்தும் மெய்யியல், சடவாதம் அல்லது கருத்துவாதம் மீதான அடிப்படைக் கேள்வியை நிராகரித்து, அதைத் தன் விருப்பம் போல் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சடவாதம் குறித்து போகிற போக்கில் அவர் மேலோட்டமாக சிறிது வாயளவில் புகழும் வரையில், தன் விரும்பம் போல் என்ன கருத்துவாத குப்பைகளையும் எழுதலாம் என வொல்ஃபோர்த் நினைக்கிறார். [14]

இதையே பின்னர் ஸ்ரைனருக்கும் கூறலாம். சடவாதத்திற்கும் கருத்துவாதத்திற்கும் இடையிலான உறவுதான் மெய்யியலின் அடிப்படை கேள்வி என்பதில் ஏங்கெல்ஸ் உடன் தனக்கு உடன்பாடில்லை என்று 1999 இல் தோழர் நோர்த் உடனான ஒரு விவாதத்தில் ஸ்ரைனர் கூறினார்.

மார்க்சிசத்தையும் தொழிலாள வர்க்கத்தையும் வொல்ஃபோர்த் கைதுறந்தமை ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக 1970 களில் நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரின் பரந்த வலதுசாரி இயக்கத்தின் பாகமாக இருந்தனர் என்ற உண்மையை மெய்யியல் மீதான இந்தக் கட்டுரை நிரூபிக்கிறது. ஆனால் பின்னர் ஸ்ரைனரும் பிரென்னருமே இதன் பாகமாக ஆகியிருந்தார்கள். உண்மையில், வொல்ஃபோர்த்துக்கும் ஸ்ரைனருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஏனென்றால் இருவருமே ஆழமாக அகநிலைவாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததுடன், வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலகி இருந்ததுடன், குட்டி-முதலாளித்துவ அரசியலை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தார்கள்.

ஜூலை 2012 இல் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டுக்கான தன் ஆரம்ப உரையில், நோர்த், இந்தச் சமூக அடுக்கின் வலதுசாரி போக்கைக் குறித்து பின்வருமாறு கருத்துரைத்தார். இது பிராங்க்பேர்ட் பள்ளியும், பின்நவீனத்துவமும், போலி-இடது அரசியலும் தொகுதியில் “போலி-இடதின் தத்துவார்த்த மற்றும் வரலாற்று தோற்றுவாய்கள்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

வியட்நாம் போருக்குப் பின்னர் குட்டி-முதலாளித்துவப் போர்-எதிர்ப்பு போராட்ட இயக்கம் உடைந்து போன நிலையில், வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் இருந்த சமூகப் பிளவுகளின் தாக்கங்கள் இன்னும் தெளிவாக வெளிப்பட்டன. ஒவ்வொரு தனிமனிதனின் பரிணாம வளர்ச்சியும் எந்த விதத்திலும் நேரடியாக அவரவரின் சமூகப் பின்னணியால் தீர்மானிக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் 1973-74 இல் அதிகளவிலான உறுப்பினர்கள் இழக்கப்பட்டமை, நிச்சயமாக வொல்ஃபோர்த் மற்றும் அவரது கூட்டாளி நான்சி ஃபீல்ட்ஸின் சீர்குலைக்கும் நடவடிக்கையால் அதிகரித்து இருந்தபோதிலும், அது ஒரு பரந்த சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்கை பிரதிபலித்தது. 1960 களில் தீவிரமயப்பட்டிருந்த நடுத்தர வர்க்கப் பிரிவுகள், அவற்றுக்குப் பழக்கமான பழைய சமூக சூழலுக்கே திரும்ப பேரார்வத்துடன் இருந்தன. இந்தப் பயணம் தவிர்க்கவியலாமல் அவர்களை மீண்டும் முதலாளித்துவ அரசியல் சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு வந்தது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது) [15]

“மீண்டும் பப்லோவை நோக்கிய நீண்ட பாதை” என்ற தலைப்பிலான மூன்றாவது பகுதி, “கடந்த காலத்தில், ட்ரொட்ஸ்கிச இயக்கம் பெரும்பாலும் ஒரு பிரச்சாரத்தினை செய்யும் ஒன்றாக மட்டுப்பட்டு இருந்தது,” என்ற வொல்ஃபோர்த்தின் கூற்றைக் கையாள்கிறது. “புரட்சிகர சக்திகளை நிஜமாக தேர்ந்தெடுப்பது நிகழாது,” என்பதே அதன் அர்த்தம் என்று அவர் வாதிட்டார். [16]

“ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை வொல்ஃபோர்த் மறுக்க முற்படுகிறார்,” என்று நோர்த் பதிலளிக்கிறார். [17] பின்னர், பப்லோவாதத்திற்கு எதிரான ICFI இன் போராட்டத்தையும், 1953 மற்றும் 1963 பிளவுகளையும் நோர்த் விரிவாக மதிப்பாய்வு செய்து, பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்:

பப்லோவாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு நடத்திய போராட்டம், 1903 மற்றும் 1917 க்கு இடையே மென்ஷிவிசத்திற்கு எதிராக போல்ஷிவிசம் நடத்திய போராட்டத்தின் அளவுக்கு மார்க்சிச வரலாற்றின் ஒரு செழிப்பான அத்தியாயமாகும். அல்லது, இன்னும் துல்லியமாக கூறினால், இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் போல்ஷிவிசம் மற்றும் மென்ஷிவிசத்திற்கு இடையிலான மாபெரும் கருத்து மோதல் காலத்தில் இருந்து, திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் திரண்ட அனைத்து படிப்பினைகளது அடிப்படையில் தன்னை நிலைநிறுத்தி இருந்த பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம், மார்க்சிசத்தின் உச்சகட்ட வளர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. [18]

பின்னர், வொல்ஃபோர்த் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து இராஜினாமா செய்வதற்கு சற்று முன்னர் மே 31, ஜூன் 7 மற்றும் ஜூன் 14, 1974 இல் ஹீலிக்கு அவர் எழுதிய மூன்று கடிதங்களில் இருந்து நோர்த் விரிவாக மேற்கோள் காட்டுகிறார். ஒவ்வொரு கடிதத்திலும், 1953 உடைவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்த அவர், அந்த உடைவை “மிகவும் முக்கியத்துவம் மிக்கது” எனக் கூறியதுடன், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுத முன்மொழிந்தார்.

ஜூன் 7 கடிதத்தில், விரைவில் அவரின் கூட்டாளி ஆகவிருந்த ஹான்சனை வெளிப்படையாக தாக்கி பின்வருமாறு எழுதினார்:

உண்மையில், SWP இன் 1961 சர்வதேச தீர்மானம் மிகவும் நனவான மற்றும் முற்றிலும் கேவலமான வேலையாக இப்போது எனக்குத் தெரிகிறது. சொல்லப் போனால், 1953 இல் SWP கண்டித்த அதே பப்லோவாத சூத்திரங்களை, அந்த ஆவணத்தில் ஹான்சன் அவர் தனது வடிவத்தில் உள்ளடக்கி உள்ளார். இது, அந்த மனிதரின் குணத்திற்கு மேலாக வேறு கேள்விகளையும் மேலெழுப்புகிறது. அந்த ஆவணம், SWP இன் கடந்த கால வரலாற்றை இழிபடுத்துவதற்கான ஒரு வெளிப்படையான மற்றும் அப்பட்டமான முயற்சியாகும். [19]

இதற்கடுத்த மூன்று கட்டுரைகளும் அத்தொடரில் மிக முக்கியமானவையாகும். புரட்சி, முன்னணிக் கட்சி, ஏகாதிபத்திய சகாப்தம் மற்றும் இனம் சார்ந்த அரசியலை பற்றிய மார்க்சிச அணுகுமுறையை வொல்ஃபோர்த் கைதுறந்ததன் மீது அவை கவனம் செலுத்துகின்றன.

நான்காவது கட்டுரையான “சீர்திருத்தமா புரட்சியா?” என்பது, அனைத்துலகக் குழுவின் ஆறாவது மாநாட்டு அறிக்கையை வொல்ஃபோர்த் உருத்திரித்ததைக் கையாள்கின்றது.

முக்கியமாக, வொல்ஃபோர்த் அந்த அறிக்கையின் பின்வரும் இந்த பத்தியை கடுமையாகத் தாக்குகின்றார்:

இப்போது பிரச்சினையில் இருப்பது என்னவென்றால், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் வெடித்திருக்கும் வெகுஜனப் போராட்டங்களில், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக உண்மையில் தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்வதே முதல் பொறுப்பாகும்.

பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு தனித்த எரியும் பிரச்சினையைக் கூட, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்திற்குத் தயாரிப்பு செய்யாமல் தீர்க்க முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு அடிப்படைக் கோரிக்கையும், கடந்த கால ஒவ்வொரு வெற்றிகளின் பாதுகாப்பும், தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ அரசின் ஒவ்வொரு முயற்சியும், தொழிலாள வர்க்கத்திற்கு முன்னே அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தயாரிப்பு மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்தப் போராட்டத்தை வழி நடத்த புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது என்ற இரண்டு மிகப் பெரிய தேவைகளை முன்வைக்கின்றன. [20]

அலெக்ஸ் ஸ்ரைனரின் கட்டுரையில் இருந்தும் இதே போன்ற வேறொரு கருத்தை மேற்கோள் காட்டிய பின்னர், வொல்ஃபோர்த் பின்வருமாறு பதிலளித்தார்:

சரி, தோழர்கள் ஹீலி மற்றும் ஸ்ரைனர் அவர்களே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தின் “உடனடி நடைமுறைப் பணியே” சர்வதேச அளவில் இன்று உள்ள பணி என்பதை மறுப்பவர்களின் பட்டியலில் நீங்கள் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! [21]

நோர்த் குறிப்பிடுகிறார், “முதலாம் உலகப் போருக்கு முந்தைய சமூக ஜனநாயகத்தின் துர்நாற்றம் வீசும் சடலத்தை தோண்டி எடுத்து, அதை — அவருடைய அறியாமையோடு சேர்த்து வொல்ஃபோர்த் காட்சிப்படுத்துகிறார்.” [22] பின்னர் அவர் ஏகாதிபத்திய சகாப்தத்தின் இயல்பைக் குறித்த மார்க்சிச கருத்துருவை எடுத்துக்காட்ட லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை விரிவாக மேற்கோளிடுகிறார்.

1919 இல் பெட்ரோகிராட்டில் புரட்சிகர தொழிலாளர்களின் ஒரு கூட்டத்தில் லெனின் உரையாற்றுகிறார். ட்ரொட்ஸ்கி வலதுபுறம் உள்ளார். [Photo: Wikipedia]

இந்தக் கோடைப் பள்ளி மற்றும் நமது நடப்பு அரசியல் பணியுடன் மிகப் பெரியளவில் தொடர்புடைய ஒரு பத்தியில், நோர்த் பின்வருமாறு குறிப்பிட்டார்:

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தயாரிப்பதற்கும் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இடையே, நாம் முன்னரே சுட்டிக் காட்டியதைப் போல, வொல்ஃபோர்த் வேண்டுமென்றே ஏற்படுத்த முயற்சிக்கும் குழப்பம், வெறுமனே அவருக்குள் ஊறிப்போன நேர்மையின்மையின் விளைவல்ல. இது, மிக முக்கியமாக, சீர்திருத்தவாத திட்டங்களில் அவநம்பிக்கையோடு அவர் சிக்கிக் கொண்டிருப்பதன் ஒரு வெளிப்பாடாகும். இதில் ஒவ்வொரு கட்டமும் திடமான சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த சகாப்தத்தைப் பற்றிய வரலாற்று மதிப்பீட்டின் அடிப்படையில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தயாரிக்கும் ஒரு கட்சியால் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று நாம் சந்தேகத்திற்கிடமின்றி கூறுகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தயாரிப்பானது, கட்சியின் அன்றாட வேலைகளில் வியாபித்திருக்க வேண்டும்.

உண்மையில் இந்த விதத்தில் மட்டுமே புரட்சிகரக் காரியாளர்களை ஒன்று திரட்டி, கல்வியூட்டி, பிரமாண்ட வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்ய முடியும், இறுதியில் இது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, முதலாளித்துவ அரசை அழிப்பதில் உச்சக்கட்டத்தை அடையும். [23]

வொல்ஃபோர்த்தின் தற்போதைய நிலைப்பாடு, 1972-73 இல் அவர் முன்னெடுத்த முந்தைய தீவிர நிலைப்பாட்டுக்கு நேரெதிராக இருப்பதை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அப்போது அவர் “அமெரிக்க புரட்சி மிக அருகாமையில் இருப்பதாக அறிவுறுத்தினார்.” [24]

வொல்ஃபோர்த்தின் விடாப்பிடியான தோற்றப்பாட்டு வாதத்திற்கு அனைத்துலகக் குழு அடிக்கடி கடிவாளமிட வேண்டியதாக இருந்தது. மிகவும் குறிப்பாக மைக் பண்டாவிடம் இருந்து பிப்ரவரி 1973 இல் வந்த கடிதம் பின்வருமாறு வலியுறுத்தியது:

“பாய்ச்சல்கள்” மட்டும் இருக்கப் போவதில்லை, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் திருத்தல்வாதிகளுக்கு எதிராக பல கடுமையான விட்டுக்கொடுப்பற்ற உறுதியான போராட்டமும் இருக்கும். இதற்கு மகத்தான தத்துவார்த்த உறுதிப்பாடும் தந்திரோபாய திறமையும் தேவைப்படும். … தொழிலாள வர்க்கத்தின் முன்னணி படையை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுத்து, ஒழுங்கமைத்து, புரட்சிகரக் கட்சிக்கு அடித்தளம் அமைப்பதே பணியாக இருக்கும். [25]

பிரான்ஸ் எங்கே செல்கிறது? என்ற தன் கட்டுரையில், கட்சியின் அகநிலை காரணி மீதான ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை மேற்கோளிட்டு அந்தக் கட்டுரை நிறைவடைகிறது:

சக்திகளுக்கு இடையிலான அரசியல் உறவு வெறுமனே புறநிலைக் காரணிகளால் (உற்பத்தி நிகழ்ச்சிபோக்கு, எண்ணிக்கைப் பலம், இதர பிற காரணிகள் வகிக்கும் பாத்திரத்தால்) மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உண்மையான பலத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள நனவின் பலம் போன்ற அகநிலை காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. [26]

நோர்த் பின்வருமாறு முடிவுரைக்கின்றார்:

தனது ஒட்டுமொத்த வரலாற்று அனுபவத்தையும் உள்ளடக்கிய மற்றும் இவை அனைத்தையும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் புரட்சிகரக் கட்சியினது போராட்டத்தின் மூலமாகவே தொழிலாள வர்க்கம் இந்த நனவை வந்தடைகிறது.

பாட்டாளி வர்க்கத்தினுள் ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தைப் பிரதிபலிக்கும் அனைத்து திருத்தல்வாத சக்திகளுக்கும் எதிராக புரட்சிகரக் கட்சி எந்தளவுக்குப் போர் நடத்துகிறதோ அந்தளவுக்கே தொழிலாள வர்க்கம் பலப்படுத்தப்படுகிறது.

இத்தகைய எல்லா திருத்தல்வாத சக்திகளையும் அடித்து நொறுக்குவது, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்வதில் உச்சக்கட்டமாகும். ஆகவே, வேர்க்கர்ஸ் லீக் வொல்ஃபோர்த்தின் முகமூடியைக் கிழித்து, அதன் இயக்கத்திற்குள் இருந்த சீழ்பிடித்த கட்டியை அகற்றிய போது, அமெரிக்க தொழிலாள வர்க்கம் அளப்பரியளவில் பலமடைந்தது. [27]

“போர் குறித்த ஓர் அகநிலை கருத்துவாதி” என்ற ஐந்தாவது கட்டுரையும், இன்றைய எமது அரசியல் பணி மற்றும் முன்னோக்குக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். இந்தக் கட்டுரை, மூன்றாம் உலகப் போர் அபாயம் குறித்து அனைத்துலகக் குழு முன்வைத்த எச்சரிக்கை மீதான வொல்ஃபோர்த்தின் கண்டனத்தின் மீது ஒருமுனைப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை, இது “ஹீலியை எல்லா அதிதீவிர இடதுகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் தொழிலாள வர்க்கம் மீதான மிகப் பெரும் அவநம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது,” என்ற வாதிடுகிறார். [28]

இந்த நவீன சகாப்தத்தை, போர்களினதும் புரட்சிகளினதும் சகாப்தங்களில் ஒன்றாக லெனின் வகைப்படுத்தினார் என குறிப்பிட்ட பின்னர், தோழர் நோர்த் ட்ரொட்ஸ்கியின் 1934 கட்டுரையான “போரும் நான்காம் அகிலமும்” என்பதில் இருந்து மேற்கோளிடுகிறார். “எல்லா அரசாங்கங்களுமே போரைக் குறித்து அஞ்சுகின்றன. ஆனால் எந்த ஒரு அரசாங்கத்திற்கும், வேறு வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் இல்லை. பாட்டாளி வர்க்க புரட்சி இல்லாமல், ஒரு புதிய உலகப் போரைத் தவிர்க்க முடியாது.” [29]

பின்னர் நோர்த் எழுதுகிறார்:

மார்க்சிஸ்டுகளாகிய நாம் வரலாற்று அபிவிருத்தியின் விதிகளில் ஆர்வம் கொண்டுள்ளோம். இவற்றை “நம்பிக்கை” மூலமாகவோ அல்லது பிற உத்வேகமான உணர்வுகளாலோ மாற்றி விட முடியாது. மருத்துவரின் ஆலோசனையைக் கேட்காமல், தன் வயிற்றின் மீது “நம்பிக்கை” இருக்கிறது என்று ஒருவர் விஷம் குடித்தால், அவரை ஒரு முட்டாள் என்று கருதுவது சரியாகத்தான் இருக்கும். தொழிலாள வர்க்கத்தின் மீது “நம்பிக்கை” இருக்கிறது என்று போரின் அபாயத்தைப் புறக்கணிப்பவர் மார்க்சிஸ்ட் இல்லை என்பது மட்டுமல்ல, மாறாக அவருக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிக் கருத்துக்கள் கூறும் முட்டாளும் ஆவார்.

புரட்சிகரக் கட்சியை கட்டமைக்கப் போராடி வரும் மார்க்சிஸ்டுகள், வரலாற்றுரீதியில் தேவைப்படும் தலைமையோடு சேர்ந்து முதலாளித்துவத்தை தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறிந்து போரைத் தடுக்க முடியும் என்ற விஞ்ஞானபூர்வ அறிவுடன் நகரும் போது, இந்த உள்ளடக்கத்தில் மட்டுந்தான் “நம்பிக்கை” மீதான கேள்வியில் எந்தவொரு முக்கியத்துவமும் உள்ளது.

இந்த விஞ்ஞானபூர்வ அர்த்தத்தில், தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கும் என்பதில் அனைத்துலகக் குழு முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளது. உலக ஏகாதிபத்தியத்தை அழிக்கும் கட்சியை நாம் கட்டியெழுப்பி வருகிறோம் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். “போருக்கு எதிரான போராட்டம் என்பது இப்போது நான்காம் அகிலத்திற்கான போராட்டமாகும்,” என்ற வார்த்தைகளோடு 1934 ஆவணத்தை நிறைவு செய்த ட்ரொட்ஸ்கியின் அந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் முன் நகர்கிறோம்.” [30]

பின்னர் அந்தக் கட்டுரை, அதற்கு முந்தைய ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான வடக்கு வியட்நாமின் வெற்றி பற்றிய வொல்ஃபோர்த்தின் நம்பமுடியாத அறிக்கையைக் கையாள்கிறது. வொல்ஃபோர்த்தின் அந்த அறிக்கை, ஏகாதிபத்திய போரை நிறுத்துவதற்குப் புரட்சிகர தலைமையின் தேவையை முற்றிலும் நிராகரிப்பதற்கு நிகராக உள்ளது.

வொல்ஃபோர்த் எழுதுகிறார்:

வியட்நாம் வெற்றியில் உள்ள முக்கிய புள்ளியை அனைத்துலகக் குழு தவறவிடுகிறது. போரினூடாக தமது நலன்களை முன்னெடுப்பதில் இருந்த முதலாளித்துவத்தின் மிகப்பெரும் பலவீனத்தை அது வெளிப்படுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக, பெருந்திரளான மக்கள் இயக்கமே துப்பாக்கியின் விசையை அழுத்துவதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் விரல்களைத் தடுத்துள்ளது. [31]

நோர்த் பதிலளித்தார்:

ஆகவே, வொல்ஃபோர்த்தின் அற்புத உலகில், பிரச்சினை தானாகவே தீர்க்கப்பட்டு விடும் என்பதால், போருக்கு எதிரான போராட்டம் ஒரு புரட்சிகரமான பணி அல்ல. பெருந்திரளான மக்கள், விசையை அழுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் விரல்களைத் தடுத்து வைத்திருப்பதாலும், முக்கியமானது என்னவெனில் அதைச் செய்ய முதலாளித்துவவாதிகள் மிகவும் பலவீனமாக இருப்பதாலும், வொல்ஃபோர்த் உண்மையான நம்பிக்கையோடு உறங்கலாம். மேலும், தங்களின் நலன்களை முன்னெடுப்பதற்கு, போர் ஒரு மோசமான வழி என்ற உண்மையை முதலாளித்துவவாதிகள் புரிந்து கொண்டிருக்கிறார்களாம்.

இங்கே அனைத்தும் முழுமையாக குழப்பப்படுவதுடன், மார்க்சிசமே மூர்க்கத்தனமாகத் திரிக்கப்படுகிறது.

தங்களது “பெரிய பலவீனத்தை” கண்டுபிடித்துவிட்ட முதலாளிகள், இப்போது நீதிமான்கள் பாவம் செய்யாததுபோல் போரிலிருந்து ஒதுங்கி விடுவார்கள் என்ற உண்மையிலேயே வியக்க வைக்கும் முடிவுக்கு வொல்ஃபோர்த் வருகிறார்.

முதலாளித்துவத்தைத் தூக்கி எறியாமல் போரைத் தடுக்க முடியாது. வொல்ஃபோர்த் இதைக் குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால் இது தற்செயலாக தவிர்க்கவிடப்பட்டதல்ல...

வெகுஜன இயக்கத்தை மகிமைப்படுத்துவதும், புரட்சிகரத் தலைமை பற்றிய கேள்வியைத் தவிர்ப்பதும், சந்தர்ப்பவாதத்தின் உன்னதமான ஏமாற்று வேலையாகும். [32]

“தொழிலாள வர்க்கத்தின் குரல்வளையை நெரிக்கும் பாஸ்டன் முரடர்கள்” என்ற ஆறாம் பகுதி, 1974 மற்றும் 1976 க்கு இடையே வொல்ஃபோர்த்தும் SWP உம் முக்கியமாக ஒருமுனைப்பட்டிருந்த பாஸ்டன் அரசு பள்ளிகளில் இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான பேருந்து போக்குவரத்து திட்டத்தில், அவர்களின் நிலைப்பாட்டைக் குறித்து பேசுகிறது. இந்த நெருக்கடியின் போது, பேருந்து போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்த உதவியாக, பாஸ்டனுக்கு மத்திய துருப்புகளை அனுப்புமாறு SWP அறிவுறுத்தியது. இது பள்ளிகளில் வேற்றுமை ஒழிப்பை மேற்கொள்ள அர்கன்சாஸின் Little Rock இற்கு மத்திய துருப்புகளை அனுப்புமாறு SWP 1957 இல் கோரியதிலிருந்து முதலாளித்துவ அரசை நோக்கிய நீண்ட தொடர்ச்சியான மார்க்சிச-விரோத தழுவல்களில் சமீபத்தியதாக இருந்தது.

1976 இல் பாஸ்டன் பேருந்து நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட புலிட்சர் பரிசு பெற்ற புகைப்படம், “The Soiling of Old Glory”. [Photo: Stanley Forman]

வொல்ஃபோர்த், இந்த பிரச்சினை குறித்த அவரது எழுத்துக்களில், SWP கூட்டாட்சி துருப்புக்களை அனுப்புமாறு கோரியதைக் குறிப்பிடாமல் தவிர்த்து கொண்டார், இது இந்தக் கொள்கையை மறைமுகமாக ஆமோதிப்பதாகும். அதே நேரத்தில், 1970 களின் மத்திய பகுதியில் ஆழமடைந்து கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கறுப்பினத் தொழிலாளர்களுக்காக வெள்ளையினத் தொழிலாளர்களைத் தியாகம் செய்ய நிர்பந்தித்த ஒரு நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, வெளிப்படையாகவே முன்னுரிமை அடிப்படையிலான முறையை (seniority system) எதிர்த்ததுடன், இனவாதத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் மீது அவர் குற்றம் சுமத்தினார்.

நோர்த் எழுதுகிறார்:

இந்தக் கொள்கைகள், மார்க்சிசத்துடன் முறித்துக் கொண்ட ஒருவரின் கொள்கைகள் மட்டுமல்ல, மாறாக எதிரி வர்க்கத்தின் முகாமுக்குள் விழுந்து விட்ட ஒருவரின் கொள்கைகளாகும். இந்தப் பொருளாதார நெருக்கடியால் வெறிப்பிடித்து போய், அதற்காகத் தொழிலாள வர்க்கத்தின் மீது பழிசுமத்தும், நடுத்தர வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான அடுக்குகளின் வலதுசாரி இயக்கத்தை வொல்ஃபோர்த் பிரதிபலிக்கிறார்.

வொல்ஃபோர்த்தின் தொழிற்சங்க-விரோத எதிர்ப்புரையில் எது ஏற்றுக் கொள்ளவியலாத ஒரு குறிப்பிட்ட அம்சமாக இருக்கிறது என்றால், அவர் இப்போது முன்னெடுத்து வரும் இதே நிலைப்பாடுகளுக்கு எதிராக, அவரே கடந்த காலத்தில் நிறைய விரிவாக எழுதி உள்ளார். [33]

1960 களில் SWP இன் இதே நிலைப்பாடுகளுக்கு எதிராக, மைக் பண்டா உடனான நெருங்கிய ஒத்துழைப்புடன் எழுதப்பட்ட ஒரு பலமான எதிர்ப்புரை ஆவணமான கறுப்பின தேசியவாதமும் மார்க்சிச தத்துவமும் என்ற வொல்ஃபோர்த்தின் 1969 பிரசுரத்தில் இருந்து பின்னர் அந்தக் கட்டுரை மேற்கோள்கள் காட்டுகிறது.

இன்றைய காலப்பகுதியில் “1619 திட்டத்திற்கு” எதிராகவும் மற்றும் இனவாதரீதியில் பிற வரலாற்று பொருள்விளக்கங்களுக்கு எதிராகவும் அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டு போரை ICFI பாதுகாத்திருப்பதுடன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதி நேரடியாக தொடர்புபட்டுள்ளது. பாஸ்டன் தொடர்பான அவரது எழுத்துக்களில், வொல்ஃபோர்த் பின்வருமாறு வலியுறுத்தினார்:

அமெரிக்க உள்நாட்டு போர் வரையில் தெற்கில் அடிமை முறை இருந்து வந்ததாலும் மற்றும் அந்தப் புரட்சிகர போர் முன்னிறுத்திய ஜனநாயகக் கடமைகளை முழுமையாகத் தீர்க்க முதலாளித்துவ வர்க்கம் இலாயக்கற்று இருந்ததாலும், உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் இனரீதியில் ஆழமாகப் பிளவுபட்டுள்ளது…

அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியானது, இந்தப் பிரச்சனையோடு நேருக்கு நேர் மோதலின்றி முன்நகர முடியாது. பல வழிகளில் இந்தப் பிரச்சினை மூன்றாவது அமெரிக்கப் புரட்சியின் மையப் பிரச்சனையாக உள்ளது. [34]

நோர்த் பின்வருமாறு பதிலளித்தார்:

அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறவில்லை என்ற கருத்தை ஒருவர் முன்னெடுத்தால், பின் அவர் இந்த வரலாற்று சகாப்தம் குறித்த ஒட்டுமொத்த மார்க்சிச கருத்தையும் முழுமையாக மறுபரிசீலனை செய்யும் உடனடிப் பணியை எதிர்கொள்கிறார்…

வொல்ஃபோர்த்தைப் பொறுத்த வரையில், துரதிர்ஷ்டவசமாக அவரின் மொத்தத் தத்துவமும் முற்றிலும் வெறும் குப்பையாக உள்ளது. அமெரிக்காவை போலவே, உலகின் எந்த நாட்டிலும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை. 1776 இல் காலனித்துவ வணிகர்கள் மற்றும் பண்ணை உடமையாளர்கள் தலைமையிலான புரட்சி, அமெரிக்காவின் தேசிய சுதந்திரத்தை நிறுவியதுடன், இரத்தக்களரியான உள்நாட்டுப் போர் அடிமை முறையை முற்றிலுமாக ஒழித்து, அமெரிக்கக் கண்டந்தழுவி தொழில்துறையின் தடையற்ற வளர்ச்சி மூலமாக பாரியளவில் மூலதனம் அதிகரிப்பதற்கான வரலாற்று நிலைமைகளை உருவாக்கியது…

முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை நிறுவுவதற்கான புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை மறுப்பதே, அரசியல்ரீதியாக இந்த வெளிப்படையான உண்மைகளை மறுப்பதன் நோக்கமாகும். [35]

இறுதியாக, இனவாதமே அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருகும் முக்கிய பிரச்சனை என்ற வொல்ஃபோர்த்தின் பொய்யான கூற்றை விமர்சித்து, நோர்த் பின்வருமாறு எழுதுகிறார்:

இருப்பு (being) நனவைத் தீர்மானிக்கிறது என்பதை மறுக்கும் ஓர் அகநிலைவாதியாக, வொல்ஃபோர்த், இது தான் [இனவாதமே] மூன்றாம் அமெரிக்கப் புரட்சியின் “மத்திய பிரச்சினை” என்று வலியுறுத்துகிறார்…

வேறு வார்த்தைகளில் கூறினால், இனவாத சிந்தனையை முதலாளித்துவச் சிதைவின் விளைவாகவும், அதன் நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை ஒரு புறநிலை சக்தியாக வரலாற்றில் சமூகப் புரட்சியை நோக்கி தள்ளுகிறது என்றும் பார்க்கப்படவில்லை. மாறாக, வொல்ஃபோர்த்திற்கு இனவாதம் பிறப்பிலேயே பதிவான ஒன்றாகிவிடுவதுடன், அது புறநிலை வரலாற்று சக்திகளை விட அதிக பலத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீது பலமான சக்தியாக உள்ளது என்றாகிறது.

தொழிலாளர்கள் “முட்டாள்கள்”, மனிதர்கள் இயல்பிலேயே தீயவர்கள் என்ற அடித்தளத்தில், சோசலிசத்திற்கான போராட்டத்தை நிராகரிக்கும் நடுத்தர வர்க்க அடுக்குகள் மற்றும் தீவிரக் கொள்கையாளர்கள் மத்தியில் காணப்படும் எல்லா வகையான அவநம்பிக்கையான வாதங்களில் இதுவும் ஒரு வகையாகும். [36]

“ஜோசப் ஹான்சன் — ஒரு வயதான பொய்யர் தனது சரக்குகளை சந்தையில் இறக்குகிறார்” என்ற ஏழாவது கட்டுரையில், “ஸ்ராலினிச அமைப்புரீதியிலான நடைமுறைகளுக்கு” அனைத்துலகக் குழு தான் குற்றவாளி என்ற வொல்ஃபோர்த்தின் குட்டி-முதலாளித்துவ வாதத்தை நோர்த் எடுத்துரைக்கிறார்.

இதை மறுத்துரைக்கும் ஒரு முக்கியமான பத்தி பின்வருமாறு கூறுகிறது:

“அமைப்புரீதியான நடைமுறைகளை” கண்டனம் செய்வது திருத்தல்வாதத்தின் தனிச்சிறப்பாகும். 1903 க்கு பின்னர் மென்ஷிவிக்குகள் லெனினின் அமைப்புரீதியான நடைமுறைகளை “புளோங்கிசம்” (Blanquism) அல்லது “ஜாக்கோபினிசம்” (Jacobinism) என்று கண்டித்த அதே விதத்தில், “ஸ்ராலினிச” நடைமுறைகளுக்காக பொதுவாக ஓடுகாலிகள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளைக் கண்டிக்கிறார்கள்.

இந்த அவமதிப்புகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது என்னெவென்றால், பெரும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் எந்தவொரு புரட்சிகர கட்டுப்பாட்டையும் மற்றும் அமைப்புரீதியான கீழ்ப்பணிவையும், அதனைப் பயன்படுத்தி வெறுப்பவர்களால் இவை பயன்படுத்தப்படுகின்றன என்பதே. [37]

இந்தக் கட்டுரையின் எஞ்சிய பகுதி, கட்சி தலைமை பதவிக்கு ஃபீல்ட்ஸ் உயர்த்தப்பட்டதற்கு அடுத்த ஆண்டு, வொல்ஃபோர்த் மற்றும் ஃபீல்ட்ஸின் சீர்குலைவு நடவடிக்கைகளை விரிவாக விவரித்து மீளாய்வு செய்து, அவர்கள் வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையில் இருந்து “களையெடுக்கப்பட்டார்கள்” என்ற பொய்யான வாதத்தை நிராகரிக்கிறது.

“ஜோசப் ஹன்சனின் கூட்டாளி” என்ற எட்டாவது கட்டுரை, நான்காம் அகிலத்தின் பாதுகாப்பை, வொல்ஃபோர்த், “ஜோசப் ஹான்சன் மீதான அவதூறு பிரச்சாரம்” என்று குணாம்சப்படுத்தியதற்குப் பதிலளிக்கிறது. அது தொடர்ச்சியான பல முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வொல்ஃபோர்த்திற்குச் சவால் விடுத்து, அது வரையிலான அந்த விசாரணையின் முக்கிய கண்டுபிடிப்புகளை மீளத்தொகுத்தளிக்கிறது.

ஜோசப் ஹான்சன்

“வொல்ஃபோர்த் எங்கே செல்கிறார்?” என்ற இறுதிப் பகுதி, அந்தத் தொடரின் முக்கிய புள்ளிகளையும் மற்றும் வொல்ஃபோர்த் இராஜினாமாவின் பரந்த முக்கியத்துவத்தையும் தொகுத்தளிக்கிறது. வொல்ஃபோர்த் மிகவும் வெளிப்படையாகவே நான்காம் அகிலம் பற்றி ஒரு தேசியவாத கருத்துருவை தெளிவாக முன்வைத்ததும், ட்ரொட்ஸ்கியின் பாத்திரத்தையே இழிவுபடுத்தி இருந்த அவருடைய சமீபத்திய ஆவணங்களில் இருந்த பத்திகளை அது மேற்கோளிடுகிறது.

அதனையடுத்து, 1920 கள் மற்றும் 1930 களில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கன்னையில் மதிப்பிழந்த பிழைப்புவாதியாக இருந்து, பின்னர் AFL-CIO அதிகாரத்துவத்தின் தலைவராகவும், அதன் நிர்வாகத் தலைவர் ஜோர்ஜ் மீனிக்கு (George Meany) ஆலோசகராகவும், சிஐஏ க்கு உடந்தையாளராகவும் இருந்த ஜே லவ்ஸ்டோனுக்கும் (Jay Lovestone) வொல்ஃபோர்த்திற்கும் இடையே ஒரு பொருத்தமான ஒப்பீட்டை நோர்த் வரைகிறார்.

1917 இல் ஜே லவ்ஸ்டோன்

அவர் எழுதுகிறார்:

லவ்ஸ்டோனின் எல்லா குணாம்சங்களும் வொல்ஃபோர்த்திற்குள் முளைவிட்டு வரும் கட்டத்தில் இருப்பதைக் காணலாம்: அதாவது, முற்றிலும் அரசியல் கோட்பாடுகள் இல்லாமை, கட்டுப்பாடற்ற அகநிலைவாதம் மற்றும் பிழைப்புவாதம், மார்க்சிசம் மற்றும் போல்ஷிவிசத்தின் ஜனநாயக மத்தியவாதம் மீதான விரோதம், அப்பட்டமாக சர்வதேசியவாதம் மீதான எதிர்ப்பு, மார்க்சிச இயக்க வரலாற்றை மதியாமை, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு அடிபணிவு, மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான கடுமையான வெறுப்பு ஆகியவையாகும். [38]

பின்வரும் அறிவார்ந்த தீர்மானிப்புடன் அந்தத் தொடர் நிறைவடைகிறது:

வொல்ஃபோர்த்தின் வலதை நோக்கிய நகர்வு எந்த வகையிலும் நிற்கப் போவதில்லை என்று நாம் திட்டவட்டமாகக் கூறலாம். அவர் தன்னை எவ்விதத்திலும் முன்னே கொண்டு சென்றுவிடும் ஒரு சாமர்த்தியமான மனிதர். வொல்ஃபோர்த் இன்னும் எவ்வளவு தூரத்திற்குச் செல்வார் என்று நம்மால் கணிக்க முடியாது. அவரின் எதிர்கால வளர்ச்சி, ஆளும் வர்க்கத்தின் தேவைகளாலும் நெருக்கடி என்ன வேகத்தில் அபிவிருத்தி அடைகிறது என்பதனாலும் தீர்மானிக்கப்படும் என்று வேண்டுமானால் கூற முடியும்.

வொல்ஃபோர்த்துக்கு எதிரான போராட்டம், அமெரிக்காவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரநிதிகளைக் கட்டியெழுப்பியதில் ஒரு மைல்கல்லாகும். அரசியல்ரீதியில் அவரை அம்பலப்படுத்தியமை வெறுமனே வேர்க்கர்ஸ் லீக்கை மட்டும் பலப்படுத்தவில்லை, மாறாக அது அமெரிக்காவில் பாரிய புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான தத்துவார்த்த அடித்தளத்தையும் அமைத்துள்ளது.

வொல்ஃபோர்த்துக்குத் திருத்தல்வாதிகளால் ஒரு மாவீரருக்குரிய வரவேற்பு வழங்கப்பட்டதால் நாம் எவ்விதத்திலும் தொந்தரவுக்கு உள்ளாகவில்லை. GPU ஒத்துழைப்பாளர்களான ஹான்சன் மற்றும் நோவாக்கை அடுத்து, சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமையில் அவரும் அந்த கௌரவமான பதவியை ஏற்கட்டும். அவர் அதற்குரியவராக இருக்கிறார்!

ஆனால் வேர்க்கர்ஸ் லீக்கில், வொல்ஃபோர்த்துக்கு எதிரான போராட்டம் புரட்சிகர கட்சியின் காரியாளர்களுக்கு திருத்தல்வாதத்தின் மீது ஒரு தீராத வெறுப்பை பலப்படுத்தியுள்ளது. அது புரட்சிகர கட்சியில் இணைய முன்வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மாபெரும் புதிய சக்திகளுக்கு பயிற்சி அளிப்பதில் இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை வழங்கி உள்ளது.

இறுதியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒற்றுமையோடு வேர்க்கர்ஸ் லீக் திருத்தல்வாதத்திற்கு எதிராகத் தொடுத்த போராட்டம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உலக சோசலிச புரட்சிக்காகத் தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்வதில் உயர்ந்த கட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை நம்மால் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாகக் குறிப்பிட முடியும். [39]

அதற்கடுத்து வந்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் வொல்ஃபோர்த் இன்னும் கூடுதலாக வலதை நோக்கி நகர்ந்த நிலையில், இவை அனைத்தும் மிகச் சரியென நிரூபணமாயின என்பதோடு, வேர்க்கர்ஸ் லீக்கின் காரியாளர்கள் தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான அவர்களின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் வரலாற்று கல்வியூட்டலைத் தீவிரப்படுத்தினர்.

வேர்க்கர்ஸ் லீக்கினதும் வொல்ஃபோர்த்தினதும் வேறுபட்ட பாதைகள்

நான்காம் அகிலமும் ஓடுகாலி வொல்ஃபோர்த்தும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வேர்க்கர்ஸ் லீக் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் தத்துவார்த்த முன்னேற்றங்களை அடைந்து வந்தது. அதே நேரத்தில் ஏராளமான தொழிலாளர்களின் போராட்டங்களில் தலையிட்டது. அதை ரொம் விரிவாக மதிப்பாய்வு செய்வார். அதே நேரத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை ஆழமாக்கப்பட்டு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஊடுருவிய GPU மற்றும் FBI முகவர்களின் வலையமைப்பு அம்பலப்படுத்தப்பட்டது. அதை எரிக் மதிப்பாய்வு செய்வார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) விசாரணையில் மிகப்பாரிய கண்டுபிடிப்புக்கள் இருந்தபோதிலும், வொல்ஃபோர்த், அதன் பாதுகாப்பு தொடர்பாக கவலை கொள்வதற்காக இயக்கத்தை தொடர்ந்து அவதூறு செய்தார். SWP இன் டிசம்பர் 1976 துண்டுப்பிரசுரமான ஹீலியின் பெரும் பொய் என்பதற்கு அறிமுக உரை எழுதினார். பின்னர் அவர் ஜனவரி 14, 1977 இல் இலண்டனில் உலக பப்லோவாத இயக்கத்தின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்த அவமானத்தின் அரங்கம் (Platform of Shame) என்ற நிகழ்வில் பங்கேற்றார். இதைப் பற்றிய ஒரு முக்கியமான கட்டுரையை மதிப்பாய்வு செய்ய எனக்கு நேரம் போதாதுள்ளது. ஆனால் இது தொகுதி 7 இல் “வொல்ஃபோர்த் — அவமானத்தின் அரங்கம்” என்ற தலைப்பில் உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், அவமானத்தின் அரங்கத்தில் அவர் பங்கேற்ற சில மாதங்களுக்குப் பின்னர், சில்வியா கோல்ட்வெல்லுக்கு எதிராக அனைத்துலக் குழு திரட்டிய பெரும் ஆதாரங்களின் காரணமாக, கோல்ட்வெல் ஒரு முகவர் என்பதை ஒப்புக்கொள்ளுமாறு ஜாக் பார்ன்ஸை வொல்ஃபோர்த் தனிப்பட்ட முறையில் ஊக்கப்படுத்தினார். இந்த கடிதமும் தொகுதி 7 இல் உள்ளது.

பாதுகாப்பு விசாரணை தொடர்ந்தால் “கொடிய விளைவுகள்” இருக்கும் என ஹான்சன் எழுதிய சில மாதங்களுக்குப் பின்னர், அந்த ஆண்டின் பிற்பகுதியில், அக்டோபர் 16, 1977 அன்று, நியூ யோர்க் நகரில் இரண்டு கொலைகாரர்களால் ரொம் ஹீனெஹன் கொலை செய்யப்பட்டார்.

இந்த அரசியல் படுகொலைகளுக்கும் மற்றும் திருத்தல்வாத பத்திரிகைகளின் முடிவில்லாத அவதூறுகளுக்கும் முன்னால், வேர்க்கர்ஸ் லீக் ஒரு அங்குலம் கூட வளைந்து கொடுக்கவில்லை. மாறாக, கட்சி தொழிலாள வர்க்கத்திற்குள் ஆழமாகத் திரும்பியது, ரொம்மின் கொலை குறித்து விசாரணை மற்றும் துப்பாக்கிதாரிகளைக் கைது செய்யக் கோரி ஒரு ஆக்கிரோஷ பிரச்சாரத்தை அதிகரித்தது. அதே நேரத்தில், வேர்க்கர்ஸ் லீக் வர்க்கப் போராட்டத்தில் அதன் தலையீடுகளை ஆழமாக்கி, அதன் அரசியல் பகுப்பாய்வைக் கூர்மைப்படுத்தியது.

ரொம் ஹீனெஹன், 1951-1977

இந்த அனுபவங்களிலிருந்தும், வொல்ஃபோர்த்தின் இராஜினாமாவிற்குப் பின்னர் கட்சியின் வளர்ச்சியிலிருந்தும், வேர்க்கர்ஸ் லீக் 1978 இல் முன்னோக்குத் தீர்மானத்தை உருவாக்கியது. அது பின்னர் ஜூன் 1979 இல் திருத்தப்பட்டு, பூர்த்தியாக்கப்பட்டது. உலக பொருளாதார-அரசியல் நெருக்கடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரண ஓலமும் என்ற தலைப்பிலான இந்த ஆவணம், 1970களின் தசாப்தத்தில் முழு ICFI இன் மிக முக்கியமான தத்துவார்த்த மற்றும் அரசியல் வளர்ச்சியைக் குறித்தது. இந்த ஆவணத்தைப் படித்ததும், மைக் பண்டா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அதை “IC இன் முன்னோக்கின் அசாதாரண வளர்ச்சி” என்று வகைப்படுத்தினார். தோழர் ரொம் இந்த ஆவணத்தை மேலும் விரிவாக மதிப்பாய்வு செய்வார்.

வொல்ஃபோர்த்துடனான உடைவு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஒரு மாற்றமடையும் புள்ளியைக் குறித்தது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அப்போதிருந்து, WRP இன் நோக்குநிலை அதிகரித்தளவில் தேசியவாத, சந்தர்ப்பவாதமாக மாறுகையில், வேர்க்கர்ஸ் லீக் தொழிலாள வர்க்கத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று மரபுகளுக்கும் இன்னும் ஆழமாக திரும்பியது.

1978 முன்னோக்குகள் தீர்மானம் விவாதிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட நேரத்தில், WRP இன் சீரழிவு வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமைக்கு தெளிவாகத் தெரிந்தது. கூட்டங்களில் அதன் நடத்தை, அதன் பிரசுரங்களில் முதலாளித்துவ தேசியவாத பிரமுகர்களுக்கு விமர்சனமற்ற ஆதரவு, மற்றும் இயங்கியல் பற்றிய ஹீலியின் வளர்ந்து வரும் குழப்பம் ஆகியவை ஆரம்பகால எச்சரிக்கைகளாக இருந்தன. அவை அடுத்துவந்த ஆண்டுகளில் மிகவும் வெளிப்படையாகத் தோன்றின.

ஹீலியின் இயங்கியல் பற்றிய ஆய்வுகள் மற்றும் அக்டோபர் 1982 இல் WRP தலைவர்களுடனான சந்திப்பில் தோழர் நோர்த்தின் விமர்சனத்துடன் இது இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது, மேலும் இந்த பள்ளியின் இறுதி விரிவுரைகளின் பொருளான 1985-86 பிளவில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

வொல்ஃபோர்த்தைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளில் அவர் SWP ஐ விட்டு வெளியேறி முழு அளவிலான கம்யூனிச எதிர்ப்பாளராக ஆனார். அவர் சாக்ட்மனைட்டுகளுக்குத் திரும்புவதன் மூலம் விரைவில் அதைப் பூர்த்திசெய்ததோடு, 1984 இல் மைக்கல் ஹாரிங்டனின் கீழ் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் மூலம் விரிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் On the Edge (விளிம்பில்) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை இணைந்து எழுதினார், அதில் அவர் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் WRP ஐ அரசியல் குறுங்குழுக்கள் என்று அவதூறு செய்தார். ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளரும் DSA தலைவருமான டராக்கா லாரிமோர்-ஹால் (Daraka Larimore-Hall) அளித்த நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்டபடி, இது DSA உறுப்பினர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.

டராக்கா லாரிமோர்-ஹால் (இடமிருந்து இரண்டாவது) மாநிலக் கட்சித் தலைமையுடன் கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி மாநாட்டில். [Photo: Tim Prince (Twitter)]

பேர்ன்ஹாம், சாக்ட்மன், கொக்ரான் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து வெளியேறிய மற்ற விட்டோடிகளைப் போலவே, வொல்ஃபோர்த்தும் இறுதியாக நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகாமுக்குள் நகர்ந்தார். 1990 களில், அவர் “போருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடு” என்ற தலைப்பில் ஒரு மதிப்பிழந்த கட்டுரையை எழுதினார். அது சோசலிஸ்டுகள் ஒவ்வொரு மேற்கத்திய இராணுவ தலையீட்டையும் எதிர்க்கக்கூடாது என வாதிட்டது. பல முன்னாள்-இடதுகளுடன் சேர்ந்து, அவர் “மனித உரிமைகளை” பாதுகாப்பது என்று கூறிக்கொண்டு பால்கனில் அமெரிக்க குண்டுவீச்சுகளை ஆதரித்தார். இது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள 21 ஆம் நூற்றாண்டின் முடிவில்லாத போர்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் முக்கிய பிரச்சார நுட்பமாக மாறியுள்ளது.

மே 22, 1984 இல் எழுதப்பட்ட தொகுதி 7 க்கான முன்னுரையில், தோழர் நோர்த், DSA உடனான வொல்ஃபோர்த்தின் விரிவுரைகள் மற்றும் பெருகிய முறையில் அவரது வலதுசாரி அரசியல் பாதை குறித்து கருத்துரைத்தார்:

அத்தகைய ஒரு இயக்கம் வொல்ஃபோர்த்துக்கு அப்பாலும் நீண்டு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் சென்ற பாதைக்கான உந்துசக்தி உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியாகும். மேலும் அவரது அவமானகரமான தனிப்பட்ட தலைவிதியில் இயங்கியலின் முக்கியத்துவம் குறித்த ஆழமான படிப்பினை அடங்கியுள்ளது, அது வொல்ஃபோர்த்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், ட்ரொட்ஸ்கி ஒருமுறை பேர்ன்ஹாம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுபோல, அது அவர் மீது அதன் ஆதிக்கத்தை செலுத்துகின்றது. [40]

வொல்ஃபோர்த்துடனான உடைவின் படிப்பினைகள் இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளுக்கு மிகவும் பொருத்தமானவையும், மேலும் அவை சர்வதேச அளவில் காரியாளர்களால் உள்ளீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். கடைசி வார்த்தை இன்னும் எழுதப்படவில்லை, மேலும் இந்த காலகட்டம் முழுவதும் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் ICFI இன் பிரசித்தமான வரலாற்றை முன்னோக்கி கொண்டு வருவதற்கு பாரிய அளவிலான வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த கோடைகாலப் பள்ளியிலிருந்து தொடங்கி, 1970கள் மற்றும் 1980களில், வேர்க்கர்ஸ் லீக் மற்றும் ICFI இன் ஒவ்வொரு பிரிவின் வரலாறு பற்றிய ஒரு காப்பகத் திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இந்த தலைமுறை கட்சித் தலைவர்களின் உறுப்பினர்களின் அனுபவங்களையும், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் இந்த முக்கியமான திருப்புமுனையில் நமது கட்சியின் சாதனையையும் ஆவணப்படுத்த வேண்டும்.

பகுதி II: வேர்க்கர்ஸ் லீக்கும் 1974-1978இல் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திருப்பமும்

வொல்ஃபோர்த் விவகாரத்திலிருந்து எழுந்த திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆழப்படுத்துவது ஒருபோதும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலான வேலையில் இருந்து திசை திருப்புவதாக கருதப்படக்கூடாது. இது முழுமையின் ஒரு ஒருங்கிணைந்த, தீர்க்கமான பகுதியாக இருந்தது. லெனினுடன் இணைந்து நாம் பின்வருமாறு கூறலாம்: புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. வொல்ஃபோர்த் விவகாரம் வெளிப்படுத்தியதன் வெளிச்சத்தில், நாம் காக்கும் மரபியத்தில் தோழர் நோர்த் எழுதுகிறார்:

1953 இன் பிளவின் பாரிய வரலாற்றுத் தாக்கங்கள் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிரான அதையடுத்த போராட்டங்கள் முழுக் கட்சியாலும் மீள-உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த பலப்படுத்தப்பட்ட அடித்தளங்களின் மீது, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச முன்னணிக் கட்சியை கட்டமைக்கும் போராட்டத்தை நோக்கி கட்சி முன்னெப்போதையும் விட தீவிரமாகத் திரும்பியது. [41]

அல்லது, உலக பொருளாதார-அரசியல் நெருக்கடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரண ஓலமும் என்ற வேர்க்கர்ஸ் லீக்கின் 1978 ஆம் ஆண்டு முன்னோக்குகள் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளபடி:

அதிகாரத்திற்கான போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து தொழிலாள வர்க்கத்தினை நோக்கிய உண்மையான நோக்குநிலைக்கு இன்றியமையாத அடிப்படையான புரட்சிகர நடைமுறைக்கான அடித்தளம் என்னவெனில், 1953ல் இருந்து அனைத்துலகக் குழு கடந்து வந்த வரலாற்று அனுபவங்களின் முற்றுமுழுதான உள்ளீர்த்துக் கொள்ளல் ஆகும். திருத்தல்வாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இருந்து பெறப்பட்ட அனைத்துலகக் குழுவின் வரலாற்று வெற்றிகளில் கட்சியின் அரசியல் பணியின் ஒவ்வொரு அம்சத்தையும் விவரத்தையும் அடித்தளமாகக் கொண்ட போராட்டத்தில் மட்டுமே ட்ரொட்ஸ்கிச காரியாளர்களுக்கு பயிற்சியளிப்பது சாத்தியமாகும். [42]

1974-1978 வரையிலான காலகட்டம் முழுவதும், தொழிலாள வர்க்கத்தில் வேர்க்கர்ஸ் லீக்கின் தலையீடுகளின் அனைத்து அம்சங்களிலும் செய்யப்பட்ட வளர்ச்சிக்கு இந்த பதிவு சாட்சியமளிக்கிறது. இந்த விரிவுரையானது, மேற்கூறிய 1978 முன்னோக்குகள் தீர்மானத்தின் மீது முக்கியமான கவனம் செலுத்துகிறது. இது இந்த காலகட்டத்தின் உச்சக்கட்டத்தையும், வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் வேலையில் ஒரு பண்புரீதியான வளர்ச்சியையும் குறிக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தினை நோக்கிய நோக்குநிலை மற்றும் சோசலிச புரட்சிக்கான ஒரு மூலோபாயத்தினை தயார்செய்வது உட்பட, இந்த ஆண்டுகளில் வேர்க்கர்ஸ் லீக்கின் முழு வளர்ச்சியின் சுருக்கமாகும். இந்தக் காலகட்டத்தின் தயாரிப்பானது, 1980களில் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு வேர்க்கர்ஸ் லீக்கிற்கு அடித்தளம் அமைக்க உதவியது.

இந்த விரிவுரையின் இன்றியமையாத நோக்கம் தோழர்களை புலட்டினுக்கு அறிமுகப்படுத்துவதாகும். இது 1964 ஆம் ஆண்டில் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் ஸ்தாபகத்துடன் ஒரு மிமியோகிராப் (mimeograph) செய்யப்பட்ட செய்திமடலாக வெளியிடப்பட்டது, அது சர்வதேச சோசலிசத்தின் புலட்டின் என்று அழைக்கப்பட்டது. நவம்பர் 1966 இல் வேர்க்கர்ஸ் லீக் நிறுவப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 1966 இல் இது ஒரு அச்சுப்பதிப்பான செய்தித்தாள் ஆனது.

1993 ஆம் ஆண்டு வரை புலட்டின் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது, அது சர்வதேச தொழிலாளர் புலட்டின் என பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, அது முழு ICFI இன் கூடியளவான ஒத்துழைப்பை உள்ளடக்கியிருந்ததோடு, உலக சோசலிச வலைத் தளத்தின் உருவாக்கத்திற்கான உடனடி முன்னோடியாகவும் இருந்தது. 1974 முதல் 1987 வரை, புலட்டின் இரு வார இதழாகவும், மீதமுள்ள ஆண்டுகளில், வார இதழாகவும் வெளியிடப்பட்டது. அதில் பிரென்சா ஒப்ரேரா என்ற ஸ்பானிய மொழியிலான பக்கம் இருந்தது. இந்த தொகுப்புகளை இலத்திரனியல் மயமாக்கும் நோக்கில் சில வேலைகளைச் செய்துள்ளோம். 1964-1973 ஆண்டுகள் marxists.org இல் கிடைக்கின்றன. [43] முழு, ஒருங்கிணைந்த தொகுப்பையும் விரைவில் காரியாளர்களுக்கு கிடைக்கச் செய்வதை கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச சோசலிசத்தின் புலட்டின் தொகுதி. 1, எண். 1, செப்டம்பர் 14, 1964

புலட்டின் பக்கங்கள், சகாப்தத்தின் பல தொழிலாளர் போராட்டங்களுக்கு சாட்சியமளிக்கும் ஒப்பிடமுடியாத காப்பக ஆதாரமாக அமைகின்றன. வேர்க்கர்ஸ் லீக் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருப்பது போல் தோன்றியது, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் ஒரே நேரத்தில் நடந்துவரும் பெரிய வேலைநிறுத்தங்களில் தலையிட்டது, அத்துடன் சர்வதேச நிகழ்வுகள், மார்க்சிச தத்துவம், வரலாறு, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்து தொடர்ந்து வெளியிட்டது. ஆனால் தொழிலாள வர்க்கத்துடனான புலட்டின் இன் ஈடுபாடு அவை பற்றிய உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டது. கட்சி தொழிலாள வர்க்கத்தில் தலையிட்டது. ஃபயர்பாக்கின் ஆய்வு பற்றி என்பதில் மார்க்ஸ் விளக்கியது போல, உலகத்தை மாற்றுவதற்கான போராட்டத்திற்கு வெளியே அதனைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. அதேபோல் புலட்டின் இல்லாமல் இந்த காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதும் சாத்தியமில்லை. இதனாலேயே தொழிலாளர் தொடர்பான அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டத்தை மிகக் குறைவாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

தொழிற் கட்சிக்கான கோரிக்கை

புலட்டின் பக்கங்களில் சான்றளிக்கப்பட்டபடி, வேர்க்கர்ஸ் லீக், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர மூலோபாயத்திற்காக தொடர்ந்து போராடியது. இந்த விரிவுரையின் மையமாக இருக்கும் தொழிற் கட்சி கோரிக்கை, அதிகாரத்திற்கான அந்த மூலோபாயத்திற்கான முக்கியத்துவத்தை வழங்கியது.

தொழிற் கட்சி கோரிக்கையானது 1930களின் பிற்பகுதியில் இருந்து அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும், கனன் மற்றும் கொயோகானில் SWP தலைமையுடன் ட்ரொட்ஸ்கியின் கலந்துரையாடல்களுக்கும் அடித்தளமாக இருந்தது. இதுவரையில் இல்லாத அளவுக்கு மிக முன்னேறிய அமெரிக்கப் புரட்சி பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, முதலாளித்துவம் பற்றிய அவரது உலக-வரலாற்று பகுப்பாய்விலிருந்து வெளிப்பட்டதே தவிர, குறிப்பிட்ட அமெரிக்க நிலைமைகளில் இருந்து அல்ல. பெரும் மந்தநிலையின் போது அமெரிக்க முதலாளித்துவத்தின் விரைவான வீழ்ச்சி தொழிலாளர்களை அரசியல் போராட்டத்தின் பாதையில் தள்ளும் என்று ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார். 1978 முன்னோக்குகள் ஆவணத்தில் விளக்கப்பட்டபடி, ட்ரொட்ஸ்கிக்கு, “தொழிற் கட்சிக்கான கோரிக்கை என்பது, கட்சியால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் ஒன்று அல்ல. இது அமெரிக்காவில் சமூகப் புரட்சிக்கான மூலோபாயத்தின் மூலக்கல்லாக இருந்தது.” [44]

ஜேம்ஸ் பி. கனன், 1890-1974

போருக்குப் பிந்தைய காலத்தில் முதலாளித்துவம் மறுஸ்திரப்படுவதற்கான முதல் அறிகுறிகளுக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் சில பகுதிகளை கனன் தனது 1946 ஆம் ஆண்டின் முக்கியமான அமெரிக்க ஆய்வறிக்கையில் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் SWP 1950 களில் தொழிற் கட்சிக்கான கோரிக்கையிலிருந்து விலகிச் சென்றது. 1954 அளவில், பகிரங்க கடிதத்திற்கு ஒரு வருடத்திற்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான இயக்கத்தால் ஒரு தொழிற் கட்சி கட்டப்படும், இது எப்படியோ தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சில கன்னைகளை அதை உருவாக்குவதற்கு அழைப்புவிட செய்யும் என்ற நிலைப்பாட்டுக்கு கனன் வந்தார். அவ்வாறு உருவாக்கப்பட்டவுடன், தொழிற் கட்சியானது SWP க்கு அது செயல்படக்கூடிய அரங்கை வழங்கும். இந்தக் கண்ணோட்டம் அதற்காக காத்திருப்பதைத் தவிர ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு வேறு எந்தப் பாத்திரத்தையும் விட்டு வைக்கவில்லை. 1960களின் முற்பகுதியில், பப்லோவாதத்தைத் தழுவியதன் மூலம், SWP தொழிற் கட்சிக்கான கோரிக்கையை முற்றிலுமாக கைவிட்டது.

1964 மற்றும் 1966 க்கு இடையில், நான்காம் அகிலத்திற்கான இளம் அமெரிக்கக் குழு SLL தலைமையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது, மேலும் அதன் வழிகாட்டுதலின் கீழ் தொழிற் கட்சிக்கான கோரிக்கை பற்றிய கலந்துரையாடல்களை புதுப்பிக்கத் தொடங்கியது. இது வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபக ஆவணத்தில் சக்திவாய்ந்த வெளிப்பாட்டைக் கண்டது, அது பின்வருமாறு குறிப்பிட்டது:

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியின் இந்தக் கட்டத்தில், நமது முக்கிய இடைமருவுக் கோரிக்கையானது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சியை, ஒரு தொழிற் கட்சியை உருவாக்குவதாக இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரப் போராட்டங்களுக்கு அப்பால் ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசியல் கருவிகளுக்கும் எதிரான ஒரு அடிப்படை அரசியல் போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் அவசியம் செல்ல வேண்டும் என்பதைக் காட்ட வேண்டும். இதனால் தொழிற் கட்சிக்கான கோரிக்கையானது அமெரிக்காவில் நமது அனைத்து வேலைகளையும் ஒன்றிணைக்கும் கோரிக்கையாக மாறுகிறது. இது தொழிலாள வர்க்க இளைஞர்கள் மத்தியில், தொழிற்சங்கங்களில், சிறுபான்மை மக்களிடையே மற்றும் போர் தொடர்பான கேள்வியைச் சுற்றி நமது பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகள் அனைத்திலும் ஊடுருவ வேண்டும்…

தொழிற் கட்சியை நோக்கிய இயக்கமானது, தொழிற்சங்க இயக்கத்திற்கு வெளியே ஆரம்பிக்க முடியும் என்றாலும், அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சக்தியாக வளர்ச்சியடைவதற்கு, முன்பு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்திற்குள் ஒரு அடித்தளத்தை உருவாக்க வேண்டும். மேலும், இத்தகைய இயக்கங்கள் ஒட்டுமொத்த வர்க்கத்தின் இயக்கமாகுவதற்காகப் போராடாவிட்டால், அதைக் கடந்துவரப் போராடுவதைக் காட்டிலும் தற்போதுள்ள முதலாளித்துவக் கட்சிகளுக்கிடையில் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் சாதித்துள்ள எந்த வர்க்க வேலைத்திட்டத்தையும் அவர்கள் இழக்க நேரிடும்.[45]

ஜெர்ரி ஹீலி, 1913-1989

இளம் அமெரிக்க ஆதரவுப் பிரிவை நோக்குநிலைப்படுத்துவதில் SLL ஆற்றிய தீர்க்கமான பங்கை இங்கே வலியுறுத்த வேண்டும். வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபக மாநாட்டிற்கு ஜெரி ஹீலியின் வாழ்த்துக்கள், 1966 இல் இருந்ததைப் போலவே இன்றும் அதே பலத்துடன் ஒலிக்கின்றன. ஹீலி பின்வருமாறு கூறினார்:

அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம் உலகில் மிகவும் சக்தி சக்திவாய்ந்ததாகும், இந்த வர்க்கத்திற்குள்தான் நீங்கள் உங்கள் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். இது மார்க்சிசத்தின் அடிப்படை கோட்பாடும், மேலும் இது அமெரிக்காவிற்குள் இருக்கும் நிலைமைகளுக்கு குறிப்பிடத்தக்க அவசரத்துடன் பொருந்தும் ஒன்றுமாகும். நமது காலத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்கப்போவது Black Power அமைப்போ அல்லது நாடு முழுவதும் பரவியுள்ள டஜன் கணக்கான அமைதி மற்றும் மனித உரிமைகள் இயக்கங்களோ அல்ல, மாறாக ஒரு புரட்சிகரக் கட்சியின் தலைமையிலான தொழிலாள வர்க்கமே [46]

தொழிற் கட்சிக்கான கோரிக்கையை ஒரு புத்திசாலித்தனமான கிளர்ச்சி தந்திரோபாயமாக கருதப்படக்கூடாது. இது அதிகாரத்திற்கான மூலோபாயமாகும். வேர்க்கர்ஸ் லீக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபிதமும் என்பதில் தோழர் நோர்த் எழுதியது போல், தொழிற் கட்சிக்கான கோரிக்கை “அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி பற்றிய திட்டவட்டமான மூலோபாய கருத்தாக்கத்தை உள்ளடக்கியது”. மேலும், வேறுபட்ட காலகட்டத்தினது என்பதையும் நாம் சேர்க்க வேண்டும்.

1966ல், வேர்க்கர்ஸ் லீக் தொழிற் கட்சி கோரிக்கையை புதுப்பித்தபோது, தொழிற்சங்கங்கள் இன்னும் தொழிலாள வர்க்கத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையை கொண்டிருந்தன. இது, 1945-1946 இன் பெரும் வேலைநிறுத்த அலைக்கு இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னரும், 1934-1938 இன் வெடிக்கும் தொழில்துறை போராட்டங்களுக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னருமாகும். ஆலைகள், சுரங்கங்கள், கப்பல்துறைகள் மற்றும் ஆலைகளில் அந்த போராட்டங்களின் முன்னாள் போராளிகள் இன்னும் அங்கு இருந்ததுடன், தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுடன் தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்தனர். கடந்த காலத்தின் மாபெரும் போராட்டங்களும், தொழிலாள வர்க்கம் செய்த பெரும் முன்னேற்றங்களும் மிகவும் உயிர் வாழும் நினைவுகளாக அப்போதும் இருந்தன. நாங்கள் அவ்வாறான ஒரு காலகட்டத்தைப் பற்றி பேசுகிறோம். தோழர் நோர்த்திலிருந்து மீண்டும் மேற்கோள் காட்டுவோமாயின், அதில்

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை எதிர்கொண்ட முக்கிய மூலோபாய பிரச்சனை... பரந்த ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளால் கொடுக்கப்பட்ட தீவிரமான மற்றும் போர்க்குணமிக்க விசுவாசமாகும். எனவே நமது பிரிவுகளின் அரசியல் செயல்பாடு, வேறுபட்ட தந்திரோபாயங்கள் இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெரிய புதிய புரட்சிகர மறுநோக்குநிலையின் தொடக்கப் புள்ளியானது, இந்த அமைப்புகளின் அணிகளுக்குள் உள்ள மிகவும் வர்க்க-நனவுள்ள மற்றும் அரசியல்ரீதியாக-செயல்படும் கூறுகள் மத்தியில் ஒரு தீவிரமயமாக்கல் வடிவத்தில் நிகழும் என்று கருதப்பட்டது. அந்த இயக்கத்திலிருந்து, அனைத்துலகக் குழுவின் பிரிவுகள், சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தின் மிகவும் சமரசமற்ற எதிர்ப்பாளர்களாக ஒரு ஊக்கமூட்டும் பாத்திரத்தை வகிக்கும், ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியை ஸ்தாபிப்பதற்கான உண்மையான சாத்தியக்கூறுகள் எழும். எங்கள் தந்திரோபாயங்கள் இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்தன. இந்த மூலோபாய நோக்குநிலையானது, அவர்களுக்கு புரட்சிகர ஆற்றல் இருப்பதாகக் கூறி அதிகாரத்துவ தலைவர்களை நோக்கி தங்கள் அமைப்புகளை தகவமைத்த பப்லோவாதிகளின் நோக்குநிலைக்கு முற்றிலும் எதிரானது. ஒரு விதத்தில், இந்த வெகுஜன இயக்கங்களை கீழே இருந்து புரட்சிகரமாக்க நாங்கள் முயன்றோம், அதே நேரத்தில் அவர்கள் மேலே இருந்து அதிகாரத்துவங்கள் வழியாக செல்வாக்கு செலுத்த முயன்றனர்.[47]

தொழிலாள வர்க்கத்தினுள் தலையீடுகள்: TUALP மற்றும் நிலக்கரி வயல்கள்

1969-1971 இன் தீவிர வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, குறிப்பாக எஃகு தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. வேலைநிறுத்தத்தின் அச்சுறுத்தலுடன் மட்டுமே ஊதிய உயர்வை வென்றனர். 1971 இல் நிக்சன் 90 நாள் ஊதிய முடக்கத்தை விதித்து, AFL-CIO தலைவர் ஜோர்ஜ் மீனியை உள்ளடக்கிய ஊதிய வாரியத்தை உருவாக்கினார். வேர்க்கர்ஸ் லீக், மீனி அக்குழுவிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரி, தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தைத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு முதலில் புலட்டினில் வெளியிடப்பட்ட ஒரு தொழிற் கட்சிக்கான வாதம் என்ற துண்டுப்பிரசுரம் [48] 75,000 பிரதிகள் விற்பனையானது.

அந்தக் காலகட்டத்தின் மற்றொரு முக்கியமான துண்டுப் பிரசுரமான தோழர் நோர்த்தின், வாலஸ் உண்மையில் எங்கே நிற்கிறார் [49] என்பது தொழில்துறைத் தொழிலாளர்கள் மத்தியில் வாலஸின் வலதுசாரி ஜனரஞ்சக செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிற் கட்சியைக் கட்டியெழுப்புவது முன்னோக்கி செல்லும் வழி என்று வாதிட்டது. இந்த துண்டுப்பிரசுரங்கள் தொழிற் கட்சிக்கான தொழிற்சங்கக் கூட்டணியை (Trade Union Alliance for a Labor Party - TUALP) அமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்தன. வாலஸ் தொடர்பான துண்டுப்பிரசுரத்தைப் படித்த பின்னர் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு வென்றெடுத்த ஒரு மிக முக்கியமான தொழிலாளி தோழர், ஓஹியோவின் டேட்டனில் உள்ள GM தொழிலாளியான ஜிம் லாரன்ஸ் ஆவார். ஜிம் உடனான நேர்காணலின் இணைப்பு இங்கே உள்ளது.

ஒரு தொழிற் கட்சிக்கான வாதம் SLL மற்றும் ஹீலியின் தலையீட்டால் உந்துதல் பெற்றது, இந்த கோரிக்கையில் இருந்து விலகிச் செல்லும் அல்லது அவரது சிறைக் கடிதம் எழுதும் பிரச்சாரம் போன்ற பிற நடவடிக்கைகளில் ஈடுபடும் வொல்ஃபோர்த்தின் போக்கிற்கு எதிராக. அத்துண்டுப் பிரசுரம் பின்வருமாறு கூறியது:

ஒரு தொழிலாளர் மாநாட்டை நடத்தி, அத்தகைய கட்சியைக் கட்டமைக்குமாறு நாங்கள் தொழிலாளர் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். ஆனால் அத்தகைய பணியை மேற்கொள்ள நாங்கள் தற்போதைய தொழிலாளர் அதிகாரத்துவங்களை நம்பவில்லை. இதற்கு சாமானியத் தொழிலாளர்களிலிருந்து அந்நியப்பட்ட ஒரு தொழிலாளர் அதிகாரத்துவத்தை உருவாக்கியுள்ள முதலாளித்துவத்துடனான அனைத்து சமரசங்களில் இருந்தும் முறித்துக் கொள்ள வேண்டியது அவசியமானது. இந்த அதிகாரத்துவம் தொழிலாளர்களை விட முதலாளிகளைப் போலவே வாழ்கிறது. தொழிலாளர் அதிகாரத்துவம் அத்தகைய உடைவை இறுதிவரை எதிர்க்கும். எனவே இந்தப் பணியை நிறைவேற்ற போராடும் தொழிற்சங்கங்களில் புதிய தலைமையை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இதன் முதல் கட்டமாக, ஒரு தொழிற் கட்சிக்கு ஆதரவான அனைத்து தொழிற்சங்கவாதிகளும் ஒன்றிணைந்து அத்தகைய கட்சிக்காக போராட தொழிற்சங்கங்களில் ஒரு அமைப்பை உருவாக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். [50]

TUALP இன் ஸ்தாபக மாநாடு 1972 இலையுதிர்காலத்தில் சிகாகோவில் நடைபெற்றதுடன், “தொழில்துறையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய பிரிவிலிருந்தும் தொழிலாளர்கள் அதில் கலந்து கொண்டனர்.” [51] TUALP ஐ உருவாக்க தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பெரிய தலையீடு இருந்தது. இந்த புகைப்பட காட்சிவில்லைகளில் 1972 மாநாட்டை ஆதரிக்கும் ஒரு மனு IAM உறுப்பினர்களிடையே புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம். 1975 மாநாடுகளை ஆதரிக்கும் தொழிலாளர்களுடன் பல நேர்காணல்கள் இருந்தன. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகை ஜூலி கிறிஸ்டியின் இதுபோன்ற ஒரு நேர்காணல் ஒன்று இங்கே உள்ளது.

நடிகை ஜூலி கிறிஸ்டி மார்ச் 14, 1975 இல் புலட்டின் பத்திரிகையில் பேட்டி காணப்பட்டார்

இரண்டாவது மாநாடு செயின்ட் லூயிஸில் பிப்ரவரி 1973 இல் நடைபெற்றது. மிகப்பெரிய TUALP மாநாடு டெட்ராய்டில் ஏப்ரல் 12 மற்றும் 13, 1975 இல் கூடியது. இதில் 325க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 20, 1975 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு TUALP கூட்டம் நடைபெற்றது. இதில் 65 பிரதிநிதிகள் கப்பல்துறை தொழிலாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 1975 இன் இரண்டு மாநாடுகளில் அனைத்து முக்கிய அமெரிக்க தொழிற்துறைகளும் மற்றும் ஒரு டஜன் தொழிற்சங்கங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. டெட்ராய்ட் TUALP மாநாட்டிலிருந்து வெளிவந்த தீர்மானம் குறித்து புலட்டின் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது:

325 தொழிற்சங்கவாதிகள், வேலையற்ற தொழிலாளர்கள் மற்றும் கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு பிராந்தியங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வேர்க்கர்ஸ் லீக்கையும் அதன் தொழில்துறை பிரிவான TUALP ஐயும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகள், வேலைகள், கௌரவமான வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கும் சோசலிச கொள்கைகளின் அடித்தளத்தில் கட்டியெழுப்ப உறுதியளித்தனர். ஃபோர்ட்-ராக்ஃபெல்லர் அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கும் தொழிற் கட்சியை கட்டியெழுப்புவதற்கும் போராட ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக அனைத்து தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அம்மாநாடு அழைப்பு விடுத்தது... [52]

தொழிற் கட்சி பற்றிய கோரிக்கையிலும் TUALP இலும் பிரதிபலித்த தத்துவார்த்த மற்றும் அமைப்புரீதியான வளர்ச்சிகள் கட்சியின் சர்வதேச கண்ணோட்டத்தில் இருந்தும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகளிடையே தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமும் வெளிப்பட்டன. எண்ணிலடங்கா வேர்க்கர்ஸ் லீக் தலையீடுகளை ஒருவர் உதாரணமாகக் கூற முடியும். உண்மையில் வளமான விஷயங்கள் நிறைய இருக்கிறது. இந்த புகைப்பட காட்சிவில்லைகள் காண்பிப்பது போல, புலட்டினின் தொழிலாளர் போராட்டங்களின் —நேர்காணல்கள், புகைப்படங்கள், தலையீடுகள்— விரிவானவை. அது இன்றும் நமக்கு முன்னுதாரணமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக இருந்த நிலக்கரி தொழில் பற்றி இங்கு நாம் கவனம் செலுத்துவோம். நாங்கள் அறிக்கையைத் தொடரும்போது, புலட்டினிலிருந்து எங்கள் தலையீட்டின் மாதிரியை புகைப்பட காட்சிவில்லைகளின் வடிவத்தில் முன்வைப்போம்.

புலட்டின் 1970 களில் தொழிலாளர் போராட்டங்களில் தலையீடு பற்றிய ஒரு மாதிரி

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் 1890களில் இருந்து பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்கப் பிரிவாக இருந்து வருகின்றனர். 1920 கள் மற்றும் 1930களில், ஐக்கிய சுரங்க தொழிலாளர்கள் (UMW) மற்றும் நிலக்கரி ஆபரேட்டர்களுக்கு இடையேயும், அதேபோல் கிளர்ச்சிகரமான சாமானிய சுரங்கத் தொழிலாளர்களுக்கும் UMW க்கு இடையேயும் “சுரங்கப் போர்கள்” என்று அறியப்பட்டவை பல மாநிலங்களில் வெடித்தன.

தெற்கு இல்லினோய் மற்றும் மேற்கு வேர்ஜீனியா போன்ற “பின்தங்கிய” இடங்களில் கூட நிலக்கரி சுரங்கங்களில் சோசலிசம் வரலாற்று செல்வாக்கைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிற்துறை வீழ்ச்சியடைந்தது. நீண்டகால UMW தலைவர் ஜோன் எல். லூயிஸ் ஒருமுறை கூறியது போல், பிரச்சனை என்னவென்றால், அங்கு அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அதிகமான சுரங்கங்கள் இருந்தன. ஆனால் 1960 களின் பொருளாதார விரிவாக்கம் மற்றும் 1970 களின் எண்ணெய் அதிர்ச்சிகள் நிலக்கீழான நிலக்கரிக்கான தேவையை மீண்டும் அதிகரித்தன.

நிலக்கரி சுரங்கங்கள் 1970களில் ஒரு தலைமுறை இளம் தொழிலாளர்களை ஈர்த்தது. அவர்களில் பலர் முன்னாள் வியட்நாம் போரின் படையினராவர். அந்த தசாப்தத்தில், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக தங்கள் இடத்தைப் பிடித்தனர். திடீர் வேலைநிறுத்தங்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோரால் பொங்கி எழுந்தன. இளம் சுரங்கத் தொழிலாளர்கள், தங்கள் சக்தியை உணர்ந்து, ஊழல் நிறைந்த UMW அதிகாரத்துவத்தால் பேரம்பேசப்பட்ட தேசிய மட்டத்திலான ஒப்பந்தங்களை மீண்டும் மீண்டும் மீறினர்.

நிலக்கரி வயல்களில் வர்க்கப் போராட்டம் பற்றிய தகவல், டேவிட் நோர்த் எழுதிய 1974 தொடர்

புலட்டினின் தொழிலாளர் பகுதியின் அப்போதைய ஆசிரியரான டேவிட் நோர்த், 1970களின் முற்பகுதியில் நிலக்கரி வயல்களில் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தார். 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் கென்டக்கியின் ஹார்லன் கவுண்டியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வெடிக்கும் போராட்டங்களின் போது வேர்க்கர்ஸ் லீக் சாமானிய தொழிலாளர்களிடையே தலையிட்டது. மேலும் ஒரு தசாப்தத்தில், புலட்டின் மேற்கு வேர்ஜீனியா, வேர்ஜீனியா, கென்டக்கி, ஓஹியோ, பென்சில்வேனியா மற்றும் இல்லினோய், எடுத்துக்காட்டாக “வெல்ச், மேற்கு வேர்ஜீனியா” ஆகிய இடங்களைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்களுடன் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எண்ணற்ற நேர்காணல்களையும் தயாரித்து வெளியிட்டது.

ரொம் ஹீனெஹன் என்ற இளம் மற்றும் துணிச்சலான தோழர் இந்த வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிருபர்களில் ஒருவராவர். 1970 களின் நடுப்பகுதியில் நிலக்கரி வயல்களில் இருந்து அனுப்பப்பட்ட செய்திகளைப் படிக்கும் போது, 1977ல் அவரது அரசியல் படுகொலையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எதனை இழந்தது என்பதை வாசகருக்கு நினைவூட்டுகிறது. தோழர் ரொம் கொலை செய்யப்பட்ட ஆண்டு நினைவு நாளில் அவருக்கான அஞ்சலி பின்வருமாறு குறிப்பிட்டது:

சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் அவரது பணி அரசியல் ரீதியாக புதிய காற்றின் சுவாசமாக இருந்தது. மேற்கு வேர்ஜீனியா, கென்டக்கி, ஓஹியோ மற்றும் பென்சில்வேனியாவின் நிலக்கரி வயல்களுக்கு அவரது தொடர்ச்சியான பயணங்கள் மூலம் அவர் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் மீது அழிக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர்கள் கட்சியின் கொள்கைகளுக்காக, அவர் போராடிய உறுதிப்பாட்டையும், நம்பிக்கையையும் மதித்தனர். [53]

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை காரணமாக “கொடிய விளைவுகள்” ஏற்படும் என ஜோசப் ஹேன்சன் எச்சரித்ததையடுத்து, 1977ல், வேர்க்கர்ஸ் லீக் அரசியல் குழுவின் உறுப்பினரான 26 வயதான ரொம் ஹீனெஹன் கொல்லப்பட்டார்.

1974 இல் நிலக்கரி சுரங்கங்களில் ஆழப்படுத்தும் பணி, வொல்ஃபோர்த்தின் விட்டோடலுடன் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்தது. வொல்ஃபோர்த், தனது பங்கிற்கு, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை கைவிட்டார். ஒரு கலந்துரையாடலில், தோழர் டேவிட், என்னிடமும் இவானிடமும் வொல்ஃபோர்த் அப்பலாச்சியாவில் உள்ள வேலையை குறைத்து மதிப்பிட்டதாகவும், டேவிட் “நிலக்கரி சுரங்கங்களில் சுற்றி குதிக்கின்றார்” என்று குற்றம் சாட்டியதாக கூறினார். நவம்பர் 1974 இல் அவர் எழுதியது போல, சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் நேரத்தை வீணடிப்பதாக வொல்ஃபோர்த் உண்மையில் நினைத்தார்:

ஐக்கிய அமெரிக்காவில் சுரங்கத் தொழிலின் தன்மை, கட்சி வழியில் ஆக்கபூர்வமாக தலையிடும் நமது திறனை கணிசமாகக் மட்டுப்படுத்துகிறது. சுரங்கங்கள் நாட்டின் கலாச்சார ரீதியாக பின்தங்கிய பகுதியிலும், எந்த நகரங்களிலிருந்தும் வெகுதொலைவிலும் அமைந்துள்ளன. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியின் இந்த கட்டத்தில், கிராமப்புற சுரங்கப் பகுதிகளில் உள்ள சிறிய நகரங்களில் குறிப்பிடத்தக்க கட்சிக் கிளைகளை உருவாக்குவது சாத்தியமில்லை.[54] என அவர் குறிப்பிட்டார்.

இது, பல தசாப்தங்களில் சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்களின் மிகப்பெரிய வெடிப்புக்கு மத்தியில்! கூறப்பட்டதாகும்

UAW மற்றும் Teamsters தொழிற்சங்கங்களில் முறையே ஷான் ஃபைன் மற்றும் சீன் ஓ’பிரைன் ஆகியோரை “சீர்திருத்தவாதிகள்” என்று போலி-இடதுகள் சமீபத்தில் பதவி உயர்வு அளித்ததைக் கருத்தில் கொள்கையில், வொல்ஃபோர்த்தின் விமர்சனத்தின் மற்றொரு குறிப்பு விஷேட கவனத்திற்குரியது. UMW இன் முற்போக்கான தலைவர் என்று கூறப்பட்ட அர்னோல்ட் மில்லரை மிகவும் விமர்சித்ததற்காக வொல்ஃபோர்த் வேர்க்கர்ஸ் லீக்கைத் தாக்கினார். “மில்லர் ஊழல்மிக்க முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் டோனி போயில் தலைமைக்கு எதிராக சாமானிய சுரங்கத் தொழிலாளர்களின் பாரிய இயக்கத்தை வழிநடத்தினார்,” என்று அவர் எழுதினார். வொல்ஃபோர்த்தின் நிலைப்பாடு என்னவென்றால், மில்லரை அம்பலப்படுத்துவதன் மூலம், 1969 இல் தொழிற்சங்க போட்டியாளரான ஜோக் யப்லோன்ஸ்கியின் கொலைக்கு பொறுப்பான முன்னாள் UMW தலைவர் டோனி போயிலுடன் வேர்க்கர்ஸ் லீக் கூட்டாக இருந்தது என்பதாகும்.

ரிம் வோல்ஃபோர்த், 1933-2019

வொல்ஃபோர்த்தை எது விட்டோடச் செய்தது என்ற பிரசுரத்தில் வேர்க்கர்ஸ் லீக் பின்வருமாறு பதிலளித்தது:

மில்லர் இந்த இயக்கத்தை வழிநடத்தவில்லை. ஆனால் அதை அரசாங்கத்தின் கரங்களில் திசைதிருப்புவதற்காக கைப்பற்றினார். அமெரிக்க தொழிற்சங்கங்களின் தலைமை, “முதலாளித்துவ வர்க்கத்தை விட பாட்டாளி வர்க்கத்தை குறைவாகவே பிரதிபலிக்கிறது” என ட்ரொட்ஸ்கி விளக்கியபோது நாங்கள் அவருடன் உடன்படுகிறோம். நாங்கள் மில்லர் அல்லது போய்லை நோக்கியல்லாது, தங்கள் அடிப்படை உரிமைகளைக் பாதுகாக்கப் போராடத் தள்ளப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களை நோக்கியே நோக்குநிலை கொண்டிருக்கின்றோம். [55].

சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களுடன் ஒட்டிக்கொள்வதன் மூலம் தொழிற்சங்க எந்திரத்திற்குள் தமக்கு ஒரு “இடத்தை” தேடும் முழு தீவிர நடுத்தர வர்க்க போக்கினரது நிலைப்பாட்டுடன் வொல்ஃபோர்த்தின் நிலைப்பாடு பொதுவானதாக உள்ளது. அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இதன் இறுதி முடிவு, நேற்றைய நடுத்தர வர்க்க தீவிரவாதிகள் இன்றைய அதிகாரத்துவவாதிகள் என்பதுதான். ஒரு ஜனநாயக தொழிற்சங்கத்திற்காக, தொழிலாளர் குறிப்பு (Labor Notes) மற்றும் ரீம்ஸ்ரெர்கள் (Teamsters) உடனும் அதேபோல் வொல்ஃபோர்த்தின் முன்னாள் நண்பி நான்சி ஃபீல்ட்ஸ் உடனும் நாங்கள் இதைப் பார்க்கிறோம், நான்சி ஃபீல்ட்ஸ் வேர்க்கர்ஸ் லீக்கையும் பின்னர் SWP ஐயும் விட்டு வெளியேறிய பின்னர், விரைவாக AFL-CIO இன் நிறைவேற்றுக் குழுவிற்கு உயர்ந்தார்.

1978 முன்னோக்குகள் தீர்மானம்: உலகப் பொருளாதார-அரசியல் நெருக்கடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரண ஓலமும்

வேர்க்கர்ஸ் லீக் 1970களின் மத்தியில் தயாரிக்கப்பட்டிருந்த ஆளும் வர்க்க எதிர்த்தாக்குதலை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து தொழிலாளர்களை தொடர்ச்சியாக எச்சரித்தது. அது தாட்சர் மற்றும் ரீகனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருந்தது. ட்ரொட்ஸ்கி மிகவும் முன்னரே கணித்திருந்தபடி, அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியானது, தொழிலாளர்களுக்கு அரசியல் போராட்டத்தின் பாதையில் செல்வதற்கான புறநிலைத் தேவையை முன்வைக்கும்.

ஜூலை 12, 1974 அன்று, “தொழிற் கட்சியும் அமெரிக்க தொழிலாள வர்க்கமும்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையில், புலட்டின் மிகவும் தொலைநோக்குடன் எழுதியது:

ஊதியத்தின் மீதான தாக்குதலுக்கான எதிர்ப்பு தொழிலாள வர்க்க இயக்கத்தின் வெளிப்பாடு என்றவகையில் மிக முக்கியமானது என்றாலும், முதலாளித்துவத் தாக்குதல்களை எதிர்கொள்ள போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் போதுமானது என்ற மாயையையும் ஊக்குவிக்கிறது. ஆனால் இந்த வேலைநிறுத்தங்கள் பொருளாதார நெருக்கடியை ஆழமாக்கும், ஏனெனில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பானது முதலாளிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தவும், உண்மையில் தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் அழிக்க முயலவும் அவர்களை நிர்ப்பந்திக்கின்றது.[56]

முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியை வேர்க்கர்ஸ் லீக் முழுமையாக ஆய்வு செய்தது. வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியும், வாட்டர்கேட்டிற்குப் பின்னர் நிக்சனின் இராஜினாமாவும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்பட்டது என்பதைக் குறிக்கவில்லை என அது எச்சரித்தது. தொழிலாள வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக வெகுஜன வேலையின்மையை ஊக்குவிப்பதை புலட்டின் பக்கங்கள் பகுப்பாய்வு செய்தன. இது உலகம் முழுவதும் எதிர்ப்புரட்சிகர வன்முறைகள் பரவியிருப்பதை அம்பலப்படுத்தியது.

எரிக் உரையாற்றவிருக்கும் பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மதிப்பீடான தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசாங்க உளவு குறித்து புலட்டின் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருந்தது. இது 1970களின் மத்தியில் வேலைநிறுத்த மறியல் போராட்டங்கள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையை ஊக்குவிப்பது குறித்து அது தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பல எடுத்துக்காட்டுகள் உள்ளபோதிலும், மிக முக்கியமான ஒன்றான கேரி டைலர் பிரச்சாரத்தை சுருக்கமாக சுட்டிக்காட்டுகிறேன்.

WSWS இல் கேரி டைலர் பற்றிய சமீபத்திய அறிக்கையில் தோழர்கள் பார்த்தது போல, கொடூரமான இனவெறி மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நீதித்துறை அமைப்பால் கட்டமைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்த இளைஞரைப் பாதுகாப்பது, நமது கட்சியின் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சாரமாக இருந்தது. இது 700 தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஈர்த்த 1976 இல் டெட்ராய்ட் மற்றும் ஹார்லெமில் நடந்த இரண்டு மாநாடுகளையும் உள்ளடக்கியது. இந்த பிரச்சாரம், வேர்க்கர்ஸ் லீக்கின் இளைஞர் அமைப்பான இளம் சோசலிஸ்டுகளை (YS) தொழிலாள வர்க்கத்தை நோக்கி வழிநடத்தியது. இளம் சோசலிஸ்டுகள் டைலரின் பாதுகாப்பிற்காக 100,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களை சேகரித்ததுடன், அத்துடன் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்றது. கேரி டைலரின் சோடிக்கப்பட்ட வழக்கு என்ற துண்டுப் பிரசுரம் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டது. [57]

கேரி டைலருக்கான பிரச்சாரத்தின் ஊடாகத்தான் வேர்க்கர்ஸ் லீக் நியூயோர்க் நகர போக்குவரத்து தொழிலாளி எட் வின் ஐ சந்தித்தது, அவர் ஜிம் க்ரோ தெற்கில் பிறந்து வளர்ந்தார். தோழர் பிரெட் மஸெலிஸ், எட் வின் இன் 25 வது இறந்த ஆண்டு நிறைவு குறித்த கட்டுரையில், “எட் வின் ஐ வேர்க்கர்ஸ் லீக்கிற்கு வென்றெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்” ஹீனெஹன் என்று குறிப்பிட்டார். எட் வின் 1976 இன் தொடக்கத்தில் வேர்க்கர்ஸ் லீக்கில் இணைந்தார்.

எட் வின், 1937-1995

ஹீனெஹனின் படுகொலைக்குப் பின்னர், கொலையாளிகளை விசாரணைக்குக் கொண்டுவர ஆயிரக்கணக்கான நியூ யோர்க் நகர போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஆதரவை எட் வின் பெற்றார். 1977 டிசம்பரில், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிற் கட்சியைக் கட்டமைக்க அழைப்பு விடுக்கும் வேலைத்திட்டத்தில் போட்டியிட்டு, எட் வின் நியூ யோர்க்கில் உள்ள TWU லோக்கல் 100 இன் வாரியத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1980 நியூ யோர்க் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில், போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் TWU அதிகாரத்துவத்தின் முயற்சிகளை எதிர்ப்பதில் எட் வின் முக்கிய பங்கு வகித்தார்.

ஆளும் வர்க்கத்தின் எதிர் தாக்குதலின் இந்த பின்னணியில்தான், வேர்க்கஸ் லீக் தொழிற் கட்சிக்கான கோரிக்கையைச் செம்மைப்படுத்தி அபிவிருத்தி செய்தது. அது சீர்திருத்தவாத கருத்தாக்கங்களுக்கு எதிராக வேறுபடுத்திக்காட்டும் கூர்மையான எல்லைகளை வரைந்தது. தொழிற் கட்சியை கட்டியெழுப்பும் பணியை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படுவதை அது வெளிப்படையாக எதிர்த்தது. தோழர் நோர்த் எழுதியது போல்:

தொழிற் கட்சிக்கான போராட்டத்திற்கும், ஒரு புரட்சிகரக் கட்சியாக வேர்க்கர்ஸ் லீக்கின் வளர்ச்சிக்கும் இடையிலான உறவை இன்னும் துல்லியமாக உருவாக்க கட்சி முயற்சித்தது. தொழிற் கட்சிக்கான கோரிக்கையால் ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்குவதற்கான போராட்டம் அரசியல்ரீதியாக தெளிவற்ற தன்மையைக் கொண்ட குழப்பமடையும் அபாயம் இருப்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். மற்றொரு தொழிலாள வர்க்கக் கட்சியை அமைப்பதற்கான பொதுவான கோரிக்கையில் புரட்சிகர இயக்கத்தின் சுயாதீனமான பணிகள் மறைந்துபோகலாம் என்ற தொடர்ச்சியான ஆபத்து இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். மேலும், தொழிற் கட்சிக்கான அழைப்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு “கோரிக்கையாக” வடிவமைக்கப்பட்ட விதம், இந்த அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளுக்கு வேர்க்கர்ஸ் லீக்கை அடிபணியச் செய்யும் அபாயத்தையும் அதனுடன் கொண்டிருந்தது. [58]

1978 முன்னோக்குகள் ஆவணத்தின் வளர்ச்சி நவம்பர் 1975 மற்றும் ஜனவரி 1977 ஆவணங்களில் முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. 1975 தீர்மானம் கூறியது:

வேர்க்கர்ஸ் லீக், அதிகாரத்திற்கான போராட்டம் மற்றும் வெகுஜன புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான நிலைப்பாட்டில் இருந்து தொழிற் கட்சிக்காக போராடுகிறது. தொழிற் கட்சி என்பது அதிகாரத்திற்கான போராட்டத்திற்கான தயாரிப்பில் தொழிலாள வர்க்கம் எடுக்க வேண்டிய அவசியமான முதல் படியாகும். ஆனால் அது ஒருவித பொது நிவாரணியாகவோ அல்லது புரட்சிகரக் கட்சிக்கு மாற்றீடாகவோ ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது. [59]

1977 ஆம் ஆண்டின் முன்னோக்கு தீர்மானம் இதை இவ்வாறு கூறுகிறது:

தொழிற் கட்சிக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வேர்க்கர்ஸ் லீக்கை கட்டியெழுப்புவதும், வெகுஜன புரட்சிகர கட்சியாக மாற்றுவதும்தான் தீர்க்கமான பிரச்சினை என்பதை தோழர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இந்த நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே நாங்கள் தொழிற் கட்சிக்காக போராடுகிறோம்.[60]

1977-1978 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்துடனான கட்சியின் உறுதிப்பாட்டிலும், தொழிற் கட்சிக்கான கோரிக்கையின் வளர்ச்சியிலும் ஒரு திருப்புமுனையை குறித்தது. டிசம்பர் 6, 1977 இல் தொடங்கி மார்ச் 19, 1978 இல் முடிவடைந்த 111 நாள் போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியை நிரூபித்தது. சுரங்கத் தொழிலாளர்கள், ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்கு திரும்புவதற்கான ராஃப்ட்-ஹார்ட்லி என்றழைக்கப்பட்ட கட்டளையை மீறினர். “ராஃப்ட் சுரங்கத்திற்கு செல்லலாம், ஹார்ட்லி தோண்ட முடியும் மற்றும் கார்ட்டர் அதை தள்ள முடியும்,” என சுரங்கத் தொழிலாளர்கள் கூறினார். அல்லது, அவர்கள் கூறியது போல், “கார்ட்டர் தனது கட்டளையை நிறைவேற்றியுள்ளார். இப்போது அவர் இங்கே கென்டக்கிக்கு வந்து அதைச் செயல்படுத்தட்டும்”.

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரை மீறி, புலட்டின் நகல்களை கையில் வைத்திருந்தனர்.

வேர்க்கர்ஸ் லீக்கின் செல்வாக்கு பாரியளவில் இருந்தது. கசிந்த தற்காலிக ஒப்பந்தத்தை புலட்டின் வெளியிட்டதால், வேலைநிறுத்தத்தின் போது UMW காட்டிக்கொடுக்க மேற்கொண்ட ஒரு முயற்சி தோல்வியடைந்தது. அடுத்த நாள் ஆவேசமடைந்த ஜிம்மி கார்ட்டர், ஓவல் அலுவலகத்தில் புலட்டினை அசைத்துக்காட்டி, “இவர்கள் யார்?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. ஈரான் மற்றும் நிகரகுவாவில் அமெரிக்காவின் வாடிக்கையாளர் நாடுகளின் புரட்சிகள் மற்றும் வீழ்ச்சிகளைப் போலவே கார்ட்டரை சுரங்கத் தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீறியது, அவரது நிர்வாகத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. ஆளும் வர்க்கம் கார்ட்டர் மீதான நம்பிக்கையை இழந்தது.

ஆனால் சுரங்கத் தொழிலாளர்கள் கார்ட்டரை தோற்கடித்தாலும், அவர்கள் வெற்றி பெறவில்லை. ஒரு விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தத்தை UMW திணித்ததால் தோல்வியானது வெற்றியை கைகளில் இருந்து பறித்துக்கொண்டது.

கட்சியின் விரிவான தலையீடு ஏப்ரல் 1978ல் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் பாடங்கள் என்ற துண்டுப் பிரசுரத்தில் உச்சத்தை எட்டியது. இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையாக இருந்ததுடன், இது முற்றிலும் சரியானது என்று நிரூபித்தது:

சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் அடிப்படைப் பாடம் தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான தேவையாகும். இந்த சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செழிப்புக்காலத்தின் அடிப்படையிலான வர்க்க சமரசத்தின் முழு காலகட்டத்திற்குமான முடிவையும், மிகவும் வெடிக்கும் வர்க்க மோதலின் ஒரு காலகட்டத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. … வாழ்க்கைத் தரம், தொழிற்சங்க உரிமைகள், மருத்துவம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் ஆகிய 1930 களில் இருந்து தொழிலாளர்களால் பெறப்பட்ட ஒவ்வொரு தேட்டமும் இந்த அமைப்பை இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்ட போராட்டத்திற்கு வெளியே இன்று பாதுகாக்க முடியாது என்பதை இது நிரூபிக்கிறது. அடிப்படையில், இதன் பொருள் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை தனது கைகளில் எடுக்க போராட வேண்டும். ஆனால் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு புரட்சிகர தலைமையை கட்டமைத்து, பயிற்சியளிக்காமல் இந்த போராட்டத்தில் ஒரு படி கூட முன்னேற முடியாது. [61]

நிலக்கரி வேலைநிறுத்தம் பற்றிய அதன் பகுப்பாய்வில் எடுத்துக்காட்டப்பட்ட, உலக அளவில் வர்க்க உறவுகளின் மாற்றம் தொடர்பான வேர்க்கர்ஸ் லீக்கின் புரிதலானது, 1978 முன்னோக்குகள் தீர்மானமான உலக பொருளாதார-அரசியல் நெருக்கடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரண ஓலமும் என்பதில் தொழிற் கட்சி கோரிக்கையில் குறிப்பிடத்தக்க முக்கியமான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. இது நவம்பர் 7, 1978 அன்று அரசியல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடி பற்றிய தொலைநோக்குப் பகுப்பாய்வோடு இந்த ஆவணம் தொடங்குகிறது. தோழர்கள் நிக் மற்றும் மக்ஸ் இந்தக் கேள்வியைக் கையாண்டுள்ளனர். வேர்க்கர்ஸ் லீக் தனது அரசியல் பணிகள் அனைத்தையும், அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரம் தீவிர மாற்றமடையும் ஒரு காலகட்டத்தின் புறநிலை மதிப்பீட்டில் அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று இங்கே சொன்னால் போதுமானது. இந்த பகுப்பாய்வானது 1980 களில் பெருநிறுவனவாதம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்துவங்களின் பகுப்பாய்வு மற்றும் 1990 களில் பூகோளமயமாக்கல் பற்றிய அதன் பகுப்பாய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான அடிப்படையை அமைக்க உதவியது. ஆவணத்தின் முன்னுரையை மேற்கோள் காட்ட என்னை அனுமதிக்கவும்:

உலக முதலாளித்துவ அமைப்பு அதன் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவின் விளிம்பில் உள்ளது. பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து வந்த ஏழு ஆண்டுகளில், ஒரு பொருளாதார பேரழிவைத் தவிர்ப்பதற்காக ஆகஸ்ட் 15, 1971 முதல் நம்பியிருந்த அனைத்து நிதி ஆதாரங்களையும், அத்துடன் கடன் வழிமுறைகளையும் முதலாளித்துவம் கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தி முடித்துவிட்டது. [62]

இதைத் தொடர்ந்து, “டாலர் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் ஒரு வரலாற்று பகுப்பாய்வு உள்ளது. 1970 களில் அதன் வீழ்ச்சி மற்றும் சிதைவின் வெளிப்படையான அறிகுறிகளுக்கு மத்தியில், முந்தைய காலகட்டத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சியை இது விளக்குகிறது. இந்த ஆய்வு அமெரிக்க வரலாறு பற்றிய எங்கள் பணிக்கு ஒரு அடித்தளத்தை தொடர்ந்து வழங்குகிறது. இந்த ஆவணம் “பாலும் தேனும் வழிந்தோடும் நிலம்” வரலாற்றின் விதிகளில் இருந்து பாதுகாப்பானது என்ற அமெரிக்க வரலாற்றின் நடைமுறைவாதப் பார்வையை கொண்ட அமெரிக்க விதிவிலக்கு தத்துவங்களின் திவால்நிலையை அம்பலப்படுத்தியது. அது குறிப்பிடுகிறது:

தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றை அமெரிக்க முதலாளித்துவத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடனான அதன் இயங்கியல் உறவில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வரலாறு மற்றும் உலக சந்தையின் வளர்ச்சியின் பின்னணியில் மட்டுமே அமெரிக்காவை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவிற்கு “விதிவிலக்கான” அல்லது “வித்தியாசமான” ஏதாவது இருக்குமானால், அது இதுதான்: இந்த நாட்டில்தான் உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தியின் விதிகள் மிக முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அவற்றின் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்டுள்ளன. [63]

ஒரு காலத்தில் இந்த “ஒழுங்கமைப்பின்” ஒரு காவலரணாக இருந்த அமெரிக்கா, முதலாளித்துவ நெருக்கடியின் மையமாக மாறியுள்ளது என்பதை இந்த ஆவணம் விளக்குகிறது.

தொழிலாள வர்க்கம் ஒரு வரலாற்று திருப்புமுனையை அடைந்துள்ளது. நாற்பது ஆண்டுகளாக, தொழிற்சங்கப் போராட்டத்தின் மூலம் வெற்றிகளைப் பெறவும், தனது உரிமைகளைப் பாதுகாக்கவும் முடிந்தது. ஆனால் இப்போது நெருக்கடியின் தீவிரம், கடந்த கால போர்க்குணமிக்க தொழிற்சங்கவாதம், முற்றிலும் அத்தியாவசியமான முன்நிபந்தனையாக இருந்தபோதிலும், ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களை தடுப்பதற்கு இன்று முற்றிலும் போதுமானதாக இல்லாதுள்ளது. இந்த நெருக்கடி மில்லியன் கணக்கானவர்களின் நனவில் பரந்த மாற்றங்களை உருவாக்கும். “வரம்பற்ற வாய்ப்புகளின் பூமி” என்று அவர்கள் பார்க்க முடிந்த அமெரிக்கா, “வரம்பற்ற துன்பங்களின் பூமி” என்று பார்க்கப்படும். [64]

ஒரு தொழிற் கட்சிக்கான கோரிக்கை பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் வகையிலான ஒரு தேர்தலுக்கான அமைப்பை அல்லது சீர்திருத்தவாத அமைப்பை உருவாக்குவதைப் பற்றியது அல்ல, மாறாக ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அதிகாரத்திற்கான ஒரு மூலோபாயம் என ஆவணம் விளக்குகிறது. தொழிற் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான பணிகளை வெகுஜனங்களின் தன்னிச்சையான இயக்கத்திற்கு அல்லது அதிகாரத்துவத்தின் முற்போக்கான பிரிவுகள் என்று கூறப்படுவனவற்றிற்கு விட்டுக்கொடுக்கும் எந்தவொரு கருத்தையும் இந்த ஆவணம் நிராகரித்தது.

உலக நெருக்கடியும், உலகப் புரட்சியும் தான் தொழிலாள வர்க்கத்தை சுயாதீன வர்க்க அரசியல் போராட்டக் களத்தில் நுழைவதற்கான தூண்டுதலை வழங்கி வருகிறது. ஒரு பரந்த தொழிற் கட்சியின் தோற்றம், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கும் உலகப் புரட்சியின் புதிய கட்டத்திற்கும் இடையிலான வரலாற்று இணைப்பாக இருக்கும்…

தொழிற் கட்சி அமெரிக்காவில் புரட்சிகர மூலோபாயத்தின் மையத்தில் உள்ளது என்று வேர்க்கர்ஸ் லீக் வலியுறுத்துகிறது. … ஆனால் இங்கே நாம் ஒரு தீர்க்கமான வேறுபாட்டை உருவாக்க வேண்டும்: தொழிற் கட்சிக்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக வேர்க்கர்ஸ் லீக்கை கட்டமைக்கும் போராட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதுடன் மற்றும் அதிலிருந்து பிரிக்க முடியாததுமாகும். தொழிற் கட்சி தன்னிச்சையாக உருவாகாது…

தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகர தலைமைக்கான செயலூக்கமான போராட்டத்திற்கு வெளியே இந்த வளர்ச்சியைக் காணும் தொழிற் கட்சி பற்றிய எந்த விவாதமும் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்தின் ஒரு வடிவமே தவிர வேறில்லை. தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர கருத்துக்களுக்கு “முதிர்ச்சியடைய” செய்வதற்கு ஒரு தொழிற் கட்சி தேவை என்ற பழைய பொதுவான கருத்தாக்கம் தொழிலாள வர்க்கத்தினதும், புரட்சிகர கட்சியினதும் பங்கு பற்றிய குட்டி முதலாளித்துவ சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த முன்னோக்கில் உள்ள மறைமுகமான வாதம் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்கு அணிதிரட்டப்படுவதற்கு முன், தொழிற் கட்சி சீர்திருத்தவாதத்தின் பள்ளியை முதலில் கடந்து வர வேண்டும் என்பதாகும். நடைமுறையில், இந்த நிலைப்பாடு தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அடிபணிவதைக் குறிக்கிறது. மேலும், தொழிற் கட்சியின் வளர்ச்சி என்பது கட்சியின் போராட்டத்திலிருந்தும், காரியாளர்களை மார்க்சிஸ்டுகளாகப் பயிற்றுவிப்பதிலிருந்தும் பிரிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுவதால், கட்சி பின்னணிக்குத் தள்ளப்படுகிறது. …

தொழிற் கட்சிக்கான போராட்ட வடிவத்தின் மூலமாகவே மார்க்சிசம் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது, தொழிற் கட்சிக்கான போராட்டத்தின் இன்றியமையாத உள்ளடக்கம், தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும் அனைத்து அடுக்குகளிலிருந்தும் புரட்சிகர மார்க்சிச காரியாளர்களை பயிற்றுவிப்பதாகும். … மக்களின் தன்னிச்சையான இயக்கம் அதிகாரத்திற்கான பாதையை கடந்து செல்லும் இடைக்கால வடிவமான தொழிற் கட்சி கூட வேர்க்கர்ஸ் லீக் நடத்திய மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் வரலாற்று துணை விளைபொருளாக இருக்கும். [65]

இந்த ஆவணம் பின்னர் இந்த ஆழமான அறிக்கையை வெளியிடுகிறது, இது ட்ரொட்ஸ்கியின் இடைமருவு வேலைத்திட்டம் என்பதிலிருந்து, மனிதகுலத்தின் நெருக்கடியானது முக்கியமாக தலைமைத்துவ பிரச்சினையாக குறைக்கப்படுகிறது என்ற கூற்றை எதிரொலிக்கிறது:

தொழிற் கட்சி கேள்வி பொதுவாக தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல. இது முக்கியமாக புரட்சிகர முன்னணிப்படையின் நனவின் பிரச்சினையாகும். தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான இயக்கத்தை, புரட்சிகர வழிகளில் நனவுடன் திசை திருப்புவதற்கு மார்க்சிசத்தில் போதுமான முதிர்ச்சியுள்ள மற்றும் கருத்தியல் ரீதியாக வேரூன்றிய ஒரு புரட்சிகர தலைமை இதுவரை வெளிவரவில்லை என்பதால் முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கம் தன்னை உடைத்துக் கொள்ள முடியவில்லை. வேர்க்கர்ஸ் லீக் —மற்றும் வேர்க்கர்ஸ் லீக் மட்டுமே— அத்தகைய தலைமையை உருவாக்குகிறது. [66]

1978 முன்னோக்குகள் தீர்மானம் தொழிற் கட்சி கோரிக்கையின் பண்புரீதியான வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது. இது 1954 இல் கனன் கொண்டிருந்த கருத்திற்கு மாறாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எந்தவொரு பங்கையும் ஏற்றுக்கொள்ளாததாகும். அந்தப் பணியை நிறைவேற்றுவதில் புரட்சிகர முன்னணிப் படைக்கு தீர்க்கமான பணி ஒதுக்கப்பட்டது. 1978 ஆவணம், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு உள்நாட்டுப் போருக்கு, சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியை வலியுறுத்தியது. இந்த அர்த்தத்தில், தொழிற்சங்கங்கள் தொடர்பான நமது தற்போதைய நிலைப்பாட்டிற்கான அடித்தளத்தை இது அமைத்தது.

“காரியாளர் பயிற்சிக்கும் நடைமுறைவாதத்திற்கும் எதிரான போராட்டத்தின் அடிப்படையாக ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று தொடர்ச்சி” என்ற தலைப்பிலான ஆவணத்தின் பகுதி அவசியமாக வாசிக்கவேண்டிய பகுதியாகும். இது 2015 கோடைகால பள்ளியில் விரிவாக கலந்துரையாடப்பட்ட இந்த ஆழமான பத்தியுடன் தொடங்குகிறது:

தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய போராட்டங்களுக்கும் புரட்சிக் கட்சிக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்ச்சியின் நிலைப்பாடுகளை பேணுவதற்கான நனவான போராட்டத்திற்கும் மற்றும் முரண்பாடுகளின் ஒரு ஒருங்கிணைந்த அலகாகவும், வர்க்கத்தின் புறநிலை வரலாற்று அனுபவங்களையும் போல்ஷிவிசத்தின் வளர்ச்சியினையும் முழுதாக உள்ளடக்கிய கட்சிக்கும் வெளியே, தொழிலாள வர்க்கத்தை நோக்கிய உண்மையான திருப்பம் எதுவும் இருக்க முடியாது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று சாதனைகள் மீதும், நான்காம் அகிலத்திற்கு ட்ரொட்ஸ்கி விட்டுச் சென்ற மரபான மகத்தான அரசியல் மற்றும் தத்துவார்த்த மூலதனத்தின் மீதும் கட்சியின் முழுப் பணிகளையும் அடிப்படையாகக் கொண்ட போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்துதான், கட்சியின் அணிகளிலும், அதன் விளைவாக, தொழிலாள வர்க்கத்திலும் நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க முடியும். நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம், காரியாளர்களின் தினசரி நடைமுறைக்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் கடந்து வந்த முழு வரலாற்று அனுபவங்களின் தொகுப்பிற்கும் இடையிலான நேரடியான வரலாற்றுத் தொடர்புகளைப் பராமரிப்பதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டவுடன், அது மிகவும் வலிமையற்ற வார்த்தையளவிலான மோதல்களின் வடிவங்களாகச் சீரழிந்து விடுகிறது. அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், அது நடைமுறைவாதத்தின் மற்றொரு வகையாக மாறிவிடுகிறது. [67]

குறிப்பாக நடைமுறைவாதம் முதலாளித்துவத்தின் உத்தியோகபூர்வ கருத்தியலாக இருக்கும் அமெரிக்காவில், நடைமுறைவாதத்தின் மூலங்கள் மற்றும் அம்சங்களை மதிப்பாய்வு செய்யும் இந்த முழுப் பகுதியும் இன்று அனைத்து தோழர்களாலும் உள்ளீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். மிக முக்கியமான சில பத்திகளில் பின்வருவன அடங்கும்:

வொல்ஃபோர்த் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் வரலாற்றை எந்த விளக்கமும் இல்லாமல் தூக்கி எறிந்தபோது, அவர் அந்த பிரபல நடைமுறைவாதியான ஹென்றி ஃபோர்டின் கண்ணோட்டத்தின்படி நடந்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை தனது உலகக் கண்ணோட்டத்தின் சாரத்தை “வரலாறு வெறும் புலம்பல்!” என்ற வார்த்தைகளால் விளக்கினார். தேசிய கருத்தியலாக நடைமுறைவாதம் ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணங்கள் அமெரிக்காவின் வரலாற்று வளர்ச்சியின் குறிப்பிட்ட பண்புகளில் காணப்படுகின்றன. ட்ரொட்ஸ்கி விளக்கியது போல், “வேறு எந்த நாட்டிலும் ‘வரம்பற்ற வாய்ப்புகள்’ உள்ள இந்த நாட்டினைப் போன்று வர்க்கப் போராட்டத்தை நிராகரித்ததில்லை. மாற்றங்களுக்கான உந்து சக்தியாக சமூக முரண்பாடுகளை நிராகரிப்பது தத்துவார்த்த சிந்தனையின் களத்தில் முரண்பாடுகளின் தர்க்கமாக இயங்கியலை நிராகரிப்பதற்கு வழிவகுத்தது...”

இப்போது, புறநிலை நிலைமைகள் நடைமுறைச் சிந்தனை முறையுடன் ஒரு இறுதிக் கணக்கைத் தீர்த்துக்கொள்வதை சாத்தியமாக்குகின்றன. அதன் திவால்நிலை ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது. “வரம்பற்ற வாய்ப்புகளின் நாடு” “வரம்பற்ற துன்பங்களின் நாடாக” மாற்றப்படுவது மார்க்சிசத்தின் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியங்களை உருவாக்கும். ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதை நாம் மீண்டும் மீண்டும் சொல்லலாம்: சமூக முரண்பாடுகளை மாற்றங்களுக்கான உந்து சக்தியாக ஏற்றுக்கொள்வது தத்துவார்த்த சிந்தனையின் களத்தில் முரண்பாடுகளின் தர்க்கமாக இயங்கியலை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும். ஆனால் நடைமுறைவாதத்திற்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாளும் கட்சிக்குள் நனவுபூர்வமாக நடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தின் சாராம்சம், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடிப்படையில் காரியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதாகும்.… [68]

இறுதியாக, ஆவணத்தின் இந்தப் பகுதி இந்த சக்திவாய்ந்த சுருக்கத்துடன் முடிவடைகிறது, அதன் உள்ளடக்கம் இன்று ICFI இன் ஒவ்வொரு காரியாளராலும் உள்ளீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்:

ஆனால் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான அனைத்துலகக் குழுவினால் வரலாற்றுரீதியாக மேம்படுத்தப்பட்ட நடைமுறையின் மிக உயர்ந்த வளர்ச்சியில் இருந்து, உலக நெருக்கடியை உணர்வுபூர்வமாக உணர புரட்சிகர கட்சியின் காரியாளர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை கட்சியின் புறநிலை, கூட்டு, வரலாற்றுரீதியாக நிரூபிக்கப்பட்ட மற்றும் விஞ்ஞானரீதியான நடைமுறை மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். [69]

1978 முன்னோக்குகள் தீர்மானம், வொல்ஃபோர்த்தின் இராஜினாமாவிற்கு பின்னர் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் ICFI இன் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லை குறித்து நிற்கிறது. இது எதிர்கால விரிவுரைகளின் பொருளாக இருக்கும். 1978 முன்னோக்குகள் தீர்மானத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் செழுமையானது மற்றும் கவனமாக ஆய்வு தேவைப்படுகிறது.

முடிவுரை

1977-1978 இல் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் கைகளில் கார்ட்டரின் அவமானம் அவரது நிர்வாகத்தின் அழிவை உறுதிசெய்து, ரீகனுக்கு வழி திறந்தது. ஆனால் அவர் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, கார்ட்டர் 1979 இல் UAW அதிகாரத்துவத்துடன் ஒத்துழைத்து அதன் தொழிலாளர்களை வறுமைக்குள்ளாக்குவதன் மூலம், கிறைஸ்லரை பிணை எடுத்ததன் மூலம், UAW தலைவர் டக்ளஸ் ஃப்ரேசர் பெருநிறுவன இயக்குனர் குழுவில் ஒரு இடத்தைப் பெற்றார்.

அதே ஆண்டு, கார்ட்டர் சேஸ் மன்ஹாட்டன் வங்கியின் நிர்வாகி பௌல் வோல்கரை பெடரல் ரிசர்வ் தலைவராக நியமித்தார். வோல்க்கர் வட்டி விகிதங்களை 20 சதவீதத்திற்கு மேல் உயர்த்தினார், இது பெரு மந்தநிலைக்குப் பின்னர் மிக உயர்ந்த வேலையின்மையை உருவாக்கியது. “சராசரி அமெரிக்கரின் வாழ்க்கைத் தரம் குறைய வேண்டும்,” என்று அவர் அறிவித்தார். [70]

டெட்ராய்ட், சிகாகோ, செயின்ட் லூயிஸ், பஃபாலோ, பிட்ஸ்பேர்க் மற்றும் பல தொழிலாள வர்க்க அதிகாரத்தின் பழைய கோட்டைகளான முழு நகரங்களையும் கிழித்தெறிந்த சமூக பேரழிவுகளுக்கு தொழிற்சங்கங்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. 1980 இல், கார்ட்டர் ஒரு சிறிய கூட்டாட்சி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்கமான PATCO வை நசுக்க விரிவான திட்டங்களை வகுத்தார்.

ஜூலை 1, 1981 இல் வாஷிங்டன் டிசி இல் நடந்த விசாரணையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் போல் வோல்க்கர்

பின்னர் 1981 இல் PATCOவை நசுக்குவதை ரீகன் நடைமுறைப்படுத்தினார். வேர்க்கர்ஸ் லீக் போராட்டத்தில் தீவிரமாகத் தலையிட்டு, கட்சியில் இணைந்த கட்டுப்பாட்டாளர் ரான் மே உட்பட சிறையில் அடைக்கப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை வழிநடத்தியது. ரீகனின் நடவடிக்கைகள் சமிக்ஞை செய்த வர்க்கப் போரின் பிரகடனம் இருந்தபோதிலும், AFL-CIO அதிகாரத்துவம் PATCO க்கு உதவ எதுவும் செய்யவில்லை என்று சொல்வது அதுபற்றிய ஒரு மோசமான குறைத்துமதிப்பீடாகவே இருக்கும்.

செப்டம்பர் 1981 தொடக்கத்தில் தொழிலாளர் தின கொண்டாட்டம் உறுதியான PATCO வேலைநிறுத்தக்காரர்களின் குழுவால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் PATCO க்கு எதிராக ரீகன் நிர்வாகத்துடன் தீவிரமாக ஒத்துழைத்தது. AFL-CIO, Teamsters, International Association of Machinists மற்றும் விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களின் தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்த தளங்களைக் கடக்கும்படி உத்தரவிட்டன. PATCO இன் தோல்வியானது 1980 களில் தொடர்ச்சியான நசுக்கும் தோல்விகளுக்கு களம் அமைத்தது. பின்வரும் அனைத்தும் அதே முறையைப் பின்பற்றின: Phelps Dodge, Greyhound, Continental Airlines, AT Massey Coal, Pan American, Hormel, TWA, International Paper, Pittston Coal என ஒருவர் இப்படியே தொடரலாம்.

ஒரு அடிப்படையானதும், பண்புரீதியானதுமான மாற்றம் நடந்து கொண்டிருந்தது. 1980 களின் தசாப்தம் முழுவதும் “தங்கள் சொந்த” சாமானிய தொழிலாளர்களின் மீதான தாக்குதல்களில், தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துரோகத்தின் மட்டத்தை அதன் தலைவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களான பேராசை, முட்டாள்தனம், நேர்மையின்மை போன்றவற்றால் விளக்கிவிட முடியாது.

இதில் சம்பந்தப்பட்டது ஒரு சமூகத் தட்டு ஆகும். அதன் பொருள்சார் நலன்கள், அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களின் நலன்களுடன் புறநிலை ரீதியாக இனி ஒத்துப்போவதில்லை. பூகோளமயமாக்கலின் தாக்கத்தின் கீழ், தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் சுயாதீனமான கருவிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அவற்றின் செல்வமானது, அகராதி எமக்கு கூறுவது போல், தொழிலாளர்களை பாதுகாப்பதோடு அல்லாது அவர்களை சுரண்டுவதுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

தொழிற் கட்சிக்கான கோரிக்கை குறித்த எங்கள் ஆய்வு இந்தக் காலத்திற்கு முன்பே முடிவடைகிறது. எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களில் இருந்து ஒரு தொழிற் கட்சியை உருவாக்குவது பற்றி இனி பேசுவது சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில் கட்சியின் வளர்ச்சியை மேற்கூறிய கலந்துரையாடலில் இருந்து அறிய முடியும். 1980கள் மற்றும் 1990களின் முற்பகுதியில் ஸ்ராலினிச அரசின் மிகப் பெரிய தொழிலாளர் அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கு சமாந்திரமாக இருந்த தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவுகளின் மாற்றம் இந்த சாத்தியத்தை தடுத்தது.

இந்த காலகட்டத்தில் எட் வின் மற்றும் ஜிம் லோரன்ஸ் உட்பட பல முக்கியமான தொழிலாளர்களை ட்ரொட்ஸ்கிசத்தின் பதாகைக்கு வேர்க்கர்ஸ் லீக் வென்றெடுத்தது. 1977-1978 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் அதன் தலையீடு காட்டுவது போல், தொழிலாள வர்க்கத்தின் முழுப் பிரிவினரிடையேயும் அது உண்மையான செல்வாக்கை செலுத்தியது. ஆனால் புறநிலை சூழ்நிலை சாதகமாக இருக்கவில்லை. தொழிலாளர்களிடையே போர்க்குணமிக்க ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்தபோதிலும், போராட்டத்தை வழிநடத்தும் சோசலிச அரசியலின் தேவை பரந்த அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. பல தசாப்தங்களாக கம்யூனிச எதிர்ப்பு ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. 1980 களில் AFL-CIO வின் காட்டிக்கொடுப்பின் அளவிற்கு அமெரிக்கத் தொழிலாளர்கள் தயாரிக்கப்பட்டு இருக்கவில்லை. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பப்லோவாதிகள் மற்றும் பிற திருத்தல்வாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட குழப்பத்தையும் இதனுடன் சேர்க்க வேண்டும்.

ஆயினும்கூட, இந்த காலகட்டம் பின்தொடர வேண்டியவற்றுக்கு ஒரு முக்கியமான அடித்தளத்தை அமைத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் அதன் ஆழமான ஈடுபாடு மற்றும் வொல்ஃபோர்த் விவகாரத்தில் இருந்து வெளிவரும் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பியதன் அடிப்படையில், 1980களின் நசுக்கிய தோல்விகள் மற்றும் தொழிற்சங்கங்களின் மாற்றம் ஆகியவற்றிலிருந்து வேர்க்கர்ஸ் லீக் படிப்பினைகளைப் பெற முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய வெகுஜன அமைப்புகளான தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிச அரசுகளின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார உற்பத்தியின் பூகோளமயமாக்கல் புதிய புரட்சிகர சாத்தியங்களை வழங்கின.

இதற்கு மாறாக, 1974 க்குப் பின்னர் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தின் வீழ்ச்சியானது, WRP ஐ தொழிற் கட்சி, மூன்றாம் உலக தேசியவாதம், சோவியத் அதிகாரத்துவம் போன்ற அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட பழைய அமைப்புகளுடன் மேலும் மேலும் தீவிரமாக ஒட்டிக்கொள்ள வழிவகுத்தது. அந்தக் காலகட்டம் பற்றிய ஒரு புறநிலை பகுப்பாய்வை மேற்கொண்டு, ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று, தத்துவார்த்த வெற்றிகளுடன் தன்னை மறுசீரமைப்பதற்குப் பதிலாக, WRP “தொழிலாள வர்க்கத்தின் தோற்கடிக்கப்படாத தன்மை” என்ற அதன் மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறியது.

WRP தலைவர்கள் திருத்தல்வாதத்திற்கு எதிரான தாக்குதலை தொடரத் தவறிவிட்டனர். ஏனெனில் இவ்வாறு செய்வததால் தலைமைத்துவம் உட்பட அவர்களது சொந்த அணிகளில் திருத்தல்வாதத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். நாம் காக்கும் மரபியத்தில் டேவிட் நோர்த் குறிப்பிடுவது போல், “WRP இன் ஒரு தலைவர் கூட வொல்ஃபோர்த்தின் காட்டிக்கொடுப்பின் தத்துவார்த்த மற்றும் அரசியலை ஆய்வு செய்து ஒரு கட்டுரை கூட எழுதவில்லை.” இந்த அலட்சியம், “முன்பு திருத்தல்வாதத்திற்கு எதிராக அது நடத்திய போராட்டத்தில் இருந்து விலகி, ஏற்கனவே நன்கு நடந்து கொண்டிருக்கும் WRP இன் திருப்பத்தை பிரதிபலிக்கும் ஒரு தத்துவார்த்த அலட்சியத்தை வெளிப்படுத்தியது” என்று அவர் எழுதுகிறார்.

வொல்ஃபோர்த் விவகாரத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிரான வேர்க்கர்ஸ் லீக்கின் ஆழமான போராட்டத்தையும் அலன் தொர்னெட்டை வெளியேற்றுவதை WRP அதிகாரத்துவ ரீதியில் கையாண்டதையும் நோர்த் வேறுபடுத்திக் காட்டினார். இது மற்றொரு விரிவுரையில் கையாளப்படும், டேவிட் பின்வருமாறு முடித்தார்:

வேர்க்கர்ஸ் லீக்கைப் பொறுத்தவரை, வொல்ஃபோர்த்துக்கு எதிரான போராட்டமானது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் தன்னை வேரூன்றிய ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக அதன் அரசியல் வளர்ச்சியில் ஒரு முக்கியமான அத்தியாயமாக இருந்தது. மறுபுறம், தொழிலாளர் புரட்சிக் கட்சியைப் பொறுத்தவரை, தொர்னெட்டுடனான மோதல் அதன் ஆழமான அரசியல் நெருக்கடியின் மற்றொரு கட்டமாக இருந்ததை நிரூபித்தது. அது இறுதியில் அதன் வீழ்ச்சிக்கே இட்டுச் சென்றது. [71]

தொழிற் கட்சிக்கான கோரிக்கையை புதுப்பிக்க SLL இன் தலையீட்டிலிருந்து, வொல்ஃபோர்த்தின் பின்வாங்கல் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதன் மூலம் பெறப்பட்ட இந்த அனுபவம் அனைத்தும், சோசலிச புரட்சியின் உலகக் கட்சியாக அனைத்துலகக் குழுவின் முக்கியத்துவத்திற்கு சாட்சியமளிக்கிறது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை அதன் காரியாளர்கள் கவனமாக ஆய்வு செய்து உள்ளீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

முடிவாக, ஜனவரி 23, 1984 இல் மைக் பண்டாவுக்கு டேவிட் நோர்த் எழுதிய கடிதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்:

பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் நமது சொந்த அனுபவங்கள் போன்று, எமது பிரிவுகளின் தேசியப் பணிகளில் சில முன்னேற்றங்களுக்கு உறுதியளிப்பதாகத் தோன்றினாலும், இத்தகைய பணிகள் ஒரு விஞ்ஞானபூர்வமாக தயாரிக்கப்பட்ட சர்வதேச முன்னோக்கால் வழிநடத்தப்படாவிட்டால், அவை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு உண்மையான வெற்றிகளை உருவாக்காது. வேர்க்கர்ஸ் லீக் எவ்வளவு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புகிறதோ, அந்தளவுக்கு வேலையை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு நமது சர்வதேச தோழர்களுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தையும் நாங்கள் உணர்கிறோம்.[72]

தேசியப் பிரிவுகளின் வேலையில் இத்தகைய நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் இருக்கும் போதும், இதுவே இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

குறிப்புகள்

[1] Tim Wohlforth, “Max Shachtman and American Pragmatism,” December 4, 1972. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), pp. 325-26. URL: https://www.marxists.org/history/etol/document/fi/tvsr/Trotskyism-Versus-Revisionism-Volume-7.pdf

[2] Lettre de G. Healy à Tim Wohlforth, December 22, 1972, Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 228.

[3] David North, Foreword to Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), pp. Viii-ix.

[4] David North and Alex Steiner, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 169.

[5] Ibid., p. 172.

[6] Ibid., p. 173.

[7] David North, “Wohlforth—On to the Platform of Shame,” January 13, 1977. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 318.

[8] Lettre à Jack Barnes de Tim Wohlforth, June 24, 1975, Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), pp. 289-91.

[9] Socialist Equality Party (US), The Historical and International Foundations of the Socialist Equality Party (US) (Oak Park: Mehring Books, 2008). [Les fondations historiques et internationales du Parti de l’Egalité Socialiste] Pour la traduction française, URL: https://www.wsws.org/fr/special/library/fondations-us/00.html

[10] David North and Alex Steiner, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 71.

[11] Ibid., p. 79.

[12] Ibid., p. 80.

[13] Ibid., p. 110.

[14] Ibid., p. 93.

[15] David North, “Report to the Second National Congress of the Socialist Equality Party,” July 8, 2012. Republished in The Frankfurt School, Postmodernism and the Politics of the Pseudo-left (Oak Park: Mehring Books, 2015), p. 216

[16] Tim Wohlforth, cité in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 113.

[17] David North, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 113.

[18] Ibid., p. 116.

[19] Letter de Tim Wohlforth à Gerry Hearly, June 7, 1974, *cité in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 118.

[20] Manifesto of the Sixth Congress of the International Committee, quoted in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 131-32.

[21] Tim Wohlforth, cité in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 132.

[22] David North, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 133.

[23] Ibid., p. 137.

[24] Ibid., p. 139.

[25] Lettre de Mike Banda à Tim Wohlforth, February 1973, Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 236.

[26] Leon Trotsky, Whither France? [Où va la France], New Park Publications, p. 97, quoted in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 142.[27] David North, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 142.

[28] Tim Wohlforth, cité in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 144.

[29] Leon Trotsky, Writings, 1933-34, New Park Publications, p. 97, quoted in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 144.

[30] David North, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 145.

[31] Tim Wohlforth, cité in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 146.

[32] David North, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 146-48.

[33] Ibid., p. 155.

[34] Tim Wohlforth, cité in “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 159.

[35] David North, “The Fourth International and the Renegade Wohlforth,” March-May 1976. Republished in Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. 159-60.

[36] Ibid., p. 161.

[37] Ibid., p. 164.

[38] Ibid., p. 203.

[39] Ibid., pp. 204-5.

[40] David North, Foreword to Trotskyism Versus Revisionism, Volume 7 (Detroit: Labor Publications, 1984), p. x

[41] David North, The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International (Oak Park: Mehring Books, 1988), p. 451. [L’héritage que nous défendons: Une contribution à l’histoire de la Quatrième Internationale], Pour le texte en français, URL: https://www.wsws.org/fr/special/library/heritage-que-nous-defendons/00.html

[42] “The World Economic-Political Crisis and the Death Agony of US Imperialism: Draft Resolution on the Perspective and Tasks of the Workers League,” 1978: p. 30.

[43] https://www.marxists.org/history/etol/newspape/bulletin/index.htm.

[44] “World Economic-Political Crisis,” p. 21.

[45] “Perspectives for Building Revolutionary Party in the U.S.: Main Resolution Adopted by Founding Congress of the Workers League,” Workers League, 1966. Published January 2, 1967, in the Bulletin. https://www.marxists.org/history/etol/newspape/bulletin/v03n09-w051-jan-02-1967-Bulletin.pdf

[46] The Historical & International Foundations of the Socialist Equality Party, Mehring Books, 2015. https://www.wsws.org/en/special/library/foundations-us/42.html.

[47] North, The Workers League and the Founding of the Socialist Equality Party. Mehring Books, 1996, pp 65-66.

[48] “The Case for a Labor Party: Statement of the Workers League.” Bulletin Labor Series. New York: Labor Publications, 1972.

[49] David North and Bruce McKay, Where Wallace Really Stands. Bulletin Pamphlet Series, New York, N.Y.: Labor Publications, 1972.

[50] Bulletin, “The Case for a Labor Party: Statement of the Workers League.” June 26, 1972, https://www.marxists.org/history/etol/newspape/bulletin/v08n42-w251-jun-26-1972-bulletin.pdf

[51] North, The Workers League & the Founding of the Socialist Equality Party: 23. https://www.wsws.org/en/special/library/workers-league-founding-socialist-equality-party/03.html

[52] “Call of TUALP Conference: Build a Revolutionary Leadership.” April 15, 1975, p 1

[53] Workers League Political Committee, “Tom Henehan: His Place in History.” Bulletin, October 17, 1978.

[54] What Makes Wohlforth Run? New York: Labor Publications, 1975, pp. 22-23.

[55] Ibid.

[56] Bulletin. “The Labor Party and the American Working Class.” July 12, 1974.

[57] Frank Martin and Adele Sinclair, The Frameup of Gary Tyler, New York, New York: Labor Publications, 1976.

[58] North, The Workers League and the Founding of the Socialist Equality Party: 23; https://www.wsws.org/en/special/library/workers-league-founding-socialist-equality-party/03.html

[59] Ibid.

[60] Ibid.

61] The Bulletin, “Lessons of the Miners Strike: Statement of the Trade Union Alliance for a Labor Party,” April 4, 1978.

[62] “The World Economic-Political Crisis,” 1.

[63] Ibid., 14-15.

[64] Ibid., 23.

[65] Ibid., 23-24.

[66] Ibid., 25.

[67] Ibid., 36.

[68] Ibid., 37.

[69] Ibid., 39.

[70] Steven Rattner. “Volcker Asserts U.S. Must Trim Living Standards.” New York Times, October 18, 1979, sec. Archives. https://www.nytimes.com/1979/10/18/archives/volcker-asserts-us-must-trim-living-standard-warns-of-inflation.html.

[71] North. The Heritage We Defend: 453. [L’héritage que nous défendons] Voir aussi: https://www.wsws.org/fr/special/library/heritage-que-nous-defendons/32.html

[72] https://www.wsws.org/en/special/library/the-icfi-defends-trotskyism-1982-1986/05.html.

Loading