சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வருவது, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 வரை நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடை வகுப்புகளுக்குப் பிரேசிலிய சோசலிச சமத்துவக் குழுவின் (GSI) முன்னணி உறுப்பினர் தோமஸ் காஸ்டன்னீய்ரா வழங்கிய உரையாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த்தின் ஆரம்ப அறிக்கையான, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” ஆகஸ்ட் 7 இல் வெளியிடப்பட்டது. இரண்டாவது விரிவுரையான, “நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்” ஆகஸ்ட் 14 இல் வெளியிடப்பட்டது. மூன்றாவது விரிவுரையான, “பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றமும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்” ஆகஸ்ட் 18 இல் பிரசுரிக்கப்பட்டது. அனைத்து விரிவுரைகளும் உலக சோசலிச வலைத் தளத்தில் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்படும்.

முன்னுரை

தோழர்களே, சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் (International Secretariat) மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது.

அந்த இணைப்பின் மூலம் நிறுவப்பட்ட ஐக்கிய செயலகம் (United Secretariat), முதலாளித்துவத்தை ஒழிப்பதில் சர்வதேச தொழிலாள வர்க்கம் வகிக்கும் தனித்துவமானதும் வேறு ஒருவருக்கும் அதனை கொடுக்கவியலாத பங்கை அடிப்படையாக கொண்ட ஒரு வேலைத்திட்டமான, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை தூக்கியெறிவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட குட்டி முதலாளித்துவத்தின் ஒரு சர்வதேச கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்தது.

ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் கியூபாவில் இருந்த குட்டி-முதலாளித்துவ தேசியவாத இயக்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன், “உலகப் புரட்சியின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்' தொடங்கியதாக அந்த ஓடுகாலிகளின் மாநாட்டு தீர்மானம் அறிவித்தது. அது, முதலாளித்துவ பெருநகரங்களின் மையங்களிலும் காலனித்துவ நாடுகளிலும் “காஸ்ட்ரோயிசத்தின் சர்வதேச நீரோட்டத்தைப் பலப்படுத்தவும் வளப்படுத்தவும்” உதவும் கீழ்ப்பணிந்த பாத்திரத்தை ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஒதுக்கியது. [1]

பிரெஞ்சுப் பிரிவான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) ஆதரவுடன், ஜெர்ரி ஹீலி மற்றும் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) எடுத்த கொள்கை ரீதியான நிலைப்பாடு, நான்காம் அகிலம் முழுவதையும் ஒரேயடியாகக் கலைப்பதற்கான அந்த முயற்சியைத் தடுத்தது.

ஜெர்ரி ஹீலி

1961 மற்றும் 1963 க்கு இடையே SLL நடத்திய போராட்டம், ட்ரொட்ஸ்கிசத்தை ஒரு தனித்துவமான சர்வதேச மற்றும் வரலாற்று அரசியல் நீரோட்டமாக நிலைக்க வைத்தது. அது மார்க்சிச இயக்க வரலாற்றின் மகத்தான தருணங்களில் ஒன்றாகும்.

1953 உடைவுக்குப் பின்னர் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி

1953 க்கு பின்னர், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முக்கிய அபிவிருத்திகள், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மேலெழுந்த அரசியல் கருத்து வேறுபாடுகளின் முக்கிய தன்மையை உறுதிப்படுத்தின. குறிப்பாக, சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆட்சிக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்கள் வெடித்திருந்தன.

அந்தப் போராட்டங்கள் ஹங்கேரியப் புரட்சியில் உச்சத்தை எட்டின. அது நவம்பர் 1956 இல் சோவியத் அரசாங்கத்தால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அந்த நிகழ்வு, பப்லோவாதத்தின் திருத்தல்களுக்கு எதிராக ICFI பாதுகாத்த அரசியல் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பலமாக நிரூபித்துக் காட்டியது.

நவம்பர் 1956 இல் சோவியத் அரசாங்கம் ஹங்கேரிய புரட்சியைக் கொடூரமாக ஒடுக்கியது.

அந்த அனுபவத்தில் இருந்து விமர்சனபூர்வ படிப்பினைகளை எடுத்துக் கொண்ட பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், “அரசியல் புரட்சியின் இந்தத் தன்னியல்பான அபிவிருத்தியை, ஓர் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்… அதேவேளையில் நிஜ வாழ்வின் இந்த அரசியல் புரட்சிக்கான முதல் எடுத்துக்காட்டுகள், ஒரு நனவுபூர்வ தலைமைக்கான முழுமையான அவசியத்தை அடிக்கோடிடுகின்றன,” [2] என்று முடிவெடுத்தனர்.

வெகுஜனங்களின் அழுத்தத்தின் கீழ் அதிகாரத்துவத்துவம் இடது நோக்கித் திரும்பும் என்று பப்லோவாதிகள் பிரமைகளை வளர்த்துக் கொள்வது, தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக மட்டுமே ஆக்கும் என்பதோடு, புதிய இரத்தந்தோய்ந்த தோல்விகளுக்குத் தயாரிப்பு செய்யும் என்பதையே புடாபெஸ்ட் (Budapest) படுகொலைகள் நிரூபித்தன. ஆனால் பப்லோவாத சர்வதேச செயலகம் நேரெதிர் விதமான தீர்மானங்களை எட்டியது.

தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலின் கீழ் ஸ்ராலினிசத்தில் அதிகரித்து வந்த நெருக்கடி, சோவியத் ஒன்றியத்தில் 20 ஆவது கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுடன், 1956 இன் ஆரம்பத்தில் முன்னுக்கு வந்தது. ஸ்ராலினை ஒரு குற்றவாளியாக ஒப்புக் கொண்ட நிகிடா குருஷ்சேவ் வழங்கிய 'இரகசிய உரை', அவநம்பிக்கையான அதிகாரத்துவம் தான் எதிர்கொண்ட பாரிய எதிர்ப்பை ஒரு நபரை நோக்கித்திருப்பும் முயற்சியாக இருந்தது.

ஸ்ராலினை ஒரு குற்றவாளியாக அங்கீகரித்து, 1956 இல் நிக்கிதா குருஷ்சேவ் அவரின் “இரகசிய உரை” வழங்குகிறார்.

அதிகாரத்துவத்தின் ஓர் அமைதியான சுய-சீர்திருத்தம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்குகளின் வளர்ச்சியைக் குறித்த அவர்களின் தீர்க்கதரிசனங்களை அந்த அபிவிருத்தியினூடாகக் கைவரப் பெற முடியுமென பப்லோவாதிகள் பார்த்தார்கள்.

டேவிட் நோர்த் எழுதியது போல, 1956 நெருக்கடியின் இன்றியமையாத முக்கியத்துவம் என்னவென்றால், “நான்காம் அகிலத்திற்கும் சீரழிந்து கொண்டிருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான உலகளாவிய சக்திகளின் உறவில் அது ஓர் ஆழமான மாற்றத்தை முன்னறிவித்தது.” அவர் தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஜனவரி 1957 இல் லேபர் ரிவ்வியூ (Labour Review) அறிவித்ததைப் போல, “மாபெரும் பனியுகம்” (Great Ice Age) முடிவுக்கு வந்திருந்தது. தொழிலாள வர்க்க தலைமைக்கான வரலாற்று நெருக்கடியைத் தீர்ப்பதற்குச் சாதகமான புறநிலைமைகள் இப்போது வளர்ந்து வருகின்றன. [3]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் உருவெடுத்து வந்த கருத்து வேறுபாடுகள்

அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட அந்த மிகப் பெரும் மாற்றத்திற்கான பிரதிபலிப்புகளின் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயே முக்கிய கருத்து வேறுபாடுகள் உருவெடுத்து கொண்டிருந்தன என்பது தெளிவாகியது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச போராட்டத்தின் வரலாறும், தன்மையும் நிரூபணமாகி கொண்டிருந்த நிலையில், ஹீலி தலைமையின் கீழ் இருந்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவு, அதைக் குறித்து தெளிவுபடுத்த தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் ஒரு மிகப் பெரிய அரசியல் பிரச்சாரத்தை தொடங்கியது.

நோர்த் எழுதியதைப் போல:

ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் செய்த தலையீட்டுக்கான பலம், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் அடையப்பட்ட தெளிவுகளில் இருந்து கிடைத்தது. துல்லியமாக ஏனென்றால் பிரிட்டிஷ் பிரிவு ஸ்ராலினிசத்துடனான சமரசத்தையோ மற்றும் சரணாகதியையோ நிராகரித்ததால், ஸ்ராலினிச அணிகளுக்குள் ஹீலியால் முக்கியமான முன்னேற்றங்களைப் பெற முடிந்தது... [4]

இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு புதிய மற்றும் உயர்மட்ட உறவை எட்டியதுடன், பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் போக்காக வெளிப்பட்டனர். இந்த வெற்றிகள் 1959 இல் சோசலிச தொழிலாளர் கழகத்தினை நிறுவுவதனுடாக வடிவத்தை எடுத்தது.

அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எடுத்தது. பப்லோவாதத்திற்கு எதிரான அதன் சமீபத்திய சர்வதேசப் போராட்டத்தில் வேரூன்றியவாறு, ஹங்கேரியப் புரட்சி மற்றும் குருஷ்சேவ் உரை பற்றிய SWP இன் பகுப்பாய்வு ஒரு கோட்பாட்டு ரீதியான தன்மையைக் கொண்டிருந்தபோதிலும், அந்த நிலைப்பாடு 1953 இல் இருந்து அது வளர்த்தெடுத்திருந்த அதிகரித்தளவிலான சந்தர்ப்பவாதக் கொள்கைகளுடன் நேரடி மோதலுக்கு வந்தது.

நோர்த் பின்வருமாறு எழுதினார்:

நீடித்த பொருளாதார வளர்ச்சி, சலனமில்லாமல் இருந்த தொழிலாளர் இயக்கம், தொழிற்சங்கங்கள் மீது அதிகாரத்துவத்தின் இரும்புப்பிடி மற்றும் [அமெரிக்காவில்] கம்யூனிச விரோத விஷமப் பிரச்சாரத்தின் நீண்ட கால விளைவுகள் என இவை SWP இன் காரியாளர்கள் மீது மிகப் பெரும் அழுத்தங்களை உருவாக்கி இருந்தன. [5]

பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு நேரெதிர் விதமாக, SWP ஐ அமெரிக்க நடுத்தர வர்க்க தீவிரக் கொள்கைகளின் நச்சார்ந்த சூழலுக்குள் கலைத்து விட நோக்குநிலை கொண்ட ஒரு “மறுகுழுவாக்கும்” கொள்கையை ஏற்றதே, ஸ்ராலினிச நெருக்கடிக்கு SWP காட்டிய நடைமுறை விடையிறுப்பாக இருந்தது. திவாலான ஸ்ராலினிசத்தில் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பிரிக்கும் அரசியல் கோட்பாடுகளை மீளஉறுதிப்படுத்துவதற்கு பதிலாக, SWP, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மனந்திருந்திய கூறுபாடுகளுக்கு இடம் அளிப்பதற்காக அந்தக் கருத்து வேறுபாடுகளைத் தணிக்க முனைந்தது.

1957: மறுஐக்கியத்தை நோக்கி SWP இன் அணிவகுப்பு

அனைத்துலகக் குழுவிற்கும் சர்வதேச செயலகத்திற்கும் இடையே ஒரு 'மறுஐக்கியத்திற்கான' தருணம் உருவெடுத்திருப்பதாக வந்த முன்மொழிவுகளின் இன்றியமையாத முக்கியத்துவத்தை நோர்த் பின்வருமாறு தொகுத்தளித்தார்:

ஓர் இராணுவ உவமையாகக் கூறினால், 1956 க்கு பின்னர், ட்ரொட்ஸ்கிசத்தின் புத்துயிர் பெற்ற சக்திகளின் தாக்குதல் அபாயத்திற்கு எதிராக, பலவீனமான அதிகாரத்துவத்தின் பாதிக்கப்பட்ட சக்திகளை மீளப்பலப்படுத்துவதை நோக்கி பப்லோவாதிகளின் முயற்சிகள் திருப்பி விடப்பட்டிருந்தன. மறுஐக்கியம் என்ற போர்வையில் (அதாவது, 1953 உடைவை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம்) அனைத்துலகக் குழுவைப் பிளவுபடுத்த முயன்று, பப்லோயிசவாதிகள் 1956 நெருக்கடிக்கு விடையிறுத்தனர். [6]

ஹங்கேரி மற்றும் சோவியத் ஒன்றியம் தொடர்பாக SWP ஏற்றிருந்த ஆரம்ப நிலைப்பாடுகள், எந்த விதத்திலும் பப்லோவாதிகளுடனான ஒரு மறுஐக்கியத்தை நியாயப்படுத்துவதாக இருக்கவில்லை. ஆனால் அந்தக் கொள்கையை நோக்கிய அதன் நோக்குநிலை, “அமெரிக்காவுக்குள் வர்க்க விரோத சக்திகளின் அழுத்தங்களுக்கு அது அடிபணிந்ததற்கான உயிரோட்டமான வெளிப்பாடாக இருந்தது.” [7]

1957 மார்ச்சில், ICFI இல் இருந்த அதன் தோழர்களுடன் கலந்தாலோசிக்காமல், SWP தேசியத் தலைவர் ஜேம்ஸ் பி. கனன், 'எல்லா நாடுகளிலும் உள்ள ட்ரொட்ஸ்கிச சக்திகளை உடனடியாக ஐக்கியப்படுத்துவதற்கான' கோரிக்கையை ஏற்று, லங்கா சம சமாஜக் கட்சியின் (LSSP) இலங்கை மத்தியவாதிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, “பொது அரசியல் நடவடிக்கைக்கு” ஒரு வசதியான உடன்பாட்டைக் காண்பதற்கான கனனின் நோக்கங்களை, அந்த நடவடிக்கையின் கொள்கையற்ற அடித்தளம் தெளிவுபடுத்தியது. [8]

ஜேம்ஸ் பி. கனன்

கனனின் சந்தர்ப்பவாத கையாளலுக்கு ஹீலியின் விடையிறுப்பானது, பப்லோவாதிகளுடனான மறுஐக்கியம் குறித்து அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் அபிவிருத்தி அடைந்த பிரிட்டிஷ் மற்றும் SWP க்கு இடையேயான கலந்துரையாடல்களுக்கு அரசியல் அடித்தளத்தை அமைத்தது.

ஹீலி மே 1957 இல் கனனுக்கு எழுதிய கடிதத்தில், அமைப்பு ரீதியான பிரச்சினைகள் பப்லோவாதிகள் உடனான “மிகவும் ஆழமாக சென்று கொண்டிருக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகளை” தீர்க்காது எனக் கூறி, அவற்றில் இருந்து முக்கியத்துவத்தை மாற்றினார்.

அதற்குப் பதிலாக, 1953 இல் தொடங்கப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஹீலி வலியுறுத்தினார். அவர் எழுதினார்: “இன்றைய காலகட்டத்தில் நம் காரியாளர்களைப் பலப்படுத்துவதே தீர்க்கமானது, இதைத் திருத்தல்வாதம் தொடர்பான பிரச்சனைகளைக் குறித்த ஒரு முழுமையான கல்வியூட்டல்கள் மூலமாக மட்டுமே செய்ய முடியும்.” “அத்தியாவசியமான தெளிவுபடுத்தலை குறுக்கறுக்கக்கூடிய எதையொன்றையும் பிரிட்டிஷ் பிரிவு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது,” என்றவர் நிறைவு செய்தார். [9]

1958 லீட்ஸ் மாநாடு

ஜூன் 1958 இல் லீட்ஸில் நடத்தப்பட்ட ICFI மாநாடு, உலகச் சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த புதிய அபிவிருத்திகளை ஆய்வு செய்து, பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் கொள்கைகளை மீளஉறுதிப்படுத்தியது.

ஸ்ராலினிசத்தின் நெருக்கடிக்கு விடையளிக்கும் வகையில், அந்த மாநாட்டுத் தீர்மானம், “பாரிய அழுத்தம் அளித்து அதிகாரத்துவ எந்திரத்தின் சீர்திருத்தத்திற்கு நிர்பந்திப்பதன் மூலம், தலைமைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற எல்லா கருத்துருக்களையும் ICFI நிராகரிப்பதாக” குறிப்பிட்டது. [10]

அதிகாரத்துவங்களிடம் இருந்து முறித்துக் கொள்ளும் போக்குகளுடன் நடவடிக்கையில் ஒன்றுபடுவதை அது ஏற்றுக் கொண்ட போதினும், அது “ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மத்தியவாதம் (centrism), தொழிற்சங்க அதிகாரத்துவம், காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவத் தலைமைக்கு எதிரான சித்தாந்த ரீதியான ஒரு தாக்குதலுடன் இணைக்கப்பட்டு” இருக்க வேண்டுமென அது கோரியது. [11]

உலகப் புரட்சியின் மையத்தைக் காலனித்துவ நாடுகளுக்கு மாற்றுவது குறித்து பப்லோவாதிகள் அபிவிருத்தி செய்து வந்த கருத்துருவையும் அந்தத் தீர்மானம் நிராகரித்தது. அது அறிவித்தது: “பெருநகர நாடுகளில் ஊடுருவாதவரையில், உலகப் புரட்சி ஒரு தீர்க்கமான முன்னோக்கிய படியை எடுக்க முடியாது.” “பெருநகர நாடுகளில் தொழிலாளர்களின் எதிர்தாக்குதல்,” அவ்விதத்தில், “காலனித்துவப் புரட்சியை புதிய மட்டங்களுக்கு கொண்டு செல்லும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. [12]

சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமை, அந்த மாநாட்டின் தீர்மானங்களை நிராகரித்தது. பப்லோவாதிகளுடன் மறுஐக்கியம் என்ற அவர்களின் சந்தர்ப்பவாதக் கருத்துருவை வெளிப்படுத்திய அவர்கள், “நீண்ட காலத்திற்கு முன்னரே 1953 பிரச்சினைகள் காலங்கடந்ததாகி விட்டதால், சம்பவங்களின் மீது அத்தியாவசிய அரசியல் உடன்பாடு இருக்க வேண்டுமே ஒழிய, 1952 பிரச்சினைகளைச் சுற்றிய விவாதத்திற்கு” புத்துயிரூட்டுவதற்கான அந்த ஆவணங்களை அவர்கள் கண்டனம் செய்தனர். [13]

லீட்ஸ் மாநாட்டு ஆவணங்களுக்கு நஹுவெல் மொரேனோவின் எதிர்ப்பு

அந்த ஆவணங்களை, ஆர்ஜென்டினா பிரிவின் சார்பில் இங்கிலாந்தின் லீட்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மற்றொரு அரசியல் தலைவரான நஹுவெல் மொரேனோவும் கண்டித்தார். மொரேனோவின் உரைகள், கியூப புரட்சி தொடர்பாக விரைவில் உருவெடுக்க இருந்த சில முக்கியமான சிக்கல்களை முன்கணித்தன. இலத்தீன் அமெரிக்காவில் நிலவிய வர்க்க அழுத்தங்களை வெளிப்படுத்திய அவை, பப்லோவாதிகள் உடனான மறுஐக்கிய கொள்கைக்கு அங்கிருந்த பிரிவுகளிடையே ஆதரவு அடித்தளத்தை உருவாக்கின.

நஹுவெல் மொரேனோ [Photo: Unknown author]

ஒவ்வொரு தேசியப் பிரிவையும், இந்தச் சகாப்தத்தின் “முற்றுமுழுதான புதிய மூலோபாயத்தின்” அடிப்படையில் அமைந்த “புரட்சிகர ஐக்கிய முன்னணிகள்” (Revolutionary United Fronts) என்றவர் குறிப்பிட்டதற்குள் கலைத்து விடுவதற்கான முன்மொழிவே அந்த மாநாட்டில் மொரேனோ முன்வைத்த பிரதான முன்மொழிவாக இருந்தது. இந்த மாற்றியமைக்கப்பட்ட பப்லோவாத திட்டம் பின்வரும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது:

இந்த அமைப்பின் நெருக்கடி, நனவுபூர்வமற்ற புரட்சிகரப் போக்குகளை வெளியில் கொண்டு வருகிறது... அது உருவெடுத்திருப்பது ஓர் ஆழ்ந்த புறநிலை அர்த்தத்தைக் கொண்டுள்ளது: அதாவது, இது வெகுஜன இயக்கத்தின் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையின் ஆரம்பமாகும்...

தொழிலாளர்களின் இயக்கத்திலும் மற்றும் ஒட்டுமொத்த உலகெங்கிலுமான காலனித்துவ மக்களிடையேயும் ஏற்பட்டிருக்கும் மற்றும் தொடர்ந்து ஏற்பட இருக்கும் நனவுபூர்வமற்ற புரட்சிகரப் போக்குகள் உடனடியாகவோ அல்லது தன்னியல்பாகவோ நான்காம் அகிலத்திற்குள் உள்ளிளுத்துக்கொள்ளப்படும் என்று கூறுவது கற்பனாவாதமாக இருக்கும். [14]

கட்சி அல்ல, இத்தகைய “நனவுபூர்வமற்றப் புரட்சிகரப் போக்குகளே,” “நாம் செயல்படும் நாட்டின், மண்டலத்தின் அல்லது ஒன்றியத்தின், பல்கலைக்கழகம் அல்லது புத்திஜீவித குழுவின் மிக அவசரப் புரட்சிகரத் தேவைகளை” பூர்த்தி செய்வதற்குப் பொறுப்பாக இருக்கும்.”

மொரேனோ ஆர்ஜென்டினாவுக்குத் திரும்பியதும், ஜனவரி 1959 இல் மற்ற இலத்தீன் அமெரிக்க பிரிவுகளுக்கான ஓர் அறிக்கையில், லீட்ஸ் மாநாட்டின் முன்னோக்குகளுடன் அவர் உடன்படவில்லை என்பதைத் தெரிவித்தார். “போருக்குப் பிந்தைய நிரந்தரப் புரட்சி” என்ற தலைப்பில், அந்த அறிக்கை லீட்ஸ் மாநாட்டு தீர்மானத்தின் பின்வரும் பத்திக்கு தனது “முழு எதிர்ப்பை” அறிவித்தது:

காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ நாடுகளில், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளை உருவாக்குவதே நம் மத்திய பணியாகும். நிரந்தரப் புரட்சி தத்துவத்துடன் ஆயுதபாணியான இவை, பெருந்திரளான மக்களுக்கான பாட்டாளி வர்க்கத் தலைமையை நிறுவும் நோக்கில் ஐக்கியப்பட்ட ஏகாதிபத்திய-எதிர்ப்பு முன்னணிகளில் பங்கேற்கும். சமூகப் புரட்சி வேலைத்திட்டத்தை முதலாளித்துவ அல்லது குட்டி-முதலாளித்துவத்தின் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு அடிபணிய வைக்கும் அனைத்து கருத்துருக்களையும் நாம் நிராகரிக்கிறோம். [15]

இந்தச் சூத்திரப்படுத்தலுடன் மொரேனோ உடன்படவில்லை என்பது, நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீதான அவரின் முழு எதிர்ப்பில் இருந்து உருவாகி இருந்தது. அதைப் புதுப்பிக்கும் சாக்குப்போக்கில், வரலாற்று அபிவிருத்தியின் மீது முற்றிலும் நேரெதிர் கருத்தை அவர் முன்வைத்தார்:

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியும் சோசலிசப் புரட்சியும், முன்னர் காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ நாடுகளில் மட்டுமே பொதுவாக ஒருங்கிணைந்திருந்தன, நெருக்கமாக பிணைந்திருந்தன. ஆனால் இன்று பெருநகர நாடுகளின் (metropolitan countries) தொழிலாளர் புரட்சியின் இதயத்தில், ஜனநாயகப் புரட்சி மிகப் பெரியளவில் ஒரு பாத்திரம் வகிப்பதையும், அது தொழிலாளர்களின் புரட்சியுடன் நெருக்கமாக பிணைந்திருப்பதையும் நாம் காண்கிறோம். வட அமெரிக்காவில் நீக்ரோ பிரச்சனையும் அதேபோல பிரான்சில் அல்ஜீரியர்களின் பிரச்சனையும் இதற்குச் சிறந்த உதாரணமாகும். … இங்கிலாந்தும் விதிவிலக்காக இருக்காது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அதுவும் பிரான்ஸ் மற்றும் வட அமெரிக்காவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்; இங்கிலாந்தில், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நெருக்கடியால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாம் இனப் பிரச்சனையை எதிர்கொள்வோம். [16]

கியூபப் புரட்சியும், SWP மார்க்சிசத்தை நிராகரிப்பதும்

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), அதன் சந்தர்ப்பவாத நடைமுறை மற்றும் பப்லோவாதிகளுடனான மறுஐக்கியத்திற்கான அதன் முனைவுக்கு இணக்கமான விதத்தில், அதன் வேலைத்திட்டத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வழிவகையாக கியூபப் புரட்சியை கண்டறிந்திருந்தது.

அந்த, நிகழ்ச்சிப்போக்கின் பாதையில், ஜோசப் ஹான்சன் SWP இன் முன்னணி தத்துவவியலாளராக உருவெடுத்து மேலுயர்ந்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்னர் கண்டறிந்ததைப் போல, ஹான்சன் GPU இன் ஒரு முகவராகவும், பின்னர் FBI இன் ஒரு முகவராகவும் செயல்பட்டிருந்தார். வர்க்க விரோத சக்திகளின் நனவுபூர்வமான முகவர்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஊடுருவி இருந்தார்கள் என்பதற்கு அவர் ஒரு கண்கூடான வெளிப்பாடாக இருந்தார்.

ஆனால் ஹன்சன் அரசியல் அதிகாரத்திற்கு மேலுயர்ந்தமை, ஏகாதிபத்தியத்தின் இதயதானத்தில் இருந்த குட்டி-முதலாளித்துவத்தின் சித்தாந்த அழுத்தங்களுக்கு SWP அடிபணிந்ததை, இன்னும் ஆழமாக, வெளிப்படுத்தியது. அமெரிக்காவில் சோசலிசப் புரட்சியை நடத்தும் முன்னோக்கை SWP கைவிட்ட உடனேயே, அதன் சந்தர்ப்பவாதப் பாதையை பின்பற்றுவதற்கு மார்க்சிசத்தின் பிணைப்புகளில் இருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை அது உணர்ந்தது, ஹான்சன் அந்த வேலையைச் செய்வதற்கு பொருத்தமான நபராக இருந்தார்.

1959 இல், ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஜூலை 26 இயக்கம் பாட்டிஸ்டா (Batista) சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்த போது, அது போருக்குப் பின்னர் தொடர்ச்சியாக எழுந்த ஒட்டுமொத்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களினதும் புரட்சிகளினதும் ஒரு பாகமாக இருந்தது. சோசலிச தொழிலாளர் கட்சி ஆரம்பத்தில் அதை ஒரு முதலாளித்துவ தேசியவாத ஆட்சியாக வகைப்படுத்திய போதிலும், 1960 இன் போக்கில் அது முற்றிலுமாக அதன் நிலைப்பாட்டை மாற்றியது.

உடன்பட முடியாதளவிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரிக்கைகளால் அழுத்தப்பட்டு, காஸ்ட்ரோவின் ஆட்சி, தொடர்ச்சியாக பல தேசியமயமாக்கல்களை மேற்கொண்டதுடன், சோவியத் ஒன்றியத்துடனான அதன் உறவுகளைப் பலப்படுத்தியது. அது ஒரு “தொழிலாளர்களின் அரசை” நிறுவி இருந்ததாகவும், கியூபாவில் அது ஒரு சோசலிசப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாகவும் ஹான்சன் வாதிட்டார்.

1966 இல் காஸ்ட்ரோ மூன்றுகண்டங்களின் மாநாட்டில் (Tricontinental Conference) உரையாற்றுகிறார், இதில் அவர் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டித்தார்.

SWP பின்வருமாறு வாதிட்டது, மிகப் பலமான புதிய புறநிலை சக்தியின் மேலாதிக்கத்தின் கீழ், “ஒரு முதலாளித்துவ-ஜனநாயக வேலைத்திட்டத்துடன் தொடங்கிய ஒரு குட்டி-முதலாளித்துவ தலைமை, அவர்களின் சொந்த வேலைத்திட்டத்தின் பொதுவான தர்க்கத்திற்குப் பதிலாக, புரட்சியின் இயங்கியல் தர்க்கத்தைப் பின்பற்றி, மேற்கு அரைக்கோளத்தில் முதல் தொழிலாளர் அரசை நிறுவி, இலத்தீன் அமெரிக்கா முழுவதற்கும் அதை ஒரு முன்மாதிரியாக காட்டி விட்டது.” [17]

மொரேனோவைப் போலவே, ஹன்சனும் சர்வசாதாரணமாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்தைப் புதுப்பிப்பதாக வாதிட்டார். சோசலிசப் புரட்சியின் அவசியத்தைக் குறித்து முடிவெடுப்பதை நோக்கிய நனவுபூர்வமற்ற குட்டி-முதலாளித்துவக் கூறுபாடுகளின் தன்னியல்பான அபிவிருத்தி ட்ரொட்ஸ்கிச தத்துவத்திற்கு ஒரு நிரூபணமாக இருப்பதாக அவர் வாதிட்டார்.

ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையின் கீழ் இரண்டு-கட்ட தத்துவத்தின் பேரழிவுகரமான பரிசோதனைகளாலும் மற்றும் ரஷ்யப் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட எதிர்மறையான தோல்விகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட முடிவான ஏகாதிபத்திய சகாப்தத்தில் குட்டி-முதலாளித்துவ வர்க்கமும் விவசாயிகளும் ஒரு சுயாதீனமான அரசியல் பாத்திரம் வகிக்க முடியாது என்பதை மறுப்பதே அத்தகைய திருத்தத்தின் நோக்கமாக இருந்தது. முதலில் காலனித்துவ நாடுகளை நோக்கி திரும்பி இருந்த அதன் இயல்பான தீர்மானம், முன்னேறிய நாடுகளிலும், குட்டி-முதலாளித்துவம் ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க முடியும் என்பதாக இருந்தது.

காஸ்ட்ரோ, குவேரா மற்றும் அவர்களின் சகாக்கள் அப்போது நனவான மார்க்சிஸ்டுகளாக வளர்ந்து கொண்டிருந்த ஆரம்ப நிலை அரசியல் அரும்புகளாக இருந்தனர் என்று கருதிய ஹன்சன், உலகில் ஒரே “ஊழலற்ற தொழிலாளர்களின் ஆட்சி” கியூபா என்று அறிவிக்கும் அளவிற்கு வந்தார்.

ஒரு முன்கூட்டிய திட்டம் இல்லாமலும், நிகழ்வுகளுக்கு உள்ளுணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றியும் முதலாளித்துவத்தை தோற்கடித்த சம்பவங்களுக்கு மற்றும் சமூகத்தில் சோசலிச மாற்றங்களை ஆரம்பித்தும், ஒரு புரட்சியைத் தொடங்கியதாக கூறிக் கொண்ட அந்த மனிதர்களின் நடவடிக்கையைப் பாராட்டிய SWP, லெனினிச கட்சியையும் நான்காம் அகிலத்தையும் உபயோகமற்றக் கருவிகள் என்று அறிவித்தது.

கியூபாவை ஒரு “தொழிலாளர்களின் அரசாக” குணாதிசயப்படுத்தியதன் அரசியல் விளைவுகள்

கியூப ஆட்சியை ஒரு தொழிலாளர் அரசாக SWP குணாதிசயப்படுத்தியமை, மார்க்சிச தத்துவத்திற்குப் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தியது. இவை நாம் காக்கும் மரபியத்தில் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. நோர்த் அதில் எழுதுகிறார்:

1939-40 இல், சோவியத் அரசின் வர்க்கத் தன்மை தொடர்பாக SWP க்குள் நடந்த மோதலின் போது, சோவியத் ஒன்றியத்தை இனி ஒரு தொழிலாளர்களின் அரசாகக் கருத முடியாது என்ற பேர்ன்ஹாம்-சாக்ட்மன் சிறுபான்மை அணி முன்மொழிந்த கண்டுபிடிப்புகளில் இருந்து என்ன மூலோபாய மற்றும் வேலைத்திட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறுமாறு ட்ரொட்ஸ்கி அவர்களை இடித்துரைத்தார். இவ்விதத்தில் அவர், அந்தப் போராட்டம் வெறுமனே வார்த்தைப்பிரயோகம் தொடர்பான மோதல் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். சோவியத் ஒன்றியத்தை ஒரு தொழிலாளர் அரசாக நான்காம் அகிலம் வரையறைப்படுத்தியதை அந்தச் சிறுபான்மை அணி நிராகரித்தமை, தவிர்க்கவியலாமல் அனைத்து அடிப்படை பிரச்சினைகளிலும் ட்ரொட்ஸ்கிசத்துடனான ஆழ்ந்த கருத்து வேறுபாடுகளுடன் பிணைந்திருந்தது.

இதேபோல், கியூபா சம்பந்தமான கேள்வியும் வெறுமனே வார்த்தைப்பிரயோகம் தொடர்பான கருத்து வேறுபாடாக இருக்கவில்லை. கியூபாவை ஒரு தொழிலாளர் அரசாக வரையறுப்பதால், மார்க்சிச தத்துவம் மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் இரண்டுக்கும் ஏற்படும் தாக்கங்கள் மீது ஒரு கொள்கை ரீதியான விளக்கம் அளிப்பதை ஹன்சன் தவிர்க்க முயன்றார். காஸ்ட்ரோவின் மார்க்சிசம்-அல்லாத குட்டி-முதலாளித்துவத் தலைமையின் கீழ், ஒரு தொழிலாளர்களின் அரசு உருவாக்கப்பட்டதாகத் தவறாக கூறுவதில் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை அவர் துல்லியமாக கூற மறுத்தார். [18]

இந்த தாக்கங்கள் என்ன?

தொழிலாள வர்க்கத்துடன் வரலாற்று ரீதியாக, அமைப்பு ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாகக் குறிப்பிடத்தக்க தொடர்புகள் இல்லாத விவசாயிகளைப் பிரதான அடித்தளமாகக் கொண்டு, பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை பிரயோகிக்கும் வர்க்க ஆட்சியை அடையாளம் காணக்கூடிய அமைப்புக்கள் இல்லாத நிலைமைகளின் கீழ், குட்டி-முதலாளித்துவ கெரில்லா தலைவர்களின் நடவடிக்கைகள் மூலமாக ஒரு தொழிலாளர்களின் அரசை உருவாக்க முடியும் என்றால், பின்னர் இது மார்க்சிஸ்டுகளால் முன்னறிவிக்கப்பட்டதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான வடிவத்தில் சோசலிசத்தை நோக்கிய வரலாற்றுப் பாதையைக் குறித்து முற்றிலும் ஒரு புதிய கருத்துரு வருகிறது…

பாட்டாளி வர்க்கம் “கண்டறிந்த” அரசு அதிகாரத்தின் புதிய வடிவமாகவும், முதலாளித்துவம்-அல்லாத முதல் அரசாகவும் அதைக் காட்டுவதற்காக, கம்யூன் பற்றிய மார்க்சின் பண்டைய எழுத்துக்களையும், உலகளவில் சோவியத் அதிகாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய லெனினின் மதிப்பீட்டையும் மறைமுகமாக அது பயன்படுத்தியது…

ஒடுக்கப்பட்ட விவசாயிகள் உட்பட மற்ற எல்லா வர்க்கங்களிலிருந்தும் சுயாதீனமாகப் பாட்டாளி வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கும், தொழிலாளர்களின் இயக்கத்திற்குள் விஞ்ஞானபூர்வ சோசலிச நனவைக் கொண்டு வருவதற்கும் மார்க்சிஸ்டுகள் தலைமுறை தலைமுறையாக செய்து வந்த உரிய போராட்டங்களுக்கு அப்பட்டமாகச் சவால் விடுக்கப்பட்டது. [19]

இலத்தீன் அமெரிக்காவில் கலைப்புவாதம்

பப்லோவாதிகளுடன் மறுஐக்கியம் கொள்வதற்கான அதன் முனைவில் SWP உருவாக்கிய கலைப்புவாத கருத்துருக்கள், இலத்தீன் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சியில் உடனடியான மற்றும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்தது.

கியூப ட்ரொட்ஸ்கிஸ்டுகள் “விரைவில் உருவாக்கப்பட உள்ள ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சிக்கு” (unified revolutionary party) முழுமையாகத் தங்களை அடிபணிய செய்து கொள்ள வேண்டும், “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முழுமையான புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த, அங்கே அவர்கள் விசுவாசத்தோடும், பொறுமையோடும், நம்பிக்கையுடனும் செயல்பட முடியும்,” என்று அது வலியுறுத்தியது. [20]

வெகு குறுகிய காலத்திற்குள், காஸ்ட்ரோ ஆட்சி கியூப ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அச்சகத்தைப் பறிமுதல் செய்ததுடன், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் கியூப பதிப்பிற்கான அச்சு எழுத்துருக்களை நாசப்படுத்தி, அவர்களின் முன்னணி உறுப்பினர்களை சிறையில் அடைத்தது.

அந்தக் குற்றவியல் அரசியல் நோக்குநிலையை அப்பிராந்தியம் முழுவதும் உள்ள புரட்சியாளர்களுக்கு விரிவுபடுத்தும் விதத்தில், SWP இன் 1962 தீர்மானம் பின்வருமாறு அறிவித்தது:

இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தங்களின் சொந்த நாடுகளில் நடத்தும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு, கியூப அனுபவத்தைத் தொடக்கப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள சக்திகள் அனைத்தையும், அவற்றின் தனித்துவமான தோற்றுவாய்களைக் கவனத்தில் கொள்ளாமல், ஒருங்கிணைக்க முயல வேண்டும். [21]

அந்த அறிவுரைகள், தொடர்ச்சியாகப் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தின. நடுத்தர வர்க்க போக்குகளின் ஒரு கூட்டுக் கலவையான புரட்சிகர இடது இயக்கத்திற்குள் (Movement of the Revolutionary Left - MIR) சிலியின் தொழிலாளர்கள் புரட்சிகரக் கட்சியை (POR) கலைத்து விடுவதற்கான தயாரிப்பாக, சர்வதேச சோசலிஸ்ட் ரிவ்வியூ இல் 1961 இல் SWP வெளியிட்ட ஒரு தீர்மானத்தை POR ஏற்றுக் கொண்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிட்டது:

இத்தகைய வளர்ந்து வரும் போர்க்குணமிக்க போக்குகள், பழைய மத்தியவாத உருவாக்கங்களின் வடிவங்களை உடைத்துக்கொண்டு இயக்கங்களை உருவாக்கி, பகுப்பாய்வின் இறுதியில் அவை ஒரேயடியாக “கியூப பாணியில்” (a la cubana) விஷயங்களை நடத்த விரும்பும் புரட்சிகர நீரோட்டங்களாக மாறுகின்றன.

கியூப புரட்சியின் தாக்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட புதிய சக்திகள், பல்வேறு புரட்சிகரக் குழுக்களின், சுதந்திரப் போராளிகள் பிரிவின் மற்றும் இடதுசாரிப் போக்குகளின் மறுகுழுவாக்கத்திற்கு வழி வகுக்கும். அதே வேளையில் மேலே குறிப்பிடப்பட்ட அந்த மத்தியவாத அமைப்புகளிடையே பிளவுகள் ஏற்படும். இதன் விளைவாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பணி, இத்தகைய அனைத்து விதமான போர்க்குணமிக்க மற்றும் உள்ளுணர்வு கொண்ட புரட்சிகர நீரோட்டங்களையும் ஊக்குவித்து வளர்த்தெடுத்து, அதே நேரத்தில் ஒவ்வொரு ஏகாதிபத்திய-எதிர்ப்பு அணிதிரட்டலையும் ஆதரிப்பதாகும். [22]

இந்த கலைப்புவாத நடவடிக்கை, அதற்கடுத்து வந்த ஆண்டுகளில் உருவான முக்கியப் புரட்சிகர சூழலில், சிலி தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மார்க்சிச தலைமை இல்லாமல் செய்து அதற்கு தோல்வியை ஏற்படுத்தியதுடன், 1973 இல் மூர்க்கமான பினோசே சர்வாதிகாரம் (Pinochet dictatorship) அதிகாரத்தைக் கைப்பற்ற வழி வகுத்தது.

SWP இன் இலத்தீன் அமெரிக்காவிற்கான சந்தர்ப்பவாத முன்னோக்குகள் குறித்து கருத்துரைக்கையில், முற்றிலும் நெறிபிறழ்ந்திருந்த ஜிம் கனன் 1961 இல் பின்வருமாறு ஹான்சனுக்கு எழுதினார்:

வித்தியாசமான முறையில், இந்த திட்டவட்டமான முன்மொழிவுகள் நமது சொந்த இலத்தீன்-அமெரிக்க சக சிந்தனையாளர்களின் சில குறுங்குழுவாத போக்குகளுடன் மட்டுமல்ல, இலத்தீன்-அமெரிக்க பப்லோவாதிகளின் சில குறுங்குழுவாத போக்குகளுடனும் முரண்படலாம். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட முன்மொழிவுகளின் வழியே நம் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு தெளிவான மற்றும் வெளிப்படையான அறிக்கை, மிகக் கடினமான சூழ்நிலையிலும் கியூப புரட்சியைத் தொடர்ந்து பாதுகாத்து வந்த சோசலிச தொழிலாளர் கட்சியிடம் இருந்து, குறிப்பிடத்தக்களவில் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவேண்டும்.

இரண்டு முகாம்களிலும் உள்ள இலத்தீன்-அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் நல்லதொரு சாத்தியமான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புக்கான வழியை இது திறந்து விடக்கூடும். [23]

அதற்குள் அவரே ஒப்புக் கொண்டதைப் போல, கனனும் அவரது கட்சியும் முழுமையாக பப்லோவாதத்தின் முன்னோக்குகளை ஏற்றிருந்தனர். சில சந்தர்ப்பங்களில், பப்லோவாதிகளை விடவும் அதில் மிகவும் உறுதியாகவும் இருந்தனர்.

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எதிர்த்தாக்குதலை மேற்கொள்கின்றனர்

1961 இன் முற்பகுதியில், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளை மீண்டும் ஒருமுறை தாக்குதல் செய்யத் தள்ளியதோடு திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் SLL ஒரு தீர்க்கமான அடியை எடுத்தது.

1961 ஜனவரியில் SWP இன் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் SLL, 1953 பிளவின் முக்கியத்துவத்தை அமைப்புரீதியான பிரச்சினைகளாகக் குறைப்பதற்கு அமெரிக்கர்கள் மேற்கொண்ட முயற்சியை தீர்க்கமாக மறுத்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கனனின் 'பகிரங்க கடிதத்தின்' கோட்பாடுகளுக்கு தங்கள் அர்ப்பணிப்பைக் கூறி, மேலும் அவர்கள் இன்னும் அதற்கு ஆதரவாக நிற்கிறார்களா என்று அமெரிக்க தலைமையை நேரடியாகக் கேட்டனர்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை எதிர்கொள்ளும் புரட்சிகர பணிகளின் நிலைப்பாட்டில் இருந்து பப்லோவாதத்தின் அர்த்தத்தை கருத்தில் கொண்டு, SLL பின்வருமாறு அறிவித்தது:

ட்ரொட்ஸ்கிசத்திற்கு முன்னாலுள்ள சாத்தியங்களின் அளவு காரணமாகவும், எனவே அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவுக்கான அவசியத்தின் காரணமாகவும், திருத்தல்வாதத்திற்கு எதிரான கோடுகளை அதன் அனைத்து வடிவங்களிலும் நாம் அவசரமாக வரைய வேண்டும். பப்லோவாத திருத்தல்வாதம் ட்ரொட்ஸ்கிசத்திற்குள் ஒரு போக்காகக் கருதப்பட்ட காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இதுவாகும். [24]

மே 8, 1961 தேதியிட்ட ஒரு பின்தொடர் கடிதத்தில், காஸ்ட்ரோவின் ஆட்சி பற்றி உருவாக்கப்பட்ட திருத்தல்வாத போக்கை SLL எதிர்கொண்டது. 'கியூபாவில் முதலாளித்துவப் புரட்சியானது, அமெரிக்கக் கொள்கையால் ஒரு முதலாளித்துவப் புரட்சியின் சமூக நடவடிக்கைகளின் இயல்பான வரம்புகளுக்கு அப்பால் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டாலும் கூட... ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் இந்த விதிவிலக்கான விளைவு' ஒரு தொழிலாளர் அரசு குறித்த எமது இயக்கத்தின் வரையறையில் எந்தவொரு திருத்தத்தையும் நியாயப்படுத்தவில்லை என்று அது அறிவித்தது.

கடிதம் தொடர்ந்தது:

காஸ்ட்ரோவும் அவரது காரியாளர்களும் மார்க்சிஸ்டுகளாக 'மாற்றப்பட்டாலும்' அது புரட்சியை பாட்டாளி வர்க்கப் புரட்சியாக மாற்றுமா? … நனவான தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் போல்ஷிவிக்குகளால் புரட்சியை வழிநடத்த முடியவில்லை என்றால், காஸ்ட்ரோவால் இதைச் செய்ய முடியுமா? இது தவிர, அரசியல் போக்குகளை, அவை நீண்ட காலத்திற்கு வர்க்கங்களின் இயக்கம் தொடர்பான போராட்டத்தில் வளர்ச்சியடையும் விதத்தில், ஒரு வர்க்க அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது ஒருபுறமிருக்க, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தின் மீது 'இயல்பாகவோ' அல்லது 'தற்செயலாகவோ' தடுமாறும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகள் மாற்றமடைவதால் எந்தப் பின்தங்கிய நாட்டிலும் பாட்டாளி வர்க்கக் கட்சி பிறக்காது.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள மேலாதிக்க ஏகாதிபத்திய கொள்கை வகுப்பாளர்கள், இந்த வகையான தலைவர்களிடம் அரசியல் 'சுதந்திரத்தை' ஒப்படைப்பதன் மூலமோ அல்லது பரூக் மற்றும் நூரிஸ் சை ட் போன்ற நிலப்பிரபுத்துவ கூறுகள் மீதான அவர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்வதன் மூலமோ மட்டுமே சர்வதேச மூலதனத்தின் பங்குகளையும், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் மூலோபாய கூட்டணிகளையும் பாதுகாக்க முடியும் என்பதை நன்கு அங்கீகரிக்கின்றனர். [25]

'அத்தகைய தேசியவாத தலைவர்களின் பாத்திரத்தை ஊக்குவிப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலையல்ல' என்று SLL முடித்தது.

SWP இன் தலைமை ஏற்கனவே கலைப்புவாதத்தை நோக்கிய அதன் ஒருவழிப் பயணத்தைத் தொடங்கியிருந்ததால், அந்த விதிமுறைகள் வெளிப்படையாக அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தெளிவாக வெளிப்பட்ட புதிய அரசியல் பிரிவின் தன்மை குறித்து சர்வதேச இயக்கத்திற்கு தெளிவுபடுத்தும் ஒரு பொறுமையான போராட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருந்தனர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து வந்த கருத்துக்களின் போராட்டத்தில், SLL ஒரு முக்கியமான அனுகூலங்களைக் கொண்டிருந்தது. SWP அதன் வாதங்களை அதன் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கும் அதன் உடனடியான அற்பமான கன்னை நோக்கங்களை அடைவதற்குமான ஒரு வழிமுறையாகக் கண்டாலும் —'இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஒரு தனி ட்ரொட்ஸ்கிஸ்ட் கூட' 'கியூபாவில் SLL நிலைப்பாட்டை பத்து அடி கம்பத்தினாலும் தொடமாட்டார்' என்று ஹான்சன் அழுதார். ஹீலியும் அவரது தோழர்களும் இந்த தத்துவார்த்த சண்டையை அவர்களின் புரட்சிகர வரலாற்று நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய பகுதியாக புரிந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது கிளிஃவ் சுலோட்டர் கூறியது போல்:

தொழிலாள வர்க்க இயக்கத்தின் புரட்சிகர அபிவிருத்திகளின் ஒரு காலகட்டத்தில், மிகத் தெளிவான மற்றும் மிகக் கூர்மையான அரசியல் நிலைப்பாடு அதிஉயர்ந்த தேவையாகும். உண்மையான சூழ்நிலையின் துல்லியமான பிரதிபலிப்பை அடைவதற்கு தவறான கருத்தாக்கங்களுடன் மோதலுக்குள்ளாவதன் மூலம் மட்டுமே இந்த நிலைப்பாட்டுக்கு வரமுடியும்; அது எப்போதும் ஆளும் வர்க்கத்தின் அழுத்தத்தை பிரதிபலிக்கும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை அவசியமாக்குகிறது. இதன் பொருள் இயக்கத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வ ஆய்வாகும். துல்லியமாக ஒரு சர்வதேச மார்க்சிச மூலோபாயத்துடன் தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரக் கூறுகளை வழங்குவதற்கு, அனைத்து திருத்தல்வாதத்திற்கும் எதிராக இறுதிவரை போராடுவது அவசியம், அத்தகைய மோதல்களின் விளைவாக நனவுபூர்வமாக தீர்க்கப்பட்ட நமது தற்போதைய நிலையை புரிந்து கொள்ள வேண்டும். [26]

கிளிஃவ் சுலோட்டர்

அந்த உத்வேகத்துடன், ஜூன் 1962 இல் அமெரிக்கர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நான்காம் அகிலத்தின் சிக்கல்கள் மற்றும் அடுத்த படிகள்' என்ற ஆவணத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி 'SWP மற்றும் SLL ஐ பிரிக்கும் கொள்கை தொடர்பான கேள்விகளை வெளிப்படையாக ஒப்புக் கொண்டபோது பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் குதூகலமடைந்தனர். [27]

ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டது

'ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டது' என்பதில் SLL இன் பதில், SWP உடனான வழிமுறை தொடர்பான அதன் அடிப்படை வேறுபாடுகள் 'லெனினிசத்தின் அடிப்படைக் கேள்விகள், ஒரு சர்வதேச புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவது எப்படி என்பதை மையமாகக் கொண்டது' என்று அறிவித்தது. அது தொடர்ந்தது:

இந்த கலந்துரையாடலில் ஒரு புதிய கட்டம் எட்டப்பட்டுள்ளது என்ற உண்மையானது, நான்காம் அகிலத்தின் இந்த புரட்சிகர பகுதிகளை கட்டியெழுப்புவதில் ஒரு புதிய கட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு திருத்தல்வாதத்தின் தோல்வி அவசியமாகிறது. [28]

இந்த ஆவணம் அறிவித்தது:

முன்னேறிய நாடுகளின் தொழிலாளர்கள் பெரிய போராட்டங்களில் நுழைகிறார்கள். இவை அரசு அதிகாரத்திற்கான போராட்டங்களாக மாறாத வரை இவை நிரந்தர தோல்விகளையே விளைவிக்கும். அப்போராட்டத்திற்கு மார்க்சிச தலைமை அவசியமாகும்…

மார்க்சிஸ்ட்-அல்லாத தலைமைகளுக்கு மன்னிப்பு, குட்டி முதலாளித்துவ தலைமை 'புறநிலை சக்திகளின்' பலத்தின் மூலம் 'இயற்கையாகவே' மார்க்சிஸ்டாக மாற முடியும் என்ற வலியுறுத்தல்கள் ஆகியவை மார்க்சிச தலைமையை நோக்குநிலை இழக்கச் செய்வதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்க அச்சுறுத்துகின்றன.

சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தொழிலாள வர்க்கம் முறித்துக் கொள்வதைத் தடுக்கும் வகையில், மத்தியவாதிகளுக்கு சரணடைவது இப்போது நடந்தால், பிரமாண்டமான தொழிலாள வர்க்க தோல்விகளுக்கு திருத்தல்வாதிகள் பொறுப்பாவார்கள். [29]

புரட்சிகர தலைமையின் நெருக்கடி பற்றிய ஆய்வறிக்கையை SWP கைவிடுவதையும் பப்லோவாதத்தின் புறநிலைவாத கண்ணோட்டத்தை அது தழுவுவதையும் கண்டித்து, SLL பின்வருமாறு எழுதியது:

கட்சியின் வளர்ச்சியில் இருந்து தனியான ஒரு நிகழ்ச்சிப்போக்காக இதை நிறைவேற்றும் 'வரலாற்றின் விதிகள்' பற்றிப் பேசுவது, 'புறநிலைக்கும்' 'அகநிலைக்கும்' இடையேயான உறவுகள் குறித்த மார்க்சிச நிலைப்பாட்டை கைவிடுவதாகும். …

தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுத்து சோசலிசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இந்தக் கட்சி ஒரு நனவான முறையில் கட்டமைக்கப்பட வேண்டும். [30]

கியூபா தொடர்பான வேறுபாடுகள் 'இந்த பொதுவான மற்றும் அடிப்படையான கருத்து வேறுபாடுகளின் ஒரு பகுதி மட்டுமே' என்று விளக்கிய SLL, கியூபாவை ஒரு தொழிலாளர் அரசாக வகைப்படுத்துவது சோவியத் ஒன்றியம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் தொடர்ச்சியே என்ற SWP இன் கூற்றுக்களின் முழுமையான மோசடியையும் அம்பலப்படுத்தியது:

சோவியத் ஒன்றியம் பற்றிய அவரது கலந்துரையாடலும் வரையறுத்தலும் வரலாற்று ரீதியாகவும், தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான உலகளாவிய போராட்டதுடன் தொடர்புபடுத்தி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். … SWP இன் வழிமுறை இதற்கு நேர்மாறானது, உலகப் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு தனித்துவமான கட்டமாக உலகின் ஒரு பகுதியில் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தின் கலந்துரையாடலில் இருந்து சில 'அளவுகோல்களை' எடுத்துக்கொள்கிறது. அவர்கள் இந்த அளவுகோல்களை, ஒரு தலைமுறைக்குப் பின்னர் உலகின் மற்றொரு பகுதிக்கு, போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட துறைக்கு பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தேசியமயமாக்கலும் தொழிலாளர் போராளிகளின் இருப்பும் கியூபாவை 'தொழிலாளர் அரசாக்குவதற்கும்' கியூபப் புரட்சியை சோசலிசப் புரட்சியாக்குவதற்கும் போதுமானதாம். இந்த 'தர நிலை' வழிமுறையானது, தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கு மற்றும் பணிகளில் இருந்து தொடங்குவதற்குப் பதிலாக, குட்டி முதலாளித்துவ புரட்சிகர தேசியவாதிகளின் வெற்றியின் தற்போதைய நிலையற்ற மற்றும் தோன்றிமறைகின்ற போராட்டத்தின் முன் தங்களை அடிபணியவைக்கும் நடைமுறைக்கான தத்துவார்த்த மூடுதிரையாகும். [31]

SLL பின்வருமாறு கேட்டது:

'தொழிலாளர்களின் அரசு' என்பது உறுதியான அர்த்தத்தில் எதைக் குறிக்கிறது? இது ஏதோ ஒரு வடிவத்தில் 'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்' என்று பொருள்படுகின்றது. கியூபாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கிறதா? நாங்கள் இல்லை என்று திட்டவட்டமாக பதிலளிக்கிறோம்!

காஸ்ட்ரோவின் ஆட்சியானது, பாட்டிஸ்டா ஆட்சியில் இருந்து பண்புரீதியாக புதிய மற்றும் வேறுபட்ட ஒரு அரசை உருவாக்கவில்லை. காஸ்ட்ரோவால் மேற்கொள்ளப்பட்ட தேசியமயமாக்கல்கள், அரசின் முதலாளித்துவத் தன்மையை மாற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை. [32]

மேலும், கியூபாவின் வளர்ச்சி 'நிரந்தரப் புரட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது' என்ற ஹான்சன் மற்றும் பப்லோவாதிகளின் கூற்றுகளுக்குப் பதிலளித்து SLL அறிவித்தது:

கியூபா, உண்மையில், நிரந்தர புரட்சியினது ஒரு எதிர்மறையான உறுதிப்படுத்தலாக அமைகிறது. தொழிலாள வர்க்கத்தால் விவசாய வெகுஜனங்களுக்கு தலைமைதாங்கவும் வழிநடத்தவும், முதலாளித்துவ அரசு அதிகாரத்தை நொறுக்கவும் முடியாத நிலையில், முதலாளித்துவ வர்க்கம் தலையிட்டு 'ஜனநாயகப் புரட்சியின்' பிரச்சினைகளை அதன் சொந்த முறைகளிலும் அதன் சொந்த விருப்பங்களுக்கு ஏற்பவும் தீர்த்து வைக்கிறது. [33]

கலந்துரையாடலின் இந்தக் கட்டத்தில் கூட, அனைத்து சர்வதேச பிரிவுகளின் அணிகளுக்குள் கோட்பாட்டு ரீதியான கலந்துரையாடல்களை நிறைவேற்றுவதற்கான தனது முன்மொழிவை SLL தொடர்ந்து பராமரித்தது:

இந்த முன்மொழிவுகளைச் செய்வதில் எங்களின் நோக்கம் அனைத்துலக் குழுவினதும் (IC), சர்வதேச செயலகத்தினதும் (IS) தலைமைக் குழுக்களுக்கு இடையே எந்த உச்சிமாநாட்டு ஒப்பந்தத்திற்கும் வருவதல்ல, மாறாக இரு அமைப்புகளின் அனைத்து பிரிவுகளின் அணிகளுக்குள்ளும் திருத்தல்வாதத்திற்கு எதிராக விட்டுக்கொடுக்காத போராட்டத்தை முன்னெடுப்பதே ஆகும்.[34]

சந்தர்ப்பவாதமும் அனுபவவாதமும்

சோசலிச தொழிலாளர் கழகத்தை தனிமைப்படுத்தும் முயற்சியில், ஹான்சன் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொள்கை ரீதியான தாக்குதல்களுக்கு நவம்பர் 1962 இல் 'கியூபா — அமிலப்பரிசோதனை: அதிதீவிர-இடது குறுங்குழுவாதிகளுக்கு ஒரு பதில்' என்ற கட்டுரையின் மூலம் பதிலளித்தார். ஹான்சனின் ஆவணம் SLL ஐ அவதூறு செய்யும் ஒரு தீய முயற்சியாக, அதன் நிலைப்பாடுகளை புறநிலை யதார்த்தத்தினை கருத்தியல்வாத மற்றும் மாறாநிலைவாத மறுப்பாக எடுத்துக்காட்டியது.

ஹான்சன் கூறினார்:

கியூபப் புரட்சி பற்றிய உண்மைகளை சோசலிச தொழிலாளர் கழகம் அங்கீகரிப்பதற்காக, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் இரண்டு நீண்ட மற்றும் முழுதான ஆண்டுகள் காத்திருக்கிறது. … வெளிப்படையான நிகழ்வுகளை ஒப்புக்கொள்ள ஏன் இந்த பிடிவாதமான மறுப்பு? எல்லாவற்றிற்கும் மேலாக, SLL இன் தலைவர்கள் உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதை உணர்ந்துள்ளனர்; அவர்கள் இதை ஒரு புனிதமானதாக மாற்றி, அதை ஒரு மெய்யியலாக உயர்த்தியுள்ளனர்.[35]

ஜோசப் ஹான்சன்

சுலோட்டர் தனது, இயங்கியல் பற்றி லெனின் என்ற நூலில் எடுத்துக்காட்டிய மார்க்சிசத்திற்கும் அனுபவவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்றி ஹான்சன் இங்கே பேசுகிறார், அதில் அவர் வாதிட்டார் 'சில 'மார்க்சிஸ்டுகள்' மார்க்சிச வழிமுறை அனுபவவாதத்தின் அதே தொடக்க புள்ளியைக் கொண்டுள்ளது என்று கருதுகின்றனர்: அதாவது, அது ‘-நிகழ்வுகள் பற்றிய உண்மைகளிலிருந்து’ தொடங்குகிறது.”

சுலோட்டரை விரிவாக மேற்கோள் காட்டுவது மதிப்புடையதாகும். அவர் தொடர்கிறார்:

நிச்சயமாக ஒவ்வொரு விஞ்ஞானமும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், 'நிகழ்வுகள் பற்றிய உண்மைகள்' என்பதன் வரையறை மற்றும் நிறுவுதல் எந்தவொரு விஞ்ஞானத்திற்கும் முக்கியமானது. ஒரு விஞ்ஞானத்தின் உருவாக்கத்தின் ஒரு பகுதி துல்லியமாக அதன் வரையறை மற்றும் வரையறை அதன் சொந்த விதிகளை கொண்ட ஒரு ஆய்வுத் துறையாக உள்ளது: 'நிகழ்வுகள் பற்றிய உண்மைகள்' அனுபவத்தில் புறநிலை ரீதியாகவும் சட்டபூர்வமாகவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகின்றன, இந்த நிகழ்வுகள் பற்றிய உண்மைகளின் விஞ்ஞானம்[கள்] நடைமுறைக்கு ஒரு அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள அடிப்படையாகும். சமூகம் மற்றும் அரசியல் துறையில் நமது 'அனுபவவாத' மார்க்சிஸ்டுகள் இந்த விவகாரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். அவர்களின் நடைமுறை கூறுவது என்னவென்றால்: 1848, அல்லது 1921 அல்லது 1938 இல் இருந்ததைப் போலவே நிகழ்வுகள் பற்றிய உண்மைகளின் அடிப்படையில் நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை வைத்திருந்தோம்; இப்போது நிகழ்வுகள் பற்றிய உண்மைகள் வெளிப்படையாகவே வேறுபட்டவை, எனவே எமக்கு வேறு வேலைத்திட்டம் தேவை. …

'நிகழ்வுகள் பற்றிய உண்மைகள்' பற்றிய தவறான மற்றும் மார்க்சிசமற்ற பார்வையே இந்தத் திருத்தல்வாதக் கருத்துக்களுக்கு இட்டுச் செல்கிறது. 'வரலாறு எங்கள் பக்கத்தில் உள்ளது' என்ற செய்தியுடன் நமது 'புறநிலைவாதிகள்' சொல்வது இதுதான்: நடைபெறும் பெரிய போராட்டங்களைப் பாருங்கள், அவற்றைப் ஆராய்வு செய்யாமல் ஒன்றாகச் சேர்க்கவும், அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை தொடரவும், இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உங்களிடம் 'நிகழ்வுகள் பற்றிய உண்மைகள்' உள்ளன. காலனித்துவப் புரட்சிகள் இங்கும் வெற்றி பெறுகின்றன, அங்கேயும் வெற்றி பெறுகின்றன, வேறொரு இடத்திலும்; பின்னர் காலனித்துவ புரட்சியின் வெற்றி என்பது நிகழ்வுகள் பற்றிய ஒரு உண்மை. நெருமா (Nkrumah) மற்றும் மபோயா (Mboya) மற்றும் நாசர் போன்ற தேசியவாத தலைவர்கள் 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' உரைகளை நிகழ்த்துகிறார்கள் மற்றும் தேசியமயமாக்கலையும் கூட செய்கிறார்கள்; பாட்டாளி வர்க்கம் அல்லாத அரசியல்வாதிகளை ஒரு சோசலிச திசையில் கட்டாயப்படுத்த வரலாறு பின்வாங்கமுடியாமலும் தவிர்க்கமுடியாமலும் முனைகிறது என்பதை இது அறிவுறுத்துகிறது. ஆனால் இந்த வகையான 'புறநிலைவாதம்' என்பது தோற்றப்பாடுகளின் தொகுப்பே தவிர, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பகுதிகளைக் கொண்ட முழுப் படத்தின் செழுமையான இயங்கியல் பகுப்பாய்வு அல்ல. ஒரு உண்மையான புறநிலை பகுப்பாய்வானது, உலக அளவிலும், நாடுகளுக்குள்ளும் வர்க்கங்களுக்கு இடையிலான பொருளாதார உறவுகளிலிருந்து தொடங்குகிறது. இந்த வர்க்கங்களின் தேவைகளுக்கும் அவற்றின் நனவு மற்றும் அமைப்புக்கும் இடையிலான உறவுகளின் பகுப்பாய்வு மூலம் இது தொடர்கிறது. இவற்றின் அடிப்படையில் அது சர்வதேச மற்றும் ஒவ்வொரு தேசிய பகுதிகளிலும் தொழிலாள வர்க்கத்திற்கான அதன் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 'முற்போக்கு சக்திகளின்' பட்டியல் ஒரு புறநிலை பகுப்பாய்வு அல்ல! இது நேர்மாறானது, அதாவது, வெறுமனே மேலெழுந்தவாரியான தோற்றப்பாடுகளின் தொகுப்பாகும். இது குட்டி-முதலாளித்துவ அரசியல்வாதிகளால் தலைமைதாங்கப்படும் முதன்மையாக தேசிய இயக்கங்கள் மற்றும் அதிகாரத்துவ தொழிலாளர் இயக்கங்களின் சமகால வர்க்கப் போராட்டத்தின் தற்போதைய விஞ்ஞானபூர்வமற்ற நனவை ஏற்றுக்கொள்வதாகும். காஸ்ட்ரோவும் மற்றவர்களும் 'இயற்கையான' மார்க்சிஸ்டுகள் என பரிந்துரைப்பதன் மூலம் மேலெழும் இந்த தத்துவார்த்த முட்டாள்தனம் சம்பந்தப்பட்ட 'தத்துவார்த்தவாதிகள்' அவர்கள் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறார்கள் என்பது பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த மட்டுமே உதவுகிறது. வெகுஜனப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் புரட்சிகரக் கருத்துருக்களை எளிதாகவும் தன்னிச்சையாகவும் அடையும் காலங்கள்தான் அதிகபட்ச புரட்சிகர பதட்டத்தின் காலகட்டங்கள் என்று அவர்கள் கருதுவதாக தெரிகிறது. மாறாக, இது போன்ற சமயங்களில்தான் நீண்டகால போராட்டத்தில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான நனவு, தத்துவம் மற்றும் மூலோபாயம் ஆகியவை மிகவும் முக்கியத்துவமானவையாகும். [36]

மார்க்சிசத்துடன் 'திட்டமிட்டமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவவாதம்' என்று தவறாக அடையாளம் காணும் அனுபவவாத முறையை ஹான்சன் பாதுகாப்பதை, SWP இன் சந்தர்ப்பவாத கொள்கைகளின் கோட்பாடற்ற தன்மையை மேலும் அம்பலப்படுத்த SLL பயன்படுத்தியது. இது அதன் அடிப்படையாகப் பயன்படுத்திய மார்க்சிச எதிர்ப்பு மெய்யியல் வழிமுறையின் வரலாற்று மற்றும் வர்க்க அடித்தளங்களை வெளிப்படுத்தியது.

மார்ச் 1963 இல், SLL ஆனது சந்தர்ப்பவாதமும் அனுபவவாதமும் என்ற அறிக்கையை வெளியிட்டது, இதில் சுலோட்டரும் கையெழுத்திட்டிருந்தார். அது அறிவித்தது:

உடனடி பணிகளுக்கு தேவையான முற்றிலும் நடைமுறை அரசியல் உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு திருத்தல்வாத போக்குடன் 'ஒன்றிணைவதற்கு' அழைப்பு விடுக்கும் போக்கை ஹான்சன் வழிநடத்துகிறார். இந்தக் கண்ணோட்டத்தில் அவர் பிளவுகளின் வரலாறு மற்றும் போக்குகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றிய ஆய்வுகளை நிராகரிக்கிறார்.

இங்கே ஹான்சனின் அணுகுமுறையின் முறையான அடிப்படை என்ன? அவருக்கான முக்கியமான கேள்வி எப்போதுமே உடனடி அரசியல் தோற்றப்பாடுகளின் குறுகிய கண்ணோட்டத்தில் 'எது சிறப்பாகச் செயல்படும்?' என்பதாகும். [37]

SWP இனையும் பப்லோவாதிகளையும் ஐக்கியப்படுத்திய புறநிலைவாத வழிமுறையிலிருந்து மார்க்சிசத்தை பிரிக்கும் அடிப்படை வேறுபாடுகளை SLL முன்வைத்தது:

'நிகழ்வுகள் பற்றிய உண்மைகள்' புறநிலை யதார்த்தம் மற்றும் நாம் 'அங்கிருந்து தொடங்க வேண்டும்' என்ற இந்த வாதங்கள் அனைத்தும், தொழிலாள வர்க்கம் அல்லாத தலைமைகளுக்கு ஏற்றவாறு கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு தயாரிப்பு ஆகும்.

அனுபவவாதம், அது 'நிகழ்வுகள் பற்றிய உண்மைகளுடன் தொடங்குகிறது' என்பதால், அவற்றிற்கு அப்பால் செல்ல முடியாது, மேலும் உலகத்தை இருப்பதுபோலவே அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முதலாளித்துவ சிந்தனை வழிமுறை, 'பொது சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தனிமனிதன்' என்ற நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்க்கிறது.

மார்க்சிசத்தின் தத்துவதிலும் நடைமுறையிலும் பொதுமைப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தின் வெளிச்சத்தில் புறநிலை நிலைமையை தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அது 'நிகழ்வுகள் பற்றிய உண்மைகளை' அவை வரும்போது எடுக்க வேண்டும். அவை நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மார்க்சிசம், தொழிலாளர் இயக்கத்தின் சுயாதீன நடவடிக்கைக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்க முன்னணிப் படையை ஆயுதபாணியாக்குகிறது; அனுபவவாதம் அதை தற்போதுள்ள கட்டமைப்பான முதலாளித்துவத்திற்கும் தொழிலாள வர்க்க அமைப்புகளில் இருக்கும் அதன் முகமைகளுக்கும் ஏற்ப தகவமைத்துக்கொள்கின்றது.[38]

சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதிகளுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அடிப்படையாக செயல்பட்ட 'புதிய யதார்த்தம்' என்ற கருத்தின் சாராம்சத்தை பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்தாபித்துக் காட்டியிருந்தனர். இது முதலாளித்துவ யதார்த்தத்தையும் ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கத்தின் தொடர்ச்சியையும் நியாயப்படுத்துவதும், தழுவுவதும் ஆகும்.

முடிவுரை

மறுஐக்கியம் நிறைவடைந்த நிலையில், ஹீலி SWP இன் தேசியக் குழுவிற்கு ஒரு இறுதிக் கடிதம் எழுதினார். நோர்த் கவனித்தபடி, அது, “SWP-பப்லோதிகள் மறுஐக்கிய மாநாட்டின் கூட்டத்தில் கலந்திருந்த மோசடி மற்றும் வஞ்சகம் பற்றிய கடுமையான விமர்சனத்தை வழங்கியது. ஆனால் அந்தக் கடிதத்தின் இறுதிப் பத்திகளில்தான் SWP யின் அரசியல் காட்டிக்கொடுப்புக்கான ஹீலியின் அவமதிப்பு அதன் மிகக் கடுமையான வெளிப்பாட்டைக் கண்டது.' [39]

ஹீலி எழுதினார்:

நிச்சயமாக உங்களுக்கு 'குறுங்குழுவாத SLL'க்கு ஒதுக்க நேரமில்லைத்தான். அணிகளிலும் தலைமையிலும் உள்ள எமது தோழர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சிறந்த மரபுகளில், சீர்திருத்தவாதத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் எதிராக நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பென் பெல்லா, காஸ்ட்ரோ மற்றும் இலங்கை மே தின கூட்டம் என்று அழைக்கப்படுவது போன்ற பொதுக் கூட்டங்களில் அவர்கள் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களுடன் உரையாற்றவில்லைத்தான். உங்கள் பார்வையில் நாங்கள் மிகவும் சிறியவர்கள், 'அதிதீவிர-இடது துண்டுகளாகும்.'…

உங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. ('கிறிஸ்துவிடம் தாமதமாக வருபவர்கள் கடினமாக வருவார்கள்' என்று பழமொழி சொல்வது போல) ஜோர்ஜ் கிளார்க் பப்லோவுடன் இணைந்து, பிரபலமற்ற மூன்றாம் காங்கிரஸின் செய்தியை மிலிட்டனிலும் அந்த நேரத்தில் இருந்த நான்காம் அகிலம் சஞ்சிகையிலும் வெளியிட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆகிறது. அந்த நேரத்தில் நீங்கள் பப்லோவைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டீர்கள், பின்னர் 1953 இல் எங்களுக்கு பிளவு ஏற்பட்டது. நாங்கள் 'பப்லோவாதத்திற்குத் திரும்பப் போவதில்லை' என்ற வார்த்தைகளுடன் அந்த பிளவை கனன் பாராட்டினார். சமீப காலம் வரை அவர் பப்லோவாதத்திற்கு மாறுவதற்கு எதிராக உண்மையிலேயே பிடிவாதமாக இருந்தார். ஆனால் கடைசியில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள். உங்களுக்கு இப்போது ஃபிடல் காஸ்ட்ரோ முதல் பிலிப் குணவர்தன மற்றும் பப்லோ வரை எல்லா இடங்களிலும் கூட்டாளிகள் உள்ளனர்.

நாங்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சொல்ல விரும்புகிறோம். இதில் எங்கள் மாநாடு ஒருமனதாக இருந்தது. மிகவும் பிற்போக்கு சக்திகளுக்கு உங்கள் கட்சியின் பெரும்பான்மை தலைமை முழுமையாக அடிபணிந்ததைப் போன்ற இத்தகைய இழிவான சரணாகதிக்கு எதிராக, எமது அமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.[40]

நான்காம் அகிலத்தின் அடிப்படைத் தூண்களை முறியடித்துவிட்டதாக SWP மற்றும் பப்லோவாதிகள் கூறிய இந்த 'புதிய சக்திகள்' 'நிகழ்வுகள் பற்றிய உண்மைகள்' மற்றும் 'மழுங்கடிக்கப்பட்ட ஆயுதங்களில்' எஞ்சியிருப்பது என்ன?

அவர்கள் தமது சொந்த நாடுகளையோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியையோ முதலாளித்துவத்திலிருந்து விடுவிக்க முடியாது என்பதை முழுமையாக நிரூபித்துள்ளனர். ட்ரொட்ஸ்கியால் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சியின் அடிப்படை விதிகளுக்கு இணங்க, அந்த முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைமைகள் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்து, நிராயுதபாணியாக்கி, பாசிச இராணுவ சர்வாதிகாரங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்குள் சமநிலையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் பாதையைத் தயாரித்து வருகின்றன.

பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் அரசியலுக்கான விலை நூறாயிரக்கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் இரத்தத்தில் செலுத்தப்பட்டது. அவர்கள் பேரழிவு தரும் கெரில்லா போராட்டங்களில் தங்கள் நோக்குநிலையைப் பின்பற்றினர் அல்லது அது உருவாக்கிய தோல்விகளால் பாதிக்கப்பட்டனர்.

[1] Dynamics of World Revolution Today, June 1963.

[2] W. Sinclair, “Under A Stolen Flag,” May 22, 1957 – Trotskyism versus Revisionism, Volume 3.

[3] David North, Cliff Slaughter: A Political Biography (1928–1963), Part 3, August, 2021.

[4] David North, Gerry Healy and his Place in the History of the Fourth International, 1989.

[5] David North, The Heritage We Defend, 1988.

[6] North, Cliff Slaughter, Part 3.

[7] North, The Heritage We Defend.

[8] Letter from James P. Cannon to L. Goonewardene, March 12, 1957 – Trotskyism versus Revisionism, Volume 3.

[9] Letter from G. Healy to James P. Cannon, May 10, 1957 – Trotskyism versus Revisionism, Volume 3.

[10] “Political Statement Adopted by the International Conference” – Education for Socialists: The Struggle to Reunify the Fourth International (1954–63), Vol. IV.

[11] Ibid.

[12] Ibid.

[13] North, The Heritage We Defend.

[14] Nahuel Moreno, “Tesis de Leeds (Tesis sobre el Frente Único Revolucionario),” Centro de Estudios Humanos y Sociales, Buenos Aires, 2016.

[15] Nahuel Moreno, “La revolución permanente en la posguerra,” Centro de Estudios Humanos y Sociales, Buenos Aires, 2018.

[16] Ibid.

[17] The Socialist Workers Party's resolution on the World Situation, 1961 – Trotskyism versus Revisionism, Volume 3.

[18] North, The Heritage We Defend.

[19] Ibid.

[20] Draft resolution of the SWP Political Committee May 1, 1962 – Trotskyism versus Revisionism, Volume 3.

[21] Ibid.

[22] International Socialist Review, Vol.22 No.3, Summer 1961.

[23] Correspondence of James P. Cannon, May 1961 – Trotskyism versus Revisionism, Volume 3.

[24] Letter of the National Committee of the SLL to the National Committee of the SWP, January 2,1961 – Trotskyism versus Revisionism, Volume 3.

[25] Letter of the NEC of the Socialist Labour League to the National Committee of the Socialist Workers Party, May 8, 1961 – Trotskyism versus Revisionism, Volume 3.

[26] A reply to Joseph Hansen, by C. Slaughter – Trotskyism versus Revisionism, Volume 3.

[27] “Trotskyism Betrayed: The SWP accepts the political method of Pabloite revisionism” by the National Committee of the SLL, July 21, 1962 – Trotskyism versus Revisionism, Volume 3.

[28] Ibid.

[29] Ibid.

[30] Ibid.

[31] Ibid.

[32] Ibid.

[33] Ibid.

[34] Ibid.

[35] “Cuba – The Acid Test: A reply to the Ultraleft sectarians,” by Joseph Hansen, November 20,1962 – Trotskyism versus Revisionism, Volume 4.

[36] “‘The Theoretical Front’, Lenin’s Philosophical Notebooks, Second Article” Labour Review, Summer 1962, Vol. 7, No. 2.

[37] Opportunism and Empiricism SLL National Committee, March 23, 1963 – Trotskyism versus Revisionism, Volume 4.

[38] Ibid.

[39] North, Gerry Healy and his Place, 1989.

[40] Letter from G. Healy (for the SLL) to the National Committee of the SWP, June 12, 1963 – Trotskyism versus Revisionism, Volume 4.

Loading