165. விசாரணையின் ஆரம்ப கட்டங்கள், சமீபத்தில் காப்பகத்தை விட்டு வெளிவந்த ஆவணங்களை வெளிக்கொணர்ந்தன, இவை ட்ரொட்ஸ்கியின் படுகொலை தயாரிப்பு சதியின் பிரம்மாண்ட தன்மையையும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்து பெரிய அரசியல் மையங்களிலும் ஊடுருவ முடிந்த ஏஜென்டுகளால் ஆற்றப்பட்ட உயிரபாய பாத்திரத்தையும் வெளிப்படுத்தின. ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவுக்கு முதன்மை உதவியாளராக ஆன மார்க் ஸ்போரோவ்ஸ்கி போன்ற ஏஜென்டுகளின் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை ICFI வெளிக் கொணர்ந்தது. செடோவ் மற்றும் ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் பிற முன்னணி தலைவர்களை கொன்றழித்ததில் ஸ்போரோவ்ஸ்கி முக்கிய பங்காற்றினார். ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் குறித்த மதிப்பு மிகுந்த தகவல்களை கிரெம்ளினுக்கு வழங்கியதில் முக்கிய பங்காற்றிய ஸ்ராலினிச ஏஜென்டுகளில் இன்னொரு முக்கியமானவர், ஜேம்ஸ் பி.கனனின் அந்தரங்க செயலாளர் சில்வியா கால்ட்வெல். ஆனால் ICFI ஆல் வெளிக்கொணரப்பட்ட மிக முக்கிய தகவலானது ஜோசப் ஹான்சன் நடவடிக்கைகள் குறித்தது. அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகங்கள் மற்றும் தகவல் சுதந்திர சட்டம் இவற்றின் வழி பெறப்பட்ட ஆவணங்கள், ட்ரொட்ஸ்கியின் படுகொலை நடந்து முடிந்த பின்னர் உடனேயே, ஹான்சன் உயர் நிலை அமெரிக்க அரசாங்க ஏஜன்டுகளுடன் ஒரு இரகசிய உறவினை முயன்று ஸ்தாபித்தார் என்பதை வெளிப்படுத்தின. மெக்ஸிகோ நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளிவிவகாரத் துறைக்கு செப்டம்பர் 25, 1940 அன்று அனுப்பப்பட்ட கடிதமான அத்தகையதொரு ஆவணம், ஹான்சன் "நியூயோர்க்கில் இருக்கும் உங்களது நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்பு கொள்ள இவர் விரும்புகிறார், அவரிடம் தண்டனைக்கு இட்டுச் செல்லாத வகையில் இரகசியமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட முடியும் என்றும் தெரிவித்தது.[94]
166. ICFI இன் விசாரணையில் வெளிவந்த முக்கிய பல உண்மைகளில் ஜோசப் ஹான்சன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளாக ஒரு ஏஜன்டாக செயலாற்றியதற்கான தீர்க்கமான ஆதாரமும் ஒன்று. சோசலிச தொழிலாளர் கட்சியில் அரசாங்க கட்டுப்படுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அலன் ஹெல்ஃபான்ட் கொண்டுவந்த சட்டவழக்கில், அதிகாரபூர்வ ஆவணங்களின் வெளியீடு நிர்ப்பந்திக்கப்பட்டு, அவை பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையின் கண்டறிவுகளை உறுதிசெய்தது. இந்த வழக்கின் விளைவாக வெளிவந்த மிக முக்கிய உண்மைகளில் ஒன்று, குறைந்தபட்சம் 1940 களின் மத்தியில் இருந்தே, ஜோசப் ஹான்சன் SWP க்குள் GPU க்காக வேலை பார்த்தார் என்பதை FBI அறிந்து வைத்திருந்திருக்கிறது என்பது. சில்வியா கால்டுவெல்லை (née Callen) வெளிப்படையாக அம்பலப்படுத்திய அதே மனிதர், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் லூயிஸ் புடென்ஸ், இவர் ஸ்ராலினிச ஏஜென்டு என்பதை அடையாளம் காட்டினார். இந்த வெளிப்பாடுகள் ஹான்சனும் SWP தலைமையும் புடென்ஸை ஏன் கடுமையாகக் கண்டித்தனர், கால்டுவெல்லை ஆதரித்தனர் என்பதை தெளிவாக்கின. கால்டுவெல்லுக்கு எதிரான புடென்ஸின் குற்றச்சாட்டுகளின் உண்மையை ஒப்புக் கொள்வது என்பது அவர் ஹான்சனை ஒரு ஏஜென்டாக அடையாளம் காட்டியதற்கு குறிப்பிடத்தக்க நம்பகத்தன்மையை அளித்து விடுமல்லவா. இவ்வாறாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட சில்வியா கால்டுவெல்லின் பெரும் நீதித்துறை சாட்சியம் வெளியாகி, அதில் அவர் SWP இல் ஒரு GPU ஒற்றராக வேலை பார்த்ததை ஒப்புக் கொண்டிருந்தது தெரியவரும் வரையிலும், SWP அவரை "எடுத்துகாட்டுக்குரிய" தோழராக பாதுகாத்துக் கொண்டிருந்தது. ஜோசப் ஹான்சனின் மனைவியான ரெபா ஹான்சன், 1947ம் ஆண்டில் (புடென்ஸின் அம்பலப்படுத்தல்கள் வெளிப்படையாக ஆக்கப்பட்ட அதே ஆண்டு) கட்சியில் இருந்து கால்டுவெல்லின் திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து வெளிப்படையாக பொய் கூறினார். கால்டுவெல் "பழக இனிமையானவர்" என்ற ரெபா ஹான்சன் "குடும்ப கடப்பாடுகள் காரணமாக 1947ல் சில்வியா நியூயோர்க்கை விட்டு வெளியேறியதாக" கூறினார்.[95] ஹெல்ஃபான்ட்டின் வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளித்த SWP இன் தேசிய செயலாளர் ஜக் பார்னெஸ் அறிவித்தார், "துன்புறுத்தல் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் கால்டுவெல் அனுபவித்திருக்கும் விஷயங்களுக்கு பின்னர் அவர் எனது நாயகர்களில் ஒருவராகி விட்டார்".[96]