சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளியில், கனடா சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கீத் ஜோன்ஸ் வழங்கிய விரிவுரையாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய, “ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்” என்ற ஆரம்ப அறிக்கை ஆகஸ்ட் 7 இல் பிரசுரிக்கப்பட்டது. “நான்காம் அகிலத்தின் வரலாற்று, அரசியல் அடித்தளங்கள்” என்ற இரண்டாவது விரிவுரை ஆகஸ்ட் 14 இல் பிரசுரிக்கப்பட்டது. “பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்” என்ற மூன்றாவது விரிவுரை ஆகஸ்ட் 18 இல் பிரசுரிக்கப்பட்டது. “கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்” என்ற நான்காவது விரிவுரை ஆகஸ்ட் 25 இல் பிரசுரிக்கப்பட்டது. அனைத்து விரிவுரைகளையும் WSWS வரும் வாரங்களில் வெளியிடும்.

முன்னுரை

அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), அதிகரித்தளவில் வெளிப்படையாக பப்லோவாத நிலைப்பாடுகளையும், பப்லோவாத சர்வதேச செயலகத்திற்கு (International Secretariat) இணக்கமான அமைப்புரீதியிலான முன்னெடுப்புகளையும் ஏற்றதற்கு எதிராக ஜனவரி 1961 இல் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போராட்டத்தைத் தொடங்கினர்.

SWP தலைமைக்கு அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தில் பின்வரும் முக்கிய குறிப்புகள் இருந்தன:

முதலாவதாக, “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலை மற்றும் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்பும் மூலோபாயத்தில் இருந்து எவ்விதத்தில் பின்வாங்குவதும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஓர் உலக-வரலாற்று பிழையான முக்கியத்துவத்தைப் பெறும்.”

இரண்டாவதாக, பெரிதும் முதல் குறிப்பில் இருந்து தெரிய வருவதைப் போல, “ட்ரொட்ஸ்கிசத்திற்குள், பப்லோவாத திருத்தல்வாதம் ஒரு போக்காகக் கருதப்பட்ட காலகட்டம் முடிவது நெருங்கி வந்துள்ளது.” [1]

அமெரிக்க SWP இன் தேசியக் குழுவுக்கு அது கடிதம் அனுப்பிய ஜனவரி 2, 1961 க்கும் மற்றும் ஜூன் 1963 பப்லோவாத மறுஐக்கிய மாநாட்டுக்கும் இடையிலான இரண்டரை ஆண்டுகளில், பப்லோவாதிகளுடனான SWP இன் கோட்பாடற்ற மறுஐக்கியம், தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் பேரழிவில் முடியும் என்று அது வலியுறுத்திய எச்சரிக்கைகளை சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) தீவிரப்படுத்தி, தத்துவார்த்த ரீதியில் விரிவுபடுத்தியது.

இந்த மதிப்பீடு, அதற்குப் பின்னர் வெறும் 12 மாதங்களில், இப்போது இலங்கை என்று அழைக்கப்படும் சிலோனில் மாபெரும் காட்டிக்கொடுப்பின் வடிவில் நிரூபணமாக இருந்தது. ஜூன் 9, 1964 இல், புரட்சிகர சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்த அந்தத் தீவில், ஒரு பாரிய நெருக்கடிக்கு மத்தியில், பப்லோவாத லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் நுழைந்தது. ட்ரொட்ஸ்கிச கட்சியாக கூறிக் கொண்ட மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியில் தொடர்புடைய ஒரு கட்சி ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்தது அதுவே முதல் முறையாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அந்த காட்டிக்கொடுப்பின் உலக வரலாற்று முக்கியத்துவத்தை உடனடியாக உணர்ந்தது. கொழும்புக்கு பயணித்த ஜெர்ரி ஹீலி, கூட்டணி தொடர்பாக முடிவெடுத்த ஜூன் 1964 LSSP மாநாட்டில் தலையீடு செய்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஜூலை 5, 1964 அறிக்கையில், புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சிகளை, அதாவது ICFI இன் பிரிவுகளைக் கட்டுவதன் மூலமாக புரட்சிகர தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, பப்லோவாதத்தின் கலைப்புவாத அரசியலை அந்த போராட்டத்தின் மையத்தில் நிலைநிறுத்த வேண்டியதன் அவசரத் தேவையையும், பப்லோவாதத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தையும் குறிப்பிட்டு பின்வரும் ஆரம்பத் தீர்மானத்தை எடுத்தது:

அது அறிவித்தது, “பண்டாரநாயக்க கூட்டணிக்குள் LSSP உறுப்பினர்கள் நுழைவது, நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சி காலகட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. ஏகாதிபத்தியத்தின் நேரடி சேவையில், தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்குத் தயாரிப்பு செய்வதில், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் திருத்தல்வாதம் அதன் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.” [2]

மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளும் மற்றும் சிலோனில் எதிர்மறையாக அது எடுத்துக்காட்டப்பட்ட விதமும், மேற்கொண்டு ICFI இன் வளர்ச்சின் மத்தியில் அவசியமாக இருந்ததுடன், அவை அமெரிக்காவிலும் இலங்கையிலும் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளாக, முறையே, வேர்க்கர்ஸ் லீக் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (RCL) நிறுவ நேரடியாக வழிவகுத்தன.

வேர்க்கர்ஸ் லீக்கின் வேர்களை, ரிம் வொல்ஃபோர்த் தலைமையில் SWP இல் இருந்த சிறுபான்மை அணி வரையில் பின்னோக்கிப் பார்க்கலாம். 1961 ஆரம்பத்தில், ICFI உடன் இணைந்து இயங்கிய அந்த அணி, பப்லோவாதிகளுடனான மறுஐக்கியத்தை எதிர்ப்பதில் ICFI இன் கட்டுப்பாட்டிற்கு இணங்கி செயலாற்றியது. ஆனால் இலங்கையில் நடந்த சம்பவங்களும் மற்றும் அவற்றின் படிப்பினைகளும், நாம் எடுத்துக்காட்ட இருப்பதைப் போல, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவான சிறுபான்மையினருக்கு அரசியல் தெளிவுபடுத்தலை வழங்குவதிலும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதிலும் மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கை நிறுவுவதிலும் முக்கியமாக இருந்தன.

1953 இல் பப்லோவை எதிர்த்த சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), 1963 இல் ஒரு பொதுவான ட்ரொட்ஸ்கிச-விரோத முன்னோக்கின் அடிப்படையிலும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பிளவுக்கு இட்டுச் சென்றிருந்த கருத்து வேறுபாடுகள் மீதான அனைத்து விவாதங்களையும் ஒடுக்கியதன் அடிப்படையிலும், ICFI உடன் முறித்துக் கொண்டு பப்லோவாதிகளுடன் மறுஐக்கியத்திற்குச் சென்றது. இதற்கு நேர்மாறாக, சிலோனில் அனைத்துலகக் குழுவின் பிரிவோ அல்லது ஆதரவு அணியோ இருக்கவில்லை. 1953-54 இல், LSSP பப்லோவிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு குழப்பமான நிலைப்பாட்டில் இருந்தது. இறுதியில் பப்லோவாத 'நான்காம் அகிலத்திற்குள்' தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்து, அதிகரித்தளவில் வெளிப்படையான தேசிய-சந்தர்ப்பவாத அரசியலைப் பின்பற்றுவதற்கு அதற்கு கிடைத்திருந்த சுதந்திரத்திற்கு கைமாறாக, அதன் நன்மதிப்பைப் பப்லோவிற்கும் மற்றும் சர்வதேச செயலகத்திற்கும் வழங்கியது.

அமெரிக்காவிலும் இலங்கையிலும், SLL இன் தலையீடு, நிரந்தரப் புரட்சியையும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் மேலாதிக்கத்திற்குமான போராட்டத்தையும் பப்லோவாதிகள் காட்டிக்கொடுத்ததை எதிர்த்த சக்திகளுக்கு ஓர் உண்மையான ட்ரொட்ஸ்கிச நோக்குநிலை மற்றும் வேலைத்திட்டத்தை வழங்கி அவர்களை அணிதிரட்டுவதில் தீர்க்கமானதாக நிரூபணமாக இருந்தது. அவ்விரண்டினது விஷயங்களிலுமே, புதிய ட்ரொட்ஸ்கிச கட்சிகள் — அதாவது வேர்க்கர்ஸ் லீக்கும், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் — உருவாவதற்கு முன்னரே, அதாவது SWP விவகாரத்தில் மறுஐக்கியத்தை எதிர்ப்பதாகவும், இலங்கை விவகாரத்தில் அந்த மாபெரும் காட்டிக்கொடுப்பை எதிர்ப்பதாகவும் கூறிய குட்டி-முதலாளித்துவ சக்திகளிடம் இருந்து பிரிவதற்கும் மற்றும் அரசியல் தெளிவுபடுத்துவதற்குமான ஒரு காலகட்டம் தேவைப்பட்டது.

இந்த விரிவுரையின் முதல் பகுதி, பப்லோவாத சந்தர்ப்பவாதத்தில் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) இன் மாபெரும் காட்டிக்கொடுப்பின் வேர்களையும், அதன் தாக்கம் மற்றும் முக்கியத்துவத்தையும், இலங்கை மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு அதிலிருந்து படிப்பினைகளைப் பெற அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்தையும் ஆய்வுக்குட்படுத்தும்.

இரண்டாவது சிறிய பகுதி, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு SWP சரணடைவதற்கு எதிரான போராட்டத்தில் அனைத்துலகக் குழுவை ஆதரித்த ஒரு சிறுபான்மை அணி உருவான விதம், அதன் அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரித்தெடுத்தலின் அடிப்படையில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தோற்றுவாய்களை மீளாய்வு செய்யும்.

இதில், சிலோன் சம்பவங்களின் வேர்கள், முக்கியத்துவம் மற்றும் அரசியல் படிப்பினைகள் மிகவும் முக்கியமானவையாகும். 1964 இல் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழு உருவாக்கத்திற்கும் மற்றும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வேர்க்கர்ஸ் லீக்கின் உருவாக்கத்திற்கும் என இரண்டுக்கும் அவை மிகவும் முக்கியமாக இருந்தன. 1995 இல் வேர்க்கர்ஸ் லீக் சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றப்பட்டது.

ஜூலை 1964 இல், மேற்குறிப்பிடப்பட்ட வோல்ஃபோர்த்தும் மற்றும் இன்று வரை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு தலைவராக இருக்கும் பிரெட் மசெலிஸ் (Fred Mazelis) உட்பட எட்டு பேரும், சிலோன்/இலங்கை சம்பவங்கள் குறித்தும் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் கட்சிக்குள் ஓர் உள்விவாதம் நடத்த அழைப்பு விடுத்ததற்காக SWP இல் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள்தான் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை உருவாக்க இருந்தார்கள். SWP இல் இருந்து உருவெடுத்து ICFI உடன் உடன்படுவதாக வாதிட்ட மற்றொரு குழுவான ஸ்பார்டசிஸ்ட் லீக்கின் (Spartacist League) குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளிடம் இருந்து அரசியல் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ஒரு கூடுதலான காலக்கட்டத்திற்குப் பின்னர், நவம்பர் 1966 இல் நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழு வேர்க்கர்ஸ் லீக்காக மாற்றப்பட்டது.

சிலோன்/இலங்கையில் பப்லோவாத காட்டிக்கொடுப்பை ஆராய்வதற்கு முன்னர், நான் இன்னுமொரு கருத்தைக் கூற விரும்புகிறேன். லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) மறுஐக்கியத்தில் பெரும் பங்கு வகித்தது. 1950 களின் பிற்பகுதியில், SWP ஐ அரசியல்ரீதியில் ஊடுருவிப் பார்க்க பப்லோவாதிகளுக்கு LSSP ஒரு கருவியாக செயல்பட்டது. 1960 களின் முற்பகுதியில், ஹான்சனும் SWP தலைவர்களும், பப்லோவாதிகளுடனான மறுஐக்கியத்தின் பின்னணியில், உறுப்பினர்களை வெளியேற்ற முனைந்தனர். LSSP ஐ “வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளுக்கான” முன்னுதாரணமாகப் புகழ்பாடிய அவர்கள், ICFI இன் “குறுங்குழுவாத” மற்றும் “பழமைவாத வறட்டு பிடிவாதக்காரர்களுக்கு” எதிராக எதிர்ப்பைக் கட்டியெழுப்ப முனைந்திருந்தனர்.

நிரந்தரப் புரட்சியும், தெற்காசியாவில் ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாட்டுரீதியான அடித்தளங்களும்

LSSP ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியாகவும் மற்றும் சிலோன் தொழிலாள வர்க்கத்தின் பிரதான கட்சியாகவும் உருவெடுத்தமை ஒரு சிக்கலான கேள்வியாகும். இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் என்ற ஆவணத்தில் இந்த வரலாறு அவசியமான ஒரு விஷயமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது, தோழர்கள் இதைக் கவனமாக மீளாய்வு செய்யுமாறு நான் பலமாக கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே, நான் சில சுருக்கமான ஆனால் முக்கியமான குறிப்புகளை மட்டுமே வழங்க முடியும். 1935 இல் அது ஸ்தாபிக்கப்பட்ட போது, LSSP ஒரு தீவிர தேசியவாத அமைப்பாக இருந்து, ஊழல்பீடித்த தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் துணையோடு அத்தீவில் இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை எதிர்த்தது. அது இளைஞர்களின் தலைமையில் இருந்ததுடன், அவர்களில் பலர் ட்ரொட்ஸ்கிசத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்தனர். அவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் போது மார்க்சிசம் மற்றும் புரட்சிகர அரசியலை பற்றி அறிந்துகொண்டனர். கொல்வின் டி சில்வா, பிலிப் குணவர்தன, லெஸ்லி குணவர்தன மற்றும் என்.எம்.பெரேரா ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

1930 களின் பிற்பகுதியில், உலகப் போரை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த போது, காலனித்துவ நாடுகளின் மக்கள் தங்களைப் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பேரரசுகளுக்கு இணங்கிப்போக வேண்டுமென விடுக்கப்பட்ட அப்பட்டமான அழைப்புகள் உட்பட, ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்புரட்சிகர மக்கள் முன்னணி அரசியல் போன்றவை LSSP இன் தலைமையை மேலும் வெளிப்படையாக ட்ரொட்ஸ்கிச பக்கமும் நான்காம் அகிலத்தை நோக்கியும் திரும்பத் தூண்டியது.

ட்ரொட்ஸ்கி எழுதிய ஜூலை 1939 'இந்திய தொழிலாளர்களுக்குப் பகிரங்க கடிதம்”, ட்ரொட்ஸ்கியுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த நான்காம் அகிலத்திற்கு அனுதாபம் கொண்டிருப்பதாக LSSP தலைவர்கள் (“T” குழு என அறியப்பட்டது) மேற்கொண்ட முயற்சிகளுக்கு விடையிறுப்பாக எழுதப்பட்டது. ட்ரொட்ஸ்கியாலும் மற்றும் வேறு இடங்களிலும் பண்டைய காலனித்துவ நாடாக விவரிக்கப்பட்ட இந்தியாவைப் பொறுத்த வரை, அந்தக் கடிதம்தான் நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கைப் பற்றிய அவரது கடைசி பெரிய விரிவாக்கமாக இருக்கக் கூடும்.

லியோன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபகர்

எதிர்வரவிருந்த இரண்டாம் உலகப் போர் இந்தியாவில் ஜனநாயகப் புரட்சிக்கு ஒரு பலமான தூண்டுதலை வழங்கும் என்பதை எதிர்நோக்கி, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்க திராணியற்றது. பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள அவர்கள், அதையே சார்ந்துள்ளார்கள். அவர்கள் தங்களின் சொந்த சொத்துக்கள் பறிபோய்விடுமென நடுங்குகின்றார்கள். அவர்கள் பெருந்திரளான மக்களைக் குறித்து அஞ்சி நிற்கிறார்கள். உயர்மட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையில், என்ன விலை கொடுத்தாவது, அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். … பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஒரு துணிச்சலான, புரட்சிகரமான விவசாயத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், பத்து மில்லியன் கணக்கான விவசாயிகளை கிளர்ந்தெழ வைத்து, அணிசேர்த்து, பூர்வீக ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்குத் தலைமை கொடுக்கும் திறனைக் கொண்டது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் கூட்டணி மட்டுமே, இந்தியப் புரட்சியின் இறுதி வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரே நேர்மையான, நம்பகமான கூட்டணியாகும். [3]

ட்ரொட்ஸ்கியின் “பகிரங்கக் கடிதம்” LSSP க்குள் இருந்த சிறந்த பிரிவினருக்கு ஒரு மூலோபாய நோக்குநிலையை வழங்கியது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில், LSSP அரசியல்ரீதியாக மறுசீரமைக்கப்பட்டு மீளமைக்கப்பட இருந்தது. இலங்கையைத் தளமாகக் கொண்ட தீவிர தேசியவாத அமைப்பாக இருந்ததில் இருந்து தெற்காசியா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தை நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு வென்றெடுக்க போராடும் ஓர் உண்மையான ட்ரொட்ஸ்கிச கட்சியாக அது தன்னை மாற்றிக் கொண்டது.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் முதலும் முக்கியமுமான படியாக, 1939 டிசம்பரில் ஸ்ராலினிச-சார்பு கன்னை வெளியேற்றப்பட்டது. அதற்கடுத்து LSSP தலைவர்கள் தொடர்ந்து பல ஆவணங்களில் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தினர். இந்தியத் துணைக் கண்டத்தில், அல்லது இப்போது மிகவும் பொதுவாக தெற்காசியா என்று அறியப்படும் பிராந்தியத்தில், ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைப் பணிகளைத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றும், அது ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக கிராமப்புற மற்றும் நகர்புற உழைப்பாளிகளை அணிசேர்த்து உலக சோசலிசப் புரட்சியை நோக்கி நோக்குநிலை கொண்டிருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

LSSP யின் மூலோபாய வர்க்க அச்சை மறுவரையறை செய்யும் இந்த நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக, சிலோன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அத்தீவின் கட்டமைப்புக்குள் ஏகாதிபத்தியத்துடனான எந்தவொரு உண்மையான கணக்கையும் தீர்க்க முடியாது, அல்லது தீர்ப்பதாகவும் இருக்காது என்பதை உணர்ந்தனர். இந்த அடித்தளத்தில், அவர்கள் அனைத்திந்தியக் கட்சி என்ற மூலோபாயக் கருத்துருவை உருவாக்கி, அரசியல் ரீதியாகவும் மற்றும் அமைப்பு ரீதியாகவும், இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் ட்ரொட்ஸ்கியையும், நான்காம் அகிலத்தையும் ஆதரிக்கிறோம் என பிரகடனப்படுத்திய பல்வேறு குழுக்களை நான்காம் அகிலம் மற்றும் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை ஏற்பதன் அடிப்படையில் ஒரே கட்சியாக ஒன்றிணைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தின் விளைவாக, LSSP யின் அடித்தளம் மாற்றப்பட்டு, பின்னர் 1942 ஏப்ரலில் ஒரு புதிய அனைத்திந்தியக் கட்சிக்குள் இணைக்கப்பட்டது. அது உடனடியாக இந்தியா, சிலோன் மற்றும் பர்மாவுக்கான போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (BLPI) என்று நான்காம் அகிலத்தில் இணைய முயன்றது.

BLPI இன் பத்திரிகை “நிரந்தரப் புரட்சி”

பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு புரட்சிகர வெடிப்பு வரவிருப்பதை எதிர்நோக்கிய BLPI, துணிச்சலான ஒரு திருப்பம் எடுத்ததுடன், இரண்டாம் உலகப் போரின் போது அத்தீவில் தலைமறைவான வேலைகளையும் இணைத்து மேற்கொண்டிருந்தது. இந்த வரலாற்றில் உண்மையிலேயே வீர சாகசமான அம்சங்கள் உள்ளன. அதை விவரிக்க எனக்கு நேரமில்லை என்றாலும், போரை எதிர்த்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சிறைக் காவலர்களைக் கூட ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுத்த கொள்கை ரீதியான சிலோன் ட்ரொட்ஸ்கிச தலைவர்களில் பலர், ஏப்ரல் 1942 இல் அங்கிருந்து தப்பித்தனர். பின்னர் 1942 வெள்ளையனே வெளியேறு (Quit India movement) இயக்கத்தில் BLPI இன் தலையீட்டுக்குத் தலைமை கொடுக்க, அவர்கள் பாக்கு நீரிணை வழியாக இந்தியா வந்தடைந்தனர்.

காந்தியைப் பொறுத்த வரை, வெள்ளையனே வெளியேறு இயக்கமானது, போருக்கு மத்தியில் அதிகரித்து வந்த பெருந்திரளான மக்களின் அதிருப்தியின் மீது, முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரஸின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஓர் அரசியல் நகர்வாக இருந்தது. ஆனால் விரைவிலேயே காங்கிரஸ் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறிய மக்கள் எழுச்சி, அந்நாட்டின் பெரும்பகுதிகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு தேசிய எழுச்சியாக மாறியது. வெள்ளையனே வெளியேறு இயக்கம், சோவியத் ஒன்றியத்தின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் போர் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக வாதிட்டு ஸ்ராலினிஸ்டுகள் கருங்காலிகளாக செயற்பட்ட வேளையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகத் தலையிடுவதற்கும், கிளர்ச்சிகரமான கிராமப்புற மக்களுக்குப் புரட்சிகரத் தலைமையை வழங்கவும் BLPI போராடியது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப் பிரிட்டிஷால் சிரமமின்றி ஒடுக்க முடிந்தது. ஆனால், போரின் முடிவில், உலகின் பெரும்பாலான இடங்களைப் போலவே, இந்தியாவும் ஒரு புரட்சிகர நெருக்கடியால் சூழப்பட்டிருந்தது. இதில், ரோயல் இந்தியன் கடற்படையில் (Royal Indian Navy -RIN) மாலுமிகளின் கலகம், விவசாயிகளின் கிளர்ச்சிகள் மற்றும், மிக முக்கியமாக, தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான வர்க்க நலன்களை நிலைநிறுத்தும் போராட்டத்தில் நடத்திய பாரியளவிலான வேலைநிறுத்த அலை ஆகியவை அதில் உள்ளடங்கும்.

கலகத்தில் ஈடுபட்டிருந்த ரோயல் இந்திய கடற்படை மாலுமிகளுக்கு ஆதரவாக பம்பாயில் BLPI ஒரு பொது வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க உதவியது. இந்து, முஸ்லிம் மற்றும் சீக்கிய தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகளை ஒன்றிணைத்த அந்த மேலெழுச்சியை காந்தியும் நேருவும் கண்டனம் செய்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த எழுச்சியால், காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஏற்பாட்டை செய்து கொள்வதற்கான அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது.

இறுதியில் காங்கிரஸ் கட்சியால் அரசியல் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததற்கான காரணம், அது பெரிதும் ஸ்ராலினிஸ்டுகள் வகித்த பாத்திரத்தால் ஆகும். அவர்கள் அதற்கு முந்தைய தசாப்தங்களில் திட்டமிட்டு தேசிய முதலாளித்துவத்திற்குத் தலைமையை விட்டுக் கொடுத்திருந்ததுடன், அது தான் தேசிய ஜனநாயகப் புரட்சிக்குச் சரியான தலைமை என்ற அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தை அதற்கு அடிபணிய செய்திருந்தனர். உண்மையிலேயே 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய குற்றங்கள் மற்றும் துயரங்களில் ஒன்றாக, அந்தத் துணைக் கண்டத்தைப் பெரும்பான்மை இந்துக்களை கொண்ட இந்தியாவாகவும், வெளிப்படையாக ஒரு முஸ்லீம் பாகிஸ்தானாகவும் வகுப்புவாத நிலைப்பாட்டில் பிரிவினை செய்த, பிரிட்டனின் தொழிற் கட்சி அரசாங்கம், காங்கிரஸ் கட்சி மற்றும் வகுப்புவாத முஸ்லீம் லீக் ஆகியவற்றுக்கு இடையே “அதிகாரத்தை பரிமாற்றம்” செய்வதற்கான உடன்படிக்கையை ஆமோதித்தது.

1948 உரையில், BLPI தலைவர் கொல்வின் டி சில்வா குறிப்பிடுகையில், வெகுஜன ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தை 'கருச்சிதைத்தற்காக' தேசிய முதலாளித்துவத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்தத் துணைக் கண்டத்தின் இரத்தக்களரியான பிரிவினையின் மூலம், தெற்காசியாவின் அரச கட்டமைப்புகளுக்கு உள்ளேயே வகுப்புவாதம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்றும், அவ்விதத்தில் தெற்காசியாவின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான புதிய சங்கிலிகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன என்பதையும் அவர் விளக்கினார்.

கொல்வின் டி சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார்:

இந்தியப் பிரிவினை, மிகவும் விருப்புடன் முஸ்லீம் லீக் மீது மட்டுமே பொறுப்புக்கூறப்பட்டாலும், அடிப்படையில் அது லீக்கின் அரசியலால் அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சியின் அரசியலால் ஏற்பட்டதாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் அரசியல், போராட்ட அரசியலாக இருக்கவில்லை மாறாக உடன்பாடுகளை செய்து கொள்வதற்கான அரசியலாக இருந்தது. உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கான இந்த அரசியல், ஏறக்குறைய பெரும்பாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முன்முயற்சிக்கு இடமளித்து, தவிர்க்கவியலாமல் பிரிவினை அரசியலை வளர்த்து விட்டது.

இன்று அணுஆயுதமேந்திய எதிரிகளாக உள்ள இந்தியாவும் பாகிஸ்தானும், ஒரு நூற்றாண்டின் முக்கால்வாசி காலப்பகுதி ஏராளமான போர்களில் இருந்துள்ள நிலையில், இவற்றுக்கு இடையிலான உடனடி போர் ஆபத்தை அப்போதே சுட்டிக்காட்டிய டி சில்வா, சுய-விருப்பத்துடன் இந்தத் துணைக் கண்டத்தைச் சோசலிச அடிப்படையில் மறுஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு ஒரு மூலோபாய வழிமுறையை முன்வைத்தார்.

“முதலாளித்துவ வர்க்கம் யாரைப் பிற்போக்குத்தனமாகச் சிதறடித்துள்ளதோ, அந்தத் தொழிலாள வர்க்கம் மட்டுமே முற்போக்காக ஐக்கியப்பட முடியும்.” [4]

1947 ஏற்பாடு குறித்து BLPI செய்த பகுப்பாய்வு, காலத்தின் சோதனையைக் கடந்து நிலைத்து நிற்கிறது. அந்தப் பகுப்பாய்வுக்கும் மற்றும் 'ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும்' என்ற ICFI இன் 1987 அறிக்கைக்கும் இடையே ஒரு நேரடியான தொடர்பு உள்ளது. அந்த அறிக்கை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலனித்துவ விடுதலையின் ஒட்டுமொத்த அனுபவம் மற்றும் அடுத்தடுத்த அபிவிருத்திகளைக் குறித்தும், அதனால் உருவாகிய அரசுகளின் தன்மைகளைக் குறித்தும் ஒரு மதிப்பீட்டை வழங்குகிறது. [5]

போருக்குப் பிந்தைய உடன்பாடும், BLPI இன் கலைப்பும்

BLPI இன் பகுப்பாய்வு முக்கியமானதாக இருந்த போதினும், அந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீதிருந்த அழுத்தங்களை அது அகற்றிவிடவில்லை. அது பெருந்திரளான மக்களின் அதிமுக்கிய பிரச்சினைகளை எந்த விதத்திலும் தீர்க்கவில்லை என்பதோடு, உத்தியோகபூர்வ சுதந்திரம் தேசிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவத்திற்கு புதிய சாத்தியக்கூறுகளைத் திறந்து விட்டிருந்தது.

அதன் தீவிர தேசியவாத கருத்துருக்களில் இருந்து உடைத்துக் கொண்டு, நான்காம் அகிலம் மற்றும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கை நோக்கி திரும்பி, BLPI ஐ ஸ்தாபித்திருந்த முக்கிய LSSP தலைவர்களிடையே ஏற்கனவே குறிப்பிடத்தக்க பிளவுகள் தோன்றி இருந்தன. 1943 இல், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைந்ததன் பின்னர், குணவர்த்தனவும் பெரேராவும், 1935 இல் LSSP ஸ்தாபிக்கப்பட்ட போது இருந்ததைப் போன்ற, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ஒரு குட்டி முதலாளித்துவத் தீவிர அமைப்பான காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் BLPI இனை கரைத்து விடுமாறு வலியுறுத்தினர்.

BLPI தலைமையில் இருந்த பெரும்பான்மையினரைப் போலவே, குணவர்த்தனவும் பெரேராவும் 1943 இல் இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 1945 இல் அவர்கள் விடுதலை ஆனவுடன், இலங்கையில் ஒரு புதிய அமைப்பைத் தொடங்கிய அவர்கள், அதை LSSP என்று பெயரிட்டனர். ட்ரொட்ஸ்கிச அமைப்பாகவும், நான்காம் அகிலத்தை ஆதரிப்பதாகவும் அது கூறிக் கொண்டபோதும் அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் BLPI இல் இருந்து வேறுபட்டதாக இருந்தது.

அதன் தனித்திருக்கும் இருப்பை நியாயப்படுத்துவதற்காக, LSSP தலைவர்கள் முற்றிலும் இரண்டாந்தரமான மற்றும் பெரிதும் அகநிலை தன்மை கொண்ட, பல்வேறு அமைப்பு ரீதியான கருத்து வேறுபாடுகளை முன்வைத்தனர். யதார்த்தத்தில், அங்கே பல்வேறு வர்க்க நோக்குநிலைகளில் வேரூன்றிய முக்கிய அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன. BLPI அதை உணர்ந்திருந்தது. அது LSSP தலைவர்களின் விட்டோடித்தனத்தை கண்டித்ததுடன், அவர்களின் உடைவு “பாட்டாளி வர்க்கம் அல்லாத ஒரு போக்கின் வெளிப்பாடு” என்றும், அதை திருத்திக் கொள்ளாவிட்டால், “முழுமையான சந்தர்ப்பவாத அரசியலாக” அபிவிருத்தி அடையும் என்றும் எச்சரித்தது. [6]

சிலோனை ஓர் உத்தியோகபூர்வ சுதந்திர அரசாக ஸ்தாபிப்பதற்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் சிலோனின் தேசிய முதலாளித்துவத்திற்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டை உள்ளடக்கிய சட்டத்தின் மீது, BLPI மற்றும் LSSP எடுத்த எதிரெதிர் நிலைப்பாடுகளில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கில் பெருந்திரளான மக்கள் முற்றிலும் அந்நியப்படுத்தப்பட்டு இருந்தனர்.

BLPI தலைவர் டோரிக் டி சோசா, அதை “மக்களுக்கு எதிரான சதி” என்று மிகச் சரியாக வகைப்படுத்தினார். இதற்கிடையே, சொந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் இலாபங்களை உறுதிப்படுத்தும் விதமாக அரசு எந்திரத்தை நிர்வகிப்பதில், சொந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிக பொறுப்பு கொடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய ஆதிக்க வடிவங்கள் மட்டுமே மாற்றப்படுகின்றன என்று டி சில்வா விவரித்தார். 1947 சிலோன் விடுதலை சட்டமசோதாவுக்கு (Ceylon Independence Bill) எதிராக வாக்களித்த BLPI, 1948 இல் முறையான கையளிப்பு விழாவைப் புறக்கணித்து, மேலும் அந்தப் “போலி சுதந்திரத்திற்கு” எதிராக கொழும்பில் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டியது.

இதற்கு நேர்மாறாக, LSSP பிரிட்டிஷாரின் கையளிப்பை ஒரு முன்னோக்கிய படியாக வகைப்படுத்தியதுடன், விடுதலை சட்டமசோதா வாக்கெடுப்பில் வாக்களிக்காததுடன், எதிர்ப்பு பேரணிக்கான BLPI இன் திட்டங்களை “மிகைப்பட்ட நடத்தைப்பண்பு” (exhibitionism) எனக் கண்டித்தது.

சிலோன் முதலாளித்துவத்தின் “சுதந்திர” ஆட்சியினது பிற்போக்குத்தன தன்மை விரைவிலேயே நிரூபணமானது. அதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, சிலோனின் புதிய “சுதந்திர” அரசாங்கம், அத்தீவின் முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்களின் பிரித்தாளும் அரசியலின் நேரடி தொடர்ச்சியாக, தோட்டத் தொழிலாள தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்தது. இதை வன்மையாகக் கண்டித்த BLPI, தேசத்தை இனரீதியில் வரையறுப்பதில், சிலோன் ஆளும் வர்க்கமும் அதன் அரசும் மொழிவாரி பாசிசத்தை ஏற்று வருவதாக எச்சரித்தது.

நிரந்தரப் புரட்சி வேலைத்திட்ட போராட்டத்தின் அடிப்படையில், BLPI குறிப்பாக சிலோன் தீவில் 1946 மற்றும் 1947 இல் மிகப்பெரும் வேலைநிறுத்த இயக்கங்களுக்கு தலைமை தாங்கி, தொழிலாள வர்க்கத்தில் ஒரு பலமான இருப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதற்கடுத்த இரண்டாண்டுகளில், நான்காம் அகிலத்திற்குள் அதிகரித்து வந்த நெருக்கடியின் பாகமாக, BLPI கலைக்கப்பட இருந்தது.

அமைப்பு ரீதியாக, இது இரண்டு கட்டமாக நடந்தது. 1948 இலையுதிர் காலத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்து ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில், BLPI இன் இந்திய பிரிவு, கட்சியைக் கலைக்க வாக்களித்து, குட்டி-முதலாளித்துவத் தேசியவாத காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழைந்தது. பின்னர் காந்தி-நேருவின் இந்திய தேசிய காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சோசலிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்தியாவில் சோசலிஸ்ட் கட்சிக்குள் BLPI கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் எஞ்சிய இலங்கை பிரிவு 1950 ஜூன் 4 இல் நடத்தப்பட்ட “ஐக்கியத்திற்கான மாநாட்டில்” LSSP உடன் இணைந்தது. இந்த இணைவு முற்றிலும் நடைமுறைவாத வார்த்தைகளிலும், வெளிப்படையாக தேர்தலுக்கான வார்த்தைகளிலும் பகிரங்கமாக நியாயப்படுத்தப்பட்டு இருந்தது: அதாவது, 1949 இடைத்தேர்தலில் இரு கட்சிகளுக்கிடையிலான போட்டியே, வலதுசாரி UNP அரசாங்கத்தின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தது எனக் கூறப்பட்டது. முந்தைய அரசியல் கருத்து வேறுபாடுகளை “விவாதிக்கத் தவறியது”, “புதிய கட்சியின் உண்மையான உறவுகளை எடுத்துக் காட்டியது: அதாவது, N. M. பெரேரா தலைமையிலான வலதுசாரி அணி பொறுப்பேற்ற அதேவேளையில், முன்னாள் BLPI தலைவர்கள் அவருக்கு ‘ட்ரொட்ஸ்கிச’ நற்சான்றுகளை வழங்கினர்” என சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக ஆவணம் எடுத்துக்காட்டுகின்றது. [7]

1948 இல், நான்காம் அகிலத்தின் சர்வதேச தலைமை, மேலதிக கலந்துரையாடல்கள் இல்லாமல் இந்திய சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழைய வேண்டாமென BLPI ஐ வலியுறுத்தியது. ஆனால் 1950 இல், இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒரு பிரிவினர், இந்த வலதுசாரி அமைப்புக்குள் இணைவது அதிகரித்தளவில் பேரழிவாக இருக்கும் என தீர்மானித்து, சுயாதீனமான புரட்சிகர அரசியல் நடவடிக்கையைத் தொடர்ந்து தொடர அகிலத்தின் உதவியைக் கோரிய போது, பப்லோ விடாப்பிடியாக அதனை எதிர்த்தார்.

இதையொத்த வகையில், பப்லோ தலைமையிலான சர்வதேச செயலகம், சிலோனில் BLPI இன் கலைப்புக்கு அதன் அனுமதியை வழங்கியது. சம சமாஜிசத்தின் தீவிர தேசியவாத பாரம்பரியங்களை நோக்கிய ஒரு மிகப் பெரிய பின்வாங்கலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கோட்பாடற்ற இணைவை எதிர்க்கத் தலையிடுவதற்குப் பதிலாக, நான்காம் அகிலத்தின் சிலோன் பிரிவாக BLPI ஐ ஏற்றுக் கொள்வதற்காக “ஐக்கிய” LSSP இன் விண்ணப்பத்தை உடனடியாக அங்கீகரித்தது.

பப்லோவும் மண்டேலும் இதைச் செய்ததற்கான காரணம் என்னவெனில் அவர்கள் அப்போது இன்னும் அதிக வெளிப்படையாக விரிவுபடுத்திக் கொண்டிருந்த கலைப்புவாத முன்னோக்குடன் BLPI இன் கலைப்பு ஒத்துப் போவதாக இருந்தது. பப்லோ கூறியது போல, “மக்கள் இயக்கத்திற்குள் நிஜமான இணைவை” தொடர, “அனைத்து அமைப்பு ரீதியான பரிசீலனைகள், உத்தியோகபூர்வ சுதந்திரம் அல்லது அது இல்லாவிடினும்” அவற்றைத் தவிர்த்துக்கொள்வது, இது விரைவிலேயே உலகம் முழுவதிலும் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஓர் உலகளாவிய அழைப்பைக் கொடுக்கும். அதாவது, ஸ்ராலினிசத்திற்கும், சமூக ஜனநாயகத்திற்கும், அபிவிருத்தி குறைந்த நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கத் தலைவர்களுக்கும் அடிபணிந்துபோவதானது தொழிலாள வர்க்கத்தின் மீது அவர்கள் மேலாளுமை செலுத்துவதும், அரசியல்ரீதியில் அதை ஒடுக்குவதுமாகும்.[8]

1953 ஹர்த்தாலின் போது கொழும்பு காலிமுகத் திடலில் நடந்த ஒரு மிகப் பெரிய போராட்டத்தில் LSSP தலைவர் N.M. பெரேரா உரையாற்றுகிறார்

ஐக்கியப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சியின் (united LSSP) நோக்குநிலை மத்தியவாதமாக இருந்ததுடன், அது அதிகரித்தளவில் வர்க்கப் போராட்டத்தை அல்லாது நாடாளுமன்ற மற்றும் தொழிற்சங்க அரசியல் மீது ஒருமுனைப்பட்டிருந்தது. இது 1953 ஹர்த்தால் அல்லது தீவு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு LSSP காட்டிய விடையிறுப்பால் எடுத்துக்காட்டப்பட்டது. கொடூரமான அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 1953 ஆகஸ்ட் 12 இல் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஒரு நாள் போராட்டத்திற்கு அவர்கள் விடுத்த அழைப்புக்கு கிடைத்த உற்சாகமான விடையிறுப்பால் LSSP தலைவர்கள் பின்வாங்கினார்கள். பலத்துடன் வெளிப்பட்ட தொழிலாள வர்க்கத்துடன் கிராமப்புற மக்களின் பரந்த பிரிவினரும் இணைந்தனர். நாட்டின் சில பகுதிகளில் பல நாட்களுக்கு நீடித்த அந்த ஹர்த்தால் இயக்கம், பிரதம மந்திரி டட்லி சேனாநாயக்கவை இராஜினாமா செய்ய நிர்பந்தித்ததுடன், அரசாங்கத்தையே பதவியிறக்க அச்சுறுத்தியது.

ஹர்த்தாலின் மகத்தான வெற்றிக்கு மத்தியில், LSSP மற்றும் LSSP இன் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங்கள், பாரியளவிலான கூடுதல் நடவடிக்கைக்கான அழைப்புகளைப் பின்பற்றவில்லை. அந்தப் போராட்டத்தை விரிவாக்கி, அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக பாதுகாப்பை ஒழுங்கமைத்து, பெருந்திரளான கிராமப்புற மக்களைத் தொழிலாள வர்க்கத் தலைமையின் கீழ் கொண்டு வந்து, அதிகாரத்திற்கான போராட்டத்தை அரசியல் ரீதியில் தயாரிப்பு செய்வதை அவர்கள் தொடங்கவில்லை. மாறாக, அவர்கள் ஹர்த்தாலை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்த மற்றும் நாடாளுமன்றத்தில் மற்ற எதிர்க்கட்சிகளுடனான கூட்டணியோடு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக அரசாங்கத்தைக் கலைக்கும் முயற்சிகளில் ஒருமுனைப்பட்டிருந்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பிற குழுக்களுடன் இணைந்தார்கள்.

ICFI க்கு எதிராக LSSP பப்லோவுடன் நிற்கிறது

நவம்பர் 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர், BLPI/LSSP இன் பரிணாம வளர்ச்சி பற்றி அறிய சிறிது நேரம் செலவிட்டேன்.

முதலாவதாக, நான்காம் அகிலத்திற்குள் LSSP ஏன் கணிசமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். சிலோன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அந்தத் தீவில் முக்கிய தொழிலாள வர்க்கக் கட்சியாக வெளிப்பட்டதற்கான உண்மையான காரணங்களான அதன் சர்வதேசியவாதம், ஸ்ராலினிசத்திற்கும் தேசிய முதலாளித்துவத்திற்குமான அதன் புரட்சிகர எதிர்ப்பு ஆகியவை அதிகரித்தளவில் அதன் பரந்தபட்ட வேலைகளைப் பற்றிய வெறும் குறிப்புகளால் மூடிமறைக்கப்பட்டிருந்தன.

இரண்டாவதாக, அத்தகைய ஒரு மீளாய்வு, 1953 அளவில் LSSP ஆழ்ந்த அரசியல் நெருக்கடியில் இருந்ததையும், இந்த நெருக்கடி நான்காம் அகிலத்தைச் சூழ்ந்திருந்த நெருக்கடியின் பாகமாக இருந்ததையும் எடுத்துக்காட்டுகிறது. முந்தைய விரிவுரைகளில் விவரிக்கப்பட்டதைப் போல், இந்த நெருக்கடி, உலகளாவிய முதலாளித்துவத்தின் மறுஸ்திரப்பாட்டால் ஒரு பலமான கலைப்புவாத போக்கு உருவானதில் வேரூன்றி இருந்தது. பப்லோ-மண்டேல் தலைமையிலான சர்வதேச செயலகத்தால் இது ஊக்குவிக்கப்பட்டு இதற்கு திட்டமிட்ட தத்துவார்த்த வெளிப்பாடு கொடுக்கப்பட்டது.

இது நம்மை மிக முக்கியமான புள்ளிக்கு கொண்டு வருகிறது: அதாவது, அதன் முந்தைய பின்வாங்கல்கள் மற்றும் அரசியல் பின்னடைவுகள் எதுவாக இருந்தாலும், கனனின் “பகிரங்கக் கடிதத்திற்கும்” மற்றும் பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிரான எதிர்ப்பில் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான மையமாக ICFI ஐ நிறுவுவதற்கும் அது 1953-54 இல் காட்டிய விடையிறுப்பு, LSSP இன் பரிணாம வளர்ச்சியில் தீர்க்கமான திருப்புமுனையாக இருந்தது. அது ட்ரொட்ஸ்கிசத்துடனான அதன் முறிவை உறுதி செய்து, அது வேகமாக தேசிய சந்தர்ப்பவாதத்திற்குள் வீழ்வதை விரைவுபடுத்தி, 1964 மாபெரும் காட்டிக்கொடுப்புக்குப் பாதை அமைத்தது.

பப்லோவாத சர்வதேச செயலகம் தயாரித்த ஆவணங்களின் மிகவும் வெளிப்படையான ஸ்ராலினிச-ஆதரவு கருத்துக்களுக்கு ICFI காட்டிய பல ஆட்சேபனைகளைத் தாங்களும் பகிர்ந்து கொள்வதாக LSSP தலைவர்கள் கூறினர். அனைத்திற்கும் மேலாக, LSSP அதற்குள்ளேயே ஒரு ஸ்ராலினிச-ஆதரவு கன்னையை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. 1953 இன் இலையுதிர் காலத்தில், அதாவது ஏறக்குறைய அந்த பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்ட அதே காலகட்டத்தில், LSSP தலைமையில் இருந்து ஒரு கணிசமான பிரிவு ஸ்ராலினிஸ்டுகளுடன் இணைவதற்காகப் பிரிந்து சென்றது.

ஆயினும்கூட, டிசம்பர் 1953 இல் LSSP ஓர் அறிக்கை வெளியிட்ட விரைந்தது. அந்த “பகிரங்கக் கடிதம்” தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் தலைமையை பகிரங்கமாகத் தாக்குவதால், அது ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளை மீறுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் அது அமைப்புரீதியான நடைமுறையின்படி நிறுவப்பட்டதாக விமர்சித்து, அனைத்துலகக் குழுவின் உருவாக்கத்தை கண்டித்தது. அந்த “பகிரங்கக் கடிதம்” மீது பப்லோ தலைமையிலான சர்வதேச செயலகத்தின் கடுமையான கலைப்புவாத அரசியல் விமர்சனமும், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று வேலைத்திட்டத்தைத் பாதுகாத்தவர்களை வெளியேற்றி அவர்களை மவுனமாக்க அதன் அதிகாரத்தை அது துஷ்பிரயோகம் செய்ததையும் குறித்து அந்த அறிக்கை முழுமையாக உதறி விட்டிருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உருவாக்கத்தை கண்டித்த அதன் ஆரம்ப அறிக்கையில், இங்கே நான் நேரடியாக அவர்கள் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டுகிறேன், அந்த உடைவில் சம்பந்தப்பட்டிருந்த “அரசியல் பிரச்சினைகளை” பரிசீலிக்க வேண்டியிருப்பதாக LSSP தலைவர்கள் அறிவித்தார்கள். LSSP தலைவர்கள் அனைத்துலகக் குழுவுக்கும் பப்லோவாத கலைப்புவாதிகளுக்கும் இடையே மத்தியஸ்தர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க அரசியல் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்த மறுத்தமை நீண்ட காலத்திற்குத் தொடர இருந்தது. ஒரு “பேரழிவுகரமான உடைவு” என்று அவர்கள் குறிப்பிட்டதைத் தடுப்பதற்கும், “நான்காம் அகிலத்தின் ஐக்கியத்தை” பேணுவதற்கும் என்ற பெயரில், அவர்கள் பப்லோவாதிகளுடன் இணக்கமாக சமரசம் செய்து கொள்ள அனைத்துலகக் குழுவுக்கு அழுத்தம் அளித்தனர். அதாவது, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைத் தூக்கியெறிந்து, வரலாற்று ரீதியில் உலக ட்ரொட்ஸ்கிச காரியாளர்களை அழிக்க முயல்கிறார்கள் என்று கனன் மிகச் சரியாக குறிப்பிட்டவர்களுடன் இது இணக்கமாக சமரசம் செய்து கொள்வதாகும். இறுதியில், பப்லோவாத நான்காவது உலக மாநாட்டில் LSSP பங்கெடுத்து, சர்வதேச செயலகத்திற்கு அதன் அரசியல் ஆதரவையும், மதிப்பையும் வழங்கியது.

பப்லோவின் ஸ்ராலினிச-சார்பு சூத்திரங்களுடன் LSSP தலைவர்களுக்கு என்ன தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் அடித்தளத்தையும், சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அதன் பிரகடனப்படுத்தப்பட்ட போரையும் ICFI சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி பாதுகாப்பதில் இருந்து அவர்கள் பின்னடித்திருந்தார்கள். மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தை ICFI பாதுகாப்பது, அவர்களின் சொந்த மத்தியவாத அரசியலையும், தேர்தல் அரசியல் மற்றும் தொழிற்சங்க அரசியல் மீதான அவர்களின் அதிகரித்தளவிலான சந்தர்ப்பவாதரீதியாக கவனம் செலுத்துவதையும் குறுக்கறுப்பதை அவர்கள் மிகச் சரியாகவே உணர்ந்தார்கள்.

ஜேம்ஸ் பி. கனன்

பிரச்சினைகளின் மையத்தில் பணயத்தில் இருப்பவைக் குறித்தும், இந்த உலக இயக்கத்தில் LSSP தலைவர்களின் கடமைப்பாடுகளைக் குறித்தும் அவர்களுக்குப் புரிய வைக்க கனன் கணிசமான ஆற்றலைச் செலவிட்டார். பிப்ரவரி 1954 இல் ஒரு நீண்ட கடிதத்தில், அவர் அமைப்பு சார்ந்த நடைமுறை பிரச்சினைகள் எப்போதுமே அரசியல் பிரச்சினைகளுக்கு கீழானவை என்பதை எடுத்துக்காட்டிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முக்கிய வரலாற்று அனுபவங்களை அவர் அதில் மீளாய்வு செய்தார்: “நம் கோட்பாட்டைப் பாதுகாப்பதே எப்போதும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முதல் அக்கறையாக இருந்துள்ளது, இப்போதும் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். [9] அவர்களின் சொந்தக் கட்சியில் மட்டுமல்ல, மாறாக உலக இயக்கம் முழுவதிலும் ஸ்ராலினிச-ஆதரவு சக்திகளையும், மற்றும் “ஸ்ராலினிச சமரசவாதத்தின் வெளிப்படையான அல்லது மறைமுகமான வெளிப்பாடுகளையும்” எதிர்ப்பதன் மூலம் LSSP தலைவர்கள் அவர்களின் சர்வதேச கடமைப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென அவர்களுக்கு கனன் அழுத்தமளித்தார். [10]

LSSP க்கு கனன் எழுதிய கடிதம், நான்காம் அகிலத்தின் மூலோபாயம், வேலைத்திட்டம் குறித்தும் மற்றும் அதன் பணியை ஒழுங்கமைத்து நடத்துவதற்கான முதன்மை கொள்கை குறித்தும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் ஒரு சக்தி வாய்ந்த உறுதிமொழியாக இருந்தது. கனன் பின்வருமாறு எழுதினார்:

25 ஆண்டுகளுக்கு முன்னர், ட்ரொட்ஸ்கி மற்றும் ரஷ்ய எதிர்ப்பிலிருந்து வந்த நாம் எடுத்த உயர்ந்த கடமை மற்றும் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய இப்போது நாம் போராடி வருகிறோம். சர்வதேச விடயங்களில் அந்தக் கடமைப்பாட்டை தான் அனைத்திலும் முதன்மையாகவும், அனைத்திற்கும் மேலாகவும் வைக்க வேண்டும்: அதாவது, சர்வதேச இயக்கத்தின் மற்றும் அதனுடன் இணைந்த கட்சிகளது விடயங்களுடன் தொடர்புபடுத்தி கவனத்தில் கொள்வது; நம்மால் ஆன எல்லா வழியிலும் அவற்றுக்கு உதவுவது; நாம் பரிசீலித்த கருத்துக்களின் பலன்களை அவற்றுக்கு வழங்குவது; மற்றும் இதற்கு கைமாறாக நம் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவற்றின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளைப் பெறுவது ஆகியவையாகும். சர்வதேச ஒத்துழைப்பே சர்வதேசியவாதத்தின் முதல் கோட்பாடாகும். இதை நாம் ட்ரொட்ஸ்கியிடம் இருந்து கற்றோம். இதை நாம் நம்புகிறோம், நம் நம்பிக்கைக்கு இணங்க நாம் செயல்பட்டு வருகிறோம்.” (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது) [11]

ஒரு புரட்சிகரக் கட்சி வெகுஜன வேலைகளில் ஈடுபட்டு, தொழிலாள வர்க்கத்திற்குத் தலைமையை வழங்குவதற்கான நேரடிப் பொறுப்பை ஏற்கும் போது, அதன் மீது ஏற்படும் அரசியல் அழுத்தங்களைக் குறித்து கனன் அறிந்திருந்தார். அவர் தனது கடிதத்தை ஓர் எச்சரிக்கையுடன் நிறைவு செய்தார்:

வேறெந்த கட்சியை விடவும், LSSP க்கு ஒரு சர்வதேச தலைமை தேவைப்படுகிறது என்று நான் கூறத் துணிகிறேன். அரும்பி வரும் கலைப்புவாதம் மற்றும் இடையூறுகளின் ஓர் ஒழுங்கமைக்கும் மையம் என்பதை விட, அதன் உயிர்பிழைப்புக்கான மற்றும் இறுதி வெற்றிக்கான ஒரே நிபந்தனையாக, ஒரு சர்வதேச தலைமை மட்டுமே அதன் ட்ரொட்ஸ்கிச மரபியத்திற்கு ஆதரவாகவும் ஆதார பலமாகவும் இருக்கும். [12]

துல்லியமாக இந்த சர்வதேச ஒத்துழைப்பைத் தான் LSSP தலைவர்கள் நிராகரித்தார்கள். அவர்கள், அல்லது அவர்களில் ஒரு பிரிவினராவது, குறிப்பாக கொல்வின் டி சில்வா, லெஸ்லி குணவர்த்தன அல்லது டொரிக் டி சோசா போன்ற முன்னாள் BLPI தலைவர்கள் ICFI ஐ நோக்கி அணிதிரண்டிருந்தால், சிலோன் மற்றும் தெற்காசியாவின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அரசியல் ரீதியில் மறுஆயுதபாணியாக்குவதற்கான நிலைமைகள் உருவாகி இருக்கும்.

நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் வேலைத்திட்டத்தை பாதுகாத்து வந்த மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்துடன் போராடுவதற்குப் பொறுப்பேற்றிருந்த ICFI தலைமையிலான மற்றும் ICFI ஐ பிரதிநிதித்துவம் செய்த சக்திகளிடம் இருந்து சுயாதீனமாக உடைத்துக் கொண்டு அவற்றை எதிர்த்த LSSP, கூர்மையாக வலதை நோக்கி சென்றது. அது அதிகரித்தளவில் கட்டுப்பாடற்ற தேசிய-சந்தர்ப்பவாத அரசியலைப் பின்தொடர்ந்தது. குறுகிய காலத்திலேயே, அது இன்னும் பகிரங்கமாக தேசிய முதலாளித்துவத்துடன் அரசியல் கூட்டணிகளை அமைப்பதை நோக்கிய நோக்குநிலையை ஏற்றது.

இதைக் குறித்தும் மற்றும் அதன் உச்சத்தில் மாபெரும் காட்டிக்கொடுப்பைக் குறித்தும் ஆவணப்படுத்துவதற்கு முன்னதாக, நான் இன்னுமொரு கூடுதல் புள்ளியைக் குறிப்பிட விரும்புகிறேன். 1953 இல் LSSP இல் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ராலினிச-ஆதரவு கன்னை மட்டுமே, இந்தக் காலகட்டத்தில் அதன் பிரிவுகளில் இருந்து உருவெடுக்க இருந்த ஒரே வலதுசாரி குழுவாக இருக்கவில்லை. 1950 இல், பிலிப் குணவர்த்தன (BLPI இல் ஏற்றிருந்த நிரந்தரப் புரட்சி முன்னோக்கில் இருந்து பின்வாங்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தார் என்பதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்) LSSP இல் இருந்து முறித்துக் கொண்டு VSLP பிரிவை நிறுவினார். பின்னர் அது MEP என்றானது. அவர்கள் கட்டுப்பாடுமின்றி தேசியவாத, வர்க்க ஒத்துழைப்புவாத மற்றும் தமிழர்-விரோத இனவாத அரசியலில் வீழ்ந்தார்கள் என்பதையும் பின்னூட்டமாக இங்கே கூற வேண்டியுள்ளது. VSLP யும், பின்னர் MEP யும் பப்லோவாத LSSP இன் பரிணாமத்தையே முன்னறிவிக்க இருந்தன.

லங்க சம சமாஜ கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்

முன்னர் கலந்துரையாடியவாறு, 1953 ஹர்த்தாலுக்கு லங்கா சம சமாஜக் கட்சி புரட்சிகரமான முறையில் அல்ல, மாறாக சந்தர்ப்பவாத முறையில் விடையிறுத்தது. ஒரு புத்திக்கூர்மையான முதலாளித்துவ அரசியல்வாதியான S.W.R.D. பண்டாரநாயக்க, அதிருப்தி கொண்ட சிங்கள கிராமப்புற மக்களுக்கு முறையீடு செய்வதற்கு அது அரசியல் கதவைத் திறந்து விட்டது. பண்டாரநாயக்க, 1951 வரை சிலோனின் வலதுசாரி, ஏகாதிபத்திய-சார்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் (UNP) முன்னணிப் பதவிகளை வகித்தார், பின்னர் அவரின் சொந்தக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) நிறுவ அதிலிருந்து விலகினார்.

அந்த ஹர்த்தாலை முற்றிலுமாக எதிர்த்த பண்டாரநாயக்க, அது அப்பட்டமாக எடுத்துக்காட்டிய வர்க்க உறவுகளின் வெடிப்பார்ந்த நிலைமைக்குக் காட்டிய விடையிறுப்பில், அவரும் மற்றும் அவரது SLFP யும் தமிழர்-விரோத கடும் பேரினவாதத்துடனும், பாசாங்குத்தனமான ஏகாதிபத்திய-எதிர்ப்புடன் மற்றும் சோசலிச வார்த்தைஜாலங்களுடனும் ஒரு தீவிரவாத நிலைப்பாட்டை எடுத்தனர்.

SLFP இன் முதலாளித்துவ மற்றும் பேரினவாத அரசியலை உறுதியாக அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, LSSP சிங்கள ஜனரஞ்சகவாதத்தைத் தழுவியது. இதன் ஒரு வெளிப்பாடாக SLFP இன் தோற்றுவாய்கள், வேலைத்திட்டம் மற்றும் சமூக அடித்தளத்தைக் குறித்த ஒரு மார்க்சிச வர்க்க மதிப்பீட்டைச் செய்வதை அது எதிர்த்தது.

புரட்சிகர வாய்வீச்சுக்களைப் பயன்படுத்தும் அதேவேளையில், தொழிலாளர்களை வழிநடத்துவதில் புரட்சிகர தீர்மானங்களை எடுப்பதற்கும், அதுவும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்தைத் தவறாக வழிநடத்தும் சந்தர்ப்பவாத தலைவர்கள் மற்றும் அவர்களின் தலைமையிலான அதிகாரத்துவ அமைப்புகளுக்கு எதிராக நடைமுறையில் போர் தொடுப்பதற்கும் பின்னடிக்கும் சோசலிச அமைப்புகளைக் குறித்துக் காட்டுவதற்காக மார்க்சிஸ்டுகள் பயன்படுத்திய ஒரு வார்த்தையான, “மத்தியவாத” கட்சியாக SLFP ஐ அது விவரித்தது.

ஆனால் மற்ற நேரங்களில், கிராமப்புற மக்களிடையேயும் மற்றும் நகர்புற குட்டி முதலாளித்துவத்திலும் SLFP அதன் வாக்காளர்களைக் கொண்டிருப்பதால், அது ஒரு “குட்டி-முதலாளித்துவக் கட்சி,” என்ற வாதத்தையும் அதேயளவுக்கு முற்றிலும் மோசடியாகப் பரப்பியது.

உண்மையில், SLFP சிலோன் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து கணிசமான ஆதரவைப் பெற்றிருந்தது. இதற்கு இரண்டு அடிப்படை காரணங்கள் இருந்தன. ஏனென்றால் போருக்குப் பிந்தைய வளர்ச்சிக் காலகட்ட நிலைமைகளின் கீழ், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளுடன் தந்திரமாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்துடன் ஒரு நல்ல பேரத்தை நடத்த முடியுமென அவர்கள் நம்பினர். மேலும், இரண்டாவது காரணம் என்னவென்றால், அவர்களின் வர்க்க நோக்கங்களை எட்டுவதற்கு ஏற்ற விதத்தில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப் போட்டு வைக்கவும் மற்றும் அதை வகுப்புவாத நிலைப்பாடுகளில் பிளவுபடுத்தி வைப்பதற்கும் SLFP இன் சிங்கள ஜனரஞ்சகவாத வாய்வீச்சை ஒரு பயனுள்ள கருவியாக அவர்கள் கண்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியமயமாக்கல்கள் மற்றும் வெளிநாட்டு இராணுவத் தளங்களை மூடுவதற்கு அழைப்புகளை விடுத்த SLFP இன் வேலைத்திட்டம், இந்தியாவில் நேருவின் காங்கிரஸ் கட்சியோ அல்லது எகிப்தில் நாசர் ஆட்சியோ செயல்படுத்திய வேலைத்திட்டத்தில் இருந்து குறிப்பிடத்தக்களவில் வேறுபட்டதல்ல. ஏதாவது வேறுபாடு இருந்தால், அது இன்னும் கொடூரமாகவே இருந்தது.

1956 இல், ICFI இன் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் LSSP முறித்துக் கொண்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டாரநாயக்க மற்றும் அவரது SLFP அதிகாரத்திற்கு வருவதற்கு LSSP ஆதரவளித்தது. எல்லா இடங்களிலும் சந்தர்ப்பவாதிகளின் தந்திரங்களைப் பயன்படுத்திய LSSP, “முற்போக்கு” வேஷமிட்டு, ஜனரஞ்சகவாத அழைப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்ய, ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்து வந்த மிகவும் பகிரங்கமான மற்றும் ஈவிரக்கமற்ற அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தியது. UNP பாசிச திசையில் செல்கிறது என்ற காரணத்தை காட்டி, SLFP உடன் “போட்டித்தவிர்ப்பு” என்ற ஒரு தேர்தல் உடன்படிக்கையில் LSSP நுழைந்தது.

SLFP உம் அதன் கூட்டாளியான குணவர்த்தன தலைமையிலான VSLP யும் அரசாங்கம் அமைத்தபோது, “பொறுப்பான ஒத்துழைப்பு” (responsive cooperation) என்று குறிப்பிட்ட ஒரு கொள்கையை LSSP ஏற்றது. இது அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று பணிவாக கூறுவதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தக் கொள்கைக்கு இணங்க, அரசாங்கத்தின் சட்டவரைவுகளுக்கான நிகழ்ச்சிநிரலை முன்வைத்த சிம்மாசன உரைக்கு (Throne Speech) ஆதரவாக அது வாக்களித்தது.

லங்கா சம சமாஜக் கட்சி SLFP க்கு அதன் ஆதரவை வழங்குவதனூடாக, SLFP இன் கீழ்த்தரமான வகுப்புவாத அரசியலை நியாயப்படுத்த உதவியது. பெரும்பான்மையினரின் தாய் மொழியான சிங்களத்தை அந்நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக ஆக்க, தனிச்சிங்கள மொழி கொள்கை பண்டாரநாயக்கவின் வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. இந்த ஜனநாயக விரோத, பேரினவாதக் கொள்கையானது குட்டி முதலாளித்துவப் பிரிவினரிடையே ஆதரவைக் கண்டது. ஏனென்றால் அது அரசுத் துறையில் அவர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்பதோடு, சிறுபான்மை தமிழர்களை நடைமுறையளவில் இரண்டாம் நிலை பிரஜைகளாகக் குறைத்து, அவ்விதத்தில் சிங்கள மேலாதிக்கத்தைப் பலப்படுத்தும் என்பதால் ஆகும்.

லங்கா சம சமாஜக் கட்சி, SLFP அரசாங்கத்தின் “தனிச்சிங்கள மொழி” கொள்கையை எதிர்த்தது. ஆனால், 1948 இல் தமிழர் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமைகளைப் பறிப்பதற்கு அது காட்டிய எதிர்ப்பைப் போலில்லாமல், சோசலிச சர்வதேசியத்தின் நிலைப்பாட்டில் இருந்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்திலிருந்தும் அதைச் செய்யவில்லை. மாறாக, “தேசத்தை”, அதாவது இலங்கை முதலாளித்துவ அரசை அது பலவீனப்படுத்துகிறது என்ற அடிப்படையில் LSSP அதைக் கண்டனம் செய்தது.

இத்தகைய பின்வாங்கல்களும் காட்டிக்கொடுப்புகளும் பப்லோவாத சர்வதேச செயலகத்தில் இருந்து எந்த எதிர்ப்பையும் கொண்டு வரவில்லை.

இதற்கு நேர்மாறாக, அனைத்துலகக் குழு, LSSP வகித்த பாத்திரத்தை நன்கு அறிந்திருந்தது. 1956 இல், பப்லோவாதத்துடன் சமரசம் செய்து கொள்வதை ஆதரித்த அனைத்துலகக் குழு பிரதிநிதிகளில் ஒருவர், LSSP மட்டுமே “பரந்துபட்ட மக்கள் அடித்தளத்தை” கொண்ட ஒரே “ட்ரொட்ஸ்கிச கட்சி” என்று பாராட்டிய போது, அமெரிக்க SWP பொது செயலர் பாரெல் டொப்ஸ் (Farrell Dobbs) மிகச் சரியாக அவரைக் கண்டித்தார்.

அவர் வலியுறுத்தினார், லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல், “தேசிய சந்தர்ப்பவாதம்” ஆகும். அவர் தொடர்ந்து கூறினார், “அவர்களின் சொந்த வெகுஜன இயக்கத்தின் பிரச்சினைகளில் மூழ்கி உள்ள LSSP, நான்காம் அகிலம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியில் அக்கறையற்று உள்ளது. அது “தனித்திருக்க” விரும்புகிறது. [13]

மாவோ ஆட்சியின் விருந்தினராக LSSP இன் பிரதிநிதிகள் சீனா சென்ற போது, அங்கே சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை விடுவிக்க கோருவதற்கு மறுத்ததை, மார்ச், 1957 இல், SWP இன் பத்திரிகையான மிலிட்டன்ட் பிரசுரித்த ஒரு தலையங்கம் கடுமையாக விமர்சித்தது. அதற்கு சில காலத்திற்குப் பின்னர் விரைவிலேயே, கனனுக்கு ஜெர்ரி ஹீலி எழுதிய ஒரு கடிதத்தில், “எமது சிலோன் தலைமையின் சந்தர்ப்பவாதம் குறித்து பப்லோவுக்கு நன்றாகவே தெரியும், உண்மையில் சொல்லப் போனால் அவர் அவர்களை அதை நோக்கி தள்ளி வருகிறார். இந்த விஷயத்தில் நாம் மௌனமாக இருப்பது சாத்தியமில்லை. மேலும் 1954 இல் இருந்து LSSP தலைவர்கள் பாரம்பரிய ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடுகளில் இருந்து மிகவும் விலகிச் சென்றுள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.” [14]

1960 தேர்தல்களும் LSSP தலைமையின் முதல் கூட்டணி முயற்சிக்கு பப்லோவாத அகிலத்தின் பிரதிபலிப்பும்

தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ந்து வரும் எதிர்ப்பு, தசாப்தத்தின் இறுதி ஆண்டுகளில் SLFP-VSLP அரசாங்கத்தில் இருந்து தன்னை தூர விலகி இருக்க LSSPயை நிர்ப்பந்தித்தது. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்வதும் இதில் அடங்கும்.

SLFP இன் சொந்த சிங்கள பேரினவாதத்தை ஊக்குவிப்பதன் விளைவான தமிழ்-விரோத வகுப்புவாத கலவரங்களால் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், தங்கள் பங்கிற்கு, வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் நிலைமைகளின் கீழ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) அதன் நலன்களை முன்னெடுப்பதற்கான திறனைப் பற்றி கவலை கொண்டிருந்தன. 1959 இல் பண்டாரநாயக்க ஒரு சிங்கள தீவிரவாத பௌத்த துறவியால் படுகொலை செய்யப்பட்டார்.

மார்ச் 1960 தேர்தல் நெருங்கும் போது, தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் போர்க்குணத்திற்கு விடையிறுக்கும் வகையில் LSSP, 'அதிகாரத்திற்காக' போராடுவதாகக் காட்டிக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) மதிப்பிழந்துவிட்டதாக அறிவித்து, அது 'சம சமாஜ வாத அரசாங்கம்' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தது.”

ஆனால் வர்க்கப் போராட்டம் மற்றும் நிரந்தரப் புரட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர மூலோபாயத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சாரம் முற்றிலும் தேர்தல் அடிப்படையில் திட்டமிடப்பட்டது. LSSP யின் சோசலிசத்திற்கான பாராளுமன்றப் பாதையை சர்வதேச செயலகம் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு, அதன் இலங்கைப் பிரிவு 'அதிகாரத்திற்கான ஒரு தீர்க்கமான போராட்டத்தில்' ஈடுபட்டுள்ளதாக அறிவித்தது.

உண்மையில் LSSP மேலும் வலதிற்குத் திரும்பி, இலங்கை முதலாளித்துவத்தின் முக்கிய சமூக முட்டுக்கொடுப்பாக செயல்படும் ஒரு சீர்திருத்தவாதக் கட்சியாக மாற்றப்பட்டு வருவதை எடுத்துக் காட்டிய அதன் தேர்தல் வேலைத்திட்டம், 'சிங்களம் மட்டும்' என்பதற்கான அதன் எதிர்ப்பையும், தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியுரிமை உரிமைகளுக்கான ஆதரவையும் நீர்த்துப் போகச் செய்திருந்தது.

தேர்தல் முடிவுகள் LSSP சந்தர்ப்பவாதிகளுக்கு கடுமையான ஏமாற்றமாக இருந்தது. 1956 ஆம் ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களை நிறுத்திய போதிலும், அது கணிசமாக குறைவான இடங்களையும், சற்று அதிக வாக்குகளையும் மட்டுமே பெற்றது. அதன் மிக வலதுசாரிக் கூறுகளின் தலைவரான பெரேரா, தொங்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட முயன்ற SLFP உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைவதற்கு LSSP க்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு தீர்மானத்தை ஒரு கட்சி மாநாட்டில் நிறைவேற்றியதன் மூலம் இதற்கு பதிலளித்தார்.

1960களின் முற்பகுதியில், LSSP சந்தர்ப்பவாதத்தினுள்ளும், பாராளுமன்றவாதத்தினுள்ளும் ஆழமாக மூழ்கியது. மேலே, LSSP இன் தலைவர் என்.எம். பெரேரா (இடதுபுறத்தில் நிற்கிறார்) ஜூன் 14, 1961 அன்று வெள்ளை மாளிகைக்கு இலங்கை நாடாளுமன்றக் குழுவின் விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் [Photo: Abbie Rowe. White House Photographs. Kennedy Presidential Library and Museum]

பெரேராவின் கூட்டணிக்கான கொள்கை LSSP இன் மத்திய குழுவால் நிராகரிக்கப்பட்டது, ஆனால் அரசாங்கத்தில் இணைவதற்கு எதிராக வாக்களித்த பலரது கருத்து வேறுபாடுகள் வெறும் தந்திரோபாயரீதியானதாகவே இருந்தன. நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாத காரணத்தினால் ஜூலை மாதம் இரண்டாவது தேர்தலை நடத்த வேண்டியிருந்தபோது, LSSP 1956 இல் செய்ததைப் போலவே SLFP உடன் 'போட்டித்தவிர்ப்பு' உடன்படிக்கையை செய்துகொண்டது. SLFP ஆட்சியை வென்றவுடன், LSSP அதன் சிம்மாசன உரைக்கும் முதல் வரவு-செலவுத் திட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்தது.

1960 மார்ச்சில் பெரேரா கொண்டுவந்த தீர்மானம், முதலாளித்துவ SLFP உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வெளிப்படையாக பப்லோவாத வார்த்தைகளில் வாதிட்டது. SLFP ஒரு 'குட்டி-முதலாளித்துவ கட்சி' என்றும், ட்ரொட்ஸ்கி எழுதிய அனைத்திற்கும் மாறாக, 'முதலாளித்துவக் கட்சி' என்பதை விட அடிப்படையில் வேறுபட்ட தன்மை கொண்டது என்றும் அது வலியுறுத்தியது. இந்த தவறான முன்மாதிரியின் அடிப்படையில், அரசாங்கத்தில் SLFP இன் இளைய பங்காளியாக ஆவதன் மூலம், பப்லோவாதிகள் 'சீர்திருத்தவாத சமூக-ஜனநாயகக் கட்சிகளில்' மேற்கொள்ளும் 'நுழைவு' வடிவத்தை LSSP நடத்தும் என்று அது கூறியது.

நாம் பதவியை ஏற்றுக்கொள்வதன் மூலம் நுழைவுவாதத்தை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறோம். ஆனால் மக்களுடைய பிரமைகளை அகற்றுவதற்கும் அவர்களை இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு இட்டுச் செல்வதற்கும், எமது உண்மைத் தன்மையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வழியில்லையா? எம்மால் ஆதரிக்கப்பட்ட சில துணிகரமான முற்போக்கான நடவடிக்கைகள், பல ஆண்டுகள் பிரச்சாரத்தின் மூலம் நாம் செய்வதைவிடக் கூடுதலான படிப்பினைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வைக்கும். [15]

ஆறு மாதங்களுக்குப் பின்னர், செப்டம்பர் 1960 இல், மற்றும் அதன் சொந்த தடங்களை மறைக்கும் நோக்கத்துடன், பப்லோவாத சர்வதேச செயலகம் LSSP க்கு ஒரு நீண்ட ஆவணத்தை எழுதியது. அது பெரேரா தலைமையின் கட்டுப்பாடற்ற சந்தர்ப்பவாதம் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைச் செய்த அதேவேளையில், உண்மையில், முதலாளித்துவ SLFP உடன் அதன் சூழ்ச்சிகளைத் தொடர LSSP க்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்கியது. 'வெகுஜனங்கள்' 'ஒரு புரட்சிகர அரசியல் அடிப்படையில் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கத் தயாராக இல்லாதபோது' 'முற்போக்கான நடவடிக்கைகளை' செயல்படுத்துவதில் அல்லது 'தேட்டங்களை' பாதுகாப்பதில் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் ஒத்துழைக்க பப்லோவாத தலைமை ஒப்புதல் அளித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துல்லியமாக இதைத்தான் பெரேராவின் LSSP செய்வதாக கூறியது.

சர்வதேச செயலக கடிதம், 'ஒரு காலனித்துவ அல்லது அரை-காலனித்துவ நாட்டில் தொழிலாள வர்க்கம் அல்லாத அரசாங்கத்திற்கு (நடுத்தர வர்க்கம் அல்லது முதலாளித்துவமாக இருந்தாலும்) ஒரு புரட்சிகரக் கட்சி விமர்சனரீதியான ஆதரவை வழங்குவது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று அறிவித்தது. [16] இவ்வாறு பப்லோவாத உலகத் தலைமை அதன் இலங்கைப் பிரிவுக்கு SLFP அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கான கதவை அகலமாக திறந்து வைத்து, நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே இறுதியில் அது அமைச்சரவைக்குள் நுழைவதற்கான பாதையை வகுத்தது.

சிங்களப் பேரினவாத SLFP மற்றும் 1959ல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, தன்னை MEP என பெயர் மாற்றியிருந்த குணவர்தனவின் VSSP ஆகியவற்றுடனான அதன் நட்புறவு மற்றும் அதன் சந்தர்ப்பவாத-கூட்டணிவாத நோக்குநிலையை தொடர்ந்துகொண்டிருந்த LSSP, தமிழ் மக்களுக்கு எதிரான வகுப்புவாத கிளர்ச்சிக்கு அடிபணிந்து, அதற்கான நீண்டகால விளைவுகளைக்கொண்ட விட்டுக்கொடுப்புகளை செய்து வந்தது.

ஜூன் 1963 இல் SWP இன் தேசியக் குழுவிற்கு ஹீலி எழுதிய கடிதத்தில் பப்லோவாதிகளுடனான அதன் மறுஐக்கியத்தை கண்டித்து, ஸ்ராலினிஸ்டுகளுடனும் குணவர்தனாவுடனும் இணைந்து LSSP நடத்திய மே தினப் பேரணியைப் போற்றும் Militant இல் வந்த ஒரு அறிக்கையை அவர் கசப்புடன் சுட்டிக்காட்டினார். தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை பேரணியின் மேடையில் இருந்து விலக்க வேண்டும் என்ற குணவர்த்தனவின் கோரிக்கைக்கு LSSP தலைவணங்கியது 'அதற்கான நித்திய அவமானம்' என்று ஹீலி எழுதினார். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான சம அந்தஸ்து பற்றிய கேள்வியில் தலைவர்கள் உண்மையான மற்றும் பெரிய விட்டுக்கொடுப்புக்களை தயார்செய்து வருகின்றனர் என்று LSSP யில் இப்பொழுது தாராளமாய் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இதுதான் அவர்களை பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வழிவகுத்த சரணாகதியின் தர்க்கமாகும். [17]

சிறிது காலத்தின் பின்னர், 19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக பணியாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட அவர்களின் மூதாதையர்களின் வழிவந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களை 'திருப்பி அனுப்ப' —உண்மையில், வெளியேற்ற— இலங்கை, இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு LSSP இன் ஆதரவிற்கு ஐக்கிய செயலகம் தனது ஆசீர்வாதத்தை வழங்கியது.

ஐக்கிய இடது முன்னணி — அல்லது மாபெரும் காட்டிக்கொடுப்பு எவ்வாறு தயாரிக்கப்பட்டது

ஹீலியால் குறிப்பிடப்பட்ட கொழும்பு 1963 மே தினப் பேரணியானது ஒரு புதிய சூழ்ச்சிக்கையாளலுக்கு ஆயத்தமாக இருந்தது. இது லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குணவர்தனவின் MEP ஆகியவற்றுக்கு இடையே ஐக்கிய இடது முன்னணி (United Left Front — ULF) என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு மக்கள் முன்னணி (Popular Front) வகையிலான கூட்டணியை உருவாக்குவதாகும்.

முந்தைய விரிவுரையில் கலந்துரையாடப்பட்டது போல, பப்லோவாத மறுஐக்கிய மாநாடு, நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை வெளிப்படையாக நிராகரித்திருந்தது. அது முதலாளித்துவ தேசியவாத கியூபப் புரட்சியை உலக சோசலிசத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறப்பதாகப் பாராட்டியது, குட்டி முதலாளித்துவத்தின் புரட்சிகர திறன்களைப் புகழ்ந்து, புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் தேவையை கைவிட்டது. 'பின்தங்கிய நாடுகளில் எதிரியின் பலவீனம், ஒரு மழுங்கிய கருவியுடன் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டது' என்று மாநாடு அறிவித்தது. [18]

பொருத்தமாக —அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், இந்த முன்னோக்கிற்கு இணங்க பப்லோவாத மறுஐக்கிய மாநாடு LSSP-CP-MEP கூட்டணிக்கும் தனது ஆசீர்வாதத்தை கொடுத்தது. LSSP, 'வலது பக்கம் நோக்கிய இயக்கத்தை தடை செய்வதற்கும், இந்த வெகுஜனங்கள் ஒரு மாற்று இடது நோக்கி செல்ல உதவுவது ஆகிய இரண்டுக்கும், ஐக்கிய இடது முன்னணி பற்றிய கேள்வியை சரியாக எழுப்பியுள்ளது' என பப்லோவாத மறுஐக்கிய மாநாடு வலியுறுத்தியது. [19]

சிறிது காலத்திற்குப் பின்னர், ஆகஸ்ட் 1963 இல், ஐக்கிய இடது முன்னணி அல்லது ULF உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. ULFஇன் பெயரே ஒரு வஞ்சகத்தனமானது. புரட்சிகர கட்சியின் அரசியல் சுயாதீனத்தை எப்போதும் வலியுறுத்தி வந்த ட்ரொட்ஸ்கி விரிவுபடுத்திய, ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவர், எதிர்ப்போக்குகளுடனான எந்தவொரு கூட்டு நடவடிக்கையும் குறிப்பிட்ட உடனடி இலக்குகளுக்கானதாக இருக்க வேண்டும், மேலும் அதன் வேலைத்திட்டங்களோ அல்லது பதாகைகளோ ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க வேண்டும் என்றார்.

அதேபோல, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி 2014 இல் வெளியிட்ட ஒரு முக்கியமான கட்டுரைத் தொடரில் விளக்கியது போல், ஐக்கிய இடது முன்னணி, 'சந்தர்ப்பவாத மற்றும் முதலாளித்துவ கட்சிகளுடன் ஒரு பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 1930 களின் ஸ்ராலினிச மக்கள் முன்னணிகளை பிரதிபலித்தது, அது தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்கம், தனியார் சொத்து மற்றும் அரசுக்கு கட்டிப்போட்டு, அதன் சுயாதீன புரட்சிகர நடவடிக்கைகளைத் தடுத்தது.” [20]

ULF இன் 16 அம்ச வேலைத்திட்டமானது, தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களை தேசியமயமாக்குவது உட்பட பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது, ஆனால் எந்த வகையிலும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்கு அப்பால் செல்லவில்லை. இது, SLFP அரசாங்கத்தின் இனவாத தமிழர்-விரோதக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் எடுத்துக்காட்டப்பட்டது.

ஐக்கிய இடது முன்னணியின் அடிப்படையில்தான் தொழிற்சங்கங்கள் —அவற்றில் பலவும் அதன் மூன்று அங்க கூறுகளால் நேரடியாக வழிநடத்தப்பட்டன— பின்னர் 21 புள்ளிகளை கொண்ட ஒரு கூட்டணியை அமைத்தன. 21 அம்சக் கூட்டணி என்ற பதாகையின் கீழ் பெரும் போராட்டங்கள் வெடிக்கவிருந்தன. ஆனால் ULF மற்றும் தொழிற்சங்கங்கள் பெருகிய வெகுஜன தொழிலாள வர்க்க எழுச்சியை அரசியல்ரீதியாக பாதிப்பிலாததாக்க இணைந்து செயல்பட்டன.

ஐக்கிய இடது முன்னணி மற்றும் 21-அம்ச இயக்கத்தின் ஒருங்கிணைந்த பொறிமுறைகள் மூலம், தொழிலாள வர்க்கம் போர்க்குணமிக்க தொழிற்சங்கப் போராட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் LSSP யும் அதன் கூட்டாளிகளும் பாராளுமன்றத்திலும் இலங்கை முதலாளித்துவ அரசியலின் பரந்த அரங்கிலும் ULF மூலம் சூழ்ச்சிக்கையாளலில் ஈடுபட்டனர். ஸ்ராலினிஸ்டுகளும் குணவர்தன தலைமையிலான இனவாத MEP யும், LSSP ஐ விட SLFP உடன் ஒரு கூட்டணியை நோக்கியே இருந்தன என்பதை வலியுறுத்த வேண்டும். இரண்டு கட்டப் புரட்சியின் ஸ்ராலினிச-மென்ஷிவிக் கொள்கையின்படி, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் உள்ள ஸ்ராலினிசக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் 'முற்போக்கான,' 'ஏகாதிபத்திய-எதிர்ப்பு' என்று கூறப்படும் பிரிவுகளுக்கு அடிபணியச் செய்வதற்கு குரல் கொடுக்கும் ஆதரவாளர்களாக இருந்தன.

LSSP க்குள் ஐக்கிய இடது முன்னணியை எதிர்க்கும் ஒரு இடது கன்னை இருந்தது. அது ஐக்கிய இடது முன்னணியை கூட்டணியை நோக்கிய ஒரு படிக்கட்டு என்று எச்சரித்தது. இருப்பினும், பப்லோவாத ஐக்கிய செயலகம் LSSP தலைமை மீதான விமர்சனத்தை அடக்கியது. 1963 ஆம் ஆண்டு மறுஐக்கியத்திற்கு பின்னர் 'கட்டுப்பாடுகளை' தளர்த்துவதற்கான தேவையை மேற்கோள் காட்டி இதை நியாயப்படுத்தியது. LSSP தலைவர்களுக்கு 'தங்கள் நிலைப்பாட்டின் நேர்மையை செயலில் நிரூபிக்க' வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அது கூறியது. 'LSSP யில் சூழ்நிலையை வேண்டுமென்றே சூடேற்றுவது' தீங்கு விளைவிக்கும் மற்றும் 'கட்சியின் ஒற்றுமையை' பாதிக்கும் — அதாவது, ஒரு தீவிரமான தேசிய-சந்தர்ப்பவாத வலதுசாரியால் அதன் ஆதிக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். [21]

ஏப்ரல் 1964ல், LSSP யின் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய செயலகம் LSSP தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அது ஐக்கிய இடது முன்னணியைப் பாராட்டி, அது 'இன்னொரு கியூபா அல்லது அல்ஜீரியாவை உருவாக்க முடியும், மேலும் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர எண்ணம் கொண்ட தொழிலாளர்களுக்கு இன்னும் பெரிய உத்வேகம் அளிக்கும் என்பதை நிரூபிக்க முடியும்” என்று கூறியது. [22]

அதற்கமைய, தனது கணவரின் படுகொலையை அடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பிரதம மந்திரி பண்டாரநாயக்கா அம்மையாருடன் பெரேரா ஏற்கனவே பின் கதவு பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருந்தார்.

பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க

மே 10, 1964 உரையில், பண்டாரநாயக்க இலங்கை முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியையும், அதன் விளைவாக தொழிலாள வர்க்கத்தை அடக்கி, அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்கு LSSP தலைவர்களை ஏன் அரசாங்கத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார். 'சிலர், ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம் இந்த [வேலைநிறுத்த] பிரச்சனைகளை அகற்ற முடியும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் தொழிலாளர்களை துப்பாக்கியின் கத்தி முனையில் வேலை செய்ய வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த கருத்துக்களை நான் தனித்தனியாகவும் உலக நிகழ்வுகளின் பின்னணியிலும் கருத்தில் கொண்டுள்ளேன். இந்த தீர்வுகள் எதுவும் நாம் எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதை அடைய உதவாது என்பது எனது முடிவு. ... ஆதலால் கனவான்களே! தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களான குறிப்பாக திரு. பிலிப் குணவர்தன மற்றும் திரு. என். எம். பெரேரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளேன்.” [23]

பப்லோவாத ஐக்கிய செயலகம் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் LSSP இன் எதிர்வரவிருக்கும் நுழைவுக்கு பதிலளித்தது, அதற்கு பதிலாக ஒரு ஐக்கிய இடது முன்னணி அரசாங்கத்திற்காக போராடவும், 'ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளித்துவத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தின் நீண்ட பாரம்பரியத்திற்கு உண்மையாக இருக்கவும் LSSP க்கு வேண்டுகோள் விடுத்தது.' [24] ஐக்கிய செயலகத்தின் அனுசரணையுடன், பல வருடங்களாக சிங்கள ஜனரஞ்சகத்துடன் தழுவி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உரிமைக்காகவும் போராடுவது என்ற பெயரில் முதலாளித்துவ SLFP உடன் வெளிப்படையாக கூட்டு வைத்த ஒரு கட்சியிடம் இவ்வாறு கேட்கப்பட்டது.

மாபெரும் காட்டிக்கொடுப்பு

ஜூன் 9, 1964 அன்று, LSSP முறைப்படி அரசாங்கத்தில் இணைந்தது, பெரேரா நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார், மேலும் இரண்டு LSSP தலைவர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தில் நுழைவதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஜூன் 6-7 அன்று நடைபெற்ற கட்சி மாநாட்டில், மூன்று தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன:
1) 'தேசியப் போராட்டத்திற்கு' தலைமை தாங்குவதாக SLFP இனை பாராட்டிய பெரேரா தலைமையிலான வலதுசாரிக் கன்னை 501 வாக்குகளைப் பெற்றது.

2) BLPI இன் முன்னாள் தலைவர்களான கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்தன தலைமையிலான 'மத்திய' (center) என்று அழைக்கப்படும் பிரிவினர் SLFP க்கும் ஒட்டுமொத்த ஐக்கிய இடது முன்னணிக்கும் இடையே ஒரு முற்றுமுழுதான கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டுமென லங்கா சம சமாஜக் கட்சிக்கு அழைப்பு விடுத்தனர். இது 'முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்கு' அப்பால் 'நெருக்கடிக்கான முற்போக்கான தீர்வை' அடைவதற்கான சிறந்த அடிப்படைகளை வழங்கும் எனக் கூறினர். [25] அது 75 வாக்குகளைப் பெற்றது.

3) 159 பிரதிநிதிகள் புரட்சிகர சிறுபான்மையினரின் தீர்மானத்திற்கு வாக்களித்தனர், இது SLFP உடனான எந்தவொரு கூட்டணியையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தது. ஒரு கூட்டணி, 'வெளிப்படையான வர்க்க ஒத்துழைப்பு, வெகுஜனங்களின் நோக்குநிலை தவறல், (மற்றும்) தொழிலாள வர்க்கத்தின் பிளவு' ஆகியவற்றில் விளைவை ஏற்படுத்தும், இதனால் கூட்டணியின் ஆதரவாளர்கள் போராடுவதாக கூறப்படும் வலதுசாரி சக்திகளை பலப்படுத்தும் என்றனர். [26] அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டவுடன், அவர்கள் மாநாட்டிலிருந்து வெளியேறி, LSSP (புரட்சிகர) என்ற புதிய கட்சியை நிறுவுவதாக அறிவித்தனர்.

ஜெர்ரி ஹீலி

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கான அவற்றின் வரலாற்றுத் தன்மையை அங்கீகரித்து, இலங்கையின் அபிவிருத்திகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உன்னிப்பாகக் கவனித்து வந்தது. ஹீலி கொழும்புக்கு பயணித்தார். ஆனால் அவர் பப்லோவாத ஐக்கிய செயலகத்தில் உறுப்பினராக இல்லை என்ற காரணத்தால் LSSP யின் மாநாட்டில் நுழைய மறுக்கப்பட்டார். எவ்வாறாயினும், கூட்டணியை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் ஹீலி மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே கலந்துரையாடலில் ஈடுபட்டார். LSSP இனதும் ஐக்கிய செயலகத்தினதும் குற்றவியல் பாத்திரத்தை அனைத்துலகக் குழு அம்பலப்படுத்துவதற்கும் மற்றும் மிகவும் முன்னேறிய கூறுகளை அணுகுவதைத் தடுப்பதற்கான பப்லோவாதிகளின் உடனடி மற்றும் நீண்ட கால முயற்சிகள் தோல்வியடைந்தன.

ஜூலை 5, 1964 அன்று, ICFI வெளியிட்ட அறிக்கையை நான் இந்த அறிக்கையை அறிமுகப்படுத்துகையில் மேற்கோள் காட்டியுள்ளேன். சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு பப்லோவாதிகள் இலங்கையில் இழைத்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் அத்தியாவசிய படிப்பினைகளை அது வரைந்தது. அந்த காட்டிக்கொடுப்பு, 'பண்டாரநாயக்கவின் கூட்டணிக்குள் லங்கா சம சமாஜக் கட்சி உறுப்பினர்கள் நுழைந்தமையானது, நான்காம் அகிலத்தின் பரிணாமத்தில் ஒரு முழு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கின்றது. ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக சேவை செய்வதிலும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு தோல்வியை தயாரிப்பதிலும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள்ளான [பப்லோவாத] திருத்தல்வாதம் அதன் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது” என்று அது முடித்தது.

அடுத்த பத்தி குறைந்த முக்கியத்துவம் கொண்டதல்ல. அதில் கூறுகிறது:

நான்காம் அகிலத்தை புனரமைக்கும் பணி, ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்துவ மற்றும் சந்தர்ப்பவாத ஊழியர்களுக்கு எதிராகவும், அவர்களின் பாதுகாவலர்களுக்கும், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலம் என்ற பெயரை அபகரிக்கும் திருத்தல்வாதிகளுக்கு எதிராகவும், போராட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சிகளை நிர்மாணிக்கும் உறுதியான அடித்தளத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும். [27]

கூடுதலாக, LSSP யின் அரசியல் சீரழிவு பற்றிய ஒரு விரிவான பகுப்பாய்வை, ஹீலி 'சிலோன்: மாபெரும் காட்டிக்கொடுப்பு” என்பதில் எழுதினார், அது சர்வதேச பப்லோவாத தலைமை அதில் வகித்த பங்கை எடுத்துக்காட்டுகிறது. LSSP யின் புரட்சிகரப் பிரிவின் எதிர்காலம் 'முக்கியமாக இப்போது இந்த உறவைப் பற்றிய தீவிர ஆய்வை” பொறுத்தது மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தை சார்ந்துள்ளது என்று அது கவனித்தது. [28]

ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் தமது இலங்கைப் பிரிவு நுழைந்ததற்கு பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பதில், அதன் பொறுப்பை முற்றிலும் சிடுமூஞ்சித்தனமான முறையில் கைவிடுவதாக இருந்தது. பெரேராவின் கூட்டணித் தீர்மானத்திற்கு வாக்களித்த 501 LSSP உறுப்பினர்களை அது வெளியேற்றியது. எனினும், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கும் நேரடிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஐக்கிய இடது முன்னணி அரசாங்கத்தில் நுழைவதற்கு ஆதரவளித்த மற்றும் LSSP யின் விசுவாசமான உறுப்பினர்களாக இருந்த 'மத்திய' என்று அழைக்கப்படுவதற்கு எதிராக பல மாதங்களாக அது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், ஹான்சனும் SWP தலைமையும், இலங்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கான அவற்றின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாட வேண்டும் என்ற கட்சியின் அனைத்து IC-சார்பு சிறுபான்மையினரின் கோரிக்கைக்கு உடனடியாக அதன் அனைத்து உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதன் மூலம் பதிலளித்தனர்.

பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் பேரழிவுகரமான விளைவுகள்

35 ஆண்டுகளாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய தோழர் விஜே டயஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. விஜே 1962 இல் பல்கலைக்கழகத்தில் நுழைந்த பின்னர், LSSP யின் இளைஞர் கழகங்கள் மூலம் அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் தலைமையிலும், அதற்கு ஒரு புரட்சிகர-சோசலிச திசையை வழங்குவதற்காகப் போராடியதிலும் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி என்று அவர் நினைத்ததில் ஈர்க்கப்பட்டார். உண்மையில், லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தது ஒரு வரலாற்று காட்டிக்கொடுப்பாகும்.

80 வயதில் அவரது மரணத்தை அறிவிக்கும் IC அறிக்கை கூறுகிறது:

விஜே, நிரந்தரப் புரட்சிக்கான சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத முன்னணித் தலைவனும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராளியும் ஆவார். மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாப்பதில் அவர் தளர்ந்துவிடவில்லை. ஏனெனில். அந்தக் கொள்கைகள் கைவிடப்பட்டதாலும், காட்டிக்கொடுக்கப்பட்டதன் பெறுபேறாகவும் உருவாகிய அரசியல் குழப்பம், பிற்போக்கு மற்றும் துன்பகரமான உயிரிழப்புகள் போன்ற பேரழிவு விளைவுகளை அவர் கண்டிருந்தார். [29]

இலங்கையில் பப்லோவாத காட்டிக்கொடுப்பானது தீவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் மற்றும் உண்மையில் தெற்காசியா முழுவதற்கும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று, ஆறு தசாப்தங்களுக்குப் பின்னரும், இலங்கை மற்றும் தெற்காசிய தொழிலாள வர்க்கமும் எமது கட்சியும் அதன் தாக்கத்தின் கீழேயே இன்னமும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

100,000 க்கும் அதிகமான மரணங்களுக்கு வழிவகுத்த ஒரு இன-வகுப்புவாத உள்நாட்டுப் போர் உட்பட கடந்த ஆறு தசாப்தங்களாக இலங்கையின் சித்திரவதைக்குள்ளான முழு வரலாறும் பப்லோவாத திருத்தல்வாதம் மற்றும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தில் என்ன இருந்தது மற்றும் பணயம் வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. தீவில் முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய சமூக முட்டுக்கொடுப்பாளராக LSSP மாறியது, குட்டி முதலாளித்துவ ஜேவிபியின் எழுச்சிக்கான கதவைத் திறந்தது. இது மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் கலவையின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் வறிய கிராமப்புற சிங்கள இளைஞர்களிடையே ஆதரவாளர்களை வென்றது.

அதே நேரத்தில், 'முதலில் சிங்களம்' என்ற பேரினவாதத்தை முன்னிறுத்திய கட்சியுடன் LSSP யின் எதிர்ப்புரட்சிகர கூட்டணியானது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச தலைமையின் கீழ் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற தமிழ் வெகுஜனங்களின் நம்பிக்கையை சிதைத்தது. இறுதியில், இது யாழ்ப்பாண குடாநாட்டின் மாணவர், இளைஞர்களிடையே இருந்து விடுதலைப் புலிகள் மற்றும் ஒத்த கருத்துடைய தமிழ் தேசியவாத-பிரிவினைவாத குழுக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

1964 ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட SLFP-LSSP கூட்டணி அரசாங்கமானது, 21 அம்சக் கோரிக்கைகளைச் சுற்றியுள்ள தொழிலாள வர்க்க எழுச்சியைத் தடம்புரளச் செய்து, அதன் முக்கியப் பணியை நிறைவேற்றிய பின்னர் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஆனால் 1970 ஆம் ஆண்டில், இரண்டாவது SLFP தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் LSSP, SLFP இன் பிரதான பங்காளியாக இருந்தது. 1975 வரை பெரேரா அதன் நிதியமைச்சராக இருந்த நிலையில், SLFP-LSSP-CP அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொண்டது. 1971 ஆம் ஆண்டில், ஜே.வி.பி தலைமையிலான எழுச்சியை அது கொடூரமாக ஒடுக்கி, 15,000 கிராமப்புற இளைஞர்களைக் கொன்றது.

இலங்கை முதலாளித்துவ அரசியலின் நன்கு காலூன்றப்பட்ட பாதையைப் பின்பற்றி, கூட்டணியானது, தீவின் அடிப்படைச் சட்டத்தில் முக்கிய சிங்களப் பேரினவாதக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்துடன் இளைஞர்களின் எழுச்சியைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதற்கு துணையாக இருந்தது. ஒரு காலத்தில் நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கை சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்திய கொல்வின் டி சில்வாவினால் எழுதப்பட்ட அது, தமிழ் சிறுபான்மையினருக்கு வேலை மற்றும் கல்வி ஒதுக்கீட்டை பாரபட்சமாக திணித்தது மற்றும் பௌத்தத்தை அரச மதமாகவும் சிங்களத்தை ஒரே ஆட்சி மொழியாகவும் ஆக்கியது.

லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பின் தாக்கம் தீவுக்கு அப்பாலும் எதிரொலித்தது. ஆசியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும், LSSP இன் காட்டிக்கொடுப்பு பெருகிய முறையில் மதிப்பிழந்த ஸ்ராலினிச மற்றும் மாவோவாத கட்சிகளுக்கு ஒரு அரசியல் ஊக்கத்தை அளித்தது. சீன-சோவியத் பிளவு, இந்திய-சீன எல்லைப் போரில் இந்திய முதலாளித்துவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான நெருங்கிய உறவுகளுக்கு அதன் அணிகளில் வளர்ந்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றின் விளைவாக 1960களில் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் நெருக்கடியால் திணறினர். ஆனால் தெற்காசியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1950 களில் பப்லோவாதிகளால் கலைக்கப்பட்டதால், 1964 இன் மாபெரும் காட்டிக்கொடுப்பில் உச்சக்கட்டத்தை அடைந்த ஒரு நிகழ்ச்சிப்போக்கு, போட்டி ஸ்ராலினிச பிரிவுகள் சவால் செய்யப்படாமல் விடப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கள் அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. இந்த காலகட்டத்தில் முன்னுக்கு வந்த நக்சலைட் இயக்கம், 'நீடித்த மக்கள் போராட்டம்' மற்றும் முதலாளித்துவத்தின் பரவலாக அறியப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு பிரிவுடன் இணைந்து 'புதிய ஜனநாயகப் புரட்சி' என்ற மாவோவாத, தொழிலாள வர்க்க எதிர்ப்பு அரசியலை நியாயப்படுத்த LSSP யின் காட்டிக்கொடுப்பை சுட்டிக் காட்டியது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உருவாகுவதற்கு வழிவகுத்த அரசியல் போராட்டம்

ஹீலியின் ஜூன் 1964 இலங்கைப் பயணம், நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்க்கும் போராட்டம் தொடர்பாக, எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு மாபெரும் காட்டிக்கொடுப்பின் முக்கியத்துவத்தை வெளிக்கொணரும் போராட்டத்தின் முதல் முழக்கமாக இருந்தது. LSSP யின் நடவடிக்கைகளால் அந்நியப்படுத்தப்பட்ட, அத்தோடு தொழிலாள வர்க்கத்தின் காட்டிக்கொடுப்பும் அரசியல் ஒடுக்குமுறையும் உருவாக்கிய குழப்பத்திற்கும், திசைதிருப்பலின் மத்தியில் முன்னேறிச் செல்லும் வழியை தேடும் இலங்கையில் புரட்சிகர எண்ணம் கொண்ட கூறுகளை தெளிவுபடுத்துவதற்கான போராட்டமே இதில் முக்கிய அங்கமாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, ஹீலியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்வைத்த மையக் கருத்து என்னவென்றால், காட்டிக்கொடுப்பு பாரிஸில் உள்ள பப்லோவாத உலகத் தலைமையால் அரசியல்ரீதியாக தயாரிக்கப்பட்டது என்பதுதான். 1963 இல் பப்லோவாதிகளை நோக்கிய SWP இன் திருப்பத்தின் மூலம் தீவிரமடைந்த உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீண்டகால நெருக்கடியின் விளைவான இதை, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் மூலம் மட்டுமே வெளிவரமுடியும்.

லங்கா சம சமாஜக் கட்சி (புரட்சிகர) புரட்சிகர அரசியலின் நிலைப்பாட்டில் இறந்தே பிறந்ததால், அது ஐக்கிய செயலகத்திலிருந்து முறித்துக் கொள்ள மறுத்தது. அதன் முதல் மாநாட்டிலேயே, அதன் முழுத் தலைமையும் ஒன்றிணைந்து, 'சர்வதேசப் பிரச்சினை' — அதாவது பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தை கலந்துரையாடுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனுதாபியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தடை செய்தது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் ஆவணமானது, பிரித்தானிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் செல்வாக்கு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், LSSP (R) மற்றும் அதன் அரசியல் சுற்றுவட்டத்தில் இருந்தும், LSSP மற்றும் ஸ்ராலினிசத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அதன் நோக்குநிலையிலிருந்தும் உடைத்துக்கொண்டு வந்த அசாதாரண இளைஞர்களின் ஒரு குழு பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்ப முயற்சித்தது. இவர்களில் முக்கியமானவர்கள், ஜூன் 1968 இல் அதன் ஸ்தாபக மாநாட்டில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வெறும் 19 வயதுடையவராக இருந்த கீர்த்தி பாலசூரியாவும், விஜே டயஸ் உம் ஆவர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியா 1970 இன் ஆரம்பத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். துரதிர்ஷ்டவசமாக, தோழர் பாலசூரியா 1987 இல் 39 வயதிலேயே காலமானார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக மாநாட்டில் ஒரு முக்கிய பிரச்சினை ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தின் தொடர்ச்சியைப் பற்றியதாக இருந்தது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது போல், தோழர் கீர்த்தி 'இம்மாநாட்டை, லங்கா சம சமாஜக் கட்சி, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் சக்தி குழு (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர்கள் பலர் கலந்து கொண்ட ஒரு இடது குழு) ஊடாக அதன் வரலாற்றைக் காணும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் மறுஐக்கியம் செய்யும் ஒரு தேசிய இலங்கைப் புரட்சிகர போக்காக நோக்குவதை எதிர்த்தார்.' [30] பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான அதன் போராட்டம் நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை உறுதி செய்துள்ளது மற்றும் பாட்டாளி வர்க்கத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதில் அதன் படிப்பினைகள் முக்கியமானவை என்ற புரிதலின் அடிப்படையில் ICFI உடன் இணைவதற்கான தீர்மானத்தை மாநாடு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. 'இந்த மாநாடு, அனைத்து வகையான திருத்தல்வாதத்திற்கும் எதிரான சமரசமற்ற போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக இலங்கையில் பாட்டாளி வர்க்க புரட்சியின் கட்சியை கட்டியெழுப்பும் பணிக்கு இந்த மாநாடு உறுதியுடன் அர்ப்பணித்துக் கொள்வதோடு, சகல சூழ்நிலைகளின் கீழும் சகல இடங்களிலும் சாத்தியமானளவு அதிகமாக வர்க்கப் போராட்டங்களில் செயலூக்கத்துடன் தலையிடுவதுடன் இந்தப் பணி பிரிக்கமுடியாமல் கட்டுண்டுள்ளது என்றும் அறிவிக்கிறது.” [31]

நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் வேலைத்திட்டத்தைப் பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் படிப்பினைகளை உள்வாங்குவதற்கான போராட்டத்தில் அவர்கள் தங்களை அடித்தளமாகக் கொண்டிருந்ததால், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையும் குறிப்பாக தோழர் கீர்த்தியும் நிரந்தரப் புரட்சித் வேலைத்திட்டத்தில் இருந்து எந்தவகையிலான பின்வாங்கல் தொடர்பாக மிகவும் கவனமாக இருந்தனர். இது இந்த விரிவுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது, ஆனால் RCL ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பே, மாவோயிச 'ஆயுதப் போராட்டத்தை' பண்டா மகிமைப்படுத்தியதை இந்தத் தலைமை சவால் செய்திருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் 1971 ஆம் ஆண்டில், பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க புதுதில்லி தலையிடுகிறது என்ற இந்திரா காந்தியின் இழிந்த கூற்றுக்களை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் ICFI என்ற பெயரில் SLL முன்வைத்த பாகிஸ்தான் மீதான இந்தியாவின் டிசம்பர் 1971 போருக்கு 'விமர்சனரீதியான ஆதரவு' என்ற நிலைப்பாட்டை மாற்றியமைக்க RCL முயன்றது. எவ்வாறாயினும், SLL க்குள் வளர்ந்து வரும் நெருக்கடியின் அடையாளமாக, RCL இன் விமர்சனங்கள் ஒடுக்கப்பட்டு அனைத்துலக்குழுவினுள் ஒருபோதும் கலந்துரையாடப்படவில்லை.

பப்லோவாதமும், மாபெரும் காட்டிக்கொடுப்பும் மற்றும் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம்

முன்னர் குறிப்பிட்டது போல், இலங்கையின் முதலாளித்துவ அரசாங்கத்தில் பப்லோவாத LSSP நுழைவதற்கு துல்லியமாக ஒரு வருடத்திற்கு முன்னர், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) பப்லோவாதிகளுடன் மறுஐக்கியத்திற்கு வாக்களித்து, ஐக்கிய செயலகம் என அழைக்கப்படுவதை உருவாக்கியது.

மறுஐக்கியத்தை நெறிப்படுத்தி, செயல்படுத்திய பப்லோவாத உலக மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற SWP இன் ஜூன் 1963 மாநாட்டில், ரிம் வொல்ஃபோர்த் தலைமையிலானதும் மற்றும் அனைத்துலக்குழுவின் அரசியல் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுடன் இணைந்து பணியாற்றிய ஒரு சிறுபான்மையினர் மறுஐக்கியத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

குறிப்பிடத்தக்க வகையில், இரண்டாவது குழு, ஜேம்ஸ் ரொபேர்ட்சன் தலைமையிலான சிறுபான்மையினர், அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு அனுதாபம் காட்டுவதாகவும், ஸ்பார்டசிஸ்ட் லீக்கை உருவாக்கப் போவதாகவும் கூறி, வாக்களிக்கவில்லை. ரொபேர்ட்சன் குழு SWP தலைமையுடன் அனைத்து வகையான வேறுபாடுகளையும் தெரிவித்தது. ஆயினும்கூட, முந்தைய இரண்டரை ஆண்டுகளில் கடுமையான அரசியல் போராட்டத்திற்கு உட்பட்ட உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினையில், ரொபேர்ட்சன் குழு ICFI க்கு பக்கபலமாக இருக்க மறுத்தது. 1953 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதத்தை தொடங்கும் போது, 'பப்லோவாத திருத்தல்வாதத்திற்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான பிளவுக் கோடுகள் மிகவும் ஆழமானவை, அரசியல் ரீதியாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ எந்த சமரசமும் சாத்தியமில்லை” என கனன் அறிவித்தார். [32]

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1953 பிளவுக்கு வழிவகுத்த கருத்து வேறுபாடுகள் அடுத்தடுத்த நிகழ்வுகளால், குறிப்பாக SWP மற்றும் சர்வதேச செயலகத்தின் கியூபப் புரட்சியின் பொதுவான மதிப்பீட்டின் மூலம் காலம்கடந்தவையாகிவிட்டது என்பதால் SWP தலைமையுடன் உடன்படுகிறதா என்பதை அறிவிக்குமாறும், 'மறுஐக்கியத்தை' முன்னோக்கி தள்ளும் வகையில் 1953 பிளவு தொடர்பான விவாதங்கள் நசுக்கப்பட வேண்டுமா என்றும் கேட்கப்பட்டபோது, ரொபேர்ட்சன் குழு அது தொடர்பாக மௌனமாக இருந்தது.

பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேண்டுகோளின் பேரில், அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவான சிறுபான்மையினர், SWP அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டு பப்லோவாதிகளுடன் மீண்டும் இணைந்த பின்னரும் SWP க்குள் இருந்தனர். உலகப் புரட்சிகர முன்னோக்குகள் மற்றும் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான போராட்டம் தொடர்பான மையப் பிரச்சினைகளில் SWP க்குள் அரசியல் தெளிவுபடுத்தலுக்கான போராட்டத்தைத் தொடர்வதற்காக அவர்கள் அவ்வாறு செய்தனர். இது மறு ஐக்கியத்திற்கான அரசியல்ரீதியாக ஆதரவை தெரிவிப்பதிலிருந்தோ அல்லது பங்கெடுப்பதிலிருந்தோ மிகவும் வேறுபட்ட ஒரு சரியான முடிவாகும். அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுரீதியான கட்சியான SWP, குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தில் தன்னைக் கலைத்துக் கொள்ளும் போக்கில் இருந்த நிலைமைகளின் கீழ், அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பணியின் சரியான மதிப்பீட்டால் அது எடுக்கப்பட்டது. இது மறுஐக்கியத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் தீர்க்கமான முக்கியத்துவத்தை நிரூபிக்கும் மற்றும் தெளிவுபடுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் நிலை விஷயமாக இருந்தாலும், 1953 பிளவு பற்றி எந்த கலந்துரையாடலும் இருக்கக்கூடாது என்பதில் SWP தலைமைதான் மிகவும் பிடிவாதமாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்கான போராட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து, அதன் சொந்தப் பாதையை அரசியல்ரீதியாக விளக்க முடியவில்லை. மாறாக, அது 1953 இன் அனைத்து கலந்துரையாடல்களையும் நசுக்கியது. அதே நேரத்தில், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அனைத்துலக்குழுவின் ஸ்தாபிதத்தை SWP தொடக்கியதில் சரியாக இருந்தது என்றும், ஆனால் அதன் பின்னர் பப்லோவாதிகள் தமது நிலைப்பாடுகளுக்கு வந்துள்ளனர் என்றும் அது இழிவான முறையில் வலியுறுத்தியது. இதை மண்டேலும் அவரது ஆதரவாளர்களும் கடுமையாக மறுத்தனர்.

அனைத்துலகக் குழு சார்பு சிறுபான்மையினரை பொறுத்தவரை, SWPக்குள் இருப்பது என்பது, SWP தலைமையின் கன்னை நோக்கத்தால் உந்தப்பட்ட சூழ்ச்சிக்கையாளல்களுக்கு உட்படுத்தப்பட்டு பொது கட்சி வேலைகளில் சில வாய்ப்புகளை கைவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் வொல்ஃபோர்த் தலைமையிலான சிறுபான்மையினர், SWP காரியாளர்கள் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை தெளிவுபடுத்துவதற்கான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தில் தமது பங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததால் அவ்வாறு செய்தனர்.

ஐக்கிய செயலகத்தின் உத்தியோகபூர்வ பிரிவு தீவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்த இலங்கையில் நடந்த நிகழ்வுகள் நிச்சயமாக, ஒரு வரலாற்று காட்டிக்கொடுப்பு என்பது மற்றொரு விடயமாகும். இந்த விரிவுரை காட்டுவது போல், அக்காட்டிக்கொடுப்பில் பாரிஸில் உள்ள சர்வதேச பப்லோவாத தலைமையின் பங்கு முழுமையாக இருந்ததுடன், மேலும் இதற்கு SWP இன் உறுதுணையும் இருந்தது.

வொல்ஃபோர்த் தலைமையிலான அனைத்துலக்குழு-சார்பு சிறுபான்மையினர் கோட்பாட்டு ரீதியான முறையில் பதிலளித்தனர். LSSP யின் வரலாற்றுத் துரோகம் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கான அதன் அர்த்தம் பற்றிய உள்கட்சி கலந்துரையாடலை அது கோரியது. ஜூன் 30, 1964 அன்று, அது ஒரு பலபக்கங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. இது கட்சி உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்டது, அத்தகைய கலந்துரையாடல் ஏன் அவசரமாக தேவைப்படுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டியது. இந்தக் குற்றத்திற்காக, வொல்ஃபோர்த், ஃபிரெட் மசெலிஸ் மற்றும் ஏழு பேர் SWP உறுப்பினர் பதவியிலிருந்து 10 நாட்களுக்குப் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சிறுபான்மையினரால் வெளியிடப்பட்ட அறிக்கை சற்று நீளமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி இவ்வாறுள்ளது:

1961 முதல் 1963 வரையிலான முழு காலகட்டத்திலும், அனைத்துலகக் குழுவுடனான அரசியல் ஐக்கியத்துடன், நான்காம் அகிலத்தின் உண்மையான மறுஇணைப்புக்கு முன்னர் முழுமையான அரசியல் கலந்துரையாடல் இல்லாமல் நான்காம் அகிலத்தை மீண்டும் ஒன்றிணைப்பது பேரழிவிற்கும், சர்வதேச இயக்கம் மற்றும் இங்குள்ள கட்சியின் மேலும் சிதைவுக்கும் வழிவகுக்கும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். எமது நிலைப்பாடு முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. …

எமது கட்சி மற்றும் அது தற்போது அரசியல் ஐக்கியம் கொண்டிருக்கும் சர்வதேச உருவாக்கம் ஆகியவற்றில் இருந்து பிரித்துவிடும் அரசியல், தத்துவார்த்த மற்றும் வழிமுறை நெருக்கடியை எதிர்கொள்ள இனியும் மறுப்பு இருக்க முடியாது. கட்சியின் உயிர்வாழ்விற்காக அனைத்து கிளைகளிலும் இந்தக் கேள்விகள் பற்றிய முழுமையான கலந்துரையாடல் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மாநாட்டிற்கு முந்திய காலகட்டங்களுக்கு இடையில் இத்தகைய கலந்துரையாடல் ஒரு அசாதாரண நடவடிக்கை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒரு நெருக்கடியை எதிர்கொள்வதால் துல்லியமாக அத்தகைய கலந்துரையாடல் கோருகிறோம். அமைப்பு ரீதியான விடயங்களில் லெனினிஸ்டுகள் ஒருபோதும் வெறிகொண்டிருப்பவர்களல்ல. இயக்கத்தின் அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு அமைப்பு ரீதியான வடிவங்களில் அவர்கள் விருப்பத்துடன் மாற்றங்களைச் செய்கிறார்கள். கட்சிக்கு முக்கியமான வெளிப்புற வேலைகள் இருக்கும் காலகட்டத்தில் ஒரு பிரயோசனமற்ற கலந்துரையாடலை நிலைநிறுத்துவது போல்ஷிவிக் கட்சிக்கு எதிரான குற்றச் செயலாகும். ஒரு ஆழமான அரசியல் நெருக்கடி கட்சியையும், சர்வதேச இயக்கத்தையும் பிளவுபடுத்தும் போது ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்யாமல் இருப்பது குறைந்தபட்சம் குற்றச் செயலாகும். கட்சியின் உயிர்வாழ்விற்கு அவசியமான ஒரு நிகழ்ச்சிப்போக்கிற்கு எதிராக அவசியமான கட்சி கட்டும் பணியை முன்வைப்பவர்கள் எந்தவொரு வார்த்தையின் அர்த்தத்திலும் லெனினிஸ்டுகள் இல்லை. (அழுத்தம் அசலில்) [33]

அனைத்துலகக் குழு-சார்பு சிறுபான்மை உறுப்பினர்கள் நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை (ACFI) அமைப்பதன் மூலம் அவர்களின் இடைநீக்கத்திற்கு பதிலளித்தனர். இப்போது பப்லோவாத SWP உடனான அதன் முறிவு மிகவும் அடிப்படையான சர்வதேச மற்றும் வரலாற்று கேள்விகளுக்கு மேற்பட்டதாக இருந்தது.

இது தற்செயலானதும் அல்ல, முக்கியமில்லாததும் அல்ல. மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்திற்கான அனைத்துலகக் குழுவின் அணுகுமுறை மற்றும் அந்த அடிப்படையில், அது வொல்ஃபோர்த் தலைமையிலான சிறுபான்மையினருடன் அது பெற்ற உடன்பாட்டிலிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் ஆவணம் வலியுறுத்துவது போல்:

இந்தப் போக்கின் மிகப்பெரும் பலமானது, SWP இன் அரசியல் நெருக்கடியானது ஒரு சர்வதேச பிரச்சினையாக அணுகப்பட வேண்டும் என்று அது அங்கீகரித்தது தான். எனவே SWP க்கு உள்ளான போராட்டம், ஏதாவதொரு அரசியல் பிரச்சினை குறித்த கலந்துரையாடலில் ஒரு தந்திரோபாய அனுகூலத்தை பெறுவதான நிலைப்பாட்டில் இருந்து நடத்தப்பட முடியாது. பதிலாக, கலந்துரையாடலின் அடிப்படை நோக்கமானது நான்காம் அகிலத்தில் புரட்சிகர முன்னோக்கின் முக்கிய பிரச்சினைகள் குறித்த அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவை ஏற்படுத்துவதே ஆகும். [34]

இங்கே மீண்டும் ரொபேர்ட்சன் குழுவுடன் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. ஆரம்பத்தில், ரொபேர்ட்சனும் அவரது ஆதரவாளர்களும் வோல்ஃபோர்த், மசெலிஸ் மற்றும் IC க்கு ஆதரவைக் தெரிவித்த மற்றவர்களுடன் ஒரு சிறுபான்மையினரின் ஒரு பகுதியாக இருந்தனர். ஆனால் அவர்கள் அனைத்துலகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்ய மறுத்து, அதை 'அதிகாரத்துவ மத்தியத்துவம்' என்று பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தனர். இதன் விளைவாக, 1962 இன் ஆரம்பத்தில் SWP க்குள் இருந்த அனைத்துலகக் குழு-சார்பு சிறுபான்மையினர் மீழ ஒழுங்கமைக்கப்பட வேண்டியிருந்தது.

அரசியல் கொள்கையின் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக SWP இலிருந்து விலக்கப்பட்ட அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களுக்கு எதிர்மாறாக வியக்கத்தக்க வகையில், ரொபேர்ட்சன் குழு, வெளி அல்லது பகிரங்கவேலைகளின் மூலம் தனது பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளாக பார்த்தமையினால் SWP இன் கட்டுப்பாட்டை மீறியதற்காக, அது 1963 இன் பிற்பகுதியில் SWP இலிருந்து வெளியேற்றப்பட்டது. இனப் பிரிவினை மற்றும் ஆபிரிக்க அமெரிக்க சிறுபான்மையினரின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவையே அமெரிக்கப் புரட்சியின் முக்கிய பிரச்சினை என்ற SWP இன் நிலைப்பாடு என்பதுடன் இது தொடர்புபட்டிருந்தது.

ஆயினும்கூட, ACFI ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது ஸ்பார்டசிஸ்ட் என்று அழைக்கப்படும் ரொபேர்ட்சன் குழுவானது, அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ரீதியாக ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து கூறிவந்த நிலைமைகளின் கீழ், ஹீலியும் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் அமெரிக்காவில் இரண்டு சுய-பிரகடனம் செய்த அனைத்துலகக் குழு-சார்பு போக்குகளை ஒரு கொள்கை ரீதியான இணைவை நோக்கி செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் இக்கூற்றை பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றனர். இதன் விளைவாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 1966 மாநாட்டில் பங்கேற்க ஸ்பார்டசிஸ்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சில தோழர்கள் காங்கிரஸில் ரொபேர்ட்சனின் ஆத்திரமூட்டும் நடத்தையை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, அவர் அதன் கட்டுப்பாட்டை மீறினார். இது முழுக்க முழுக்க ரொபேர்ட்சன் குழுவின் முந்தைய நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாக இருந்ததுடன் மற்றும் ரொபேர்ட்சனைச் சுற்றியிருந்த ஒரு குட்டி-முதலாளித்துவ தேசியவாதக் குழுவாக அதன் அரசியல் தோற்றத்திற்கு பொருத்தமானதாக இருந்தது என்பதை எடுத்துக்காட்ட உதவியது.

இது மிகவும் முக்கியமானது, பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தை பற்றிய அனைத்துலகக் குழுவின் மதிப்பீட்டிற்கு ரொபேர்ட்சன் மற்றும் ஸ்பார்டசிஸ்ட்டின் எதிர்ப்பானது, 1964 இல் LSSP இன் மாபெரும் காட்டிக்கொடுப்பின் வேர்களும் உலக வரலாற்று முக்கியத்துவமும், ஒரு முக்கிய அங்கமாக இருந்தது.

பண்டாரநாயக்கா அம்மையார் கூறியது போல், ஐக்கிய செயலகத்தின் இலங்கைப் பிரிவு முதலாளித்துவத்தை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு அழைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் ஏப்ரல் 1966 இல், பப்லோவாதத்தின் எதிர்ப்புரட்சிகர பங்கு மற்றும் அதற்கு எதிரான போராட்டத்தின் அவசரம் பற்றிய ICFI இன் மதிப்பீட்டை சவால் செய்ய ரொபேர்ட்சன் அனைத்துலகக் குழுவின் மூன்றாம் மாநாட்டு அரங்கத்தை பயன்படுத்திக் கொண்டார்.

ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகியவற்றிற்கு முட்டுக் கொடுப்பதற்குப் பணியாற்றிய பப்லோவாத திருத்தல்வாதிகளையே உலக ஏகாதிபத்தியம் அதிகளவில் சார்ந்துள்ளது என்ற அனைத்துலகக் குழுவின் வலியுறுத்தல் தொடர்பான முக்கிய விடயத்தை ரொபேர்ட்சன் எடுத்தார். ஸ்பார்டசிஸ்ட் தலைவர் பின்வருமாறு அறிவித்தார், “முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடி மிகவும் கூர்மையாகவும் ஆழமாகவும் உள்ளது, எனவே தொழிலாளர்களை அடக்குவதற்கு ட்ரொட்ஸ்கிச திருத்தல்வாதம் தேவை, இது இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் சீரழிவுக்கு ஒப்பாகும் என்ற கருத்திலிருந்து ஆரம்பிக்கின்றோம். இத்தகைய தவறான மதிப்பீட்டை அதன் ஆரம்பப் புள்ளியாக கொண்டு நமது தற்போதைய முக்கியத்துவத்தை பற்றிய மகத்தான மிகையான மதிப்பீட்டைக் கொண்டிருக்கும், மேலும் அதற்கேற்ப நோக்குநிலையற்றதாகவும் உள்ளது.” [35]

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக ஆவணம் குறிப்பிடுவது போல்:

மார்க்சிசத்தை குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கிடம் இருந்து தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரிக்கும் அனைத்தும் இந்த அறிக்கையில் சுருங்கக் கூறப்பட்டுள்ளது. சாராம்சத்தில், நான்காம் அகிலத்துக்குள்ளான மோதலின் புறநிலை சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை ரொபேர்ட்சன் மறுத்துக் கொண்டிருந்தார். திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் போல்ஷ்விக் கட்சியை லெனின் கட்டியது, மற்றும் பின்னர் ஸ்ராலினிசம் மற்றும் மத்தியவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் ஆகியவற்றின் அனைத்து பாடங்களும் புறக்கணிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்திலான பெரும் அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிப்போக்குகளுடன் மிகவும் தெளிவானதொரு தொடர்பை கொண்ட நான்காம் அகிலத்துக்குள் பப்லோவாதத்துடனான நீண்ட போராட்டமானது ரொபேர்ட்சனால் ஏறக்குறைய பல்வேறு தனிநபர்களுக்கு இடையிலான ஒரு அற்ப மோதல் என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுவிட்டது. [36]

குட்டி-முதலாளித்துவ தேசியவாத ஸ்பார்டசிசக் குழுவிலிருந்து அரசியல் வேறுபாடும் தனிமைப்படலும், ICFI இன் அமெரிக்க ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட போக்கின் சர்வதேசியத் தன்மையையும் பாட்டாளி வர்க்க வர்க்க நோக்குநிலையையும் ஸ்தாபிப்பதில் ஒரு முக்கிய கூறுபாடாக இருந்தது.

ICFI, வேர்க்கர்ஸ் லீக் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான தீவிர அகநிலைவாத மற்றும் குரோதத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு தீவிர ஸ்ராலினிச சார்பு பப்லோவாதக் குழுவாக ஸ்பார்டசிஸ்ட் லீக்கின் அடுத்தடுத்த பரிணாமம் இந்த விரிவுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இங்கே நான், பூகோளமயமாக்கலும் சர்வதேச தொழிலாள வர்க்கமும்: ஒரு மார்க்சிச மதிப்பீடு, என்ற நூலை மட்டுமே குறிப்பிடுவேன், இது ஸ்பார்டசிஸ்ட் லீக்கின் தேசியவாத அரசியலைப் மிக விரிவாக பகுப்பாய்வு செய்ததன் மூலம், முதலாளித்துவ பூகோளமயமாக்கல் குறித்து ICFI செய்த முக்கிய பகுப்பாய்வை மேலும் விரிவுபடுத்தி, உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு புதிய உறுதிப்பாட்டையும் சரியான தன்மையையும் சேர்த்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவிய 1998 இல் இது வெளியிடப்பட்டமை தற்செயல் நிகழ்வு அல்ல.

நவம்பர் 1966 இல், அனைத்துலகக் குழுவின் மூன்றாம் மாநாட்டு படிப்பினைகளின் அடிப்படையில், ACFI தன்னை வேர்க்கர்ஸ் லீக்காக மாற்றிக்கொண்டது. இவ்வாறு, SWP பப்லோவாத கலைப்புவாதத்தை பின்பற்றுவதற்கு எதிராக SLL தலைமையிலான போராட்டத்தின் விளைவாக, உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி பாதுகாக்கப்பட்டது.

முடிவுரை

தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால், இலங்கையில் நடந்த மாபெரும் காட்டிக்கொடுப்பானது பப்லோவாத திருத்தல்வாதத்தின் ஆகஸ்ட் 4, 1914 ஆகும். அங்கே நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை கைவிட்டு தேசிய சந்தர்ப்பவாதத்தில் இறங்கியதன் முழு விளைவுகளும் அப்பட்டமாக வெளிக்கொணரப்பட்டன.

இது பப்லோவாத திருத்தல்வாதத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை மறுக்கமுடியாத வகையில் நிரூபித்தது. 1968 மற்றும் 1975 க்கு இடையில் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய புரட்சிகர தாக்குதலை அரசியல்ரீதியாக மூச்சுத் திணறடிப்பதில் ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் உதவுவதில் ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் நிலை அமைப்பாக பப்லோவாதிகள் வகிக்கும் பாத்திரத்தை இலங்கையின் நிகழ்வுகள் முன்னறிவித்தன.

ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டியது காட்டிக்கொடுப்பை மட்டுமல்ல. அதற்குக் காரணமான அரசியலும் எதிர்க்கப்பட்டது. 1963 கொள்கையற்ற மறுஐக்கியத்திற்கு எதிரான போராட்டத்தில், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளும், SWP யில் உள்ள IC-க்கு ஆதரவான சிறுபான்மையினரில் உள்ள அவர்களது ஆதரவாளர்களும் இது அரசியல் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் என்று திரும்பத் திரும்ப எச்சரித்தனர். மாபெரும் காட்டிக்கொடுப்புக்குப் பின்னர், IC அதை உலக தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய அனுபவமாக மாற்றுவதற்கும், நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் மையத்தில் அதன் படிப்பினைகளை வைப்பதற்கும் போராடியது.

1950களின் நடுப்பகுதியில் தொடங்கி, பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிந்து, 1963ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்ட SWP தலைமையின் துரித அரசியல் பின்வாங்கல் தீவிரமடைந்து, உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.

இருப்பினும், SLL இன் தலைமையின் கீழ், அனைத்துலகக் குழு ஒரு எதிர் தாக்குதலை நடத்தியது. அவ்வாறு செய்வதன் மூலம், வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் முக்கிய பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட்ட சக்திவாய்ந்த அரசியல்-கோட்பாட்டு தாக்கங்களை உருவாக்கியது. நான்காம் அகிலத்தின் வரலாற்றில் முக்கியமான இரண்டு நாடுகளான அமெரிக்காவிலும் இலங்கையிலும் மற்றும் உலகின் இரு பகுதிகளான வட அமெரிக்கா, உலக ஏகாதிபத்தியத்தின் மையம் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் முக்கிய போர்க்களமாக உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தெற்காசியாவில் இன்று புதிய பிரிவுகளை கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களை அமைத்தலும் இதில் அடங்கும்.

WRP உடனான 1982-86 பிளவு மற்றும் அதன் உடனடி விளைவுகளில் வேர்க்கர்ஸ் லீக் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வகித்த பாத்திரத்தில் தவிர்க்கக் கூடியது எதுவுமில்லை. எவ்வாறாயினும், அவர்கள் ஆற்றிய முன்னணிப் பாத்திரம், மறுஐக்கியம் மற்றும் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு எதிரான அனைத்துலக் குழுவின் போராட்டத்தை தொடர்ந்து, அவர்களின் அடிப்படையாக இருந்த சக்திவாய்ந்த ட்ரொட்ஸ்கிச மரபுகளுடன் இணைக்கப்பட்டது.

ஜூலை 20, 2022 அன்று, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி 'ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!' என்ற தலைப்பில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் வெறுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்திலிருந்து துரத்தி, தீவைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருக்கும் புரட்சிகர நெருக்கடியை உருவாக்கிய வெகுஜன எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை வழிநடத்துவதற்கான ஒரு புரட்சிகர மூலோபாயத்தை அது கோடிட்டுக் காட்டியது. அதன் ஒரு பத்தி பின்வருமாறு கூறுகிறது:

ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றிய பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்த சோசலிச சமத்துவக் கட்சி, 1964இல் ட்ரொட்ஸ்கிசத்தின் இன்றியமையாத அரசியல் கோட்பாடுகளை லங்கா சம சமாஜக் கட்சி பேரழிவுகரமாக காட்டிக் கொடுத்ததன் கசப்பான அரசியல் படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொண்டது. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த '21 அம்ச கோரிக்கைகள்' இயக்கத்திற்கு முகங்கொடுத்த முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க, முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுகொடுக்க லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்களின் பக்கம் திரும்பினார். பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ 'சிங்களவர்களுக்கு முதலிடம்' என்ற அரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி நுழைந்துகொண்டமை '21 அம்ச கோரிக்கைகள்' இயக்கத்தின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது வெகுஜனங்களை நம்பிக்கையிழக்கச் செய்து, வர்க்கப் போராட்டத்தின் இழப்பில் இன-மொழிரீதியான மோதல்களை ஊக்குவித்ததுடன், பிற்போக்கு இனவாத அரசியலுக்கும் பல தசாப்தகால உள்நாட்டுப் போரின் ஆதிக்கத்திற்கும் வழி வகுத்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் பாதையில் சோசலிச சமத்துவக் கட்சி செல்லப் போவதில்லை. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அனைத்து வகையான நேரடி மற்றும் மறைமுக ஆதரவையும் நாங்கள் நிராகரிக்கிறோம். [37]

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி, வெகுஜனங்களின் உணர்வு மற்றும் கட்சியின் பணிகள் பற்றிய அதன் பகுப்பாய்வில், அறிக்கை 1917 அக்டோபர் புரட்சி மற்றும் ஸ்பானியப் புரட்சியின் அனுபவத்தையும் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. இது நிச்சயமாக, உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான நெருக்கடி பற்றிய அனைத்துலக் குழுவின் பகுப்பாய்வு மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் இது ஐந்தாவது கட்டம் என்ற நமது புரிதலால் உயிர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை தீவிர சர்வதேச ஒத்துழைப்பின் விளைவும், மேலும் தோழர் விஜே கடைசியாக இணைந்து பணியாற்றியதுமாகும். இது நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் உலக தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் பற்றிய ICFI இன் அணுகுமுறையை உள்ளடக்கியுள்ளதுடன், வளர்ந்து வரும் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சிக்கு புரட்சிகர தலைமையை வழங்குவதில் அதன் அனைத்து பிரிவுகளினதும், ஆதரவுப் பிரிவுகளினதும் பணியை உயிரூட்டும்.

குறிப்புகள்

[1] Letter of the National Committee of the SLL to the National Committee of the SWP, Jan. 2, 1961—Trotskyism versus Revisionism, Volume 3, p. 49.

[2] Trotskyism versus Revisionism, Volume 4, p. 255.

[3] Leon Trotsky, “Open Letter to the Workers of India,” https://www.marxists.org/archive/trotsky/1939/07/india.htm

[4] As cited in “Editorial,” Fourth International, Vol. 14, No. 1 (July 1987), pp.vii-viii.

[5] “The Situation in Sri Lanka and the Political Tasks of the Revolutionary Communist League,” https://www.wsws.org/en/special/library/fi-15-1/05.html

[6] As cited in The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka), p. 42.

[7] Ibid., p. 50.

[8] As cited in David North, The Heritage We Defend, p. 193.

[9] James P. Cannon to L. Goonewardene, Feb. 23, 1954, Trotskyism versus Revisionism, Vol. 2, p. 106.

[10] Ibid., p. 89.

[11] Ibid., p. 91.

[12] Ibid., p. 113.

[13] As cited in The Heritage We Defend, pp. 260-61.

[14] G. Healy to James P. Cannon, May 10, 1957, Trotskyism versus Revisionism, Vol. 3, p. 31.

[15] As cited in The Heritage We Defend, pp. 398-399.

[16] Ibid., p. 399.

[17] G. Healy to the National Committee of the SWP, June 12, 1963, Trotskyism versus Revisionism, Vol. 4, p. 162.

[18] “Dynamics of World Revolution,” June 1963, https://www.marxists.org/history/etol/document/fi/1963-1985/usfi/7thWC/usfi01.htm

[19] As cited in, G. Healy, “Ceylon the Great Betrayal,” Trotskyism versus Revisionism, Vol. 4, pp. 233-34.

[20] “The LSSP’s Great Betrayal, Part 3” https://www.wsws.org/en/articles/2014/10/14/lssp-s14.html

[21] As cited in The Heritage We Defend, p. 401.

[22] As cited in “The Great Betrayal,” Trotskyism versus Revisionism, Vol. 4, p. 235.

[23] Ibid., p. 241.

[24] Letter from the IEC (Pabloite) to members of the LSSP, May 25, 1964, Trotskyism versus Revisionism, Vol. 4, p. 265.

[25] Resolution of the ‘Centre’ Group to the LSSP Congress, June 6-7, 1964, Trotskyism versus Revisionism, Vol. 4, p. 257.

[26] Resolution of the ‘Revolutionary Minority’ to the LSSP Congress, June 6-7, 1964, Trotskyism versus Revisionism, Vol. 4, p. 256.

[27] July 5, 1964 IC Statement, Trotskyism versus Revisionism, Volume 4, p. 255.

[28] Trotskyism versus Revisionism, Volume 4, p. 245.

[29] “Comrade Wije Dias: A Fighter for Trotskyism (August 27, 1941-July 27, 2022),” https://www.wsws.org/en/articles/2022/07/28/pers-j28.html

[30] Les fondations historiques et internationales du SEP (Sri Lanka), section 17-15, p. 81.

[31] As cited in Ibid., section 17-16, pp. 81-82.

[32] Open Letter to Trotskyists Throughout the World-1953, https://www.wsws.org/en/articles/2008/10/open-o21.html

[33] As cited in The Heritage We Defend, pp. 403-4.

[34] The Historical and International Foundations of the SEP (US), p. 85, https://www.wsws.org/en/special/library/foundations-us/38.html

[35] As cited in Ibid., p. 88 https://www.wsws.org/en/special/library/foundations-us/39.html

[36] Ibid.

[37] https://www.wsws.org/en/articles/2022/07/21/pers-j21.html

Loading