69. நான்காம் அகிலம் 1938 செப்டெம்பரில் அதன் ஸ்தாபக மாநாட்டை நடத்தியமை, சோசலிச இயக்கத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு வரலாற்று மைல் கல்லாகியது. முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் (அதிகாரத்தைக் கைப்பற்றத் தயாராவதற்கு வெகுஜனங்களை இடைமருவு கோரிக்கைகளைச் சூழ அணிதிரட்டுதல்) என்ற அதன் ஸ்தாபக ஆவணம் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டு, சோசலிச இயக்கம் எதிர்கொண்டுள்ள மையப் பணிகள் சுருக்கி கூறப்பட்டது.
அடுத்த வரலாற்று காலப்பகுதியில், ஒரு சோசலிச புரட்சி இல்லாமை, ஒரு பேரழிவாய் மனித இனத்தின் முழுக் கலாச்சாரத்தையும் அச்சுறுத்தும். இம்முறை இப்பொழுது பாட்டாளி வர்க்கத்தினுடையது, அதாவது, முக்கியமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் முறை. மனித இனத்தின் வரலாற்று நெருக்கடி, புரட்சிகர தலைமை நெருக்கடியாக சுருக்கப்பட்டுவிட்டது.[42]
70. ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் பகுதிகளை கட்டியெழுப்புவதே இந்த தலைமை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி. புதிய அகிலத்தைக் கட்டியெழுப்புவது பொருத்தமற்றது, அது "உயர்ந்த சம்பவங்களில்" இருந்து எழ வேண்டும், என வாதிட்ட ஐயுறவாதிகளுக்கும் மையவாதிகளுக்கும் ட்ரொட்ஸ்கி பதிலளித்தார்,
நான்காம் அகிலம் மாபெரும் நிகழ்வுகளினூடாக ஏற்கனவே தோன்றிவிட்டது: வரலாற்றில் இடம்பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தோல்விகளே அந்த மாபெரும் நிகழ்வுகள். இந்தத் தோல்விகளுக்கான காரணத்தினை பழைய தலைமையின் சீரழிவிலும், துரோகத்திலுமே கண்டுகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம், ஒரு தடையைச் சகிக்காது. இரண்டாம் அகிலத்தினை தொடர்ந்து, மூன்றாம் அகிலம் புரட்சியின் நோக்கங்களை பொறுத்தவரை இறந்துவிட்டது. நான்காம் அகிலம் நீடூழி வாழ்க!
ஆனால் இதன் சிருஷ்டியை பிரகடனம் செய்வதற்கான காலம் வந்துவிட்டதா?... சந்தேகப்பிராணிகள் ஓய்ந்தபாடாய் இல்லை. எமது பதில், நான்காம் அகிலத்தினை 'பிரகடனம்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது இருந்து வருகின்றது. போராடுகின்றது. இது பலவீனமானதா? ஆம், இதன் அங்கத்தவர்கள் எண்ணற்றவர்கள் அல்ல. ஏனெனில் இது இன்னமும் இளமையாய் உள்ளது. அவர்கள் முக்கியமாக இன்னமும் காரியாளர்கள். ஆனால் இந்தக் காரியாளர்கள் எதிர்காலத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்தக் காரியாளர்களுக்கு வெளியே இந்தப் பூகோளத்தில் புரட்சிகர என்ற பெயருக்கு பொருத்தமான எந்தவொரு புரட்சிகர நீரோட்டமும் இல்லை.[43]
71. 20ம் நூற்றாண்டின் பின்னரான வரலாறு, நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் தேவை பற்றிய மதிப்பீட்டின் சரியான தன்மையையும் நான்காம் அகிலமே ஒரே தூய்மையான புரட்சிகர தலைமை என்பதையும் நிரூபிக்கும். அந்தக் காலகட்டத்தின் மைய மூலோபாயப் பணி, புறநிலை புரட்சிகர நிலைமைகளின் முதிர்ச்சிக்கும் பாட்டாளி வர்க்கத்தினதும்மற்றும் அதன் முன்னணிப் படையினதும் முதிர்ச்சியின்மைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதாக இருந்தது. இந்தச் சவாலை அடைவதன் பேரில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவை அபிவிருத்தி செய்யவும் மற்றும் அதன் பழைய தலைமையை அம்பலப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, சம்பளம் மற்றும் வேலை நேரத்தின் சரிவு; தொழில், வங்கி மற்றும் விவசாயத்தை தேசியமயமாக்கல்; பாட்டாளிகளை ஆயுதபாணியாக்கல்; தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைத்தல் போன்றவை தொடர்பான ஒரு தொகை பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளை நான்காம் அகிலம் சூத்திரப்படுத்தியது. இந்தக் கோரிக்கைகள், "தொழிலாளர்களின் பரந்த தட்டினரின் இன்றைய நிலைமைகள் மற்றும் இன்றைய நனவில் இருந்து தோன்றி, இறுதி முடிவாக, தொழிலாள வர்க்கம் உறுதியாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும்" ஒரு பாலத்தை அமைக்கும் என ட்ரொட்ஸ்கி எழுதினார்.பின்னைய ஆண்டுகளில், தனிமைப்படுத்தப்பட்ட கோரிக்கைகளை அவற்றின் புரட்சிகர உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து, சோசலிச முன்நோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தை வெற்றிகொள்ளும் போராட்டத்துக்கு மாற்றாக அவற்றை பயன்படுத்துவதன் மூலம், இடைமருவு வேலைத்திட்டத்தை சந்தர்ப்பவாத அடிபணிவுக்கான ஒரு வழிமுறை நூலாக மாற்றிக்கொள்ள திருத்தல்வாதப் போக்குகள் முயற்சிக்கும். இந்த வழியில், தொழிலாள வர்க்கத்தின் பிற்போக்கு நனவுக்கும் பழைய சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தலைமைக்கும் எதிராக போராடுவதற்கு மாறாக, அவற்றுக்கு அடிபணிவதற்கான ஒரு வழிமுறையாக இடைமருவு வேலைத்திட்டத்தில் இருந்து பகுதிகளை எடுத்து அவர்கள் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
72. அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர்களுடன் 1938 மே மாதம் ட்ரொட்ஸ்கி கலந்துரையாடிய போது, புரட்சிகர கட்சியின் வேலைத்திட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் அகநிலை மனப்பாங்கு மற்றும் நிலவும் தொழிலாள வர்க்க நனவின் மட்டத்தை அன்றி, உலக முதலாளித்துவத்தின் புறநிலை அபிவிருத்தியையே அதன் ஆரம்பப் புள்ளியாக கொள்ள வேண்டும் என உறுதியாகக் கூறினார். அவர் வலியுறுத்தியதாவது: "இந்த வேலைத்திட்டம், தொழிலாளர்களின் பின்தங்கிய நிலையைவிட தொழிலாள வர்க்கத்தின் புறநிலைப் பணிகளை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். அது சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலையை அல்ல. அது பின்தங்கியநிலையை வெல்வதற்கான ஒரு கருவியாகும். அதனால் தான், நாம் முதல் வரியில் அமெரிக்கா உட்பட முதலாளித்துவ சமுதாயத்தின் சமூக நெருக்கடியின் ஒட்டுமொத்த தீவிர நிலைமையையும் எமது வேலைத் திட்டத்தில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். எங்களில் தங்கியிராத புறநிலைமைகளை எங்களால் ஒத்தி வைக்கவோ அல்லது திருத்தவோ முடியாது. நெருக்கடியை வெகுஜனங்கள் தீர்ப்பார்கள் என எங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாது; ஆனால் நாம் நிலைமையை உள்ளவாறே கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். அதுவே வேலைத் திட்டத்தின் பணியாகும்."[44]