241. 1995 யூன் மாதம் வேர்க்கர்ஸ் லீக் தன்னை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றிக்கொள்ளும் ஒரு நிகழ்வினை ஆரம்பித்தது. இந்த மாற்றமானது ஒரு குறிப்பிட்ட காலத்தினூடாக இடம்பெறும் என அது எதிர்பார்த்தது. இந்த மாற்றமானது பெயரை மட்டும் மாற்றிக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டதொன்றல்ல, மாறாக அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவினை அபிவிருத்தி செய்வதையும் மற்றும் நடைமுறையிலிருந்து வந்த அதன் நீண்ட கால வேலைமுறைகளையும் மாற்றிக்கொள்வதுடன் தொடர்புபட்டதாகும். கழகங்களிலுருந்து கட்சியாகும் மாற்றம் ஆரம்பித்ததுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பகுதிகளுக்கு இடையிலான நெருக்கமான கூட்டுழைப்பும் அபிவிருத்தியடைந்தது. இப்பிரிவினர் இயங்கிக்கொண்டிருந்த தமது நாடுகளிலும் இதே மாற்றமடையும் போக்கினை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தனர். ஒரு கழகம் என்பதிலிருந்து ஒரு அரசியல் கட்சியாக மாற்றமடைவது என்பது உடனடி புறநிலை காரணிகளில் ஏற்பட்ட அடிப்படையான தன்மையின்[பண்பின்] மாற்றத்தினால் மட்டுமல்லாது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வரலாற்று உள்ளடக்கத்தின் மாற்றத்தினாலும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானமானது, 2ம் உலக யுத்தத்திற்கு பின்னான சமநிலையின் உடைவில் வேரூன்றியிருந்த தொழிலாள வர்ககத்தின் பழைய பரந்த இயக்கங்களின் உடைவும், மதிப்பிழப்பும் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் அரசியல் ஒருங்கிணையும் நிகழ்போக்கு ஒன்றினை உந்திவிட்டுள்ளது என்ற வேர்க்கர்ஸ் லீக்கினதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் மதிப்பீட்டை வெளிப்படுத்தியது.
உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் அபிவிருத்தியும் ஒரு புறநிலையான வரலாற்று நிகழ்போக்கு என்ற வகையில் வர்க்கப் போராட்டமுமே எமது நடவடிக்கைகள் அபிவிருத்தியடையும் அமைப்பு ரீதியான வடிவத்தை தீர்மானிக்கின்றன. இந்த வடிவங்களும், இதனூடாக வெளிப்படுத்தப்படும் தொழிலாள வர்க்கத்தினுடான அதன் உறவும் அவை கிளர்ந்தெழும் மற்றும் அபிவிருத்தியடையும் வரலாற்று நிலமைகளுடன் ஒரு விஷேடமான உறவை கொண்டுள்ளன. 1959 இல் பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து 1966 இல் வேர்க்கர்ஸ் லீக், 1971 இல் புன்ட் சோசலிட்ஷர் ஆர்பைற்றர் ஜேர்மனியிலும், 1972 இல் சோசலிச தொழிலாளர் கழகம் அவுஸ்திரேலியாவிலும் கழகங்களாக உருவாகியமை ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளுடனும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியின் மூலோபாய கருத்துகளுடனும் தொடர்புபட்டவையாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்த ஆரம்ப காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்ட மத்திய மூலோபாய பிரச்சனை தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பகுதியினர் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கிய தீவிரமான போர்க்குணமிக்க கீழ்ப்படிவாகும். எனவே தமது தந்திரோபாயங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், எமது பகுதிகளின் அரசியல் செயற்பாடுகள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய, புதிய மறுதகமைவு இந்த இயக்கங்களில் உள்ள மிகவும் வர்க்க நனவு கொண்டதும் மற்றும் அரசியல் ரீதியாக தீவிரமான பிரிவினர் மத்தியில் உருவாகும் தீவிரமயமாக்கல் போக்கினை ஆரம்ப புள்ளியாக கொண்டிருக்கும் என்பதை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த இயக்கத்தினுள்ளே, சமூக ஜனநாயகத்திற்கும் மற்றும் ஸ்ராலினிசத்திற்கும் எதிரான மிகவும் சமரசமற்ற எதிர்ப்பாளர்களாக அனைத்துலகக் குழுவின் பகுதிகள் ஒரு ஊக்கி போன்ற பங்கினை வகிப்பர் எனவும், இது ஒரு பாரிய புரட்சிகர கட்சியை ஸ்தாபிப்பதற்கான உண்மையான சாத்தியப்பாடுகளை உருவாக்கும் என கருதப்பட்டது.[140]
242. சோசலிச சமத்துவக் கட்சியின் உருவாக்கமானது தொழிலாள வர்க்கத்திற்கும் மார்க்சிச இயக்கத்திற்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தது:
நாங்கள் AFL-CIO இன் உடைவிலிருந்து பொருத்தமான முடிவுகளை எடுத்து கட்சியின் புதிய கடமைகளை சரியாக உருவகப்படுத்தவேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தலைமை இல்லையெனில் அது எமது கட்சியால் வழங்கப்பட வேண்டும். பரந்துபட்ட தொழிலாள வர்ககத்திற்கு ஒரு புதியபாதை திறக்கப்படவேண்டுமானால் அது எமது கட்சியால் திறக்கப்பட வேண்டும். தலைமைப் பிரச்சனை சாதுர்யமான தந்திரோபாயங்களின் அடிப்படையில் தீர்க்கப்பட முடியாது. தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்கு வேறுயாராவது அந்த தலைமையை வழங்குங்கள் என நாங்கள் ''கோரிக்கை" விடுக்க முடியாது. ஒரு புதிய கட்சி வேண்டுமானால் அது கட்டப்படவேண்டும் நாங்கள் தான் அதைக் கட்டி எழுப்பவேண்டும்.[141]