முன்னோக்கு

கனடா தபால் துறையில் அரசாங்கம் திணித்துள்ள வேலைநிறுத்தத் தடை: சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கான முன்னோக்கிய பாதை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஒன்ராறியோவின் நயாகரா-ஆன்-தி-லேக்கில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனடா தபால் ஊழியர்கள். நவம்பர் 15, வெள்ளிக்கிழமை

கனடாவின் லிபரல் அரசாங்கம் கடுமையான வேலைநிறுத்தத் தடையைத் திணித்த பின்னர், கடந்த செவ்வாயன்று சுமார் 55,000 தபால் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். அரசு தலைமையிலான இந்த தாக்குதல், ஆளும் உயரடுக்கு அதன் வர்க்கப் போர் திட்டநிரலான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் திட்டநிரலை நடைமுறைப்படுத்த எதேச்சதிகாரத்தை நோக்கி திரும்புவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேலைகளைப் பாதுகாத்தல், சலுகைகள், வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை மற்றும் பொதுச் சேவைகளைப் பாதுகாப்பதற்கு, கனடாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், எந்த வர்க்கம் சமூகத்தின் ஆதாரவளங்களைக் கட்டுப்படுத்துகிறது, எந்த இலக்கை நோக்கி கட்டுப்படுத்துகிறது என்பதன் மீது ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவது அவசியமாகும்.

பகுதிநேர மற்றும் தற்காலிக வேலைவாய்ப்பை இயல்பாக்குவதன் மூலமாக தொழிலாளர் சக்தியை “அமேசான்மயமாக்கும்” கனடா தபால் துறையின் அழுத்தத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நவம்பர் 15 அன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். உலகளவில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளாக, கடிதப் போக்குவரத்து வழித்தட உரிமை, வழமையான வேலை முறைகள் மற்றும் வேலைகளை அழிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

கனடா தபால்துறை தொழிலாளர்களின் போராட்டம் ஒரு ஒப்பந்தப் போராட்டத்திற்கும் அப்பால் செல்கிறது. பொதுச் சேவைகள் மற்றும் தொழிலாளர்களின் சமூக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றை அழிப்பதற்கான ஒரு பரிசோதனைக் களமாக தபால்துறை தொழிலாளர்களை பயன்படுத்த ஆளும் உயரடுக்கு நோக்கம் கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கும், அரசால் திணிக்கப்பட்ட சர்வாதிகாரத்தை நிறுத்துவதற்கும், ஒரு தொழில்துறை மற்றும் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வைத் தொடங்குவதற்கும், கனடா தபால்துறையில் ஸ்தாபிக்கப்பட்ட தபால் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு போன்ற சாமானிய தொழிலாளர் குழுக்களை தொழிலாளர்கள் உருவாக்க வேண்டும்.

தபால் துறை நிர்வாகத்திற்கும், கனேடிய தபால் தொழிலாளர்கள் சங்கத்திற்கும்  (CUPW) இடையிலான பேச்சுவார்த்தைகள் “முட்டுக்கட்டை” நிலையை எட்டுமானால், வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு தேர்ந்தெடுக்கப்படாத கனேடிய தொழில்துறை உறவுகள் வாரியத்திற்கு (CIRB) உத்தரவிட்ட தாராளவாத தொழிலாளர் துறை அமைச்சர் ஸ்டீவ் மக்கின்னனால் வெள்ளியன்று வேலைநிறுத்தம் குற்றகரமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு கனடா தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 107 இன் மறுவிளக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இது கனடாவின் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்று ஆணை மூலம் அமல்படுத்த தொழிலாளர் அமைச்சரை அனுமதித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, கனேடிய தொழில்துறை உறவுகள் வாரியம், அதன் பாத்திரத்தை நிறைவேற்றி, ஐந்து மாதங்களுக்கு வேலைநிறுத்தங்களுக்கு தடை விதித்தது. அதே நேரத்தில் கனடா தபால்துறையை மறுகட்டமைக்க ஒரு “தொழில்துறை விசாரணை ஆணையம்” கூடுகிறது.

வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக தடைசெய்வதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் உடந்தையாக இருந்தது. இந்த தடை உத்தரவை மீறுவதற்கு சாமானிய தொழிலாளர்களிடையே பரந்த ஆதரவு இருந்தபோதிலும், CUPW தொழிற்சங்கமானது, தபால் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கவும், மேலும் சாமானிய தொழிலாளர்களின் கூட்டங்களில் முன்னோக்கி செல்லும் பாதை பற்றி கலந்துரையாடவும் மறுத்துவிட்டது. தபால்துறை தொழிலாளர்களை ஏனைய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து நான்கு வாரங்கள் தனிமைப்படுத்திய பின்னர், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் உத்தரவுக்கு சரணடைய வேண்டும் என்று கோரியதன் மூலமாக, CUPW தொழிற்சங்கம், அதன் உச்சக்கட்ட காட்டிக்கொடுப்பை அரங்கேற்றியது.

கனடாவின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான கனடிய தொழிலாளர் காங்கிரஸ் (CLC), அமைச்சர் மெக்கின்னனின் அறிவிப்புக்குப் பிறகு மூன்று நாட்கள் அமைதியாக இருந்தது. CLC இறுதியாக பேசியபோது, தொழிலாளர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அதன் லிபரல் கூட்டாளிகளுக்கு அது வேண்டுகோள் விடுத்தது. உண்மையில், தாராளவாத அரசாங்கம் கடந்த ஆறு மாதங்களில் நான்கு வேலைநிறுத்த நடவடிக்கைகளை முடக்குவதற்கு 107வது சட்டப் பிரிவை திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது.

தபால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத் தடையை மீறியிருந்தால், அது கனடா, அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஊக்குவித்திருக்கும். அதனால் தான் துல்லியமாக தொழிற்சங்கங்கள் இதனை அமுல்படுத்தின.

ஏகாதிபத்திய போருக்கு பணம் செலுத்துவதற்கும், பணக்காரர்களை பிணை எடுப்பதற்கும், வேலைகள் மற்றும் பொது சேவைகளை அழித்துவரும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு எதிர்த்தாக்குதலுக்கு நிலைமை கனிந்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் கனடாவின் அனைத்து பொருளாதாரத் துறைகள் மற்றும் பிராந்தியங்களிலும் வேலைநிறுத்த அலைக்கு மத்தியில் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வந்தது. கடந்த ஆண்டு, காஸாவில் இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் நூறாயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்தனர்.

பரவலான சமத்துவமின்மை, பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல், இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான சூனிய வேட்டை மற்றும் உலகெங்கிலுமான போர்களுக்கு தலைமை தாங்கி வருவதற்காக பரவலாக வெறுக்கப்பட்டு வரும் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கம், அதன் கடைசிக் கட்டத்தில் உள்ளது. கடந்த திங்களன்று, கனேடிய தொழில்துறை உறவுகள் வாரியத்தின் பணிக்குத் திரும்புவதற்கான உத்தரவுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார். ட்ரூடோவை வலதில் இருந்து விமர்சித்த ஃப்ரீலாண்ட், வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அடையாள நடவடிக்கைகளுக்காக பணத்தை வீணடிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரயில்வே தொழிலாளர்கள், வாகனத் தொழிலாளர்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களில் பைடென் நிர்வாகம் நேரடியாகத் தலையிட்டு பெருநிறுவன-சார்பு ஒப்பந்தங்களைத் திணித்தது. பைடென் வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தவும், ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சியினரைப் போலவே, போர் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொழிலாளர்களை பிணைத்து வைத்திருப்பதற்கு அவர் தனது “உள்நாட்டு நேட்டோ” என்று விவரித்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நம்பியிருக்கிறார்.

இரயில்வேக்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான எல்லை தாண்டிய வேலைநிறுத்தங்களைத் தடுக்கவும், ட்ரூடோவின் தாராளவாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களுடன் ஒத்துழைக்க கனேடிய மற்றும் அமெரிக்க தொழிலாளர்களை பிளவுபடுத்திவரும் தேசிய-பேரினவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களை பைடென் சார்ந்திருந்தார். அவர்கள் ஒரே நேரத்தில் மற்றும் பெரும்பாலும் ஒரே முதலாளிகளுடன் ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

பிரான்சில், “செல்வந்தர்களின் ஜனாதிபதி” இம்மானுவேல் மக்ரோன் 2023 இல் ஓய்வூதியங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை திணிப்பதற்கு மில்லியன் கணக்கானவர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு, பிரெஞ்சு அரசியலமைப்பின் ஜனநாயக விரோத விதிகளைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு இல்லாமல் ஒரு சட்டத்தை இயற்றினார்.

ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கமும் தொழிற்சங்கங்களும், வாகன உற்பத்தி நிறுவனமான வோல்ஸ்வாகனில் பல தசாப்தங்களாக நீடித்திருந்த வேலை உத்தரவாதத்தை நீக்குவது உட்பட, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கடுமையான வர்க்க போராட்டங்கள் மூலமாக தொழிலாளர்கள் வென்றெடுத்த சமூக உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் தொழில்துறை மறுசீரமைப்புக்கு உடந்தையாக உள்ளன.

கனடாவின் ஆளும் வர்க்கம் மற்றும் அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் கோரிவரும் சமூக உறவுகளின் மறுசீரமைப்பின் வீச்சு ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒத்துப்போகவில்லை.

இதனால் தான் வெளிநாடுகளில் போர் தொடுப்பதற்காக, தொழிலாளர்களின் உரிமைகளை அழித்துவரும் அனைத்து அரசாங்கங்களும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்பி வருகின்றன. 1929 இல், பெருமந்தநிலையின் ஆரம்ப காலகட்டத்தை அவதானித்த ட்ரொட்ஸ்கி, “சர்வதேசப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மிதமிஞ்சிய பதட்டமானது சர்வாதிகாரத்தின் குறுகிய சுற்றை விளைவித்து, ஜனநாயகத்தின் உருகிகளை ஒன்றன் பின் ஒன்றாக வெடிக்கச் செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு இல்லாதுபோனால், ஆளும் வர்க்கம் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான உந்துதலில் மேலாதிக்கம் பெறும்.

கனடாவில் தொழிற்சங்கங்களும், புதிய ஜனநாயகக் கட்சியும் வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வருவதன் விளைவானது, ட்ரம்பை தனது அரசியல் வழிகாட்டியாக கொண்டிருக்கும் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) தலைமையிலான அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதைக் குறிக்கிறது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒட்டாவா நகரை அச்சுறுத்தும் வகையில் ஆக்கிரமித்து, கோவிட்-19 தொடர்பான எஞ்சிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் ரத்து செய்ய அழுத்தம் கொடுக்க, பாசிச தூண்டுதலால் தூண்டப்பட்ட “சுதந்திர பயணம்” என்ற இயக்கத்தை ஆதரிப்பதன் மூலம், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக பொய்லிவ்ரே தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிப்போக்கு அமெரிக்காவில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. அங்கே தொழிலாளர் எதிர்ப்பை மூச்சுத்திணறடிக்க தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பாதையை வகுத்தது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருவர், சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை நோக்கி பணி செய்யும் தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சமூக நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். இந்த தட்டுக்கள், சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் அத்தனை அம்சங்களின் மீதும் தனது மேலாதிக்கத்தை செலுத்துவதுக்கு பொருத்தமான ஒரு அரசியல் ஆட்சியை அதிகாரத்தில் இருத்துவதற்கு விரும்புகிறது.

ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகளின் நலன்களுக்கு நேரெதிராக தொழிலாள வர்க்கம் சளைக்காமல் அதன் சுயாதீன நலன்களை முன்னெடுப்பதன் மூலம் இந்த அபாயத்திற்கு விடையிறுக்க வேண்டும். இதன் அர்த்தம், நான்கு தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை மூச்சுத்திணறடிப்பதில் மையமாக இருந்து வந்துள்ள தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் தீர்மானகரமாக, அரசியல் மற்றும் அமைப்புரீதியில் முறித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். கனடாவில், இது தொழிற்சங்க-NDP-தாராளவாத கூட்டணியை நிராகரிப்பதையும், தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் சர்வதேச அளவில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதை நோக்கி திரும்புவதையும் உள்ளடக்கி உள்ளது.

இதை எப்படி செய்ய முடியும் என்பதை தபால் ஊழியர்களின் போராட்டம் நிரூபித்துள்ளது. கடந்த ஜூனில் தபால் துறை தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவை (PWRFC) உருவாக்கியதன் மூலமாக, தொழிலாளர்கள் CUPW தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து அவர்களின் ஒப்பந்த போராட்டத்தின் கட்டுப்பாட்டை எடுக்க நோக்கம் கொண்டிருந்தனர். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் (IWA-RFC) இணைவதற்கான PWRFC இன் முடிவானது, கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தபால் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு பொதுக் கூட்டங்கள் மற்றும் எண்ணற்ற விவாதங்களை ஒழுங்கமைக்க உதவியது. முதல் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம், தபால் வேலைநிறுத்தத்தை சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரட்டலின் ஈட்டிமுனையாக மாற்றும் முன்னோக்கிய பாதையை விளக்கியது.

இந்த வேலைநிறுத்த அனுபவத்திலிருந்து படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும். சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவது என்பது, ஒவ்வொரு வேலையிடத்திலும் இரட்டிப்பாக்கப்பட்ட அவசரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இது மிகவும் முன்னேறிய தொழிலாளர்களை போராட்டத்தின் அரசியல் தன்மை பற்றிய புரிதலுடன், ஆயுதம் ஏந்துவதற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும், மேலும் அவர்கள் ஒரு சோசலிச தலைமையை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே சாத்தியமான ஒரு பணியை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, உடன்படும் அனைவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கனேடிய பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்ப முடிவெடுக்க வேண்டும்.

Loading