162. வேர்க்கர்ஸ் லீக்கிலிருந்து வொல்போர்த்தின் வெளியேற்றத்தை சுற்றிய சூழ்நிலைகளில் வரலாறு மற்றும் அரசியலின் சந்திப்பு வெளிப்பாட்டைக் கண்டது. ஆரம்பத்தில். வேர்க்கர்ஸ் லீக் தலைமைக்கோ அல்லது அனைத்துலக குழுவிற்கோ பீல்ட்ஸின் குடும்ப உறவுகள் குறித்து தெரிவிக்காதது இயக்கத்தின் பாதுகாப்பில் ஒரு தீவிர குறைபாடு என்பதை ஒப்புக் கொண்ட வொல்போர்த் -வேர்க்கர்ஸ் லீக்கைவிட்டு வெளியேறியதும்- கட்சியால் எழுப்பப்பட்ட கவலைகள் கொஞ்சம் கூட நியாயப்படுத்த முடியாதவை என்று அறிவித்தார். ஜெரி ஹீலி பாதுகாப்பு விஷயத்தையே சுற்றிச்சுற்றி வந்தது "பைத்தியக்காரத்தனத்தின்" அடையாளம் என்று வொல்போர்த் அறிவித்தார். சோசலிச தொழிலாளர் கட்சியின் முதன்மை அரசியல் தலைவரும், பப்லோவாத இதழான Intercontinental Press இன் ஆசிரியருமான ஜோசப் ஹான்சன் ஹீலியை கடுமையாக விமர்சித்து வொல்போர்த்தின் உதவிக்கு வந்தார். "வொல்போர்த் ஹீலியின் செயல்பாட்டை "பைத்தியக்காரத்தனம்" என்று வர்ணிக்கிறார், "பாதுகாப்பின்மை மனநோய்" எனும் நவீன பதத்தை பயன்படுத்துவது இன்னும் துல்லியமானதாகவும் உகந்ததாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது" என்று ஹான்சன் எழுதினார்.[92]
163. புரட்சிகர சோசலிச இயக்கத்தில் பாதுகாப்புக்கான அவசியத்தை சிறுமைப்படுத்தும் நோக்கிலும், இந்த விஷயத்தை தீவிரமாகக் கருதியவரை புறந்தள்ளும் நோக்கிலுமான வொல்போர்த்துக்கு ஹான்சனின் ஆதரவுத் தலையீடானது மிகப்பெரும் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்த கேள்விகளை எழுப்பியது.
i. தனது சொந்த அமைப்புக்குள்ளேயே பாதுகாப்பு குறித்து வொல்போர்த்தின் அலட்சியமான மனப்போக்கு குறித்து ஹான்சன் ஆதரித்தது என்பது, நிக்சனின் இராஜினாமாவுக்கு பின்னர் தீவிரவாத மற்றும் சோசலிச அமைப்புகள் மீது பிரம்மாண்டமான அரசாங்க கண்காணிப்பு ஒற்றுவேலைகள் குறித்து பெருமளவிலான ஆதாரங்கள் எழுந்த ஒரு காலத்தில் நிகழ்ந்தது. ஹான்சனின் சொந்த அமைப்பும் சுமார் 15 வருட காலம் நீடித்த ஒரு ஒற்று நடவடிக்கையின் இலக்காக இருந்திருந்தது. 1961 மற்றும் 1975ம் ஆண்டுகளுக்கு இடையே SWP போலிஸ் ஏஜென்டுகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களால் நிறைந்ததாக, ஜே.எட்ஜர் ஹூவரின் கீழ் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனால் அமைக்கப்பட்ட COINTELPRO என்பதான நடவடிக்கையுடன் தொடர்புள்ள ஆவணங்கள் வெளிப்படுத்தின.
ii. சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஏஜென்டுகள் நான்காம் அகிலத்துள் ஊடுருவியதன் விளைவாக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது பயங்கர சீரழிவான பாதிப்புக்களை பெற்றது. 1937 மற்றும் 1940 க்கு இடையே நான்காம் அகிலத்தின் தலைமையின் குறிப்பிடத்தக்க பகுதியின் படுகொலையானது இயக்கத்தில் ஊடுருவியிருந்த ஸ்ராலினிச ஏஜென்டுகளால் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
iii. சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாதுகாப்பு குறித்த ஹீலியின் கவலையை "பாதுகாப்பின்மை உணர்வு" என்று அவ முத்திரை குத்திய ஹான்சன், ரெமோன் மெர்காடர் என்னும் ஒரு சோவியத் GPU ஏஜென்டு மூலம் ஆகஸ்டு 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதை கண்டார். கொலை நடந்த தினத்தன்று கோயாகனில் ட்ரொட்ஸ்கியின் வில்லாவிற்குள் மெர்காடரை அனுமதிப்பதற்கு அங்கீகாரமளித்தது இதே ஹான்சன் தான். ட்ரொட்ஸ்கியை அணுகுவதற்கான ஒரு திட்டமாக மெர்காடர் SWP இன் ஒரு இளம் உறுப்பினர் ஒருவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் ஹான்சனுக்கு தெரியும். ட்ரொட்ஸ்கியின் தனிநபர் பாதுகாப்பில் சமரசம் நிகழ்ந்த "மெத்தனத்தன்மை"யை ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு பின்னர் ஜேம்ஸ் பி. கனன் சுட்டிக் காட்டினார். "தலைமைப் பதவிகளில் இருப்பவர்களின் கடந்த காலத்தை கூட நாம் போதுமான அளவு ஆழமாக விசாரித்திருக்கவில்லை - அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள், இன்ன பிறவற்றை. ஒரு புரட்சிகர அமைப்புக்கு அடிப்படையான இத்தகைய கேள்விகள் கடந்த காலத்தில் எப்போது எழுப்பப்பட்ட போதிலும், குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கதற ஆரம்பிப்பார்கள், 'அடக் கடவுளே, நீங்கள் தோழர்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள் ஊடுருவுகிறீர்கள்!' உண்மை, இது தான் அச்சுஅசலாக நாம் செய்து கொண்டிருந்தது, அல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால், செய்ய அச்சுறுத்திக் கொண்டிருந்தது - கடந்த காலத்தில் எதுவும் இதனால் நடக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனமாக நாம் சோதித்திருந்தோம் என்றால் சென்ற காலங்களில் சில மோசமான விஷயங்களை நாம் தவிர்த்திருக்க முடியும்.[93]
164. நான்காம் அகிலத்தின் துயர வரலாறு மற்றும் SWP இன் அரச ஊடுருவல் தொடர்பான நடப்பு உண்மைகளின் பொருளிலும், ஹீலியின் மீதான ஹான்சனின் தாக்குதல் வெறும் தூற்றல் மட்டுமல்ல. இது முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஏஜென்சிகளிடம் இருந்து உண்மையான அச்சுறுத்தல்கள் இருந்த சூழ்நிலையில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் காரியாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கான முயற்சிக்கு குறைந்ததல்ல. ஹான்சன் மற்றும் வொல்போர்த்துக்கு மிகவும் பொருத்தமான பதிலானது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் நான்காம் அகிலத்தின் வரலாற்று அனுபவத்தை மறுஆய்வு செய்வது தான் என்று அனைத்துலகக் குழு முடிவு செய்தது. குறிப்பாக, லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை சூழல்களுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளுக்குள் ஒரு விசாரணையை இது அத்தியாவசியமாக்கியது. மே 1975ம் ஆண்டு தனது ஆறாவது மாநாட்டில், இந்த விசாரணைக்கு முன்முயற்சி எடுக்க ICFI வாக்களித்தது, இதன் முடிவுகள், அதுவரை "பாதுகாப்பும் நான்காம் அகிலமும்" என்னும் தலைப்புடன் வெளியிடப்பட இருந்தன.