73. ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கையை 1939 ஆகஸ்ட்டில் கைச்சாத்திட்டமையும் அதன் பின்னர் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தமையும் அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியில் ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மாக்ஸ் ஷட்மன், ஜேம்ஸ் பேர்ன்ஹாம் மற்றும் மார்டின் ஏபெர்ன் தலைமையிலான ஒரு அரசியல் கோஷ்டி, சோவியத் ஒன்றியத்தை தொடர்ந்தும் தொழிலாளர் அரசாக குறிப்பிட முடியாது என வாதிட்டது. சோவியத் அரசின் வர்க்கப் பண்பு பற்றிய அவர்களின் வரையறையிலான இந்த மாற்றத்தை தொடர்ந்து, அவர்கள் யுத்தம் நடக்கும் போது சோவியத் ஒன்றியத்தை பாதுகாக்க நான்காம் அகிலம் அழைப்பு விடுக்கக்கூடாது என தெரிவித்தனர். இப்போது பேர்ன்ஹாம் சோவியத் அரசை "அதிகாரத்துவ கூட்டாண்மை" ("Bureaucratic Collectivist") என பண்புமயப்படுத்துகிறார்.
74. மார்க்சிசம் எதிர்பார்த்திராத, புதியதும் முன்னர் இருந்திராததுமான ஒரு சுரண்டல் சமுதாயமான ஸ்ராலினிச ஆட்சியை, "அதிகாரத்துவ கூட்டாண்மை" என பண்புமயப்படுத்துவது நீண்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் மற்றும் வரலாற்று உட்பொருளை கொண்டுள்ளது என ட்ரொட்ஸ்கி பதிலளித்தார். இறுதி ஆய்வுகளில் மார்க்சிச செயல்திட்டத்தின் வரலாற்று இருப்பே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பேர்ன்ஹாமின் கொள்கையின் (பின்னர் சாக்ட்மனாலும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது) அடிநிலையில் உள்ள வாதக் கூற்றானது, தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சமூக சக்தி என்ற அதன் ஆற்றலை இழந்துவிட்டது என்பதாக இருந்தது. நவீன சமுதாயத்தின் அபிவிருத்தி, ஒரு அனைத்துலக தொழிலாள வர்க்க புரட்சியின் அடிப்படையில் அடையப்படும் சோசலிசத்தின் திசையில் வழிநடத்தப்படவில்லை, மாறாக, சமுதாயம் ஒரு நிர்வாகிகள் தட்டால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் இயக்கப்படும் "அதிகாரத்துவ கூட்டாண்மை" வடிவம் ஒன்று தோன்றிக்கொண்டிருக்கின்றது. பேர்ன்ஹாம் கூறுவது சரியானதாக இருந்தால், நவீன வரலாற்றின் செயற்பாடு, சிறப்பாக அது தொழிலாள வர்க்கத்துக்கு வழங்கியுள்ள தனியியல்பின் புரட்சிகர பாத்திரம் பற்றிய மார்க்சிசத்தின் புரிந்துகொள்ளலில் பிழையேற்பட்டுவிட்டது என்ற முடிவை தவிர்த்துக்கொள்வது சாத்தியமானதாக இருக்கவில்லை. இந்த முன்நோக்கானது சோவியத் ஒன்றியம் ஒரு புறம் இருக்க, நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அடித்தளங்கள் மற்றும் சமூக இயக்கவியல் பற்றிய சடவாத ஆய்வின் மீதான நம்பிக்கையின்மையின் ஒப்பாரிக்கும் குறைந்ததல்ல. 1920கள் மற்றும் 1930களின் தோல்விகளின் பின்னர் சோசலிசப் புரட்சி சாத்தியமற்றது என்ற முடிவுக்கு பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மனும் வந்தனர். ட்ரொட்ஸ்கி இந்த காட்சிவாத மற்றும் ஐயுறவுவாத நிலைப்பாட்டை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். மார்க்சிசத்தின் புரட்சிகர முன்நோக்கை நான்காம் அகிலம் நிலைநிறுத்துகிறது என எழுதிய ட்ரொட்ஸ்கி, தொழிலாள வர்க்கம் சந்தித்த தோல்விகள் அதன் வெகுஜன அமைப்புக்களின் அரசியல் காட்டிக்கொடுப்பின் விளைவே என விளக்கினார். இந்த ஆய்வுகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
முரண்பாடான வகையில், மயக்கந்தெளிந்த மற்றும் பீதிகொண்ட போலி-மார்க்சிசத்தின் பலவித பிரதிநிதிகள் அனைவரும், தலைமையின் வங்குரோத்தானது பாட்டாளி வர்க்கம் தமது புரட்சிகர பணியை இட்டுநிரப்ப திராணியற்றிருப்பதை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்ற ஊகத்தில் இருந்தே செயற்படுகின்றனர். எங்களது எதிரிகள் அனைவரும் இந்த சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்தாவிட்டாலும் தீவிர-இடதுகள், மையவாதிகள், அராஜகவாதிகள், ஸ்ராலினிஸ்டுகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை, மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் போன்ற அனைவரும், தோல்விகளுக்கான பொறுப்பை தம்மிடமிருந்து பாட்டாளிகளின் தோள்களில் ஏற்றிவிடுகின்றனர். பாட்டாளிகள் சோசலிச மாற்றத்தை நிறைவேற்றுவதற்கு துல்லியமாக எந்த நிலைமைகளின் கீழ் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை இவர்களில் எவரும் சுட்டிக் காட்டுவதில்லை.[45]
75. வேலைத்திட்டம் சம்பந்தமாக சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) இருந்த முரண்பாடு, சமகால சமூக நடைமுறைகள் பற்றிய தீர்க்கமுடியாத இரு எதிர் நிலைப்பாடுகளை பிரதிபலித்தது என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.
தோல்விகளுக்கான காரணம் பாட்டாளிகளின் சமூகத் தரத்திலேயே வேரூன்றியுள்ளது என்பது சரியானது என நாம் ஏற்றுக்கொண்டால், நவீன சமுதாயத்தின் இருப்பு நிலை நம்பிக்கையற்றது என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்....இரத்தம் தோய்ந்த முதலாளித்துவ அழிவில் இருந்து தம்மை மீட்டுக்கொள்வதற்கு முயற்சிக்கும் உழைக்கும் வெகுஜனங்களின் உடல் ரீதியான, ஆழமான, கட்டுப்படுத்த முடியாத உந்துதலுக்கும், மற்றும் காலங்கடந்த தொழிலாள தலைமையின் பழமைவாத, தேசாபிமான, முற்றிலும் முதலாளித்துவ பண்புக்கும் இடையிலான ஆழமான குரோதத்தை தனது மனதில் தெளிவுபடுத்திக் கொண்டுள்ள ஒருவருக்கு இந்த விடயம் முற்றிலும் வேறுபட்ட விதத்திலேயே முன்வைக்கப்படுகின்றது. நாம் இந்த தவிர்க்க முடியாத இரு நிலைப்பாடுகளில் ஒன்றை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.[46]
76. நான்காம் அகிலத்தின் அடுத்துவந்த வரலாற்றில், அது மீண்டும் மீண்டும் முதலாவது ஊகத்தில் இருந்து செயலாற்றும் பல்வேறு வடிவிலான அரசியல் மற்றும் தத்துவார்த்த போக்குகளை எதிர்கொண்டது. பப்லோவாதத்தின் வடிவிலும் சரி, அல்லது நிரந்தரமாக நம்பிக்கையிழந்த தீவிரவாதிகள் மற்றும் "ஃபிராங்க்பேட் பள்ளியின்" (மார்கூஸெ, அடோனோ, ஹொர்க்ஹைமர் போன்ற) தத்துவவியலாளர்கள் செல்வாக்கு செலுத்தும் "புதிய இடது" போக்குகள் என்றாலும் சரி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதானது அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கத்துக்கு அடித்தளம் அமைத்தது. சாக்ட்மன் மற்றும் பேர்ன்ஹாமை பொறுத்தவரை, அடுத்துவந்த காலத்தில் அவர்களது பரிணாமம் ட்ரொட்ஸ்கியின் ஆய்வை ஒப்புவித்தது. 1940 ஏப்பிரலில் சாக்ட்மனும் பேர்ன்ஹாமும் சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து பிரிந்து "தொழிலாளர் கட்சியை" ஸ்தாபித்தனர். ஒரு மாதத்திற்குள் பேர்ன்ஹாம் தனது சொந்த உருவாக்கத்தில் இருந்தே பிரிந்ததோடு தான் தன்னை தொடர்ந்தும் மார்க்சிசவாதியாகவோ அல்லது சோசலிஸ்டாகவோ கருதவில்லை என பிரகடனம் செய்தார். இது அதிதீவிர வலதுசாரியத்துக்கு துரிதமாக மாறுவதன் தொடக்கத்தை குறித்தது. அவர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான முன்கூட்டித் தாக்கி தனதாக்கிக் கொள்ளும் அணுவாயுத யுத்தத்தின் பரிந்துரையாளராக ஆனதோடு, 1950 அளவில் தோன்றிக்கொண்டிருந்த நவ-பழமைவாத இயக்கத்தின் அடிப்படை கொள்கைவகுப்பாளராகவும் ஆனார். அவரது மரணத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் 1982ல், பேர்ன்ஹாமுக்கு ஜனாதிபதி ரொனால்ட் றேகனால் சுதந்திரத்துக்கான பதக்கம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. சாக்ட்மனை பொறுத்தவரை அவரது இயக்கம் கொஞ்சம் மெதுவாக வலது பக்கம் நகர்ந்துகொண்டிருந்தாலும், அடிப்படையில் எந்தக் குறைவும் இருக்கவில்லை. அவர் கம்யூனிச விரோத AFL-CIO அதிகாரத்துவத்தினதும் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மிகப் பிற்போக்கு குளிர் யுத்த பிரிவினதும் அரசியல் ஆலோசகராக ஆனார். சாக்ட்மன் 1972ல் உயிரிழப்பதற்கு முன்னர், அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீது குண்டுவீசியதை ஆதரித்தார்.