மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சமீபத்திய தொடர் நேர்காணல்களில், டொனால்ட் ட்ரம்பின் “எல்லை தொடர்பான ஆலோசகரான” ரொம் ஹோமன், வரவிருக்கும் நிர்வாகத்தின் பயங்கரமான பாரிய நாடுகடத்தல் திட்டங்களை கவனத்தில் கொண்டு வருகிறார். ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அதன் கூட்டாளிகள் மத்தியில் இதற்கான பிரதிபலிப்பு மௌனம் காப்பதாக இருந்து வருகின்றபோதிலும், ஹோமனின் அறிக்கைகள், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரலாற்று சமூகக் குற்றத்தைத் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
கடந்த வாரம் CNN தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஹோமன், நாடுகடத்த திட்டமிடப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை அடைத்து வைக்க “குறைந்தபட்சம் 100,000 படுக்கைகள்” கொண்ட கட்டுமான வசதிகளை நிர்மாணிப்பதே தமது நிர்வாகத்தின் உடனடி திட்டங்களில் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்தார். இந்த எண்ணிக்கைக்கு (தற்போதைய தேசிய தடுப்புக்காவல் திறனை விட இது கிட்டத்தட்ட மும்மடங்காகும்) நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களின் வலையமைப்பு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டி வரும். இருப்பினும், இவை முதன்மையாக மக்கள் வசிக்காத தென்மேற்கு பாலைவனத்தில் கட்டப்படும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் பரந்த தளவாட வலைப்பின்னலை ஸ்தாபிப்பதை ஆரம்பத்தில் இராணுவம் பொறுப்பேற்கும் என்று ஹோமன் கூறினார். புலம்பெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்வதற்கு இராணுவ போக்குவரத்து விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும், மேலும் பத்தாயிரக் கணக்கான குடும்பங்களை பாலைவனத்தில் உள்ள கூடார நகரங்களுக்கு கொண்டு செல்வதற்கு பிரதான நகர்ப்புற பகுதிகளிலுள்ள பணிமனைகள் மற்றும் “ஒருங்கிணைப்பு மையங்களிலிருந்து” பேருந்துகள் மற்றும் இரயில்கள் போன்ற தரைவழிப் போக்குவரத்துக்களை இயக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த போக்குவரத்துக்கு அப்பாற்பட்டு சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இராணுவத்தைப் பயன்படுத்துவதற்காக கிளர்ச்சி தடுப்பு சட்டம் அல்லது அன்னிய எதிரிகள் தொடர்பான சட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்த வேண்டிவரும். இது பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை ஒழித்து, நாட்டை இராணுவச் சட்டத்தின் கீழ் வைத்திடும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தின் கீழ் அமெரிக்க குடிமக்கள் உட்பட முழுக் குடும்பங்களும் பாரிய அளவில் கைது செய்யப்படவிருப்பதை ஹோமன் உறுதிப்படுத்தினார். “நாங்கள் குடும்பங்களுக்கான இடங்களை உருவாக்க வேண்டியிருக்கும்” என்று ஹோமன் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில் தெரிவித்தார். மேலும், ஹோமனின் கருத்துக்களைச் சுருக்கமாக தெரிவித்த போஸ்ட், “குடிவரவு அதிகாரிகள் அமெரிக்க எல்லை முகவர்கள் குடியேற்ற அலைகளை நிர்வகிக்கப் பயன்படுத்துவதைப் போன்ற மென்மையான கூடார அமைப்புகளில் குழந்தைகளுடன் பெற்றோரை தடுத்து வைக்க முற்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது. மேலும், “அமெரிக்காவில் பிறந்த இளம் குழந்தைகளாக இருந்தாலும் சரி, சட்டவிரோதமாக நாட்டில் இருக்கும் அவர்களின் பெற்றோரை நாடு கடத்த அரசாங்கம் தயங்காது” என்று கூறிய அவர், “அவர்கள் ஒன்றாக வெளியேறுவதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை அந்தக் குடும்பங்களிடம் முடிவு செய்ய விட்டுவிடுவதாகவும்” ஹோமன் தெரிவித்தார்.
நியூஸ் நேஷன் (News Nation) ஹோமனிடம் வரவிருக்கும் நிர்வாகம், புலம்பெயர்ந்த பெற்றோர் நாடு கடத்தப்படும் போது, நாட்டில் இருக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர்களின் குழந்தைகளை நிர்வாகம் என்ன செய்யும் என்று கேட்டது. இதற்கு, “அவர்கள் இடைத் தங்கல் வீடுகளில் வைக்கப்படுவார்கள்,” என்று ஹோமன் கூறினார். குறைந்தபட்சம் ஒரு ஆவணமற்ற பெற்றோரைக் கொண்ட 4.4 மில்லியன் குடியுரிமையுள்ள-குழந்தைகள் உள்ளனர். பெருந்திரளான அமெரிக்க குடிமக்களின்-குழந்தைகளுக்காக அரசு நடத்தும் சிறுவர் சிறைச்சாலைகள் / அனாதை இல்லங்களின் ஒரு வலையமைப்பைக் கட்டமைக்கும் முன்மொழிவு குறித்து, பெருநிறுவன ஊடகங்களில் ஏறத்தாழ கருத்துரைகள் ஏதும் இல்லாமல் போய்விட்டது.
இத்தகைய கொள்கைகளுக்கு மிக நெருக்கமான வரலாற்று சமாந்தரமாக ஜப்பானிய தடுப்பு முகாம் காலம் உள்ளது. ஃபிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் 120,000 ஜப்பானிலிருந்து குடியேறியவர்களையும், ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமக்களையும் அவர்களது வீடுகள் மற்றும் வணிகங்களில் இருந்து அகற்றி, தென்மேற்கு மற்றும் மேற்கு மலைப் பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தடுப்பு முகாம்களின் வலையமைப்பிற்கு “இடம் மாற்றியது”. ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் உட்பட சுமார் 1 மில்லியன் மெக்சிகன் குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்ட 1954 “ஆபரேஷன் வெட்பேக்” இராணுவ-பாணி நடவடிக்கைக்கு சாதகமாக ட்ரம்ப்பே கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்றைய இலக்காக இருக்கும், அடைத்து வைக்கும் கூடார முகாம்களின் நிலைமைகள் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடத்தப்பட்ட பயங்கரமான நிலைமைகளை விட மிக மோசமாக இருக்கும். 2018 இல் கட்டப்பட்ட ஒரு சிறிய தடுப்பு முகாமின் நிலைமைகள்பற்றிய அறிக்கையின்படி:
இந்த தடுப்பு முகாம்கள் பத்து பெரிய கூடாரங்களால் ஆனது, அவை ஒவ்வொன்றும் 200 பேர்களை தங்க வைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. கூடாரங்கள் முற்றிலும் ஜன்னல்கள் இல்லாமல் உள்ளன மற்றும் விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன, இதனால் கைதிகள் தூங்குவது கடினமாக உள்ளது. குளியலறைகள், கழிப்பறைகள், பாத்திரம் கழுவும் இடங்கள் மற்றும் உணவு உண்ணும் பகுதிகளை பிரிக்க தடுப்புகள் எதுவும் இல்லை. மேலும், பாத்திரங்கள் வழங்கப்படாததால் பல சமயங்களில் தங்கள் கைகளால் சாப்பிட நிர்பந்திக்கப்படுவதாக கைதிகள் தெரிவிக்கின்றனர். கைதிகள் பொழுதுபோக்கிற்காக கூடாரங்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கு குளிர்கால ஆடைகள் வழங்கப்படுவதில்லை. தெற்கு எல்லைக்கு அருகிலுள்ள இந்த தொலைதூர சிறைக்கு அனுப்பப்படும் கைதிகள் போஸ்டன், நியூ யோர்க் மற்றும் புளோரிடா போன்ற தொலைதூர இடங்களில் இருந்து மாற்றப்பட்டிருக்கலாம். இந்த இடமாற்றத்தின் விளைவாக, கைதிகள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிக்கப்படுவது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெறுவதும் சாத்தியமில்லை.
இந்த தடுப்பு முகாம்களை நிறுவவும், அவற்றை புலம்பெயர்ந்தோர்களின் குடும்பங்களால் நிரப்பவும் தேவைப்படும் நிதி வானளாவியதாக இருக்கும். ஹோமனின் கூற்றுப்படி, ஆரம்ப விலைக் குறி 86 பில்லியன் டாலர்களாக இருக்கும். “இந்த நாடுகடத்தல் நடவடிக்கைக்கு காங்கிரஸ் நிதியளிக்க வேண்டும், இது அதிக செலவானதாக இருக்கும், எல்லோரும் இது எவ்வளவு செலவு உயர்வாக இருக்கப் போகிறது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்” என்று ஹோமன் CNN க்கு தெரிவித்தார்.
இந்தத் தொகை, கடந்த 20 ஆண்டுகளில் குடியேற்ற அமுலாக்கத்திற்காக பெடரல் அரசு செலவழித்த சராசரி ஆண்டு செலவை விட நான்கு மடங்கு அதிகமாகும். புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலானது, அமெரிக்காவில் வசிக்கின்ற மற்றும் குடிமக்களாக இருக்கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்ற பொய்யை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்காவில் வீடற்ற ஒவ்வொரு நபருக்கும் வீட்டுவசதி வழங்குவதற்கு அல்லது சுமார் 10 மில்லியன் அமெரிக்கர்களின் மருத்துவக் கடனை அடைப்பதற்கு இந்த எண்பத்தி ஆறு பில்லியன் டாலர்களை பயன்படுத்தலாம்.
அதற்கு பதிலாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடியுரிமைபெற்ற-குடும்ப உறுப்பினர்களை மிகவும் பயங்கரத்துக்குள் வைத்திருப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் வளங்களை திசை திருப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். புலம்பெயர்ந்தவர்கள் அல்லாத மக்கள் மீது பாரிய நாடுகடத்தலின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்க குடியேற்ற கவுன்சிலின் அறிக்கை ஒன்று 1 மில்லியன் புலம்பெயர்ந்தோரை அகற்றுவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 முதல் 6.8 சதவிகிதம் வரை சரிவை ஏற்படுத்தும் என்று மதிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதலுடன் ஒத்துழைக்க சூளுரைத்ததன் மூலமாக ஜனநாயகக் கட்சி இந்த திட்டங்களுக்கு விடையிறுத்துள்ளது. இம்மாத தொடக்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் “ட்ரம்பை எதிர்ப்பதா? புலம்பெயர்வு விடயத்தில், உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் சமரசத்திற்கு இடமளிக்கின்றனர்,” என்று குறிப்பிட்டது. ஜனநாயகக் கட்சியின் முன்னணி ஆளுநர்களான கவின் நியூசோம் (கலிபோர்னியா), கேத்தி ஹோச்சுல் (நியூ யோர்க்) மற்றும் பில் மர்பி (நியூ ஜெர்சி) ஆகியோர் “ட்ரம்புடன் இணைந்து வேலை செய்வதற்கு வியக்கத்தக்க விருப்பத்தைக் காட்டியுள்ளனர்” என்று டைம்ஸ் குறிப்பிட்டது. பைடென், அவரது பதவிக் காலத்தின் முடிவில், 1.6 மில்லியன் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தியிருப்பார். இது, ட்ரம்ப் அவரது முதல் பதவிக்காலத்தில் செய்ததை விட சற்றே அதிகமாகும். கமலா ஹாரிஸ் வலதுசாரி பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குகிறார். இது எல்லையில் விதிகளை “கடுமையாக்குவதற்கான” அவரது விருப்பத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது.
ட்ரம்பின் திட்டம் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை முன்னெடுத்துச் செல்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவாக உள்ளனர் மற்றும் விவசாயம், ஜவுளி, இறைச்சி பொட்டலமிடுதல், கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் மொத்த தொழிலாளர் சக்தியில் பெரும்பான்மையாகவோ அல்லது கணிசமான சிறுபான்மையாகவோ உள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் புலம்பெயர்ந்த நிலையிலுள்ள தொழிலாளர்களுக்கும் ஒரு மூலோபாயத் தேவையாகும்.
ஒரு ஏகாதிபத்தியப் போரில் இருந்து மற்றொரு ஏகாதிபத்தியப் போருக்கு தள்ளாடிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைக்கவும், சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அதன் போர் முயற்சிகளின் தேவைகளுக்கு அடிபணியச் செய்யவும் சர்வாதிகார ஆட்சி முறைகளை அறிமுகப்படுத்த முயன்று வருகிறது. ஹிட்லரின் நாடக புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு, ட்ரம்ப் நிர்வாகம் சமூக சீர்கேடுகளுக்கு புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குவதையும், பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறையில் இருந்து சமூக கோபத்தை திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆத்திரமூட்டும் கொள்கைகள் ட்ரம்பிற்கு வாக்களித்த பலர் உட்பட, பெருமளவிலான மக்களிடையே பெரும் சீற்றத்தை உருவாக்கும் என்பதை ஹோமனும் வரவிருக்கும் நிர்வாகமும் நன்கு அறிந்துள்ளனர். “அமெரிக்க மக்களின் நம்பிக்கையை எங்களால் இழக்க முடியாது” என்று ஹோமன் வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறியிருந்தார்.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் பிரிவுகள் இரண்டுமே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எதிர்ப்புகள் வெளிப்படும், அது ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுய-நனவான இயக்கமாக அபிவிருத்தி காணும் என்பதையிட்டு அஞ்சுகின்றன. அத்தகைய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அக்கறை கொண்டவர்கள் இன்றே சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும்.