சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

ஏர்னெஸ்ட் மண்டேலின் “நவ-முதலாளித்துவத்தை” ICFI அம்பலப்படுத்துவதும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி மீதான பகுப்பாய்வும்: 1967-1971

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளியில், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசியச் செயலர் மக்ஸ் பாடி வழங்கிய விரிவுரையாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும் சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற ஆரம்ப அறிக்கை ஆகஸ்ட் 7 இல் பிரசுரிக்கப்பட்டது.

நான்காம் அகிலத்தின் வரலாற்று அரசியல் அடித்தளங்கள்” என்ற இரண்டாவது விரிவுரை ஆகஸ்ட் 14 இல் பிரசுரிக்கப்பட்டது.

பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்” என்ற மூன்றாவது விரிவுரை ஆகஸ்ட் 18 இல் பிரசுரிக்கப்பட்டது.

கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்” என்ற நான்காவது விரிவுரை ஆகஸ்ட் 25 இல் பிரசுரிக்கப்பட்டது.

ஐந்தாவது விரிவுரை, “சிலோனில் ‘மாபெரும் காட்டிக்கொடுப்பும்’, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்” என்ற ஐந்தாவது விரிவுரை ஆகஸ்ட் 30 இல் பிரசுரிக்கப்பட்டது.

ஆறாவது விரிவுரை, “பப்லோவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டமும், OCI இன் மத்தியவாதமும், ICFI க்கு உள்ளே எழுந்த நெருக்கடியும்” செப்டம்பர் 6 அன்று வெளியிடப்பட்டது.

அனைத்து விரிவுரைகளையும் WSWS வரும் வாரங்களில் வெளியிடும்.

முன்னுரை

1967-1971 காலகட்டம், அளப்பரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சிகளின் காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது. பல தசாப்தங்களுக்குச் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் இருக்கும் என்ற தாராளவாத அனுதாபிகள் அல்லது குட்டி-முதலாளித்துவத் திருத்தல்வாதிகளின் வாக்குறுதிகளில் இருந்து விலகி, இவற்றில் சோசலிசப் புரட்சி பற்றிய கேள்வி பரிசீலனையில் இருந்தே ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு விடவில்லை என்பதை 1960 களின் பிற்பகுதி நிரூபித்துக் காட்டியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் போது முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுவப்பட்ட பொருளாதார முட்டுக்கொடுப்புகள் அனைத்தும், அடுத்தடுத்து வேகமாகச் சரியத் தொடங்கின.

1960 களின் பிற்பகுதியைப் புரிந்து கொள்ள, அந்தக் காலகட்டத்தை அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்து பார்ப்பது முக்கியமாகும். 1914 இல் தொடங்கி, உலகம் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இரத்தக்களரியான மற்றும் கொடூரமான கொந்தளிப்பால் சூழப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் கொடூரங்களும், ஓர் உலகளாவிய பெருந்தொற்று, பெருமந்தநிலை, பாசிசத்தின் எழுச்சி மற்றும் மிகவும் முன்னேறிய தொழிலாளர்களின் பிரிவுகள் உடலியல்ரீதியாக அழிக்கப்பட்டிருந்த நிலை, ஸ்ராலினிச களையெடுப்புக்கள், இரண்டாம் உலகப் போர் மற்றும் யூதப்படுகொலை ஆகியவை இதில் உள்ளடங்கும்.

ஏகாதிபத்திய மனிதப் படுகொலைகள் மற்றும் அதன் விளைவுகளால் பெரும்பாலான உற்பத்தி சக்திகள் அழிக்கப்பட்டு, மக்களில் பெரும் பகுதியினர் அழிக்கப்பட்டிருந்த நிலையில், 1945 இல் ஐரோப்பா சிதைந்து சீரழிந்து கிடந்தது.

அமெரிக்கா அந்தப் போரில் இருந்து, மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக வெளிப்பட்டு, உலக முதலாளித்துவ ஒழுங்கை ஸ்திரப்படுத்த முயன்றது. அமெரிக்காவால் இதை நிறைவேற்றக்கூடியதாக இருந்தமைக்கு சமூக ஜனநாயகக் கட்சிகளும் மற்றும், அனைத்திற்கும் மேலாக, ஸ்ராலினிச கட்சிகளும் முதலாளித்துவம் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான அவகாசத்தை வழங்கின. அவை, இரண்டாம் உலகப் போரின் காட்டுமிராண்டித்தனத்தைத் தொடர்ந்து வந்த, தொழிலாளர்களின் பாரிய புரட்சிகர இயக்கங்களைத் திணறடித்து நசுக்க முதலாளித்துவ அரசாங்கங்களுடன் கூடி வேலை செய்தன.

அந்தப் போரின் போது ஐரோப்பிய மற்றும் ஆசியப் பொருளாதாரங்களுக்கு ஏற்பட்டிருந்த பெரும் சேதங்களும், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட அமெரிக்க தொழில்துறையின் பொருளாதார பலமும், இந்த ஸ்திரப்படுத்தலுக்கு பொருளாதார அடித்தளத்தை வழங்கின.

ஆனால் அளப்பரிய ஸ்திரத்தன்மைக்கு மேலோட்டமான தோற்றத்தைக் கொடுத்த இந்தப் பொருளாதார மறுமலர்ச்சி, சில நாடுகளில் தொழிலாளர்களின் சமூக நிலைமைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருந்தாலும் கூட, அதன் வீழ்ச்சிக்கான நிலைமைகளையும் ஆரம்பித்து வைத்தது.

போருக்குப் பிந்தைய காலகட்டம், நான்காம் அகிலத்தின் மீது பாரிய அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், அதாவது சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களிலும் ட்ரொட்ஸ்கிச நிலைபாடுகளின் தொடர்ச்சியைப் பேணுவதில் முக்கிய பாத்திரம் வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட வேலைகள், புதிய பிரிவுகளை நிறுவியது உட்பட, சந்தர்ப்பவாத சீரழிவை எதிர்த்து அனைத்துலகக் குழுவின் உலகளாவிய வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்தன.

போருக்குப் பிந்தைய வளர்ச்சிக் காலத்தையும், 1960 களின் பிற்பகுதியைக் குறித்தும் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் இருந்த முரண்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், நாம் அரசியல் பொருளாதாரத்தின் பிரச்சினைகளையும், முதலாளித்துவ வளர்ச்சி போக்கு மற்றும் முதலாளித்துவ உள்முரண்பாடுகள் எவ்வாறு வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன என்பதையும் பார்ப்போம்.

ஏர்னெஸ்ட் மண்டேல் — நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் தலைவர்

ஏர்னெஸ்ட் மண்டேல்

இந்த முக்கிய கேள்விகளைக் கையாள, ஏர்னெஸ்ட் மண்டேல் முன்னெடுத்த நிலைப்பாடுகளினூடாக ஆராய்வது அவசியமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தைப் பப்லோவாதம் நிராகரித்ததற்கு மண்டேல் பொருளாதாரரீதியான நியாயப்படுத்தலை வழங்க முனைந்தார். முதலாளித்துவம் ஒரு புதிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், இதில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காட்டுமிராண்டித்தனத்தை ஏற்படுத்திய உள்முரண்பாடுகளை ஏகாதிபத்திய சக்திகள் தீர்த்து விட்டதாகவும் அவர் வாதிட்டார். ஆரம்பத்தில் அவர், இந்தப் புதியக் காலக்கட்டத்தை “நவ-முதலாளித்துவம்” என்று குறிப்பிட்டார்.

ஆரம்பத்திலிருந்தே முக்கிய புள்ளியை குறிப்பிடுவதானால், பப்லோவாதத்தை மண்டேல் தழுவியது, ஒரு தவறான பொருளாதார தத்துவத்தின் வெளிப்பாடல்ல, மாறாக அதற்குத் தலைகீழான முறையிலாகும். அவருடைய பொருளாதார பகுப்பாய்வு, முதலாளித்துவத்திற்குச் சவக்குழி தோண்டும் வர்க்கமாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை அவர் நிராகரித்ததன் அடிப்படையில் இருந்தது.

திருத்தல்வாத ஐக்கிய செயலகத்தின் நீண்டகால தலைவராக மண்டேல் இருந்தார். 1923 இல் ஜேர்மனியின் பிராங்ஃபேர்ட்டில் பிறந்த அவர், இரண்டாம் உலகப் போர் வெடிப்புக்குப் பின்னர் பெல்ஜியத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்தார். அந்தப் போரைத் தொடர்ந்து, அப்போது அவருடைய இருபதுகளின் முற்பகுதியில் இருந்த அவர், அந்த நேரத்தில், ஸ்ராலினிசத்திற்கு ஒரு முற்போக்கான பாத்திரம் இருப்பதாக அறிவுறுத்திய எந்தவொரு போக்குகளையும் கடுமையாக எதிர்த்தார். இது, 1940 களின் பிற்பகுதியில் பப்லோவாதத்தின் தோற்றத்துடன் மாற்றமடைந்தது.

போருக்குப் பிந்தைய உடனடி நெருக்கடிக்குப் பின்னர், முதலாளித்துவ ஆட்சியின் மறுஸ்திரப்பாட்டுக்கு மண்டேல் தகவமைத்துக் கொண்டார். 1914 இல் உலக முதலாளித்துவம் உடைவதற்கு வழி வகுத்த, மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரப் போராட்டங்களுக்குள் தள்ளிய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு விட்டதாக அவர் முன்மொழிந்தார்.

ஏகாதிபத்திய சக்திகள் 1930 களில் செய்ததைப் போல, அவை ஒரு பேரழிவுகரமான நெருக்கடியை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்காது என்பதே அவரது நிலைப்பாட்டுக்கான மத்திய நியாயப்பாடாக இருந்தது. முதலாளித்துவ உள்முரண்பாடுகள் தவிர்க்கவியலாமல் அதன் பொறிவுக்கு இட்டுச் செல்கிறது என்ற மார்க்சிசத்தின் மத்திய சாராம்சத்தை அவர் நிராகரித்தார். ஆகவே, மண்டேலின் பகுப்பாய்வில் இருந்து, சோசலிச புரட்சிக்கான புறநிலைத் தேவை அங்கே இருக்கவில்லை என்பது வெளிப்பட்டது.

வருடாந்திர பதிப்பான Socialist Register இல் 1964 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் மண்டேல் பின்வருமாறு எழுதினார்:

பனிப்போர் நிலைமைகளின் கீழ் மற்றும் உலகளவில் முதலாளித்துவ-விரோத சக்திகள் எழுச்சியடைந்துள்ள நிலைமைகளின் கீழ், என்ன விலை கொடுத்தாவது 1929 போன்ற மந்தநிலை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டியதன் அவசியம், முதலாளித்துவத்திற்கு வாழ்வா-சாவா கேள்வியாக மாறியுள்ளது. ஒவ்வொரு அரசும், சுழற்சி முறையிலான கொள்கைகளுக்கு எதிரான உத்திகளையும் மற்றும் நுகர்வு சக்தியை மறுபங்கீடு செய்வதையும் மிகப் பெரியளவில் அதிகரிக்கின்றன. மறைமுகமான மானியங்களில் இருந்து “இழப்புகளைத் தேசியமயமாக்குவது” வரையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசு எல்லா வழிகளிலும் தனியார் இலாபத்திற்கு உத்தரவாதமளிக்கிறது. சமகால முதலாளித்துவத்தின் இந்த அம்சம் இப்போது அதன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகி உள்ளது. [1]

வேறு வார்த்தைகளில் கூறினால், ஏகாதிபத்திய அரசால் இப்போது தொடர்ச்சியான பல அதிகார கட்டுப்பாட்டு முறைகளைக் (checks and balances) கொண்டு முதலாளித்துவ முரண்பாடுகளைத் தீர்க்க முடியும். இது மார்க்சிச வார்த்தை தொனியில் அலங்கரிக்கப்பட்ட கேன்சியனிசமாக (Keynesianism) இருந்தது. அதாவது அரசு தலையீட்டின் மூலம், 1930 களில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமுறிவைத் தடுக்க முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஆளும் வர்க்கத்தால் நெறிப்படுத்த முடியும் என்பதாகும். இது தான் பப்லோவாத கலைப்புவாதத்திற்கான பொருளாதார நியாயப்பாடாக இருந்தது.

மண்டேலின் நிலைப்பாடு, 1965 இல் பிரிட்டனில் உள்ள தொழிலாளர்களின் கட்டுப்பாட்டு அமைப்பு (Institute for Workers’ Control) பிரசுரித்த மேற்கு ஐரோப்பாவுக்கான ஒரு சோசலிச மூலோபாயம் என்ற துண்டறிக்கையில், அனேகமாக இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது, பல்வேறு முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், தொழிற் கட்சி “இடதுகள்” மற்றும் தொழிற்சங்க எந்திரங்களின் “இடது” பிரிவுகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பாக இருந்தது.

அது பின்வருமாறு தொடங்குகிறது:

மேற்கு ஐரோப்பாவில் சோசலிச மூலோபாயம் மீதான விவாதம், 1929-1933 உடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு வீரியமான ஓர் உலகப் போரோ அல்லது ஒரு பொருளாதார நெருக்கடியோ அடுத்த தசாப்தத்தில் இருக்காது என்ற முக்கிய அனுமானத்தில் இருந்து தொடங்க வேண்டும். [2]

மண்டேலின் திருத்தல்வாதத்தின் அடிப்படையில் இருந்த முன்னோக்கையும், அது மார்க்சிசத்தின் அடித்தளத்திற்கு எதிராக இருந்ததையும் இதைவிடத் தெளிவாக வேறு எதுவும் கூற முடியாது.

புரட்சிகர கட்சியின் மூலோபாயம் என்ன? அது, இந்த சகாப்தத்தின் தன்மையை, போர்களினதும் புரட்சிகளினதும் சகாப்தமாக புரிந்து கொண்டு, அதில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் தயார் செய்வதே புரட்சிகரக் கட்சியின் அடிப்படைப் பணி என்பதை அடித்தளமாகக் கொண்டிருக்கும்.

ட்ரொட்ஸ்கி இந்த அதிமுக்கியமான கேள்வியை, லெனினுக்குப் பின் மூன்றாம் அகிலத்தில் கையாண்டார், அதில் அவர் எழுதினார்:

வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் பணியை, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சிகளுக்கு முதன்முதலில் மார்க்சிசம் முன் வைத்த காலத்தில் இருந்தே, புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இயல்பாக உருவாக்கப்பட்டன. [3]

முதலாளித்துவம் அப்போது அதன் வளர்ச்சிப் பருவத்தில் இருந்ததால், முதலாம் அகிலத்தால் தத்துவார்த்த ரீதியில் மட்டுமே இந்த கோட்பாடுகளை நெறிப்படுத்த முடிந்தது.

ட்ரொட்ஸ்கி தொடர்ந்து குறிப்பிட்டார், “இரண்டாம் அகிலத்தின் சகாப்தம், பேர்ன்ஸ்டைனின் இழிவார்ந்த வெளிப்பாட்டில் கூறினால்,” “இயக்கமே அனைத்தும், இறுதி இலக்கு என்று ஒன்றுமில்லை.” என்ற அணுகுமுறைகளுக்கும் கண்ணோட்டங்களுக்கும் இட்டுச் சென்றது. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், நாளாந்த பிரச்சினைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அதன் பகுதியளவிலான தந்திரோபாயங்களோடு நாளாந்த “இயக்கத்தினுள்” மூலோபாயப் பணி மறைந்துபோய், கரைக்கப்பட்டு விடுகிறது.

மூன்றாம் அகிலம் மட்டுமே கம்யூனிசத்தின் புரட்சிகர மூலோபாயத்திற்கான உரிமைகளை மீண்டும் நிறுவியதுடன், மற்றும் தந்திரோபாய அணுகுமுறைகளை முழுமையாக அதற்குக் கீழ்ப்படுத்தியது. [4]

ஆனால் மண்டேலின் கூற்றுப்படி, முதலாம் உலகப் போருடன் தொடங்கிய புரட்சிகர சகாப்தம் முடிந்து, முதலாளித்துவத்தின் ஒரு புதிய அமைதியான இயல்பான வளர்ச்சி காலகட்டம் தொடங்கி விட்டது. அரசியல் அதிகாரம் பற்றிய கேள்வியை நிகழ்ச்சிநிரலில் கொண்டு வரும் அளவுக்கு, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் இனி மீண்டும் ஒருபோதும் அந்தளவிற்கு தீவிரமடையாது என்று கூறப்பட்டது.

யதார்த்தத்தில், 1965-75 தசாப்தம், 1930 களின் பெருமந்தநிலை மற்றும் தொடர்ச்சியான வர்க்கப் போர்களின் வெடிப்புக்குப் பின்னர், மிகவும் குறிப்பிடத்தக்க பொருளாதார நெருக்கடியால் அடையாளப்படுத்தப்பட்டது.

அணுஆயுதப் போர் பற்றிய கேள்வியைப் பொறுத்த வரை, உலகை ஓர் அணுஆயுதப் பேரழிவின் விளிம்புக்குக் கொண்டு வந்திருந்த அக்டோபர் 1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்கு வெறும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், அப்படியொரு சாத்தியக்கூறு இல்லை என்று மண்டேல் வலியுறுத்தினார்.

போரும்-புரட்சியும் என்ற ஆய்வுரை தான் பப்லோவாத கலைப்புவாதத்தின் ஆரம்ப வெளிப்பாடாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், அதில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான ஓர் அணுஆயுதப் போர், சோசலிச மாற்றங்களுக்கு அடித்தளமாக இருக்கும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கச்செய்யும் என்று கூறப்பட்டது. மண்டேல் அவர் கண்டறிந்த புதிய யதார்த்தங்களை முன்வைத்தாலும், ஒரு தசாப்தத்திற்குச் சற்று கூடுதலான காலத்திற்கு முன்னர் அவர் எந்த முன்னோக்கைக் கொண்டிருந்தாரோ, நிச்சயமாக, அது கருத்தில் எடுக்கப்படவில்லை.

சோசலிசத்திற்கான உலகளாவிய வாய்ப்பும், போருக்குப் பிந்தைய வளர்ச்சியைக் குறித்த SLL இன் பகுப்பாய்வும்

ஏகாதிபத்திய சகாப்தத்தின் இயல்பு மீதான புரிதலை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிசத்தின் அரசியல் பொருளாதாரம் மீதான படைப்புகளின் சாராம்சம், முதலாளித்துவத்தின் அடித்தளத்தில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்தி, பின்னர் அந்த அடிப்படையில் இத்தகைய முரண்பாடுகள் முன்னிறுத்தும் பணிகளுக்கு முதலாளித்துவம் உருவாக்கிய தோற்ற வடிவங்களை ஊடுருவி தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படைகளைத் தயார் செய்வதாக இருந்தது. உடனடி நிலைமைகளைச் சமாளிக்கவும் மற்றும் வர்க்கப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்கும் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும், ஆனால் அவை இந்த அடித்தளத்தில் இருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக புறநிலைமை மீதான எந்தவொரு பகுப்பாய்வும், வர்க்கப் போராட்ட வளர்ச்சியை உள்ளடக்கியதாக இல்லையென்றால், அது அரைகுறையாக, முழுமையின்றியுமே இருக்கும். ஆகவே அது அடிப்படையிலேயே குறைபாடுடையதாக ஆகி விடுகிறது. ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி தயார் செய்வதற்கான புரட்சிகரக் கட்சியின் போராட்டமே இதில் மிக முக்கியமானதாகும்.

சோசலிசத்திற்கான உலகளாவிய வாய்ப்பு [Photo: Socialist Labour League]

மண்டேலின் அனைத்துப் படைப்புகளும் மார்க்சிசத்தின் இந்த இன்றியமையாத கூறு இல்லாமல் இருந்தபோதிலும், அது SLL இன் பகுப்பாய்வில் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றதுடன் மற்றும் 1961 இல் வெளியிடப்பட்ட சோசலிசத்தின் உலக வாய்ப்பு என்ற தலைப்பில் ஒரு முக்கிய ஆவணத்தில் சக்தி வாய்ந்தமுறையில் எடுத்துக்காட்டப்பட்டது.

1959 இல் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடித்தளத்தில் SLL நிறுவப்பட்டு சிறிது காலத்திற்குப் பின்னர் அந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவ நெருக்கடியை ஆராய்வதில் இருந்து சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) விலகியதே, 1950 களின் பிற்பகுதியில் அதன் குறிப்பிடத்தக்க பலவீனங்களில் ஒன்றாக இருந்தது. இந்த மாற்றம், பப்லோவாதத்தை நோக்கிய அவர்களின் எதிர்ப்பை மிருதுவாக்குவதுடனும், இறுதியில் மறுஐக்கியத்தை நோக்கிய நகர்வுகளுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது.

அடிப்படை புள்ளியைக் கூறுவதானால், தத்துவார்த்த வேலைகள் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே, புறநிலையான பொருளாதார ,நிலைமையைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ மதிப்பீட்டைச் செய்வது சாத்தியமாகும். இந்தக் காலக்கட்டத்தில் SLL தயாரித்த ஆவணங்களின் உள்ளடக்கம், இந்த இன்றியமையாத புள்ளியிலிருந்து பெறப்பட்டிருந்தது.

SLL முன்வைத்த அனைத்தும் முற்றிலும் தனித்துவமாக இருந்தது. அது போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் மேற்தோற்ற வடிவங்களை ஊடுருவி, அந்த அபிவிருத்திகளுக்கு அடித்தளத்தில் இருந்த சக்திகளையும் முரண்பாடுகளையும் எடுத்துக்காட்ட முற்பட்டது. இந்த அடித்தளத்தில் இருக்கும் நிகழ்ச்சிப்போக்குகள் எவ்வாறு ஒரு பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து, பெருந்திரளான மக்களைப் போராட்டங்களுக்கு முன்னிலையில் கொண்டு வரும் என்பதையும், அந்தப் போராட்டங்கள் மீண்டும் அரசியல் அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்றுவது பற்றிய கேள்வியை முன்னிறுத்தும் என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டினார்கள்.

SLL அதன் பகுப்பாய்வில், மண்டேல் போன்ற திருத்தல்வாதிகளின் முயற்சிகளையும், மற்றும் பப்லோவாதத்தின் கலைப்புவாதத்திற்கான பொருளாதார நியாயப்படுத்த்தலையும் உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளையும் எதிர்த்தது. அந்த ஆவணம் மறுஐக்கியத்தை நோக்கிய SWP இன் நகர்வுகளுக்கு எதிரான போராட்டத்தின் பாகமாகவும் இருந்தது.

அது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி பகுப்பாய்வு செய்ததைப் போல, ஏகாதிபத்திய சகாப்தத்தின் தன்மையை உறுதியாக விவரிப்பதில் இருந்து தொடங்குகிறது:

மனிதகுல வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்னரே, முதலாளித்துவத்தின் முற்போக்கான பங்களிப்பு முடிந்து விட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, ஏற்கனவே அது, ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமான, போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு சகாப்தத்திற்கு வந்திருந்தது. [5]

எதிர்விரோத முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே பிளவுபட்டிருந்த இந்த உலகம், உலகப் போர்கள் வெடிப்பின் வடிவில் எவ்வாறு “வன்முறையான மோதலுக்கு” வந்தது என்பதை அந்த ஆவணம் தொடர்ந்து விவரிக்கிறது. இந்த அரசுகளின் ஆளும் வர்க்கங்கள், உள்நாட்டிலும் மற்றும் காலனித்துவ நாடுகளின் தேசிய விடுதலை இயக்கங்களின் வடிவில் வெளிநாடுகளிலும், இரண்டு இடங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டுக்குத் தொடர்ச்சியான சவாலை முகங்கொடுத்தன.

முதலாளித்துவம் ஓர் அமைதியான மற்றும் ஸ்திரமான வளர்ச்சிக்கான நிலைமைகளை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை, “அது, ஒப்பீட்டளவில் அமைதியான காலகட்டங்களில் கூட, சீரழிவு மற்றும் வன்முறையை நோக்கிய ஒரு நிரந்தரமான போக்கை வெளிப்படுத்தியது.” [6]

1914 க்குப் பிந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் மற்றும் அரசுடமையாக்கும் நிகழ்வுப்போக்கை குறித்து SLL தொடர்ந்து பின்வருமாறு விவரித்தது:

முதலாளித்துவ வரலாற்றில், மிகவும் ’ஜனநாயக’ நாடுகளிலும் கூட, இந்தப் புதிய சகாப்தமானது, நிதி-மூலதனம் மற்றும் ஏகபோகத்தின் அதிகரித்து வந்த பலத்தாலும், ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக அரசு அமைப்புகள் மூலமாக சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் ஒருங்கிணைப்பாலும், இராணுவ ஒப்பந்தங்களுக்குத் தொழில்துறையில் முக்கியத்துவம் அதிகரித்ததில் இருந்தும் வெளிப்பட்டது. [7]

குறிப்பிட்ட காலங்களில் சில குறிப்பிட்ட நாடுகளுக்குள், முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளை இத்தகைய வளர்ச்சிகள் முறியடித்து விட்டதாகத் தோன்றினாலும், இது எப்போதும் தற்காலிகமானதாக இருந்ததையும் அது தெளிவுபடுத்தியது. மேலும் என்னவென்றால், உருவாக்கப்பட்ட தற்காலிக பொறிமுறைகள் அனைத்தும் முரண்பாடுகளை ஆழமாக்கி நெருக்கடியை புதிய உச்சத்திற்கு உயர்த்துகின்றன. அந்த ஆவணம் கூறுவது போல், “இறுதி விளைவு, சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை ஆழப்படுத்தி, முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான இருப்பால் மனிதகுலத்திற்கு ஆபத்து அதிகரிப்பதாக இருக்கிறது.” [8]

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து எழுந்த தோற்ற வடிவங்களைக் கையாள்கையில், அந்த உலக முன்னோக்கிற்கான தீர்மானம் பின்வரும் முக்கிய புள்ளியைக் குறிப்பிடுகிறது:

தோற்றத்தில் இன்றைய முதலாளித்துவத்தின் வழிமுறைகள், முன்னேறிய நாடுகளில் ‘நலன்புரி அரசுமுறை’ கொள்கை மூலமாகவும் மற்றும் ‘காலனித்துவ சுதந்திரம்’ கொள்கையிலும், இரண்டிலும், கடந்த காலத்தை விட அதிக அமைதி உள்ளன. உண்மையில் ‘நவ முதலாளித்துவம்’ எனப்படும் இத்தகைய கொள்கைகள் போருக்கு முன்னர் பாசிசத்தில் தஞ்சமடைவதற்கும் மற்றும் பலமான ஆயுத முறைகளில் தஞ்சமடைவதற்கும் தேவைப்பட்ட அதே தேவைகளில் இருந்தே எழுகின்றன மற்றும் துல்லியமாக அதே முடிவுகளில் போய் முடிகின்றன. அவநம்பிக்கையுடன் சாமானிய மக்களின் கூறுபாடுகளை உள்ளிணைத்து, பாசிச இயக்கங்களை உருவாக்குவதற்கான தேர்வு அபாயகரமானது. இதை முதலாளித்துவ வர்க்கம் தவிர்க்கவே விரும்புகிறது. நாடாளுமன்றம் மூலமாகவோ, அதிகாரத்துவம், அரசியல் கட்சிகள், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கம் மூலமாகவோ சமாளிக்க முடியுமானால் அதையே அது தேர்ந்தெடுக்கிறது.

அதே போல, காலனி நாடுகளில், ஏகாதிபத்தியவாதிகள் படைகளைக் கொண்டு அல்லாமல் வேறு வழியில் அவர்களின் இடத்தைத் தக்க வைக்க முடியாது என்பதால் அதற்காக அவர்கள் போதுமானளவுக்குப் பெரும்பிரயத்தனத்துடன் போராடுகின்றார்கள். ஆனால் உலக சக்திகளின் சமநிலையானது அடக்குமுறையின் மூலம் காலனிகளின் மீது அரசியல் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதை அதன் அறிவார்ந்த பிரதிநிதிகள் முடிந்தவரை தவிர்க்க முயல்கின்றனர். இந்த அணுகுமுறை மாற்றங்கள், முதலாளித்துவமே மாறிவிட்டதைக் குறிக்காது. [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது] அல்லது தற்போதைய போக்கை நிரந்தரமானது என்றோ அல்லது பல்வேறு நாடுகளில், தேவைப்படும் போது, முதலாளித்துவ வர்க்கங்கள் பாசிசத்தில் தஞ்சம் அடையாது என்றோ அல்லது அதன் அந்தஸ்து அச்சுறுத்தப்படும் போது அதைத் தக்க வைக்கவோ அல்லது பாதுகாக்கவோ சர்வதேச அளவில் அவை படைகளைப் பயன்படுத்துவதில் தஞ்சமடையாது என்றோ கருத முடியாது. [9]

இந்த பத்தி அதன் முன்னறிவானால் வியப்பூட்டுகிறது. அந்தக் காலகட்டத்தின் மற்ற எந்தவொரு அரசியல் போக்கையும் போலில்லாமல், SLL ஆல் முதலாளித்துவ செயல்முறையின் தோற்ற வடிவங்களைக் கையாள முடிந்தது, அதேவேளையில் அது இந்த தோற்ற வடிவங்கள் எவ்வாறு உள்ளார்ந்த முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன என்பதையும் ஆழமாகக் கையாண்டது.

டிசம்பர் 1960 மற்றும் ஜனவரி 1961 பெல்ஜிய பொது வேலைநிறுத்தத்தில் இருந்தும் SLL தொலைநோக்குடன் தீர்மானங்களை எடுத்தது. அந்த வேலைநிறுத்தத்தில் பெல்ஜிய அரசாங்கம், காங்கோவில் அதன் காலனித்துவத்தை இழந்ததற்கு எதிர்வினையாக, பெல்ஜிய மூலதனத்தைப் போட்டித்தன்மை கொண்டதாகச் செய்யவும் மற்றும் அந்தக் காலனி நாட்டை இழந்ததற்கான விலையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தவும் தொடர்ச்சியாக பல சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு வர முயன்றது. இதனால் சுமார் 700,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கினார்கள். பொலிஸ் படையைப் (Gendarmerie) பயன்படுத்தியும், நேட்டோ துருப்புகளை நாட்டுக்கு திரும்ப அழைத்ததன் மூலமாகவும் கூட பெல்ஜிய அரசாங்கம் அதற்கு விடையிறுப்பைக் காட்டியது.

மண்டேலின் கருத்துருவாக்கங்களைப் போலவே ஒவ்வொரு முதலாளித்துவ பொருளாதார மற்றும் திருத்தல்வாத கருத்துருவாக்கங்களுக்கு எதிராகவும், SLL பின்வருமாறு எழுதியது: “60 களில் இருந்த சாத்தியக்கூறு, ஒரே நிலையான தொடர்ச்சியான விரிவாக்கம் அல்ல, மாறாக மந்தநிலைமைகள் மற்றும் நெருக்கடிகளால் சூழப்பட்ட முக்கிய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே சந்தைகளுக்கான போராட்டம் அதிகரித்தளவில் சிக்கலாகி கொண்டிருந்தது. இத்தகைய நிலைமைகளில், குறைந்தபட்ச தயாரிப்புகளைச் செய்திருந்த, முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் சில பிரிவுகளும் கூட நிச்சயமாக கடுமையான அழுத்தங்களை அனுபவிக்க உள்ளன. டிசம்பர் 1960 மற்றும் ஜனவரி 1961 இல் பெல்ஜிய நிகழ்வுகள், எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகளுக்கும், அவற்றை எதிர்க்க ஆளும் வர்க்கம் பயன்படுத்த இருக்கும் அணுகுமுறைகளுக்கும் ஒரு முன்னறிவிப்பாக இருந்தன.” [10]

இந்தப் பகுப்பாய்வு, திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் நெருக்கமாக இணைந்திருந்தது. உடனடி நிகழ்ச்சிநிரலில் சோசலிசப் புரட்சி விலக்கி வைக்கப்பட்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் புரட்சிகரக் கட்சியின் மிகவும் தீர்க்கமான தயாரிப்பு, சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களில் இருந்தும் மார்க்சிச, அதாவது, ட்ரொட்ஸ்கிச போக்கைப் பிரித்து வைப்பதாக உள்ளது. எழவிருக்கும் மக்கள் போராட்டங்களை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நனவுபூர்வமான போராட்டமாக மாற்றுவதில், கட்சியானது, முக்கிய காரணியாக உள்ளது என்ற புரிதலின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் பணி, 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல தொழிலாள வர்க்கத்தின் பாரிய புரட்சிகர இயக்கங்களுக்கு மட்டுமல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடிக்கும் வழிவகுத்த காலகட்டமான, 1960 களின் பிற்பகுதியில் உருவாக இருந்த சிக்கலான பொருளாதார அபிவிருத்திகளைப் புரிந்து கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது.

பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தமும், மார்ஷல் திட்டமும்

இதைப் புரிந்து கொள்வதற்கு, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு முறையை நாம் கவனிக்க வேண்டும். போரைத் தொடர்ந்து, பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தமும் மார்ஷல் திட்டமும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையின் இரண்டு இன்றியமையாத ஊண்டுகோல்களாக இருந்தன. 1944 இல் தொடங்கப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் திட்டம், உலகப் பொருளாதாரத்தின் மறுகட்டமைப்பிற்கு அடித்தளமாக இருந்தது. அது, அமெரிக்க பொருளாதார பலத்தின் அடிப்படையில் அமெரிக்க டாலரை உலக நாணயமாக நிறுவியது. 35 அமெரிக்க டாலருக்கு ஓர் அவுன்ஸ் தங்கம் என்ற நிலையான செலாவணி விகிதத்தில் அமெரிக்க டாலர்களைத் தங்கமாக மாற்றிக் கொள்ள அது உத்தரவாதம் வழங்கியது. இந்தப் புதிய நிதி அமைப்புமுறையைக் கண்காணிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) உருவாக்கப்பட்டது.

ஆனால், ஒரு புதிய நிதிய அமைப்பு முறையை நிறுவுவதற்கு இது மட்டுமே போதுமானதில்லை. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்கவும் அவை வாங்கப்படவும் ஒரு சந்தை தேவைப்பட்டது. இந்தப் பிரச்சினை, மூலதன சுழற்சியை நடைமுறைப்படுத்தும் பிரச்சினையோடு பிணைந்துள்ளது.

முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் பொருட்களை உற்பத்தி செய்வதல்ல, இது இறுதி நோக்கத்திற்கான ஒரு வழிவகை தான். பணத்தின் வடிவத்திலையே மூலதனத்தின் சுழற்சி நிகழ்கின்றது. விவரித்துக் கூறினால், மூலப் பொருட்கள், உற்பத்திச்சாதனங்கள் மற்றும் ஒரு பண்டமாக உழைப்பு சக்தி உட்பட பண்டங்களைக் கொள்முதல் செய்வதற்குப் பண மூலதனம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பின்னர் இவை, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பை உறிஞ்சி, பண்டங்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பதன் மூலம், உபரி மதிப்பு மீண்டும் பணமாக மாற்றப்படுகின்றது, இவ்விதத்தில் மூலதனச் சுழற்சி தொடர்ந்து இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்ச்சிப்போக்கு, மதிப்பை மீண்டும்பெறும் பிரச்சினை (realisation problem) எனப்படுவதை உருவாக்குகிறது. அதாவது பண்டங்களை மீண்டும் பணமாக மாற்றும் பிரச்சினையை உண்டாக்குகிறது. இந்த சுழற்சி வட்டத்தில் மதிப்பை மீண்டும்பெறும் பிரச்சினை ஏற்படுவது ஏனென்றால், பண்டங்கள் விற்கவில்லை என்றால், அல்லது குறைந்த விலையில் விற்கப்பட்டால், அவற்றில் உள்ளடங்கியுள்ள உபரி மதிப்பில் ஒரு பகுதி மீண்டும் பெறப்படவில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.

ஆனால், இதை இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டும், உற்பத்தியானது, அதாவது உபரி மதிப்பை உறிஞ்சுவதே, முதலாளித்துவ அமைப்புமுறையின் உந்து சக்தி என்பதோடு, சுழற்சியில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையும் இறுதியில் இங்கே தான் வேரூன்றி உள்ளது.

ஓரிடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உபரி மதிப்பு இன்னொரு இடத்தில் அதன் மதிப்பை திரும்ப பெற்றாக வேண்டும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். உபரி மதிப்பைப் பெறுவது, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களைக் கொள்முதல் செய்யும் மற்ற முதலாளித்துவவாதிகளின் உயிர்வாழ்வைச் சார்ந்துள்ளது. உதாரணமாக ஒரு தொழில்துறையின் முதலாளித்துவவாதிகள், மற்ற துறையில் உள்ள முதலாளித்துவவாதிகள் அல்லது நுகர்வோரின் தேவையுடன் தொடர்புற்று பொருட்களை உற்பத்தி செய்யாவிட்டால், உற்பத்தியின் மூலம் உருவாக்கப்பட்ட உபரி மதிப்பை முழுமையாகக் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது.

இடமிருந்து வலமாக: ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன், வெளியுறவுத் துறை செயலர் ஜோர்ஜ் சி. மார்ஷல், பொருளாதார கூட்டுறவு நிர்வாகி பௌல் ஹோஃப்மன், மற்றும் தூதர் அவெரெல் ஹாரிமன் ஆகியோர் நவம்பர் 29, 1948 இல் ஓவல் அலுவலகத்தில் மார்ஷல் திட்டத்தை விவாதிக்கின்றனர்.

அமெரிக்க முதலாளித்துவம் போருக்குப் பின்னர் ஏன் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு புத்துயிரூட்ட வேண்டி இருந்தது என்பதற்கான காரணத்தை இங்கே நாம் காண்கிறோம். கடந்த கால ஏகாதிபத்திய உள்விரோதங்கள் தீர்க்கப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய, நட்புருவான வடிவில் உருவெடுக்கவில்லை. அமெரிக்காவில் உறிஞ்சப்பட்ட உபரி மதிப்பை மீண்டும் கைவரப் பெறுவதற்காக, அமெரிக்க பண்டங்களுக்கான ஒரு சந்தையையும், ஐரோப்பாவில் பொருளாதார விரிவாக்கத்தையும், அத்துடன் அமெரிக்க முதலீட்டுக்கான இலாபகரமான துறைகளையும் உறுதிப்படுத்த, ஐரோப்பாவிலும் உபரி மதிப்பை உறிஞ்ச வேண்டியதாக இருந்தது.

இதற்காக, ஐரோப்பிய முதலாளித்துவத்திற்குப் புத்துயிரூட்டுவது இன்றியமையாததாக இருந்தது. இதுதான் 1947-48 இல் இது மார்ஷல் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் இருந்தது. இத்தகைய ஒரு திட்டம் செயல்படுத்தாவிட்டால், ஐரோப்பா, மந்தநிலைக்கு இல்லையென்றாலும், பின்னடைவுக்குச் செல்லும், அது அரசியல் ஸ்திரப்பாட்டு இயங்குமுறைகளை உடைக்க அச்சுறுத்தும் விதத்தில் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. இதில் குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்சின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் வகித்த பாத்திரமும் உள்ளடங்கும். அவை மதிப்பிழந்திருந்த முதலாளித்துவத்தை மீண்டும் பீடத்தில் தூக்கி நிறுத்தின.

மார்ஷல் திட்டத்தின் மற்றொரு அம்சம் என்னவெனில் அது ஐரோப்பா-தழுவியமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகும். அமெரிக்கத் தொழிற்துறை முறைகளை அறிமுகப்படுத்தி ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உற்பத்தித் திறன் உயர்த்தப்பட்டது. இது தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டல் விகிதத்தைப் பெருக்கி, உபரி மதிப்பை பாரிளயளவில் அதிகரித்தது.

ஆனால் போருக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் அமெரிக்கா அனுபவித்து வந்த தொழில்துறை மேலாதிக்கம் அரிக்கப்பட்டதை அர்த்தப்படுத்திய இந்த நிகழ்ச்சிப்போக்கை, 1961 இல் SLL பகுப்பாய்வு செய்திருந்தது. ஐரோப்பிய பொருளாதார மறுமலர்ச்சி, ஒருபுறம் ஒப்பீட்டளவில் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் அரசியல் பேரம்பேசலுக்கான பலத்தை அதிகரித்தது, மறுபுறம் அதற்கு முந்தைய காலகட்ட விளைவுகளைப் போலில்லாமல் தொடர்ச்சியாக பல புதிய பொருளாதார விளைவுகள் ஏற்பட்டிருந்ததை SLL பகுப்பாய்வு சுட்டிக்காட்டியது.

கடந்த இரண்டாண்டு காலத்தில் மிகப் பெரியளவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள கையிருப்பு பற்றாக்குறையால் டாலர் பலவீனமடைந்திருப்பது இதன் ஒரு கூர்மையான பிரதிபலிப்பாக உள்ளது. டாலரின் பலவீனம், பகுதியளவில், மற்ற செலாவணிகள் பலமடைந்திருப்பதன், அதுவும் குறிப்பாக ஜேர்மன் நாணயமான மார்க் (mark) பெரியளவில் பலமடைந்திருப்பதன் பிரதிபலிப்பாகும். மேலும் இது மிகப் பெரியளவில் இராணுவச் செலவுகள் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான உதவிகளை உள்ளடக்கிய உலகிற்கான அமெரிக்க மூலோபாய பொறுப்புறுதிகள் மீதும் பிரதிபலிக்கிறது. ஐரோப்பிய மையங்களில் கிடைத்த அதிக வட்டி விகிதங்கள், நிதியங்கள் இடம் பெயர்வதற்கு வழி வகுத்தன. மேலும் 1960 ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையே ஏற்பட்டதைப் போல டாலர் மதிப்பிழக்கக்கூடும் என்று தெரிந்த போது இத்தகைய ஊக பரிவர்த்தனைகள் வெறித்தனமாக அதிகரித்தன. இது டாலரின் சிக்கல்களுக்கு கூடுதலாக பங்களித்தது. [11]

ஓர் உலக சக்தியாக இருப்பதிலிருந்து அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஏற்படக்கூடிய வீழ்ச்சியை, இந்த ஆரம்ப கட்டத்திலேயே, பரிந்துரைப்பது தவறாக இருக்கும் என்று SLL குறிப்பிட்டது. இருப்பினும், “அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளரவோ அல்லது பாரியளவில் ஆயுதங்களுக்காக செலவிடவோ திறனற்று இருப்பது, மிகவும் பலமான அந்த முதலாளித்துவமும் கூட நெருக்கடியில் இருப்பதைக் காட்டுகிறது,” என குறிப்பிட்டது. [12]

புரட்சிகரத் தலைமை வகிக்கும் பாத்திரத்தை அடையாளம் கண்டதே இந்த 1961 ஆவண பகுப்பாய்வில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரால் பிரான்ஸ் “ஐரோப்பாவின் நோயாளியாக” ஆகியிருந்தது. [13] ஐந்தாம் குடியரசில் ஒரு போனபார்டிச தலைவராக பாத்திரம் வகிக்க சார்லஸ் டு கோல் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டதே கூட, நெருக்கடியிலுள்ள ஓர் ஆட்சியின் நடவடிக்கையாகும்.

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் பெருந்திரளான குட்டி-முதலாளித்துவவாதிகள் மூலமாகவும் மற்றும் இளைஞர்களின் தீவிரமயப்படல் மூலமாகவும் எழுந்த பல்வேறு போக்குகளையும் அடையாளம் கண்டு, குறிப்பாக வளர்ந்து வந்த மக்கள் உரிமை இயக்கங்களைக் சுட்டிக்காட்டி, அமெரிக்காவில், சமூகத்தின் முக்கிய பிரிவினரிடையே “உறைபனி” அடுக்குகள் உடைவதற்கான அறிகுறிகளை SLL அடையாளம் கண்டது.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க சூழலில் அந்த மார்க்சிச கட்சி வகித்த பாத்திரம் குறிப்பிடத்தக்கக் காரணியாக இருந்ததை அது குறிப்பிட்டது. சோசலிச தொழிலாளர் கட்சியின் தோள்களில் அளப்பரிய அரசியல் பொறுப்பு இருப்பதைக் குறிப்பிட்ட அது, “முழுமையான தெளிவும் உறுதியான அரசியல் நிலைப்பாடும் இல்லாமல்” அந்தப் பொறுப்புக்களை “நிறைவேற்ற முடியாது,” என்று குறிப்பிட்டது. [14]

சோசலிச தொழிலாளர் கட்சியின் புரட்சியாளர்கள் இந்த ஆபத்துகளுக்கு எதிராக, அவ்வப்போது தங்கள் சொந்த அரசியல் பணிகளை மீண்டும் மீண்டும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒப்பீட்டளவில் அரசியல்ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த நீரோட்டத்திற்கு எதிரான நிலையான போரில், எதிர்பாராமல் உண்மையான நோக்கத்தில் இருந்து மெதுவாக திசைதிருப்பம் ஏற்படலாம். அன்னிய போக்குகளுக்கு இடமளிக்கும் குறுக்குப் பாதையையும் மற்றும் கூட்டணிகளையும் தேடி, மற்றும் உறுதியான தத்துவார்த்த அடித்தளங்கள் இல்லாத மறுகுழுவாக்கங்களையும், அமெரிக்க தனித்துவமான தன்மைகளாகக் கருதுவதற்கு ஏற்ற வேலைத்திட்ட தழுவல்களையும் தேடி அமெரிக்க சோசலிஸ்டுகள் 1917 க்குப் பிந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து தடம் புரண்டுள்ளனர். இத்தகைய அபாயங்கள் சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர்களின் சொந்த கொள்கை மற்றும் சிந்தனைகளைப் பாதிக்கும் என்பதால், அவர்கள் தொடர்ந்து இவற்றின் மீது கவனம் செலுத்தவேண்டும். [15]

சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் நிலைப்பாடும், இந்த முக்கிய அரசியல் மற்றும் தத்துவார்த்த கேள்விகளுக்கு அது செலுத்திய கவனமும், பப்லோவாத அழுத்தங்களின் கீழ் ட்ரொட்ஸ்கிச இயக்கம் கலைக்கப்படுவதைத் தடுத்தது. போருக்குப் பிந்தைய வளர்ச்சியில் இருந்த முரண்பாடுகளைக் குறித்த புரிதல் உட்பட, முக்கிய படிப்பினைகள் மீதான பயிற்சியும் மறுஆய்வுகளும் தான், 1966 இல் வேர்க்கர்ஸ் லீக்கையும் 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் [RCL] ஸ்தாபிப்பதற்கு அடித்தளம் அமைத்தன.

அதிகரித்து வந்த முதலாளித்துவ முரண்பாடுகளும், நிலைமுறிவு பற்றிய மார்க்சிச தத்துவமும்

ஆனால், போருக்குப் பிந்தைய வளர்ச்சி மற்றும் அது முன்வைத்த முரண்பாடுகளின் அழுத்தங்கள் பற்றிய கேள்வியை இது எந்த வகையிலும் முடிவுக்கு கொண்டு வந்து விடவில்லை. பப்லோவாதத்தை தழுவி இருந்த மண்டேல், அரசியல் பொருளாதாரத் துறையில் அதன் முக்கிய சித்தாந்தவாதிகளில் ஒருவராக வளர்ந்தார். பல்கலைக்கழக வளாகங்களில் திருத்தல்வாதிகளால் குறிப்பிடப்படுபவராகவும், அவரது எழுத்துக்கள் அதிகம் வாசிக்கப்படும் மிக முக்கியமான ஒருவராகவும் ஆனார்.

இந்தக் காலகட்டத்தில், பேரழிவைப்பற்றி பரப்புவதாகவும், மிகைப்படுத்தலுக்காகவும் SLL தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக இருந்தது. இருப்பினும் SLL அடையாளம் கண்ட முரண்பாடுகள் 1960 களின் பிற்பகுதியில் முன்னுக்கு வந்தன.

1958 இல் பிரெட்டன் வூட்ஸ் முறையை முழுமையாகச் செயல்படுத்தி, பிரிட்டிஷ் பவுண்டை முழுமையாக டாலருக்கு மாற்றிக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர், இன்றிருக்கும் இந்த உலகளாவிய நிதிய அமைப்புமுறையின் பிறப்பிடமாக உருவான, யூரோ டாலர் சந்தை என அறியப்பட்டதை உருவாக்குவதில் இலண்டன் நகரம் முக்கிய பங்கு வகித்தது.

நவம்பர் 1967 இல், ஏற்றுமதியை விட இறக்குமதியில் அதிகமாக செலவழித்து வந்த பிரிட்டனின் கையிருப்பு பற்றாக்குறையின் காரணமாக, பிரதம மந்திரி ஹரோல்ட் வில்சன் அரசாங்கம், பிரிட்டிஷ் ஏற்றுமதிகளை சர்வதேச சந்தைக்கு உகந்த விதத்தில் மாற்றுவதற்காக பவுண்டின் மதிப்பைக் குறைக்க முயன்றது. இது டாலரை விட்டு விலகும் ஓர் ஓட்டத்தைத் தூண்டியது. முதலீட்டாளர்கள் தங்கத்தைப் பாதுகாப்பான மதிப்பாக பார்த்ததால், அவர்கள் தங்கள் டாலர்களைத் தங்கமாக மாற்ற முயன்றனர். இது அமெரிக்க தங்க கையிருப்புகள் மீது பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியது.

மார்ச் 1968 வாக்கில் தங்க தேக்க நெருக்கடி (Gold Pool Crisis) உருவானது. இதன்போது புதிய நிதிய அமைப்புமுறையான பிரெட்டன் வூட்ஸ் முறையில் மிகமுக்கியமானதாக இருந்த ஏற்றுக் கொள்ளப்பட்ட தங்க விலை நிர்ணய முறை அச்சுறுத்தலுக்கு உள்ளானதால், தங்கத்திற்கான சந்தைகள் பல வாரங்களுக்கு மூடப்பட்டன. 1971 இல் தங்கத்தின் பின்புலத்தில் இருந்து டாலர் பிரிக்கப்படலாம் என்று அனுமானித்து, தங்கத்தின் விலை நிர்ணயத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் ஒரு புதிய இரட்டை அடுக்கு முறையோடு சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

1971 இல் தங்கம்-டாலரின் தொடர்பு உடைக்கப்பட்டது. அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தங்கத்தைக் கொண்டு டாலரை ஆதரிக்கும் இந்த முறையை நீக்கியதன் மூலம், தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து எதிர்மறையாக சென்று விட்டிருந்த வர்த்தகப் பற்றாக்குறை அழுத்தங்களுக்கு விடையிறுத்தார். பிரெட்டன் வூட்ஸ் நாணய முறையின் மைய அச்சு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

ஒரு மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடி வளர்வதைத் தவிர்ப்பதற்காக இது செய்யப்பட்டது. அமெரிக்காவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதே பிரெட்டன் வூட்ஸ் முறையைத் தக்க வைப்பதற்கான ஒரு வழியாக இருந்திருக்கலாம். அது அமெரிக்க நிதியச் சந்தைகளுக்குள் மீண்டும் டாலர்களைக் கொண்டு வந்திருக்கக் கூடும். ஆனால் இது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இரண்டு இடங்களிலும் ஒரு மந்தநிலையைத் தூண்டி விட்டிருக்கும். அதிகரித்தளவில் பல போர்க்குணமிக்க போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், இது ஒரு மிகப் பெரிய அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தி இருக்கும்.

முதலாளித்துவம் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்து விட்டது என்றும், பழைய முரண்பாடுகள் களையப்பட்டு விட்டன என்றும் கூறப்பட்ட எல்லா வாதங்களும், இந்தக் குறுகிய காலகட்டத்திலேயே, வெடித்து சிதறின. இருப்பினும் இது மண்டேலுக்கு அவரது பொருளாதார பகுப்பாய்வை மறுபரிசீலனை செய்வதற்கான சந்தர்ப்பமாக இருக்கவில்லை. இதற்கு நேர்மாறாக அவர் கூடுதலாக வலதுக்கு நகர்ந்தார். இது ஏனென்றால், அனைத்திற்கும் மேலாக, அவரது பகுப்பாய்வு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதில் இருந்து உருவாகியிருந்தது.

ரட்கேர்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த 1968 சோசலிஸ்ட் அறிஞர்கள் மாநாட்டுக்கு வழங்கிய ஓர் ஆய்வறிக்கையில் மண்டேல் குறிப்பிடுகையில், “நவ-முதலாளித்துவம்” என்பது வெறுமனே ஒரு வார்த்தை இல்லை, மாறாக ஒட்டுமொத்த புதிய வரலாற்று முன்னோக்கின் வளர்ச்சியை அது எவ்வாறு உள்ளடக்கியது என்று உரையாற்றினார்.

சில ஐரோப்பிய அரசியல்வாதிகளும் சமூகவியலாளர்களும், ‘நவ-முதலாளித்துவம்’ குறித்து பேசுகையில், சமூகம் முதலாளித்துவத்தின் சில அடிப்படை பண்புகளை கைவிட்டு விட்டது என்ற அர்த்தத்தில் பேசுகிறார்கள். இதை நான் மிகவும் திட்டவட்டமாக மறுக்கிறேன். ஆகவே, எதிர்மாறாக பண்டைய முதலாளித்துவத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு சமூகம் என்பதை நான் ‘நவ-முதலாளித்துவம்’ என்ற வார்த்தையோடு இணைக்கிறேன்.

எவ்வாறிருப்பினும் 1929-32 இன் பெருமந்தநிலையில் இருந்தும் அல்லது இரண்டாம் உலகப் போரில் இருந்து தொடங்கி, முதலாளித்துவம் அதன் மூன்றாவது வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளது என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன். 19 ஆம் நூற்றாண்டின் பண்டைய சுதந்திர முதலாளித்துவத்தில் (laissez-faire capitalism) இருந்து ஏகபோக முதலாளித்துவம் வேறுபட்டது என்று லெனின், ஹெல்பெர்டிங் மற்றும் பிறர் விவரித்த நிலையில், இது ஏகபோக முதலாளித்துவத்தில் இருந்து வேறுபட்டது. [16]

லெனின் பகுப்பாய்வு செய்திருந்தவாறு, ஏகாதிபத்திய சகாப்தத்தின் இயல்பைக் குறித்த அடிப்படை புரிதலும் மற்றும் நான்காம் அகிலத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றைக் குறித்த அடிப்படை புரிதலும் இங்கே முற்றாக நிராகரிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

1920 இல் விளாடிமிர் லெனின்

ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார உள்ளியல்பில் ஏகபோக முதலாளித்துவமாக இருப்பதாக லெனின் பகுப்பாய்வு செய்தார். ஏகாதிபத்தியத்தைக் குறித்த இந்த வரையறை, கட்சி எதிர்கொண்டிருந்த பணிகளுடன் பிணைந்திருந்தது. ஏகபோக முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு அடியில் வெறுமனே நிறுவனங்களின் பிணைப்பு மட்டும் இல்லை, உற்பத்தியின் சமூகமயமாக்கல் இருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினார், “ஒரு கவசக் கூடு போன்றிருக்கும் தனியார் பொருளாதாரம் மற்றும் தனிச்சொத்துறவுகள் இப்போது அதன் உள்ளடக்கங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. இந்த கூட்டை நீக்குவதைச் செயற்கையாக தாமதித்தாலும், அது தவிர்க்கவியலாமல் சீரழிவுக்கு உள்ளாகும். இந்தக் கூடு வெகு நீண்ட காலத்திற்குச் சீரழிந்த நிலையிலேயே வேண்டுமானால் இருக்கக் கூடும் (மிகவும் மோசமானால், சீழ்பிடித்த சந்தர்ப்பவாதத்தைக் குணப்படுத்துவது நீண்டால், அது தவிர்க்கவியலாமல் அகற்றப்படும்.)” [17]

ஏகாதிபத்தியத்திற்கும் மார்க்ஸ் காலத்திய போட்டியிடும் முதலாளித்துவத்திற்கும் (competitive capitalism) இடையிலான வித்தியாசம் என்னவென்றால், சோசலிசம் மிகவும் நல்லதாக இருந்திருக்கும் என்றாலும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் முதலாளித்துவமே இன்னமும் முற்போக்கான பாத்திரம் வகிக்கிறது என்று முன்னர் கூறப்பட்டிருக்கலாம். இப்போது, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவது வரலாற்று அவசியமாக மாறிவிட்டது. உயர்ந்த மட்ட சமூக-பொருளாதார ஒழுங்கிற்கு மாறுவதை உள்ளடக்கிய சோசலிசத்திற்கான சடரீதியிலான அடித்தளம் ஏகபோக முதலாளித்துவத்தின், அதாவது ஏகாதிபத்தியத்தின் சமூகமயப்பட்ட உற்பத்தியால் நிறுவப்பட்டுவிட்டது.

ஆனால் மண்டேல் கூற்றுப்படி, ஏகாதிபத்தியம் அதுவே போட்டியிடும் முதலாளித்துவத்தில் இருந்து வேறுபட்டது என்பதால், நவ-முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், லெனின் காலத்திய சந்தர்ப்பவாதிகள் சரியாக இருந்தார்கள் என்றும், ரஷ்ய புரட்சி காலத்திற்கு முன்கூட்டியே நடந்து விட்டது, லெனின் மற்றும் போல்ஷிவிக்குகள் பின்பற்றிய வேலைத்திட்டத்திற்கு எந்தப் புறநிலை அடித்தளமும் இல்லை என்றும் அர்த்தமாகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகள், தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பையும் தேவையையும் கொண்டு வரும் நிலைமைக்குரிய புள்ளியை எட்டும் என்ற தத்துவமான, மார்க்சிசத்தின் நிலைமுறிவு தத்துவத்தையும் (Marxist theory of breakdown) இந்த முன்னோக்கு நிராகரிக்கிறது.

இந்த விஷயத்தை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். நாம் காக்கும் மரபியத்தின் அத்தியாயம் 30 இல் டேவிட் நோர்த் பின்வரும் புள்ளியை குறிப்பிடுகின்றார்: முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் இயக்கம், தவிர்க்கவியலாமல் அதன் பொறிவுக்கு வழி வகுக்கிறது என்பது மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தின் நிரூபிக்கப்பட்ட தேற்றமாகும். இதை மறுத்தால், பின்னர் புறநிலையாக சோசலிசத்திற்கான தேவையே இல்லை என்றாகிவிடுகின்றது.” [18]

நாம் காக்கும் மரபியம்

முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடி மீதான இந்தப் பகுப்பாய்வின் மத்தியில், இலாப வீத வீழ்ச்சி போக்கு விதி அமைந்துள்ளது. வரலாற்று கண்ணோட்டத்தில், மார்க்ஸ் அதை அரசியல் பொருளாதாரத்தின் மிக முக்கிய விதியாக வகைப்படுத்தி இருந்ததால், இந்த முக்கிய கேள்வியைக் கையாள்வதில் அவர் பெரும் நேரத்தைச் செலவிட்டார்.

காலப்போக்கில் முதலாளித்துவம் வளர்ச்சியடையும் போது இலாப விகித வீழ்ச்சிக்கான உள்ளார்ந்தபோக்கும் செல்வ திரட்சியின் நிகழ்ச்சிப்போக்குடன் பிணைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பை உறிஞ்சுவதில் இருந்து அதிக இலாபங்களைப் பெறுவதற்கும் மற்றும் அதிக செல்வ வளத்தைத் திரட்டவும் முயல்கிறது.

உற்பத்திதிறனையும் இலாபத்தையும் அதிகரிப்பதற்காக, முதலாளித்துவவாதிகள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். இது மூலதனத்தின் இயல்பான உட்கூறு (organic composition of capital) அதிகரிக்க வழி வகுக்கிறது. அதாவது உற்பத்திக்குத் தேவைப்படும் இயந்திரங்கள், மூலப் பொருட்கள், இதர பிற நிலையான மூலதனத்திற்கும், மற்றும் உழைப்பு சக்திக்கான செலவான மாறுபடும் மூலதனத்திற்கும் இடையிலான விகிதத்தை இது குறிக்கும்.

இந்த புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது, மொத்த மூலதன முதலீட்டில் நிலையான மூலதனத்தின் பங்கு மாறுபடும் மூலதனத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிக்கிறது. உபரி மதிப்பிற்கான ஒரே ஆதாரமான அதாவது இலாபங்கள், தொழிலாள வர்க்கத்தில் இருந்து தொடர்ந்து பெறப்படும் உயிருள்ள உழைப்பாகும். ஆனால் இந்த உயிருள்ள உழைப்பானது, அதிகரிக்க வேண்டிய மொத்த மூலதனத்தில் பெருமளவில் மிகச் சிறிய பகுதியாக உள்ளது.

இதன்விளைவாக, கூடுதல் மதிப்பை உருவாக்காத இந்த நிலையான மூலதனத்துடன் கூடுதலான மூலதனம் பிணைக்கப்பட்டிருப்பதாலும், விரிவடையும் மூலதனத்தின் விகிதத்திற்கு ஏற்ப உபரி மதிப்பு அதிகரிப்பின் வேகத்தை அதிகரிக்க முடியாது இருப்பதாலும் இலாப விகிதம் வீழ்ச்சியடைகின்றது.

இது பாரியளவில் உற்பத்தியை மறுசீரமைக்க முதலாளித்துவ வர்க்கத்தைக் கட்டாயப்படுத்துகிறது மற்றும் அவசியப்படுத்துகிறது. இது ஆழ்ந்த நெருக்கடிகளின் வடிவை எடுப்பதுடன், இதில் பெரியளவில் உற்பத்தி துறைகள் அடித்து நொருக்கப்படுகின்றன. 1914 க்கும் 1945 க்கும் இடையிலான 31 ஆண்டுகள், இந்த நிகழ்ச்சிப்போக்குக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருந்தன. அப்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய உற்பத்தி சக்திகள் சின்னாபின்னமாக அழிக்கப்பட்டன.

1970 களின் இறுதியில் இருந்து 1980 கள் வரையிலும் கூட நாம் இந்த நிகழ்ச்சிப்போக்கை கண்டோம், இதில் பாரியளவில் உற்பத்தி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, பூகோளமயமாக்கல் ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்ச்சியான பல அதிர்ச்சிகள் மூலமாகவும் மற்றும் பழைய தொழில்துறை பகுதிகளை பேரழிவுகரமாக நாசமாக்கியும், சான்றாக அமெரிக்க “ரஸ்ட் பெல்ட்” ஐ (Rust Belt – அதாவது தொழில்துறை வீழ்ச்சி பகுதியை) உருவாக்கியும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிப்போக்கை இன்றும் நாம் பார்த்து வருகிறோம். ஆளும் வர்க்கம் இந்த இலாப வீழ்ச்சி விகிதப் போக்கைக் கடந்து வர, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முயல்கிறது. அது தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களைப் பயன்படுத்துவது மனிதகுல நன்மைக்காக அல்ல, மாறாக இன்னும் கூடுதலாக இலாபங்களை உறிஞ்சுவதற்கான இயங்குமுறைகளாக அவற்றைக் காண்கிறது.

மார்க்ஸ் குரூண்ட்ரிஸ்ஸ (Grundrisse) குறிப்பேடுகளில் எழுதும் போது இந்த நிகழ்ச்சிப்போக்கை சுருக்கமாகப் பின்வருமாறு விவரித்தார், “இந்த முரண்பாடுகள் வெடிப்புகளுக்கும், பிரளயங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இதில் தற்காலிகமாக உழைப்பு நிறுத்தப்பட்டு மூலதனத்தின் பெரும் பகுதி நாசமாக்கப்படும் போது, மூலதனமானது தன்னை தற்கொலைக்கு ஆளாகாமல் அதன் உற்பத்தி ஆற்றலை முழுமையாக அனுபவிக்க உதவும் கட்டத்திற்குக் கொடூரமாக பின்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது.” [19]

முதலாளித்துவத்தில் உள்ளார்ந்துள்ள இந்த நிகழ்ச்சிப்போக்கை ஆய்வு செய்வது, மேற்பரப்பிற்கு கீழே நடந்து வரும் சிக்கலான அபிவிருத்திகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த அபிவிருத்திகள் தான், 1960 களின் பிற்பகுதியில் வர்க்கப் போராட்ட வெடிப்பைக் கண்டன. அது திருத்தல்வாதிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தகைய நிகழ்வுகளைப்பற்றி SLL மட்டுமே பகுப்பாய்வு செய்து தயாரிப்பு செய்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நிலவிய சிக்கலான முரண்பாடுகளை அது ஆய்வு செய்து விவரித்தது.

போருக்குப் பிந்தைய எழுச்சியானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் அடிப்படையில் இருந்தது. அதாவது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மிகப் பெரியளவில் உபரி மதிப்பு உறிஞ்சப்பட்டது என்பதே இதன் அர்த்தமாகும். இந்த உபரி மதிப்பு தான், சமூக செலவின வடிவத்திலும் மற்றும் சுகாதாரம், கல்வி, இதர பிற அரசு செலவுகளிலும் தொழிலாள வர்க்கத்திற்கு முதலாளித்துவ வர்க்கம் குறிப்பிட்டளவில் விட்டுக்கொடுப்புகளை வழங்க உதவியது. ஆனால் மாறுபடும் மூலதனத்தின் விகிதத்துடன் ஒப்பிடுகையில் நிலையான மூலதனத்தின் விகிதத்தை அது அதிகரிக்கச் செய்ததுடன், இலாப விகித வீழ்ச்சியை உருவாக்கியது.

இலாப விகிதத்தின் வீழ்ச்சி போக்கு 1960 களின் மத்திய பகுதி மற்றும் இறுதியில் தொடங்கி, அதன் பின்னர் விரைவடைந்தது. அப்போதிருந்த உற்பத்தி முறைக்குள் சுரண்டல் விகிதத்தை அதிகரிக்க முயன்றதன் மூலம், மூலதனம் அதன் ஆரம்ப பிரதிபலிப்பைக் காட்டியது.

ஆனால் இது, தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தை அதிகரிக்க இட்டுச் சென்றது. இந்த அதிகரிப்பு, மிகப் பெரியளவில் தொழிலாளர்கள் திரள்வின் அதிகரிப்பையும் மற்றும் அவர்களின் அமைப்புகள் பலமாக வளர்வதையும் கண்டது. கூலி உயர்வு போராட்டங்களை ஒடுக்கவும் மற்றும் வீழ்ச்சி அடைந்து வந்த இலாப விகிதங்களை ஈடுசெய்வதற்கும், ஆளும் வர்க்கம் புதிய அரசு இயங்குமுறைகளை அறிமுகப்படுத்தி, வேலை வேகப்படுத்தல்களைத் திணிக்க முயன்றதற்கு எதிராகத் தொழிலாளர்களின் போர்குணமிக்க பிரிவுகள் கிளர்ந்தெழுந்த போது, 1960 களின் இறுதியில் சர்வதேச அளவில் ஏற்பட்ட வர்க்கப் போராட்ட வெடிப்பை இது விளக்குகிறது.

அமெரிக்காவின் ஒரு உதாரணத்தை வழங்குவதானால், தங்கத்தின் பின்புலத்தை நீக்கியதற்குக் கூடுதலாக, நிக்சன் நிர்வாகம் கூலி உயர்வை 10 சதவீதத்துடன் மட்டுப்படுத்த கூலி வாரியத்தை (Wages Board) அமைப்பதாக அறிவித்தது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வந்த போர்குணம் அந்தளவுக்கு இருந்தது. இதை AFL-CIO தலைவர் ஜோர்ஜ் மீனி (George Meany) பாசிச நகர்வாகக் கண்டனம் செய்தார்.

1968-1975: உலகளாவிய புரட்சிகர நெருக்கடியும், டாலர் நெருக்கடி என்ற SLL இன் துண்டுப்பிரசுரமும்

பிரான்சில் மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தம்

1968-1975 காலகட்டம், அளப்பரிய வர்க்கப் போராட்ட காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது. இதன் உச்சபட்ச வெளிப்பாடு மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்துடன் “ஐரோப்பாவின் நோயாளி” (sick man of Europe) எனப்பட்ட பிரான்சில் வெளிப்பட்டது. அது ஒட்டுமொத்த பிரெஞ்சு பொருளாதாரத்தையும் முடக்கியதுடன், புரட்சி பற்றிய கேள்வியை திரும்ப ஐரோப்பாவின் மேசையில் முன்னிலைக்குக் கொண்டு வந்ததுடன், மையத்திற்கும் கொண்டு வந்திருந்தது. அந்த வேலைநிறுத்தம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது.

1969 இல், மேற்கு ஜேர்மனி ஆயிரக் கணக்கான உலோகத்துறை தொழிலாளர்களின் தலைமையில் செப்டம்பர் வேலைநிறுத்தங்களைக் கண்ட போது, அது தொழில்துறையின் முழுப் பிரிவுகளையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதற்கிடையே, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் சமூக அமைதியின்மையின் எழுச்சியைக் கண்ட “சூடான இலையுதிர் காலம்” என்றழைக்கப்பட்டதை இத்தாலி அனுபவித்தது. போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில், “பிராக் வசந்தத்தின்” போது, தொழிலாளர்கள் ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.

அமெரிக்காவில் இந்தக் காலகட்டத்தில், இரயில்வே தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் தபால்துறை தொழிலாளர்களின் தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தங்கள், அத்துடன் நாடெங்கிலும் நகர்புறங்களில் மிகப் பெரியளவில் கலகங்களுடன், அந்தக் காலகட்டம் மிகப்பெரிய வேலைநிறுத்த நடவடிக்கையைக் கண்டது. 1968 இன் தொடக்கத்தில், வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணியின் டெட் தாக்குதல் (Tet Offensive) நடந்தது. அது அமெரிக்காவையும் தெற்கு வியட்நாமையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “சர்வ வல்லமைகொண்டது” (almighty strength) என்ற கருத்துருவையும் உடைத்தெறிந்தது.

இது பெருந்திரளான மக்களிடையே போர்-எதிர்ப்பு போராட்டங்களுக்கு எரியூட்டிய நிலையில், வியட்நாம் மக்கள் மீது அமெரிக்கா கொடூரமாக நடைமுறைப்படுத்திய பழிவாங்கும் நடவடிக்கைகள் வெளியானதால் அவை இன்னும் ஆழமடைந்தன. 1969 இல் ஹெர்ஷால் வெளியிடப்பட்ட மை லாய் படுகொலை (My Lai massacre) வெளியீடுகளில் அது கூர்மையாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

1970 செப்டம்பரில் சிலியில், அலென்டேயின் மக்கள் ஐக்கிய கூட்டணி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் அது போர் குணமிக்கத் தொழிலாள வர்க்கத்தால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்தத் தேர்தலுக்கு முன்னரே கூட, ஆலைகளை ஆக்கிரமித்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த குழுக்ககளை உருவாக்கி இருந்தார்கள். அதேவேளையில் விவசாயிகள் பெரிய பண்ணைத் தோட்டங்களைக் கைப்பற்றி இருந்தனர். அமெரிக்காவின் “கொல்லைப்புறம்” என்று கருதப்பட்ட தென் அமெரிக்காவில் சோசலிசப் புரட்சிக்கான சாத்தியக்கூறு முன்னுக்கு வந்திருந்தது.

டாலர் நெருக்கடி என்ற தலைப்பில் SLL தயாரித்த ஒரு முக்கிய ஆவணம், இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பகுப்பாய்வை விரிவாகத் தொகுத்து வழங்குகிறது. போருக்குப் பிந்தைய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் வளர்ச்சி என்ற தலைப்பில், மத்திய குழுவில் முன்வைக்கப்பட்டு 1973 இல் பிரசுரிக்கப்பட்ட வரைவு ஆவணத்தில், முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடி ஏற்பட்டு வருவதை SLL தெளிவுபடுத்தியது.

மார்க்சிச-விரோத திருத்தல்வாதத்தின் அனைத்து வகையறாக்களுக்கு எதிராகவும் அனைத்துலகக் குழு தொடுத்த போராட்டத்திற்கு அதுவொரு நிரூபணமாகும். SLL எழுதியது, “கடந்த 20 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக,” “ஐக்கிய செயலகம் என்றழைக்கப்படுவதன் தலைமையிலான திருத்தல்வாதிகள், “நவ-முதலாளித்துவ” தத்துவத்தை உபதேசித்துள்ளனர். போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் முதலாளித்துவம் அடிப்படையிலேயே மாறிவிட்டதாக இந்த போலியான, மார்க்சிச-விரோத தத்துவம் குறிப்பிடுகிறது.” [20]

அந்த ஆவணம், பிரெட்டன் வூட்ஸ் நாணய முறை குறித்தும், அதன் முரண்பாடுகளில் இருந்து நெருக்கடி எவ்வாறு எழுந்தது என்பதைக் குறித்தும் பகுப்பாய்வு செய்ய செல்கிறது. SLL எழுதுவதைப் போல், “தற்போது வெடித்திருக்கும் இந்த நெருக்கடியானது, அமெரிக்க முதலாளித்துவம் எவ்வளவு பலமாக தெரிந்தாலும், ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் அதைவிட பலமாக உள்ளன என்ற ட்ரொட்ஸ்கியின் தீர்மானத்தின் சரியான தன்மையை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.” [21]

1970 களின் முற்பகுதியில் ஏற்பட்ட இந்த நெருக்கடியானது, அமெரிக்காவின் தங்கக் கையிருப்பை விட செலுத்துமதி கடன் நிலுவைகளின் மதிப்பு ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக திரண்டிருந்ததன் விளைவாக ஏற்பட்டிருந்தது. SLL எழுதுகிறது, “இந்த நாணய நெருக்கடி குறித்து SLL மேற்கொண்ட பகுப்பாய்வை இந்தத் திருத்தல்வாதிகள் எவ்வளவு தான் ஏளனம் செய்தாலும் பரவாயில்லை, தங்கமும் பண்டங்களும் பிரிக்க முடியாதவாறு ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. இதுதான் மூலதனத்தில் மார்க்ஸின் பகுப்பாய்வின் ஒட்டுமொத்த நோக்கமாகவும் இருந்தது, மரியாதைக்குரிய கணவான்கள் அனைவரும் இந்தப் படைப்பு இப்போது “காலாவதியாகி” விட்டது எனக் கூறினார்கள்.

இப்போது அதன் பகுப்பாய்வின் சரியான தன்மை, உலகெங்கிலும் ஒவ்வொரு முதலாளித்துவ நிதி மையத்தையும் மற்றும் வங்கி நிறுவனத்தையும் துரத்திவேட்டையாடி வருகிறது. [22]

இது ஓர் தற்காலிக காலகட்டத்திற்கான சரிவை அல்ல மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை நெருக்கடியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக SLL வலியுறுத்தியது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் எப்போதும் குறைந்து வரும் இலாப விகிதத்தின் மீதான ஒட்டுண்ணிக் காகிதக் கோரிக்கைகளின் (paper claims) மலைகளின் வடிவில் மூலதனத்தின் அதிகப்படியான உற்பத்தியில் உள்ளது. அதுவும், இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கின் நிலைமைகளின் கீழ் நடக்கிறது.

பிரெட்டன் வூட்ஸ் முறையைச் சார்ந்த அனைத்து அமைப்புகளும், கடந்த 25 ஆண்டுகளாகவும் அதற்கும் அதிகமாகவும் ஒரு மிகப் பெரிய கடன் மேற்கட்டுமானத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பான்மை வர்த்தகம், தங்கம் மூலமாகவோ அல்லது டாலர்கள் மூலமாகவோ மேற்கொள்ளப்படவில்லை, மாறாக டாலருக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட கடன்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இத்தகைய கடன் வழங்கும் அமைப்புகள், முதலாளித்துவ உலகெங்கிலும் மிகப் பெரியளவில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிப்போக்கில், பங்கு மதிப்புகள் அவற்றின் நிஜமான மதிப்பில் இருந்து வெகுதூரம் விலகி, ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளன.

இப்போது மிகப் பெரியளவில் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ள இந்த மூலதனம், உழைப்பு சக்தியைச் சுரண்டுவதன் மூலம் அதன் இலாப விகிதத்தை ஈட்ட முயன்றாக வேண்டும். ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் விகிதத்தை மிகவும் மூர்க்கமாக அதிகரித்தாலும் கூட, முதலாளித்துவவாதிகளின் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது, இருப்பினும் நிச்சயமாக, அவர்கள் இந்தத் திசையில் ஒரு தீர்வை முயன்று தான் ஆக வேண்டும்.

மிகப் பரந்தளவில் மூலதன மதிப்புகளைப் பலவந்தமாக அழிப்பதன் மூலமாக மட்டுமே, இப்போது நிலையான மூலதன தொகுப்புக்கும் தொழிலாள வர்க்கத்தை உறிஞ்சி பெற்ற உபரி மதிப்புக்கும் இடையே “சரியான” விகிதாசாரத்தை மீட்டமைக்க முடியும். [23]

துல்லியமாக இது தான் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. 1960 கள் மற்றும் 1970 களின் நெருக்கடி காலக்கட்டத்தில், நேரடியாக ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம், அனைத்திற்கும் மேலாக பப்லோவாதத்தின் உதவியைச் சார்ந்து நின்ற முதலாளித்துவ வர்க்கம், அதன் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கு சில கால அவகாசத்தைப் பெற்றது.

அவ்வாறு செய்த பின்னர், அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு சர்வதேச தாக்குதலைத் தொடங்கியது. அதன் மூர்க்கத்தனம், தொழிலாள வர்க்கத்தை தோற்கடித்ததன் மூலமாக மட்டுமல்ல, மாறாக பொருளாதாரத்தையே மறுசீரமைப்பு செய்ததன் மூலமாக, இலாப விகிதம் கீழ்நோக்கி சரிவதைக் கடந்து வர உலகளாவிய மூலதனத்திற்கு தேவை இருந்ததால் உந்தப்பட்டிருந்தது.

இறுதியில், நாம் காண்பது என்னவெனில், மதிப்பு விதி பயன்படுத்தப்படுகின்றது (operation of the law of value) என்று அந்த ஆவணம் எச்சரித்தது:

இரு வர்க்கங்களுக்கும் எதிராக தன்னை முன்னிறுத்தும் ஒரு புறநிலை விதியாக, ஒரு விதத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்காக அது வன்முறையோடு பழிவாங்க முயல்கிறது. இதில் முதலாளித்துவ வர்க்கமும் அதன் திருத்தல்வாத மற்றும் சீர்திருத்தவாத தொங்குதசைகளும் அதைப் புறக்கணிக்க முயன்றனர் அல்லது அதை விட்டு விலகி இருக்க விரும்பினர். மேலும், எல்லா சமூக அபிவிருத்தி விதிகளைப் போலவே, இதுவும் சுமூகமான முறையில் செயல்படுவதில்லை, அல்லது முன்கூட்டியே கணித்து விட முடியாது, மாறாக இது மிகவும் பதட்டமான முறையிலேயே செயல்படுகிறது. [24]

இந்த நெருக்கடியின் புறநிலை தன்மையை அங்கீகரிப்பது, அந்தக் காலகட்டத்தின் புரட்சிகரத் தன்மையை பகுப்பாய்வு செய்ய வழி வகுத்தது. இதில் தான் அரசியல் பொருளாதாரம் மீதான SLL இன் வேலைகள் நீடித்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. முதலாளித்துவத்தின் புதிய சகாப்தம் தொடங்கி விட்டதாக, மண்டேல் போன்ற பப்லோவாதிகளின் அனைத்து நம்பிக்கைகளுக்கும் எதிராக, இந்த அமைப்புமுறையின் நிலைமுறிவுக்கு இட்டுச் செல்லும் இதன் முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறைக்கு SLL அறிவித்தது. இதைக் கூறியதன் மூலம், உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு போராட வருமாறு அது அவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

பிராங்ஃபேர்ட் பள்ளியும் மண்டேலின் “பிந்தைய முதலாளித்துவமும்”

பிராங்ஃபேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி இடதுகளின் அரசியல்

இந்தக் காலகட்டத்தில் குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளின் பிரதிபலிப்பு வலது பக்கம் செல்வதாக இருந்தது. 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாள வர்க்கம் தனது புரட்சிகர திறனை வெளிப்படுத்திய தருணத்தில், நடுத்தர வர்க்க கல்வியாளர்களின் ஒரு பகுதி திகிலுடன் நடந்துகொண்டது, இந்த நிகழ்ச்சிப்போக்கை டேவிட் நோர்த் பிராங்ஃபேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதுகளின் அரசியல் என்ற நூலில் எடுத்துக்காட்டினார்.

மே-ஜூன் 1968 இல் குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள் படுகுழியைப் பார்த்து, அவர்கள் பயந்தார்கள். புரட்சியுடனான அவர்களின் பரிசம் வலப்பக்கமாக ஒரு கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது.[25]

அங்கு தோன்றிய பல்வேறு “புதிய” மெய்யியலாளர்கள் “மனித உரிமைகள்” என்ற பதாகையின் கீழ் கம்யூனிச எதிர்ப்பைத் தழுவினர். “முன்னர் தங்களை இடதுசாரிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட பிற பிரிவினர் பாரம்பரிய மார்க்சிசத்தை நிராகரித்தனர். அதன் இடத்தில் பின்நவீனத்துவத்தின் பகுத்தறிவற்ற அகநிலை கருத்துவாதத்தை தழுவுவதும் தனிமனித அடையாளத்தின் மீதான பற்றுதலும் இருந்தது.

இந்த காலகட்டத்தில் மண்டேலின் எழுத்துக்கள் இந்த மாற்றத்தை பிரதிபலிக்கிறது. 1972 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அவரது பிந்தைய முதலாளித்துவம் (Late Capitalism) என்ற புத்தகத்தில் இதைக் காணலாம். அங்கே அவர் பின்வருவனவற்றை எழுதினார்:

புறநிலைரீதியாக சமூகமயமாக்கப்பட்ட உழைப்புக்கும் தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையில் வளர்ந்து வரும் முரண்பாடு, அதிக தகுதி வாய்ந்த உழைப்பின் அதிகரித்து வரும் தேவை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார மற்றும் அரசியல் அடிவானம் விரிவடைதல் ஆகியவற்றைக் கொண்ட மூன்றாவது தொழில்நுட்ப புரட்சியால் மட்டுமல்லாது, ஒருபுறத்தில் சாத்தியமான மிகைநிரம்பியதன்மைக்கும், மறுபுறம் உண்மையான அந்நியப்படுதலுக்கும் மறுபுறம் மறுசீரமைப்பிற்கும் இடையிலான இடைவெளியாலும் தீர்மானிக்கப்படுகிறது. பாரம்பரிய முதலாளித்துவ யுகத்தில், தொழிலாளர்களின் போராட்டங்களுக்கான முக்கிய உந்துவிசை நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான பதட்டத்தில் இருந்து வந்தது, இன்று அது தற்போது இருப்பதற்கும் சாத்தியமானவற்றிற்கும் இடையேயான பதட்டத்தில் உள்ளது. [26]

போருக்குப் பிந்தைய காலகட்டத்தை “பாரம்பரிய முதலாளித்துவம்” மற்றும் “பாரம்பரிய ஏகாதிபத்தியம்” என்று எதிரெதிராக வைப்பதற்கான மண்டேலின் முடிவில்லாத முயற்சிகளுக்கு அடித்தளமாக இருக்கும் வர்க்க நோக்குநிலை மற்றும் முன்னோக்கில் மேலும் மாற்றத்தை இந்தப் பத்தி தெளிவாக்குகிறது. இப்போது, சமூகத்தின் சோசலிச மாற்றத்தின் பிரச்சினை தற்போதுள்ள நிலைமைக்கும், உற்பத்தி சக்திகள் பகுத்தறிவு முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டால் என்ன சாத்தியமாகும் என்பதற்கும் இடையிலான ஒப்பீட்டிலிருந்து எழுந்தது.

மண்டேலின் நிலைப்பாடு, பாட்டாளி வர்க்கம் சமூகத்தில் புரட்சிகர சக்தியாக இல்லை, மாறாக குட்டி முதலாளித்துவத்தின் பிரிவுகள், முதலாளித்துவ அமைப்பின் வரம்பை மீறிய செயல்கள் மற்றும் பகுத்தறிவின்மை மீதான அவர்களின் சீற்றத்தின் காரணமாக சமூக மாற்றத்தின் கருவியாக இருக்கும் என்பதாகும். மண்டேலின் உலகக் கண்ணோட்டத்தில், சமூகத்தின் பகுத்தறிவுரீதியான மறுசீரமைப்பின் அவசியத்தை முதலாளித்துவத்தின் பிரிவுகளும் கூட உணர்ந்துகொள்வார்கள்.

சாத்தியமான மிதமிஞ்சிய தன்மையும் தனிநபரின் ஆக்கபூர்வமான ஆற்றல்களின் சாத்தியக்கூறுகளின் வளர்ச்சிக்கு எதிராக தரமற்ற பொருட்களின் அர்த்தமற்ற உற்பத்தியினால் அதிகரித்து வரும் சோர்வும், தன்னியல்பான சுய நடவடிக்கைகளை ஒடுக்குவதாலும் பொதுவான பாதுகாப்பின்மையின் பரவலாலும் தொழிலாளர்களிடமும் முதலாளிகளுடமும் பரவலான கவலை உணர்வுகள், முதலாளித்துவ சமூகத்தின் சிறப்பியல்பிற்கு ‘இணங்க’ மற்றும் ‘வெற்றி பெற’ வேண்டிய நிர்ப்பந்தம், சமூக வாழ்வின் அதிகரித்துவரும் தனிமை, விளம்பரத்தினதும் மற்றும் பொருட்களை வேறுபடுத்திப் பார்ப்பதிலான விரக்தி, வெகுஜன போக்குவரத்தின் மோசமடைந்த நிலை, வீட்டு நிலைமைகளின் சிதைவு மற்றும் கழுத்தை நெரிக்கும் பெரிய நகரங்கள் மேலும் தாங்க முடியாததாகி வருகின்றன. சமூக தனிநபரின் சுய-வளர்ச்சியை முன்பை விட ஒப்பிட முடியாத அளவுக்கு எளிதாக அடையும் தருணத்தில், அதனை யதார்த்தமாக்குதல் இன்னும் வெகு தொலைவில் பின்வாங்குவது போல் தெரிகிறது.[27]

இந்தப் பத்தியில் பின்-நவீனத்துவம், அடையாள அரசியல் மற்றும் உளவியல் காரணிகள் மீதான மார்கூசிய (Marcusian) முக்கியத்துவம் ஆகியவற்றின் கோட்பாட்டாளர்களை நோக்கிய நகர்வை ஒருவர் காணலாம். எல்லாமே தனிமனித, சுய வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் வாழ்க்கையின் தனிப்பட்ட விரக்தி ஆகியவற்றின் ஊடாக நோக்கப்படுகின்றது. தொழிலாள வர்க்கம், ஏற்கனவே ஒரு புரட்சிகர சக்தியாக கருதப்படாததால், மேலும் வலது பக்கம் நகரும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு அடுக்கின் விருப்பங்களை நோக்கித் தள்ளப்படுகிறது. இது இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னரான தொழிலாளர்களின் மிகப் பெரிய புரட்சிகர இயக்கத்தின் நிலைமைகளின் கீழும், அதற்கு எதிர்வினையாகவும் உள்ளது.

வொல்ஃபோர்த்துக்கு பண்டா எழுதிய கடிதமும் 1974 பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும்

இதற்கு நேர்மாறாக, அனைத்துலகக் குழு தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு பாதையை அடையாளம்கண்டு அதிகாரத்திற்கான போராட்டத்தைத் தயாரிக்க முயன்றது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இந்த காலகட்டத்தில் வேர்க்கர்ஸ் லீக் (WL) உருவாக்கிய முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வு குறித்து குறிப்பிட்ட கவனம் செலுத்தினர்.

பிப்ரவரி 1973 தேதியிட்ட அந்த நேரத்தில் வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளர் ரிம் வொல்ஃபோர்த்துக்கு மைக் பண்டா அனுப்பிய கடிதத்தில், அமெரிக்காவில் கட்டவிழ்ந்துவரும் பணப்புழக்க நெருக்கடி பற்றிப் புரிதந்துகொள்ள பண்டா முயன்றார். இதுவும் டாலர் நெருக்கடி பற்றிய ஆய்வு வெளியிடப்பட்ட அதே நேரத்தில் எழுதப்பட்டது.

பண்டாவின் குறிப்பில், அவர் அமெரிக்காவால் திரட்டப்பட்ட பற்றாக்குறை, “பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார். மேலும் ஐரோப்பிய நாடுகள் “தங்கள் ஏற்றுமதி உபரிகளை அசையக்கூடிய டாலர் கையிருப்பாக மாற்றுவதற்கு” தேவைப்பட்டது. [28]

இருப்பினும், இந்த பணப்புழக்கத்தின் சர்வதேச ஆதாரம் டாலர் ஆகும், இது சர்வதேச நாணய நிதியத்தின் “உயிர்நாடியாகிற்று”. 1950களின் பிற்பகுதியில், பற்றாக்குறை 3 பில்லியன் டாலருக்கு அருகில் மிகப்பெரிய விகிதத்தை எட்டியது.

இந்த முதலீடு அமெரிக்காவில் இலாப விகிதங்களின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் எப்போதும் குறைந்து வரும் இலாப விகிதத்தில் ஒட்டுண்ணி பங்குப்பத்திர உரிமைகோரல்களின் மிகப்பெரிய வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது.

ஆனால் அமெரிக்க முதலீட்டின் அதிகரிப்புடன், ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்களுடைய பணவீக்க டாலர்களை தங்கமாக மாற்றத் தொடங்கியபோது நெருக்கடி தொடங்கியது. இது பற்றாக்குறையின் நேரடி விளைவாகும். இப்பற்றாக்குறையானது பண ஸ்திரத்தன்மையின் இன்றியமையாத முன்னிபந்தனை என்று கருதப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்க தங்கத்தின் கையிருப்பானது 1950 இல் 25 பில்லியன் டாலரிலிருந்து 1968 இல் 10.5 பில்லியன் டாலராகக் குறைந்தது. [29]

இந்த நிகழ்ச்சிப்போக்கிலிருந்து இரண்டு முக்கியமான முடிவுகளை பண்டா சுட்டிக்காட்டினார்:

  1. திரட்டப்பட்ட டாலர் கடன்கள் அமெரிக்க தங்க கையிருப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தன. இது நம்பிக்கையின்மையின் நெருக்கடிக்கு வழிவகுத்ததுடன், தங்கத்திற்கான மேலும் மாற்றுக்களுக்கு காரணமாகி, இதையொட்டி நெருக்கடியை அதிகப்படுத்தியது.
  2. இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான தங்க விநியோகத்தினை செய்யமுடியாது போனது. இதை சமாளிப்பதற்கான ஒரே வழி, நாடுகள் டாலர் கையிருப்புக்களை அதிகரிப்பதே ஆகும். இது செலுத்துமதி நிலுவைத் தொகையில் அமெரிக்க பற்றாக்குறையை மேலும் அதிகரித்தது.

இந்த இரண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளான டாலருக்கான தங்க ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும், நிக்சன் நிர்வாகத்தின் கீழ் தொடர்ச்சியான புதிய பொருளாதார நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் அமெரிக்கா கடக்க முயன்றது. இது உலகெங்கிலும் உள்ள நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பண்டா தனது கடிதத்தின் முடிவில், அமெரிக்காவின் வளர்ச்சிகள் தொடர்ச்சியான “பாய்ச்சல்களின்” அடிப்படையில் மட்டுமே தொடரும் என்றும், தொழிலாள வர்க்கத்திற்கான நோக்குநிலையின் முக்கியமானது சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான கடினமான மற்றும் சில சமயங்களில் நீடித்த போராட்டமாகும் என்றும் எச்சரித்தார்.

“அமெரிக்காவின் வளர்ச்சிகள் “பாய்ச்சல்” மூலம் மட்டுமே நடப்பதாகக் கருதுவது தவறானது மற்றும் ஆபத்தானது. “பாய்ச்சல்கள்” மட்டுமின்றி, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் திருத்தல்வாதிகளுக்கு எதிராக பல கடினமான, அசாத்தியமான போராட்டங்களும் இருக்கும். இதற்கு சிறந்த தத்துவார்த்த உறுதியும் தந்திரோபாயத் திறனும் தேவைப்படும்.”[30]

வொல்ஃபோர்த்துக்கு எழுதிய கடிதமும் மற்றும் டாலர் நெருக்கடி வெளியான ஒரு வருடம் கழித்து, SLL கணித்த வெடிப்பு 1974 இல் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்துடன் பிரிட்டனில் வெடித்தது. அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராகவும், பிரதம மந்திரி எட்வர்ட் ஹீத்தின் பழமைவாத டோரி அரசாங்கத்தால் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை மாற்றியமைக்கும் முயற்சிக்கு எதிராகவும் 1970 களின் முற்பகுதி தொழிலாளர்களின் அதிகரித்த முறையில் போர்க்குணமிக்க போராட்டங்களின் உச்சக்கட்டமாக இருந்தது.

பிப்ரவரி 1, 1973 இல் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனுடன் இங்கிலாந்து பிரதமர் எட்வர்ட் ஹீத். [Photo: White House Photo Office Collection (Nixon Administration)]

ஹீத் அரசாங்கத்தால் ஊதிய முடக்கத்தை திணிக்கும் முயற்சிக்கு எதிராக, அந்த ஆண்டு பிப்ரவரி 9 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியது. நிலக்கரி சீர்குலைந்ததன் விளைவாக வெகுஜன மறியல், போலீசாருடன் மோதல்கள் மற்றும் மின்தடைகள் நடந்தன. வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கு அரசு வன்முறையைப் பயன்படுத்துவதற்கான ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில், ஹீத் அரசாங்கம் ஒரு உடனடி பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது.

மாறாக, வேலைநிறுத்தம் தேர்தலின் போதும் தொடர்ந்ததுடன், மேலும் ஆதரவைப் பெற்றது. இது ஒரு சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வர வழிவகுத்தது. ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, ஹீத்தின் தோல்விக்குப் பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் எனக் கருதிய அளவுக்கு பதட்டங்கள் ஆழமாக இருந்தன.

இந்த புரட்சிகர காலம் SLL ஆல் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த கட்டத்தில் SLL தலைவர்கள் திருத்தல்வாதத்திற்கு எதிரான “அசாத்தியமான போராட்டங்களில்” (“unspectacular slogging”) இருந்து பின்வாங்கத் தொடங்கினர். இது, நவம்பர் 1973 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) ஸ்தாபிக்கப்பட்டதில் காணப்பட்டது, இது அனைத்துலகக் குழுவில் ஒரு விவாதமோ அல்லது பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகள் பற்றிய முழுமையான மறுஆய்வோ இல்லாமல் தொடர்ந்தது.

அதன் வேலைத்திட்டம் வளர்ந்து வரும் டோரி-எதிர்ப்பு உணர்விற்கு ஏற்றதாக அமைந்தது, முழுக்க முழுக்க ஹீத் அரசாங்கத்தை வெளியேற்றுவதிலும் தொழிற் கட்சியை கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தியது. இந்த முன்னோக்கின் உணர்தல், அது ஸ்தாபிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர், WRP தலைமைக்கு ஆழ்ந்த சிக்கல்களை உருவாக்கியது.

எவ்வாறாயினும், SLL/WRP இன் சந்தர்ப்பவாத சீரழிவு ஒரு நேர்கோட்டில் தொடரவில்லை என்பதை வலியுறுத்த வேண்டும். போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் அத்தியாவசிய அரசியல் தெளிவுபடுத்தல் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களைப் பயிற்றுவிப்பதில் அடிப்படையாக இருந்தது.

வேர்க்கர்ஸ் லீக் SLL இன் பகுப்பாய்வை ஆழப்படுத்துகிறது

1971 க்குப் பின்னர் SLL இன் பொருளாதார மற்றும் அரசியல் பகுப்பாய்வை மதிப்பாய்வு செய்கையில், அது டாலர்-தங்க நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்பட்டது மற்றும் இந்தத் தீர்மானம் புதிய முரண்பாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்பதை ஆராய்வதை தவிர்த்து இந்த நிதிய அமைப்பு தொடர்பாகவும், அமெரிக்க டாலரிலிருந்து தங்கத்தின் ஆதரவை அகற்றுதல் ஆகியவற்றில் கிட்டத்தட்ட கவனம் செலுத்தியது.

எவ்வாறாயினும், பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையின் உடைவின் முக்கியத்துவம் குறித்து SLL இன் பகுப்பாய்வை ஆழப்படுத்தவும் விரிவாக்கவும் வேர்க்கர்ஸ் லீக் முயன்றது. அது முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சிகளுக்கும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைந்த வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலான உறவைக் கண்டறிய முயன்றது.

உலக பொருளாதார-அரசியல் நெருக்கடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரண ஓலமும் [Photo: Workers League]

இது அதன் 1978 முன்னோக்குத் தீர்மானத்தில், இது “1944 இன் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தின் தயாரிப்பு, கேய்ன்சியன் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் திருத்தல்வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட ‘திட்டமிடப்பட்ட,’ ‘நிர்வகிக்கப்பட்ட’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட’ முதலாளித்துவம் அல்ல. மாறாக நிதியியல் பிராங்கன்ஸ்டைன் இப்போது முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லை” என குறிப்பிட்டது.[31]

இந்த நிதி அசுரன், 1970 களில் இருந்து அசுர வளர்ச்சியடைந்து அண்மைக் காலத்தில் தொடர்ச்சியான நெருக்கடிகளில் தலை தூக்கியுள்ளது.

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை நோக்கி, வேர்க்கர்ஸ் லீக் முன்னோக்கு 1978 இல் 111 நாள் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவத்தையும் டாஃப்ட்-ஹார்ட்லி (Taft-Hartley) சட்டத்தை அவர்கள் மீறியதையும் சுட்டிக்காட்டியது. இந்த மோதலின் விளைவுதான், தீர்மானம் கூறுவது போல், “ஆளும் வர்க்கத்தின் அவநம்பிக்கையான பலவீனத்தை அம்பலப்படுத்தியது.” [32] அமெரிக்க ஜனாதிபதி கார்டரின் பதில், போல் வோல்க்கரை மத்திய வங்கியின் தலைவராக நியமித்ததாகும். மத்திய வங்கியில் அவர் ரீகன் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட வர்க்கப் போரில் முக்கிய பங்கு வகிக்க இருந்தார்.

இந்தத் தீர்மானம் டாலர் நெருக்கடிக்கும், போருக்குப் பிந்தைய ஏற்றத்தின் முடிவைக் குறிக்கும் இலாப விகிதத்தின் வீழ்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பிற்கு கவனத்தை ஈர்த்தது.

டாலர் நெருக்கடியானது அடிப்படைத் தொழில்துறையில் இலாப வீதத்தின் வீழ்ச்சியை வெகுவாக அதிகப்படுத்தியுள்ளது, இதையொட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொழில்துறையில் ஒப்பீட்டளவில் குறைந்து வரும் உபரி மதிப்பின் ஒரு மலைக் காகிதக் கடன் பற்றிய பெரும் கோரிக்கையை திருப்திப்படுத்த முடியவில்லை. [33]

“பெரிய டாலர் அச்சிடும் இயந்திரம்” என்று தீர்மானம் அழைத்ததன் வளர்ச்சி, சுமார் 12 சதவிகித பணவீக்கத்திற்கு வழிவகுத்து, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டியதோடு, ஆளும் வட்டங்களில் எச்சரிக்கை மணிகளை ஒலித்தது. Business Week: இன் தீர்மானத்தில் உள்ள மேற்கோளில் இது தெளிவாகத் தெரிகிறது:

ஒரு பகிரங்க வர்க்கப் போராட்டத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் வெகு தொலைவில் உள்ளது. ஆனால் பணவீக்கம் எப்போதும் சமீபத்திய நிலைகளை நெருங்கிக் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்று பலர் கவலைப்படுகிறார்கள்… இப்போது பொருளாதாரக் கண்ணோட்டம் மேகமூட்டமாக உள்ளது, பணவீக்கம் குறையவில்லை, மேலும் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இந்த நாடு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மோசமான காலத்திற்கு செல்லக்கூடும். [34]

அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டது என்னவென்றால், அதன் மிக அடிப்படையான பிரச்சனைகளான குறிப்பாக இலாப விகிதத்தின் வீழ்ச்சியையாகும். இது போருக்குப் பிந்தைய தொழில்துறை கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாது. இதற்கு பொருளாதார மற்றும் வர்க்க உறவுகளில் ஒரு அடிப்படை மறுகட்டமைப்பு தேவைப்பட்டது. அதுதான் ரீகனின் கீழ் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவமாகும்.

வோல்க்கர் நடவடிக்கை, வட்டி விகிதங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தியது, பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஆழ்ந்த மந்தநிலையைக் கொண்டுவந்தது — இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு தகர்க்கும் ஆயுதமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் முக்கால் பகுதிகளின் தொழில்மயமாக்கலில் இருந்தும், போருக்குப் பிந்தைய ஏற்றத்தின் போதும் விரிவடைந்தது வளர்ந்த அமெரிக்க தொழில்துறையின் முழுப் பிரிவுகளும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த மறுகட்டமைப்பில், கணினிமயமாக்கப்பட்ட உற்பத்தி முறைகளின் வளர்ச்சி மற்றும் மலிவான உழைப்பை பயன்படுத்திக் கொள்ள பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் வளர்ச்சி ஆகியவை அடங்கும். எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்பு இன்றி இவை எதுவும் சாதிக்கப்பட்டிருக்காது.

வேர்க்கர்ஸ் லீக்கின் பகுப்பாய்வு SLL ஆல் அடையாளம் காணப்பட்டதை ஆழமாக்கியது. மதிப்பு தொடர்பான கேள்வி தீர்க்கப்படவில்லை. மாறாக இன்று வரை நிதிய அமைப்பில் வெடிக்கும் அனைத்து அதிகரித்து வரும் புயல்களிலும் அது தொடர்ந்து தலை தூக்குகிறது.

முடிவுரை

முதலாளித்துவத்தின் நிலைமுறிவு மீண்டும் அதிகாரத்திற்கான போராட்டம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும் ஒரு கட்டத்தை அடைந்துள்ள காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட புத்தாண்டு முன்னோக்கு ஆவணம் விவரமாக, “உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட காரணிகளின் ஒன்றுதிரண்ட அழுத்தமானது 2022 இல் ஒரு சிக்கலான அளவை அடைந்துள்ளதுடன், ஒரு சமூகப் பிரளயத்தை நோக்கி இயக்கம் செல்வதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் கொண்டிருக்கும் திறனுக்கு அப்பால் நெருக்கடியின் இயங்குநிலை சென்றுள்ள ஒரு புள்ளியை அடைந்துள்ளன. ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை மட்டுப்படுத்தத் திறனற்றவையாக இருக்கின்றன; அவற்றின் பொருளாதார, அரசியல், சமூகக் கொள்கைகள் அதிகரித்தளவில் பொறுப்பற்றவையாகவும் இன்னும் பகுத்தறிவற்ற தன்மையைக் கொண்டதாகவும் கூட இருக்கின்றன.” [35]

இங்குள்ள விடயம், புரட்சிகரப் போராட்டங்கள் உருவாகுமா என்பதல்ல, மாறாக புரட்சிகரத் தலைமை கட்டமைக்கப்படுமா என்பதே. அது நான்காம் அகிலத்தின் வரலாற்றின் படிப்பினைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் முக்கியமான கருத்தியல் முட்டுக்கொடுப்புக்கு எதிராக, அதாவது பப்லோவாதத்திற்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய அத்தியாவசியமான போராட்டத்தின் படிப்பினைகளை உள்ளீர்ப்பதை உள்ளடக்கியுள்ளது.

குறிப்புகள்:

[1] Ernest Mandel, The Economics of Neo-Capitalism, The Socialist Register, 1964, p.61.

[2] Ernest Mandel, A Socialist Strategy for Western Europe, 1965, p.1.

[3] Leon Trotsky, The Third International After Lenin, Pathfinder Press, United States of America, 2010, p.99.

[4] ibid., p. 100.

[5] The World Prospect of Socialism, Resolution adopted by the Socialist Labour League, London, 1961, p. 84.

[6] ibid., p. 84.

[7] ibid., p. 84.

[8] ibid., p. 84.

[9] ibid., p. 84.

[10] ibid., p. 84.

[11] ibid., p. 109.

[12] ibid., p. 109.

[13] ibid., p. 94.

[14] ibid., p. 109.

[15] ibid., p. 110.

[16] Ernest Mandel, Workers Under Neo-capitalism, A paper originally delivered at the Socialist Scholars Conference, 1968.

[17] V.I. Lenin, Imperialism, the Highest Stage of Capitalism, Chapter X. The Place of Imperialism in History.

[18] David North, The Heritage We Defend: A Contribution to the History of the Fourth International, Mehring Books, Strawberry Hills, Australia, 2018, p. 410.

[19] Karl Marx, Grundrisse, Capital as Fructiferous. Transformation of Surplus Value into Profit.

[20] Socialist Labour League pamphlet, The Dollar Crisis, 1. The Revisionists and the Crisis.

[21] ibid., 3. The Growth of the American Balance-of-Payments Crisis.

[22] ibid., 8. Not Merely Trade War.

[23] ibid., 8. Not Merely Trade War.

[24] ibid., 8. Not Merely Trade War.

[25] David North, The Frankfurt School, Postmodernism and the Politics of the Pseudo-left, Mehring Books, Oak Park, Michigan, 2015, p. 214.

[26] Ernest Mandel, Late Capitalism, Chapter 18. The Crisis of Capitalist Relations of Production, First published as Der Spätkapitalismus, Suhrkamp Verlag, Berlin 1972.

[27] ibid.

[28] From Mike Banda to Tim Wohlforth in Trotskyism versus Revisionism, Vol. 7, Labor Publications, Grand River, Detroit, 1984, p. 234.

[29] ibid., p. 234.

[30] ibid., p. 236.

[31] The World Economic-Political Crisis and the Death Agony of U.S. Imperialism, November 7, 1978, p. 1.

[32] ibid., p. 2.

[33] ibid., p. 9.

[34] ibid., p. 9.

[35] https://www.wsws.org/en/articles/2023/01/03/pers-j03.html

மேலும் படிக்க

Loading