179. 1960கள் மற்றும் 1970களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது வேர்க்கர்ஸ் லீக்கின் மீது ஒரு தீவிரமான மற்றும் அதீதமான சாதகமான ஆதிக்கத்தை செலுத்தியது. வேர்க்கர்ஸ் லீக்கின் எழுச்சியும் மற்றும் ஆரம்ப கட்ட அபிவிருத்தியும் சோசலிச தொழிலாளர் கழகம், மற்றும் அனைத்துக்கும் மேலாக, அதன் முக்கிய தலைவர் ஜெர்ரி ஹீலியின் அரசியல் ரீதியாக மதிப்பிடமுடியாத அனுபவம் இல்லையென்றால் சாத்தியப்பட்டு இருக்காது என்று கூறினால் அது மிகையல்ல. இருந்தும், வொல்ஃபோர்த்துடனான உடைவுக்கு பிந்தைய காலகட்டத்தில், வேர்க்கர்ஸ் லீக்கின் அபிவிருத்தியானது தொழிலாளர் புரட்சிக் கட்சியிலிருந்த ஸ்தானத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதொரு வகையில் முன்சென்றது. முக்கிய வேறுபாடானது வேர்க்கர்ஸ் லீக்கின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுக்கும் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளுக்கும் அளித்த கவனத்தில் அடங்கியிருந்தது.
180. வொல்போர்த்துடனான உடைவுக்கு பின்னர், வேர்க்கர்ஸ் லீக் தனது பணியை தொழிலாள வர்க்கத்தை நோக்கி உறுதியாக நோக்குநிலைப்படுத்தியது. 1970களின் மத்தியில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க பிரிவுகளில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் UMWA இன் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களிடையேயான போராட்டங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இருப்பை உருவாக்க தொடங்கியது. 1978ல் தனது அரசியல் மையத்தை டெட்ராயிட்டுக்கு மாற்ற வேர்க்கர்ஸ் லீக் முடிவு செய்தது. இந்த இடமாற்றத்தின் நோக்கமானது கட்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை மற்றும் போராட்டங்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான இணைப்பை ஸ்தாபிப்பதாகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வேர்க்கர்ஸ் லீக்கும் மற்றும் அதன் செய்தித்தாளான, The Bulletin ம், தொழிலாள வர்க்கத்தின் முக்கிய போராட்டங்களில் முக்கிய பங்கினை ஆற்றின. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவினர், Phelps Dodge Cooper சுரங்கத் தொழிலாளர்கள், Greyhound ஓட்டுநர்கள், Hormel தொழிலாளர்கள் ஆகியோர் நடத்திய வேலைநிறுத்தங்கள், மற்றும் மேற்கு வேர்ஜினியா மற்றும் கென்டக்கியில் சுரங்க வயல்களில் நடந்த எண்ணிலடங்கா போராட்டங்கள் இருந்தபோதிலும் இந்த அனைத்து போராட்டங்களும் தொழிற்சங்க போர்க்குணத்தின் கொண்டாட்ட தருணங்களாக பார்க்கப்படவில்லை, மாறாக அத்தியாவசியமான முறையில் தொழிலாள வர்க்கத்துக்குள் சோசலிச நனவு மற்றும் மார்க்சிச தலைமையின் அபிவிருத்தியை அவசியமாக கோரக் கூடிய அரசியல் போராட்டங்களாகவே பார்க்கப்பட்டன. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் லீக்கின் தலையீடுகளின் அபிவிருத்தியானது, இந்த தலையீடுகளை ஒரு தெளிவாக திட்டமிடப்பட்ட மற்றும் திறம்பட்டதான சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தின் மீது அடித்தளமாகக் கொண்டிருப்பதின் அவசியத்தை மிகவும் நனவானதாக்கியது.
181. WRP மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கிற்கு இடையிலான வேறுபாடுகள் 1982 வசந்தகாலத்தில் வெளிப்படையாக எழுந்தன. ரொம் ஹெனஹென் கொலையுண்டதின் ஐந்தாவது ஆண்டு நினைவை அனுசரிக்கும் விதமாக வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், வோர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த், மார்க்சிச இயக்கத்தில் காரியாளர்களுக்கான கல்வியில் வரலாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் எழுதினார்:
காரியாளர் பயிற்சியின் உண்மையான இதயமானது கட்சியில் சேரும் அனைவரும் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று தொடர்ச்சி வெளிப்படுகின்ற புரட்சிகர கோட்பாடுகளுக்கு விழிப்புடன் கீழ்ப்படிதலாகும். 'வரலாற்றுத் தொடர்ச்சி' என்பதன் வழி, நாம் மனதில் கொண்டிருப்பது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், திருத்தல்வாதம் மற்றும் அனைத்து பிற தொழிலாள வர்க்க எதிரிகளுக்கும் எதிரான நமது சர்வதேச இயக்கத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களின் உடைந்து விடாத சங்கிலியே ஆகும்...
திருத்தல்வாதிகள் மற்றும் அனைத்து வகை அரசியல் மோசடி பேர்வழிகளும் வேறுபாடின்றி தங்களது அரசியல் மற்றும் கொள்கைகளை அப்போதைய உடனடியான தேவையின் மீது அடித்தளமாக்குகின்றனர். கோட்பாட்டு கருதுதல்கள் -அதாவது சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு மீதான ஒரு தீவிர ஆய்வு, விதியானால் ஆளப்பெறும் நிகழ்முறையாக அதன் அபிவிருத்தி குறித்த அறிவு, மற்றும் அதிலிருந்து பாய்ந்து, அதன் புறநிலை அனுபவங்கள் மீது தொடர்ச்சியான முக்கிய மறுவேலைப்பாடு- ஆகிய அனைத்தும் இந்த நடைமுறைவாதிகளுக்கு முழுக்க முழுக்க அந்நியப்பட்டவை.
இந்த வரலாற்றின் மொத்தத்தையும் கூட்டாக கிரகிக்க பாடுபடாத ஒரு தலைமை, தொழிலாள வர்க்கத்துக்கான தனது புரட்சிகர பொறுப்புகளை போதுமான அளவு பூர்த்தி செய்ய முடியாது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அபிவிருத்தி குறித்த உண்மையான அறிவு இல்லாமல், இயங்கியல் சடவாதம் குறித்த ஒப்பீடுகள் வெறுமனே பொருளற்றது மட்டுமல்ல; இத்தகைய வெற்று ஒப்பீடுகள் இயங்கியல் வழிமுறையின் ஒரு உண்மையான சிதைவுக்கு பாதையும் வகுத்துவிடுகிறது. தத்துவத்தின் மூலமானது சிந்தனையில் இல்லை மாறாக புறநிலை உலகத்தில் இருக்கிறது. இவ்வாறாக ட்ரொட்ஸ்கிசத்தின் அபிவிருத்தியானது, நமது இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்று ரீதியாக தேற்றப்பட்ட அறிவின் மீதும் முன்வைக்கப்படும் வர்க்க போராட்டத்தின் புதிய அனுபவங்களில் இருந்து முன்செல்கிறது.[98]
182. ஹீலியால் எழுதப்பட்ட "இயங்கியல் சடவாதத்தின் ஆய்வுகள்" எனும் ஒரு சிறுவெளியீட்டின் மீதான ஒரு விரிவான விமர்சனத்தை நோர்த் தொழிலாளர் புரட்சிக் கட்சியிடம் சமர்ப்பித்தார். இந்த விமர்சனமானது, ஹீலியின் இயங்கியல் மீதான கருத்தாக்கம் சடவாதத்தின் ஒரு மறுதலிப்பையும் மற்றும் 1840களின் தொடக்கத்தில் இடது ஹெகலியன்வாதிகள் மீதான தனது விமர்சனத்தில் மார்க்ஸ் வென்ற அகநிலை கருத்துவாத தத்துவ வகைக்கு திரும்பலையும் அடக்கியிருந்ததை ஸ்தாபித்தது. நோர்த் எழுதினார்:
தோழர் ஹீலியின் "இயங்கியல் சடவாதத்தின் ஆய்வுகள்" ஒரு தீர்மானகரமான குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது: இவை அடிப்படையாக ஹெகலிய இயங்கியலின் மீதான சடவாத மறுவேலைப்பாட்டில் மார்க்ஸ் மற்றும் லெனின் இருவரின் சாதனைகளையும் புறக்கணிக்கின்றன. இவ்வாறாக ஹெகல், மார்க்ஸ் எதிர்த்துப் போராடிய இடது ஹெகலியவாதிகளின் வழியில் விமர்சனமற்றமுறையில் அணுகப்படுகிறார்...
ஹெகலியன் இயங்கியல் அது விட்டுச் செல்லப்பட்ட இடத்தில் பயன்படுத்தப்பட முடியாதது என்று மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் பல முறை விடுத்த எச்சரிக்கைகளை தோழர் ஹீலி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறாக, தோழர் ஹீலி அறிகைக்கான நிகழ்வுப்போக்கை ஹெகலியன் தர்க்கத்தில் இருந்து நேரடியாக விளக்க முற்படுகிறார். இது ஒரு தவறான அணுகுமுறை. தர்க்கத்தில் இருந்து அரசின் இயல்பு விளக்கப்படமுடியாததற்கு மேலாக தர்க்கத்தில் இருந்து சிந்தனையில் நிகழ்போக்கு விளக்கப்பட்டு விட முடியாது.....
''ஹெகலை அவரின் கால்களில் நிறுத்துவது" - (இது மார்க்ஸ் ஹெகலை தலைகீழாக நிறுத்தியதற்கு மாறானது'') என்னும் வாக்கிய பிரயோகம் இந்த பணியில் பொதிந்துள்ள ஆழமான அறிவியல் சாதனையை குறைப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடாது. இங்கு சம்பந்தப்பட்டது என்னவெனில் இயற்கையின் விதி, சமூகம் மற்றும் நனவை அறிந்துகொள்வதனூடாக விஞ்ஞானபூர்வமான சடத்துவவாத உலக முன்னோக்கை ஸ்தாபிப்பதற்கு சற்றும் குறைந்ததல்ல. தத்துவத்தின் முதன்மை கவலையானது இனியும் "தர்க்கம் குறித்த கேள்வியல்ல" மாறாக "சடம் குறித்த தர்க்கம்" தான்.
ஹெகலிய தர்க்க முறையானது, அது கொடுக்கப்பட்ட வடிவத்தில் பயன்படுத்தப்பட்டால், முன்-இருக்கும் வகைப்பாடுகளுக்கு பொருந்தும் வகையில் தர்க்க வகைப்பாடுகளின் கையாளல் மற்றும் அனுபவத்தையும் அவதானத்தையும் கொண்ட தகவல்களின் கையாளல் மூலம் தவிர்க்கவியலாமல் நவீன நுட்பவாதத்திற்கே (Sophistry) இட்டுச் செல்லும் என்று மார்க்ஸ் தெளிவாக வெளிப்படுத்தினார்.[99]
183. தன்னுடைய முடிவுரையில், நோர்த் WRP இன் தலைமையின் கீழ் ICFI இன் அரசியல் பரிணாம வளர்ச்சி குறித்த தனது விமர்சனத்தை சுருக்கப்படுத்தினார். நோர்த் எழுதினார்: "ஒரு குறிப்பிட்ட காலமாகவே அனைத்துலக குழுவிற்குள் உருவெடுத்துக் கொண்டிருந்த ஒரு நெருக்கடியை "இயங்கியலில் ஆய்வுகள்" வெளியில் கொண்டு வந்திருக்கிறது. பல வருடங்களுக்கு (எனது கருத்தில், இது 1976 இல் தொடங்கி விட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கியது தான் 1978 இல்) இயங்கியல் சடவாதத்திற்கான மற்றும் பிரச்சாரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்கிற பெயரில், அனைத்துலகக் குழு தொடர்ந்து ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தில் இருந்து விலகிச் சென்றிருக்கிறது". ஹீலியின் தத்துவார்த்த வழிமுறை மீதான விமர்சனம், மத்திய கிழக்கில் முதலாளித்துவ தேசிய ஆட்சிகளுடனான WRP இன் உறவுகள் குறித்த ஆய்வுடன் இணைக்கப்பட்டது. 'இயங்கியலுக்கான போராட்டம்' என்ற பெயரில் தள்ளிவிட்டு மார்க்சிசத்தை கொச்சைப்படுத்துவது, அனைத்துலக குழுவிற்குள்ளாக, குறிப்பாக WRP க்குள்ளாக ஒரு தெளிவானவகையில் சந்தர்ப்பவாத திருப்பத்துடன் இணைந்துள்ளது" என்று எழுதுகிறார் நோர்த். "தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களின் மார்க்சிச ஆதரிப்பானது பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுக்கான ஆய்வுநோக்கற்ற ஆதரவு என்பதைப் போல சந்தர்ப்பவாத பாணியில் எடுத்துரைக்கப்படுகிறது".[100]
184. WRP இன் சீரழிவு குறித்த கூடுதல் திறம்பட்டதொரு ஆய்வினை ஜனவரி-பிப்ரவரி 1984ல் வேர்க்கர்ஸ் லீக் வழங்கியது. WRP இன் பொதுச் செயலாளரான மைக்கல் பண்டாவுக்கு 1984 ஜனவரி 23 தேதியிட்ட கடிதம் ஒன்றில், நோர்த், "வரலாற்று ரீதியாக பப்லோவாதத்துடன் தொடர்புபட்டதாய் இருப்பனவற்றிற்கு ஏறக்குறைய ஒற்றுமைப்பட்டதான அரசியல் நிலைப்பாடுகளை நோக்கியதொரு அரசியல் வழிவிலகலின் வளரும் அறிகுறிகளால் வேர்க்கர்ஸ் லீக்கானது ஆழமாக தொந்திரவுக்காளாகியுள்ளது" என்று தெரிவித்தார். அவர் சுட்டிக் காட்டினார், அனைத்துலக குழுவானது,
....சிறிது காலமாகவே தனது நடைமுறைக்கு வழிகாட்ட ஒரு தெளிவான மற்றும் அரசியல்-ஒருமைப்பட்ட முன்னோக்கு இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அனைத்துலக குழுவின் பகுதிகளை கட்டுவதற்கான முன்னோக்குக்கு பதிலாக, IC இன் மைய கவனமானது பல வருடங்களாக, பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடன் கூட்டணிகளை உருவாக்குவதாக இருக்கிறது. இந்த கூட்டணிகளின் உள்ளடக்கமானது, அரை காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு மையமாக நமது சொந்த படைகளை அபிவிருத்தி செய்வதை நோக்கிய தெளிவான எந்த நோக்குநிலையையும் குறைந்த அளவிலேயே பிரதிபலித்திருக்கிறது. நாம் 1960 களின் தொடக்கத்தில் மிகவும் கடுமையாக தாக்கியதான கியூபா மற்றும் அல்ஜீரியா தொடர்பாக SWP ஆல் முன்செலுத்தப்பட்ட அதே கருத்தாக்கங்கள் நமது சொந்த இதழ்களிலேயே அதிகமான தடவைகள் தோன்றுகின்றன.[101]
185. ICFI க்கு பிப்ரவரி 11, 1984 இல் அளித்த ஒரு அறிக்கையில் நோர்த் வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனத்தினை வலிமையேற்றுகிறார். இந்த அறிக்கை பிரிட்டனில் சீர்திருத்தவாத போக்குகளுடன் கட்சியின் சந்தர்ப்பவாத உறவுகளை சுட்டிக் காட்டியதுடன் சேர்த்து பப்லோவாதத்திற்கு எதிரான IC இன் தசாப்தங்கள் நீண்ட போராட்டத்தின் உள்ளடக்த்திற்குள்ளாக முதலாளித்துவ தேசியவாதத்திற்கு WRP இன் ஏற்றக்கொள்ளலை இடத்தில் வைத்தது. அனைத்துலகக் குழுவானது மார்க்சிஸ்டுகளின் அனைத்து முந்தைய தலைமுறைகளின் அரசியல், தத்துவார்த்த, மற்றும் அமைப்புரீதியான போராட்டங்களின் வழியாக ஸ்தாபிக்கப்பட்ட மரபுகள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும் - இந்த முந்தைய தலைமுறைகளுடன் IC இன் இந்த தொடர்ச்சி உருவாக்கப்பட்டிருக்கும் வழியானது தொழிலாளர் இயக்கத்துள், குறிப்பாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளேயே கூட எழுந்திருக்கும் மார்க்சிச விரோத வகை ஒவ்வொன்றுக்கும் எதிரான போராட்டத்தின் வழியாகும்.[102]
186. 1982 இன் பிற்பகுதியில் பார்ன்ஸால் பிரகடனம் செய்யப்பட்ட, அமெரிக்க SWP இன் வெளிப்படையான நிரந்தர புரட்சி தத்துவத்திற்கான மறுதலிப்பானது, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக ICFI ஆல் நடத்தப்பட்ட போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் இடத்தில், கிரெனடாவில் New Jewel இயக்கம், நிகராகுவாவில் Sandinistas,, எல் சல்வடாரின் Farabundo Marti போன்ற முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களை SWP ஊக்குவித்தது. இந்த உள்ளடக்கத்திற்குள், ICFI இன் அரசியல் அனுபவங்களை ஆய்வதற்கான தேவையை நோர்த் வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் தேசிய இயக்கங்களுடன் அதன் உறவுகளை குறித்து கூறுகையில், நோர்த் தெரிவிக்கிறார்:
1978 மத்தியில், தொழிலாள வர்க்கத்துக்குள் நமது சொந்த படைகளின் உண்மையான கட்டுமானத்துக்கான உரிய பொருத்தமான முன்னோக்கு இன்றி, தேசியவாத ஆட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுடனான உறவுகளை நோக்கிய ஒரு பொதுவான நோக்குநிலை உருவாகிக் கொண்டிருந்தது என்பது தெளிவு. இந்த முதலாளித்துவ தேசியவாதிகளை அரசியல் ஆதரவு அளிக்கப்பட வேண்டிய "ஏகாதிபத்திய எதிர்ப்பு தலைவர்களாக" பார்ப்பதற்கு காரியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினருக்கு அழைப்பு விடுக்கும், ஒரு ஒட்டுமொத்தமான மற்றும் பிழையானதொரு மதிப்பீடு நமது பத்திரிகைகளுக்குள்ளேயே முன்னெப்போதையும் விட வெளிப்படையாக எழும்பத் தொடங்கியது.[103]
187. சதாம் ஹுசைன் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மீது செய்த அடக்குமுறைக்கான - 1979ல் அதன் 21 உறுப்பினர்களை தூக்கிலேற்றியது உட்பட- WRP இன் ஆதரவு; பிப்ரவரி 1979 புரட்சி குறித்து ஆரம்பத்தில் சரியான மதிப்பீட்டிற்கு பின்னர் அயோதுல்லா கோமேனியின் ஈரானிய அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட பாராட்டுகள்; மற்றும் லிபிய ஜமாஹிரியாவின் தலைவரான முஅமார் அல்-கடாபிக்கு 1977 மற்றும் 1983 க்கு இடைப்பட்ட காலத்தில் அளித்த ஆய்வுநோக்கற்ற ஆதரவு இவற்றுக்கான குறிப்பான விமர்சனத்திற்கு நோர்த் தனியிடம் ஒதுக்கினார். தொழிற் கட்சியின் பகுதிகளுடன் - கென் லிவிங்ஸ்டன் மற்றும் ரெட் நைட், மற்றும் தி கிரேட்டர் லண்டன் கவுன்சில் உள்ளிட்டவை– WRP ஸ்தாபித்திருந்த உறவுகளை நோர்த் சுட்டிக் காட்டினார்.
தொழிலாளர் புரட்சிக் கட்சியானது இந்த வேறுபாடுகள் குறித்த ஒரு கலந்துரையாடலில் இறங்க மறுத்தது. அதற்குப் பதிலாக, வேர்க்கஸ் லீக் தனது விமர்சனங்களை தொடர்ந்தால், அதனுடன் உறவுகளை துண்டிக்கப் போவதாக மிரட்டல்களை விடுத்தது. இந்த ஒழுங்கில்லாத மற்றும் சந்தர்ப்பவாத பாதையானது இறுதியில் WRP க்கு சீரழிவான விளைவுகளைக் கொண்டிருந்தது. ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள்ளேயே, 1985 இன் வசந்த காலத்தில், நான்காம் அகிலமும் அனைத்துலகக் குழுவும் தங்களது அடித்தளங்களாக கொண்டிருந்த கோட்பாடுகளில் இருந்துதான ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமான அரசியல் பின்வாங்கலின் விளைவாக தோன்றிய ஒரு அமைப்பு ரீதியான நெருக்கடியால் WRP உலுக்கப்பட்டது. ICFI இன் அரசியல் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள இது மறுத்ததும், முழுக்க தேசியவாத அடிப்படைகளில் சிந்திக்கப்பட்ட அரசியல் நலன்களை இது தொடர்ந்ததும் பிப்ரவரி 1986 இன் பிளவுக்கு இட்டுச் சென்றது.