Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

பப்லோவாதம், புதிய இடது மற்றும் கெரில்லாவாதம்

142. இதுதவிர, ரொபேர்ட்சன் இந்த கருத்துகளை கூறியிருந்தாலும் கூட, 1966ல் துரிதமாக நெருங்கிக் கொண்டிருந்த சமூக எழுச்சிகளில் முதலாளித்துவ வர்க்கத்தினர் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் இருதரப்பினரும் அவற்றின் மீது நம்பியிருக்கும் வகையில் பப்லோவாதிகள் முக்கியமான அரசியல் முண்டுகோல்களையும் இடைத்தடைகளையும் அமைத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில், வளர்ச்சியுற்று வந்த வியட்நாம்-போர்-எதிர்ப்பு இயக்க விஷயத்தில் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிக்கு துணையாக செயலாற்றுவதில் SWP முக்கிய பங்கினை ஆற்றியது. ஐரோப்பா பூராகவும், 1968ல் எழுந்த சமூக போராட்ட மக்கள் இயக்கங்களை திசை திருப்புவதிலும் வழிவிலகச்செய்வதிலும் குறிப்பிடத்தகுந்த பங்காற்ற இருந்த ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ "புதிய இடது" போக்குகள் இரண்டுக்கும் ஏற்றவாறு பப்லோவாத அமைப்புகள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருந்தன. குறிப்பாக பிரான்சில், பப்லோவாதிகள் அந்த ஆண்டு மே - ஜூனில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்கு வழிவகை செய்து கொடுத்தனர். இது தவிரவும், செக்கோஸ்லேவாக்கியாவின் 1968ம் ஆண்டு "பிராக் வசந்தகாலம்" மற்றும் போலந்தில் தாக்குதல்கள் அலைகள் தெளிவாக விளங்கப்படுத்துவதை போல, ஸ்ராலினிச அரசாங்கங்கள் ஏற்கனவே ஒரு இறுதியான நெருக்கடிக்குள் நுழைந்து கொண்டிருந்தன. அதிகாரத்துவங்கள் சுய சீர்திருத்தம் செய்துகொள்ளும் என்ற தங்களது தத்துவங்களுடன் பப்லோவாத அமைப்புகள், ஸ்ராலினிச அரசாங்கங்களுக்கு எதிராக சமரசப்படுத்தமுடியாத ஒரு போராட்டத்தில் தனது சக்திகளை ஒருமுகப்படுத்துவது மற்றும் அந்த அரசாங்கங்களை தூக்கியெறிவதற்கான தயாரிப்புகளை செய்வது இவற்றிலிருந்து நான்காம் அகிலத்தை திசை திருப்பின. 1960 களின் மத்தியில், ஸ்ராலினிசத்தின் இறுதியான உடைவானது சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இரக்கமின்றி வலதுசாரி மற்றும் முதலாளித்துவ சார்பு ஆட்சிகளின் அமைவுக்கு இட்டுச் செல்லும் என்பது முன்கண்டறியப்பட்டிருக்கவில்லை. உண்மையில், 1960களில், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அடக்குமுறைக்கு எதிராக வளரும் போராட்டங்கள் தங்களது அரசியல் நோக்குநிலையில் இடதுசாரி மற்றும் சோசலிச பண்புடன்தான் இருந்தன. கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம், மற்றும் இந்த விஷயத்தில் சீனாவிலும் வந்த பிந்தைய பிற்போக்கு விளைவானது, ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு பப்லோவாதிகளால் பின்பற்றப்பட்ட பொய்யான மற்றும் பிற்போக்கு கொள்கைகளால் வார்த்தெடுக்கப்பட்ட அரசியல் சூழல்களின் ஒரு தயாரிப்பாகவே இருந்தது.

143. பப்லோவாத காட்டிக்கொடுப்புகளின் பட்டியலில் நாம் சேர்க்க வேண்டிய இன்னொன்று, இலத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய காஸ்ட்ரோவாதம் மற்றும் கெரில்லாவாதத்தை இவர்கள் போற்றிப் புகழ்ந்தது ஆகும். 1970களின் அரசியல் பேரழிவுகள் -சிலி, அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் உருகுவேயில்- பப்லோவாத ஐக்கிய செயலகத்தினால் ஊக்குவிக்கப்பட்ட தத்துவங்கள் மற்றும் கொள்கைகளின் பின்விளைவுகளாகும். தனது காலத்தின் லத்தீன் அமெரிக்க மத்திய-வர்க்க அறிவுஜீவிகளிடையே மிகவும் பொதுவானதாக இருந்த தோற்றமான, தொழிலாள வர்க்கத்தை வெறுப்புணர்வுடன் பார்த்தலால் குறிப்பாக குணநலப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் தோற்றத்தைக் கொண்டிருந்த கியூப தீவிரப்போக்குடையவரான எர்னஸ்டோ "சே" குவாராவினை ஐக்கிய செயலகம் கொண்டாடியதானது ட்ரொட்ஸ்கிசத்தை மறுதலிப்பதற்கான ஒரு அரசியல் சமிக்ஞையளிப்பதாக இருந்தது. ட்ரொட்ஸ்கியை கொன்ற ரெமோன் மெர்கடர் மெக்சிகோ சிறையில் இருந்து 1960ம் ஆண்டு விடுதலையானபோது அவரை கியூபாவுக்கு வரவேற்றவர் இதே சே குவேரா தான் என்ற உண்மையின் மீது பப்லோவாதிகள் வன்மத்துடன் (கடுப்புடன்) கருத்து கூறாமல் இருக்க முடிவெடுத்தனர். இலத்தீன் அமெரிக்காவின் சோசலிச இளைஞர்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டலின் அடிப்படையிலானதொரு மூலோபாயத்திற்கு மாற்றீட்டை கண்டுகொள்ளுமாறு பப்லோவாதிகள் அழைப்பு விடுத்தனர். பொலிவியாவின் பப்லோவாதியான மொஸ்கோஸோ எழுதினார்:

கியூபர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள கெரில்லா முறையானது அனைத்து வளர்ச்சிகுன்றிய நாடுகளுக்கும் பொருந்தக் கூடியது, அதன் வடிவம் ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடலாம் என்றாலும். தீர்க்கப்படாத நிலப்பிரச்சினை கொண்டுள்ள ஒரு பெரும் எண்ணிக்கையிலான விவசாயக் கூட்டம் உள்ள நாடுகளில், கெரில்லாக்கள் தங்களது வலிமையை விவசாயிகளிடம் இருந்து பெறுவார்கள்; கெரில்லா போராட்டமானது இந்த மக்களை சியரா மேஸ்ட்ராவில் தொடங்கி, கியூபாவில் நடந்ததைப் போல கையில் ஆயுதங்களேந்தி தங்களது விவசாய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயலில் இறக்கும். ஆனால் மற்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கமும் மற்றும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நகரங்களின் குட்டி முதலாளித்துவ வர்க்கமும் கெரில்லா சக்திகளை வழங்கும்.[82]


[82]

Fifty Years of World Revolution, ed. Ernest Mandel [New York: Pathfinder Press, 1970], pp. 194-95.