156. நவம்பர் 1973 இல் SLL தொழிலாளர் புரட்சிக் கட்சியாக உருமாறியது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அத்தியாவசிய மூலோபாய அனுபவங்களின் கவனமான மறுவேலைப்பாடு மற்றும் கிரகிப்பின் அடிப்படையில் அரசியல்ரீதியாக தயாரிப்பு செய்யப்பட்டிருந்ததாக இல்லை. மாறாக, வெறுப்பை சம்பாதித்திருந்த டோரி பிரதமர் எட்வர்டு ஹீத்தின் அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வந்த தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான ஒரு தந்திரோபாய ரீதியான பதிலிறுப்பாக இது மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி நிறுவப்படும்போது கலந்துகொண்ட அனைத்துலகக் குழுவானது கலந்துரையாடலில் பங்கேற்பதில் இருந்து ஏறக்குறைய SLL ஆல் விலக்கி வைக்கப்பட்டிருந்தது. ஸ்தாபன மாநாட்டுக்கு பின்னர், ஹீத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் மார்ச் 1974 இல் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக இருந்த தீவிர தொழிலாள வர்க்க போர்க்குணம் மற்றும் உக்கிரமான தாக்குதல்களின் இந்த காலத்தில் WRP இன் துரித வளர்ச்சியானது, அமைப்புக்குள்ளாக பெரிதாகிக் கொண்டு வந்த அரசியல் பிரச்சனைகளை ஒரு காலம் வரை மறைத்து வைத்திருந்தது.
157. ஹீத் அரசாங்கத்தின் தோல்வி என்பது, 1973 மற்றும் 1975ம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உலக முதலாளித்துவத்தை நெருக்கிய ஒரு பிரம்மாண்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் ஒரு அத்தியாயம் தான். டாலர்-தங்கம் மாற்று திறனின் முடிவானது ஒரு பணவீக்க சுழற்சியைக் கட்டவிழ்த்தது, இது அமெரிக்க நாணய மதிப்பு மீது ஒரு பொதுவான நம்பிக்கை இழப்பின் மூலம் மோசமடைந்தது. மத்திய கிழக்கில் 1973 அக்டோபரில் போர் வெடித்ததானது OPEC எண்ணெய் விலைகளை நான்கு மடங்காய் உயர்த்த இட்டுச் சென்றது, இது 1930களின் பெரும் மந்த காலத்திற்கு பின்னரான மோசமான தேக்கநிலைக்கு தூண்டியது. ஏப்ரல் 1974ம் ஆண்டு போர்ச்சுகலில், சுமார் அரை நூற்றாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்த சலாசாரின் பாசிச சர்வாதிகாரமானது, ஆபிரிக்காவில் எழுந்த காலனி எதிர்ப்பு கிளர்ச்சிகள் (அங்கோலா மற்றும் மொசாம்பிக்) மற்றும் அதிகரித்த உள்நாட்டு நெருக்கடிகளின் கீழ் திடீரென நொருங்கியது. லிஸ்பனில் முதல் சட்டப்பூர்வமான மே தினம் பல மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு பிரம்மாண்ட பேரணியுடன் அனுசரிக்கப்பட்டது. ஜூலை 1974 இல், 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த கிரீஸின் காட்டுமிராண்டித்தனமான இராணுவ செயலாட்சிக் குழுவானது சீரழிவுக்கு இட்டுச் சென்ற சைப்ரஸ் தலையீட்டை அடுத்து சிதறிச் சரிந்தது. ஆகஸ்ட் 1975ம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் தொடர்பான தகவல்கள் மற்றும் கம்போடியா மீது நிர்வாகம் உத்தரவிட்ட சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக அவையின் நீதித்துறை கமிட்டி கண்டன தீர்மானங்களுக்கு வாக்களித்ததன் காரணமாக ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் பதவி விலக நேரிட்டது. இறுதியாக ஏப்ரல் 1975ல், வியட்நாம் விடுதலைப் படைகள் சைகோனுக்குள் நுழைந்து, தங்களது நாட்டின் ஒருங்கிணைப்பை சாதித்தன, இந்தோசீனாவில் அமெரிக்காவின் நவீன-காலனித்துவவாத நடவடிக்கைகளை ஒரு அவமானகரமான முடிவுக்கும் கொண்டுவந்தன.